ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Police assault “yellow vests” after Macron forced to flee crowd in Paris theater

பாரிஸ் திரையரங்கில் கூட்டத்திலிருந்து தப்பிக்கும் நிலைக்கு மக்ரோன் தள்ளப்பட்ட பின்னர் “மஞ்சள் சீருடையாளர்களை” பொலிசார் தாக்கினர்

By Alex Lantier
20 January 2020

வெள்ளிக்கிழமை இரவு தலைநகரில் உள்ள Bouffes du nord திரையரங்கில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அவரது அரிய பொது நிகழ்ச்சி ஒன்றின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வெறுப்புடன் கூச்சலிடுவதை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, சனிக்கிழமை பாரிஸில் நடந்த வாராந்திர “மஞ்சள் சீருடை” அணிவகுப்புக்கள் வன்முறை மிக்க பொலிஸ் ஒடுக்குமுறையை சந்தித்தன. மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான பாரிய வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில், இந்த நிகழ்வுகள் பிரான்சின் “செல்வந்தர்களின் ஜனாதிபதி” தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் பரவலாக வெறுக்கப்படுவதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

திரையரங்கில் மக்ரோன் காணப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த பின்னர், Bouffes du nord திரையரங்கிற்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தினர் “மக்ரோனே இராஜினாமா செய்” என்றும் “அனைவரும் ஒன்றுகூடி, பொது வேலைநிறுத்தம் செய்யுங்கள்” என்று கோஷம் எழுப்பினர். மேலும், திரையரங்கிற்குள் நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், அவரது மனைவி பிரிஜிட் மற்றும் பெரியளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த மக்ரோனை எதிர்க்கவும் முயன்றனர்.


பொது வேலைநிறுத்தத்திற்கான தொழில்துறைகளுக்கிடையிலான அணிவகுப்பு

ஜனாதிபதி போராட்டத்தை புறக்கணித்ததாகவும் நாடகத்தை இறுதிவரை பார்த்ததாகவும் கூறி, எலிசே ஜனாதிபதி மாளிகை ஆரம்பத்தில் பொதுமக்களை தவறாக வழிநடத்தவும், சம்பவத்தை குறைத்துக்காட்டவும் முயன்றது. எவ்வாறாயினும், டசின் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மேடை வழியாக திரையரங்கிற்குள் நுழைய முடிந்தபோது, ஜனாதிபதி தம்பதியினரை பல நிமிடங்கள் “பாதுகாப்பில் வைக்க” நேர்ந்தது என்பதை பத்திரிகை செய்திகள் உறுதிப்படுத்தின. CRS கலகப் பிரிவு பொலிசாரின் பெரும் பிரிவினர் திரையரங்கை சூழ்ந்து கொண்ட பின்னர், கூட்டத்தில் இருந்து “மக்ரோனே இராஜினாமா செய்” என்று எழுந்த கோஷங்களுக்கு மத்தியில் அந்த இடத்தை விட்டு மக்ரோன் வெளியேறினார்.

மக்ரோனின் ஊழியர் BFM-TV க்கு அளித்த ஒரு அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது: “ஜனாதிபதி தனது மனைவியுடன் திரையரங்கிற்கு வழமையாக செல்வதைப் போல தொடர்ந்து செல்வார். அரசியல் வன்முறையால் அச்சுறுத்தப்படும் கலைஞர்களின் கருத்து சுதந்திரம் மற்றும் படைப்பு சுதந்திரத்தை அவர் தொடர்ந்து பாதுகாப்பார்.”

உண்மையில், பெரும் எதிர்ப்புக்களை தூண்டாமல் பொதுவில் எங்கும் மக்ரோன் தனது முகத்தை காட்ட முடியாது என்றளவிற்கு அவர் மீது கடும் வெறுப்பு நிலவுவதையே இந்த சம்பவம் காட்டுகிறது. 2018 இல் “மஞ்சள் சீருடை” போராட்டங்கள் வெடித்தபோது, அவர் தனது ஆணவம் மற்றும் சிக்கன நடவடிக்கை மீதான மக்களின் பெரும் சீற்றத்தைக் கண்டு மிகவும் பயந்துபோயிருந்த நிலையில், ஒருவேளை பிரெஞ்சு மக்களின் கைகளில் அவர் சிக்கிவிடாமல் இருக்க, எங்கிருந்தும் அவரை வெளியேற்றுவதற்காக அவரிருக்கும் இடத்தில் 24 மணி நேரமும் ஒரு ஹெலிகாஃப்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு “பின்னணி”யாக “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டம் இருப்பதாக அரசாங்கம் பலமுறை கூறினாலும், முன்பை விட இப்போது மக்ரோன் மிகக் கடுமையாக வெறுக்கப்படுவதையே இது தொடர்ந்து தெளிவுபடுத்துகிறது.


