ஏனைய மொழிகளில்

Print Version|Feedback
India labels 1.9 million Assam residents “foreigners” as prelude to their mass expulsion

அசாமில் வசிக்கும் 1.9 மில்லியன் பேரின் பாரிய நாடுகடத்தலுக்கு முன்னோடியாக அவர்களை “வெளிநாட்டவர்கள்” என்று இந்தியா முத்திரை குத்துகிறது

By Wasantha Rupasinghe
5 September 2019

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள ஒரு மாநிலமான அசாமில், கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் குடியிருப்பாளர்கள் இந்திய அரசின் பிற்போக்குத்தனமான தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து [National Register of Citizens (NRC)] நீக்கப்பட்டிருக்கிறார்கள். நடைமுறை சட்டப்படி வெளிநாட்டினர் என்றாக்கப்பட்டவர்கள் பெருவாரியாக வெளியேற்றப்படுவதற்கு முன்னதாக அவர்கள் தடுப்பு மையங்களில் அடைக்கப்படுவார்கள் என்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், இந்தியாவின் இந்து மேலாதிக்க பாரதிய ஜனதாக் கட்சி (பிஜேபி) அரசாங்கம் விரும்பியபடி செல்ல முடிந்தால், அதிகாரிகளை திருப்திப்படுத்த, அசாமின் 33 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பவர்கள் அனைவரும் குடியுரிமையை நிருபிக்கும் ஆவணங்களை வழங்கவேண்டியிருக்கும் அல்லது நாடுகடத்தப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள், அதாவது இந்தியாவின் 1.3 பில்லியன் மக்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

NRC இலிருந்து நீக்கப்பட்டிருக்கும் 1.9 மில்லியன் மக்கள், அசாமைச் சேர்ந்த அனைத்து மக்களில் கிட்டத்தட்ட 6 சதவீதமானவர்கள் — வங்காள மொழி பேசும் மக்களாவர் மேலும் 90 சதவீதமான அந்த மக்கள் வறிய முஸ்லிம்களாவர்.

அசாமின் வங்காள மொழிபேசும் சிறுபான்மையினரில், கணிசமான பகுதியினரை நாடற்றவர்களாக அறிவிக்கும் முயற்சிக்கு எதிராக ஏற்படும் வெகுஜன போராட்டங்களுக்கு அஞ்சி கடந்த சனிக்கிழமை இறுதியாக தயாரிக்கப்பட்ட NRC  பட்டியலை வெளியிடுவதற்கு முன்னர், பாஜக மத்திய அரசானது மாநிலம் முழுவதும் மத்திய ஆயுதப் போலிஸ் படையின் (CAPF) 145க்கு மேற்பட்ட படைப்பிரிவுகளை நிறுத்தியிருகிறது.

2018 யூலையில் வெளியிடப்பட்ட பூர்வாங்க NRC பட்டியலில் 4.1 மில்லியன் மக்கள் நீக்கப்பட்டிருந்தார்கள். பாஜக வின் மாநில பிரிவும் மற்றும் அதன் அசாம் அரசாங்கத்தின் முதன்மைக் கூட்டாளியான சிறு இனக்குழு-பேரினவாத அசோம் கண பரிசத் (AGP - அசாம் மக்கள் சங்கம்) உம் நாடுகடத்தப்படுவதற்கு அதிகமான வங்காள மொழி பேசும் மக்களை இறுதியாக தயாரிக்கப்பட்ட NRC பட்டியலில் சேர்க்கவில்லை என்று விமர்சித்துள்ளன. "நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பற்றி AGP திருப்தியடையவில்லை ... [இது] மிகக் குறைவு, அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கட்சித் தலைவரும் அசாம் அமைச்சரவை அமைச்சருமான அதுல் போரா அறிவித்துள்ளார்.

மார்ச் 24, 1971 க்கு முன்னர், அவர்கள் அல்லது அவர்களின் மூதாதையர்கள் இந்தியாவில் வாழ்ந்தார்கள் என்பதை நிரூபிக்க முடியாத அனைவரையும் வேரறுத்து வெளியேற்றுவதே NRC இன் கூறப்பட்ட நோக்கமாக இருக்கிறது. இவ்வாறன குறிப்பின்படி, “வெளிநாட்டவர்கள்” என்று கருதப்படுபவர்களில் பெரும்பாலானோர் பிறந்து மற்றும் தங்கள் முழு வாழ்க்கையையும் இந்தியாவில் கழித்திருக்கிறார்கள், அல்லது குறைந்தபட்சம் அங்கு பல தசாப்தங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். எனினும், மனித உரிமைகள் குழுக்கள் அசாமில் பல தலைமுறைகளாக வாழ்ந்த மக்களின் ஏராளமான நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ளன, மேலும் பிற்போக்குத்தன அரசின் குடியுரிமை அளவுகோல்களை அவைகள் பூர்த்திசெய்கின்றன, ஆனாலும் அதிகாரிகளின் வகுப்புவாத கொடுங்கோண்மை மற்றும் திறனின்மை காரணமாக அம்மக்கள் NRC பதிவிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

