ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The oligarchs assemble at Davos

செல்வந்த தட்டுக்கள் டாவோஸில் ஒன்று கூடுகின்றன

Niles Niemuth
21 January 2020

நூற்றுக் கணக்கான வங்கியாளர்கள், பெருநிறுவன செயலாளர்கள், பிரபலங்கள், அரசு தலைவர்கள் மற்றும் மந்திரிசபை உறுப்பினர்களும் செவ்வாயன்று தொடங்கும் 50 வது வருடாந்தர உலக பொருளாதார கருத்தரங்கில் (WEF) பங்கெடுக்க சுவிட்சர்லாந்தின் டாவோஸிற்கு வந்துள்ளனர்.

கடந்தாண்டில் மட்டும் உலகின் பில்லியனர்களின் செல்வ வளம் 25 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், டாவோஸில் கலந்து கொள்பவர்கள் கொண்டாடுவதற்கு நிறையவே உள்ளன. ஆனால் இந்த செல்வந்த தட்டுக்கள், சுவிட்சர்லாந்தின் பனி மூடிய மலைகளைக் காட்டிலும், சமூக எதிர்ப்பு மற்றும் சீற்றத்தின் ஒரு பேரலையால் அவர்கள் சூழப்பட்டிருப்பதைக் காண்கிறார்கள்.


சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலக பொருளாதார கருத்தரங்கின் ஹோட்டல் உச்சியில் ஒரு பொலிஸ் பாதுகாவலர் காவல் நிற்கிறார் (படம்: அசோசியேடெட் பிரஸ், மார்கஸ் ஸ்ரெய்பெர்)

உலக பொருளாதார கருத்தரங்கின் நிறுவுனர் கிளவுஸ் சுவாப் அக்கூட்டத்திற்கு முன்னதாக எச்சரிக்கையில், உலகம் ஓர் "முக்கிய திருப்பம் எடுக்கவேண்டிய நிலையில்" இருப்பதாக குறிப்பிட்டதுடன், “மக்கள் பொருளாதார 'உயரடுக்குகளுக்கு' எதிராக கிளர்ந்தெழுந்து வருகிறார்கள், அவர்கள் தான் அவர்களை ஏமாற்றி இருப்பதாக நம்புகிறார்கள்,” என்றார்.

உண்மையில், கடந்தாண்டு சிலி மற்றும் போர்த்தோ ரிக்கோ, சூடான் மற்றும் அல்ஜீரியா, ஈராக் மற்றும் லெபனானில் இருந்து ஹாங்காங் மற்றும் இந்தியா வரையில், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ வரையில் ஓர் உலகளாவிய சமூக போராட்டங்களுக்கு மத்தியில் தான் அக்கூட்டம் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

உலகெங்கிலும், அதிகரித்த சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மையால் எரியூட்டப்பட்ட போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதுடன், இந்தாண்டு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் முன்மொழியப்பட்ட ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான பாரிய வேலைநிறுத்தங்களுடன் தொடங்கிய பிரான்ஸ் உள்ளடங்கலாக, 2020 இல் அவை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களின் சந்திப்புக்கு முன்னதாக, உலக பொருளாதார அரங்கம் (WEF) ஓர் உலகளாவிய அபாய அறிக்கையைப் பிரசுரித்தது. கடந்தாண்டு நடைமுறை சிக்கல்களில் ஒன்பதாவது இடத்தில் இருந்த "உள்நாட்டு அரசியல் துருவமுனைப்படல்" தான் தங்களின் முதல் கவலை என்று அதன் அங்கத்தவர்கள் பட்டியலிட்டிருந்ததை அது குறிப்பிட்டது.

இதற்கிடையே, Edleman அறக்கட்டளையின் அழுத்தத்தைக் கணக்கிடும் வருடாந்தர ஆய்வறிக்கை, உலகெங்கிலும் பெரும்பான்மை மக்கள் முதலாளித்துவம் நன்மையை விட அதிகமாக கெடுதியையே ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்தது. அரசுகள், ஊடகங்கள், வணிகங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் அனைத்தும் பெருந்திரளான மக்களால் நெறிமுறையற்ற மற்றும் திறமையற்றவையாக பார்க்கப்படுவதுடன், உலகளவில் எல்லா அமைப்புகளும் மதிப்பிழந்திருப்பதை அந்த ஆய்வறிக்கை கண்டறிந்தது.

அந்நிகழ்வுக்கு முன்னதாக, பிரிட்டிஷ் அறக்கட்டளை ஆக்ஸ்ஃபோம் சமூக சமத்துவமின்மை மீதான அதன் வருடாந்தர அறிக்கையை வெளியிட்டதில், சமூக சமத்துவமின்மை "கட்டுப்பாட்டை மீறி இருப்பதாக" அறிவித்தது.

