ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Growing support for 48,000 Telangana workers fired for striking

இந்தியா: வேலைநிறுத்தம் செய்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட 48,000 தெலுங்கானா தொழிலாளர்களுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது

By Arun Kumar and Kranti Kumara
2 November 2019

அக்டோபர் 6 அன்று, சில மணித்தியாலங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்ட ஒரு வேலைநிறுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற தனது உத்தரவை மீறியது தொடர்பாக, தெலுங்கானா மாநில முதலமைச்சரான கே.சந்திரசேகர bராவ் எதேச்சதிகாரமாக பணிநீக்கம் செய்த 48,000 தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்துக் கழக (Telangana State Road Transport Corporation-TSRTC) ஊழியர்களுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.

ஆனால், தெலுங்கானாவின் வலதுசாரி தெலுங்கானா இராஷ்ட்ர சமிதி (Telangana Rashtra Samithi-TRS) அரசாங்கத்திற்கு எதிராகவும் மற்றும் அதன் பின் துணைநிற்கும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கு எதிராகவும் தொழில்துறை மற்றும் அரசியல் ரீதியாக இந்த ஆதரவு அணிதிரட்டப்படுவதை தொழிற்சங்கங்களும் ஸ்ராலினிசக் கட்சிகளும் தடுக்கின்ற நிலையில், TSRTC தொழிலாளர்களின் துணிச்சல்மிக்க இந்த போராட்டம் கடும் ஆபத்தில் உள்ளது.

உண்மையில், TSRTC தொழிலாளர்கள் மீது தனது தாக்குதலை அதிகரிக்கவே சந்திரசேகர ராவ் தயார் செய்து கொண்டிருக்கிறார். இன்றைய சந்திப்பின் போது, அரசுக்கு சொந்தமான பெரும்பாலான பேருந்து சேவைகளை தனியார்மயமாக்குவதற்கான திட்டங்களை அவரது அமைச்சரவை இறுதி செய்யும் என்பதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அந்த தொழிலாளர்களின் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியத்தை சட்டவிரோதமாக நிறுத்திவைப்பது உட்பட, அரசாங்கத்தின் தாக்குதலைத் தொடுக்க ஏற்கனவே பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களை நிர்ணயித்து வைத்துள்ளது. வேலைநிறுத்தம் தொடங்கியதிலிருந்து, தற்போது 28வது நாளான இன்றுவரை பதினொரு தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அவர்களது வேலை நிலைமைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த கவலையால் தூண்டப்பட்டு, அதில் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்பதுடன், பிற ஏழு பேர் மாரடைப்பால் இறந்து போயுள்ளனர்.

ஆரம்பத்தில் இருந்தே, சந்திரசேகர ராவ், TSRTC தொழிற்சங்கங்களால் ஸ்தாபிக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைக் குழுவுடன் (Joint Action Committee-JAC) எந்தவித முக்கிய பேச்சுவார்த்தை நடத்த பிடிவாதமாக மறுத்துவிட்டார். இந்த வேலைநிறுத்தம் பெருமளவில் சமூக அமைதியின்மையைத் தூண்டக்கூடும் என்ற வெளிப்படையான அச்சத்தினால் மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், நிர்வாகமும் கூட்டு நடவடிக்கைக் குழு பிரதிநிதிகளும் அக்டோபர் 26 அன்று சந்தித்தனர். என்றாலும், TSRTC பேரப் பேச்சாளர்கள் நான்கு JAC அதிகாரிகளை கண்டனம் செய்யும் மற்றும் அவமதிக்கும் வகையில் வெளியேறினர். காவல்துறையினரின் ஒரு குழுவினர் பேச்சுவார்த்தைக்கு வந்த JAC அலுவலர்களை வரவேற்றனர், ஆனால் அங்கு அவர்கள் பிரவேசிக்கையில் அவர்களது கைபேசிகளை ஒப்படைத்துவிட்டு செல்லும் படி நிர்வாகம் வலியுறுத்தினர்.

