ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Tens of thousands defy Indian government threats and demonstrate against Hindu-supremacist laws

பத்தாயிரக்கணக்கானவர்கள் இந்திய அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை மீறி இந்து மேலாதிக்க சட்டங்களுக்கு எதிராக போராடுகின்றனர்

By Deepal Jayasekera
20 December 2019

இந்தியாவின் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கம் (BJP) அதன் வகுப்புவாத குடியுரிமை திருத்த சட்டத்தை (Citizenship Amendment Act - CAA) எதிர்க்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான அரசு அடக்குமுறையை அதிகரித்தளவில் முடுக்கிவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் தேசிய பாராளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றிய இந்த பிற்போக்குத்தனமான சட்டம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம் அல்லாத புலம்பெயர்ந்தோருக்கு இந்திய குடியுரிமையை வழங்குகிறது, ஆனால் அதேவேளை தெற்காசியாவின் எந்தவொரு நாட்டையும் சேர்ந்த முஸ்லீம்களுக்கு அந்த உரிமையை வழங்க மறுக்கிறது. மேலும், இலங்கை தமிழர்களும் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியாக்களும் உட்பட, இப்பிராந்தியத்தின் பிற நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களுக்கும் இந்த உரிமை வழங்கப்படாது. 

அதே நேரத்தில், வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens - NRC) என்பதும் நாட்டின் பிற மாநிலங்களுக்கும் அரசாங்கத்தால் நீட்டிக்கப்படவுள்ளது. NRC இன் கீழ், பொதுமக்கள் தாங்கள் இந்திய குடிமக்கள் தான் என்பதை “நிரூபிக்க” அதிகாரிகளிடம் தேவைப்படும் ஆவணச் சான்றுகளை வழங்க வேண்டும்.

இந்த CAA மற்றும் NRC சட்டங்கள், இந்தியாவின் 200 மில்லியன் (20 கோடி) முஸ்லீம் குடியிருப்பாளர்களை “இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள்” என்று அறிவிப்பதற்கும், மேலும் நாடுகடத்துவதற்கான வாய்ப்பிற்கும் அச்சுறுத்துகின்றன.

மோடி அரசாங்கம், நாடு முழுவதிலுமாக இன மற்றும் மத ரீதியான குழுக்களின் பல்லாயிரக்கணக்கானவர்கள் உட்பட, பெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பது குறித்து அதிகரித்தளவில் பொலிஸ் மிருகத்தனம் மற்றும் அரசு அடக்குமுறை கொண்டு பதிலிறுத்து வருகிறது. அத்தகைய அச்சுறுத்தல்களையும் மீறி, மேற்கு வங்க தலைநகரமான கொல்கத்தாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமை கூட மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களும் அணிவகுப்புக்களும் நடத்தப்பட்டன.

நேற்று, உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதிலும் மேலும் கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மற்றும் மங்களூர் ஆகிய நகரங்களிலும் அம்மாநில பிஜேபி அரசாங்கங்கள் இந்திய குற்றவியல் தடைச் சட்டம் 144 ஐ விதித்திருந்தன. நான்கு பேருக்கு அதிகமானோர் கூடுவதை தடை செய்யும் இந்த ஒடுக்குமுறை பிரிட்டிஷ் காலனித்துவ சட்டத்தை விதிப்பதானது, CAA மற்றும் NRC க்கு எதிரான அனைத்து எதிர்ப்புக்களையும் குற்றப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே உள்ளது.

புதன்கிழமை, நகரின் சீலாம்பூர் மற்றும் ஜாஃப்ராபாத் பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களை அச்சுறுத்துவதற்கும் நசுக்குவதற்குமான ஒரு முயற்சியாக ஆயுதமேந்திய தில்லி பொலிசாரும் துணை இராணுவப் படையினரும் அங்கு ஒரு “கொடி அணிவகுப்பை” அல்லது படை ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அப்போது எட்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். மேலும், செங்கோட்டை (Red Fort) மற்றும் நகரின் வடகிழக்குப் பகுதிகளில் குற்றவியல் தடைச் சட்டம் 144 உம் விதிக்கப்பட்டிருந்தது.

