ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

How the WRP Betrayed Trotskyism

தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

பகுதி. 1

 

10. The Election Campaign

10. தேர்தல் பிரச்சாரம்

டோரிக்கள், 55 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்தில் முதல் முறையாக, மார்ச் 28, 1979 இல், ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர், அது அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்கியது. வெறும் நான்கு நாட்களுக்கு முன்னர், இறுதியில் WRP என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனித்ததுடன், "தொழிலாள வர்க்க அமைப்புகளையும் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் நசுக்கி, தொழிலாள வர்க்கத்தை யாசிக்கும் நிலைக்குத் தள்ளுவதற்கு, பிற்போக்குச் சக்திகள் முன்னொருபோதும் இல்லாதளவில் ஒரு முற்றுமுதலான தாக்குதலுக்காக ஒன்று கூடி வருகின்றன," என்றது குறிப்பிட்டது (நியூஸ் லைன், மார்ச் 24, 1979)

ஆனால் அதே பக்கத்தில், இளம் சோசலிஸ்டுக்கள் அமைப்பின் (Young Socialists - YS) 19 ஆம் வருடாந்த மாநாடு குறித்த கவனத்தை ஈர்க்கும் முதல்பக்க விளம்பரம் ஒன்றில், "தொழிற் கட்சி அரசாங்கத்தைக் கீழிறக்கு," என்ற கோஷமும் இருந்தது.

அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட, “மார்ச் மாத கருத்துக்கள் நடைமுறையில் எம்மை நோக்கியே செலுத்தப்பட்டது" என்று பிரகடனப்படுத்திய ஒரு தீர்மானம், பண்டாவினால் வரையப்பட்டிருந்த அது, பின்வருமாறு அறிவித்தது: "தொழிற் கட்சி அரசாங்கத்தின் இந்த வினோத நாடகத்தைப் பாதுகாப்பதற்காக நின்ற அனைவரது முகத்திரையும் இப்போது கிழிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்திற்கான போராட்டத்தின் பாகமாக WRP மற்றும் YS இன் தொழிற் கட்சியைக் கீழிறக்குவதற்கான கொள்கை சர்ச்சைக்கிடமின்றி சரியானதென நிரூபணமாகி உள்ளது. ஆனால் டோரிக்கள் அவர்களின் சொந்த பிற்போக்குத்தனமான மற்றும் அற்பத்தனமான வழியிலேயே, நமது எச்சரிக்கைகளை ஆயிரம் முறை அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர் என்ற உண்மை, எந்தவிதத்திலும் நம்மைத் திருப்திப்படுத்தி விடவில்லை." (நியூஸ் லைன், மார்ச் 26, 1979)

பண்டாவின் சேர்ச்சில் பாணியிலான (Churchillian) வார்த்தைஜாலங்களால் கூட, WRP இன் கொள்கைகள் ஆபத்தான விதத்தில் தடம் மாறிவிட்டிருந்தன என்ற உண்மையை மறைக்க முடியவில்லை. "கலஹன் அரசாங்கத்தின் வேலை அழிப்போரையும் மற்றும் கூலி வெட்டுவோரையும் தொழிலாள வர்க்கம் 1974 இல் ஹீத்தை போல் பதவியிலிருந்து கீழிறக்கி விட்டிருந்தால் அது பெரிதும் விரும்பத்தக்கதாக இருந்திருக்கும்" என்றவர் ஒருவித ஏமாற்றத்துடன் ஒப்புக் கொண்டார். (அதே ஆவணம்)