ஆக்ஸ்ஃபோம் தகவல்படி, உலக பில்லியனிய மக்கள் வெறும் 2,153 பேர் மட்டுமே —அதாவது, ஒரு நவீன சொகுசு கப்பலில் சௌகரியமாக இருக்கக்கூடிய அளவிலான இந்த எண்ணிக்கையினர் மட்டுமே— உலகின் 4.6 பில்லியன் ஏழைகளின் செல்வங்களை விட அதிகமானதைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர்.

இதற்கிடையே ஒட்டுமொத்தமாக உயர்மட்ட 1 சதவீதத்தினரோ, 6.9 பில்லியன் மக்களின், அதாவது அண்மித்து ஒட்டுமொத்த உலக மக்களின், செல்வ வளத்தை விட இரண்டு மடங்குக்கு அதிகமாக கொண்டுள்ளனர்.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இந்த மனதை உறைய வைக்கும் இடைவெளியை ஒரு முன்னோக்கில் கொண்டு வந்து, ஆக்ஸ்ஃபோம் குறிப்பிடுகிறது: “தங்களின் 100 டாலர் தொகைகளின் குவியலில் ஒவ்வொருவரும் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால், மனிதகுலத்தின் பெரும்பான்மையினர் தரையில் உட்கார்ந்திருப்பதைப் போல இருக்கும். ஒரு பணக்கார நாட்டில் ஒரு நடுத்தர வர்க்க நபர் ஒரு நாற்காலியில் உயரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போல இருக்கும். உலகின் இரண்டு மிகப் பெரும் செல்வந்தர்கள் விண்வெளியில் உட்கார்ந்திருப்பதைப் போல இருக்கும்,” என்று குறிப்பிட்டது.

டாவோஸில் இந்த ஒன்றுகூடல், பிரத்யேகமான அந்த அல்பைன் தங்குமிட நகரின் மறைப்பில், சுவிஸ் பொலிஸ் துப்பாக்கிதாரிகள் மற்றும் அவர்களின் சொந்த பாதுகாப்பு பரிவாரங்களினது கட்டுக்காவலின் கீழ், அடிமட்டத்திலிருந்து உயர்மட்டத்திற்கு இன்னும் அதிகமான செல்வவளத்தைப் பாய்ச்சும் நோக்கில் பின்புல உடன்படிக்கைகள் செய்து கொண்டு, அதேவேளையில் தங்களை அறிவொளி பெற்ற சீர்திருத்தவாதிகளாக காட்டிக் கொள்ள முதலாளித்துவ உயரடுக்குக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

காலநிலை மாற்றம் பிரச்சினையில் ஒருங்குவிவதுடன் சேர்ந்து, “ஒத்திசைந்த மற்றும் நிலையான ஓர் உலகிற்கான பங்குதாரர்கள்" என்பதே இந்தாண்டு கூட்டத்தின் கருப்பொருளாக உள்ளது. இளம் செயல்பாட்டாளர் கிரேடா தன்பேர்க் தலைமையிலான ஆர்ப்பாட்டங்கள் சிறப்பிக்கப்படவுள்ளன மற்றும் பிரிட்டனின் இளவரசர் சார்ல்ஸ் "இவ்வுலகை எவ்வாறு காப்பாற்றுவது" என்பதன் மீது ஒரு உரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் கலந்து கொள்ளும் பில்லியனர்களும் மில்லியனர்களும் சூரிச் விமான நிலையத்தின் தனியார் முனையத்தில் கிடைக்கும் ஏற்புடைய "பசுமை" விமான எரிபொருளைக் கொண்டு அவர்களின் பிரத்தியேக விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதன் மூலம் புவி வெப்பமடைதலை எதிர்த்துப் போராடுவதற்கான அவர்களின் பொறுப்புறுதியைக் காட்டிக் கொள்ள முடியும். பங்கேற்பாளர்கள் தங்கள் தனிப்பட்ட கார்பன் தடம் குறைப்பதற்காக இடத்திலிருந்து இடத்திற்கு கால்நடையாக நடக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

நேற்று டாவோஸிற்குப் புறப்பட்டுச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலக பொருளாதார கருத்தரங்கிற்கான அவரின் இரண்டாவது விஜயத்தில், இன்று ஒரு "சிறப்பு உரை" வழங்க உள்ளார்.

