ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

3

The Long Shadow of History: The Moscow Trials, American Liberalism and the Crisis of Political Thought in the United States1

வரலாற்றின் நீண்ட நிழல்: மாஸ்கோ வழக்குகள், அமெரிக்க தாராளவாதம் மற்றும் அமெரிக்காவில் அரசியல் சிந்தனையின் நெருக்கடி 1

காலஞ்சென்ற ரஷ்ய வரலாற்றாளர் ஜெனரல் டிமிட்ரி வோல்கொகோனொவால் எழுதப்பட்ட ஒரு புதிய லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு நூலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் நியூ யோர்க் டைம்ஸ் மதிப்புரை ஒன்றை வெளியிட்டது. மதிப்புரை செய்தவர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியர் ரிச்சார்ட் பைப்ஸ் ஆவார். பைப்ஸ் மற்றும் வோல்கொகோனொவ் இருவரது எழுத்துக்களிலும் பரிச்சயமுள்ளவன் என்றவகையில், அந்த மதிப்புரை லியோன் ட்ரொட்ஸ்கிக்கு எதிரான ஒரு வசைபாடலைத் தவிர வேறு எதையும் கொண்டிருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. எவ்வாறிருந்தபோதினும், வோல்கொகோனொவினது நூலின் ஒரு விமர்சன மதிப்புரையை உருவாக்குவதற்கு டைம்ஸ் ஆர்வம் கொண்டிருந்திருக்குமாயின், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் ஏனைய அனேக உறுப்பினர்களைப் போலில்லாமல், ஒரு குளிர்யுத்தகால மூலோபாயவாதியாக மற்றும் சித்தாந்தவாதியாக வெறுமனே அமெரிக்க அரசாங்கத்திற்கு அவரது சேவைகளை நீட்டிப்பாக்குவதை கல்வியியல் பணியாக கொண்டிருக்கும் ஒருவரிடம் இந்த பணியை கொடுத்திருக்காது.

மதிப்புரையானது நாம் கணித்த வழிகளிலே செல்கிறது. வோல்கொகோனொவின் ட்ரொட்ஸ்கி மீதான வாழ்க்கை வரலாற்று குற்றஞ்சாட்டலை பைப்ஸ் ஆராய்வது, ஒரு நேர்மையான வரலாற்றாசிரியர் என்றவாறாக அல்ல, மாறாக குற்றஞ்சாட்டும் தரப்பின் ஒரு சாட்சியாக இருந்து ஆராய்கிறார். வரலாற்று உள்ளடக்கத்தில் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையை ஆய்வு செய்வதில் வோல்கொகோனொவ் அக்கறை கொண்ட அளவிற்கும் கூட பைப்ஸ் அக்கறை கொள்ளவில்லை. அதற்கு பதிலாக பேராசிரியர் பைப்ஸ் இந்த வரலாற்றில் அவருக்கு ஏற்புடையதாக இல்லாத ஒவ்வொன்றுக்காகவும் ட்ரொட்ஸ்கியைக் குற்றஞ்சாட்ட முயல்கிறார். வோல்கொகோனொவின் முடிவுகள் —அல்லது அவரது சொந்த முடிவுகளே— உண்மைகளால் ஆதரிக்கப்படுகிறதா இல்லையா என்பது பைப்ஸுக்கு முக்கியத்துவமாக இல்லை. வோல்கொகோனொவ் எழுதிய அந்த வாழ்க்கை வரலாற்று நூலில் அடங்கியுள்ள கடுமையான அனேக தவறுகளின்பால் கவனத்தைக் கொண்டு செல்வதற்கு மாறாக, பழைய ஸ்ராலினிச வரலாற்று பொய்ம்மைப்படுத்தல் பள்ளியிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட பொய்கள் உட்பட, கணிசமான எண்ணிக்கையில் அவரது சொந்த பொய்களையும் பைப்ஸ் சேர்க்கிறார்.

சான்றாக, பைப்ஸின் மதிப்புரை ட்ரொட்ஸ்கியை “மிதமிஞ்சிய வீண்பெருமை கொண்டவராக, திமிர் பிடித்தவராக, பெரும்பாலும் மூர்க்கமானவராக...." சித்தரிக்கிறது. ட்ரொட்ஸ்கியின் தனிமனிதவியல்புகள் குறித்த இந்த கோபமான ஏளனச் சித்தரிப்பு அறுபதாண்டுகளுக்கும் மேலாக சோவியத் பாடப் புத்தகங்களில் வழமையாக நிலைப்படுத்தப்பட்டவை ஆகும். “போல்ஷிவிக் கட்சி அதன் அங்கத்தவர்களிடம் கோரிய கட்டுக்கோப்பான குழு வேலை மாதிரியான ஒன்றை"2 ஏற்க ட்ரொட்ஸ்கி தகைமையற்றிருந்ததாக பைப்ஸ் குற்றஞ்சாட்டுகிறார். ஸ்ராலினிசத்தால் திணிக்கப்பட்ட அதிகாரத்துவ ஒழுங்குமுறைக்கு ட்ரொட்ஸ்கியின் வளைந்து கொடுக்காத எதிர்ப்பானது, அவரது தனிப்பட்ட மற்றும் அரசியல்ரீதியான தோல்விகளின் ஆழ்ந்த வெளிப்பாடாக இருந்ததை போல முன்வைக்கப்படுகிறது.

அதே மதிப்புரையில் —ஆயிரம் வார்த்தைகளுக்கும் குறைவாக உள்ள ஒரு மதிப்புரையில் எத்தனை பொய்கள் காணப்படுகின்றன என்பது வியப்பூட்டுகிறது— ட்ரொட்ஸ்கியின் அரசியல் மற்றும் நிர்வாக திறமைகள் குறித்து லெனின் “மிகக் குறைந்த மதிப்பீட்டைக் கொண்டிருந்தார்” என பைப்ஸ் வலியுறுத்துகிறார்.3 இந்த பொய்க்கூற்று, ஸ்ராலினினது கொடுங்கோல் சர்வாதிகாரம் நிறைந்திருந்த ஆண்டுகளின்போது, சோவியத் ஒன்றியத்தில் திரும்பத் திரும்ப கூறப்பட்டு வந்த வரலாற்றின் கருத்துவடிவத்திற்கு முற்றிலும் பொருந்துகிறது. இந்த பொய்யானது லெனினின் 1922 டிசம்பர் அரசியல் மரண சாசனத்தில் அவரால் மறுக்கப்படுகிறது. அதில் அவர், ட்ரொட்ஸ்கி “தலைசிறந்த திறமைக்காக மட்டும் தனித்துவமானவர் அல்ல. அவர் தனிப்பட்டரீதியாகவும் அனேகமாக தற்போதைய மத்திய குழுவில் — C[entral] C[ommittee] — மிகவும் திறமையான மனிதராவார் ...” என்று எழுதி இருந்தார்.4

இறுதியாக, பைப்ஸ் ஸ்ராலினை “லெனினின் உண்மையான வழித்தோன்றல் என்றும், சட்டபூர்வ வாரிசு”5 என்றும் குறிக்கிறார். இதுதான் துல்லியமாக ஸ்ராலின் விரும்பியது, அல்லது, அதை இன்னும் சரியாக கூறுவதென்றால், ஸ்ராலின் அதிகாரத்தில் இருந்த காலங்களில் ஒவ்வொருவரும் நம்ப வேண்டும் என்று அவர் கோரியதும் இதுதான். லெனின் அவரது அரசியல் வாழ்வில் செயலூக்கமாக இருந்த இறுதிக் காலகட்டத்தில், ஸ்ராலினை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு அழைப்பு விடுத்தார் என்பதுடன், பின்னர் அவருடனான அனைத்துவிதமான தனிப்பட்ட உறவுகளையும் முறித்துக் கொள்வதாக அச்சுறுத்தலும் விடுத்தார் என்பதை சோவியத் வரலாற்றில் நன்கு பரிச்சயம் உள்ளவர்கள் அறிவர். இத்தகைய நன்கறியப்பட்ட உண்மைகளை வோல்கொகோனொவ் கூட மறுப்பதற்கு முயலவில்லை.

குளிர்யுத்த சித்தாந்தமும் ஸ்ராலினிச பொய்களும் சங்கமம்

மேற்கொண்டு தொடர்வதற்கு முன்னதாக, புரியாத புதிராக தோன்றக்கூடிய ஒன்றை நான் தெளிவுபடுத்த முயல்வேன். ஸ்ராலினிச ஆட்சி, அதன் அரசியல் எதிராளிகளுக்கு எதிராக தன்னைத்தானே பாதுகாத்து கொள்வதற்கு அதனால் புனையப்பட்ட பொய்களை, குளிர்யுத்த காலத்திய சோவியத்-எதிர்ப்பு சித்தாந்தவாதியான பைப்ஸ், ஏன் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? குளிர்யுத்த சகாப்தத்தின் சித்தாந்த குழுக்களால் பல ஆண்டு காலமாக மூடி மறைக்கப்பட்டு வந்த அரசியல் நலன்களை ஆராய்வதன் மூலமாக மட்டுமே, இந்த புரியாத புதிரை புரிந்துகொள்ள முடியும்.

சோவியத் அதிகாரத்துவத்தின் சித்தாந்தவாதிகள் ஒருபுறமும், அமெரிக்க முதலாளித்துவத்தின் சித்தாந்தவாதிகள் மறுபுறமும், அவர்களுக்கு இடையிலான மோதல்களுக்கு இடையிலும், அவர்கள் ஒரு பொதுவான மற்றும் அரசியல்ரீதியாக பிரிக்க முடியாத ஒரு பொய்யில் ஒன்றுபட்டு இருந்தனர்: அதாவது, சோவியத் தலைவர்கள் அர்ப்பணிப்பு கொண்ட மார்க்சிஸ்டுகளாக இருந்தார்கள் என்பதும், மற்றும் சோவியத் ஒன்றியம், கூடவோ அல்லது குறையவோ, ஒரு சோசலிச சமூகமாக இருந்தது என்பதுமாகும். சோவியத் அரசின் தலைவர்கள், அதிகாரத்துவ ஆட்சியின் சட்டபூர்வ தன்மையை பாதுகாக்க இந்த பொய்யை பயன்படுத்தினர். பெப்ரவரி 1956இன் அவரது “இரகசிய உரையில்” குருஷ்சேவ் ஸ்ராலினின் குற்றங்களைக் கண்டனம் செய்தபோதினும், அதிகாரத்துவ ஆட்சி அதன் நலன்களுக்காக செய்த அட்டூழியங்களின் குற்றப் பொறுப்பிலிருந்து அதனை விடுவிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். மாபெரும் பயங்கரத்தை (Great Terror) வெறுமனே ஒரு தலைவரின் மிதமிஞ்சிய செயலின் விளைவாக சித்தரித்த, “தனிநபர் வழிபாட்டு” தத்துவம், ஸ்ராலினின் குற்றங்களுக்கும் மற்றும் ஆளும் அதிகாரத்துவத்தால் அரசியல் அதிகாரம் பலப்படுத்தப்பட்டதற்கும் இடையிலான உறவைக் குறித்து ஆய்வுக்கு வாய்ப்பளிக்காத வகையில் முன்கூட்டியே ஆக்கிரமித்து தனதாக்கிக் கொண்டது.

அமெரிக்காவில் இருந்த குளிர்யுத்தகால சித்தாந்தவாதிகளைப் பொறுத்த வரையில், ஸ்ராலினிசத்தை மார்க்சிசத்துடனும் சோசலிசத்துடனும் அடையாளப்படுத்துவது, முதலாளித்துவத்திற்கு எதிரான அனைத்து இடது-சாரி எதிர்ப்பையும் செல்வாக்கிழக்க வைப்பதற்கு தேவைப்பட்டது. ஸ்ராலினிசத்தின் எழுச்சி, சோவியத் ஒன்றியத்திற்குள்ளே பத்தாயிரக் கணக்கான சோசலிஸ்டுகளால் இடதிலிருந்து எதிர்க்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை குளிர்யுத்தகால சித்தாந்தவாதிகள் பெரும் தொல்லையாகவே கண்டனர். அனைத்தினும் மேலாக தோற்றப்பாட்டளவில் சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஒட்டுமொத்த சோசலிச தொழிலாள வர்க்கத்தையும் மற்றும் புத்திஜீவிகளையும் சரீரரீதியாக கொன்றொழித்ததன் மூலமாக ஸ்ராலினிச ஆட்சி பலப்படுத்தப்பட்டது என்பதை அமெரிக்க வரலாற்றாளர்களும் பத்திரிகையாளர்களும் அங்கீகரிப்பார்களேயானால், சோவியத் ஒன்றியம் குறித்து அமெரிக்காவில் இதுவரையில் எழுதப்பட்டவற்றில் 98 சதவீதத்திற்கு அடித்தளமாக இருக்கும் ஆய்வுப்பொருள் — அதாவது மார்க்சிச தத்துவம் மற்றும் 1917 அக்டோபர் புரட்சியின் தவிர்க்க முடியாத விளைபொருளே ஸ்ராலினிசமாகும் என்பது — என்னவாகும்?

1936 மற்றும் 1939க்கு இடையே சோவியத் ஒன்றியத்தில் முழுவீச்சில் நடந்த மாபெரும் பயங்கரத்தின் போக்கினூடாக, சோவியத் மார்க்சிஸ்டுகளது சரீரரீதியான கொன்றழிப்பு நடந்தது. அந்த பயங்கரத்தின் மத்திய நிகழ்வுகளாக இருந்தவை மூன்று அச்சமூட்டும் பொய்விசாரணைகள் ஆகும், அவற்றில் முதன்மையாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் அக்டோபர் புரட்சியின் தலைவர்களும் மற்றும் லெனின் காலத்தில் சோவியத் ரஷ்யாவை வழிநடத்திய மத்திய குழுவின் முன்னாள் உறுப்பினர்களும் ஆவர். நாசவேலைகள் முதல், ஸ்ராலினை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என்பது வரையில் அவர்கள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தன. அந்த விசாரணைகளின் போக்கில், அனைத்து பிரதிவாதிகளும் அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்களை நிராதரவான நிலையில் ஒப்புக்கொண்டனர். நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தவரும் மற்றும் அங்கே இல்லாதபோது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தவருமான ட்ரொட்ஸ்கி மட்டுமே அவ்விசாரணைகளைப் பொய் என கண்டனம் செய்தார்.

இது வோல்கொகோனொவின் நூல் மீதான பைப்ஸின் மதிப்புரைக்கு என்னைத் திரும்பக் கொண்டு வருகிறது. அமெரிக்க சோவியத்தியல் துறையில் மிகவும் பொதுவாகக் காணப்படும் அந்த பொய்களின் திரட்டிற்குள்ளே அந்த ஹார்வர்ட் பேராசிரியர் தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொள்வாராயின், அவரது மதிப்புரை எந்தவித சிறப்பு கருத்துரைக்கும் உரிய தகுதியைக் கொண்டிருந்திருக்காது. ஆனால் பைப்ஸ் சேர்த்துக் கொண்ட ஒரு பகுதி அதனை அலட்சியம் செய்ய முடியாததாக்கி விட்டது: அதாவது “ட்ரொட்ஸ்கியும், அவரது மகனும் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளருமாக விளங்கிய லெவ் செடோவ், ஸ்ராலினது ஆட்சி தூக்கிவீசப்பட வேண்டும் என்றும், மற்றும் ஸ்ராலினே படுகொலை செய்யப்பட வேண்டும் என்றும் அடிக்கடி பேசியும் எழுதியும் வந்தார்கள்”6 என்பதாகும்.

