ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

From Chile to Lebanon: Working class offensive sweeps the globe

சிலி முதல் லெபனான் வரை: தொழிலாள வர்க்க தாக்குதல் உலகம் முழுவதும் பரவி வருகிறது

Bill Van Auken
25 October 2019

உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்றுரீதியான மற்றும் அமைப்புரீதியான நெருக்கடியில் வேரூன்றிய, மறுக்க முடியாத விதத்தில் ஒரே மாதிரியான குறைகள் மீது ஆற்றொணா நாடுகளாக தெரியக்கூடிய இரண்டு நாடுகளை முடக்கும் நிலைக்குக் கொண்டு வந்த பாரிய வெகுஜன போராட்டங்களுடன், கடந்த வாரம், உலகளாவிய வர்க்க போராட்டத்தின் வெடிப்பில் ஒரு புதிய கட்டத்தைக் கண்டுள்ளது.

சிலியில், ஜனாதிபதி செபஸ்தியான் பினெராவின் வலதுசாரி அரசாங்கம் வெகுஜன போக்குவரத்து கட்டணங்களில் 4 சதவீத உயர்வை அறிவித்ததும் அது முதலாளித்துவ ஆட்சிக்கே நெருக்கடியை உண்டாக்கி உள்ள கட்டுப்படுத்தவியலா பாரிய போராட்டங்களின் ஓர் அலையைத் தூண்டியது. சிலிய முதலாளித்துவ வர்க்கத்தின் அச்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில், அரசாங்கத்தின் விடையிறுப்பானது, சந்தியாகோ வீதிகளில் 20,000 துருப்புகளையும் நாடெங்கிலும் ஆயிரத்திற்கும் அதிகமான துருப்புகளையும் நிலைநிறுத்தி, அவசரகால நிலை மற்றும் ஊரடங்கு உத்தரவைத் திணிப்பதாக இருந்துள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர், நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர், குறைந்தபட்சம் 5,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்படுதல், கைதிகள் மீதான சித்திரவதை மற்றும் போராட்டங்களில் கைது செய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் ஆகியவை குறித்து செய்திகள் குறிப்பிடுகின்ற நிலையில், அமெரிக்க ஆதரவில் இருந்த பினோசே சர்வாதிகாரத்தின் குற்றகரமான அணுகுமுறைகள் மீட்டுயிர்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அப்பட்டமான ஒடுக்குமுறையானது, போராட்டங்களை இன்னும் விரிவாக்குவதில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. சிலிய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்கள்படி, புதன்கிழமை நாடெங்கிலும் 68 தனித்தனி பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் 424,000 பேர் பங்கெடுத்தனர். சந்தேகத்திற்கிடமின்றி, நிஜமான புள்ளிவிபரங்கள் இதை விட அதிகமாக இருக்கும். இன்னும் நூறாயிரக் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கிய நிலையில், ஒரு பொது வேலைநிறுத்தம் வியாழக்கிழமை அதன் இரண்டாவது நாளிலும் தொடர்ந்தது.


அரசாங்க-எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஞாயிறன்று, அக்டோபர் 20, 2019 இல் லெபனானின் பெய்ரூட்டில் கோஷங்கள் முழங்குகின்றனர். அரசாங்க-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் நான்காம் நாளில் லெபனான் மிகப் பெரிய போராட்டங்களைக் காணுமென எதிர்ப்பார்க்கப்படுகின்ற நிலையில், ஆயிரக் கணக்கானவர்கள் பெய்ரூட் நகர வீதிகளில் ஒன்று கூடுகின்றனர். (அசோசியேடெட் பிரஸ்/ஹசன் அம்மார்)

இதற்கிடையே, லெபனானும் கடந்த வாரம் பாரிய போராட்டங்களால் அதிர்ந்தது, அந்நாட்டின் 6 மில்லியன் மக்களில் கால்வாசி பேர் என்று மதிப்படும் அளவில் மக்களை வீதிகளுக்குக் கொண்டு வந்தது. அந்நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு நாட்டின் தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க செய்வதை நோக்கமாக கொண்ட மற்றொரு அச்சுறுத்தலான சிக்கன நடவடிக்கையை — வாட்ஸ்-அப் சேதிகள் மீது மாதத்திற்கு 6 டாலர் வரியை — திணிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியே உடனடி தூண்டுதலாக இருந்தது. சிலியில் போலவே, போராட்டங்களை உடைப்பதற்கு ஆயுதப்படைகளைப் பயன்படுத்தும் முயற்சிகள் மக்களிடையே கோபத்தை மட்டுமே தூண்டியுள்ளன.