ஆயிரக் கணக்கான புலம்பெயர்ந்த குழந்தைகளை அவர்களின் குடும்பங்களிடம் இருந்து பிரித்த ஒரு போர் குற்றவாளியும், வெறும் ஒருசில வாரங்களுக்கு முன்னர் புவியை முன்றாம் உலக போரின் விளிம்பிற்குக் கொண்டு வந்தவருமான ட்ரம்புக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு என்பது, இந்நிகழ்வின் மனிதாபிமான பாசாங்குத்தனங்களை அம்பலப்படுத்துகிறது.

நியூ யோர்க் டைம்ஸ் செய்தியாளர் ஆண்ட்ரூ ரோஸ் சொர்க்கின் குறிப்பிடுகையில், “பங்குச் சந்தை சாதனையளவுக்கு உயர்ந்திருக்கையில்...” ட்ரம்ப் “செவ்வாய்கிழமை வருகையில் ஆரத் தழுவப்படவில்லை என்றாலும் (கலந்து கொண்டிருப்பவர்களில் சிலர் அவர் முதுகுக்குப் பின்னால் முகம் சுழிக்கக்கூடும் என்றாலும்), ஏற்றுக் கொள்ளப்படுவார்" என்பதற்கு "அங்கே அதிகரித்த உணர்வு உள்ளது,” என்று கருத்துரைத்தார்.

“திரு. ட்ரம்ப் புதிய டாவோஸ் மனிதராக இருக்கக்கூடும்,” என்று சொர்க்கின் நிறைவு செய்தார்.

அதில் கலந்து கொள்பவர்கள் ட்ரம்புக்கு சிறப்பார்ந்த வரவேற்பளிப்பது என்பது நிதியியல் செல்வந்த தட்டுக்களின் பாகத்தில் சர்வாதிகாரம் மற்றும் பாசிசவாத சக்திகள் அரவணைக்கப்படுவதை எடுத்துக்காட்டுகிறது. சமூக எதிர்ப்பால் அவர்கள் சூழப்பட்டிருப்பதை உணரும் இந்த செல்வந்த தட்டுக்கள் இன்னும் அதிகமாக நேரடியாக சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்குத் திரும்பி வருகின்றன.

கலந்து கொள்பவர்களில், ஒருவர் மற்றவரின் கருணைக்குரிய மனிதநேய முயற்சிகளைப் பாராட்டி "நிலையான தன்மை" குறித்து தார்மீக விளக்கப் பேருரைகளை வழங்குகின்ற அதேவேளையில், உலகின் பிரச்சினைகளுக்கு அவர்களே —செல்வந்த தட்டுக்களே— காரணம் என்பது உலகின் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும் என்ற உண்மையும் அவர்களின் மனங்களில் இருக்கும்.

இவர்கள் தான் போர்களில் இருந்து ஆதாயமடைபவர்கள், இவர்கள் தான் பாசிசவாதத்தின் அதிகரிப்பை ஊக்குவிப்பவர்கள், இவர்கள் தான் ஜனநாயக உரிமைகள் மீதான முன்னிலை தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் தான் உலகின் உழைக்கும் மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கும் வறுமை மற்றும் சமூக அவலத்திற்குப் பொறுப்பானவர்கள்.

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் போராட்டத்தினுள் நுழைவதென்பதே, உண்மையில் இந்த உண்மையை மக்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும், அத்துடன் சேர்ந்து அதை எதிர்க்க தீர்மானகரமாக இருக்கிறார்கள் என்பதற்குமான ஓர் அடையாளமாகும். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, உலக மக்களின் அதிகரித்த பெரும்பான்மையினர் முகங்கொடுக்கும் நெருக்கடிகளுக்கான எந்தவொரு தீர்வுக்கும், சுவிட்சர்லாந்தில் இவ்வாரம் ஒன்றுகூடும் இந்த நிதியியல் ஒட்டுண்ணிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டியிருக்கும்.

2,000 க்கும் சற்று அதிகமானவர்களின் செல்வவளத்தை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் பறிமுதல் செய்வதென்பது, பில்லியன் கணக்கான மக்களுக்கு அடிப்படை சமூக உரிமைகளான உணவு, குடிநீர், கல்வி, மருத்துவச் சிகிச்சை, கலாச்சாரம், இணைய அணுகுதல் மற்றும் வீட்டுவசதியை வழங்குவதற்கான அடித்தளத்தை வழங்கும். திருட்டுத்தனமாக கொள்ளையடிக்கப்பட்ட அவர்களின் செல்வவளத்தைப் பறிமுதல் செய்வதற்கான சமூக தேவையானது, முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிந்து சமூகத்தை சோசலிச அடிப்படையில் மாற்றம் செய்வதிலிருந்து பிரிக்க முடியாததாகும்.