மாஸ்கோ விசாரணைகள்

ஏதேனும் ஒரு உரைப்பகுதி அமைதியிழந்து இறந்து போனவர்களது பேயுருவை நினைவூட்டுமானால், அது ட்ரொட்ஸ்கியும் அவரது மகனும் ஸ்ராலினின் படுகொலைக்காக அழைப்பு விடுத்தனர் என்ற பைப்ஸின் குற்றச்சாட்டாகத்தான் இருக்கும். இந்த குற்றச்சாட்டுதான், மாஸ்கோ விசாரணைகளுக்கு சட்டரீதியான போலிக்காரணத்தை வழங்கியது, டஜன் கணக்கான அப்பாவி பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்தது, அதுதான் அந்த விசாரணைகளின் பின்புலத்தில் நடந்திருந்த, சோசலிச-எதிர்ப்பு படுகொலையை வழிநடத்திய அரசியல்ரீதியான பிரச்சாரத்தைக் கொண்டு வந்தது.7

விசாரணைகள் ஆரம்பித்த அந்த காலகட்டத்தில், சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலின் ஏறக்குறைய வரையறையற்ற அரசியல் அதிகாரத்தை ஒரு தசாப்தத்திற்கு அண்மித்தளவில் செலுத்தி கொண்டிருந்தார். அதிகாரத்துவத்தின் வளர்ந்து வந்த அதிகாரத்திற்கு எதிராக போராட 1923இல் அமைக்கப்பட்ட இடது எதிர்ப்பு, இறுதியில் 1927இல் தோற்கடிக்கப்பட்டது. எதிர்ப்பின் தலைவர்கள் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, சோவியத் ஒன்றியத்திலிருந்து தொலைதூர பிரதேசங்களுக்கு நாடு கடத்தப்பட்டனர். ட்ரொட்ஸ்கி, சீனாவின் எல்லைக்கருகில் கஜக்கஸ்தானில் உள்ள அல்மா அட்டாவிற்கு நாடு கடத்தப்பட்டார். இடது எதிர்ப்பின் அமைப்புரீதியான தோல்வி இருப்பினும், ட்ரொட்ஸ்கி ஸ்ராலினின் கொள்கைகள் மீது மகத்தான மார்க்சிச விமர்சகராக தொடர்ந்து கணிசமான அரசியல் மற்றும் தார்மீக செல்வாக்கைக் கொண்டிருந்தார். 1929இல் ஸ்ராலினின் மேலாதிக்கம் கொண்ட அரசியல் குழு, ட்ரொட்ஸ்கியை சோவியத் ஒன்றியத்திலிருந்து நாடுகடத்த உத்தரவிட்டது. ட்ரொட்ஸ்கி முதலில் துருக்கி கடற்கரையோரப் பகுதியில் உள்ள பிரின்கிபோ தீவிற்கு நாடு கடத்தப்பட்டார்; பின்னர் 1933இல் பிரான்சிற்கும், பின்னர் 1935இல் நோர்வேக்கும் நாடு கடத்தப்பட்டார்.

ட்ரொட்ஸ்கியை நாடு கடத்த எடுத்த முடிவு, ஸ்ராலின் என்றும் செய்திராத மிக மோசமான அரசியல் பிழையாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியிலும் மற்றும் சோவியத் அரசின் அதிகாரத்துவ எந்திரத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பிரத்தியேக ஆற்றலைக் கொண்டிருந்த ஒரு மனிதர் என்ற வகையில் ட்ரொட்ஸ்கி, நாடுகடத்தப்பட்ட நிலையிலும் கூட, அவரது மேதைமையினூடாக சிந்தனை அரங்கில் கோலோச்ச முடியுமென்ற அவரது ஆற்றலை ஸ்ராலின் குறைமதிப்பீடு செய்திருந்தார்.

1930களின் தொடக்கத்தில், சோவியத் ஒன்றியத்திற்குள்ளே, கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்நிலை நிர்வாகத்திற்கு உள்ளேயே கூட, ஸ்ராலினிச ஆட்சிக்கு அரசியல் எதிர்ப்பு சீராக வளர்ந்தது. ஸ்ராலினது கூட்டு உற்பத்தி முறை கொள்கைகளின் அழிவுகரமான விளைவுகளும், சாகச “ஐந்தாண்டு திட்டங்களின்” விளைவாக சோவியத் தொழிற்துறையில் மேலோங்கிய பொதுவான குழப்பங்களும், மற்றும் சுதந்திரமான அரசியல் சிந்தனையின் ஒவ்வொரு வெளிப்பாட்டை நசுக்கியமையும் ஸ்ராலினுக்கு எதிர்ப்பைத் தூண்டிவிட்டன. 1934இல் பதினேழாவது கட்சி மாநாட்டின் வியப்பூட்டும் விளைவுகளை ஒரு பரந்துபட்ட எதிர்ப்பின் அடையாளமாக ஏற்கனவே பல வரலாற்று படைப்புக்கள் எடுத்துக்காட்டி உள்ளன. அம்மாநாட்டில் பொதுச்செயலாளர் பதவிக்கு ஸ்ராலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எதிராக பெரும் எண்ணிக்கையில் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. மிக அண்மைய அரசியல் ஆய்வுகள், குறிப்பாக மார்க்சிச வரலாற்றாளர் வாடிம் ரோகோவினால் செய்யப்பட்டவை, ஸ்ராலினுக்கு எதிராக இருந்த அரசியல் வெறுப்பின் ஆழத்தை பற்றியும் ட்ரொட்ஸ்கிக்கு அதிகரித்து வந்த செல்வாக்கு பற்றியும் புதிய தெளிவை கொடுத்தன.

ஜனவரி 1933இல் ஜேர்மனியில் பாசிசத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதற்கு ஸ்ராலினே பிரதான பொறுப்பாக இருந்தார் என்று வலியுறுத்திய ட்ரொட்ஸ்கி, ஒரு புதிய அகிலத்தை கட்டுவதற்கும் மற்றும் ஓர் அரசியல் புரட்சியில் ஸ்ராலினிச ஆட்சியை தூக்கி வீசுவதற்கும் அழைப்பு விடுத்தார். அவரது எழுத்துக்கள் சர்வதேச பார்வையாளர்கள் மீது ஆளுமை செலுத்தியதுடன், இடது எதிர்ப்பின் தகவலேடு (Bulletin of the Left Opposition) ஊடாக அவர்கள் சோவியத் ஒன்றியத்திற்குள் பார்க்க வழி அமைத்தும் கொடுத்தது. 1930களின் மத்தியில், பல ஆண்டுகால ஒடுக்குமுறைக்குப் பின்னரும் கூட, அக்டோபர் புரட்சி மற்றும் பழைய போல்ஷிவிக் கட்சியின் பாரம்பரியங்கள், கோட்பாடுகள் மற்றும் கலாச்சாரங்கள் சோவியத் மக்களது பரந்த பகுதியினரது நனவில் சக்திமிக்க காரணிகளாக தொடர்ந்தும் இருந்து வந்தன. சம்பவங்களில் ஏற்படக்கூடிய, குறிப்பாக கொந்தளிப்பான சர்வதேச நிலைமைகளில் ஏற்படக்கூடிய, ஒரு திடீர் மாற்றம் சோவியத் தொழிலாள வர்க்கத்திற்கு உள்ளிருந்த புரட்சிகரக் கூறுகளை பலப்படுத்தக்கூடியதாகவும் மற்றும் உண்மையான போல்ஷிவிசத்திற்கு, அதாவது ட்ரொட்ஸ்கியால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட அரசியல் நிலைப்பாட்டிற்கு ஒரு பாரிய ஆதரவைப் புதுப்பிக்கக்கூடியதாகவும் இருந்தது.

அதனால்தான், ட்ரொட்ஸ்கியையும் அவரது ஆதரவாளர்களையும் மற்றும் அக்டோபர் புரட்சியின் வேலைத்திட்டத்தையும், பாரம்பரியங்களையும் எந்த வகையிலாவது பிரதிநிதித்துவம் செய்த அனைவரையும் அழித்தொழிப்பதற்கு ஸ்ராலின் முடிவெடுத்தார். 1934 டிசம்பரில் லெனின்கிராட் கட்சி தலைவரான கிரோவ் (Kirov) படுகொலை செய்யப்பட்டமை, முன்னாள் எதிர்ப்பாளர்களை பரந்த அளவில் கைது செய்வதற்கு ஒரு போலிக்காரணமாக அமைந்தது. அதற்கடுத்த ஆண்டு பழைய போல்ஷிவிக் கட்சியில் லெனினின் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளான சினோவியேவ், காமனேவ் ஆகியோர் இரகசிய இடத்தில் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் மீது வழக்கிற்கு கொண்டு வரப்பட்டு, நீண்டகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர். போல்ஷிவிசத்தின் எஞ்சி இருக்கும் பிரதிநிதிகள் மீது ஒட்டுமொத்த தாக்குதலை நடத்துவதற்கு ஒரு போலிக்காரணத்தை உருவாக்குவதற்காக, கிரோவின் சந்தேகத்திற்கிடமான படுகொலையை ஸ்ராலின் பயன்படுத்தி வருவதைக் குறித்து 1935இல் எழுதிய பல கட்டுரைகளில் ட்ரொட்ஸ்கி எச்சரித்திருந்தார். ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகள் நிரூபிக்கப்பட்டன. 1935இன் கைதுகளும் வழக்குகளும், 1936 ஆகஸ்டில் அக்டோபர் புரட்சியின் முக்கிய தலைவர்கள் மீதான முதலாவது மாஸ்கோ பொய் வழக்குகளுக்கு களம் அமைத்தன.

மீண்டும் ஒருமுறை சினோவியேவும் காமனேவும் வழக்குவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், ஆனால் இம்முறை மரணதண்டனை குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆகும். முதலாம் மாஸ்கோ பொய் வழக்குகளின் இதர பிரதிவாதிகளில் ம்ராக்கோவ்ஸ்கி (Mrachkovsky), டெர்-வகானியன் (Ter-Vaganian) மற்றும் ஸ்மிர்னோவ் (Smirnov) போன்ற அத்தகைய பழைய போல்ஷிவிக்குகளும் முன்னாள் இடது எதிர்ப்பின் தலைவர்களும் உள்ளடங்கி இருந்தனர்.

ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்களுள் முதன்மையானவர் ட்ரொட்ஸ்கி ஆவார். அவர் அங்கே இல்லாமலேயே சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகவும் அதன் தலைவர்களுக்கு எதிராகவும் ஒரு பெரும் சதியை திட்டம் தீட்டியவர் என குற்றம் சாட்டப்பட்டார். அந்த குற்றப்பத்திரிகை, சோவியத் ஒன்றியத்தை துண்டுதுண்டாக்கும் நோக்கில் மற்றும் அதன் முன்னாள் பிராந்தியங்களில் முதலாளித்துவத்தை மீளமைக்கும் நோக்கில் ட்ரொட்ஸ்கி, நாஜி ஜேர்மனியுடனும் மற்றும் ஜப்பானுடனும் ஒரு கூட்டணிக்குச் சென்றிருந்தார் என குறிப்பிட்டது. அக்குற்றப்பத்திரிகையின்படி, ஸ்ராலினும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏனைய முன்னணி தலைவர்களும் படுகொலை செய்யப்பட இருந்தனராம். எப்படியோ, ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்திற்குள் இருந்த தனது உள்ளாட்களிடம் இந்த சதியை அறிவித்திருந்தார் எனவும், அவர்களும் அதனை நிறைவேற்ற ஆர்வத்துடன் சம்மதித்ததாகவும் கூறப்பட்டது. அவரது வழிகாட்டல் என்று கூறப்படுவனவற்றின் கீழ், எண்ணிறைந்த தொழிற்துறை நாசவேலை நடவடிக்கைகளினூடாக இந்தச் சதி நிறைவேற்றப்பட வழிவகை செய்யப்பட்டிருந்ததானது அது பல பேரின் மரணங்களில் முடிந்திருந்நதது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாமே குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டதைத் தவிர, இவற்றுக்கு ஆதரவாக எந்த ஆதாரமும் இல்லை. அரசு வழக்குரைஞர் விஷின்ஸ்கியால் (Vyshinsky) அவர்களின் முன் வைக்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலில், வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து பிரதிவாதிகளும், அவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலும் அவர்கள் குற்றவாளிகளே என்று ஒப்புக் கொண்டார்கள். அங்கே வேறெந்த திடமான சான்றுகளும் முற்றிலுமாக கிடையாது. யதார்த்த அம்சத்துடன் நிரூபிப்பதற்கான ஸ்ராலினின் ஒரு முயற்சி பேரழிவு மிக்க வகையில் கோணலாகிப் போனது. மிகக் குறைந்த அளவே அறியப்பட்டிருந்த பிரதிவாதி ஈ.எஸ். கோல்ட்ஸ்மான் (E.S. Goltsman), 1932இல் கோப்பன்ஹேகனுக்கு பயணித்திருந்ததாக சாட்சியளித்தார், அங்கே செடோவை சந்தித்ததாகவும் பின்னர் அவர் அவரது தந்தையுடன் ஒரு சதி ஆலோசனைக்கான சந்திப்பு இடத்தை ஏற்பாடு செய்ததாகவும் கூறப்பட்டது. கோல்ட்ஸ்மானின் கூற்றுப்படி, செடோவுடனான முதல் சந்திப்பு ஹோட்டல் பிரிஸ்டலின் வளாகத்தில் நடந்தது. ஆனால் ஹோட்டல் பிரிஸ்டல் 1917லேயே தகர்ந்து போய்விட்டதாக விரைவிலேயே டேனிஷ் பத்திரிகையாளர்களால் எடுத்துக்காட்டப்பட்டது. அதிர்ச்சிகரமாக இது அம்பலப்படுத்தப்பட்டும் கூட, வழக்கு விசாரணையின் முடிவுகளின் மீது எந்த பாதிப்பையும் கொண்டிருக்கவில்லை. 1936 ஆகஸ்ட் 24இல் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள்ளேயே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வழக்கு விசாரணை ஆரம்பமான போது, ட்ரொட்ஸ்கி, நோர்வேயில் இருந்தார். அவர் அப்போதுதான் சோவியத் ஒன்றியத்தையும் மற்றும் ஸ்ராலினிச ஆட்சியையும் பற்றிய அவரது விளக்கமான ஆய்வை காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி என்ற தலைப்பில் முடித்திருந்தார். அவர் உடனடியாக வழக்கு விசாரணையை ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று கண்டனம் செய்ததோடு, அதனை அம்பலப்படுத்த ஆயத்தமானார். ஆனால் அவரது முதல் முயற்சிகள் நோர்வே அரசாங்கத்தால் குறுக்கீடு செய்யப்பட்டன. வழக்குவிசாரணை பற்றிய ட்ரொட்ஸ்கியின் அம்பலப்படுத்தலும் மற்றும் ஸ்ராலின் பற்றிய கண்டனங்களும் சோவியத் ஒன்றியத்திற்கும் நோர்வேக்கும் இடையிலான உறவைப் பாதிக்குமென அந்நாட்டு அரசாங்கம் அஞ்சியது. சமூக ஜனநாயக அரசாங்கம் ட்ரொட்ஸ்கியையும் அவரது மனைவியையும் வீட்டுக் காவலில் வைத்தது, அங்கே அதற்கடுத்த நான்கு மாதங்களுக்கு தனிமைச் சிறையை ஒத்த நிலைமைகளின் கீழ் அவர் வைக்கப்பட்டிருந்தார். இறுதியில் 1936 டிசம்பரில், ட்ரொட்ஸ்கியும் அவரது மனைவியும் மெக்சிக்கோவை பயண இலக்காகக் கொண்ட விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர். அங்கே லசாரோ கார்டினஸின் (Lazaro Cardenas) தீவிர தேசியவாத அரசாங்கத்தால் அவருக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டது.