யதார்த்தத்தில், WRP, 1975 இல் இருந்து தொழிற் கட்சிவாதிகளை ட்ரொட்ஸ்கியை போல் எதிர்த்திருந்தால் —அதாவது, டோரிக்களுக்குக் கதவைத் திறந்து விட்டதற்காக அவர்களின் கோபத்தை தொழிற் கட்சி துரோகிகளுக்கு எதிராக ஒருமுனைப்படுத்தி, இடது-வார்த்தை ஜாலக்காரர்கள் கலஹனிடமிருந்து முறித்துக் கொள்ள வேண்டுமெனக் கோரி, வட்டார தொழிற் கட்சி கிளைகளுக்குள் டோரி-ஆதரவு தொழிற் கட்சிவாதிகளுக்கு எதிராக நடந்து கொண்டிருந்த மோதல்களுக்குள் தலையீடு செய்து, இடைமருவு கோரிக்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை திட்டமிட்டு அணிதிரட்டி, எதிர்த்திருந்தால்— அதிக விரும்பத்தக்கதாக இருந்திருக்கும். அத்தகைய கொள்கை, போர்குணம் மிக்க தொழிற் கட்சிவாதிகள் மற்றும் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் கண்களில், அளவிட முடியாதளவு, கட்சியின் மதிப்பை உயர்த்தி இருக்கும்.

அத்தீர்மானம் நெறிப்பிறழ்ந்திருந்தது என்பது, அது டோரி வெற்றியைச் சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டதிலும் மற்றும் டோரிக்களை தடுக்கவும் தொழிற் கட்சிக்கு வாக்களிக்கவும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரளுமாறு அழைப்பு விடுக்க அது அக்கறையும் கூட எடுக்கவில்லை என்ற உண்மையினாலும் எடுத்துக்காட்டப்பட்டது.

பின்னர் WRP இன் அரசியல் நிலைப்பாட்டில் மற்றொரு திருப்பமும் இருந்தது. அதனது முந்தைய ஒட்டுமொத்த நிலைப்பாடும் டோரிக்களின் நாடாளுமன்ற ஆட்சிக் கவிழ்ப்பு சதியால் செல்வாக்கு இழந்திருந்ததை உணர்ந்து, WRP தலைவர்கள், தாட்சர் வென்றாலும் பரவாயில்லை என்று வாதிட்டு, அவர்களின் உறுப்பினர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் கண்களில் மண்ணைத் தூவ முனைந்தனர். தொழிற் கட்சி அரசாங்கத்தை விட டோரி அரசாங்கம் மோசமாக இருக்கும் என்று கூறியதற்காக, அவர்கள், குழப்பம்மிக்க குதர்க்கவாதத்துடன், பல்வேறு திருத்தல்வாதக் குழுக்களைக் பின்வருமாறு கண்டித்தனர்:

“பிரிட்டனில் இன்று தீர்க்கமானது என்னவென்றால், தாட்சரும் ஜோசப்பும், கலஹனையும் ஹேலியையும் விட அதிகமாக தொழிலாள வர்க்கத்தை அகநிலையாக வெறுப்பவர்களா என்பதோ, ஆகவே அவர்களைத் தான் மிகவும் ஆக்ரோஷமாக தாக்க வேண்டுமா என்பதோ கிடையாது.

“தீர்க்கமான காரணி, புறநிலையான உலக நெருக்கடியும் மற்றும் பிரிட்டிஷ் முதலாளித்துவம் மீதான அதன் பாதிப்பும் தான். எதிர்வரும் பொதுத் தேர்தலில் யார் ஜெயித்தாலும் பிரிட்டனில் உள்நாட்டு போருக்கான களம் அமைக்கப்பட்டுவிட்டது.

“அனைத்து திருத்தல்வாதிகளும் செய்வது போலவே, டோரிகள் ஜெயித்தால் தான் தொழிலாள வர்க்கத்தின் மீது பெரும் தாக்குதல்கள் நடத்தப்படும், தொழிற் கட்சி ஜெயித்தால் ஒப்பீட்டளவில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கூறுவது, எதிர்வரவிருக்கும் மோதல்களுக்கு தொழிலாள வர்க்கத்தை தயாரிப்பின்றி விட்டு வைப்பதாக ஆகிவிடும்." (நியூஸ் லைன், ஏப்ரல் 7, 1979)