NRC நிகழ்வுப்போக்கு இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் எதிர்ப்பையும் சீற்றத்தையும் தூண்டியுள்ளது, இந்தியாவை "உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயகம்" என்று கொண்டாடுவதில் ஒருபோதும் சோர்வடையாத மேற்கத்திய பத்திரிகைகள் கூட விமர்சன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், NRC வெளியீட்டை அடிப்படையில் ஒரு நிகழ்வு அல்லாததாக சித்தரிக்க முயன்றார். NRC இலிருந்து விலக்கப்பட்டவர்கள் "நிலையற்றவர்கள்" அல்லது "வெளிநாட்டினர்" என்று அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் மறுத்தார். "NRC இலிருந்து விலக்குதல்," அசாமில் வசிக்கும் ஒரு தனிநபரின் உரிமைகளில் எந்தவிதமான தாக்கமும் இல்லை. இறுதிப் பட்டியலில் இல்லாதவர்கள் சட்டத்தின் கீழ் கிடைக்கும் அனைத்து தீர்வுகளையும் அவர்கள் தீர்த்து வைக்கும் வரை தடுத்து வைக்கப்பட மாட்டார்கள்."

இவை அனைத்தும் பொய்கள் — அரசால் வடிவமைக்கப்பட்ட இன அழிப்பு பிரச்சாரத்தை சட்டபூர்வமான, கட்டுப்படுத்தப்பட்ட, மனிதாபிமானமானவை என்று அலங்கரிக்கும் வெளிப்படையான முயற்சியே.

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் வலதுகையும் மற்றும் பாஜக தலைவருமான  உள்துறை அமைச்சர் அமித் ஷா, “சட்ட விரோதமாக” குடிபெயர்ந்தவர்களை  “கறையான்கள்” என்றும் அவர்களை வங்காள விரிகுடாவில் தூக்கி வீசப்போவதாகவும் திரும்ப, திரும்ப முழங்கி வருகிறார்.

அசாமில் ஏற்கனவே ஆறு தடுப்பு முகாம்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை மாவட்ட சிறைகளுக்குள் உள்ளன, மேலும் கிட்டத்தட்ட ஒரு டஜன் கட்டுமானத்தின் கீழ் இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

NRC நிகழ்வுப்போக்கு ஏற்கனவே பெரும் பதட்டம், துன்பம் மற்றும் கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் ஏழைகள், பெரும்பாலும் கல்வியறிவற்றவர்கள், தங்களை விலக்கக்கூடாது என்று நம்ப வைப்பதற்கான ஆவணங்களை, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மக்கள் விரோத அதிகாரிகளிடம் காட்டுவதற்கு துடிக்கின்றனர். இப்போது, 1.9 மில்லியன் மக்கள் மட்டுமே குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளனர் என்று அதிருப்தி அடைந்துள்ளதாக மாநில அரசு பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், NRC இலிருந்து விலக்கப்பட்டவர்கள் புதிதாக நிறுவப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட “வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களில்” ஒன்றிற்கு முன் செல்ல வேண்டியிருக்கும். அங்கே பிற்போக்குத்தனமான NRC இன் நிபந்தனைகளுக்கு ஏற்ப அவர்களிடம் ஆவணங்கள் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் தத்துவார்த்தரீதியாக அவர்கள் நீதிமன்றங்களில் விண்ணப்பிக்கலாம், ஆனால் இந்த நிகழ்வுப்போக்கின் ஒவ்வொரு படியிலும் அவர்கள் பணம் கொடுக்க வேண்டியிருக்கும், அந்தப் பணம் பெரும்பாலானவகளிடம் கிடையாது.