மாஸ்கோவில் இரண்டாவது பொய் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவாக, 1937 ஜனவரி 9 அன்று ட்ரொட்ஸ்கி மெக்சிக்கோவை வந்தடைந்தார். புதிய பிரதிவாதிகளுள் சோவியத் தொழில்துறை முன்னாள் தலைவர் யூரி பியட்டகோவ் (Yuri Piatakov); சோவியத் நிதித்துறையின் முதல் தலைவர்களில் ஒருவராக இருந்த கிரிகோரி சொக்கோல்நிக்கோவ் (Grigory Sokolnikov); உள்நாட்டு போரின் வீரர் முரலோவ் (Muralov); மற்றொரு பழைய போல்ஷிவிக்கான மிக்கைல் பொகுஸ்லாவ்ஸ்கி (Mikhail Boguslavsky); புகழ்பெற்ற மார்க்சிச பத்திரிகையாளர் கார்ல் ராடெக் (Karl Radek) போன்ற உலகப் புகழ்பெற்ற போல்ஷிவிக்குகளும் இருந்தனர். குற்றச்சாட்டுக்கள் முதல் வழக்கு விசாரணையில் வைக்கப்பட்டவை போன்றே அதிர்ச்சியூட்டுவனவாக இருந்தன, மீண்டும் ஒருமுறை அந்த ஒட்டுமொத்த வழக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாமே குற்றங்களை ஒப்புக்கொள்வதன் மீதே சார்ந்து இருந்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளல்களுக்கு ஆதாரமாக கொஞ்சம் உள்ளூர்ச்சாயம் பூச இன்னொருமுறை முயற்சித்தபொழுது, இரண்டாவது வழக்கு விசாரணையின் நம்பகத்தன்மை ஒரு அழிவுகரமான அடியால் பாதிக்கப்பட்டு, ஸ்ராலின் முகத்தில் கோபம் கொப்பளித்தது. பியட்டகோவ் (Piatakov) 1935 டிசம்பரில் ட்ரொட்ஸ்கியை சந்திக்கவும் மற்றும் சோவியத் ஆட்சிக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்துவதற்கு அவரது வழிகாட்டல்களை பெறுவதற்காகவும் பேர்லினில் இருந்து ஒஸ்லோவிற்குப் பயணித்ததாக சாட்சியளித்தார். துரதிரஷ்டவசமாக வழக்கு விசாரணையை ஏற்பாடு செய்தவர்களே தொல்லையில் அகப்பட்டுக் கொள்ளும் வகையில், ஒஸ்லோ விமான நிலைய அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பதிவுச்சான்றுகள், மோசமான வானிலையின் காரணமாக 1935 டிசம்பரில் ஒரு விமானம் கூட அந்த இடத்தில் தரை இறங்கவில்லை என்பதை நிலைநாட்டின. அந்த நிகழ்வைக் குறித்து ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, பியட்டகோவின் “மாய விமானம்” ஒருபோதும் அங்கே தரையிறங்கி இருக்கவில்லை. இந்த வியத்தகு அம்பலப்படுத்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

ஸ்ராலினின் துரதிரஷ்டம், GPUஆல் நோர்வேயின் காலநிலையை, விமானங்களின் சர்வதேச இயக்கத்தை, அல்லது எனது எண்ணங்களின் இயக்கத்தைக் கூட, நான் இணைந்திருந்தவற்றின் தன்மையை மற்றும் எனது செயல்பாடுகளின் போக்கைக் கூட தீர்மானிக்க முடியவில்லை. அதனால்தான், முன்பின்பாராது பெரும் உயரத்திற்கு எழுப்பப்பட்ட விரிவான ஜோடிப்புகள், இல்லாத விமானத்திலிருந்து கீழே விழுந்து, தூள்தூளாக நொருங்கி போயுள்ளது, ஆனால் பிரதான குற்றவாளியும், சதிக்கு தூண்டுகோலாக இருந்தவரும், ஏற்பாட்டாளரும், இயக்குனருமான எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளே, பெரிதும் பொய்யான சாட்சிகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு உள்ளதென்றால், மிச்சம் உள்ளவற்றை என்ன சொல்வது?8

எந்தவித புறநிலைரீதியான தர அளவினாலும், குற்றப்பத்திரிகையின் நம்பகத்தன்மையும் மற்றும் மாஸ்கோவில் நடத்தப்பட்ட வழக்கு நடைமுறைகளும் தகர்ந்து நொருங்குவனவாக இருந்தன. இருந்தபோதிலும், பிரதிவாதிகளுள் இருவரைத் தவிர மற்ற அனைவரும் மரணதண்டனைக்கு ஆளானார்கள். விதிவிலக்காக விடப்பட்ட அந்த இருவருக்கும், ராடெக் (Radek) மற்றும் சோகோல்னிக்கோவுக்கு (Sokolnikov), பத்து ஆண்டுகள் சிறைவாசம் விதிக்கப்பட்டது, ஆனால் அதன்பின்னர் விரைவிலேயே சிறையில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஸ்ராலினிச வழக்குத் தொடுப்பாளர்களால் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீது ஒரு சுதந்திரமான புலனாய்வு விசாரணையை நடத்துவதற்கு, ஒரு சர்வதேச நடுவர் மன்றத்தை நியமிக்குமாறு மெக்சிகோவிலிருந்து, ட்ரொட்ஸ்கி ஒரு வேண்டுகோள் விடுத்தார். செய்திச்சுருள் கேமரா முன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையில் ட்ரொட்ஸ்கி விளக்கினார்:

எனக்கு எதிரான ஸ்ராலினின் வழக்கு, ஆளும் உட்குழுவின் நலன்களின் பேரில், விசாரிப்பாளர்களுக்கு சார்பான நவீன விசாரணை முறைகளால் பெறப்பட்ட, பொய்யான சுயஒப்புதல்கள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. சினோவியேவ்-காமனேவ் மற்றும் பியட்டகோவ்-ராடெக் இவர்களது மாஸ்கோ வழக்கு விசாரணைகளை விடவும் மிகப் பயங்கரமான மரண தண்டனையோ அல்லது மிகவும் பயங்கரமான உள்நோக்கம் கொண்ட குற்றங்களோ வரலாற்றில் அங்கே இருந்திருக்காது. இந்த வழக்குகள், கம்யூனிசத்திலிருந்தோ அல்லது சோசலிசத்திலிருந்தோ அபிவிருத்தி ஆகவில்லை, மாறாக ஸ்ராலினிசத்திலிருந்து, அதாவது அதிகாரத்துவத்தின் பதில் கூற முடியாத மக்கள் மீதான எதேச்சதிகாரத்திலிருந்து அபிவிருத்தி அடைகின்றது!

இப்போது எனது பிரதான பணி என்ன? உண்மையை வெளிக்கொண்டு வருவதாகும். உண்மையான குற்றவாளிகள், குற்றம் சுமத்தியவர்களாக அங்கிக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதும் விளக்குவதும் ஆகும். இந்த திசையில் அடுத்த படி என்ன? அமெரிக்க, ஐரோப்பிய பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றவர்கள், சர்ச்சைக்கிடமற்ற வகையில் செல்வாக்கு கொண்டவர்களை உள்ளடக்கி இறுதியாய் ஒரு சர்வதேச விசாரணைக் குழுவை அமைப்பதாகும். எனது அன்றாட சிந்தனை மற்றும் செயல்பாட்டின் அபிவிருத்தியை, எந்த இடைவெளியும் இல்லாமல், பிரதிபலிக்கின்ற எனது அனைத்து கோப்புகளும், ஆயிரக்கணக்கான எனது தனிப்பட்ட மற்றும் பகிரங்க கடிதங்கள் அனைத்தையும் அத்தகைய குழுவின் முன் வைப்பதற்கு நான் பொறுப்பெடுப்பேன். என்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை! வெளிநாடுகளில் உள்ள டஜன் கணக்கான சாட்சிகள் வைத்திருக்கும் விலைமதிப்பற்ற உண்மைகளும் மற்றும் ஆவணங்களும் மாஸ்கோ பொய் புனைவுகளை வெளிச்சமிட்டுக் காட்டும். அந்த விசாரணைக் கமிஷனின் வேலை, ஒரு மாபெரும் எதிர்வழக்கில் போய் முடிய வேண்டும். நாஜியின் கெஸ்டாபோ மட்டத்திற்கு வீழ்ந்துவிட்ட ஸ்ராலினின் பொலிஸை, GPUவை, மூலஆதாரமாக கொண்டிருக்கும் சூழ்ச்சி, அவதூறு, பொய்மைப்படுத்தல், ஜோடனைகளது கிருமிகள் நிறைந்த சூழலைத் தூய்மைப்படுத்துவதற்கு ஓர் எதிர்வழக்கு அவசியமானதாகும்.

பெரும் மரியாதைக்குரிய பார்வையாளர்களே! கடந்த நாற்பது ஆண்டுகளாக எனது கருத்துக்கள் மற்றும் அரசியல் நடவடிக்கை தொடர்பாக நீங்கள் பல்வேறுபட்ட மனோபாவங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு நடுநிலையான விசாரணையானது, தனிப்பட்டரீதியிலும் சரி அரசியல்ரீதியிலும் சரி எனது கௌரவத்தின் மீது கறை எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும். நியாயம் என் பக்கம் உள்ளது என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன், புதிய உலகின் குடிமக்களுக்கு நான் இதயபூர்வமான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.9

மாஸ்கோ விசாரணைகள் உலகம் முழுவதிலும் அதிர்ச்சிகரமான எதிர்வினைகளை உண்டாக்கின. பழைய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற புரட்சியாளர்களும், சோவியத் ஒன்றியத்தின் ஸ்தாபகர்களும், ஸ்ராலினை படுகொலை செய்யவும் முதலாளித்துவத்தை மீளமைப்பதற்கும், நாஜி ஜேர்மனியுடன் ஒரு கூட்டுக்குள் நுழைந்ததாக ஒப்புக்கொண்ட காட்சி, பொது மக்களை அதிர்ச்சியூட்டியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அத்தகைய குற்றங்களை செய்திருக்கக்கூடுமா? மாஸ்கோவில் நடைபெற்ற விசாரணைகள் ஒரு நியாயமான நடைமுறையாக இருந்தனவா? வழக்கு விசாரணை தொடர்பாக பரந்த அளவிலான ஐயுறவாதம் இருந்தபோதும், ஒரு சர்வதேச விசாரணைக் குழுவிற்கான ட்ரொட்ஸ்கியின் அழைப்பு, கடுமையான அரசியல் தடைகளைச் சந்தித்தது. சோவியத் இரகசிய பொலிஸின் மேற்பார்வையின் கீழ் செயல்பட்டு வந்த உலகெங்கிலும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், அந்த வழக்குகளுக்கு சார்பாக ஆதரவை திரட்டுவதற்கு, குறிப்பாக தீவிர போக்கினர் மத்தியிலும், ஐரோப்பிய, அமெரிக்க புத்திஜீவிகளின் கணிசமான இடது தாராளவாத பிரிவுகள் மத்தியிலும், ஒரு சர்வதேச பிரச்சாரத்தை முன்னெடுத்தன.

அமெரிக்காவில், ஸ்ராலினிஸ்டுகளின் முயற்சிகள் நியூ யோர்க் டைம்ஸால் ஊதிப் பெரிதாக்கப்பட்டன. அதன் மாஸ்கோ செய்தித்தொடர்பாளர் வால்ட்டர் டுராண்ட்டி (Walter Duranty) வழக்கு விசாரணைகள் மற்றும் சுயஒப்புதல்களின் சட்டபூர்வதன்மையில் அவருக்கு நம்பிக்கை இருப்பதாக அறிவித்தார். சுயஒப்புதல்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் கொண்டிருப்பவர்கள் டோஸ்டோவ்ஸ்கியின் எழுத்துக்களை (Dostoevsky) வாசிப்பதனாலும், “ஸ்லாவிய ஆன்மாவின்” (Slavic soul) மாயஜாலங்களைக் குறித்து படிப்பதாலும் பயனடைவர் என்று அவர் கருத்துரைத்தார். அந்த வழக்குகளை ஆதரித்த மற்றொருவர், சோவியத் ஒன்றியத்திற்கான அமெரிக்கத் தூதரான ஜோசப் டேவிஸ் (Joseph Davies) ஆவர், அவர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்த குற்றங்களை நம்புவதாக அறிவித்தார்.

பொதுவாக மதிப்பிடப்பட்டதைவிட அதிகளவில், மிகப் பெரிய அளவுக்கு மாஸ்கோ வழக்கு விசாரணைகள் அமெரிக்க அரசியல் வாழ்வில், குறிப்பாக அதன் மிக முக்கிய அரசியலமைப்பு உட்கூறுகளில் ஒன்றாக இருந்த தாராளவாதத்தில், ஒரு விமர்சனத்திற்குரிய அத்தியாயமாக இருந்தன. இதனை புரிந்து கொள்வதற்கு, ஒருவர் மாஸ்கோ வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் உள்ளடக்கத்தை கட்டாயம் மீளாய்வு செய்ய வேண்டும்.

அமெரிக்க தாராளவாதிகளும் மாஸ்கோ விசாரணைகளும்

1929இன் இறுதியில் தொடங்கிய பெருமந்தநிலை, அமெரிக்காவிற்குள்ளேயே புத்திஜீவித மற்றும் அரசியல் சூழலையை மாற்றியது என்பது பெரிதும் மறக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அத்தகைவொரு அடிப்படை நெருக்கடியை உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் அமெரிக்கா எதிர்கொண்டதில்லை. 1860-61இன் பிரிவினை நெருக்கடி, ஒன்றியம் தப்பி இருப்பதையே கேள்விக்கு உரியதாக்கியது. வோல் ஸ்ட்ரீட் பொறிவும் மற்றும் பெருமந்தநிலையும் முதலாளித்துவ அமைப்புமுறையின் நிலைப்புதன்மையையும் மற்றும் தார்மீக நெறியையும் கேள்விக்குள்ளாக்கியது. இன்றைய நாட்களில், வெற்றிகரமான வோல் ஸ்ட்ரீட் ஊகவணிகர்களும் பெருவர்த்தக விற்பன்னர்களும், அமெரிக்கா அன்பாய் வைத்திருக்கும் அனைத்துவிதமான மனித உருவடிவமாக, பொது ஊடகங்களில் புகழ்ந்து போற்றப்படுகிறனர், ஆனால் அத்தகைய தனிநபர்களை, ஜனாதிபதி பிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt) “மாபெரும் செல்வத்தின் குற்றகர கூறுகள்” என்று பகிரங்கமாக கண்டனம் செய்த காலத்தை கற்பனை செய்து பார்ப்பதும் கடினமாக உள்ளது. அமெரிக்காவில் முதலாளித்துவம் என்பதே ஒரு வகை வசைச்சொல்லாக மாறியிருந்தது.

அமெரிக்க புத்திஜீவிகளின் தாராளவாதம் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியல் பொருளாதார கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. அது அதன் அர்த்தத்திலேயே வரையறுக்கப்பட்ட வடிவம் இல்லாததாக இருந்தது, அது சமூக நிலைமைகளை பொதுவாக படிப்படியாக முன்னேற்றுவித்தல் மற்றும் நகர்ப்புற அரசியலில் ஊழலைத் தடுத்தல் இவற்றுக்கு ஒரு வெற்று பொறுப்புறுதி என்பதை தவிர வேறு ஒன்றுமாக இருக்கவில்லை. மந்தநிலைமை இந்த சமூக தட்டினுள் ஓர் அவசர உணர்வை, சமூக பிரச்சினைகளில் அதிக ஆர்வத்தை, தீவிர அரசியலின்பால் ஓரளவு அனுதாபத்தை உருவாக்கியது. அமெரிக்க தாராளவாத புத்திஜீவித அடுக்குகளின் மத்தியில், சோவியத் ஒன்றியத்தின் கௌரவம் கணிசமான அளவுக்கு வளர்ச்சி அடைந்திருந்தது. தொழிலாளர் சக்தியில் 25 சதவீதம் வேலை இல்லாதிருந்த நிலையில், சந்தைகளை சுயமாய் ஒழுங்குபடுத்திக் கொள்ளும் போதனைகள், கட்டுப்பாடு எதுவுமில்லாத போட்டிகள், அடாவடித்தனமான தனிநபர்வாதம் ஆகியவை 1929 அக்டோபருக்கு முன்னர் இருந்ததை விடவும் மிகவும் குறைந்தளவே ஏற்புடையதாக இருந்தன. வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் அபிவிருத்தி அடைந்த நிலைமைகளோ, சந்தை பொருளாதாரங்கள் சமூக முன்னேற்றத்துடன் ஒத்திசைந்து போகும் என்பதன் மீதிருந்த பழைய ஊகங்களை கீழறுத்தன. அமெரிக்க நெருக்கடியின் இந்த பின்புலத்தில், சோவியத் பொருளாதாரத்தின் வெளிப்படையான வெற்றிகள், "மிதமிஞ்சிய" கூட்டு உற்பத்திமுறை இருந்தபோதினும், நன்மதிப்பை ஏற்படுத்தியதோடு, பொருளாதார திட்டமிடல் கருத்துருவுக்காக பாராட்டையும் கூட பெற்றது. உலகம், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கற்றுக்கொள்ள சில இருக்கின்றன என்று தாராளவாத புத்திஜீவிகளுக்கு தோன்றியது.

சோவியத் ஒன்றியத்திற்கு அதிகரித்து வந்த அனுதாபம், சோவியத் வெளியுறவு கொள்கை மாற்றங்களால் அதிகரிக்கப்பட்டது. ஜேர்மனியில் பாசிசத்தின் எழுச்சி மற்றும் ஐரோப்பா முழுவதும் பிற்போக்கு இயக்கங்களின் அதிகரிந்து வந்த பலம் ஆகியன பல தாராளவாதிகளால் முதலாளித்துவ ஜனநாயகத்தினது பொதுவான ஒரு பொறிவின் முன்னறிவிப்புகளாக பார்க்கப்பட்டன. இந்த முக்கிய கட்டத்தில், ஜனநாயக தாராளவாதத்தின் நிலைப்பாட்டிலிருந்து, உலக அரசியலில் சோவியத் ஒன்றியத்தின் முக்கியத்துவம் பெரிதும் வேகமாக மாறி இருந்தது. 1935இல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது காங்கிரசில் சோவியத் ஒன்றியம் “மக்கள் முன்னணிவாதம்” (popular frontism) கொள்கையை வெளிக்கொணர்ந்தது. நாஜி ஜேர்மனியால் முன்வைக்கப்பட்ட ஆபத்தால் அச்சமுற்ற சோவியத் அதிகாரத்துவம், அது முதற்கொண்டு ஜனநாயக ஏகாதிபத்தியங்களான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுடன் கூட்டணிகளை ஸ்தாபிப்பதை நோக்கி அதன் சக்திகளைத் திருப்பியது. இந்த கொள்கையின் ஒரு முக்கிய துணைவிளைவாக, உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிகள், அவை “ஜனநாயக” முதலாளித்துவ வர்க்கம் எனக் குறிப்பிட்ட, தாராளவாத மற்றும் முற்போக்கு கட்சிகளுக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் ஆதரவு கொடுத்ததுடன், அவற்றுடன் கூட்டும் சேர்ந்துக் கொண்டன. கட்சிகளோ, அரசியல்வாதிகளோ, அரசாங்கங்களோ அவை சேவை செய்த வர்க்க நலன்களின் அடிப்படையில் இனியும் மதிப்பீடு செய்யப்படவோ வரையறுக்கப்படவோ போவதில்லை. மாறாக அவை ஒன்றில் “பாசிச” அல்லது “பாசிச-எதிர்ப்பு” என்று மதிப்பிடப்பட்டன. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் மற்றும் சோசலிசத்தின் இலக்கு ஆகியன சோவியத் வெளியுறவு கொள்கையினது நலன்களின் பேரில், உண்மையில் கட்டளையின் பேரில், கம்யூனிஸ்ட் கட்சிகளால் தியாகம் செய்யப்பட இருந்தன.

இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, சோவியத் ஒன்றியமும், தேசிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்த தாராளவாத மற்றும் தீவிரப் போக்குடைய புத்திஜீவிகளின் ஆதரவை நயந்து நாடத் தொடங்கின. கம்யூனிஸ்ட் கட்சியின் நாளாந்த அரசியல், அதிகளவில் தாராளவாத வர்ணத்தை ஏற்றன, இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது ரூஸ்வெல்ட்டுக்கும் மற்றும் புதிய ஒப்பந்தம் (New Deal) எனும் உடன்படிக்கைக்கும் அமெரிக்க ஸ்ராலினிஸ்டுகள் அங்கீகாரம் வழங்கியதாகும். ஸ்ராலினிஸ்டுகள், தாராளவாத புத்திஜீவிகள் மீது கவனத்தை அர்பணித்திருந்ததால் அவர்களில் பலர் அதிகமாக புகழப்பட்டனர் என்பதுடன், அவர்களது கருத்துக்களும் விபரங்களும் மிகவும் கவனத்துடன் எடுக்கப்பட்டதைக் கண்டு உற்சாகமடைந்தனர். சோவியத் ஒன்றியத்துடன் அவர்களின் தனிப்பட்ட இனங்காட்டல், குறைந்தபட்சம் அவர்களின் சொந்த பார்வையில், அமெரிக்காவில் தீவிரப் போக்குடைய நடவடிக்கைக்கு அவர்களிடம் எந்தவொரு குறிப்பிடத்தக்க வேலைத்திட்டமும் இல்லை என்ற உண்மையை மூடிமறைப்பதைப் போல தெரிந்தது.

சோவியத் ஒன்றியம் வென்றெடுத்தவை மீது தாராளவாதிகளின் விமர்சனமற்ற புகழ்ச்சி, அமெரிக்காவினுள்ளே புரட்சிகர மாற்றத்திற்கு ஓர் அங்கீகரிப்பைக் குறிக்கவில்லை. அதிலிருந்து தூரவே இருந்தது. பெரும்பாலான தாராளவாத புத்திஜீவிகள் அமெரிக்காவில் சமூக சீர்திருத்தத்திற்கான தங்களின் சொந்த கோழைத்தனமான நிழ்ச்சிநிரலைப் பலப்படுத்துவதற்கும் மற்றும் ஐரோப்பாவிலிருந்து பாசிசத்தை நெருங்கவிடாமல் தடுப்பதற்கும் ஒரு வழிவகையாக சோவியத் ஒன்றியத்துடனான கூட்டைப் பார்க்க நாட்டம் கொண்டிருந்தனர். சோவியத் ஒன்றியத்திற்கோ புரட்சிகர எழுச்சிகள் இனியும் முன்னிலைக்கு வருமென்ற அச்சம் இருக்கவில்லை. ட்ரொட்ஸ்கியின் தோல்வியானது, சர்வதேச புரட்சிகர அபிலாஷைகளை சோவியத் ஒன்றியம் கைவிட்டதையே குறித்திருந்ததாக தாராளவாதிகள் புரிந்து கொண்டனர். 1930களின் மத்தியில் ஸ்ராலினிச ஆட்சி பிரகாசமான அரசியல் மதிப்பை ஈட்டியிருந்தது.

மாஸ்கோ விசாரணைகளுக்கு தாராளவாத விடையிறுப்பை ஆராய்கையில், மற்றொருமொரு முக்கியமான அரசியல் உண்மையை நினைவில் கொள்ள வேண்டும். முதலாவது வழக்கு விசாரணை தொடங்குவதற்கு வெறும் ஒரு வாரத்திற்கு முன்னர் தான், 1936 ஜூலையில் ஸ்பானிய உள்நாட்டு போர் வெடித்தது. ஸ்பெயின் பாசிசவாதத்தால் அச்சுறுத்தப்பட்டு இருந்தது, அதன் வெற்றி நிச்சயமாக இரண்டாவது உலக போர் வெடிப்பதற்கே வழி வகுக்கும் என்றிருந்தது. பாசிச-எதிர்ப்பு சக்திகளாக இருந்த குடியரசு கட்சிகாரர்களுக்கு சோவியத் ரஷ்யா மிக முக்கிய கூட்டாளியாக பார்க்கப்பட்டது. சில தாராளவாத புத்திஜீவிகளே, ஸ்பெயினில் ஸ்ராலினிச அரசியலின் உண்மையான முக்கியத்துவத்தை மிகவும் கவனமாக ஆய்வு செய்வதற்கு நாட்டம் கொண்டனர். மிகப் பெரும்பான்மையினர், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை ஸ்ராலினிஸ்டுகள் அரசியல் பயங்கரத்தின் ஊடாக அழித்து வந்ததையும், இறுதியில் பிராங்கோவின் வெற்றிக்கு உத்தரவாதம் அளித்து வந்ததையும் அலட்சியப்படுத்தினர். ஸ்பெயினில் பாசிசத்தை தோற்கடிப்பதற்கு, "முற்போக்கு சக்திகளின்" மொத்த நம்பிக்கைகளும் சோவியத் ஒன்றியத்தின் மீதே சார்ந்திருந்தன, மேல்தோற்றத்தில் சோவியத் ஒன்றியமானது அரணாக பார்க்கப்பட்டது.

இதனால் தான் மாஸ்கோ வழக்கு விசாரணைகளை ஆய்வு செய்வதற்கு ஒரு சர்வதேச விசாரணைக் குழுவை அமைக்க ட்ரொட்ஸ்கி விடுத்த அழைப்பானது, முக்கியமாக அமெரிக்காவிற்குள்ளே, தாராளவாத புத்திஜீவிகள் மத்தியில் பரந்த அளவிலான எதிர்ப்பை எதிர்கொண்டது. இந்த அடுக்கின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவம் செய்த மிக பிரபல பத்திரிகைகளுள் இரண்டு, The New Republic மற்றும் The Nation ஆகியவை ஆகும். அவை வழக்கு விசாரணைகளுக்கு அதிகாரபூர்வ ஆதரவை தெரிவித்ததுடன், சுதந்திரமான புலன்விசாரணைக்கான ஓர் அழைப்பை எதிர்த்தன. The Nation, வழக்கு விசாரணைகளுக்கு ஆதரவளிக்க பிற்போக்குத்தனமாக வளைந்து, சந்தேகங்களை வெளிக்காட்டுபவர்கள் சோவியத் ஒன்றியத்தின் குற்றவியல் நீதி அமைப்புமுறைக்கு பரிச்சயமில்லாதவர்கள் என்று குறிப்பிட்டது. “சோவியத் பொதுச்சட்டம் பல அத்தியாவசிய அம்சங்களில் நமது சட்டங்களிலிருந்து வேறுபடுகிறது” என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும் என்று The Nation எழுதியது.10

The New Republic இன் ஆசிரியர் மால்கொம் காவ்லி (Malcolm Cowley), அமெரிக்க தாராளவாதிகளின் புத்திஜீவித சோம்பேறித்தனத்தையும், ஒருவகை பயந்த அரசியல் முட்டாள்தனத்தையும் உதாரணமாக காட்டினார். அமெரிக்க எழுத்து வட்டாரங்களில் அவர் முக்கிய நபராக இருந்தார். இன்றும் கூட அவரது எண்ணிறைந்த நூல் திரட்டுக்களை அல்லது காவ்லியால் எழுதப்பட்ட முன்னுரைகளைக் கொண்ட பிரதான அமெரிக்க நாவல்களின் தற்போதைய பதிப்புக்களை நீங்கள் பார்க்க நேரிடும். இந்த நவீன மற்றும் நகர்ப்புற தாராளவாதி, ஏப்ரல் 7, 1937இன் The New Republic இதழில், “ஒரு வழக்கு விசாரணையின் ஆவணப்பதிவு” (The Record of a Trial) என்று தலைப்பிட்ட கட்டுரை ஒன்றில், மாஸ்கோ விசாரணைகள் மீது, பின்வருமாறு அவர் கருதிய கருத்தை வழங்கினார்:

அனைத்துவிதமான கருத்துவேறுபாடுகள் இருப்பினும் இந்த ஆண்டு நான் வாசித்த மிகவும் அருமையான புத்தகம், People’s Commissariat of Justiceஆல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட, மாஸ்கோவில் அண்மையில் நடந்த வழக்கு விசாரணையின் சுருக்கெழுத்து பதிவுச்சான்றாகும். அதை நான் கடமை உணர்வோடு படிக்கத் தொடங்கினேன்: விசாரணை தொடர்பாக பல விவாதங்களைக் கேட்டிருந்தாலும், சோவியத் நீதிமன்றங்களின் நல்லெண்ணங்கள் மீது பல்வேறு தாக்குதல்களை படித்திருந்தாலும், மூலஆதாரங்களில் இருந்து அதிகமான அளவுக்கு கற்றுக்கொள்ள விரும்பினேன். நான் நிறைய கற்றுக் கொண்டேன், ஆனால் முக்கியமாக விஷயதானங்கள் உடனான சுத்தமான கவர்ச்சியிலிருந்து தொடர்ந்து விலகி இருந்தேன். இலக்கியமாக தீர்மானிக்கையில் “சோவியத்-எதிர்ப்பு ட்ரொட்ஸ்கிச வழக்கின் மையம்” (The Case of the Anti-Soviet Trotskyite Center) எனும் படைப்பு, ஆங்காங்கே நகைச்சுவைகளோடு மேதகு எலிசபெத் காலத்திய துன்பியல் மற்றும் உண்மையான துப்பறியும் கதை ஆகியன கலந்த ஒரு அசாதாரணமான சேர்க்கையாகும். மார்லோவும் வெப்ஸ்டரும் அதை அரங்கேற்றி இருந்தார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே அதையொரு புனையப்பட்ட சம்பவமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். தகவலாக தீர்மானிக்கையில், வழக்கு விசாரணை பற்றிய சுருக்கமான செய்தித்தாள் விவரங்களால், அது எனது சொந்த மனதில் எழுந்த பெரும்பாலான கேள்விகளுக்கு விடை அளிக்கிறது.

ஆனால் சான்றை விவாதிப்பதற்கு முன்னதாக, கடந்த சில ஆண்டுகளின் போது ரஷ்ய விவகாரங்கள் அபிவிருத்தி அடைந்துள்ள நிலையில், அவற்றை நோக்கிய எனது மனப்பான்மையை நான் சிறப்பாக விளக்க வேண்டி உள்ளது. இதுவரைக்கும் சோவியத் ஒன்றியத்தின் குறிக்கோள்களுடன் ஆழமாக அனுதாபம் உடையவன் என்பதைத் தவிர, அடுத்தது ஸ்ராலினும் அவரது அரசியல் குழுவும் அவரது எதிராளிகளால் அறிவுறுத்தப்பட்ட கொள்கைகளை விடவும் பொதுவாக அறிவார்ந்த கொள்கைகளை பின்பற்றியுள்ளதாக இதுவரையில் நான் நம்புகிறேன் என்பதைத் தவிர, நான் ஒரு "ஸ்ராலினிஸ்ட்" கிடையாது. ... ஆனால் ஸ்ராலினுக்கு கடப்பாடுடையவன் இல்லை என்றாலும், நிச்சயமாக நான் ட்ரொட்ஸ்கிக்கு எதிரானவனே. எனது எதிர்ப்பு, பகுதியாக குணவியல்பு குறித்த பிரச்சினையாகும்: ஒவ்வொரு மனித பிரச்சினையையும், சலிப்பூட்டும் முக்கூற்று வாதமுறையாக (syllogism) குறைப்பது, அதிலும் ஒவ்வொரு புள்ளியிலும் அதிசயத்தக்க விதத்தில் எப்போதும் அவர்களே சரியாக இருப்பது, அவர்களது எதிராளிகள் எப்போதும் முட்டாள்களாகவும் மற்றும் இழிவுக்குரியவர்களாகவும் இருப்பது ஆகியவற்றுடன், அவரை மாதிரியான பெருநகர புத்திஜீவியை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. நான் ஒருபோதும் ட்ரொட்ஸ்கியின் நூல்களை விரும்பியதில்லை ... ஆக மொத்தத்தில் பெரும்பாலும் அரசியல் அடித்தளத்தில் நான் ட்ரொட்ஸ்கிக்கு எதிராக உள்ளேன். ஸ்ராலினை வெறுப்பது தான் அவரது தீர்க்கமான கொள்கை, அவரது "நிரந்தரப் புரட்சி" எனும் முழக்கம், இப்போது இருக்கும் தனியொரு நாட்டில் நிலவும் சோசலிசத்தை தாக்குவது மற்றும் பலவீனப்படுத்துவதன் மூலம் புரட்சியை நிரந்தரமாக அழிப்பதற்காக இருக்கக்கூடும் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ... ஸ்ராலின், அவரது அனைத்து தவறுகள் மற்றும் நற்குணங்களுடன், கம்யூனிஸ்ட் புரட்சியை பிரதிநிதித்துவம் செய்கிறார். ட்ரொட்ஸ்கி “இரண்டாவது புரட்சியை” பிரதிநிதித்துவம் செய்ய வந்திருக்கிறார், அது பாசிச சக்திகளிடமிருந்து வரும் தாக்குதல்களுக்கு முன்னே, அதனை பலவீனமாக்க முயற்சிக்கிறது.11

பொறுக்க முடியாத ஆரவாரம் மற்றும் பகட்டு இறுமாப்புடன், அமெரிக்க தாராளவாதத்தின் இற்றுப்போன மற்றும் அழுகிப்போன தன்மையின் வருந்தத்தக்க விளக்கமாக அக்கட்டுரை இருந்தது. பழைய புரட்சியாளர்கள் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டு, பின்னர் மாஸ்கோவில் படுகொலை செய்யப்பட்டு வந்தனர். ஆனால் காவ்லி போன்றவர்களோ, கொடூரங்களுக்கு காரணம் கற்பிப்பதற்கு வழிகளைக் கண்டுகொண்டு, அவர்களது முகங்களில் புன்னகை பூக்க இருந்தார்கள். அவர்கள் மாபெரும் வரலாற்று மற்றும் தார்மீக விடயங்களை, அவர்களது சொந்த குறுகிய மற்றும் தனிப்பட்ட சில்லறை விடயங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்தனர். ஸ்ராலினிச ஆட்சியின் சர்வதேச கொள்கை, அவர்களின் சொந்த அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஒத்துப் போகும் அளவுக்கு, காவ்லி போன்ற தாராளவாதிகள், ட்ரொட்ஸ்கியின் "தொந்திரவுக்குரிய" நடவடிக்கை என்று அவர்கள் கருதியதை வெறுத்தும், எதிர்த்தும் வந்தனர். சோவியத் சமூகத்தின் முரண்பாடுகள் குறித்த ட்ரொட்ஸ்கியின் ஆய்வு, இந்த தட்டினர் மத்தியில் ஒரு தொல்லை உணர்வை ஏற்படுத்தியது. காவ்லி போன்றோரை பொறுத்தவரை, ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிச ஆட்சியின் எதிர்ப்புரட்சிகர தன்மையை வலியுறுத்துவதன் மூலம், அவர்களது வாழ்க்கையில் தேவையற்ற அரசியல் மற்றும் தார்மீக சிக்கல்களை அறிமுகப்படுத்தி வந்ததாக கவலைக் கொண்டனர்.

ஜோன் டுவியும் லியோன் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்புக்கான குழுவும்

ஸ்ராலினிச எதிர்ப்பு மற்றும் தாராளவாத புத்திஜீவிகளின் பரந்த பகுதியினரின் விரோதத்திற்கு இடையிலும், ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஒரு பாதுகாப்பு குழுவை (defense committee) ஏற்படுத்தியது. அது தாராளவாதிகள் மற்றும் இடது தீவிரப்போக்கினரின் ஒரு சிறு அடுக்கிடையே ஆதரவைப் பெற்றது. ட்ரொட்ஸ்கியின் மிக முக்கிய பாதுகாப்பாளர்களுள் ஒருவர், Studs Lonigan எனும் மூன்று கதைத்தொகுதியின் ஆசிரியர் ஜேம்ஸ் ரி. ஃபாரெல் ஆவார். அக்குழு, அப்போது எழுபத்தெட்டு வயது நிரம்பியவரும், முக்கிய அமெரிக்க மெய்யியலாளருமான ஜோன் டுவியை அதன் தலைவராக இருக்க சம்மதிக்க வைத்ததில் அதன் மாபெரும் வெற்றியை ஈட்டியது. டுவி, மெக்சிகோவுக்கு பயணிக்கவும், மாஸ்கோ பொய் வழக்கு விசாரணைகளில் ட்ரொட்ஸ்கிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அவரது தரப்பு சாட்சிகளைப் பெறும் ஒரு விசாரணை துணைக்குழுவிற்கு தலைமை ஏற்கவும் சம்மதித்தார்.

