ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump denounces Macron’s criticisms of NATO at London summit

இலண்டன் உச்சி மாநாட்டில் நேட்டோ மீதான மக்ரோனின் விமர்சனங்களை ட்ரம்ப் கண்டிக்கிறார்

By Alex Lantier
4 December 2019

இலண்டனில் இரண்டு நாள் நேட்டோ உச்சி மாநாடு தொடங்கிய நிலையில், அமெரிக்காவுக்கும் பிரதான ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையிலான கடுமையான மோதல்கள் நேற்று பகிரங்கமாக வெடித்தன.

நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க்குடன் காலை உணவு விருந்துக்கு முன்னரான ஒரு சிறிய பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த ட்ரம்ப் அதற்கு முன்னர் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனைக் கண்டித்தார். ரஷ்யா மற்றும் சீனாவுடன் மத்திய தூர அணுஆயுத தளவாடங்கள் தடை ஒப்பந்தத்தை (INF) ட்ரம்ப் இரத்து செய்ததன் மீதான அமெரிக்க-ஐரோப்பிய மோதல்கள், அல்லது சிரியா மீதான துருக்கியின் சமீபத்திய படையெடுப்பு போன்ற பிரச்சினைகளின் காரணமாக—நேட்டோ கூட்டணி "மூளைச் சாவு" அடைந்து விட்டதாக எக்னொமிஸ்ட் பத்திரிகைக்கு மக்ரோன் வழங்கிய கருத்து, “மிகவும் மோசமானது,” என்று ட்ரம்ப் அறிவித்தார்.

“அது வெவ்வேறு பல சக்திகளை மிகவும் அவமதிப்பதாக கருதுகிறேன்,” என்று கூறிய ட்ரம்ப், “அதுபோன்றவொரு கருத்தை நீங்கள் வெளியிடுகையில், அது கடுமையான கருத்தாகி விடுகிறது. இன்றியமையாத விதத்தில் அது 28 நாடுகளுக்குமே மிக மிக மோசமான கருத்தாக உள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.


இலண்டனில், டிசம்பர் 3, 2019 இல், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வின்ஃபீல்ட் மாளிகையில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனைச் சந்திக்கிறார் (படம்: அசோசியேடெட் பிரஸ்/ இவான் உஸ்சி)

“வேறு யாரையும் விட நேட்டோ பிரான்சுக்குத் தான் அதிகமாக அவசியப்படுகிறது, வெளிப்படையாகவே அமெரிக்காதான் அதிலிருந்து மிகக் குறைவாக ஆதாயமடைகிறது,” என ட்ரம்ப் தெரிவித்தார். அமெரிக்க இணைய நிறுவனங்களான கூகுள், ஆப்பிள், பேஸ்புக் மற்றும் அமசன் மீது பாரீஸ் வரி விதித்த பின்னர், அதற்கு வாஷிங்டன் பிரெஞ்சு ஆடம்பர ஏற்றுமதிகள் மீது 2.4 பில்லியன் வரிகளை விதித்து பதிலளித்த நிலையில், வர்த்தகப் போர் மோதல்களைச் சுட்டிக்காட்டி ட்ரம்ப் கூறுகையில், “பிரான்ஸ் பொருளாதாரரீதியில் எவ்வகையிலும் சிறப்பாக இல்லை. அவர்கள் மற்றவர்களின் பண்டங்கள் மீது வரி விதிக்க தொடங்குகிறார்கள்,” என்றார்.

மக்ரோனின் ஆழ்ந்த மக்கள் விரோத சிக்கன கொள்கைகளுக்கு எதிரான "மஞ்சள் சீருடை" போராட்டங்களுடன் நேட்டோ சம்பந்தமான மக்ரோனின் அறிக்கையை ஒப்பிட்டு சுருக்கமாக ட்ரம்ப் அறிவிக்கையில், “பிரான்சில் அதுபோன்ற சிக்கல் நிலவுகையில் இது மிகவும் கடுமையான அறிக்கையை வெளியிடுவதாக உள்ளது. மஞ்சள் சீருடையாளர்களுடன் என்ன நடந்து வருகிறது என்பதை பாருங்கள். … இது அவர்களுக்கு மிகவும் கடுமையான ஆண்டாக அமைந்துள்ளது, நீங்கள் சர்வசாதாரணமாக நேட்டோ குறித்து இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கக்கூடாது. அது மிகவும் அவமதிப்பதாகும்,” என்றார்.