தொழிலாளர்கள், குறைகளின் ஒரு நீண்ட பட்டியலை வைத்திருந்தனர். இதில், கடுமையான வேலை நிலைமைகள், அளவுக்கு மீறிய வேலைப் பளு மற்றும் குறைந்த சம்பளம் ஆகியவை அடங்கும். என்றாலும் அவர்களது முக்கிய கோரிக்கை என்னவென்றால், அரசு ஊழியர்கள் பெறும் அதிக வேலை பாதுகாப்பையும் மற்றும் பிற நலன்களையும் அவர்களும் பெற வேண்டும் என்பதற்காக, அரசுக்கு சொந்தமான தன்னாட்சி நிறுவனமான TSRTC அரசாங்கத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

ஆனால், சந்திரசேகர ராவ், “இந்த பூமி இருக்கும் வரை TSRTC அவ்வாறு இணைக்கப்பட மாட்டாது,” என்று சபதம் செய்ததுடன், “அப்படியே நாங்கள் அதை இணைத்தால், மேலும் 57 போக்குவரத்துக் கழகங்களும் இதே கோரிக்கையை முன்வைத்து போராடுவதற்கு முற்படுவர்” என்றும் சேர்த்துக் கூறினார்.

தெலுங்கானா முதலமைச்சர் மேலும் ஆத்திரமூட்டும் விதமாக, சர்வாதிகார விதிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே,  வேலைகளுக்கு மீண்டும் திரும்பும் TSRTC தொழிலாளர்களுக்கு கதவு திறந்திருக்கும் என்று கூறினார். அவர்களுக்கு “மறு வேலைவாய்ப்பு” வழங்கப்படுவதற்கான ஒரு நிபந்தனையாக, அவர்கள் தங்கள் ஜனநாயக, சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதித்துவத்திற்கான உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதுடன், “அவர்கள் எந்தவொரு தொழிலாளர் சங்கத்திலும் சேர மாட்டார்கள்” என்ற வாக்குறுதியையும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.

சந்திரசேகர ராவுக்கும் மற்றும் தெலுங்கானா பிராந்திய-பேரினவாத TRS க்கும் TSRTC தொழிலாளர்கள் மீதான அவர்களது தாக்குதல்களுக்கு இரண்டு காரணிகள் ஊக்கமளிக்கின்றன.

முதலாவதாக, TSRTC தொழிற்சங்கங்களும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM ஆகிய ஸ்ராலினிசக் கட்சிகளும் மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களான AITUC மற்றும் CITU ஆகியவை TSRTC தொழிலாளர்களை தனிமைப்படுத்துகின்றன. தெலுங்கானாவில் தற்போது நடந்து வரும் கூர்மையான வர்க்கப் போராட்டத்தை இந்தியா முழுவதிலுமுள்ள தொழிலாள வர்க்கத்தின் முன் கொண்டுசெல்வது என்பது ஒரு புறம் இருக்க, பாதிக்கப்பட்ட பேருந்து தொழிலாளர்களை பாதுகாக்க முன்வருமாறு கோரி மாநிலத்தின் பிற தொழிலாளர்களைக் கூட அணிதிரட்ட அவர்கள் தவறிவிட்டனர்.

அதே நேரத்தில், பெருவணிக காங்கிரஸ் கட்சியும் மோடியின் இந்து மேலாதிக்க பிஜேபி இன் மாநில பிரிவும், —முன்னர் சந்திரசேகர ராவ் மற்றும் தனி தெலுங்கானா மாநிலத்திற்கான கோரிக்கையை ஊக்குவித்தது போல— ஆதரவளிப்பதாக வழங்கும் போலியான கூற்றுக்களில் நம்பிக்கை வைக்கும் படி தொழிலாளர்களை அவர்கள் ஊக்குவிப்பதுடன், உயர் நீதிமன்றம் தொழிலாளர்களின் நண்பன் போன்றது என்பதாகவும் ஊக்குவிக்கின்றனர்.

2015 இல், TSRTC தொழிலாளர்கள் செய்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று அறிவித்து அதனை TRS அரசாங்கம் முறியடிக்க உயர் நீதிமன்றம் உதவியது. இன்றும், அதே போல TSRTC தொழிலாளர்களின் போராட்டத்தைத் தகர்த்தெறியவும், அனைத்திற்கும் மேலாக, ஒரு பரந்த தொழிலாள வர்க்க எழுச்சிக்கான வினையூக்கியாக இது மாறுவதை தடுக்கவும் நீதிமன்றம் முனைந்து வருகிறது. ஒரு காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தத்தை திணிப்பதற்கான தொழிற்சங்கங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை திறந்து வைத்திருக்கும்படி தெரிவித்ததான இந்த நீதிமன்றத் தீர்ப்பு, அனைத்து விதமான பேச்சுவார்த்தைகளையும் தடுத்து நிறுத்த முயலும் சந்திரசேகர ராவ் அரசாங்கத்தை அறிவுறுத்துவதற்கான ஒரு எச்சரிக்கையாக இருந்தது.