ஜோன் டுவி (1859-1952), பல தசாப்தங்களாக, அமெரிக்க தாராளவாதத்திற்குள் இருந்த உண்மையான ஜனநாயக மற்றும் கருத்துவாத போக்கின் முக்கிய பிரதிநிதியாக இருந்தார். தாராளவாத சமூகத்திற்காக கட்டுரைகள் மற்றும் விரிவுரைகள் வழங்கி வந்த அவர், அந்த சமூகத்திடையே புத்திஜீவிதரீதியாக புகழேணியில் இருந்தார். தங்களைத் தாராளவாதிகள் என்று அழைத்துக்கொண்ட பரந்த பெரும்பான்மையினருக்கு முரண்பட்ட விதத்தில், டுவி அவரது ஜனநாயகரீதியான நம்பிக்கைகளை மிக அக்கறையுடன் கைக்கொண்டிருந்தார். லியோன் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்புக்கான குழுவுடன் உடன்படுவதற்கும், உண்மையில் அதனது தலைவராக ஆவதற்கும் அவர் எடுத்த முடிவு, அவரது சிந்தனையில் மேலோங்கி இருந்த ஜனநாயக கருத்துவாதத்தின் ஆழத்தை வெளிப்படுத்தியது.

லியோன் டரொட்ஸ்கியின் பாதுகாப்புக்கான குழுவுடன் டுவி சேர்ந்தார், ஏனெனில், முதலாவதாக, ட்ரொட்ஸ்கிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டிய உரிமை அவருக்கு மறுக்கப்படக்கூடாது என்று அவர் நம்பினார். டுவி ஜனநாயகத்தின்பால் பாதி, உண்மையின்பால் பாதி என பாதிக்குப் பாதி மனப்பாங்கு கொண்ட சந்தர்ப்பவாத வகைப்பட்டவர் அல்லர், இதுதான் மக்கள் முன்னணி தாராளவாதிகள் பலரின் குணாம்சமாக இருந்தது. மால்கொம் காவ்லியை போன்றவர்களுக்கு, பொதுவில் உண்மை என்பது, மிகச்சிறந்த விடயமாக இருந்தது. அது குறிப்பாக அவசியமாக இருக்குமானால் அனைத்து காரணகாரியமான சொல்வன்மையுடன் பாதுகாக்கப்படவேண்டும். உண்மையுடனான அவர்களது பிரச்சினை என்பது —அவர்களது அந்தஸ்து, அவர்களது வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் தலைவிதி போன்ற— மிகவும் அழுத்துகின்ற தனிப்பட்ட மற்றும் அரசியல் அக்கறைகளின் வழியில் அது குறுக்கே வரும்போது மட்டுமே எழும்.

ஆனால் மாஸ்கோ வழக்குகளால் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுடன் டுவியின் கவலை, வெறுமனே நேர்மையான மனித உரிமை பற்றியதாக இருக்கவில்லை. அல்லது, அதனை வேறுவகையில் கூறுவதானால் மனித உரிமைகள் பற்றிய அவரது அக்கறை, சமூக பொருளாதார வாழ்வின் மிக ஆழ்ந்த பிரச்சினைகளுடன் அவர் கொண்டிருந்த முன்னீடுபாட்டுடன் பிணைந்து இருந்தது. சமூக முன்னேற்றத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, அத்துடன் ஜனநாயகம் மற்றும் சந்தை பொருளாதாரங்களினது அடையாளங்களை ஏற்காத அமெரிக்க தாராளவாதத்தின் கடும் முயற்சிக்காகவே டுவி பேசினார். அது சமூக சமத்துவம் இல்லாத ஜனநாயகம் என்பது ஒரு வெற்றுக் கூடு என்று நம்பியது. டுவி, புதிய ஒப்பந்த உடன்படிக்கையை, முதலாளித்துவத்தை சேதப்படுத்தாத சீர்திருத்தவாத வலிநிவாரணிகளுக்கு அதிகமாக அது வேறொன்றையும் வழங்கவில்லை என்ற அடித்தளத்தில் எதிர்த்தார். 1930களின் தொடக்கத்தில், அப்போதிருந்த முதலாளித்துவ கட்சிகளுக்கு எதிராக, டுவி ஒரு மூன்றாவது அரசியல் கட்சியை ஸ்தாபிப்பதற்காக, நடைமுறைக்கு உதவாத வகையில் இருந்தாலும் கூட, கடுமையாக உழைத்தார்.

தாராளவாதத்தின் தலைவிதியை, முதலாளித்துவ அமைப்புமுறையுடன் பிணைக்க அங்கே எதுவும் அத்தியாவசியமானதாக இருக்கவில்லையென டுவி, அவர் புரிந்து கொண்ட விதத்தில், நிச்சயமாக அப்பாவித்தனமாக வாதிட்டார். அமெரிக்க தாராளவாதம் தழுவியிருந்த, அனைத்திற்கும் மேலாக சமூக சமத்துவத்திற்கு கடமைப்பாடாக இருந்த ஜனநாயக கோட்பாடுகள், முதலாளித்துவ சமூகத்தின் சமகாலத்திய அபிவிருத்தியுடன் சமரசமின்றி முரண்பாட்டிற்கு வந்ததாக அவர் வலியுறுத்தினார். தாராளவாதம் அதன் வரலாற்று அபிவிருத்தியில், முதலாளித்துவ பொருளாதார நலன்களின் மற்றும் அதன் பொதுவான உலக கண்ணோட்டத்தின் ஒரு வெளிப்பாடாக இருந்தது என்பதை அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தாராளவாதத்தால் பலப்படுத்தப்பட்டிருந்த ஜனநாயக கருத்தியல்கள் இருபதாம் நூற்றாண்டின் சமூக மற்றும் அரசியல் யதார்த்தங்களுடன் மோதலுக்கு வந்திருந்தன. வரலாற்று நிலைமைகளில் ஏற்பட்டிருந்த இந்த மாற்றத்தை உணரத் தவறியவர்கள், டுவியின் கண்களில், “போலிதாராளவாதிகள்” ஆகியிருந்தனர், அவர்கள் சந்தை பொருளாதாரங்களை மற்றும் அது உருவாக்கிய அனைத்து சமூக அநீதி மற்றும் அவலங்களை நியாயப்படுத்துகின்ற அதேவேளை, ஜனநாயகத்திற்கு வாயளவில் மட்டும் மரியாதை தருகின்றனர். டுவி மார்க்சிஸ்டோ அல்லது புரட்சியாளரோ கிடையாது. சோசலிசம் அடைந்தாக வேண்டிய அல்லது அடையக்கூடிய ஒரு வழிமுறையான வர்க்கப் போராட்டத்தை வெளிப்படையாகவே அவர் நிராகரித்தார். சோசலிசம் எவ்வாறு அடையப்பட முடியும் என்று அவரது சொந்த திருப்திக்காகவோ அல்லது வேறு எவரது திருப்திக்காகவோ அவரால் ஒருபோதும் விடையளிக்க முடிந்ததில்லை. ஆனால் இங்கே கேள்வி அதுவல்ல. பழைய திரு. டுவியின் அரசியல் மற்றும் சமூக எழுத்துக்களில் ஒருவரது கவனத்துக்கு வருவது என்னவெனில், நமது சமகால “தாராளவாத புத்திஜீவிகளது கூட்டத்தின்” எந்தவொரு பிரதிநிதிகளையும் விட, மேலும் அதுபோன்றவொரு சமூக குழுவாக்கங்களை பற்றிக்கூட ஒருவரும் பேசமுடியாதளவிற்கு, அமெரிக்க முதலாளித்துவம் பற்றிய அவரது விமர்சனங்களில், எவ்வளவு தூரம் அவரால் மேற்கொண்டு போக அவர் தயாரிப்பு செய்திருந்தார் என்பதே குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

விசாரணை குழுவின் தலைவராக அவர் பொறுப்பேற்றபோது, ட்ரொட்ஸ்கிக்கு தன்னைத்தானே பாதுகாக்கும் உரிமையை வழங்குவதை எதிர்த்த தாராளவாதிகளின் புத்திஜீவித நேர்மையின்மையை டுவி கண்டனம் செய்தார். வரலாற்று உண்மைக்கான போராட்டத்திலிருந்து வரலாற்று முன்னேற்றத்திற்கு காரணமாக இருப்பதை பிரிக்கவியலாது என்றும், சோவியத் ஒன்றியத்திற்கு ஆதரவாக இருக்கும் தாராளவாதிகள் எதிர்கொண்ட கேள்விகள் தவிர்க்கப்பட முடியாதவை என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மெக்சிகோவிற்குப் புறப்படுவதற்கு சற்று முன் வழங்கிய அவரது உரையில் டுவி அறிவித்தார்:

ஒன்றில், லியோன் ட்ரொட்ஸ்கி ஒட்டுமொத்த படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டியதற்காக, உயிரையும் உடைமைகளையும் திட்டுமிட்டு அழிப்பதில் சேதம் விளைவித்ததற்காக, சோசலிசத்தை அழிக்கும் பொருட்டு சோவியத் ஒன்றியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார எதிரிகளுடன் கூட்டுச்சதிக்கு அடித்தளம் அமைத்தமை போன்ற தேசத்துரோகம் இவற்றிற்காக குற்றவாளியாக இருக்க வேண்டும் அல்லது அவர் நிரபராதியாக இருக்க வேண்டும். அவர் குற்றவாளி என்றால், அவருக்கு எதிரான மிக கடுமையான தண்டனை அளவுக்கு வேறு எதுவும் இருக்காது. அவர் குற்றவாளி இல்லை என்றால், சோவியத் ரஷ்யாவில் இருக்கும் ஆட்சியின் ஆழ்ந்து ஆராய்ந்த திட்டமிட்ட தண்டனை மற்றும் பொய்மைப்படுத்தலில் இருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும், அதில் வேறு வழியே இல்லை. ரஷ்யாவில் சோசலிச அரசைக் கட்டும் முயற்சிகளுக்கு ஆதரவு தர முகங்கொடுப்பவருக்கு இவை கடினமான மாற்றீடுகளாகும். எளிதான மற்றும் சோம்பலான பாதை, மாற்றீடுகளை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதாகும். ஆனால் மகிழ்ச்சியற்றதை எதிர்கொள்வதற்கு விரும்பாமல் இருப்பது என்பது தாராளவாதிகளின் பலவீனமாக உள்ளது. விவகாரங்கள் இதமாகச் செல்லும்போது மட்டுமே அவர்கள் துணிவாக இருப்பதற்கு அளவுக்கதிகமாக விருப்பப்படுகிறார்கள், பின்னர் மகிழ்வற்ற நிலைமைகள், முடிவெடுக்கும் நடவடிக்கையை கோருகின்றபோது அப்போது நடுங்க தொடங்குகிறார்கள். ஒரு உண்மையான தாராளவாதி, அவர் மாற்றீடுகளை எதிர்கொள்ளும்போது, ஒரு நீடித்த சோசலிச சமூகத்தை கட்டுவதற்கு களையெடுத்தலும் மற்றும் பொய்மைப்படுத்தலும் ஒரு உறுதியான அடித்தளமாக இருக்கின்றன என்று கருதினால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.12 Dreyfus வழக்கின் காலகட்டத்தில் ஸோலாவால் (Zola) எழுதப்பட்ட வார்த்தைகளை மேற்கோளிட்டுக் காட்டி, டுவி அவரது உரையை முடித்திருந்தார்: அதாவது “உண்மை முன்னுக்கு வரும்போது அதனை ஒருவராலும் தடுக்க முடியாது.”

1937 ஏப்ரலில் டுவி மெக்சிகோவிற்கு பயணித்தார். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியால் செய்யப்பட்ட கண்டனங்களாலும் மற்றும் சரீரரீதியான அச்சுறுத்தல்களாலும் அஞ்சிய அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்தப் பணியை அவர் ஏற்காமலிருக்க முறையிட்ட போதினும், அவற்றாலும் கூட அப்பணியை அவர் கைவிடுமாறு செய்துவிட முடியவில்லை. ட்ரொட்ஸ்கியிடம் குறுக்கு விசாரணை, 1937 ஏப்ரல் 10 முதல் 17 வரை ஒரு வாரத்திற்கு மேல் நீண்டது. ட்ரொட்ஸ்கியின் சாட்சியம் கிட்டத்தட்ட 600 அச்சிட்ட பக்கங்களாக நீண்டன. அது ட்ரொட்ஸ்கியின் அரசியல் வாழ்க்கை மற்றும் திடமான நம்பிக்கையின் ஒரு விளக்கமான கணக்கை வழங்கியது.

ட்ரொட்ஸ்கியும் டுவியும் கவனத்திற்குரிய முரண்பாடுகளாக முன்நின்றனர். முன்னவர் புரட்சிகர உணர்வு மற்றும் ஆற்றலின் உருவடிவமாக, நவீன வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான சம்பவங்களின் மையத்தில் நின்றிருந்தவர், மாஸ்கோவில் வழக்கு விசாரணைகளை எழ வைத்திருந்த அரசியல் மற்றும் சமூக சிக்கல்களை விளக்குவதற்கு, பொறிதட்டும் உவமைகளை பயன்படுத்திய மேதைமை பொருந்திய இயங்கியல்வாதி ஆவார். டுவியோ முற்றுலும் வேறுபட்ட மனிதர்: வெர்மாண்டிலிருந்து வந்த ஒரு பழைய யாங்கியைப் (Yankee) போல, மிகவும் கடினமான ஆனால் சுருக்கமான அவரது கருத்துக்களுடன், கல்லூரி விரிவுரை அரங்கின் ஒரு மனிதர் ஆவார், அவர் பரந்த மக்கள் அணிவகுப்பின் மற்றும் போர்க்களத்தின் ஒரு மனிதர் அல்ல. மனோபாவம் மற்றும் அரசியல் கருத்துருக்களில் அவர்களிடையே அனைத்து வேறுபாடுகளும் இருப்பினும், அவர்கள் இருவருமே உண்மையின்பால் உணர்வுபூர்வமான அர்ப்பணிப்பைக் கொண்டிருந்தார்கள், அதுவே முன்னேற்றத்தின் புத்திஜீவித மற்றும் தார்மீக உந்துவிசையென்று அவர்கள் கருதினார்கள்.

அவரது சொந்த வழியில் ட்ரொட்ஸ்கி, டுவிக்கு ஓர் அரிய மற்றும் உறைக்குமாறு புகழாரத்தை அளித்தார். மெக்சிகோவில் விசாரணையின் இறுதி அமர்வில், ட்ரொட்ஸ்கி அவரது வாழ்க்கை, நம்பிக்கைகள் மற்றும் புகழ் ஆகியவற்றின் பாதுகாப்பில் நான்கு மணி நேரம் உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்ட அந்த உரைக்கு, தலைசிறந்த பேச்சாளருக்கு கொடுக்க வேண்டிய மிக ஆழ்ந்த புத்திஜீவித கவனிப்பு தேவைப்பட்டது என்ற உண்மையால் அவரது உரையின் பேச்சாற்றல் முக்கியத்துவம் பெற்றிருந்தது, அதற்குப் பின்னர் அங்கே மெய்மறந்த அமைதி நிலவியது.

ட்ரொட்ஸ்கி அவரது பேச்சின் முடிவுக்கு வந்த போது, “மதிப்பிற்குரிய ஆணையாளர்களே,” என்று உரைத்தார்:

எனது வாழ்க்கையின் அனுபவத்தில், அங்கே வெற்றிகளுக்கோ அல்லது தோல்விகளுக்கோ ஒன்றும் பஞ்சம் இருக்கவில்லை, அது மனிதகுலத்தின் தெளிவான, ஒளிமயமான எதிர்காலத்தின் மீது எனக்கிருந்த நம்பிக்கையை அழித்துவிடவில்லை என்பது மட்டுமல்ல, மற்றொரு வகையில் அதற்கு திடமான உறுதியையும் வழங்கியுள்ளது. பதினெட்டு வயதில் நான் ரஷ்ய நகரமான நிக்கோலெய்வின் தொழிலாளர் குடியிருப்புக்கு என்னுடன் எடுத்து சென்ற பகுத்தறிவு, உண்மை மற்றும் மனித ஒற்றுமையில் நான் கொண்டிருந்த நம்பிக்கையை முழுமையாகவும் நிறைவாகவும் பாதுகாத்து வைத்துள்ளேன். அது மேலும் பக்குவம் அடைந்திருக்கிறது, ஆனால் ஆர்வத்தில் சற்றும் குறையவில்லை. உங்களது விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையே கூட — அதன் தலைமையில், அசைக்க முடியாத தார்மீக பொறுப்பு கொண்ட ஒரு மனிதர் இருக்கிறார், அவரது வயதின் காரணமாக அரசியல் அரங்கில் சலசலப்புக்களுக்கு வெளியே இருக்க உரிமை உடைய ஒரு மனிதராய் இருக்கிறார் என்பது உண்மையே, இந்த உண்மையில், எனது வாழ்வில் அடிப்படை அம்சமாக விளங்கும் புரட்சிகர நம்பிக்கைவாதத்தின் ஒரு புதிய மற்றும் உண்மையான சிறப்பார்ந்த பலத்தை நான் காண்கிறேன்.

