ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Why the Sri Lankan Tamil parties appeal to the UNP and SLPP presidential candidates

இலங்கை தமிழ் கட்சிகள் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது ஏன்

By Pani Wijesiriwardena--presidential candidate of the Socialist Equality Party
4 November 2019

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையிலான தமிழ் கட்சிகள், இரு பிரதான முதலாளித்துவக் கட்சிகளான, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) வேட்பாளர் கோட்டபய இராஜபக்ஷ ஆகியோருக்கு 13 கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.

கையொப்பமிட்ட கட்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி, தமிழ் மக்கள் பேரவை ஆகியவை அடங்கும்.

13 கோரிக்கைகள் கூட்டணியானது யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்டன. இது ஒரு "சமஷ்டி அரசியலமைப்புக்கும்", புலம்பெயர் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கும் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் நிதி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் "தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால்" கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோருகிறது. இந்த அதிகாரப் பகிர்வு கொடுக்கல் வாங்கலானது, தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதில் தமிழ் முதலாளித்துவ உயரடுக்கின் சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கொழும்பு ஆளும் வர்க்கத்துக்கு விடுக்கும் வெளிப்படையான அழைப்பாகும்.

இந்த அழைப்பு, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கிட்டத்தட்ட 30 ஆண்டுகால இரத்தக்களரி இனவாத யுத்தத்துடன் தொடர்புபட்ட நியாயமான கோரிக்கைகளாகும்.

போர்க்குற்றங்களை விசாரிக்க ஒரு சர்வதேச பொறிமுறையை நிறுவுதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் மற்றும் வடக்கு கிழக்கின் "பௌத்த மற்றும் சிங்கள காலனித்துவத்தை" நிறுத்துதல் ஆகியவை இந்த கோரிக்கைகளில் அடங்கும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த போரின் இறுதி மாதங்களில் குறைந்தது 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ள நிலையில், இந்த கொடூரமான மோதலில் 100,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மதிப்பிழந்த தமிழ் முதலாளித்துவ கட்சிகள் இந்த இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சி வேட்பாளர்களுக்கு இவ்வாறு அவநம்பிக்கையான வேண்டுகோள்களை விடுப்பது ஏன்?

அது, தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவதில் அவர்கள் உறுதியாக இருப்பதால் அல்ல, மாறாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்க கூடிய கணிசமான வாக்கு வங்கியாக இருப்பதாலேயே ஆகும்.

தமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்களை தேர்தல் பேரம் பேசும் பகடைக்காய்களாய் பயன்படுத்தும் இந்த பிற்போக்கு முயற்சியை நிராகரித்து, உண்மையான சோசலிச முன்னோக்கை நோக்கித் திரும்ப வேண்டும். இதுவே அவர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை வெல்வதற்கான ஒரே வழி ஆகும்.

தமிழ் முதலாளித்துவ கட்சிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் மத்தியில் வளர்ந்து வரும் முழு அரசியல் ஸ்தாபகத்திற்கும் எதிரான விரோதத்தை பிற்போக்கு தேசியவாத வடிகால்களுள் திசை திருப்பிவிட முயல்கின்றன. கொழும்பில் உள்ள அதன் சமதரப்பினரைப் போலவே, தமிழ் உயரடுக்கும் சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டு அரசாங்கம் முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் சம்பந்தமாக தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரிப்பதையிட்டு பீதியடைந்துள்ளது.

தொழிலாளர்களை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் என்ற இன வழிகளில் பிளவுபடுத்தும் இனவாத பிரச்சாரத்தை எதிர்கொண்ட போதிலும், கடந்த ஆண்டு, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் தொழிலாளர்கள், தெற்கில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இந்த போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எழுச்சியின் ஒரு பகுதியாகும்.

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களின் கதி குறித்து பதில் கேட்டும், போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறும் மற்றும் கௌரவமான வாழ்க்கை நிலைமைகளுக்காகவும் தமிழ் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். போரினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாமல் தற்காலிக குடிசைகளில் வாழ்கின்றனர்.

ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது முற்றிலும் வஞ்சத்தனமானதாகும். சஜித் பிரேமதாசவும் கோடாபய இராஜபக்ஷவும் இந்த கோரிக்கைகளை திட்டவட்டமாக நிராகரித்துள்ளதுடன், தங்களுக்கு சொந்தமான "தீர்வுகள்" இருப்பதாக அறிவித்துள்ளனர். 1948 இல் இலங்கை உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றதிலிருந்தே தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பல தசாப்தங்களாக இன பாரபட்சங்களுக்கு மட்டுமன்றி, கிட்டத்தட்ட 30 ஆண்டுகால இனவாத யுத்தத்தை முன்னெடுத்தமைக்கும் இந்தக் கட்சிகள் பொறுப்பாளிகளாகும்.