இந்த வழியில் காரணம் காட்டுவது மார்க்சிசத்தை கேலிக்கூத்தாக்குவதாகும். வர்க்கப் போராட்டம் எந்த அரசியல் வடிவங்கள் மூலமாக வெளிப்பட்டதோ அதன் புறநிலை முக்கியத்துவம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஒரு ட்ரொட்ஸ்கிசவாதி பின்வருமாறு வாதிட முடியும்: "தாட்சர் மற்றும் கலஹனுக்கு இடையிலான அகநிலை ஒற்றுமைகளை பொருட்படுத்தாமல், டோரிக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்து, ஹீத் தொடங்கிய வேலையைத் தொடர்வதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. கலஹன் நம்மைக் காட்டிக்கொடுத்திருந்தாலும் கூட, நம்மை விலையாக கொடுத்து அவரை தண்டிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. முதல் விடயங்கள் முதலில் இருக்க வேண்டும். டோரிக்களை வெளியில் நிறுத்துவதற்காக, தொழிலாள வர்க்கத்தை, ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அணித்திரட்டி இருக்க வேண்டும். தொழிற் கட்சிக்குப் பாரியளவில், ஆனால் விமர்சனபூர்வமாக, வாக்களிக்க அழைப்பு விடுப்பதன் மூலமாக தொழிலாளர்களை நெறிப்பிறழச் செய்வதற்கான சமூக ஜனநாயகவாதிகளின் முயற்சியை நாம் முறியடிக்க வேண்டும். இது முதலாளித்துவத்துக்கு எதிராக ஓர் அடி கொடுக்கும் என்பதோடு, ஒரேயடியில் என்றென்றைக்குமாய் சமூக ஜனநாயகவாத துரோகிகளை அம்பலப்படுத்த சிறந்த நிலைமைகளை உருவாக்கும்."

WRP இவ்வாறான எதையும் கூறவில்லை. அதற்கு பதிலாக நியூஸ் லைன் அறிக்கை பின்வருமாறு தொடர்ந்தது: “பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள், தங்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மற்றொரு தொழிற் கட்சி அரசாங்கத்தால் காப்பாற்றப்படும் என்ற உள்ளார்ந்த நம்பிக்கையில், இத்தேர்தலில் தொழிற் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்பது நமக்கு தெரியும். தொழிலாளர்களின் நலன்களை அவ்வழியில் பாதுகாக்க முடியாது."

அப்படியாயின் WRP என்ன முன்மொழிந்தது? "சோசலிச கொள்கைகள்" என்று அது எதை அழைத்ததோ அதை முன்வைக்க 60 வேட்பாளர்களை நிறுத்தி, தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு உண்மையான அரசியல் மூலோபாயத்தின் இடத்தில் அது ஒரு பிரச்சார திசைத்திருப்பலை முன்வைத்தது. இந்த பிரச்சாரம் டோரிக்களுக்கு எதிராக, அதேவேளையில் தொழிற் கட்சிவாதிகளை அம்பலப்படுத்தியும் மற்றும் இத்தகைய சீர்திருத்தவாதிகளுடன் தவிர்க்கவியலாத புரட்சிகர பலப்பரீட்சைக்காக தொழிலாளர்களை தயார் செய்வதை அடிப்படையாக கொண்டிருந்திருந்தால் மட்டுந்தான், கட்சி பதாகையின் கீழ் வேட்பாளர்களை நிறுத்தி ஒரு தேர்தல் தலையீடு செய்வது பயனுள்ளதாக இருந்திருக்கும்.

அரசியல்ரீதியில் நனவுபூர்வமான ஒவ்வொரு தொழிலாளியும் புரிந்து கொள்ளக்கூடிய இந்த தெளிவான புரட்சிகர நிலைப்பாட்டில் இருந்து போராடுவதற்குப் பதிலாக, WRP இன் தலையீடு அரசியல் தட்டிக்கழிப்பு மற்றும் குழப்பங்களின் ஒரு வடிவமாக இருந்தது:

“தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) தொழிலாளர்களை கலஹன் பின்னாலோ, மைக்கல் ஃபூட் அல்லது பென் (Michael Foot or Tony Benn) பின்னாலோ அணித்திரட்டுவதற்காக இந்த பொதுத் தேர்தலில் பங்கெடுக்கவில்லை, மாறாக அதிகாரத்திற்கான போராட்டத்தை ஒழுங்கமைக்கும் நமது முன்னோக்கை முன்னெடுக்கவே பங்கெடுக்கிறது."