விசாரணைக் குழுவின் சீமான்களே! சீமாட்டிகளே! திருவாளர் அட்டர்னி ஃபினேர்ட்டி! அடுத்து நீங்கள், எனது நண்பரும் வழக்கறிஞருமான கோல்ட்மன்! உங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றியை வெளிப்படுத்துவதற்கு என்னை அனுமதியுங்கள், இது இந்த விடயத்தில் ஒரு தனிப்பட்ட குணாம்சத்தைப் பெறாது. முடிவாக, கல்வியாளர், மெய்யியலாளர் மற்றும் உண்மையான அமெரிக்க கருத்துவாதத்தின் உருவமாக விளங்கும், உங்கள் குழுவிற்கு தலைமை தாங்கும் அறிஞருக்கு எனது ஆழ்ந்த மரியாதையை தெரிவித்து கொள்வதற்கு என்னை அனுமதியுங்கள்.13

இதற்கு, “நான் கூறக்கூடிய எதுவும் ஏமாற்றகரமான முடிவாகக் கூட இருக்கலாம்” என்று டுவி பதிலளித்ததோடு, பின்னர் விரைவாக அவர் குறுக்கு விசாரணையை கண்ணியத்துடன் முடிவுக்கு கொண்டு வந்தார்.

டுவி குழு கண்டறிந்தவை

ஆணையாளர்கள் அமெரிக்காவிற்கு திரும்பினர். ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் விரிவான கண்டறிதல்களை வழங்கினர், அவை மாஸ்கோ வழக்கு விசாரணைகளில் ஸ்ராலினிச ஆட்சியால் வைக்கப்பட்டிருந்த வழக்கின் ஒவ்வொரு அம்சத்தையும் மறுத்தன. மிகவும் முக்கியமான கண்டறிதல்களை மேற்கோளிட்டு காட்டுவதற்கு என்னை அனுமதியுங்கள்:

விசாரணைக் குழுவானது பின்வரும் முடிவுரையோடு அதன் கண்டறிதலை தொகுத்தளித்தது: “ஆகையால் மாஸ்கோ வழக்குகள் ஜோடிப்புகளாக இருப்பதை நாம் காண்கிறோம். ஆகையால் நாம் ட்ரொட்ஸ்கியையும் செடோவையும் குற்றவாளிகள் அல்ல என்று காண்கிறோம்.”14

விசாரணைக் குழுவானது, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு அவர் குற்றவாளி அல்ல என்ற கண்டறிதலோடு மட்டும் அதனை மட்டுப்படுத்திக் கொண்டிருந்திருக்கலாம் என்று ட்ரொட்ஸ்கி ஒரு புள்ளியைக் குறிப்பிட்டார். மாஸ்கோ விசாரணைகள் ஜோடிப்புகளாக இருந்தன என்று ஐயத்திற்கிடமல்லாத வகையில் குறிப்பிட்டுவிட்டு, அது அதற்கும் அப்பால் சென்றது. சுருக்கமாக, விசாரணைக் குழுவானது வழக்கு விசாரணைகளை ஏற்பாடு செய்தவர்களை, பிரதானமாக ஸ்ராலினை, உலக வரலாற்றிலேயே மிக மோசமான குற்றவாளிகளில் ஒருவராக கண்டது. ஸ்ராலினும் அவரது கூட்டாளிகளும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை மட்டுமல்லாமல், நூறாயிரக்கணக்கான ஏனைய அப்பாவிகளையும் படுகொலை செய்வதற்கு ஒரு சட்டரீதியான மூடுதிரையை வழங்கும் பொருட்டு, ஓர் அரசு போலிவிசாரணையை ஏற்படுத்தி இருந்தார்கள்.

மாஸ்கோ விசாரணைகளுக்கு ரிச்சார்ட் பைப்ஸ் பெருந்தன்மையோடு மறுவாழ்வளிப்பதை, சோசலிச சமத்துவக் கட்சி ஏன் பகிரங்கமாக எதிர்க்கிறது என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். நூறு ஆயிரக் கணக்கானோரின் மரணத்திற்கு காரணமாகியதும் மற்றும் சர்வதேச சோசலிசத்தின் பாதையில் பலத்த அடியைக் கொடுத்ததும் ஆன அந்த பயங்கரத்தை ஸ்ராலினின் குற்ற வழக்குகள் சட்டரீதியில் நியாயப்படுத்தின. வழக்கு விசாரணைகளை அம்பலப்படுத்துவதற்கான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் அவரது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளை விழுங்கியது. மாஸ்கோ வழக்கு விசாரணைகள் இறுதியில் அவநம்பிக்கைக்கு ஆளாயின. சோவியத் ஒன்றியம் 1991இல் வீழ்ச்சி அடைவதற்கு சற்று முன்னதாக, சோவியத் அதிகாரத்துவமே கூட அந்த வழக்குகள் சட்டரீதியான கேலிக்கூத்து என்பதை ஒப்புக்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டது. அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு ஐம்பதாண்டுகளுக்கும் மேலான பின்னர், வழக்கு விசாரணைகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உத்தியோகபூர்வமாக புனருத்தாரணம் செய்யப்பட்டனர்.

பைப்ஸ் அவரது சொந்த பிற்போக்கு அரசியல் நிகழ்ச்சிநிரலின் பேரில், மாஸ்கோ விசாரணைகளுக்கு மறுவாழ்வளிக்க செய்யும் அவரது முயற்சியை நம்மால் இந்த வரலாற்று வெளிச்சத்தில், செயலற்று மரத்துபோய் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அத்தகைய சம்பவங்கள் குறித்து பொய்கள் கூறப்படும்போது, அது மனிதகுலத்தின் வரலாற்று நனவுக்கு எதிராக தொடுக்கப்பபடும் தாக்குதலாக அமைகிறது. யூத இனப்படுகொலையின் உண்மையை மறுக்கும் முயற்சிகளைக் குறித்து படிக்கும் போதோ அல்லது கேட்கும் போதோ நாம் ஒவ்வொருவரும் சீற்றம் கொள்கிறோம். பாசிசத்தால் ஆறு மில்லியன் யூத மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது மறுக்கப்படுகிறது என்றால், அதன் பின்புலத்தில் எதிர்கால இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்வதாக ஆகும். நவீன வரலாற்றில் யூத இனப்படுகொலைக்கு மிக நெருக்கமாக ஒப்பிடத் தகுதிகொண்ட சம்பவம், சோவியத் ஒன்றியத்தின் புத்திஜீவிகள் மற்றும் சோசலிச தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஸ்ராலினிச பயங்கரமாகும்.

நாஜிக்களால் நடத்தப்பட்ட யூத இனப்படுகொலை மற்றும் ஸ்ராலினிஸ்டுகளால் நடத்தப்பட்ட மாபெரும் பயங்கரம் இரண்டுமே, ஐரோப்பா முழுவதிலும் சோசலிச தொழிலாள வர்க்கத்தின் பரந்த அரசியல் இயக்கத்திற்கு எதிரான எதிர்ப்புரட்சிகர பதிலளிப்பின் குற்றகரமான தயாரிப்புகளாகும். நாஜி மற்றும் ஸ்ராலினிச ஆட்சிகளின் சமூக மற்றும் பொருளாதார அடித்தளங்கள் முற்றிலும் வேறானவை என்பது உண்மைதான். ஆனால் அவற்றின் அரசியல் நிலைநோக்கில், இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களின் போது, மார்க்சிசத்தின் செல்வாக்கின் கீழ் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தில் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக மாறியிருந்த சர்வதேச சோசலிசத்திற்கு, ஒரு பிற்போக்குத்தனமான தேசியவாத விடையிறுப்பின் பண்புருவாக ரஷ்ய ஸ்ராலினிசமும், ஜேர்மன் பாசிசமும் இரண்டும் விளங்கின. மார்க்சிசத்தால் தொழிலாள வர்க்க இயக்கத்தில் தலைமுறை தலைமுறைகளாக கட்டி எழுப்பப்பட்டிருந்த அரசியல், புத்திஜீவித, கலாச்சார மற்றும் அறநெறிப்பட்ட அடித்தளத்தை அழிப்பதற்கு ஹிட்லரும் ஸ்ராலினும், அவர்களது சொந்த வழிகளில் முயற்சித்தனர். ஹிட்லர் இனப்படுகொலை முறையைப் பயன்படுத்தினார். ஸ்ராலினின் இனப்படுகொலை மிகவும் துல்லியமாக: அவரது அரசியல் தேர்வு (political selection), நிகழ்ச்சிப்போக்கை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அக்டோபர் புரட்சியால் தூண்டப்பட்ட சோசலிச மரபுகளின் செல்வாக்கை, தங்களது அரசியல் அல்லது புத்திஜீவித சாதனைகள் மூலம் பிரதிபலித்தவர்களை ஸ்ராலின் இனங்கண்டு அவர்களை அழிக்க உத்தரவிட்டார்.

இப்போது இந்த விரிவுரையின் தலைப்பில் எழுப்பப்பட்ட பிரச்சினைக்கு — அதாவது மாஸ்கோ வழக்கு விசாரணைகளும் அமெரிக்காவில் அரசியல் வாழ்வின் தற்போதைய நெருக்கடியும் என்பதற்கு — நேரடியாக திரும்புவோம். அந்த வழக்குகள், இந்நாட்டின் அரசியல் வாழ்வின் அபிவிருத்தி மீது ஆழ்ந்த மற்றும் நீடித்த பாதிப்பை உருவாக்கின. மக்கள் முன்னணி தாராளவாதிகளின் ஒரு பகுதியினர் ஸ்ராலினிச இடதுகளுடன் கொண்ட சந்தர்ப்பவாத சாகசங்கள் ஒரு கசப்பான அரசியல் சுவையை விட்டு சென்றது. ஓர் அடிப்படை அர்த்தத்தில், மாஸ்கோ விசாரணையால் பல தாராளவாத புத்திஜீவிகள் முற்றிலும் செல்வாக்கு இழக்காவிட்டாலும், ஆழ்ந்த தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1938 மார்ச்சில் மூன்றாவது விசாரணையில் — இம்முறை பிரதானமாக குற்றஞ்சாட்டப்பட்டவர் புக்ஹாரின் ஆவார் — அனைத்தும் சோவியத் நீதிமுறையின் கீழ் சிறப்பாக இருப்பதாக பாசாங்கை செய்வது இயலாததாக ஆனது. ஆயினும் முன்னர் இருந்த ஸ்ராலினிசத்தின் தாராளவாத பாதுகாப்பாளர்கள், அவர்கள் தவறு செய்திருந்ததையோ அல்லது ஏன் அவர்களது கணிப்பு தவறாக இருந்தது என்பதையோ கூட ஆய்வு செய்ய ஒப்புக்கொள்வதற்கு நாட்டம் கொள்ளவில்லை. அந்த வட்டாரங்களில் ஒரு புதிய மனோநிலை எழ ஆரம்பித்தது. ஸ்ராலினிசத்தின் தாராளவாத புகழ்ச்சியாளர்கள் இப்போது வழக்கு விசாரணைகளை அனேகமாக நீதியின் கேலிக்கூத்தாக உணரத் தொடங்கினர். ஆகவே புரட்சிகர வழிமுறையினூடாக சமூக மாற்றத்தை நாட முற்படும்போது என்ன நிகழும் என்பதை மாஸ்கோவில் நடந்த துரதிரஷ்டவசமான சம்பவங்கள் எடுத்துக்காட்டியதாக அவர்கள் வாதிட்டனர். “வன்முறை வன்முறையைக் கொண்டு வருகிறது!” மாஸ்கோ விசாரணைகள் போல்ஷிவிசத்தின் அறம்பிறழ்ந்த முறையிலிருந்து இல்லையென்றாலும், அறம் சாராதவற்றிலிருந்து எழுந்தது.” “1937இல் என்ன நடந்ததோ, அது 1917லேயே தொடங்கி விட்டது.” “ஸ்ராலின் கெட்டவராக இருந்திருக்கலாம், ஆனால் ட்ரொட்ஸ்கியோ மிகவும் மோசமானவராக இருந்திருப்பார்!” என வாதிடப்பட்டது.

சோசலிசத்தை இழிவுபடுத்துவதற்கு வருடக்கணக்கில் திரும்பத்திரும்ப முடிவின்றி கூறப்பட்டு வந்த ஓய்ந்துபோன அந்த வாதங்கள், 1930களின் இறுதியில் நடந்த படுபயங்கர சம்பவங்களில் அமெரிக்க தாராளவாதம் உடந்தையாய் இருந்ததால், அதிலிருந்து தன்னைத்தானே பாதுகாத்து கொள்ளும் நியாயப்பாடுகளிலிருந்து அவை வருகின்றன. ஸ்ராலினிசத்தின் மீது தாராளவாதத்திற்கு ஏற்பட்ட ஏமாற்றம், எதிர்ப்பு குறைந்த வழியில் சென்றது — அதாவது, அது சோவியத் அதிகாரத்துவம் பற்றிய புரட்சிகர மார்க்சிச விமர்சனத்தை நோக்கியதாக இல்லாமல், மாறாக சோசலிசத்திற்கான எந்தவித ஆதரவையும் அல்லது எந்தவித செயலூக்கமான நலனையும் பொதுவில் கைவிடுவதை நோக்கியதாக இருந்தது. இந்த போக்கு ஆகஸ்ட் 1939இல் ஸ்ராலின்-ஹிட்லர் உடன்படிக்கை கையெழுத்தான பின்னர், சிறப்பாக வெளிப்பட்டது. அது, சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் நண்பர்கள், தொழிலாள வர்க்கத்தை மற்றும் சர்வதேச சோசலிசத்தைக் காட்டிக்கொடுத்ததாக புரிந்து கொள்ளப்படவில்லை —அதை வேண்டுமானால் அவர்கள் மன்னித்து விடவும் கூடும்— ஆனால் அது ரூஸ்வெல்ட் நிர்வாகத்தின் வெளிநாட்டு கொள்கை காட்டிக்கொடுக்கப்பட்டதாக புரிந்து கொள்ளப்பட்டது.

ஜூன் 1941இல் நாஜி படையெடுப்பைத் தொடர்ந்து அதற்கடுத்து வந்த டிசம்பரில் இரண்டாம் உலக போருக்குள் அமெரிக்கா நுழைந்தபோது அங்கே ஸ்ராலினிசத்திற்கும் தாராளவாத புத்திஜீவிகளுக்கும் இடையே, தற்காலிகமாக, சந்தர்ப்பவாத சமரசங்கள் ஏற்பட்டன. அவர்களது புகழ் மற்றும் பிழைப்புக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல், சோவியத் ஒன்றியத்தை நோக்கி நட்புரீதியான உணர்வுகளின் வெளிப்பாட்டுடன் தேசபற்றுவாதத்தை இணைக்க கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். இந்த மகிழ்ச்சியான சூழல், போர் முடிவடைவது வரைக்கும் மட்டுமே நீடித்தது, அல்லது இன்னும் துல்லியமாக கூறுவதானால், சேர்ச்சில் மார்ச் 1946இல், மிசோரியின் புல்டன் உரையில் அவரது “இரும்புத்திரை” உருவகத்தை வெளியிடும் வரைக்குமே நீடித்தது.

தாராளவாதமும் குளிர்யுத்தமும்

குளிர்யுத்தம் ஆரம்பித்ததுடன், பொதுவான கருத்து வேகமாக வலதிற்கு நகர்ந்தது. அமெரிக்க தாராளவாதத்தின் அணிகளை, மூர்க்கமான கம்யூனிச எதிர்ப்பு பற்றிக் கொண்டது, அது தீர்க்கமான வகையில் பிற்போக்குத்தனமான சூழலுக்கு பங்களிப்பு செய்தது, அது இல்லாமல் இருந்திருந்தால் 1940களின் பின்னரும் 1950களின் தொடக்கத்திலும் வேட்டையாடல்கள் இடம் பெற்றிருக்காது.

