ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

What is at stake in the British Supreme Court’s ruling on the proroguing of Parliament?

பிரிட்டன் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது சம்பந்தமான பிரிட்டிஷ் உச்சநீதிமன்ற தீர்ப்பில் பயணத்தில் இருப்பது எது?

By Thomas Scripps
18 September 2019

செப்டம்பர் 10 இல் இருந்து ஐந்து வாரங்களுக்கு நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்த பிரதம மந்திரி போரீஸ் ஜோன்சனின் சட்ட அதிகாரம் மீது பிரிட்டனின் உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று அதன் விசாரணையைத் தொடங்கியது. இதன் தீர்ப்பு வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த வார தொடக்கத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அசாதாரண சட்ட மற்றும் அரசியல் சம்பவம், பிரெக்ஸிட் சம்பந்தமாக முற்றிலும் வெடித்து சிதறியுள்ள அரசியலமைப்பு நெருக்கடிக்கு மரண சாசனமாக உள்ளது. பிரிட்டனின் சட்டங்களை எவ்வாறு புரிந்து கொள்வது மற்றும் உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது என்பதில் நீதிபதிகள் ஓர் அத்தியாவசிய அம்சமாக கருதுமளவுக்கு வழக்குகள் முக்கியமாக இருந்தால் மட்டுமே உச்சநீதிமன்றம் அவற்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.

அவ்வாறிருக்கையில், நீதிமன்றத்தின் 10 ஆண்டுகால வரலாற்றில் இரண்டாவது முறையாக அதிகபட்ச எண்ணிக்கையாக பதினொரு நீதிபதிகள் அமர்ந்து ஒரு முடிவெடுக்க உள்ளார்கள். முதல்முறையாக, 2017 இல், வேறொரு பிரெக்ஸிட் சம்பந்தமான விசாரணை நடந்தது, அதில் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் சக்திகளது சட்ட வல்லுனர் குழு, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நிகழ்ச்சிப்போக்கை தொடங்கும் ஷரத்து 50 ஐ அமைச்சர்கள் பயன்படுத்த முடியாது என்று வாதிட்டு ஜெயித்தார்கள்.

இவ்வார வழக்கின் ஆரம்பத்தில், பிபிசி சட்ட வல்லுனர் கிளைவ் கொல்மன் கூறுகையில், “அரசியலமைப்பு சட்டத்தைப் பொறுத்த வரையில் நாம் ஒரு வகையான மாயக்கண்ணாடிக்குப் பின்னால் நிற்கிறோம்,” என்றார். இதே கருத்தை எதிரொலித்து Middlesex பல்கலைக்கழகத்தின் மூத்த சட்ட வல்லுனர் டாக்டர் Joelle Grogan கூறுகையில், “நாம் முன்னொருபோதும் இல்லாத, சாசனத்தில் வகைப்படுத்தப்படாத பகுதியில் உள்ளோம்,” என்றார்.

நீதிமன்றத்திற்கு வெளியில் பேசுகையில், அரசியல் பேச்சாளர் David Dimbleby செய்தியாளர்களுக்குக் கூறுகையில், “சூயஸ் விவகாரம், சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நெடுகிலும் நான் வாழ்ந்துள்ளேன், கருத்துக்கணிப்பு வரி விவாதம் மற்றும் அதற்குப் பிந்தைய பிரச்சினைகள் நெடுகிலும் நான் வாழ்ந்துள்ளேன். ஈரான் ஆர்ப்பாட்டங்கள் நெடுகிலும் நான் வாழ்ந்துள்ளேன்; இந்தளவுக்குப் பிளவுபட்டிருக்கும் ஒரு நாட்டை இதுவரையில் நான் பார்த்ததில்லை,” என்றார்.

அரசியல் வட்டாரங்களின் ஊடக விமர்சகர்கள், ஒரு பொருத்தமான சமாந்தரத்தைக் காண முதலாம் சார்லஸ் ஆட்சி காலம் வரையில் அண்மித்து 370 ஆண்டுகளுக்குப் பின்னால் திரும்பிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் — ஓர் அழிவார்ந்த உள்நாட்டு போருக்கு முன்னர் அந்த ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதே அதன் மன்னர் தலை துண்டிக்கப்பட்டது. அரசவை குழுவின் ஆலோசனையின்படி மற்றும் பதவியிலிருந்த பிரதம மந்திரியின் ஆலோசனை பெற்று, நடைமுறை மரபுப்படி, அரசி உத்தியோகபூர்வமாக நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தபோது, அவரே கூட இந்த விவகாரத்தில் இழுக்கப்பட்டிருந்தார்.

இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் வெவ்வேறு நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் எதிர்க்கப்பட்டதைப் பின்தொடர்ந்து, சமாதானப்படுத்தும் முயற்சியில், இந்த உச்ச நீதிமன்ற விசாரணை வருகிறது.

ஜோன்சனின் சட்டமன்ற ஒத்திவைப்பானது, "சட்டத்திற்குப் புறம்பான அதிகார துஷ்பிரயோகம்" என்ற வாதத்தை, செப்டம்பர் 6 இல், இங்கிலாந்து உயர் நீதிமன்றம் நிராகரித்தது. நீதிபதிகள், செப்டம்பர் 11 இல் வெளியிட்ட அவர்கள் தீர்ப்பில், ஜோன்சனின் முடிவுகள் "உள்ளார்ந்த அரசியல் இயல்பில் உள்ளன, அதற்கு எதிராக அவர்களின் சட்ட அதிகாரத்தைத் தீர்மானிக்க அங்கே எந்த சட்ட விதிமுறைகளும் இல்லை,” என்று அவர்கள் நம்புவதாக குறிப்பிட்டிருந்தனர். “பிரதம மந்திரியின் முடிவு நீதித்துறைக்கு உட்பட்டதல்ல. அது நீதிமன்றங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் கிடையாது,” என்றவர்கள் முடிவு செய்தனர்.

செப்டம்பர் 11 இல் வழங்கப்பட்ட ஸ்காட்லாந்து அமர்வு, நீதிமன்ற தீர்ப்பு —ஸ்காட்டிஷ் கீழ்-நீதிமன்றத்தின் முடிவை நிராகரித்து—ஜோன்சன் நாடாளுமன்றத்தை இடைநிறுத்தியமை "சட்டத்திற்குப் புறம்பானது" ஏனென்றால் "நிர்வாகத்தின் மீது நாடாளுமன்ற கண்காணிப்பைத்" தடுப்பதே அதன் நோக்கமாகும் என்று அறிவித்தது. “ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியிலிருந்து" வரும் "அரசியலமைப்பில் உள்பொதியப்பட்டுள்ள நல்லரசாட்சிக்கான கோட்பாட்டின் மையத் தூணாக" இவ்வித கண்காணிப்பு விளங்குவதால், நீதிமன்றங்களுக்கு இவ்விதத்தில் தலையிட அதிகாரம் இருப்பதாக நீதிபதிகள் வலியுறுத்தினர். நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதானது "பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசு ஆணையங்களின் நடத்தை விதிமுறைகளுக்கு இணங்க தவறும் ஒரு மோசமான விடயம்" என்பதையும் அவர்கள் சேர்த்துக் கொண்டனர்.

அடுத்த நாள், வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் உயர்நீதிமன்றம், உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட் இன் சட்டபூர்வத்தன்மைக்குச் சவால்விடுத்த ஒரு வாதத்தை நிராகரித்தது, அது 2018 ஐரோப்பிய ஒன்றிய (வெளியேறும்) சட்டம், பாதுகாப்பு வழங்குவதற்காக உறுதியளிக்கும் 1998 புனித வெள்ளி உடன்படிக்கையை மீறுகிறது என்ற அடித்தளத்தில் அதை நிராகரித்தது.

வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்தின் ஏனைய பகுதிகளுக்கும் இடையே அரசியல்ரீதியில் ஆத்திரமூட்டும் "கடுமையான" எல்லையை உருவாக்குவதில்லை என்ற உறுதிமொழிகள், “குறிப்பிடத்தக்க பொருளாதார, சட்ட அபாயங்கள் மற்றும் உயிர்கள்-பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக நிலைத்திருக்காது... இதை சரி செய்ய நடைமுறையளவில் எந்த ஒருதலைபட்சமான சமாதான நடவடிக்கைகளும் இல்லை" என்று கருதப்படுவது அரசாங்கத்தின் உடன்பாடு எட்டப்படாத அவசர திட்டமிடலில் வெளிப்படுத்தப்பட்டது.

இந்த வழக்கின் பிரதான அம்சங்கள் "உள்ளார்ந்தும் தவறுக்கு இடமின்றியும் அரசியல் தன்மை கொண்டது" என்ற அடிப்படையில் நீதிபதிகள் அந்த வாதத்தை நிராகரித்தனர். நீதியரசர் பேர்னார்ட் மெக்குளோஸ்கே, அந்த வழக்கு ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் சட்ட சவால்களின் மத்தியில் இருப்பதாக குறிப்பிட்டு, அந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க வேண்டுமென்ற வாதத்தை நிராகரித்தார்.