நேற்று, இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (CPM) மற்றும் அதன் இடது முன்னணி கூட்டணிக் கட்சிகளும் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு முன்னரே செங்கோட்டைக்கு அருகே பல ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் தடுத்து வைத்தனர். அந்த திட்டமிடப்பட்ட அணிவகுப்புக்கு அனுமதியளிக்க பொலிசார் ஏற்கனவே மறுத்துவிட்டனர்.

பெங்களூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கும் பொலிசார் தடை விதித்திருந்தனர். டவுண் ஹால் பகுதியில், பிரபல வரலாற்றாசிரியர் இராமசந்திர குஹா, பிஜேபி இன் இந்து மேலாதிக்க சட்டங்களையும் அரசு அடக்குமுறையையும் அவர் ஏன் எதிர்க்கிறார் என்பது பற்றி செய்தி ஊடகங்களுக்கு விளக்கமளிக்க முயன்றபோது, பொலிசாரால் அவர் அங்கிருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டார். 

“மத்திய அரசின் அறிவுறுத்தல்களின் கீழ் தான் பொலிசார் செயல்படுகின்றனர். ஒரு பாரபட்சமான சட்டத்திற்கு எதிராக எவ்வித வன்முறையுமின்றி கட்டுப்பாடான முறையில் தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்… இங்கு ஏதேனும் வன்முறை நிகழ்வதை நீங்கள் பார்த்தீர்களா?” என்று குஹா தெரிவித்துக் கொண்டிருக்கையில், அவரும் மேலும் பலரும் கட்டாயப்படுத்தப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். 

கர்நாடகாவிலும், மங்களூரில் உள்ள ஐந்து காவல்துறை பகுதிகளில் அரசாங்க அதிகாரிகள் ஊடரங்கை விதித்திருந்தனர், மேலும் நகரில் இணைய சேவையை இடைநிறுத்தம் செய்திருந்தனர். வியாழனன்று, காவல் நிலையத்திற்கு தீ வைக்க முயன்றதாக குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந் நகரில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும், உத்திரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் நிகழ்ந்த வன்முறை மிக்க மோதல்களின் போது மற்றொரு நபரும் கொல்லப்பட்டார். மேலும், 110 க்கும் அதிகமானவர்களை பொலிசார் தடுத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

உத்திரப்பிரதேசத்தின் பிரஜ் பிராந்தியத்திலும் பெரும் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியதுடன், 38 பேரை கைது செய்தனர், அவர்களில் பெரும்பாலானோர் தனிப்பட்ட ஒப்பந்தத்தின் பேரில் பின்னர் விடுவிக்கப்பட்டனர். உத்திரப்பிரதேசத்தில் போராட்டத்தை ஒழுங்கமைத்திருந்த ஆக்ராவைத் தளமாகக் கொண்ட சர்வதலீ முஸ்லீம் நடவடிக்கைக் குழுவின் (Agra-based Sarvdaleey Muslim Action Committee) தலைவரும் செயலாளரும் காவலில் வைக்கப்பட்டனர். மேலும், ஆக்ராவில் பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகத்திற்குள் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றபோது ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தியா முழுவதிலுமுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் போராட்டங்களில் பரவலாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்கள், தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய (JMI) பல்கலைக்கழகத்திலும் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திலும் (AMU) ஞாயிற்றுக்கிழமை நடந்த கொடூரமான பொலிஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளன.

