ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The murder of Baghdadi and Washington’s crisis in the Middle East

பாக்தாதியின் படுகொலையும், மத்திய கிழக்கில் வாஷிங்டனின் நெருக்கடியும்

Bill Van Auken
28 October 2019

ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு தலைவர் அபு பகர் அல்-பாக்தாதி (Abu Baker al-Baghdadi) இலக்கில் வைத்து கொல்லப்பட்டதைக் குறித்து அறிவித்த டொனால்ட் ட்ரம்பின் ஞாயிற்றுக்கிழமை காலை உரை, அமெரிக்க அரசினது குற்றமயப்படல் மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தினது இறுதி நெருக்கடியை வெளிப்படுத்தும் மற்றொரு கீழ்தரமான காட்சிப்படுத்தலாகும்.

அந்த ISIS தலைவர் "ஈவிரக்கமின்றி,” “வக்கிரமாக" “வன்முறையாக" படுகொலை செய்யப்பட்டதை, அவர் ஒரு "கோழை", “நாயை" போல இறந்தார் என்று கூறி, ட்ரம்ப் குதூகலமாக விவரித்தார்.

பாக்தாதி மற்றும் அவரைப் பின்தொடர்பவர்கள் இருதரப்பினரையுமே "தோல்வியாளர்கள்" மற்றும் "கொடூர அரக்கர்கள்,” என்று விவரித்த ட்ரம்ப், சிரியாவில் அமெரிக்க சிறப்பு தாக்குதல் நடவடிக்கைகளின் விளைவாக, “உலகம் ஒரு பாதுகாப்பான இடமாக உள்ளது,” என்று வலியுறுத்தினார்.

நிச்சயமாக இது மொத்தமும் அபத்தமானது. பாக்தாதி மரணத்தின் மூலோபாய மதிப்பு ஒன்றுமே கிடையாது. எல்லா விபரங்களின்படி, 2017 வான் தாக்குதலிலேயே படுமோசமாக காயமடைந்து, மறைந்து வாழ நிர்பந்திக்கப்பட்டு, ISIS இன் நடவடிக்கைகளில் வெகு குறைவான பாத்திரம் வகித்து வந்த அவர் கொல்லப்பட்ட அந்நேரத்தில் அவர் நோயில் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் படுகொலையில் இருந்தும் மற்றும் ட்ரம்பின் அடாவடித்தனமான ஆத்திரமூட்டும் வாய்சவடாலில் இருந்தும் மொத்தத்தில் மற்றொரு பயங்கரவாத வன்முறை அலை தான் வரவிருக்கிறது.


அபு பக்ர் அல்-பாக்தாதி ஈராக்கிய மசூதி ஒன்றில் பேருரை ஆற்றுகிறார். (அசோசியேடெட் பிரஸ் கோப்பிலிருந்து போராளிகளினது காணொளி)

ட்ரம்பின் மத்திய கிழக்கு கொள்கை மீது அமெரிக்க ஆளும் ஸ்தாபகம் மற்றும் அதன் இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்திற்குள் இருந்து அவர் அதிகரித்தளவில் கூர்மையான தாக்குதலில் வந்துள்ள நிலைமைகளின் கீழ், ஓவல் அலுவலகத்தில் (Oval Office) தனக்கொரு "பாதுகாப்பான இடத்தை" பிடிப்பது தான் அந்த படுகொலைக்கு அவர் உத்தரவிடுவதற்கான ஒரே உண்மையான ஆர்வமாக இருந்தது.

பாகிஸ்தானில் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லாடனின் இலக்கு வைக்கப்பட்ட 2011 படுகொலையில் நடந்ததைப் போலவே, பாக்தாதியின் படுகொலைக்கு வழங்கப்படும் விபரங்களும் காலப்போக்கில் பெரிதும் ஜோடிக்கப்பட்டவையாக நிரூபணமாகலாம்.

“அரக்கர்களை" பொறுத்த வரையில், ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளில் ISIS இன் அடுத்தடுத்து அதன் வெற்றிகளிலும் மற்றும் அந்த இயக்கத்தின் மேலாதிக்கத்தின் போக்கிலும், பாக்தாதியும் மற்றும் ISIS உம் அரக்கத்தனமான நடவடிக்கைகளை நடத்தினார்கள் என்பது கேள்விக்கிடமற்றது. ஆனால் முடிவாக அவ்விருவருமே, 1991 பாரசீக வளைகுடா போருடன் தொடங்கி, அதை தொடர்ந்து 2001 ஆப்கானிஸ்தான் படையெடுப்பு, ஈராக்கில் 2003 “அதிரடி-ஆக்கிரமிப்பு" நடவடிக்கை, லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போர்கள், மற்றும் ISIS இக்கு எதிராக என்று அழைக்கப்பட்ட போர் என்று மத்தியக் கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முடிவில்லா போர்களின் உருவாக்கமாக அவர்கள் இருந்தார்கள்.