ஆகவே வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதன் மீது நீதிமன்றங்கள் சட்டரீதியாக தீர்ப்பு வழங்கலாமா, அவ்வாறாயின், ஜோன்சனின் நாடாளுமன்ற இடைநிறுத்தம் சட்டபூர்வமானதா என்ற மத்திய சட்ட பிரச்சினைகள் மீது உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்.

நீதிபதிகள் எட்டக்கூடிய மூன்று சாத்தியமான தீர்ப்புகள் உள்ளன. ஸ்காட்டிஷ் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு இங்கிலாந்து தீர்ப்பு நிராகரிக்கப்பட்டால், பின் ஜோன்சனின் நாடாளுமன்ற ஒத்திவைப்பு சட்டத்திற்குப் புறம்பானதாக அறிவிக்கப்படும். இது ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கியிருப்பதை எதிர்க்கும் எதிர்ப்புக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும், நாடாளுமன்றத்திற்கு மறுஅழைப்புவிடுக்கவும் மற்றும் ஜோன்சனின் இராஜினாவுக்கே கூட அழுத்தமளிக்கவும் இது பயன்படுத்தப்படலாம். ஸ்காட்டிஷ் தீர்ப்புக்கு எதிராக இங்கிலாந்து தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டால், பின் ஜோன்சனுக்கு நீதிமன்றங்களிடம் இருந்து எந்த கண்டிப்பும் இருக்காது, நாடாளுமன்ற எதிர்ப்புக்கு எதிராக உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட்டை நிறைவேற்றும் அவர் திட்டங்களைச் சாத்தியமான சட்ட அனுமதியோடு தொடரக்கூடும்.

ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து இரண்டுமே வெவ்வேறு சட்ட முறைகளைக் கொண்டிருப்பதால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு தீர்ப்புகளையும் ஏற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புள்ளது. இங்கிலாந்து மற்றும் வெல்ஷ் நாடாளுமன்றம் 1688 இல் உரிமைச்சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியது, அது "நாடாளுமன்றங்கள் அடிக்கடி கூட்டப்பட வேண்டும்" என்று மட்டுமே குறிப்பிடுகிறது. 1689 இல் உரிமைகள் மீதான ஸ்காட்டிஷ் வாதம் ஒருபடி மேலே சென்று, “நாடாளுமன்றங்கள் அடிக்கடி கூட்டப்பட்டு, அமர்வு நடத்த அனுமதிக்கப்படுவதை" அவசியப்படுத்துகிறது.

முதலாளித்துவ வர்க்கத்தின் ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருக்கும் கன்னைகளின் வழக்குரைஞர்கள், அவர்கள் தரப்பினரை "மக்களின்" சட்டபூர்வ பிரதிநிதிகளாக சித்தரித்துக் காட்டுவதற்காக பிரிட்டனின் எழுதப்படாத அரசியலமைப்பு சட்டத்தின் (பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வமாக எழுதப்பட்ட அரசியலமைப்பு எதுவும் இல்லை) சிதறிக் கிடக்கும் சிதறல்களை ஒன்றுசேர்த்துக் கொண்டிருக்கையில், இந்த முதலாளித்துவ கன்னைகள், “ஜனநாயகம்,” “இறையாண்மை” “சட்டத்தின் ஆட்சி” என்ற கருத்துக்களை இந்த வழக்கு நெடுகிலும் முடிவில்லாமல் பயன்படுத்துகின்றன.

எது எவ்வாறிருப்பினும், இந்த சட்ட மோதல் அளப்பரிய அரசியல் உள்நோக்கங்களைக் கொண்டுள்ளது. வரவிருக்கும் காலத்தில் பிரிட்டனின் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கையின் நோக்குநிலையை தீர்மானிப்பதில் இந்த உச்ச நீதிமன்ற வழக்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கும். அதன் முடிவு இரண்டு வழியிலும் கடுமையான ஜனநாயக-விரோத விளைவுகளுக்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கும்: ஒன்று, நீதித்துறை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புக்கு அதிகாரத்தை வழங்கும், அல்லது அரசாங்கம் அதன் சொந்த அரசியல் தேவைகளுக்காக அதன் விருப்பப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பை இடைநிறுத்த அனுமதிக்கும்.