இரண்டு பல்கலைக்கழகங்களுக்குள்ளேயும் பொலிசார் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கியதுடன் அவர்களை கைதுசெய்தனர், அதில் சிலர் படுகாயமடைந்தனர். JMI மற்றும் AMU பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மீதான வன்முறை மிக்கத் தாக்குதல்களைக் கண்டித்து இந்தியா முழுவதிலுமுள்ள பல பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் விரைவாக வெடித்தன. 

ஜாமியா ஆசிரியர்கள் சங்க (Jamis Teachers’ Association - JTA) உறுப்பினர்கள், JMI மாணவர்களுக்கு ஆதரவளித்ததற்கும், மற்றும் CAA மற்றும் NRC ஐ திட்டவட்டமாக நிராகரித்ததற்கும் நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதன்கிழமை அன்று ஒரு அணிவகுப்பை நடத்தினர்.

“நாங்கள் மற்றொரு பிரிவினையை விரும்பவில்லை,” என்று JTA அறிவித்தது. இந்த அமைப்பு “பொலிஸ் மிருகத்தனத்தை” விசாரிக்க ஒரு குழுவை நியமித்துள்ளது. அது, JMI மாணவர்களுக்கு எதிரான அனைத்து பொலிஸ் குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெறவும், மேலும் பொலிஸ் தாக்குதலில் சேதமடைந்த அனைத்து சொத்துக்களுக்கும் போதுமான இழப்பீடு வழங்கவும் கோரியுள்ளது. 

AMU வளாகத்திற்குள் உள்ள விடுதிகளுக்குள் அதிகாரிகள் நுழையவில்லை என்று உத்திரப்பிரதேச மூத்த பொலிசார் கூறினார், என்றாலும் CCTV காட்சிகள் பொலிசார் விடுதிகளை சோதனையிடுவதையும், மாணவர்களைத் தாக்குவதையும், மேலும் சொத்துக்களைச் சேதப்படுத்துவதையும் தெளிவாகக் காட்டுகின்றன.

பொலிசாரும் மற்றும் விரைவு அதிரடிப் படை (Rapid Action Force - RAF) அதிகாரிகளும் விடுதிகள் மற்றும் மசூதிகளுக்குள் நுழைகையில், கண்ணீர்ப்புகை, இரப்பர் தோட்டாக்கள் மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகள் ஆகியவற்றால் மாணவர்களை தாக்கியதுடன், அவர்களது வாகனங்களையும் சூறையாடியதாக ஒரு உண்மையைக் கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. அதில் சுமார் 60 மாணவர்கள் காயமடைந்தனர், மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். அத்துடன், பல மாணவர்களும் காணவில்லை என்ற நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. 

இந்தியாவின் பாரபட்சமான CAA மற்றும் NRC இன் நடவடிக்கைகள், தொழிலாள வர்க்கத்தை வகுப்புவாத வழிகளில் பலவீனப்படுத்தி பிளவுபடுத்துவதற்கு நோக்கம் கொண்டதான பிஜேபி இன் பிற்போக்குத்தன திட்டநிரலின் பகுதிகளாக உள்ளன. சிக்கனக் கொள்கைகள் மற்றும் முதலீட்டாளர் சார்பு “சீர்திருத்தங்கள்” குறித்து இந்திய தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருவதைக் கண்டு அஞ்சி, பிஜேபி, தீவிர வலதுசாரி இந்து சக்திகளை அணிதிரட்டவும் அவற்றை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அதிர்ச்சி துருப்புக்களாக பயன்படுத்தவும் முயற்சித்து வருகிறது.

அதே நேரத்தில், காங்கிரஸூம் இந்தியா ஸ்ராலினிசக் கட்சிகளும், CAA சட்டங்களுக்கு எதிரான பரந்த எதிர்ப்பை அரசாங்கத்திற்கும் இந்திய ஆளும் உயரடுக்கிற்கும் பாதிப்பில்லாத விண்ணப்பங்களாக திசைதிருப்ப முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

பிஜேபி உடனான போட்டியில் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் கட்சி, இப்போது இந்து மேலாதிக்கவாதிகளுக்கு எதிரான “மதச்சார்பற்ற” அரணாக திகழ்வதாக தன்னைக் காட்டிக் கொண்டு அதன் எதிர்கால தேர்தல் ஆதாயங்களை அதிகரிக்க முயற்ச்சிக்கிறது. 