ஸ்டொல்டென்பேர்க் மற்றும் ஊடகங்களின் முன்னால் ட்ரம்ப் அவரின் 53 நிமிட சுற்றி வளைத்த உரையை வழங்கிய போது, 2020 தேர்தல்கள் முடியும் வரையில் சீனாவுடன் அமெரிக்காவின் வரி விதிப்பு பிரச்சினைகளை நீடிக்க அச்சுறுத்தியது உட்பட பல்வேறு பிரச்சினைகளைக் குறித்து அவர் பேசினார். இது அமெரிக்க பங்குச் சந்தை சொத்து மதிப்புகளைச் சரிய செய்தது. ட்ரம்ப், அந்நாளின் இறுதியில், மக்ரோன் மற்றும் கனேடிய பிரதம மந்திரி ஜஸ்டீன் ட்ரூடோவுடன் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தினார்.

மக்ரோன் உடன் பேசுகையில், இராணுவச் செலவினங்களை அதிகரிப்பதற்கு நேட்டோவின் ஐரோப்பிய அங்கத்துவ நாடுகளை நிர்பந்தித்ததில் அவர் வெற்றி பெற்றிருப்பதாக ட்ரம்ப் பெருமைபீற்றினார். உண்மையிலேயே, நேட்டோவின் ஒட்டுமொத்த இராணுவ செலவுகள் 2016 க்குப் பின்னர் இருந்து 160 பில்லியன் டாலராக அதிகரித்து வருவதுடன், 2024 க்குள் இன்னும் சுமார் 240 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்க உள்ள நிலையில், மிகப் பெரியளவில் இராணுவக் கட்டமைப்பு நடந்து வருகிறது.

ட்ரம்பும் மக்ரோனும் மீண்டும் மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்பில் மோதிக் கொண்டனர், அந்நிகழ்வின் போது மக்ரோன் அவர் கருத்துக்களில் "மாற்றமில்லை" என்றார். சிரியாவில் பிடிக்கப்பட்ட ஐரோப்பிய இஸ்லாமிய அரசு (IS) ஆயுததாரிகளை மீண்டும் பிரான்சுக்குள் அனுப்ப ட்ரம்ப் நகைச்சுவையாக அச்சுறுத்தியதும், மக்ரோன், பெரும்பாலான IS போராளிகள் மத்திய கிழக்கைச் சேர்ந்தவர்கள் என்று பதிலளித்ததுடன், நேட்டோ ஆதரவிலான சிரிய குர்திஷ் ஆயுதக்குழுக்களை தாக்க சிரியாவில் துருக்கிய தாக்குதலை அங்கீகரித்தற்காக ட்ரம்பை விமர்சித்தார். நேட்டோ துருக்கியுடன் "மிகவும் நல்லுறவு" கொண்டிருப்பதாக ட்ரம்ப் கூறியதும், மக்ரோன், “நாங்கள் துருக்கியுடன் கூட்டுறவை இழந்துள்ளோம்,” என்று பதிலளித்தார்.

மத்தியதூர அணுஆயுத தளவாடங்கள் தடை ஒப்பந்தத்தை ட்ரம்ப் இரத்து செய்த பிரச்சினை மற்றும் "ஐரோப்பாவில் அமைதி" பிரச்சினைகளையும் மக்ரோன் எழுப்பினார், இதற்கு ட்ரம்ப், நேட்டோ நாடுகள் "ரஷ்யாவுடன் ஒத்துச்செல்கின்றன" என்று மெதுவாக கூறி விடையிறுத்தார்.