சிலியில் பினெராவும் அவரின் லெபனானிய சமதரப்பான பிரதம மந்திரி சாத் ஹரிரி மற்றும் ஜனாதிபதி மைக்கெல் அவுனும், வருத்தமான அறிக்கைகளுடன் மக்கள் எழுச்சியைச் சாந்தப்படுத்த முயன்று, குறைந்தபட்ச பொருளாதார நிவாரண நடவடிக்கைகளை வழங்கினர். இரண்டு நாடுகளிலுமே, வீதிகளில் இறங்கிய பெருந்திரளான மக்கள், இத்தகைய எரிச்சலூட்டும் பாசாங்குத்தனங்களை மிகவும் குறைவானவை, மிகவும் தாமதமானவை என்று நிராகரித்ததுடன், ஆட்சிகள் பதவி இறங்க வேண்டுமென கோரி வருகின்றனர்.

இரண்டு நாடுகளிலுமே, பாரிய பேராட்டங்களுக்குப் பின்னால் உள்ள உந்துசக்தி இடைவிடாத மற்றும் கொடிய சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பாகும். முதலாளித்துவ முதலீட்டிற்கான அப்பிராந்தியத்தின் "சுதந்திர தொழிலிட" புகலிடமாக நீண்டகாலமாக கருதப்பட்டு வந்துள்ள லெபனானில், மிகவும் செல்வச் செழிப்பான 1 சதவீதத்தினர் மொத்த செல்வ வளத்தில் 58 சதவீதத்தை ஏகபோகமாக்கி கொண்டுள்ளனர், அதேவேளையில் மிகவும் வறிய 50 சதவீதத்தினர் 1 சதவீதத்திற்கும் குறைவானதையே உடமையாக கொண்டுள்ளனர். சமீபத்தில் பினெராவினால் நிதி மூலதனத்திற்கான ஒரு பிராந்திய "சோலையாக" புகழப்பட்ட சிலியிலோ, 2017 உலக வங்கி புள்ளிவிபரங்களின்படி, 1 சதவீத பெரும் பணக்காரர்கள் தேசிய வருவாயில் 33 சதவீதம் அளவுக்குக் குவித்து கொண்டுள்ளனர்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கின் முதன்மை குரலாக ஒலிக்கும் நியூ யோர்க் டைம்ஸ் சிலி, லெபனான் மற்றும் பிற நாடுகளில் பாரிய வெகுஜன போராட்டங்கள் வெடித்துள்ளதைக் குறிப்பெடுத்து, “நிபுணர்கள் ஒரு வடிவத்தை உய்த்துணர்கிறார்கள்: அதாவது ஜனநாயகம் ஏமாற்றத்திற்கான ஓர் ஆதாரமாக மாறியுள்ள நாடுகளில், ஊழல் வெட்கக்கேடாக பார்க்கப்படும் நாடுகளில், ஒரு சிறிய அரசியல் வர்க்கம் பெரியளவில் வாழும் அதேவேளையில் இளம் தலைமுறையோ அதனருகில் நெருங்கவே போராடுகின்ற நாடுகளில், உயரடுக்களுக்கு எதிரான வழக்கமான கூச்சல்கள் வழக்கத்தையும் விட அதிகமாக உள்ளன,” என்று ஒரு முதல்-பக்க கட்டுரையில் கருத்துரைத்தது.