இந்த போர்கள் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுள்ளன, அதேவேளையில் பத்து மில்லியன் கணக்கானவர்களை அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற செய்து, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய மிகவும் மோசமான அகதிகள் நெருக்கடியை உருவாக்கி உள்ளன. மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய போர் குற்றங்கள் வெகுவாக ISIS நடத்திய அட்டூழியங்களையும் விஞ்சி நிற்கின்றன, இவை வெறுமனே அவற்றின் கேடான துணைவிளைவுகளில் ஒன்று தான். பாக்தாதி மற்றும் ISIS இன் காட்டுமிராண்டித்தனமான மற்றும் பிற்போக்குத்தனமான சித்தாந்தம், ஈராக்கிய சமூகத்தைத் துடைத்தழிப்பதன் மூலமாகவும் மற்றும் குறுங்குழுவாத மோதல்களை திட்டமிட்டு தூண்டிவிடுவதன் மூலமாகவும் மட்டுமே பின்தொடர்வைப் பெற முடியும்.

பாக்தாதியின் துயரகரமான முடிவே கூட இதை தெளிவுபடுத்துகிறது. அவர் 2003 இல் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான சுன்னி கிளர்ச்சியில் இணைந்தார் மற்றும் ஃபல்லூஜா முற்றுகையின் போது 2004 இல் அவர் அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டார். அவர் இழிபெயரெடுத்த அபு கிரைப் அமெரிக்க சிறை மற்றும் சித்திரவதை மையத்திலும், அதற்கடுத்து அமெரிக்க இராணுவத்தால் பிடிக்கப்படும் இஸ்லாமியவாதிகளை ஆதரவாளர்களாக நியமித்து பயிற்சியளிக்க அனுமதிக்கும் கேம்ப் புக்காவிலும் 11 மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

அவர் அல் கொய்தாவுடன் இணைப்பு கொண்ட ஈராக்கிய குழு ஒன்றில் தலைவர் ஆனார். இந்த அல் கொய்தா அமைப்பே கூட 1980 களில் ஆப்கானிஸ்தானில் சிஐஏ முடுக்கிவிட்ட போரின் ஒரு விளைபொருளாகும். அமெரிக்க ஆக்கிரமிப்பு மீதும் மற்றும் அதை தொடர்ந்து ஷியா குறுங்குழுவாத கட்சிகள் தலைமையில் பாக்தாத்தில் இருந்த அமெரிக்க ஆதரவிலான ஆட்சி முன்னெடுத்த ஒடுக்குமுறை கொள்கைகள் மீதும் நிலவிய சுன்னி அதிருப்திக்கு மத்தியில், அது வளர முடிந்தது.

2013 வாக்கில், அது சிரியாவுக்குள் நகர்ந்து, ஆயுதங்களைத் திரட்டி, நிதியுதவி மற்றும் ஆட்சேர்ப்புகளை நடத்தியதற்கு அமெரிக்கா-நேட்டோ ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கைக்குத் தான் நன்றி கூற வேண்டும், அது அதன் பினாமி தரைப்படை துருப்புகளாக இஸ்லாமிய போராளிகள் குழுக்களைச் சார்ந்திருந்தது. சர்வதேச அளவில் அதன் பிற்போக்குத்தனமான குறுங்குழுவாத சித்தாந்தத்தின் மீது ஒரு நோக்குநிலை பிறழ்ந்த பின்தொடர்வை அது பெற முடிந்தது என்றால் அதற்கு பெருவாரியான முஸ்லீம் நாடுகளுக்கு எதிரான தசாப்த கால அமெரிக்க குற்றங்களுக்குத் தான் நன்றி கூற வேண்டியிருக்கும்.

அமெரிக்க ஆதரவிலான ஊழல்பீடித்த ஆட்சியிடமிருந்து ஈராக்கின் சுமார் மூன்றில் ஒரு பங்கைக் கைப்பற்றி, அது ஈராக்கின் மேற்கு எல்லையில் திரும்பி எழுந்த போது தான் ISIS என்று அறியப்பட்ட அந்த அமைப்பு வாஷிங்டனுக்கு ஒரு பிரச்சினையாக மாறியது.