ட்ரூடோ உடனான பத்திரிகையாளர் சந்திப்பில், ட்ரம்ப், கனடா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே இராணுவத்திற்குச் செலவிடுவதற்காக அதை தாக்கினார்: “உங்களுக்குத் தெரியுமா, நாங்கள் அவர்களுக்கான பணம் செலுத்தும் திட்டத்தை முன்வைப்போம்? பிரதம மந்திரி அதை விரும்புவார் என்று உறுதியாக நம்புகிறேன்.” ட்ரம்ப் மேலும் கூறுகையில், ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக ஈரானிய போராட்டக்காரர்களை ஆதரிக்கவும் மற்றும் ரஷ்யா மற்றும் சீனாவுடன் வாஷிங்டன் ஒரு புதிய அணுஆயுத உடன்படிக்கையை "எதிர்நோக்கி" இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் அவர் ரஷ்யா மற்றும் சீனா உடனான அணுஆயுத தளவாடங்கள் தடை ஒப்பந்த பிரச்சினையை, “அது நிறைவேறவில்லை,” என்று கூறி உதறித் தள்ளினார்.

சுற்றுச்சூழல் மீதான அவரின் அலட்சியத்தைக் காட்டும் விதமாக பாரீஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையிலிருந்து வெளியேறியுள்ள, ட்ரம்ப், ட்ரூடோவைச் சந்தித்த வேளையில் அவர் அப்பிரச்சினை மீது ஆழமாக கவலை கொண்டதாகவும் தெரிவித்தார். “அது பற்றி எப்போதும் நான் நினைக்கிறேன். நேர்மையாக சொல்லப் போனால், காலநிலை மாற்றம் எனக்கு மிகவும் முக்கியமான ஒரு விடயம்,” என்று கூறிய ட்ரம்ப், “சுத்தமான நீரும், சுத்தமான காற்றும்,” “காலநிலை மாற்றத்தின் மிகப் பெரும் பாகமாகும்" என்பது "மிகவும், மிகவும், தெள்ளத்தெளிவாக" உள்ளது என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

போர்களில் சண்டையிட்ட கனடாவின் முன்வரலாறைப் பெருமைபீற்றி ட்ரூடோ விடையிறுத்தார்: “ஒவ்வொரு நேட்டோ நடவடிக்கையிலும் கனடா உடன் இருந்துள்ளது. நாங்கள் எங்கள் துருப்புகளைத் தொடர்ந்து அதிகரித்துள்ளோம், மற்றும் பயங்கரமான வழிகளுக்குள் அனுப்பி உள்ளோம். பெரும்பாலான எங்கள் கூட்டாளிகளைப் போலவே நாங்கள் தொடர்ந்து அதிகரிப்போம். சில நாடுகள் அவை 2 சதவீதத்தை எட்டினாலும் கூட, அண்மித்து இந்தளவுக்கு அதிகப்படுத்துவதில்லை, உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்ப்பது முக்கியமாகும், கனடா ஒரு உறுதியான, நம்பகமான பங்காளி என்பதுடன் அது தொடர்ந்து நேட்டோவைப் பாதுகாக்கும் மற்றும் நமது நலன்களைப் பாதுகாக்கும் என்பது அமெரிக்காவுக்கும் நேட்டோவின் அனைத்து கூட்டணி நாடுகளுக்கும் தெரியும்,” என்றார்.

நேட்டோ நாடுகளின் உயர்மட்ட தலைவர்களுக்கு இடையிலான இந்த பகிரங்கான உட்பூசலும், பரஸ்பர குற்றங்கூறுதலும் அக்கூட்டணியில் ஆழ்ந்து சென்று கொண்டிருக்கும் உடைவைச் சுட்டிக்காட்டுகின்றன. ஸ்டொல்டென்பேர்க்கின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடர்ந்து, நேட்டோ அரசு தலைவர்களின் கூட்டம் இன்று நடக்கின்ற அதேவேளையில், அரசியல் மோதல்கள் அக்கூட்டணியைக் கிழித்து வருகின்றன.