அந்த கட்டுரையின் தலைப்பு எதை "உலகெங்கிலுமான மக்கள் சீற்றம்" என்று விவரிக்கிறதோ அதைக் குறித்த அந்த மீளாய்வில் வினோதமாக என்ன குறிப்பிடப்படவில்லை என்றால் அமெரிக்காவிலேயே என்ன நடந்து வருகிறது என்பதாகும். “நிபுணர்களில்” ஒருவராக, நவீன சர்வதேச ஆய்வுகளுக்கான ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பயிலகத்தின் தலைவர் பதவிலிருந்து சமீபத்தில் விலகிய வாலி நாசர் குறிப்பிட்டதாக அது பின்வருவதை மேற்கோளிட்டது: “தேர்தல்கள் உறுதியாக நடந்து வரும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் பழைய அரசியல் அமைப்புமுறை மீதான ஐயுறவுவாதம், தேர்தல்களில் வெகுஜன, தேசியவாத மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத விளைவுகளை உண்டாக்கி உள்ளது. மற்ற நாடுகளில், மக்களால் குரல் கொடுக்க முடியாத இடங்களில், பாரியளவில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.”

டைம்ஸ் ஆசிரியர்கள் உண்மையிலேயே அமெரிக்காவில் என்ன நடந்து வருகிறதோ அதைக் குறித்து கண்டும் காணாது இருக்கிறார்களா, அல்லது அவர்கள் வெறுமனே தங்களுக்கு தாங்களே தைரியம் கொடுக்க முயற்சிக்கிறார்களா? ஜெனரல் மோட்டார்ஸிற்கு எதிராக 40 நாட்களாக 48,000 வாகனத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இருக்கையில் மற்றும் நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய பள்ளி மாநிலமான சிகாகோவை முடக்கியுள்ள 32,000 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தொழிலாளர்களினது வேலை வெளிநடப்பு இரண்டாவது வாரத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கையில் அவர்கள் இதை பிரசுரிக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்தாண்டு வேலைநிறுத்தத்தில் இறங்கிய தொழிலாளர்களின் எண்ணிக்கை — அதாவது அரை மில்லியனுக்கும் அதிகம் என்பது — மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில் மிக அதிக எண்ணிக்கையாகும்.

மற்ற நாடுகளில் டைம்ஸ் விவரிக்கும் எல்லா நிலைமைகளும் — அதாவது ஆழமான சமூக சமத்துவமின்மை, ஊழல் மற்றும் பெருந்திரளான உழைக்கும் மக்களின் நலன்களுக்கு முற்றிலும் அலட்சியமாக உள்ள ஓர் அரசியல் அமைப்புமுறை ஆகியவை — முதலாளித்துவத்தின் மையமாக விளங்கும் அமெரிக்காவிலும் கூர்மையான வெளிப்பாட்டை காண்கின்றன, அங்கே உயர்மட்ட 1 சதவீதத்தினர் மொத்த செல்வ வளத்தில் சுமார் 40 சதவீதத்தைக் குவித்து வைத்துள்ளனர், ஒரு சமூக வெடிப்பும் திட்டநிரலில் உள்ளது.

வியாழக்கிழமை டைம்ஸ், “பொருளாதார சமத்துவமின்மையின் விலையை சிலி கற்று வருகிறது" என்று தலைப்பிட்ட ஒரு தலையங்கத்தையும் ஏந்தி வந்தது. சிலியின் "போராட்டக்காரர்களின் சீற்றம் அன்றாட வாழ்வின் விரக்தியிலிருந்து பிறக்கிறது,” என்று குறிப்பிடுவதுடன், பின்வருமாறு குறிப்பிட செல்கிறது: “சிலிய மக்கள் அசாதாரண பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் ஒரு சமூகத்தில் வாழ்கிறார்கள் … சந்தியாகோவின் செல்வவளத்தை மறுக்கவியலாது. 'சான்ஹாட்டன்' என்றழைக்கப்படும் நிதியியல் மாவட்டத்தின் நடுவில் நிற்கும், தென் அமெரிக்காவின் மிக உயரமான கட்டிடத்தின் உச்சத்தில் இருந்து பார்த்தால், அண்டைபகுதிகளில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஆடம்பர அடுக்குமாடி கட்டிடங்களும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் பள்ளிகளுமே தென்படும்.”