WRP நிலைப்பாட்டின் முக்கிய உள்ளடக்கம், —சமூக ஜனநாயகவாதிகளுக்கும் டோரிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்பது— ஹிட்லர் வெற்றிக்கு முன்னர் ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கி எந்த மோசமான தவறை ஆய்வு செய்திருந்தாரோ, அதையே மறுஉற்பத்தி செய்தது. பாசிசமும் சமூக ஜனநாயகமும் ஏறத்தாழ முதலாளித்துவத்திற்கு சேவையாற்றுகின்றன, அங்கே அவ்விரண்டுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்ற ஸ்ராலினிச வாதத்திற்குப் பதிலளித்து, ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

“இந்த ஸ்ரானிச தத்துவத்தின் சாரம் பின்வருமாறு மிகவும் தெளிவாக உள்ளது: முற்றுமுழுதான முரண்பாடு பற்றிய மார்க்சிச நிராகரிப்பிலிருந்து அது முரண்பாடுகளின் பொதுவான மறுப்பையும், மேலும் ஒப்பீட்டளவிலான முரண்பாட்டின் மறுப்பையும் நோக்கி திரும்புகின்றது. இந்த பிழை தரந்தாழ்ந்த தீவிரக் கொள்கைக்கு உதாரணமாகும். முதலாளித்துவத்தின் ஆட்சி வடிவ அரங்கிற்கு உள்ளேயே கூட பாசிசத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையே எவ்வகையிலும் முரண்பாடு இல்லை என்றால், அப்போது இரண்டு ஆட்சிகளும் போதுமானளவுக்கு வெளிப்படையாக ஒரேமாதிரியானவையாக இருக்க வேண்டும். இதிலிருந்து பெறும் முடிவே, சமூக ஜனநாயகமும் பாசிசமும் ஒன்று என்பது." (ஜேர்மனி 1931-1932, நியூ பார்க், பக்கம் 63)

சில சந்தர்ப்பங்களில் மட்டுந்தான், WRP தலைவர்கள் அவர்களின் தேர்தல் அறிக்கைகளுக்குள் ஆழமாக புதைத்து வைத்து, தொழிற் கட்சிக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் முளைவிட்டு வரும் சந்தர்ப்பவாதத்தின் விதைகள் அதிதீவிர-இடது வடிவத்திற்குள் ஏற்கனவே துளிர்விடத் தொடங்கி இருந்தன. வாக்குப்பதிவின் முடிவு எந்தவித முக்கியத்துவமும் கொண்டிருக்கப் போவதில்லை மற்றும் உள்நாட்டு போர் வரவுள்ளது என்று மீண்டும் மீண்டும் அறிவித்து வந்த பின்னர், தேர்தல் அன்று, "டோரியிசத்திற்கு தேர்தலில் மரணஅடி வழங்க" பாரியளவில் வாக்களிக்க வருமாறு தொழிலாளர்களிடமும் நடுத்தர வர்க்கத்திடமும் ஓர் ஆச்சரியமூட்டும் அழைப்பை விடுத்தது. (நியூஸ் லைன், மே 3, 1979)

அதன் பின்னர், அது, தாட்சர் தொழிற்சங்கங்களையும் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளையும் அழிக்க உத்தேசித்திருப்பதாக எச்சரித்தது. இந்த அச்சுறுத்தலைத் தடுக்கக்கூடியவர்களாக அதன் 60 வேட்பாளர்களை சுட்டிக்காட்டிய நியூஸ் லைன் குறிப்பிட்டது: "அரசாங்கம் அமைக்க போதுமானதாக இல்லையென்றாலும், நாங்கள் முதலாளித்துவத்தின் உலகப் பொருளாதார நெருக்கடிக்கும் திவாலான பிரிட்டனில் அதன் வெளிப்பாட்டுக்கு ஒரு தெளிவான சோசலிச கொள்கையை மாற்றீடாக வழங்குகிறோம்." (அதே ஆவணம்)

ஆனால் தொழிலாளர்களின் இயக்கத்தை அழிக்க அச்சுறுத்தும், எதிர்வரவிருந்த டோரி வெற்றியின் முன்னால் தொழிலாளர்கள் என்ன செய்வது? பின்வரும் வியப்பூட்டும் முன்னோக்கு வழங்கப்பட்டது:

“அடுத்த பொதுத் தேர்தலில், அது எப்போது நடந்தாலும், நாங்கள் ஓர் அரசாங்கம் அமைக்க போதுமான வேட்பாளர்களைக் களத்தில் இறக்க பணியாற்றுவோம்.”