பாக்தாதி அமெரிக்க உளவுத்துறை முகமைகளுக்கு அறியப்படாத ஒருவரல்ல என்பது மட்டுமல்ல, மாறாக அனைத்து ஆதாரங்களின்படி அவற்றின் செயல்பாடுகளில் குறைந்தபட்சம் ஒன்றிலாவது அவர் அவற்றின் உடைமையாக இருந்தார். அவர் ஈராக்கில் குறுங்குழுவாத பிரித்தாளும் மூலோபாயத்திலும் மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரிலும் ஒரு பயனுள்ள பாத்திரம் வகித்திருந்தார்.

சிஐஏ நிதியுதவி பெற்ற "சுதந்திர சிரிய இராணுவத்தின்" முன்னாள் அல் கொய்தா தலைமையிலான சக்திகளின் கடைசி புற-அரணாக விளங்கிய சிரியாவின் வடமேற்கு மாகாணம் இட்லிப்பில் திடீரென கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் அவர் மரணம் ஏற்பட்டுவிடவில்லை. பாக்தாதி உயிரோடு இருந்தாலும் இனி அதிக பிரயோஜனமில்லை இறப்பதே மேல் என்று சிஐஏ மற்றும் இராணுவ உளவுத்துறை கூறுபாடுகள் ஏதோவிதத்தில் உடன்பட்ட உடனே, அவர் தலைவிதி முடிக்கப்பட்டது.

இதே தான் 2011 இல் அப்பட்டமாக பின் லாடன் விடயத்திலும் நடந்தது, அவர் பாகிஸ்தானிய இராணுவ உளவுத்துறையின் ஒரு பிரிவாக விளங்கிய அபோத்தாபாத்தில் சுற்றுச்சுவர் அடைக்கப்பட்ட பதுங்கிடத்தில் பாதுகாப்பாக ஒளிந்திருந்தார்.

பாக்தாதி கொல்லப்பட்டுள்ள இந்த நேரம் முற்றிலும் அரசியல் தன்மை கொண்டுள்ளது. வடமேற்கு சிரியா மீது துருக்கிய படையெடுப்புக்கு இம்மாத தொடக்கத்தில் ட்ரம்ப் பச்சைக்கொடி காட்டியமை மற்றும் அப்பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க துருப்புகளைப் பகுதியாக திரும்ப பெறுவதென்ற அவர் முடிவு ஆகியவை வாஷிங்டனில் ஓர் அரசியல் நெருப்புப்புயலை தூண்டிவிட்டிருந்தது, அவர் பதவிநீக்க குற்றவிசாரணையை முகங்கொடுத்துள்ள நிலையில் அது குடியரசு கட்சிக்குள் அவரின் ஆதரவைக் கீழறுக்கிறது என்பது மட்டுமல்ல, மாறாக இராணுவ உயரடுக்கிற்குள் அண்மித்து ஒரு இராணுவ கலகத்திற்கு ஒத்த ஒன்றையும் தூண்டிவிட்டு வருகிறது.

பாக்தாதி படுகொலையைக் கொண்டு ட்ரம்ப் அவர் மீதான எதிர்ப்பை எதிர்கொள்ள முயல்கிறார் என்பது மட்டுமல்ல, மாறாக சிரியாவின் எண்ணெய் வயல்களைப் "பாதுகாக்கும்" நடவடிக்கையுடன் அந்நாட்டுக்குள் அமெரிக்க துருப்புகளைத் திரும்ப அனுப்பவும் முயற்சிக்கிறார். இந்த நோக்கத்திற்காக, 30 அப்ரம்ஸ் டாங்கிகள் மற்றும் 500 துணை துருப்புகளை உள்ளடக்கிய குண்டு துளைக்காத கவச படைப்பிரிவு ஒன்று, வடமேற்கு சிரியாவுக்குள் அனுப்பப்பட்டு வருவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

துருக்கிய, ரஷ்ய, சிரிய அரசாங்கம், குர்திஷ் மற்றும் சுன்னி இஸ்லாமிய சக்திகள் அனைத்தும் நெருக்கமாக இணைந்து இயங்கி வரும் ஒரு பிராந்தியத்தில் அமெரிக்க துருப்புகள் "எண்ணெய்க்காக சண்டையிட வேண்டியிருக்கலாம்" என்று ட்ரம்ப் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில் அங்கே உள்ளே செல்வதற்கும் அதை "முறையாக" சுரண்டவும் அவர் "எக்ஸான்மொபில் நிறுவனத்துடன் அல்லது நமது மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றுடன் ஓர் உடன்படிக்கை செய்ய" கூடும் என்றார்.