“ஆனால் சிதைந்த பொது மருத்துவமனைகள், கூட்ட நெரிசலான பள்ளிகள், மாநகரங்களின் வெளியே அமைந்திருக்கும் சேரிப் பகுதிகள் என சந்தியாகோவின் வறுமையும் மலைப்பூட்டுகிறது.

“அத்துடன் சந்தியாகோவிலிருந்து வெகு தொலைவில் உள்ள நகரங்களை சமீபத்திய வளர்ச்சி தொடவே இல்லை."

சிலி என்ற இடத்தில் அமெரிக்கா என்று மாற்றிக் கொள்ளுங்கள், "சான்ஹாட்டன்" என்பதற்கு பதிலாக மன்ஹாட்டன் என்று மாற்றிக் கொள்ளுங்கள், சமூக சமத்துவமின்மையால் மேலாதிக்கம் செலுத்தப்படும் ஒரு நாட்டைக் குறித்த இந்த சித்தரிப்பில் வெகு குறைவானதையே மாற்ற வேண்டியிருக்கும்.

வருவாய் சமத்துவமின்மையை அளவிடுவதற்கான புள்ளிவிபர அளவீட்டுக்கு மிகப் பொதுவாக பயன்படுத்தப்படும் கினி குணகம், (Gini coefficient) அளவீட்டில், 47.7 ஆக இருக்கும் அமெரிக்காவை, 41.5 ஆக இருக்கும் சிலிக்கு வெகுவாக சமமாக, நிறுத்துகிறது.

டைம்ஸ் தலையங்கம் சிலியின் நெருக்கடிக்கு "குடிமக்களுக்கான கடமைப்பாடுகள் மீது [அரசாங்கத்தின்] நிச்சயமற்ற குறுகிய கருத்துருவை" சாட்டுகிறது, இதற்காக அது 1973 இல் இருந்து 1990 வரையில் அந்நாட்டை ஆட்சி செய்த பினோசே சர்வாதிகாரம் "சுதந்திர சந்தை போட்டியை" அடிப்படையாக கொண்ட கொள்கைகளை கட்டளையிட்டதற்காக அதன் மீது பழிசுமத்துகிறது. அது எதை குறிப்பிட மறுக்கிறது என்றால், இத்தகைய கொள்கைகள் சிகாகோ பல்கலைக்கழகத்தின் "சுதந்திர சந்தை" மூலமுதல்வர் மில்டன் ஃபிரெட்மன் பயிற்றுவித்த முதலாளித்துவ பொருளாதாரவாதிகளான "Chicago Boys" என்றழைக்கப்பட்டவர்களால் வரையப்பட்டன.

இதே இன்றியமையா கொள்கைகள் தான் அடுத்தடுத்து வந்த ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் அமெரிக்க அரசாங்கங்களால், ஒன்று போல, அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன, மருத்துவக் கவனிப்பு முதற்கொண்டு உணவு வில்லைகள் மற்றும் ஓய்வூதிய வருவாய் வரையில் மில்லியன் கணக்கானவர்களிடம் இருந்து இன்றியமையா சமூக சேவைகளைப் பறிக்கப்பட்டு, அதேவேளையில் அடிமட்டத்தில் வாழ்ந்து வரும் 40 மில்லியன் மக்களை, மிகவும் அபத்தமாக, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கான உத்தியோகபூர்வ வறுமை விகிதத்திற்கும் குறைவாக விட்டு வைத்துள்ளன.

சிலி மற்றும் லெபனான் போராட்டங்களின் ஆச்சரியப்படுத்தும் அம்சம் என்னவென்றால், சமீபத்திய சிக்கன நடவடிக்கைகள் வெறுமனே முதுகெலும்பை உடைக்கும் தாங்கொணா நிலைமை என்பதே இரண்டு நாடுகளிலும் ஆர்ப்பாட்டக்காரர்களின் அறிக்கைகளாக உள்ளன, அத்துடன் கடந்த 30 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வந்துள்ள ஒரு சமநிலையற்ற சமூக ஒழுங்குக்கு எதிராக அவர்கள் போராடி வருகிறார்கள். சிலியில், இந்த மூன்று தசாப்தங்கள் இராணுவ சர்வாதிகாரத்தின் முடிவுடன் தொடங்கியது, லெபனானில், உள்நாட்டு போரின் முடிவுடன் தொடங்கின.