இது வெறுமனே கடந்து சென்றுவிடக் கூடிய குறிப்பல்ல: தாட்சர் அரசாங்கத்தின் யதார்த்தத்தை முகங்கொடுத்திருந்த நிலையில், அதிதீவிர-இடதுவாதம் மீது செய்திருந்த நான்காண்டு கால பரிசோதனை முட்டிமோதி சிதறியது — ஹீலி ஒரு சந்தர்ப்பவாத பாராசூட் துணைகொண்டு காப்பாற்றப்பட்டார். 1975 இல் இருந்து 1979 வரையிலான காலகட்டம், அனைத்திற்கும் மேலாக, பிரிட்டனிலும் மற்றும் சர்வதேச அளவிலும் இரண்டு தரப்பிலும், தொழிலாள வர்க்கத்திலிருந்து விலகிய காலப்பகுதியாக இருந்தது. நாம் பின்னர் குறிப்பிட்டு காட்டவிருப்பதைப் போல, WRP பிரிட்டனுக்கு வெளியே அதன் வேலைகளில், ஏற்கனவே பாட்டாளி வர்க்கம் அல்லாத மற்றும் பிற்போக்குத்தனமான சக்திகளுடன் சந்தர்ப்பவாத உறவுகளை விளைவித்திருந்தது. அதிதீவிர-இடது வாய்சவடால் கொண்டு மூடிமறைக்கப்பட்ட ஒரு காலப்பகுதியாக இருந்த போதினும், பிரிட்டனுக்கு உள்ளேயும் கூட இதேபோன்ற ஒரு திருப்பத்திற்கு முற்றிலுமாக தயாரிப்பு செய்யப்பட்டிருந்தது.

11. The Degeneration of the Party Regime

11. கட்சி ஆட்சியின் சீரழிவு

இந்த திருப்பத்தின் வர்க்க அடித்தளத்தை, 1974-75 இலேயே அத்தியாவசியத் தொழிற்துறையில் இருந்த கட்சியின் தொழிற்சங்க காரியாளர்களது அழிவில் முன்கூட்டியே காணக்கூடியதாக இருந்தது. அது கட்சி தலைமையில் நடுத்தர வர்க்கத்தின் செல்வாக்கு அபாயகரமாக வளர்ச்சி அடைவதற்கான நிலைமைகளை உருவாக்கி இருந்தது. ஹீலி அதிகரித்தளவில் சார்ந்திருந்த றெட்கிறேவுகள் மற்றும் அலெக்ஸ் மிட்செல், அத்துடன் கட்சித் தலைமையகத்தில் செயலாற்றி வந்த டஜன் கணக்கான வர்க்க உணர்வற்ற மற்றும் மேலோட்டமான நபர்கள் போன்ற சக்திகளால் இது பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. கட்சிக்குள் இந்த சமூக அடுக்குத்தான் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் எதிர்வர்க்க நலன்கள் ஊடுருவுவதற்கான பிரதான வழித்தடமாக (transmission belt) ஆகியிருந்தது. சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான 1975-79 "போராட்டம்" குட்டி-முதலாளித்துவ தீவிரவாத கூறுபாடுகள் தொழிலாள வர்க்கத்தை நோக்கி பொறுமையிழந்திருந்ததையும் மற்றும் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒரு திட்டமிட்ட போராட்டத்தை நடத்துவதற்கான அவர்களின் இயாலாமையையும் பிரதிபலித்தது. அனைத்திற்கும் மேலாக, வர்க்கப் போராட்டத்தில் எந்தவித முன் அனுபவமும் இல்லாது, ஃப்ளீட் வீதி (Fleet Street) மற்றும் மேற்கு முனையில் (West End) இருந்து WRP இன் அரசியல் குழுவுக்குள் நுழைந்திருந்த பத்திரிகையாளர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகளின் கூறுபாடுகள் கட்சி முன்னொருபோதும் அறிந்திராத சடரீதியான ஆதாரவளங்கள் கைவருவதற்கான தொடர்புகளை வழங்கின. தொழிலாள வர்க்கத்திற்குள் கட்சி உறுப்பினர்களின் நாளாந்த போராட்டங்களுக்கு அப்பாற்பட்டு, பெரும் பணத்தொகை திரட்டப்பட்டது. இவ்விதத்தில் மத்திய தலைமையானது, சாமானிய கீழ்மட்ட உறுப்பினர்களிடமிருந்து சுதந்திரமாக செயற்படுவதற்கான நிலையை பெற்றுக்கொண்டு ஜனநாயக மத்தியத்துவத்தின் அடித்தளங்களையே அழித்தது.