கடந்த மாதத்தில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்க பல முறை சந்தித்த போதிலும், இந்த பேச்சுவார்த்தைகள் "தீர்மானமில்லாமல்" முடிவடைந்தன. கடந்த வியாழக்கிழமை அஞ்சல் வாக்களிப்பு தொடங்கியபோது, ​​தமிழ் வாக்காளர்கள் தாங்கள் விரும்பிய வேட்பாளரை ஆதரிக்கலாம் என அவர்கள் ஒரு "தற்காலிக முடிவை" அறிவித்தனர். எவ்வாறெனினும், நேற்று, ஆர். சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சி, தமிழர்கள் பிரேமதாசாவுக்கு வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தது. அது அமெரிக்க சார்பு ஆளும் ஐ.தே.க.வை அதிகாரத்தில் வைத்திருப்பதில் அக்கறை காட்டுவதாலேயே இந்த முடிவை எடுத்துள்ளது.

தங்களது தந்திரோபாய வேறுபாடுகளை ஓரத்தில் வைத்துவிட்டு, தமிழ் கட்சிகள், சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படுபவற்றுக்கு —குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் பிராந்திய பங்காளியான இந்தியாவுக்கு— தங்கள் தேசியவாத முயற்சிகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களை ஆதரிப்பதன் மூலம் தமிழ் முதலாளித்துவம் தனது சலுகைகளைப் பெறமுடியும் என எதிர்பார்க்கின்றது.

தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் 2015 ஜனாதிபதித் தேர்தலை மறந்துவிடக் கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளும் அப்போதைய ஜனாதிபதி இராஜபக்ஷவின் போர் குற்றங்கள் மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மீதான வெகுஜன கோபத்தைத் திசைதிருப்ப உதவின. மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என்று அவை கூறின.

ஐ.தே.க. மற்றும் கொழும்பில் உள்ள ஏனைய முதலாளித்துவ கட்சிகளும், ஜே.வி.பி. இன், கல்விமான்கள் மற்றும் போலி-இடது குழுக்களின் உதவியுடன் இதேபோல் செயல்பட்டு சிறிசேனவிற்கு தங்கள் ஆதரவைத் திரட்டின.

இந்த கட்சிகள் அனைத்தும் இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா திட்டமிட்ட நடவடிக்கையையும், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் புவிசார் அரசியல் மற்றும் இராணுவ கட்டமைப்பிற்கு ஏற்ப இலங்கையை மாற்றுவதற்காகன அரசியல் சூழ்ச்சிகளையும் ஆதரித்தன.

கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிசேன-விக்ரமசிங்க நிர்வாகத்தின் உண்மையான பங்காளியாக செயல்பட்டு, அதன் வரவு செலவுத் திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் எந்தவொரு போர்க்குற்ற விசாரணையையும் அடக்குவதற்கான கொழும்பின் முயற்சிகள் உள்ளிட்ட ஏனைய அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க, அரசியல் கைதிகளின் விடுதலை செய்யும் மற்றும் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை திருப்பிப் பெற நடவடிக்கை எடுக்கக் கோரி வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்த போதுதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அச்சமடைந்தது.

எவ்வாறாயினும், சி.வி. விக்னேஸ்வரன் போன்ற அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தமிழ் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மோசடியை கண்டனம் செய்தமை தமிழ் தேசியவாதத்தை தூண்டுவதை நோக்கமாகக் கொண்டதாகும். முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான விக்னேஸ்வரனும் பல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளும், தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கி. பிற்போக்கு எழுக தமிழ் இயக்கத்தை புதுப்பித்தனர்.

தமிழர்களை இனவாத பாதையில் திசைதிருப்பும் 13-கோரிக்கை கூட்டமைப்பின் முயற்சியானது, இலங்கை, "புலி பயங்கரவாதம்" மற்றும் தமிழ் பிரிவினைவாதத்தின் மறு எழுச்சியை எதிர்கொள்கிறது என்று பொய்யாகக் கூறும் ஆளும் உயரடுக்கின் கொழும்பை தளமாகக் கொண்ட கட்சிகளின் மற்றும் சிங்கள இனவெறி குழுக்களின் நடவடிக்கைகளுடன் பொருந்துகிறது.

