ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වතු කම්කරු අයිතීන් අහෝසිකරන ඊනියා ආදායම් බෙදීමේ ක්‍රමය ක්‍රියාවට දැමීමට වතු සමිති ධනපති ජනාධිපති අපේක්ෂකයන් සමග එකඟ වෙයි

இலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை ஒழிக்கும் வருமான பங்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த உடன்படுகின்றன

By M. Thevarajah
14 November 2019

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், பெருந்தோட்ட நிறுவனங்களால் முன்மொழியப்பட்ட வருமான பங்கீட்டு முறையை பெரும்தோட்டங்களில் முழுமையாக அமுல்படுத்துவதற்கு, பிரதான இரண்டு முதலாளித்துவ கட்சிகளான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷவுடனும் பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் உடன்பாட்டுக்கு வந்துள்ளன.      

ஏற்கனவே தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பைத் தூண்டிவிட்ட இந்த முறை அமுல்படுத்தப்பட்டால், அவர்கள் கடந்த கால போராட்டங்களின் மூலம் வென்ற சமூக நன்மைகளை இழப்துடன், பெருந்தோட்ட கம்பனிகளால் அவர்கள் குத்தகை விவசாயிகளாகவும் மாற்றப்படுவர்.

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி (த.மு.கூ.) தலைவர் மனோ கணேசன் நவம்பர் 2 அன்று தமிழ் நாளிதழ் வீரகேசரியிடம் கூறியதாவது: ‘’தோட்டத் துறையை மறுசீரமைப்பதற்கும், அதன் நிலங்களை தொழிலாளர்களுக்கு வழங்கும் வருவாய் பகிர்வு முறைமையை செயல்படுத்த, புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச உடன்பட்டுள்ளார். இந்த முறைமை செயல்படுத்தப்பட்டால், அவர்களை ஒப்பந்தக்காரர்களாக மாற்றலாம், மேலும் அவர்களுக்கு கால்நடை வளர்பத்ற்கு வசதியாக இருக்கும். இந்த விதிமுறைகளின் கீழ், தொழிலாளி ஒரு கிராமவாசியாக மாறுகிறார், சம்பள முறைமைக்கு பதிலாக தோட்டங்களை மறுசீர் அமைப்பது முக்கியமானது."

பெருந்தோட்ட நிறுவனங்களுடன் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) தலைவர் ஆறுமுகம் தொண்டமான் வீரகேசரிக்கு இதேபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டார்: “ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) வேட்பாளர் கோட்டாபய ராஜபக்க்ஷ, எங்கள் 32 கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளார். சம்பளப் பிரச்சனை கூட்டு ஒப்பத்தத்துடன்  இணைந்து இருப்பதால், 32 கோரிக்கைகளில்  அது சேர்க்கப்படவில்லை.” இருப்பனும் தோட்டத் தொழிலாளர்கள் “சிறு தோட்ட உரிமையாளர்களாக” மாற்றப்பட வேண்டும் என்பது அதில் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இ.தொ.கா. உட்பட தொழிற்சங்கங்கள் மட்டுமல்ல, தோட்டத் துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் 2016 சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் வருமானப் பகிர்வு முறைமையை செயல்படுத்த ஒப்புக்கொண்டன.

நில உரிமையாளரர்கள் தொழிலாளர்களை மேற்பார்வையிடவும், அவர்களின் உற்பத்தியை கம்பனிகளுக்கு எடுத்துச் செல்லவும் அனுமதிக்கும் இந்த முறைமையை அமுல்படுத்த ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர், என்று தொழிற்சங்கத் தலைவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால், கடந்த காலங்களில் வருமானப் பகிர்வு முறைமையின் விளைவுகளை எதிர்த்த தொழிலாளர்களின் போராட்டங்களை  தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுத்தன. மதுரட்ட, களனிவெலி, பொகவந்தலாவ உட்பட சில பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களின் பெரும் எதிர்ப்பையும் மீறி இந்த முறைமையை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.

தொழிலாளர்களின் உழைப்பை வேறொரு அடிமை முறையில் சுரண்டுவதற்கே இந்த புதிய திட்டம் கம்பனிகளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்கள் அதற்கு ஒப்புதல் அளிப்பதானது அவர்கள் பெரும் முதலாளிகளின்  முகவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. தொழிற்சங்கங்கள் ஒரு தொழில்துறை பொலிஸ்காரனாக இயங்கி, அதை செயல்படுத்த உதவுகின்றன.

தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிப்பதாக ராஜபக்க்ஷ வாக்குறுதியளித்துள்ளார், பிரேமதாச அதனை 1,500 ரூபாவாக்குவதாக கூறினார். கடந்த சம்பள போராட்டத்தில்  தங்களது அன்றாட ஊதியத்தை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை தோட்ட கம்பனிகளும் அரசாங்கமும் கடுமையாக நிராகரித்தன.

கிட்டத்தட்ட 200,000 தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் கொடூரமாக காட்டிக் கொடுத்ததுடன், தோட்டத்துறை நஷ்டத்தில் இயங்கும் நிலையில் 1000 ரூபாய் ‘சாத்தியம்மற்றது’ என்பதே அவர்களின் பொதுவான கருத்தாகும்.

வீரகேசரி பத்திரிகைக்கு அளித்த அறிக்கையில் தொண்டமான் இதை மீண்டும் வலியுறுத்தினார். "தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா தருவதாக கோட்டாபய கூறி இருந்தாலும், ​​நான் அப்படிச் சொல்லவில்லை" என்று அவர் கூறினார். ராஜபக்க்ஷவின் உறுதிமொழி ஒரு கண்துடைப்பு மட்டுமே என்பதை இது வெளிக்காட்டுகிறது.

கென்யா, சீனா, இந்தியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் இலங்கையை விட ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கான செலவு குறைவாக இருப்பதாக தோட்டக் கம்பனிகள் கூறுகின்றன. உலக சந்தையுடன் போட்டியிடுவதற்காக உற்பத்தி செலவை குறைப்பதற்கு சம்பளத்தை வெட்டவும், வருமானப் பகிர்வு முறைமையை அமுல்படுத்தவும் பெருந்தோட்டக் கம்பனிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன.

வருமான பங்கீட்டு முறைமையின் கீழ், தொழிலாளி ஒருவரின் குடும்பத்திற்கு 1,000 தேயிலை செடிகள் அல்லது அதற்கு மேற்பட்ட செடிகள் ஒதுக்கப்படுகின்றன. தோட்டக் கம்னி உரங்கள் மற்றும் கிருமி நாசினிகளை வழங்குகிறது. இந்த தேயிலை நிலங்களை தொழிலாளர் குடும்பம் பராமரிக்க வேண்டியதுடன், வயதானவர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட குடும்பத்தின் அனைவரதும் உழைப்பும் பயன்படுத்தப்படும், இறுதியில் தொழிலாளியின் உற்பத்தியை மலிவாக வாங்கும் கம்பனி இலாபம் ஈட்டுகிறது.

மிகவும் கடினமான வேலை நிலைமைகள் காரணமாக, எபோட்ஸ்லி மற்றும் டில்லரி தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் இந்த முறைமையின் கீழ் வழங்கிய நிலங்களை திருப்பிக் ஒப்படைத்துவிட்டனர். "அந்த இடங்களை பராமரிக்கவும், கொழுந்து பறிக்கவும், எங்கள் குடும்பங்கள் எந்தவித ஓய்வும் இல்லாமல் நேர வரம்பற்று வேலை செய்ய வேண்டியிருந்தது. ஆரம்பத்தில், ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 90 ரூபா கொடுத்தார்கள். இப்போது 50 ரூபாய் மட்டுமே கொடுக்கின்றார்கள். இதனால் நாங்கள் நஷ்டத்தில் இருக்கிறோம்” என்று டில்லரி தோட்ட தொழிலாளர்கள் கூறினார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அடுத்து வரும் அரசாங்கம் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், தொழிலாளர் மீதான சுரண்டலை தீவிரப்படுத்த பெருந்தோட்ட கம்பனிகள் இந்த திட்டங்களை செயல்படுத்தும். தொழிற்சங்கங்கள் முதலாளித்துவக் கட்சிகளின் வேட்பாளர்களுக்குப் பின்னால் அணிதிரள்வது, தங்கள் பொருளாதார மற்றும் அரசியல் சலுகைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மட்டுமே. மாறாக தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவோ அல்லது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவோ அல்ல.