மிகவும் உடனடியாக, இந்த வழக்கு ஐக்கிய இராஜ்ஜியத்தில் பெரும் பிளவுகளை உருவாக்க அச்சுறுத்துவதுடன், அதன் உடைவையும் அச்சுறுத்துகிறது. ஐக்கிய இராஜ்ஜியம் என்பது இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து சேர்ந்த ஓர் ஒன்றியமாகும். இங்கிலாந்து உயர் நீதிமன்றம் மற்றும் ஸ்காட்டிஷ் அமர்வு நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளுக்கு எதிர்ப்பானது, புதிய அரச வம்சம் பதவியேற்றதன் விளைவாக ஏற்பட்ட 1688 ஒளிமயமான புரட்சி (Glorious Revolution) என்றழைக்கப்படும் காலம் வரையில் பின்னோக்கிய சட்ட கருத்து வேறுபாடுகள் மீது தங்கியுள்ளது. ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தலைச்சிறந்த நலன்கள் இந்த அணிக்கு வெளியே அமெரிக்கா உடனான ஒரு கூட்டணியில் இருப்பதாக பார்க்கும் ஜோன்சன் பிரதிநிதித்துவம் செய்யும் முதலாளித்துவ பிரிவுக்கும் மற்றும் ஸ்காட்லாந்து ஆளும் உயரடுக்கிற்கும் இடையிலான சமரசமற்ற அரசியல் கருத்துவேறுபாடுகளால் இந்த பிளவு உயிரூட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒரு சுதந்திர ஸ்காட்லாந்து என்ற தங்களின் வேலைத்திட்டத்தைக் கொண்டு வர இரண்டாவது சுதந்திர கருத்து வாக்கெடுப்புக்கு ஸ்காட்டிஷ் தேசிய கட்சி முன்பினும் அதிகமாக குரல் கொடுக்கும் நிலையில், வரவிருக்கும் நாட்களின் சம்பவங்கள் இந்த பிளவுகளை மேலும் பலப்படுத்த மட்டுமே செய்யும்.

வடக்கு அயர்லாந்தில் சூழ்நிலை இன்னும் அதிக வெடிப்பார்ந்துள்ளது, அங்கே இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் புனித வெள்ளி உடன்படிக்கையால் பெரிதும் அடக்கி வைக்கப்பட்ட அரசியல் பதட்டங்கள் மற்றும் வன்முறைகளை மீண்டெழச் செய்ய பிரெக்ஸிட் அச்சுறுத்துகிறது. வடக்கு ஐரிஷ் சட்டமன்றம் இரண்டரை ஆண்டுகளாக ஒன்றுகூடவில்லை என்ற நிலைமைகளின் கீழ் இவ்வாறு உள்ளது, இது யதார்த்தத்தில் பிரிட்டனில் இருந்து நேரடி ஆட்சிக்கு இட்டுச் செல்கிறது, அங்கே அயர்லாந்து குடியரசுடன் ஐக்கியப்படுவதன் மீது ஒரு கருத்துக்கணிப்பு நடத்த குடியரசு Sinn Fein கட்சி அழைப்பு விடுத்து வருகிறது. இப்போது நடந்து வரும் பெல்ஃபாஸ்ட் உயர்நீதிமன்ற தீர்ப்பு மீதான மேல்முறையீட்டில், ஒரு விண்ணப்பதாரர், பிரெக்ஸிட் "ஒரு வெடிகுண்டு திரியைப் பற்ற வைத்து" உள்ளது என்று அறிவித்தார்.

ஜோன்சனின் சட்ட பிரதிநிதிகள் கூறுகையில், பிரதம மந்திரி "நீதிமன்றம் அறிவிக்கும் எந்த பிரகடனத்தின் வரையறைகளுக்கும் ஒத்துப் போக அவசியமான நடவடிக்கைகளை எடுப்பார்,” என்றனர், ஆனால் விசாரணையின் போதோ, அரசு தரப்பு வழக்குரைஞர் Lord Keen இந்த வழக்கு ஜோன்சனுக்கு எதிராக வந்தால் என்ன குறிப்பிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதைக் குறிப்பிட மறுத்தார்.

இதற்கும் கூடுதலாக, நேரடியாக கேட்கப்பட்ட போது, ஜோன்சன் மற்றும் நீதித்துறை செயலர் Robert Buckland இருவருமே அக்டோபர் 14 இக்குப் பின்னர் இரண்டாவது முறையாக நாடாளுமன்றம் இடைநிறுத்தம் செய்யப்படாது என்பதை கூற மறுத்தனர். Buckland கூறுகையில், “அக்டோபர் இறுதியில் என்ன நடக்கும் என்று இங்கே உட்கார்ந்து கற்பனை செய்வது, பயனற்றதென நினைக்கிறேன்,” என்றார்.