போராட்டத்தின் ஒரு பகுதியினர்

“கருத்து சுதந்திரத்தை” பாதுகாக்க மக்ரோன் செயலாற்றுகிறார் என்ற எலிசே இன் கூற்றைப் பொறுத்தவரை, அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான முடிவற்ற தாக்குதல்களால் அது பொய்யாகிப் போனதுடன், அவரது கொள்கையை எதிர்த்து நிற்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது அவரது அரசாங்கம் இரத்தக்களரியான பொலிஸ் மிருகத்தனமிக்க நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விடுகின்றது.

“நான் இப்போது Bouffes du nord (மெட்ரோ லா சப்பல்) திரையரங்கில், ஜனாதிபதிக்கு மூன்று வரிசைகளுக்குப் பின்னால் இருக்கிறேன். போராளிகள் இப்பகுதியில் உள்ளனர், அனைவரையும் ஆதரவளிக்க வருமாறு அழைக்கிறார்கள். ஏதோ தயாராகிக் கொண்டிருக்கிறது, மாலையில் அநேகமாக ஏதோவொன்று நிகழக்கூடும்” என்று சுயாதீன பிராங்கோ-அல்ஜீரிய ஊடகவியலாளர் Taha Bouhafs ட்வீட் செய்தது உட்பட, திரையரங்கிற்கு மக்ரோன் வருகை தந்தது பற்றிய செய்தி பல சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டது.


ஆர்ப்பாட்டக்காரர்களை கலகப் பிரிவு பொலிசார் சுற்றி வளைக்கின்றனர்

திரையரங்கிலிருந்து மக்ரோன் இழிவான முறையில் தப்பிச் சென்ற பின்னர், “வன்முறையில் ஈடுபடும் அல்லது சேதம் விளைவிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு குழு இதில் பங்கேற்றது” என்றும், முன்னரே அறிவிக்கப்படாத ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டின் பேரில் Taha Bouhafs ஐ பொலிசார் கைதுசெய்ய முன்னேறினர். அவர்கள், Bouhafs ஐ அன்று மாலை தடுப்புக் காவலில் (garde à vue) வைத்திருந்தனர்.

ஜனாதிபதியின் திரையரங்குக்கு வருகையை செய்தி வெளியிட்டதற்காக ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு அசாதாரண தாக்குதல் என்று ஒரு ஊடகவியலாளரை கைதுசெய்தது மட்டுமல்ல, சர்வசாதாரணமாக பாரிசில் சீற்றமிக்க தன்னிச்சையான ஆர்ப்பாட்டங்களை உருவாக்க, மக்ரோனின் வெளிவருகையை தெரிவிப்பது மட்டுமே போதுமானது என்பதையும் இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்துகிறது.

அடுத்த நாள், ஒரு பாரிய பொலிஸ் பிரசன்னத்தை ஒழுங்கமைத்து, பாரிசில் நடந்த 62வது வாராந்திர “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டத்தை மிருகத்தனமாக தாக்கி பொலிஸ் அரசு எந்திரம் இதற்கு பதிலடி கொடுத்தது. அணிவகுப்பு தொடங்கியதிலிருந்து, அணிவகுப்பாளர்களுக்கு முன்னும் பின்னுமாக, கடும் ஆயுதமேந்திய கலகப் பிரிவு பொலிசாரின் பெரும் பிரிவு பல்லாயிரக்கணக்கான “மஞ்சள் சீருடையாளர்களை” முற்றிலுமாக சுற்றிவளைத்திருந்தனர். இருப்பினும் வசதியானோர் வசிக்கும் வடமேற்கு பாரிஸ் பகுதியில் கூட, எதிர்ப்பாளர்கள் கடந்து செல்கையில் அவர்களுக்கு கரகோஷமெழுப்பி உற்சாகமூட்ட குடியிருப்பாளர்கள் ஜன்னல்களில் கூடியிருந்ததை காண முடிந்தது.


எரியும் மோட்டார் சைக்கிள்களையும் கட்டுமான உபகரணங்களையும் தீயணைப்பு பணியாளர்கள் அணைக்கின்றனர்

பாரிஸ் “மஞ்சள் சீருடையாளர்கள்” அணிவகுப்பில் கலந்து கொண்ட ஒரு ஓய்வுபெற்ற செவிலியரான பாட்ரிக் என்பவர் தானும் போராடியதாகக் கூறினார், எதற்கென்றால் “இந்த ‘ஜனாதிபதிக்கு’ எதிராக நாங்கள் போராட வேண்டும், ஏனென்றால் உண்மையில் அவர் சீரழிந்து கொண்டிருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். பிரான்ஸை அவர் இரத்தக்களரிக்குள் தள்ளுவார். நான் அவருக்கு அளிக்கும் ஒரேயொரு அறிவுரை, மரியாதையாக உடனடியாக வெளியேற வேண்டும், இல்லையென்றால் தோல்வியுற்றபின் வெட்கித்தலைகுனிந்து வெளியேறுவார்” என்று WSWS க்கு தெரிவித்தார்.

“மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி ஓராண்டிற்கு பின்னர் கடந்த டிசம்பரில் போக்குவரத்து வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், வர்க்கப் போராட்டம் மீதான கட்டுப்பாட்டை தொழிற்சங்கங்கள் இழந்துவிட்டதாக தான் கருதுவதாக பாட்ரிக் கூறினார். மேலும் அவர், “தொழிற்சங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டிலிருந்து தொழிலாளர்கள் விலகிக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது இயக்கத்தின் கட்டுப்பாட்டை திரும்பப் பெற தொழிற்சங்கங்கள் முயற்சிக்கின்றன. ஆனால், அவர்கள் சற்று தாமதமாக முயற்சிப்பதாக நான் நினைக்கிறேன்” என்றார்.


பாட்ரிக்

வேலைநிறுத்தம் செய்யும் பாரிஸ் போக்குவரத்து தொழிலாளியான தியேரி, “மஞ்சள் சீருடையாளர்”களுக்கு எதிரான பொலிஸ் வன்முறையை விமர்சித்ததுடன், இவ்வாறு தெரிவிக்கிறார்: “[நாஜி ஒத்துழைப்பாளர்] விச்சி ஆட்சியின் பொலிஸ் [1960 களின் முன்னாள் விச்சி ஒத்துழைப்பு அதிகாரி மொறிஸ்] பப்போன் மற்றும் மக்ரோனின் பொலிஸூக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன. பிரெஞ்சு மக்களுக்கு எதிரான இந்த வன்முறை ஏற்றுக் கொள்ள முடியாதது. பிரச்சனை என்னவென்றால் அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாததை ஏற்றுக் கொண்டார்கள். இப்போது அவர்கள் எழுந்து காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற காரணத்திற்காக பொலிஸ் அவர்களை சிதைப்பதை தடுப்பதற்கான நேரம் இதுவே. எதிர்ப்பு தெரிவிக்க அரசியலமைப்பு உரிமை எமக்கு உள்ளது.”

இந்த சிக்கலை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பேசுகையில், மத்திய கிழக்கு மற்றும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் அதற்கப்பால் உள்ள வர்க்கப் போராட்டங்களின் சர்வதேச எழுச்சியின் முக்கியத்துவம் குறித்து தியேரி இவ்வாறு வலியுறுத்தினார்: “உண்மையில், ஒரு சர்வதேச இயக்கம் தொடங்குகிறது, ஆனால் அது இன்னும் ஒழுங்கமைக்கப்படவில்லை. உலகெங்கிலும் விடயங்கள் முன்னேறிக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம், ஆனால் நம்மிடம் இல்லாதது ஒரு உலக அமைப்பு என்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம். அமெரிக்காவில் நீங்கள் எழுப்பிய வர்க்கப் போராட்டங்களைப் பற்றி எனக்குத் தெரியாது.”


தியேரி

அணிவகுப்பு அதன் இலக்கான Gare de Lyon இரயில் நிலையத்தை சென்றடைவதற்கு சற்று முன்பு கலகப் பிரிவு பொலிஸூக்கும் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை மிக்க மோதல்கள் வெடித்தன. பொலிசார் திடீரென அணிவகுப்பை தடுத்து நிறுத்தி, Rue de Lyon பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொறி வைத்து அவர்களை வெளியேற விடாமல் தடுத்தபோது தண்ணீர் பீரங்கிகளை அங்கு கொண்டு வந்தனர். பொலிசார் கண்ணீர்புகை குண்டுகளையும் இரப்பர் தோட்டாக்களையும் கூட்டத்தினர் மீது எறிந்ததால், அங்கு மோதல்கள் வெடித்தன, அப்போது சில “மஞ்சள் சீருடையாளர்கள்” உடைந்த நடைபாதை துண்டுகள் மற்றும் உடைந்த கண்ணாடி மற்றும் கட்டுமான உபகரணங்களை கலகப் பிரிவு பொலிசார் மீது வீசியெறிந்து பதிலடி கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, தெருவில் அசைவில்லாமல் கிடந்த ஒரு எதிர்ப்பாளரை ஒரு பொலிஸ்காரர் மிருக்கத்தனமாக அடிப்பதும், அவரது தலை முழுவதும் இரத்தம் வடிவதும் உட்பட, பொலிஸ் தாக்குதல் குறித்து பரவலாக பரப்பப்பட்ட காணொளிகளின் சீற்றத்திற்கு மத்தியில் ஒரு சம்பிரதாயமான விசாரணைக்கு அறிவிக்க பொலிஸ் அதிகாரிகள் நிர்பந்திக்கப்பட்டனர்.

“புரட்சி” என்றும், “மக்ரோனே இராஜினாமா செய்” என்றும் கோஷமிட்ட “மஞ்சள் சீருடை” குழுக்கள் பொலிஸ் முற்றுகையிலிருந்து சமாளித்து வெளியேறிய பின்னர், இரயில் நிலையத்தை சுற்றிய பகுதி முழுவதிலும் மாலை வரை மோதல்கள் தொடர்ந்த நிலையில் குறைந்தது அறுபது ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.