1949 இல் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பாவில், சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒரு கூட்டணியாக நிறுவப்பட்ட அதன் ஸ்தாபக திட்டம் ஸ்ராலினிச ஆட்சியால் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதுடன் கரைந்து விட்டது. இப்போது ஒரு பொதுவான எதிரியால் ஐக்கியப்பட்டிராத நிலையில், வாஷிங்டனும் அதன் பிரதான ஐரோப்பிய கூட்டாளிகளும் சமீபத்திய தசாப்தங்களில் இன்னும் அதிக கடுமையாகவே மோதி உள்ளன. பல பில்லியன் யூரோ சந்தைகளின் கட்டுப்பாடு மீது வர்த்தகப் போர் மோதல்களின் வெடிப்பானது, 20 ஆம் நூற்றாண்டின் உலகப் போர்களை போலவே, பகுப்பாய்வின் இறுதியில், பிரதான பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் இலாபம் மற்றும் மூலோபாய நலன்களுக்கான போட்டியில் வேரூன்றி உள்ளன என்பதையே அடிக்கோடிடுகிறது.

2002-2003 இல், எண்ணெய் வளம் மிக்க ஈராக் மீது அமெரிக்க தலைமையிலான சட்டவிரோத படையெடுப்புக்கு ஐ.நா. ஒப்புதலைப் பெறுவதற்கான புஷ் நிர்வாகத்தின் முயற்சியை பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ரஷ்யா எதிர்த்தபோதே இத்தகைய மோதல்கள் முன்னுக்கு வரத் தொடங்கிவிட்டன. ஆனால் அண்மித்து இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், இந்த முரண்பாடுகள், இப்போது அந்த போரின் போதிருந்ததை விட இன்னும் அதிக ஆழமாக கிழித்துக் கொண்டிருக்கின்றன, உண்மையில் இந்த முரண்பாடுகள் கூட்டணியை உடைக்குமா என்று ஐரோப்பிய ஊடகங்களில் அனுமானங்கள் அதிகரித்து வருகின்றன.

2016 ட்ரம்ப் தேர்வானதற்குப் பின்னர் இருந்து, வாஷிங்டனுக்கும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் இடையே அதிகரித்து வந்த மோதலை ஊடகங்கள், தற்காலிகமாக, புதிய அமெரிக்க ஜனாதிபதியின் தனிநபர் பண்பு மீதும் அனுமானிக்க இயலாத நிலை மீதும் சாட்டின.

ஆனால் மக்ரோன் எக்னொமிஸ்ட் பத்திரிகையில் பேசியதற்குப் பின்னர், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் வெறுமனே ட்ரம்ப் உடன் மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்தமாக அமெரிக்க வெளியுறவு கொள்கை மீதே கடுமையாக உள்ளன என்பது முன்பினும் பட்டவர்த்தனமாக உள்ளது. நேட்டோவுடனான உறவுகளை ஒட்டுப்போடும் முயற்சியில், மக்ரோன் வெள்ளிக்கிழமை பாரீசில் ஸ்டொல்டென்பேர்க் ஐ சந்தித்தப் பின்னர் பின்வருமாறு கூறினார்: “இன்று நமது எதிரி ரஷ்யாவா? அல்லது சீனாவா? அவற்றை எதிரிகளாக தீர்மானிப்பது தான் நேட்டோவின் இலக்கா? நான் அவ்வாறு கருதவில்லை.” “ஐரோப்பாவில் அமைதி, INF மத்தியதூர அணுவாயுத உடன்படிக்கைக்கு பிந்தைய நிலைமை, ரஷ்யா உடனான உறவு, துருக்கி பிரச்சினை, யார் எதிரி" ஆகியவற்றைக் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பிரச்சினைகளாக அவர் சுட்டிக் காட்டினார்.

இதுபோன்ற கருத்துக்கள் 2017 அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயத்துடன் முரண்படுகின்றன, சிரியப் போரில் அல் கொய்தா தொடர்புபட்ட பினாமி ஆயுதக் குழுக்களை நேட்டோ தோற்கடித்த பின்னர், அந்த மூலோபாயம் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற அரசியல் மோசடியை கைவிட்டிருந்தது. அதற்கு பதிலாக, அந்த 2017 மூலோபாய ஆவணம் அமெரிக்காவை உலக மேலாதிக்க சக்தியாக பலப்படுத்த "வல்லரசு போட்டியைத்" தொடுப்பதை அமெரிக்க வெளியுறவு கொள்கையின் மத்திய பணியாக அடையாளப்படுத்தி இருந்தது; ரஷ்யா மற்றும் சீனாவை எதிரிகளாக பெயரிட்டது; மற்றும் அணுஆயுதம் அல்லாத அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக அமெரிக்க அணு ஆயுதங்களை முதலில் பிரயோகிப்பதை அறிவுறுத்தியது.