ஹீலியைச் சுற்றியிருந்த உயரதிகார நபர்களினது ஒரு பரிவாரத்தின் "மேல் அடுக்கு" என்றும், முடிவெடுக்கும் நடைமுறைகளில் எந்த பாத்திரமும் வகிக்க மறுக்கப்பட்டு வெறுமனே கட்டளைகளை ஏற்று வந்த நூற்றுக் கணக்கான கீழ்மட்ட உறுப்பினர்கள் நிரம்பிய "கீழ் அடுக்கு" என்றும் கட்சி பிளவுபடுத்தப்பட்டது. இது கட்சிக்குள் ஒட்டுமொத்தமாக அரசியல் உறவுகளில் தொடர்ச்சியான சீரழிவை உண்டாக்கியது. தலைமையோ, வர்க்க போராட்ட மட்டத்தில் கட்சிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான நிஜமான உறவுகளை அதிகரித்தளவில் உணர்ந்துகொள்ளமுடியாததாக இருந்தது. தலைமை அலுவலகத்திற்கும் WRP கிளைகளுக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் நிர்வாகரீதியான தன்மையை ஏற்றதுடன், ஒரு வர்த்தக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கும் வட்டார கிளை அலுவலகத்திற்கும் இடையிலான உறவைப் போல இருந்தது. பல உறுப்பினர்களே அறிந்திராத அளவுக்கு ஹீலியே கூட கண்காணாத பிரமுகராக ஆகியிருந்தார் — மேலும் அவரும் அவர்களைக் குறித்து வெகு குறைவாகவே அறிந்திருந்தார். பெய்ரூட், டமஸ்கஸ், பாக்தாத், அபுதாபி மற்றும் திரிப்போலிக்கான அவரது விஜயங்கள் சந்தேகத்திற்கிடமின்றி கிளாஸ்கோ, ஷெர்ஃபீல்ட், மான்செஸ்டர் மற்றும் கார்டிஃப்புக்கான அவர் விஜயங்கள் விட மிகவும் அடிக்கடி நடந்தன.