வாஷிங்டன் "எண்ணெய்யை தக்க வைத்து" கொள்ளவில்லை என்ற அடித்தளத்தில் அமெரிக்காவின் ஈராக் போர் மீதான அவர் கண்டனங்களை மீண்டும் முன்னெடுப்பதற்கும் ட்ரம்ப் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக மற்றும் "பாரிய பேரழிவு ஆயுதங்களுக்கு" எதிராக போராடுகிறோம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்த போரின் நிஜமான உள்நோக்கத்தை — அதாவது, எண்ணெய் உற்பத்தி கொண்ட மூலோபாய பிராந்தியங்கள் மீது அமெரிக்க மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதை — உறுதிப்படுத்திய அதேவேளையில், ட்ரம்ப், அவரும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் குறிப்பிடத்தக்க அடுக்குகளும் ஏன் மத்திய கிழக்கு போர்களில் இருந்து ஒரு மூலோபாய திருப்பத்தை விரும்புகிறார்கள் என்பதன் மீது ஒரு மழுப்பலான விளக்கமும் வழங்கினார்.

“மத்திய கிழக்கில் இப்போது நாம் 8 ட்ரில்லியனைச் செலவிட்டு நிற்கிறோம்,” என்று கூறிய அவர், “நாம் அங்கே இருப்பதை யார் விரும்புகிறார்கள், ரஷ்யாவும் சீனாவும் தான் என்பதை நான் கூறுவேன். ஏனென்றால் அவை தங்களின் இராணுவத்தைக் கட்டமைத்து வருகின்ற அதேவேளையில், நாம் அங்கே நமது இராணுவத்தை நீர்த்துப் போக செய்து கொண்டிருக்கிறோம்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

வாஷிங்டனின் "நிரந்தர போர்களை" முடிவுக்குக் கொண்டு வருவதாக சூளுரைக்கும் ட்ரம்பின் வார்த்தைஜாலங்களுக்குப் பின்னால், அமெரிக்காவின் பிரதான "வல்லரசு" போட்டியாளர்களான, அணுஆயுதமேந்திய ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புக்கான மூலோபாய நோக்குநிலை ஒளிந்துள்ளது.

மக்கள் நனவில் பின் லேடன் படுகொலை உண்டாக்கிய தாக்கத்தை விட பாக்தாதி படுகொலை மிகவும் சிறிய பாதிப்பையேனும் கொண்டிருக்கும் என்பதற்கு அங்கே எந்த ஆதாரமும் இல்லை.

ஆனால் முதலாளித்துவ ஊடகங்களுக்குள் மற்றும் ஜனநாயக கட்சியின் தலைமைக்குள், அது விரும்பத்தக்க விளைவை உருவாக்கி உள்ளது. ABC செய்தியாளர் டெர்ரி மொரனின் அறிக்கை ஊடகங்களினது விடையிறுப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது, அவர் அந்த படுகொலையை "ஜனாதிபதிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி" என்று விவரித்ததுடன், “இந்த விதமான ஜனாதிபதி தலைமையைத் தான் மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்,” என்று வலியுறுத்தினார்.

அது மாதிரியான தலைமையை ஊடகங்களில் பேசும் தலைகள் வேண்டுமானால் எதிர்பார்க்கலாம், ஆனால் ஒட்டுமொத்த அமெரிக்க மக்களும் பெரிதும் நீதி விசாரணையற்ற படுகொலைகளை வாஷிங்டனிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் என்று கூறுவதன் மூலம் அவர்கள் மீது பழி சுமத்துவதற்கு அங்கே எந்த காரணமும் இல்லை.

ஜனநாயக கட்சியினரைப் பொறுத்த வரையில், காங்கிரஸ் சபையில் உள்ள அவர்களின் தலைவர்கள் அனைவரும் அந்த படுகொலையை ஒரு முக்கிய வெற்றியாக வர்ணித்தனர், அதேவேளையில் மத்தியக் கிழக்கில் அமெரிக்க போர்களைத் தொடர்வதற்கான வாதத்திற்கும் அதை பயன்படுத்தினர். அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் இடது வேட்பாளராக கூறப்படுகின்ற பேர்ணி சாண்டர்ஸ் அந்த "படுகொலையாளர் மற்றும் பயங்கரவாதியின்" படுகொலைக்கு அவரின் ஒப்புதலை வழங்கியும், அதேவேளையில் "குர்தியர்கள் மற்றும் பிற அமெரிக்க கூட்டாளிகளின் தைரியமான முயற்சிகளை" பாராட்டியும் ட்வீட் செய்தார்.