அமெரிக்காவில் புத்திஜீவித மட்டம் மற்றும் அரசியல் சூழல் மீது அத்தகைய அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்த இருந்த அந்த அரசியல் பிற்போக்கு அலைக்கு பங்களிப்பு செய்வதில், அமெரிக்க தாராளவாதம் இழிவான பாத்திரம் வகிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. போரைத் தொடர்ந்து வந்த பொருளாதார மேல்நோக்கிய திருப்பம், தீவிர அரசியல் போக்குகளைப் பலவீனப்படுத்துவதில் நிச்சயமாக ஒரு தீர்க்கமான ஜடரீதியான காரணியாக இருந்தது. செல்வச்செழிப்பின் மீள்வரவும் உலக விவகாரங்களில் அமெரிக்காவினது புதிய மேலாதிக்கமும் முதலாளித்துவத்திற்கான வாய்ப்பு வளத்தின் மீதான நம்பிக்கைக்கு புத்துயிரூட்டின. அமெரிக்க நூற்றாண்டு என்று சொல்லப்படுவது ஆரம்பமானது. சமூக நிலைமைகள் மேம்பாடடைந்தது, அல்லது குறைந்தபட்சம் அமெரிக்க முதலாளித்துவம் அதன் அன்றாட உள்நாட்டு பிரச்சினைகளைக் கையாள்வதற்கு சடரீதியான வளங்களைக் கொண்டிருந்தது என்ற அர்த்தத்தில் அது, பழமைவாதம் அதிகரிப்பதற்கும் மற்றும் தாராளவாதம் மிதமிஞ்சிய திருப்தி கொள்வதற்கும் பங்களிப்பு செய்தது.

ஆனால் அமெரிக்க கம்யூனிச எதிர்ப்பின் விசித்திரமான மூர்க்கத்தன்மையை, குறிப்பாக அது மிகவும் சிறிதளவே ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பை சந்தித்தது என்ற உண்மைக்கு இடையே, முழுமையாக போருக்கு பிந்தைய செல்வச்செழிப்பின் சடரீதியான சூழலின் மீது சாட்டிவிட முடியாது. ஏனைய அரசியல் மற்றும் சித்தாந்தரீதியிலான காரணிகளும் கட்டாயம் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலாக, அமெரிக்க ஸ்ராலினிஸ்டுகளின் சிடுமூஞ்சித்தனம் மற்றும் நேர்மையற்றதன்மையின் அளவு, அவர்களை தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளை அப்பட்டமாய் வெறுப்பு கொள்ள வைத்ததில் வெற்றி அடைந்திருந்தது என்பதை ஒருவர் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. “ஸ்ராலினிச கூலி” (Stalinist hack) என்ற பதம் அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தின் நாளாந்த கலைச்சொல் தொகுப்பில் அங்கமாகி இருந்தது, மேலும் அது இருமுகங்கொண்ட குட்டி தொழிலாளர் அதிகாரத்துவத்தை (petty labor bureaucrat) நினைவுக்குக் கொண்டு வந்தது, அவை தொழிலாள வர்க்கத்தின் நலன்பேணுவது மீது அவற்றின் “அண்டிப் பிழைக்கும் போக்கு” (toed a line) ஏற்படுத்திய பாதிப்பு குறித்து எந்த நிஜமான அக்கறையும் இன்றி அதை ஏற்றிருந்தன.

ஆகஸ்ட் 1940இல் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்படுவதற்கு இட்டுச் சென்ற ஜிபியு (GPU) சதியில் அமெரிக்க ஸ்ராலினிஸ்டுகள் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தனர். மேலும் 1941இல் ட்ரொட்ஸ்கிச சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) தலைவர்கள், மக்களை அரசுக்கு எதிராக தூண்டுகிறார்கள் என்று இட்டுக்கட்டப்பட்ட வழக்கில் அவர்கள் மீது வழக்கு தொடுப்பதையும் ஸ்ராலினிஸ்டுகள் ஆதரித்தனர். எந்த சட்டங்கள் பல ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட இருந்ததோ அதே சட்டங்களை அவர்கள் தொழிலாளர் இயக்கத்தில் இருந்த அவர்களது அரசியல் எதிராளிகளுக்கு எதிராக பயன்படுத்துவதை ஆமோதித்தனர். நாஜி-எதிர்ப்பு இயக்கங்களில் அவர்கள் வகித்த பாத்திரத்தின் அடிப்படையில் அவர்களது புகழை அழிவிலிருந்து காப்பாற்றிக் கொண்ட, மேற்கு ஐரோப்பிய ஸ்ராலினிச கட்சிகளைப் போலல்லாமல், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிகளோ இரண்டாம் உலகப் போரின்போது தொழிற்துறை போர்க்குணத்தின் வெளிப்பாடுகள் அனைத்தையும் எதிர்த்தது மற்றும் அரசியல் தீவிரமயமாக்கலையும் எதிர்த்தது. இவ்வாறு போரின் முடிவில், ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் போர்க்குணம் மிக்க அடுக்குகளின் மத்தியில் உண்மையில் அனைத்து செல்வாக்கையும் இழந்திருந்தனர். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி போன்ற ஒரு கோட்பாடற்ற, சிடுமூஞ்சித்தனமான மற்றும் ஏமாற்றுத்தனமான அமைப்பு மட்டுமே, CIO அதிகாரத்துவத்தில் இருந்த அதனது வலதுசாரி எதிராளிகளை அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளுக்கு அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பாதுகாவலராக தம்மைக் காட்டிக் கொள்வதற்காக உதவி இருந்திருக்கக்கூடும்.

அமெரிக்க ஸ்ராலினிஸ்டுகளின் நடவடிக்கைகளும் சரி, அவ்விதத்தில், சோவியத் ஒன்றியத்தின் கொள்கைகளும் சரி, தாராளவாத புத்திஜீவிகளின் போருக்குப் பிந்தைய வலதை நோக்கிய வேட்கைக்கு ஒரு போதுமான விளக்கத்தை வழங்கவில்லை. கட்டாயம் விடையளிக்கப்பட வேண்டிய கேள்வி என்னவென்றால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குளிர்யுத்தகால கொள்கைகளை ஆதரிக்கையிலேயே ஏன் அவர்களது ஸ்ராலினிச எதிர்ப்பு பிரதானமான வெளிப்பாட்டைக் கண்டது என்பதாகும். இந்த கேள்விக்கான விடையின் முக்கியமான பகுதி, அவர்கள் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச ஆட்சியின் தோற்றுவாய்கள் மற்றும் இயல்பு குறித்து தத்துவார்த்தரீதியிலும் மற்றும் அரசியல்ரீதியிலும் இரண்டு விதத்திலும் அடிப்படையில் புரிந்து கொள்ள தவறியதில் காணக் கிடைக்கும். 1936க்கும் 1946க்கும் இடையே சோவியத் ஒன்றியம் தொடர்பாக தாராளவாத புத்திஜீவிகளின் மனப்பாங்கில் வியத்தகு மாற்றம் இருந்தது. இருப்பினும், அங்கே சோவியத் ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாடுகளுக்கு இடையே ஒரு திட்டவட்டமான அரசியல் மற்றும் தத்துவார்த்த தொடர்ச்சியும் இருந்தது. அவர்கள் ட்ரொட்ஸ்கிக்கு எதிராக ஸ்ராலினை ஆதரித்தபோது, பின்னர் ஸ்ராலினுக்கு எதிராக ட்ரூமெனை ஆதரித்தபோது, தாராளவாத புத்திஜீவிகள் ஸ்ராலினிசத்தையும் மார்க்சிசத்தையும் ஒன்றாய் அடையாளம் காண்பதிலிருந்து தொடங்கினர்.

இது தாராளவாத புத்திஜீவிகளை அரசியல்ரீதியாகவும் மற்றும் புத்திஜீவிதரீதியாகவும் பலவீனமான நிலைப்பாட்டிற்கு கொண்டு வந்தது. மார்க்சிசம் மற்றும் சோசலிசத்திற்கு ஸ்ராலினிசம் சமம் என்ற மேலோட்டமான சூத்திரத்தின் அடிப்படையில், தாராளவாதிகள் இரண்டு மாற்றீடுகளுடன் மட்டும் விடப்பட்டார்கள்: முதலாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்கள் என்ற வகையில் வலதிலிருந்து ஸ்ராலினிசத்தை எதிர்ப்பது; இரண்டாவது ஸ்ராலினிசத்தின் அனுதாபிகளாக இருந்து சேவை செய்வது. The New Republic இதழ் முதலாவது முகாமில் பிணைந்திருந்தது; The Nation இரண்டாவது முகாமில் சிக்கிக் கொண்டது.

சோவியத் ஆட்சியின் இயல்பை குறித்த புரிதல் இல்லாமல், ஸ்ராலினிசம் மற்றும் ஏகாதிபத்தியம் இரண்டிற்கும் ஒருசேர கோட்பாட்டு அடிப்படையிலான தீவிர எதிர்ப்பு சாத்தியமில்லை என்பதையே அமெரிக்க தாராளவாத மற்றும் ஜனநாயக புத்திஜீவிகளின் தலைவிதி எடுத்துக்காட்டியது. 1930களில் தாராளவாத புத்திஜீவிகள், சில விதிவிலக்குகளுடன், ஸ்ராலினிசத்தை மார்க்சிசத்துடன் அடையாளம் காண்பதை ஏற்றுக் கொண்டனர். பத்து பதினைந்து ஆண்டுகள் கழித்தும், அது இன்னமும் அந்த பொய்யான மற்றும் பிற்போக்குத்தனமான அடையாளத்தின் அடிப்படையில்தான் தொடர்ந்து கொண்டிருந்தது. சோவியத் ஒன்றியம் குறித்த அவர்களின் மதிப்பீட்டை எதிர்நிலைக்கு திருப்பி கொண்டவர்கள், 1930களில் ஸ்ராலினிசத்திற்கு சாதகமாக சாட்டிய அம்சங்களை ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் அதற்கு பாதகங்களாக மாற்றிக் கொண்டு, தவிர்க்கவியலாத வகையில் அரசியல் மற்றும் கலாச்சார வேட்டையாளர்களின் பின்னே அணிவகுத்தனர்.

இறுதி ஆய்வில், 1940களின் இறுதியில் தாராளவாத புத்திஜீவிகளின் பரிணாமம் ஆனது, குட்டி முதலாளித்துவ சமூக அடுக்கின் சடரீதியான நலன்களில் வேரூன்றி இருந்தது, அதிலிருந்து தான் அதன் உறுப்பினர் எண்ணிக்கை பெருமளவிற்கு அதிகரித்தது. இத்தகைய சமூகத்தட்டிற்குள்ளே பெருமளவில் மிகப் பொதுவாக காணப்படும் தனிநபர் குணாம்சங்கள் — தன்முனைப்பு, தன்னலம், கோழைத்தனம் முதலியன — இந்த நிகழ்ச்சிப்போக்கில் பல்வேறு தனிநபர்கள் வகித்த பங்கைத் தீர்மானிப்பதில் பங்களிப்பு காரணிகளாக விளங்கின. ஆனால் புத்திஜீவித காரணியை — அதாவது, அக்டோபர் புரட்சி, மற்றும் குறிப்பாக ஸ்ராலினிசத்தின் அரசியல் தோற்றுவாய்களும் முக்கியத்துவமும் குறித்த பொதுவான தத்துவார்த்த புரிதலின்மையையும் தள்ளுபடி செய்துவிடக்கூடாது. 1940களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பின்னால் அணிவகுத்த தாராளவாதிகள் மத்தியில், அயோக்கியர்களும் கோழைகளும் மட்டும் அல்லர். ஜோன் டுவி கூட, அவரது புத்திஜீவிதத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் துணிவு ஆகியன இருந்தபோதினும், வழக்கு விசாரணைகளுக்குப் பின்னர் படுமோசமாக இடறி விழுந்தார். அவர் வழக்கு விசாரணைகளை அம்பலப்படுத்தினார், ஆனால் அவற்றை அவரால் விளக்க முடியவில்லை. போல்ஷிவிச வழிமுறைகள் தவிர்க்க முடியாதவாறு ஸ்ராலினிச குற்றங்களுக்கு வழிவகுத்தன என்ற வெற்றுரையில் டுவி அடைக்கலம் புகுந்தார். இந்த அடிப்படையில், அவரது வாழ்வின் இறுதி ஆண்டுகளில், டுவி தாராளவாத முகாமில் இருந்த அவரது தரம் தாழ்ந்த ஏனையோரின் குளிர்யுத்தகால கருத்துருக்களையே பகிர்ந்து கொண்டார். டுவி அவருக்கு அடுத்து நிஜமான எந்த வாரிசையும் விட்டுச் செல்லவில்லை, ஏனென்றால் அமெரிக்க தாராளவாதத்தில் சிறிதளவிலும் கூட முற்போக்கானது என்று சொல்வதற்கு அதனிடம் இனியும் எதுவும் இருக்கவில்லை என்பதனால் ஆகும்.

தாராளவாத புத்திஜீவிதத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் இடையிலான சிக்கலான உறவு எவ்வாறு அமெரிக்காவில் அரசியல் மற்றும் புத்திஜீவித வாழ்க்கையின் தேக்கத்திற்கு பங்களித்தது என்று காட்டுவதற்கு நாம் முயன்றிருந்தோம். சமூக சிந்தனையின் செயல்முடக்கமானது ஸ்ராலினிசத்தை மார்க்சிசத்துடன் தவறாக அடையாளம் காணுவதுடன் பிணைந்துள்ளது. பைப்ஸ் போன்ற போலி அறிஞர்களின் பொய்களை, மனம்-மரத்துப்போன ஊடகத்தால் எத்தனையோ மடங்கு ஊதிப்பெருக்கிக் காட்டுவது, அமெரிக்காவில் பிற்போக்குத்தனமான மற்றும் இணக்கவாத அரசியலை (conformist politics) மீளத்திணிப்பதற்கு சேவை செய்கிறது. அக்டோபர் புரட்சியின் தோற்றம், சரிவு மற்றும் வீழ்ச்சியைக் குறித்த ஒரு புரிதல் இல்லாமல், இந்த முட்டுச்சந்திலிருந்து வெளியே வருவதற்கு வேறு வழி இல்லை — இதை ஸ்ராலினிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் நடத்தப்பட்ட போராட்டங்களை கவனமாக ஆய்வு செய்வதன் அடிப்படையில் அல்லாமல் அடையப்பட முடியாது.

புத்திஜீவித இணக்கவாதமும் அமெரிக்க சமூகத்தின் நெருக்கடியும்

இந்த பிரச்சினையை கையிலெடுப்பதற்கான தேவை, சமகாலத்திய அரசியல் வாழ்வின் நிலைமைகளால் எடுத்துக்காட்டப்படுகிறது. அமெரிக்கா ஒரு சமூக நெருக்கடியினூடாக சென்று கொண்டிருக்கிறது, அதன் அறிகுறிகள், அவர்களது கண்களை திறந்து வைக்க விரும்புபவர்களுக்கும் அத்தோடு தமக்குத்தாமே நேர்மையாக இருக்க விரும்புபவர்களுக்கும் வெளிப்படையாக தெரிகின்றன. மேலோங்கியுள்ள பொருளாதார அமைப்புமுறையை குறித்து எந்த சீரிய கேள்வியைக் காண்பதும் தோற்றப்பாட்டளவில் இயலாததாக உள்ளது. நிச்சயமாக வெகுஜன ஊடகத்திடமிருந்து அது மாதிரியான எதையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இதழ்களிலும் கூட ஒருவர் கொச்சையான, சோர்வூட்டும் மற்றும் சம்பிரதாயமான கருத்துக்களைத் தவிர வேறொன்றையும் காண்பதில்லை. முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீடை கண்டாக வேண்டும் என்றவொரு ஆலோசனை கூட அங்கே இல்லை. ஒரு எழுத்தாளர் அல்லது விரிவுரையாளர் புத்திசாலித்தனமாக ஏதோ சொல்ல முயற்சிப்பதாக தோன்றுவதை ஒருவேளை தற்செயலாக காண நேரும்போது கூட, அந்நபர் சுய தணிக்கையில் ஈடுபட்டிருப்பதையும், அவர் முதலாளித்துவ கட்டமைப்பிற்குள்ளே எது சாத்தியமானதோ மற்றும் எது அனுமதிக்க கூடியதோ அந்த எல்லைகளுக்கு அப்பால் போகாதவாறு கவனம் எடுப்பதையும் ஒருவர் உணர்கிறார்.