மத்திய கிழக்கில் WRP இன் அழைப்புச்சீட்டாக அவர் வனசா ரெட்கிறேவைப் பெரிதும் சந்தர்ப்பவாதரீதியில் பயன்படுத்தியதன் அடிப்படையில், ஹீலியின் உயரப் பறந்து கொண்டிருந்த இராஜதந்திரமும் மற்றும் பரந்தளவிலான ஆதார வளங்களை அவர் திடீரென அணுக முடிந்ததும், கட்சியின் அரசியல் நிலைப்பாட்டிலும் தொழிலாள வர்க்கத்துடனான அதன் உறவுகளிலும் ஒரு அழிவுகரமான விளைவை ஏற்படுத்தி இருந்தது. அதன் நிஜமான உத்தேசம் என்னவாக இருந்தாலும், அதுவொரு நிகழ்ச்சிப்போக்கின் பாகமாக இருந்தது, இந்த நிகழ்ச்சிப்போக்கின் மூலமாக WRP அன்னிய வர்க்க சக்திகளின் அரசியல் பிடியில் மாட்டிக் கொண்டது. அது ஒரு சரியான போக்கை எடுக்க வேண்டிய மிக அவசியத்தில் இருந்த அந்த தருணத்தில், மத்திய கிழக்கில் அதன் பணிகளின் "வெற்றி", ஆரம்பத்தில் இருந்தே இதில் ஓர் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்துடன் தொடர்பற்ற ஒரு நிலைப்பாடு இருந்த நிலையில், அது பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தினுள் ஊடுருவுவதில் அரிதாகவே  தங்கியிருக்கும் நிலைமையில் இருந்தது. பல தசாப்தங்களாக ட்ரொட்ஸ்கிச கொள்கைகளுக்கான போராட்டத்தில் WRP அபிவிருத்தி செய்திருந்த பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கம் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு இடையிலான நெருக்கமான உற்ற தொடர்பு சீராக கீழறுக்கப்பட்டது. தொழிலாள வர்க்கத்திலிருந்து தனிமைப்படுவதும் இத்தகைய கொள்கைகளைக் கைவிடுவதும் ஒன்றுக்கொன்று பொருத்தமான விகிதத்தில் அதிகரித்தது. ஒரு குறிப்பிடத்தக்க உண்மை இந்த நிகழ்ச்சிப்போக்கை எடுத்துக்காட்டுகிறது. மே 1979 தேர்தலில், தொழிலாளர்கள் —கலஹன் மீது அவர்களுக்கு வெறுப்பு இருந்தபோதினும்— உறுதியாக டோரிக்களுக்கு எதிராக வர்க்க வாக்குகளைப் பதிவு செய்ய வாக்குச்சாவடிகளுக்கு அணிவகுத்த நிலையில் தொழிற் கட்சிக்கு வாக்குகள் அதிகரித்தன. 1975 இல் இருந்து WRP தலைவர்கள் சமூக ஜனநாயகவாதிகளை எதிர்த்த அவர்களின் போராட்டங்களுக்கு தொழிற் கட்சி மீதான ஒரு சர்வஜனவாக்கெடுப்புக்கு விடுத்திருந்த அழைப்பிற்கு அடிப்படையாக WRP தலைவர்கள் எந்த சமூக சக்தியைச் சார்ந்திருந்ததோ அந்த நடுத்தர வர்க்கத்திற்குள் வலதை நோக்கி கூர்மையான ஊசலாட்டம் இருந்ததன் ஒரு நேரடி விளைவாகவும், தாட்சர் அதிகாரத்திற்கு வந்தார். ஆனால் வாக்கு எண்ணிக்கைகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, WRP பின்வருமாறு பெருமைபீற்றியது: "தொழிற் கட்சியின் அதிகார வெற்றிக்காக நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை." (நியூஸ் லைன், மே 5, 1979) WRP இங்கே தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் அரசியல் உணர்வற்ற தன்மையை புகழ்ந்துரைக்கிறது.

அக்கட்டுரை இவ்வாறு கூறுமளவுக்குச் சென்றது: "தொழிற் கட்சி மற்றும் TUC தலைவர்களால் தொழிலாள வர்க்கம் தலைமையின்றி விடப்பட்டிருப்பதே, தொழிற் கட்சியிலிருந்து பெறப்படும் கடந்த நாலரை ஆண்டுகால மிகவும் அத்தியாவசிய படிப்பினை, இதுவே பொது தேர்தலில் தோல்விக்கான காரணம் என்று நாங்கள் நம்புகிறோம்."

நியூஸ் லைன் ஆசிரியர் குழு, இந்த பிரகடனத்தைச் செய்தபோது, அதற்கு முந்தைய நான்காண்டுகளில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பாத்திரம் குறித்து மிகவும் நாசகரமான குற்றச்சாட்டையே அவர்கள் வரைந்திருந்தனர் என்பதை அனேகமாக உணர்ந்திருக்கவில்லை.

தொழிலாள வர்க்கம் தலைமையின்றி விடப்பட்டிருந்தது என்றால், அதனது புரட்சிகர முன்னணிப் படையும் மற்றும் அரசியல்ரீதியில் நனவுபூர்வமான அதன் பிரிவுகளும் WRP தலைமையால் தவறாக வழிநடத்தப்பட்டிருந்ததாலாகும். அதன் தோற்கடிப்புவாத சாகசத்தை நிறைவேற்றி இருந்த நிலையில் இப்போது அது அதன் விளைவுகளுக்காக அஞ்சி நடுங்கிய சந்தர்ப்பவாதிகளாக பின்வாங்கியிருந்தது.