அமெரிக்காவை உலக மேலாதிக்க சக்தியாக வலியுறுத்துவது, எவ்வாறிருப்பினும், அடிப்படையில் ரஷ்யா அல்லது சீனாவுடன் சேர்ந்து ஐரோப்பாவில் உள்ள வாஷிங்டனின் ஏகாதிபத்திய போட்டியாளர்களையும் இலக்கில் வைத்துள்ளது.

நேட்டோ "மூளைச்சாவு" அடைந்து விட்டது குறித்த மக்ரோனின் புகார்கள், இப்போதைக்கு, ஒட்டுமொத்த கூட்டணி முழுவதிலும் இருந்து விமர்சனங்களை ஈர்த்துள்ளன. ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் கருத்து வேறுபாடுகளைத் தணிக்கும் முயற்சியில், நம்பத்தகாத தொனியில், அந்த உச்சி மாநாடு குறித்து அவர் "மிகவும் நம்பிக்கையுடன்" இருப்பதாக கூறினார். “எங்களிடையே வெவ்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இவற்றை நாங்கள் எங்களுக்குள் விவாதித்து கொள்ள வேண்டும், நேட்டோவின் எதிர்காலம் மற்றும் எங்களின் பொதுவான மூலோபாய நலன்களை நாங்கள் விவாதிக்க வேண்டியுள்ளது,” என்றார்.

ஆனால் பெரிதும் பரவலாக ஐரோப்பா எங்கிலும், அந்த கூட்டணியை "மூளைச்சாவு" அடைந்து விட்டதாக அழைத்ததை நியாயப்படுத்துவதற்காக மக்ரோன் அவரின் எக்னொமிஸ்ட் பேட்டியில் எழுப்பிய பிரச்சினைகளுக்கு எதிராக பல மனக்குறைகள் நிலவுகின்றன. ஜேர்மனி பெரியளவில் மீள்இராணுவமயப்படல், மீள்ஆயுதமயப்படல் மற்றும் ஒரு சுதந்திர ஐரோப்பிய கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது, இது ஐரோப்பிய ஆயுத சந்தைகளில் இருந்து அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களை வெளியேற்றுவதற்காக இராஜாங்கரீதியான ஐரோப்பிய பின்புல முயற்சிகள் மீது கடுமையான அமெரிக்க விமர்சனங்களைத் தூண்டி வருகிறது. சீனாவின் ஒரே இணைப்பு ஒரே பாதை உள்கட்டமைப்பு திட்டங்கள் உடனான உறவுகளை முறித்துக் கொள்வதற்கான அமெரிக்காவின் கோரிக்கைகளைத் துருக்கி புறக்கணித்துள்ளது.

பெப்ரவரி 2014 இல் அமெரிக்க ஆதரவிலான பாசிசவாத தலைமையிலான கியேவ் ஆட்சிக் கவிழ்ப்பு சதியால் தூண்டிவிடப்பட்ட உக்ரேன் சம்பந்தமாக நிலவும் முரண்பாடுகளுக்கு ஓர் அமைதியான உடன்படிக்கையை ஏற்பாடு செய்யும் முயற்சியில், டிசம்பர் 9 இல் பாரீசில், பிரெஞ்சு, ஜேர்மன், ரஷ்ய மற்றும் உக்ரேனிய தலைவர்களுக்கு இடையே மக்ரோன் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். முக்கியமாக, இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து வாஷிங்டன் விலக்கப்பட்டுள்ளது. இத்தகைய முரண்பாடுகள் தான் இன்று மக்ரோனுக்கு எதிராக ட்ரம்பின் வெடிப்புக்குக் கீழமைந்துள்ளது.