சந்திரசேகர ராவை ஊக்குவிக்கும் இரண்டாவது காரணி புது தில்லியில் இருந்து வலுவான அரசியல் ஆதரவு கிடைக்கும் என்ற அவரது நம்பிக்கையே.

ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கையில், மோடி அரசாங்கம் சர்வாதிகார ஆட்சிக்கு திரும்பிக் கொண்டிருப்பதுடன், அதன் இந்து வலது ஆதரவாளர்களை அணிதிரட்டுவதற்கும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் வகுப்புவாதத்தைத் தூண்டி வருகிறது. இது, நாட்டின் ஒரே முஸ்லீம் மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் ஆகஸ்ட் 5 அரசியலமைப்பு சதித்திட்டத்தால் எடுத்துக்காட்டப்பட்டது, அதன் மூலம் அதன் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்து அகற்றப்பட்டு, பாதுகாப்பு தடை விதிக்கப்பட்டது.

“முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களுக்கான,” தீவிரமான உந்துதலின் ஒரு பகுதியாக, மோடியும் அவரது பிஜேபி அரசாங்கமும், “பொருளாதார சீர்திருத்தம்” என்ற போர்வையில், பெரும் இலாபம் ஈட்டக்கூடிய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை (PSEs) இலக்கு வைத்து அவற்றின் பங்குகளை விற்பதன் மூலமாக பெருமளவில் தனியார்மயமாக்கல் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டு ஜனவரியில், மோடி அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பிரிட்டிஷ் தலைநகரம் இலண்டனில் ஏற்றுக் கொள்ளப்பட்டதான பொது-தனியார் கூட்டாண்மை “மாதிரி”யின் வழிகளை ஒத்த வகையில், மாநில அரசுகளுக்கு சொந்தமான சாலைப் போக்குவரத்து வலை அமைப்புகளை தனியார்மயமாக்க மாநில அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

குறிப்பாக வறுமையில் வாடும் பெரும்பான்மையினர் அதை நம்பியிருக்கிறார்கள் என்ற நிலையில், பொது சாலை போக்குவரத்து இந்தியாவில் நீண்ட காலமாக ஒரு மாநில கடமையாக கருதப்படுகின்ற போதிலும், பொது கருவூலத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விரயமாக இது இருக்கிறது என்று கட்கரி கூறினார்.

TSRTC தற்போது ஒரு மாநில நிறுவனமாகும், என்றாலும் நிர்வாகமானது குறைந்த ஊதியத்திற்கு அதிகபட்ச வேலையை கசக்கி பிழியும் இலாப நோக்கம் கொண்ட ஒரு தனியார் நிறுவனமாக அதனை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. TRS அரசாங்கம், அதன் வெளிப்படையான தனியார்மயமாக்கலுக்கு ஒரு சாக்குப்போக்கை வழங்குவதற்காக, வேண்டுமென்றே TSRTC க்கு மாநில நிதி ஒதுக்கீடு வழங்காமல், அதனை மேலும் மேலும் அபாயகர நிலைக்கு தள்ளுகிறது.

அறிக்கைகளின் படி, TSRTC 2019 ஆண்டு KCR தலைமையிலான தெலுங்கானா அரசாங்கத்திலிருந்து மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடாக 1.14 பில்லியன் ரூபாயை (16 மில்லியன் டாலர்) பெற்ற போதிலும், 9.3 பில்லியன் ரூபாய் (133 மில்லியன் டாலர்) நஷ்டத்தை அடைந்தது. இதற்கான ஆண்டு வட்டி தொகை மட்டும் 3.65 பில்லியன் ரூபாய் (52 மில்லியன் டாலர்) ஆகும்.

TRS அரசாங்கம், இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வளர்ந்து வரும் இயக்கத்தை அச்சுறுத்துவதற்கும் நசுக்குவதற்கும் மாநிலத்தின் பல பகுதிகளில் பெருமளவில் பொலிஸை நிறுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 25 அன்று, ஹைதராபாத்தின் ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள், வேலைநிறுத்தம் செய்யும் TSRTC தொழிலாளர்களுக்கு வெகுஜன ஆதரவைத் திரட்டினர், அத்துடன் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை மீறி ஒரு பொதுக் கூட்டத்தையும் நடத்தினர். அக்கூட்டத்தை தடுத்து நிறுத்த, பல்கலைக்கழக நிர்வாகம் அந்த இடத்தில் அனைத்து மின்சார விநியோகத்தையும் தடை செய்யும் அளவிற்குச் சென்றது. ஆயினும் கூட, TSRTC தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பிற ஆதரவாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் அதில் கலந்து கொண்டனர்.