பெருகிவரும் கடனையும், உலகளாவிய வீழ்ச்சியால் உருவாகும் வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ள இலங்கை ஆளும் உயரடுக்கு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஒருங்கிணைந்த இயக்கம் வெடிக்கும் என்று பீதியடைந்துள்ளதோடு, மேலும் மேலும் பொலிஸ்-அரசு ஆட்சி முறைகளை நோக்கி நகர்கின்றது. சிறிசேன, ஏப்ரல் 21 நடந்த பயங்கரவாத தாக்குதல்களை, கொடூரமன அவசரகால விதிமுறைகளை சுமத்தவும் இராணுவத்தை நிலைநிறுத்தவும் பயன்படுத்தியபோது, ​​தமிழ் அமைப்புகள் உட்பட அனைத்து உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகளும் அதற்கு உடனடியாக தங்கள் முழு ஆதரவையும் வழங்கின.

அதே சாக்குப்போக்கின் கீழ், ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. மற்றும் அவற்றின் ஜனாதிபதி வேட்பாளர்களும் "தேசிய பாதுகாப்பை" பலப்படுத்தவும் மேலும் அடக்குமுறை சட்ட அதிகாரங்களுக்கும் மற்றும் "நவீன" பொலிஸ் மற்றும் இராணுவ ஆயுதங்களை வலுப்படுத்தவும் அழைப்பு விடுக்கின்றனர்.

கொழும்பின் பொலிஸ்-அரசு தயாரிப்புகளைப் பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் பேரவைக்கும் சற்றும் கவலை கிடையாது. குறிப்பிடத்தக்க வகையில், 13 கோரிக்கைகளில் எதுவும் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவத்தை திரும்பப் பெறக் கோரவில்லை. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், "இது படைகளைத் திரும்பப் பெறுவதற்கான நேரம் அல்ல!" என இரு பிராந்தியங்களிலும் அவை வலுவான இராணுவ பிரசன்னத்திற்கு அழைப்பு விடுத்தன.

தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையிலான கட்சிகளின் திவாலான மற்றும் பிற்போக்கு தேசியவாத நிகழ்ச்சி திட்டத்தை நிராகரிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி கேட்டுக்கொள்கிறது. புலிகளின் தோல்வி உட்பட இலங்கை தொழிலாள வர்க்கத்தின் கசப்பான அனுபவங்கள் முக்கியமான அரசியல் படிப்பினைகளைக் கொண்டுள்ளன. தமிழ் கட்சிகள் முதலாளித்துவத்தை பாதுகாக்கின்றன, அதனாலேயே அவற்றால் இலங்கை, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் தமிழ்-விரோத ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டை எதிர்க்க முடியாது. இதனால்தான் இந்த அமைப்புகள் ஏதாவதொரு ஏகாதிபத்திய சக்தியிடம் ஆதரவு கோருகின்றன.

1947-1948 முதல் இந்திய துணைக் கண்டத்தில் ஏகாதிபத்தியம் ஏற்படுத்திய பிரிவினையின் ஒரு பகுதியாக, இலங்கையில் நிறுவப்பட்ட முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறை மற்றும் ஒடுக்குமுறை ஒற்றையாட்சி ஆகியவை, பல தசாப்தங்களாக தமிழர்-விரோத பாகுபாட்டின் மூல காரணங்களாகும். தொழிலாள வர்க்கத்தை பலவீனப்படுத்தவும் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்கவும் இனவாதப் பிளவுபடுத்தல் பயன்படுத்தப்பட்டது. எனவே தமிழர்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் தூக்கியெறியும் போராட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதாகும்.

சோ.ச.க., மற்றும் அதன் முன்னோடியான புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகமும், தமிழர்-விரோத இனவாத பாகுபாடுகளுக்கும் இனவாத யுதத்துக்கும் எதிராக, சோசலிச சர்வதேசியவாதத்திற்காக போராடிய ஒரு களங்கமற்ற வரலாற்றை கொண்டுள்ளது. இலங்கை இராணுவத்தை வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் பாரபட்சங்களையும் ஒழிக்க வேண்டும் என்றும் அது தொடர்ந்து கோரியுள்ளது. இதற்காக முதலாளித்துவத்திற்கும் பொதுவான வர்க்க எதிரிக்கும் எதிராக முழு தொழிலாள வர்க்கத்தையும் ஒன்றிணைக்க வேண்டியது அவசியமாகும்.

அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக, தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் இன வேறுபாடுகளை கடந்து ஒன்றிணையுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தவும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராட வேண்டும். தெற்காசியாவின் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கான மற்றும் உலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த அரசாங்கம் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவத்தை எடுக்கும். இதுவே சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம் ஆகும். தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக அதைக் கட்டியெழுப்ப அதில் சேருமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

பாணி விஜேசிறிவர்தனஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்

4 நவம்பர் 2019