இருப்பினும், CAA மற்றும் NRC க்கு எதிரான காங்கிரஸின் எதிர்ப்பு என்பது ஒரு மோசடியாகவே உள்ளது. ஏனென்றால், அசாமில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களை (இருபது இலட்சம் பேரை) “நாடற்றவர்களாக” ஆக்கியதான NRC, ஆகஸ்ட் 1985 இல் பிரதமர் ராஜீவ் காந்தியின் அப்போதைய காங்கிரஸ் கட்சி அரசாங்கம் அசாம் இயக்கத்துடன் கையெழுத்திட்ட அசாம் உடன்படிக்கையையே பின்பற்றுகிறது. 

அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவை ஒரு முஸ்லீம் பாகிஸ்தானாகவும் இந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவாகவும் பிரிப்பதற்கு காங்கிரஸ் ஒப்புக்கொண்ட வருடமான 1947 முதல், மேற்கு மாநிலமான மஹாராஷ்டிராவில் பாசிச சிவசேனா கட்சியுடன் சமீபத்தில் ஒரு அரசாங்கத்தை ஸ்தாபித்தது வரையிலுமாக இந்து வகுப்புவாதிகளுடன் ஒத்துழைத்து வருகின்ற ஒரு நீண்ட பதிவை காங்கிரஸ் கொண்டுள்ளது.

CAA மற்றும் NRC க்கு எதிரான பரந்த ஆர்ப்பாட்டங்களை திசைதிருப்புவதில் ஸ்ராலினிசக் கட்சிகளான சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் அவற்றின் இடது முன்னிணி கூட்டணியும் மிகுந்த துரோக மிக்க அரசியல் பங்காற்றி வருகின்றன.

பிஜேபி க்கு எதிராக ஒரு “மதச்சார்பற்ற” அரணாக தங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக காங்கிரஸூக்கும் வேறுபட்ட பிற்போக்கு சாதி சார்ந்த பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளுக்கும் அடிபணியச் செய்வதற்கான முயற்சிகளை முடுக்கிவிட, மோடியின் இந்து மேலாதிக்க நடவடிக்கைகளை ஸ்ராலினிஸ்டுகள் பற்றிக் கொண்டுள்ளன. ஸ்ராலினிஸ்டுகள் தற்போது, தில்லி, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸூடன் கூட்டு சேர்ந்து CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிற கட்சிகளும் மற்றும் அமைப்புக்களும் கூட, பிற்போக்குத்தனமான புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு உணர்வுகளை ஊக்குவிப்பதன் மூலமாக CAA இற்கு எதிரான எதிர்ப்பை திசைதிருப்ப முயற்சிக்கின்றன. உதாரணமாக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அண்டை நாடுகளிலிலிருந்து மக்கள் இங்கு குடியேறுவது இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புக்களைத் தடுக்கும் என்று கூறி, வலதிலிருந்து CAA ஐ கண்டித்துள்ளார். அதேபோல, அசாமில் CAA எதிர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்து வரும் அனைத்து அசாம் மாணவர்கள் சங்கமும், இந்திய துணைக் கண்டத்திலிருந்து குடியேறிய அனைத்து புலம்பெயர்ந்தோருக்கும் குடியுரிமை வழங்கப்படுவதை எதிர்க்கிறது.

ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:

இந்தியாவில் வகுப்புவாத பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டம் என்பது சோசலிசத்திற்கான போராட்டமாகும் [PDF]

பாரபட்சமான குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இந்தியாவின் உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டுகிறது

இந்து மேலாதிக்க குடியுரிமை சட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளிக்கிறது