மோடி அரசாங்கம் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான விரோதத்தைத் தூண்டிவிடுவது என்பது அதன் “பசு பாதுகாப்பை” ஊக்குவிப்பது, அயோத்தியில் இடித்து தள்ளப்பட்ட பாபரி மஸ்ஜித் தளத்தில், இந்து கடவுளான இராமருக்கு ஒரு கோவில் கட்டுவது மற்றும் பிற இந்து வகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிடுவது போன்றவை,  பரந்த வேலையின்மை, நாட்பட்ட வறுமை மற்றும் வேளாண் துயரங்கள் ஆகியவற்றின் மீது பெருகிவரும் கோபங்களை பிற்போக்கு வழிகளில் திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அசாமில் பாஜகவின் வங்காள எதிர்ப்பு பிரச்சாரம் இதில் சேர்க்கப்பட வேண்டும், இது ஒரு முஸ்லீம்-விரோத வகுப்புவாத தூண்டுதலைக் கொண்டுள்ளது. இந்தியாவை ஒரு இந்து தேசமாக வரையறுக்கும் அதன் மோசமான இந்துத்துவா சித்தாந்தத்திற்கு ஏற்பவும், இந்து ராஷ்டிராவாகவோ அல்லது அரசாக மாற்றும் திட்டங்களுக்கு இணங்க, பங்களாதேஷ் குடியுரிமையிலிருந்து இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த இந்துக்களுக்கு அவர்கள் அங்கே அரசினால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று கூறி குடியுரிமை வழங்குவதற்கான சட்டத்தை முன் கொண்டு வந்துள்ளது, ஆனால் பங்களாதேஷ் முஸ்லீம்களுக்கு அது மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் பர்மாவில் இனசுத்திகரிப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டு தப்பி வெளியேறும் ரோகியங்களாக்களை பொறுத்தவரையில் பாஜக அரசாங்கம் அவர்களுக்கு அரசியல் அடைக்கலம் வழங்க அடமாக மறுத்து விட்டது, அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது என்பது குறித்து சொல்ல வேண்டியதில்லை.

அசாமில் இந்திய அரசின் மோசமான மற்றும் வெட்கக்கேடான நடவடிக்கைகள், ஜம்மு-காஷ்மீரில் (J&K) அதன் நடவடிக்கைகளை எதிரொலிக்கின்றன, மேலும் இந்தியாவின் ஆளும் உயரடுக்கு, உலகெங்கிலும் உள்ள அதன் சகாக்களைப் போலவே, பெருகிய முறையில் சர்வாதிகார ஆட்சி முறைகளைப் பயன்படுத்துகிறது மற்றும் வகுப்புவாத மற்றும் பாசிச எதிர்வினைகளை வளர்த்து வருகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஒரு மாதத்திற்கு முன்பு, பாஜக அரசாங்கம் ஒரு அரசியலமைப்பு சதித்திட்டத்தை நடத்தியது, இந்திய அரசியலமைப்பின் கீழ் J&K, அதன் சிறப்பு, அரை தன்னாட்சி அந்தஸ்தை சட்டவிரோதமாக அகற்றியது. இது இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமாக இருந்ததை இரண்டாகப் பிரித்து, இரண்டு பகுதிகளையும் யூனியன் பிரதேசங்களாகக் குறைத்து, அவற்றை நிரந்தர மத்திய அரசின் பொறுப்பாண்மை ஆட்சியின் கீழ் வைத்தது. அத்தோடு J&K மீது முற்றுகை நிலையையும் திணித்துள்ளது.

அசாமில் NRC இன் "புதுப்பித்தல்" உச்சநீதிமன்றத்தால் 2014 இல் உத்தரவிடப்பட்டது. இது 2015 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் தொடங்கப்பட்டதிலிருந்து நடத்தப்பட்டது, மேலும், 1985 இல், ராஜீவ் காந்தியின் காங்கிரசுக்கு இடையே 34 ஆண்டுகளுக்கு முன்பு எட்டப்பட்ட உடன்படிக்கைக்கு இணங்க இது நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி அரசாங்கமும், அனைத்து அசாம் மாணவர் சங்கமும் (AASU) தலைமையிலான அசாம் இயக்கம். பாஜகவின் தற்போதைய அரசாங்க கூட்டாளியான AGP உருவான அசாம் இயக்கம், “பங்களாதேஷ் குடியேறியவர்களுக்கு” ​​எதிராக வன்முறையை பல ஆண்டுகாலமாக நடத்தியது.