இதுவும் உலகளாவிய மாற்றத்தின் ஒரு வெளிப்பாடாகும். கடந்த 30 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள சமூக உறவுகள், சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டதுடன் தொடங்கியது. அவை வர்க்கப் போராட்டத்தை நசுக்கியதன் அடிப்படையிலும், சமூக சமத்துவமின்மை மற்றும் நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் தடையற்ற வளர்ச்சி மற்றும் உலகெங்கிலும் பெருந்திரளான உழைக்கும் மக்களிடம் இருந்து ஒரு சிறிய செல்வந்த உயரடுக்குக்கு செல்வந்தப் பரந்தளவில் கைமாற்றுவதன் அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தன. இன்றோ, இந்த சமூக ஒழுங்கு சர்வதேச தொழிலாள வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியினது சுமையின் கீழ் விரைவாக உடைந்து வருகிறது.

தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தைக் கைக்கழுவி விட்ட போலி-இடது அமைப்புகள் மற்றும் "இடது" என்றழைக்கப்படும் கல்வியாளர்களின் முழுமையான அரசியல் திவால்நிலைமையைப் புறநிலை சம்பவங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன. தேசியவாதம் மற்றும் அடையாள அரசியலை அடிப்படையாக கொண்ட அவர்களின் முன்னோக்கில் எதுவுமே எழுச்சி அடைந்து வரும் உலகளாவிய வர்க்க போராட்ட வெடிப்பை முன்கணிக்கவில்லை.

ஆனால் இந்த சம்பவங்கள், உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இரண்டினாலும் அவற்றின் தத்துவார்த்த பகுப்பாய்வு மற்றும் நடைமுறையில் குறிப்பிடத்தக்க அளவில் முன்கணிக்கப்பட்டன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) "உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்" என்ற அதன் 1988 முன்னோக்குகள் ஆவணத்தில், "நாடுகடந்த கூட்டு நிறுவனங்களின் பாரியளவிலான அபிவிருத்தியும், அதன் விளைவாக உண்டாகும் முதலாளித்துவ உற்பத்தியின் உலகளாவிய ஒருங்கிணைப்பும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் நிலைமைகளில் முன்னொருபோதும் இல்லாத ஒத்திசைவை உருவாக்கி உள்ளது" என்ற அடிப்படையில், வர்க்க போராட்டம் ஏன் தவிர்க்கவியலாத வகையில் ஓர் உலகளாவிய தன்மை ஏற்கும் என்பதை விவரித்தது.

அந்த ஆவணம் குறிப்பிட்டது: "வர்க்க போராட்டம் வடிவத்தில் தேசியமயப்பட்டது என்றாலும் சாரத்தில் அது ஒரு சர்வதேச போராட்டமாகும் என்பது மார்க்சிசத்தின் மூலக்கூற்றாக நீண்டகாலமாக இருந்துள்ளது. ஆனால் முதலாளித்துவ அபிவிருத்தியின் புதிய அம்சங்களைக் கொண்டு பார்க்கையில், வர்க்க போராட்டத்தின் வடிவமே கூட ஒரு சர்வதேச தன்மையை ஏற்கும். தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஆரம்ப போராட்டங்களும் கூட அதன் நடவடிக்கைகளை சர்வதேச அளவில் ஒருங்கிணைப்பதற்கான அவசியத்தை முன்நிறுத்தும்."

இது இப்போது மிகவும் அவசரமான மற்றும் ஆணித்தரமான அரசியல் கேள்வியாக ஆகி உள்ளது. தற்போதைய பாரிய சமூக போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும், முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டவும் மற்றும் உலக பொருளாதாரத்தை தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒழுங்கமைக்கவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் போராட்டத்தின் ஆரம்ப வெளிப்பாடுகளாகும்.