ட்ரம்புக்கு எதிராக பதவிநீக்க குற்றவிசாரணை மேற்கொண்டு வரும் Adam Schiff ஜனநாயக கட்சியினரின் விடையிறுப்புக்கு எடுத்துக்காட்டாக இருந்தார். அவர் அந்த படுகொலையை "வெற்றிகரமான ஆபரேஷன்" என்று வர்ணித்தத்துடன், அதேவேளையில் ட்ரம்ப் காங்கிரஸ் தலைமைக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்க தவறிய உண்மையைக் குறிப்பிட்டு புலம்பினார்.

“இது தீவிரமடைந்திருந்தால், ஏதாவது தவறாக போயிருந்தால், நாம் ரஷ்யர்களுடன் சண்டையில் இறங்க வேண்டி இருந்திருந்தால், 'நாங்கள் இதை செய்யவிருக்கிறோம் என்பதை காங்கிரஸிற்குத் தெரிவித்து இருந்தோம், அவர்கள் இந்த அபாயங்கள் குறித்து அறிந்திருந்தார்கள்,' என்று கூற நிர்வாகத்திற்கு சாதகமாக இருந்திருக்கும்,” என்றார்.

ஆனால் மூன்றாம் உலக போருக்குள் தீவிரமடைந்திருக்கக்கூடிய ஒரு நடவடிக்கைக்கு காங்கிரஸ் மறைப்பு மீதான மதிப்பை Schiff வாதிட்டார் என்றாலும், காங்கிரஸில் ஜனநாயக கட்சியினர் அந்த திட்டமிட்ட படுகொலை குறித்த தகவல்களைக் கசியவிட்டிருப்பார்கள் என்பதால் தான், அதாவது அவர் அரசியல் எதிர்ப்பாளர்கள் "தேச துரோகிகள்", அது குறித்து அவர்களுக்கு அவர் தெரிவிக்கவில்லை என்று ட்ரம்ப் வலியுறுத்தினார்.

ஊடகங்கள் மற்றும் ஜனநாயக கட்சியினரின் ட்ரம்ப் மீதான விமர்சனத்தைப் பொறுத்த வரையில், பெரிதும் அது பின் லேடனைப் படுகொலை செய்வதில் ஒபாமா கண்ணியமாக நடந்து கொண்டார் என்று கூறப்படுவதுடன் ட்ரம்பின் பொறுப்பற்ற வாய்சவடால் பெரிதும் முரண்படுகிறது என்ற விதத்தில் உள்ளது.

அமெரிக்க குடிமக்கள் உட்பட உலகெங்கிலும் இலக்கில் வைத்து படுகொலை செய்வதற்கான போலி-சட்ட நியாயப்பாட்டையும் மற்றும் ஓர் எந்திரத்தையும் ஒபாமா தான் டொனால்ட் ட்ரம்பின் பாசிசவாத ஜனாதிபதி ஆட்சிக்கு வழங்கி இருக்கிறார் என்பதே யதார்த்தமாகும்.

சிலியில் இருந்து லெபனான் வரையில் முதலாளித்துவ ஒடுக்குமுறை மற்றும் சமூக சமத்துவமின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கோரிக்கையுடன் மில்லியன் கணக்கானவர்களை வீதிகளில் இறக்கி உள்ள ஒரு பாரிய எழுச்சியும், அத்துடன் வாகனத்துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகளாலும் அமெரிக்காவில் வேலைநிறுத்தங்களின் ஒரு மீளெழுச்சியும் சேர்ந்துள்ள நிலைமைகளின் கீழ், நீதி விசாரணையற்ற படுகொலைகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிகரித்தளவில் சமூக ஒடுக்குமுறைக்கு ஒரு கருவியாக பயன்படுத்தப்படும் என்பதே அபாயமாகும்.

ஜனநாயக கட்சியினர் மற்றும் ஊடகங்கள் துணைபோக, பாக்தாதியின் படுகொலையை "ஒற்றுமைக்கான தருணமாக" ஊக்குவிக்க ட்ரம்பின் முயற்சியை, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் கட்டுக்கடங்காது தீவிரமடையும் வர்க்க போராட்டம் உடனடியாக விஞ்சிவிடும். இந்த அதிகரித்து வரும் இயக்கத்தை ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்குவதே முக்கிய பணியாகும்.