இறுதியில் அசாமின் வங்காள மொழி பேசும் சிறுபான்மையினரை குறிவைக்கும் பிரச்சாரம் தெற்காசியாவின் பிற்போக்குத்தனமான 1947-48 வகுப்புவாத பிரிவினையின் மற்றொரு விபரீத விளைவு ஆகும், இது வெளிப்படையாக முஸ்லிம் பாகிஸ்தானாகவும், முக்கியமாக இந்து இந்தியாவாகவும் உள்ளது. கொடூரமான வன்முறை மற்றும் வெகுஜன மக்கள் தொகை இடமாற்றங்களுடன், பிரிவினை மாநில எல்லைகளை அமைத்தது, இது பொருளாதார ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஒன்றிணைந்த பிராந்தியங்களையும் மக்களையும் கூறு போட்டது.  இது பொருளாதார வளர்ச்சியை விரக்தியடையச் செய்துள்ளது, பிற்போக்குத்தனமான இந்திய-பாகிஸ்தான் இராணுவ-மூலோபாய போட்டிக்கு வழிவகுத்தது, இது இன்று துணைக் கண்டத்தின் மக்களை அணுசக்தி யுத்தத்தால் அச்சுறுத்துகிறது, மேலும் இப்பகுதியில் தொடர்ந்து ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு வழிவகுத்துள்ளது.

அசாமில் நீண்ட காலமாக வங்காள மொழி பேசும் மக்கள் உள்ளனர். இஸ்லாமாபாத்தின் ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிரான பங்களாதேஷ் கிளர்ச்சியைத் தடுக்க 1971 ல் பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட கொடூரமான தாக்குதலில் இருந்து புலம்பெயர்ந்தோர் கிழக்கு பாகிஸ்தானில் உள்ள வறுமையிலிருந்து தப்பித்து, தஞ்சம் புகுந்ததால், அது பிரிவினைக்குப் பின்னர் வளர்ந்துள்ளது. இந்தியா 1971 டிசம்பரில் தலையிட்டு, பங்களாதேஷ் மக்களின் "விடுதலையாளர்" என்று கூறிக்கொண்டது. உண்மையில், தெற்காசியாவின் பிற்போக்குத்தனமான வகுப்புவாத அடிப்படையிலான அரச அமைப்பை நிலைநிறுத்தவும், அதன் பாகிஸ்தான் போட்டியாளரின் உருவ அமைப்பிற்கு பலத்த அடி கொடுக்கவும் இந்தியா பங்களாதேஷை ஆக்கிரமித்தது.

அசாம் இயக்கம் 1970 மற்றும் 1980 களில் வடகிழக்கில் வளர்ச்சி கண்ட ஒரு தனித்துவமான இயக்கங்களில் ஒன்றாகும், இது இந்திய முதலாளித்துவத்தினால் பாரம்பரியமாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் சூறையாடப்பட்ட ஒரு பகுதியாக உள்ளது.

பங்களாதேஷில் இருந்து "சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" "வளங்களை சூறையாடுகின்றனர்", அசாமில் குடியிருப்பவர்களின் "வேலைகளை எடுக்கின்றனர்" மற்றும் ஏராளமான இனக்குழுக்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் அசாமிய கலாச்சார ஆதிக்கத்தை அச்சுறுத்துவதாக AASU குற்றம் சாட்டியது. ஆறு ஆண்டுகால அசாம் போராட்டம்,  வன்முறை மற்றும் இனவெறி தாக்குதல்களால் குறிக்கப்பட்டது, இதில் சுமார் 1,800 பேர், முக்கியமாக ஏழை வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் இறந்தனர்.

பாகிஸ்தானிய துருப்புக்களால், கிழக்கு பாகிஸ்தான் / பங்களாதேஷில், .நிகழ்த்தப்பட்ட முதல் பெரிய படுகொலையின் தேதியான மார்ச் 24, 1971 க்கு முன்னர், அவர்கள் அல்லது அவர்களது குடும்பங்கள் இந்தியாவில் வாழ்ந்தனர் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை வழங்க முடியாத அனைவருக்கும் குடியுரிமை மறுக்க இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுதான் அசாம் ஒப்பந்தத்தில் ஒரு முக்கிய அம்சமாகும்.

இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பேரினவாத 1985 அசாம் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. இன்று, காங்கிரஸ் கட்சியைப் போலவே, இது பங்களாதேஷ் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேரினவாத சூனிய வேட்டையை ஆதரிக்கிறது, "அனைத்து இந்திய குடிமக்களும்" NRC இல் முறையாக நுழைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டுமே கூறுகிறது, அதாவது, 48 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வசித்தவர்களின் இருப்பிடங்களை தேடிக் கண்டு முடியும்.