இந்த புத்திஜீவித தேக்கமானது நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது, போருக்குப் பிந்தைய காலகட்டம் வரை தாராளவாத புத்திஜீவிகளின் ஒரு பரந்த தட்டினரிடையே, ஒரு சமூக அமைப்பு என்ற வகையில் முதலாளித்துவத்தின் நிலைத்திருக்கும் தன்மையின் மீது ஆழ்ந்த சந்தேகங்கள் வழக்கத்திற்கு மாறாக இருக்கவில்லை என்பதை நினைவுகூர்வது ஒருவருக்கு கடினமல்ல. புத்திஜீவித மற்றும் அரசியல் இணக்கவாதத்துடன் மட்டுப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள மாணவர்களை பொறுத்த வரையில், 1930களின் தொடக்கத்தில் இருந்து ஜோன் டுவியின் அரசியல் எழுத்துக்களின் ஒரு தொகுப்பை எடுத்துப் பார்த்தால் அது மிகவும் வியப்பூட்டுவதாக இருக்கக்கூடும். டுவி ஒரு மார்க்சிஸ்ட் அல்லர். அவர் ஒரு புரட்சியாளர் அல்லர். உண்மையில், ஒருவர் அவரை அதிசிறப்பார்ந்த சலுகைகளுடன் கவனித்தால் மட்டுமே அவரையொரு சோசலிஸ்டாக கருதுவார். ஆனால் இன்றைய தேக்கநிலை மற்றும் இணக்கவாதம் ஆகியவற்றின் உள்ளடக்கத்தில் வாசித்தால், பழைய தாராளவாத மரபின் இந்த போற்றத்தக்க கனவான் அவரது சொந்த வாழ்நாளில் செயல்பட்டதை விடவும் இப்போது மிகவும் தீவிரமானவராக, நிச்சயமாக மிகவும் துணிவுள்ளவராக, மற்றும் தன்னைத்தானே தாராளவாதமாகவோ அல்லது தீவிரகொள்கை கொண்டதாகவோ வரையறுத்து கொள்ளும் ஏதோவொரு இடது போக்கில் இருப்பதாகவும் கூட தோன்றலாம்.

ஒருவர் நூலகத்திற்கு சென்று டுவியின் அரசியல் மற்றும் சமூக எழுத்துக்களின் ஒரு தொகுதியைப் புரட்டிப் பார்த்தால், அவர் வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய அத்தகைய விடயங்கள் இன்று, எந்தவொரு அமெரிக்க பல்கலைக்கழக்கத்திலும் அவரை நியமிப்பதற்கு தடையாக இருக்கக்கூடும் அல்லது, மிக குறைந்தபட்சமாக அவரை இருட்டடிப்பு செய்யும் நிலைக்கு அனுப்பிவிடும்.

மந்தநிலை காலகட்டத்தில் எழுதப்பட்ட தனிச்சிறப்பான பகுதி ஒன்றை மேற்கோளிட என்னை அனுமதியுங்கள்:

தற்போதைய நெருக்கடி, அதன் வெளிநோக்கிய உணர்வுபூர்வமான அம்சங்களில் முடிந்துவிடும் போது, விடயங்கள் ஒப்பீட்டளவில் “இயல்பு” நிலைமை என்றழைக்கப்படுவதற்கு மிகவும் வசதியாக திரும்பிவிடும் போது, அவர்கள் இவற்றை மறந்து போவார்களா? சமூகம், துன்பத்திலிருந்து விடுபட்டு விட்டது எனும் பரந்த மனப்பான்மையில் அவர்கள் தங்களைத்தாங்களே திருப்தியுடன் பாராட்டி கொள்ளவும் கூட செய்வார்களா? அல்லது வேலையின்மை துன்பத்தின் காரணங்களைக் கண்டறிந்து அவர்கள் சமூக அமைப்புமுறையை மாற்றி அமைப்பார்களா? முன்னையதை அவர்கள் செய்தால், சமூக அமைப்புமுறை வலுக்கட்டாயமாக மாற்றப்படும் வரையில், மந்தநிலையின் காலகட்டம் உடனடியாகவோ அல்லது காலமெடுத்தோ புதுப்பிக்கப்பட்ட வன்முறையுடன் மீண்டும் தோன்றும்.

மாற்றீடானது, திட்டமிட்ட முன்மதிப்பீடு மற்றும் ஆராய்ந்தறிந்த வாய்ப்பைக் கொண்டு, சமூகத்தின் பொருளாதார மற்றும் நிதிய கட்டமைப்பை மாற்றும் விருப்பமாக, துன்பகளை நீக்குவதற்கான சமூக பொறுப்பை அங்கீகரிப்பதாகும்.

அமைப்புமுறையின் ஒரு மாற்றம் மட்டுமே, ஒவ்வொருவரது வேலைக்கான உரிமையை உறுதிப்படுத்தும், ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் வாழ்வதற்கு வகை செய்யும்.15

அத்தகைய வெளிப்படையான உண்மைகள் இன்று அரிதாகத்தான் பேசப்படுகின்றன. சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்த அனைத்து விவாதமும் ஒரு மாபெரும் பொய்யால் — மார்க்சிசத்தை ஸ்ராலினிசத்துடன் அடையாளப்படுத்துவதால் — சிக்கலுக்கு உள்ளாக்கப்படுகிறது. முக்கியமாக இன்று, சோவியத் ஒன்றியத்தின் பொறிவானது, சோசலிசம் சாத்தியமில்லை என்பதற்கும் முதலாளித்துவத்திற்கு மாற்று எதுவுமில்லை என்பதற்கும் முடிவான ஆதாரமாக பறைசாட்டப்படுகிறது. இந்த பொய்யின் அரசியல் விளைபயன் என்னவென்றால், ஆழமடைந்து வரும் சமூக நெருக்கடியை புரிந்துகொண்டு கையாள வருவதற்கான எந்த அக்கறை கொண்ட முயற்சியையும் தடுப்பதாகும். இந்த நெருக்கடியின் இருப்பு எங்கே உள்ளது என்று உறுதிப்படுத்தி விளக்கப்படுகின்ற போதினும் கூட, இதற்கு எந்தவொரு அக்கறை கொண்ட தீர்வும் வழங்கப்படவில்லை. சான்றாக MIT பொருளியலாளர் லெஸ்டர் தறோவினால் (Lester Thurow) அண்மையில் வெளியிடப்பட்ட முதலாளித்துவத்தின் எதிர்காலம் என்ற நூலை எடுத்துக்கொள்வோம். இந்நூல் அதிர்ச்சியூட்டும் பொருளாதார புள்ளிவிபரங்களைக் கொண்டுள்ளதுடன், அது ஒரு சமூக அமைப்புமுறையாக முதலாளித்துவத்தின் தோல்வியை தெளிவாக விளக்குகிறது.

இருந்தபோதினும் தறோ தீர்வை வழங்கவில்லை. மிக கவனமாக தன்னைத்தானே தணிக்கை செய்து கொள்வோருள் அவரும் ஒருவராக உள்ளார். இருந்தபோதினும் தறோ சமத்துவமின்மையின் அதிகரிப்பு மற்றும் பொதுவான வறுமையின் அதிர்ச்சிகரமான ஆவணப்படுத்தலை அளிக்கிறார். 1980களின் போது ஆண்களது வருவாயில் பெற்ற அனைத்து இலாபங்களும் தொழிலாளர் தொகுப்பின் மேல்மட்ட 20 சதவீதத்தினருக்கு சென்றதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்த இலாபத்தில் அறுபத்தி நான்கு சதவீதம் மேல்மட்ட 1 சதவீதத்துக்கு போய் சேர்ந்தது. Fortune 500 நிர்வாகிகளின் சம்பளம், சராசரி உற்பத்தி தொழிலாளரின் சம்பளத்தைப் போல 35 மடங்கிலிருந்து 157 மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த கால்நூற்றாண்டில் ஆண்களுக்கான நிஜமான கூலிகளில் வியத்தகு வீழ்ச்சி இருந்ததை தறோ குறிப்பிடுகிறார். மொத்த உள்நாட்டு உற்பத்தி 1973இல் இருந்து 29 சதவீதம் உயர்ந்துள்ள போதினும், சராசரி இடைநிலை ஊதியங்கள் 11 சதவீதம் அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்த நீட்சி காலப்பகுதியில் மேல்-மத்தியதர வர்க்கங்களும் அதற்கு மேலிருந்தவர்களும் மட்டுமே, நிஜமான வருமான வரையறைகளில், அவர்களது வாழ்க்கை தரங்களில் எந்தவொரு உண்மையான முன்னேற்றத்தையும் கண்டிருந்தனர். மறுபுறம் கீழ்ப்படிகளில் இருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருபத்தைந்து வயதிற்கும் முப்பத்தி நான்கு வயதிற்கும் இடைப்பட்ட வயதினரின் நிஜமான ஊதியங்கள், 1970களின் தொடக்கத்தில் இருந்து ஒரு கால் பங்கு அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இருபத்தி நான்கு வயதிற்கு கீழே உள்ள இளம் தொழிலாளர்களை பொறுத்த வரையில், நான்கு நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்திற்கான உத்தியோகபூர்வ வறுமை மட்டத்திற்கு கீழ் சம்பாதிக்கும் விகிதம் 1979இல் 18 சதவீதத்தில் இருந்தது, 1989இல் 40 சதவீதமாக அதிகரித்தது.

அனேகமாக தறோவால் முன்வைக்கப்பட்ட மிகவும் குறிப்பிடத்தக்க உண்மை பின்வருவதாக உள்ளது: தற்போதைய இந்த போக்கு இந்த தசாப்தத்தின் முடிவு வரைக்கும் தொடர்ந்தால், 1950க்கும் 2000க்கும் இடையிலான காலகட்டத்தில், அது நிஜமான அர்த்தத்தில் அமெரிக்க வரலாற்றில் வாழ்க்கை தரங்கள் உண்மையில் வீழ்ச்சியடைந்த முதல் அரை-நூற்றாண்டைக் குறிக்கும் என்று குறிப்பிடுகிறார். அங்கே உண்மையில் முன்னுதாரணமற்ற பெருநிறுவன ஆட்குறைப்பு மற்றும் மறுசீரமைப்பின் பாரிய அலை இருந்தது, அது உழைக்கும் மக்களின் ஒரு பரந்த தொகுதியினரியின் வாழ்க்கை தரங்கள் மீது சொல்லொணாத ஒரு பேரழிவுகரமான தாக்கத்தை விளைவித்துள்ளது என்று தறோ குறிப்பிடுகிறார்.

ஆட்குறைப்பு மற்றும் மறுசீரமைத்தல் இவற்றின் பாதிப்பு கடுமையானதாகவும் நீண்டு-நீடிப்பதாகவும் உள்ளது. 1980களில் ஆட்குறைப்பின் முதலாவது அலையில் வேலையிழந்த 12 சதவீதத்தினர் ஒருபோதும் மீண்டும் தொழிலாளர் சக்திக்குள் திரும்பவில்லை என்பதுடன், 17 சதவீதத்தினர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது வேலைவாய்ப்பின்றி இருந்தனர். மீண்டும் வேலையில் நியமிக்கப்பட்ட 71 சதவீதத்தினரில் 31 சதவீதத்தினர், 25 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான சம்பள குறைப்பை அடைந்தனர். தறோ, வீடற்றவர்களின் மற்றும் நீண்டகாலம் வேலையற்றோரின் விரிவடைந்து வரும் “உதிரி பாட்டாளி வர்க்கம்” (“lumpenproletariat”) குறித்தும் எழுதுகிறார். வீடற்ற மற்றும் திருமணமாகாத ஆண்களில் 40 சதவீதத்தினர் சிறைகளில் இருந்து வருகின்றனர்.

சமூக அவலங்கள் மற்றும் சமத்துவமின்மையின் வளர்ச்சியை அவர் பின்வருமாறு தொகுத்தளிக்கிறார்:

ஒரு புரட்சியையோ அல்லது படையெடுப்பைத் தொடர்ந்து ஓர் இராணுவ தோல்வியையோ ஏதேனும் ஒரு நாடு அனுபவித்து இருக்கவில்லையென்றால், அனேகமாக கடந்த இரண்டு தசாப்தங்களில் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளதைப் போல வேகமாகவோ அல்லது பரவலாகவோ முன்பில்லாத வகையில் சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பைக் கண்டிருக்கும். உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) அதிகரிப்பை முகங்கொடுத்தாலும், நிஜமான கூலி குறைப்பின் தற்போதைய வடிவத்தின் அளவிற்கு, அமெரிக்கர்கள் முன்னொருபோதும் பார்த்திருக்க மாட்டார்கள்.16

இறுதியாக, தறோ இவ்வாறு முடிக்கிறார்:

சமத்துவமின்மையை குறைக்க தொடங்குவதற்கும் மற்றும் நிஜமான கூலிகள் உயருமாறு செய்வதற்கும் அவசியமாக இருக்கும் பேரளவிலான மறுசீரமைப்பு முயற்சிகளை உருவாக்கக்கூடிய எந்த தொலைநோக்கும் இல்லாத நிலையில், என்ன நிகழும்? ஜனநாயகத்தில் ஏதாவது அடிவிழும் முன்னதாக, எவ்வளவு தூரத்திற்கு சமத்துவமின்மை பரவ முடியும் மற்றும் நிஜமான கூலிகள் வீழ்ச்சி அடைய முடியும்? யாருக்கும் தெரியாது, ஏனெனில் அது இதற்கு முன்னர் ஒருபோதும் நிகழ்ந்திருக்கவில்லை. இந்த பரிசோதனை ஒருபோதும் முயற்சிக்கப்பட்டிருக்கவில்லை.17

இந்தளவுக்கு மிகவும் வெளிப்படையாக அவசியமான பாரிய சமூக மறுசீரமைப்பு வகையை வழிநடத்த அங்கே ஏன் எந்தவொரு "தொலைநோக்கும்" இல்லை என்பதுதான் துல்லியமாக மேலெழுகின்ற கேள்வியாக உள்ளது. இந்த விரிவுரையில் நான் அளிக்க விழைகின்ற அதே புள்ளியைத்தான் தறோவால் கொடுக்கப்படும் பதில் விளக்குகிறது. அவர் எழுதுகிறார், “கம்யூனிசம் மற்றும் சோசலிசத்தின் மரணத்துடன், அதிலிருந்துதான் முதலாளித்துவம் தற்போதைய ஆதாயத்தைப் பெற்றுள்ளது என்ற நிலையில், அது ஒரு செயல்பாட்டிற்குரிய போட்டியாளராக ஏற்புடைய சமூக அமைப்புமுறையை கொண்டிருக்கவில்லை. அங்கே ஒரு மாற்று சித்தாந்தம் இல்லாமல், எதற்கும் எதிராக ஒரு புரட்சியைக் கொண்டு வருவது சாத்தியமில்லை."18

ஸ்ராலினிசத்தை சோசலிசமாக அடையாளப்படுத்துவதன் பாதிப்பை தறோவின் முடிவுரை விளக்குகிறது. மார்க்சிச கோட்பாடுகள் மற்றும் உண்மையான சோசலிச பாரம்பரியங்களின் அடிப்படையில் ஒரு புரட்சிகர தொழிலாளர் இயக்கத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கு, வரலாற்றை பொய்மைப்படுத்துவோருக்கு எதிரான ஒரு சமரசத்திற்கிடமில்லாத போராட்டம் தேவைப்படுகிறது. வரலாறு எதையாவது நிரூபிக்குமானால், இந்த போராட்டம் வெற்றியடையும், அதாவது இது என்னவென்றால், நீண்ட காலப்போக்கில், உண்மை பொய்களை விட மிகவும் பலம் பொருந்தியது என்பதாகும்.

1 Lecture delivered on April 23, 1996 at Michigan State University in East Lansing.

2 Available: http://www.nytimes.com/1996/03/24/books/the-seeds-of-his-own-destruction.html?pagewanted=all&src=pm

3 Ibid.

4 V.I. Lenin, Collected Works, Volume 36 (Moscow: Progress Publishers, 1966) p. 595.

5 Available: http://www.nytimes.com/1996/03/24/books/the-seeds-of-his-own-destruction.html?pagewanted=all&src=pm

6 Ibid.

7 See Appendices 1 and 2 beginning on page 363.

8 Writings of Leon Trotsky 1936–37 (New York: Pathfinder Press, 1978), pp. 173–174.

9 Ibid., pp.179–80. Also available: http://www.youtube.com/watch?v=b3nD5bFm3Jg

10 The Nation, February 2, 1937.

11 The New Republic, April 7, 1937, pp. 267–269.

12 Jo Ann Boydston, ed., The Later Works of John Dewey, 1925–1953, Volume 11, (Carbondale: Southern Illinois University Press, 1987) p. 318.

13 The Case of Leon Trotsky: Report of Hearings on the Charges Made Against Him in the Moscow Trials (New York: Merit Publishers, 1968), pp. 584–585.

14 The Later Works of John Dewey, Volume 11, pp. 322–323.

15 Jo Ann Boydston, ed., The Later Works of John Dewey, 1925–1953, Volume 6 (Carbondale: Southern Illinois University Press, 1985), p. 155.

16 Lester C. Thurow, The Future of Capitalism (New York: William Morrow, 1996), p. 42.

17 Ibid., p. 261.

18 Ibid., p. 310.