ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

State of siege in Kashmir: A warning to the international working class

காஷ்மீரின் முற்றுகை நிலை: சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை

Bill Van Auken
17 August 2019

இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீரில் 13 மில்லியன் மக்கள் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தின் ஒரு ஆட்சியின் கீழ் அசாதாரண ஒடுக்குமுறையும் கூட்டுத் தண்டனையையும் கடந்த 13 நாட்களாக அனுபவித்து வருகிறார்கள். இந்த நடவடிக்கைகளுக்கு வரலாற்று ரீதியாக இழிவான ஒரு சில முன்னுதாரணங்களே உள்ளன.

பெல்ஜியம், கிரீஸ் மற்றும் போர்ச்சுகல் போன்ற ஐரோப்பிய நாடுகளின்  மக்கள் தொகையைவிட அதிகமான அல்லது பிரதான அமெரிக்க மாநிலங்களான பென்சில்வேனியா, இல்லினாய்ஸ் மற்றும் மிச்சிகன் போன்றவற்றின் மக்கள் தொகையைவிட அதிகமான மக்கள்தொகை, “பாதுகாப்பு சுற்றிவளைப்பு” நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குறைந்து வரும் உணவுப் பொருட்களுடன் மக்களை தங்கள் வீடுகளிலேயே அடைத்து வைத்திருத்தல், முழு ஊரடங்குகள் ஆகியனவும் உள்ளடங்கும்.

பேச்சு சுதந்திரம் மற்றும் சட்டசபை இல்லாதொழிக்கப்பட்டதுடன் நான்கு பேருக்குமேல் கூடுவது சட்டவிரோதமாக்கப்பட்டது. ஒடுக்குமுறையை ஊடகங்களிடம் கண்டனம் செய்யும் விமர்சகர்கள் சிறைப்படுத்தப்படுகின்றனர். பொதுப் போக்குரத்து மூடப்பட்டு, பிரந்தியத்தின் பொருளாதாரம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

வழக்கமாக தன்னை உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என விவரித்துக்கொள்ளும் இந்திய அரசாங்கமானது ஜம்மு-காஷ்மீர் அரசியல்வாதிகள் பலரை முன்கூட்டியே பாதுகாப்பு தடுப்புக்காவலில் வைத்தது. காஷ்மீரின் பெரிய பிராந்தியத்தின் இந்திய கட்டுப்பாட்டுல் உள்ள ஒரு பகுதி ஆகும். அது 1947ல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை தொடர்ந்து, இந்தியத் துணைக்கண்டமானது பிற்போக்கு வகுப்புவாத பிரிவினையாக முஸ்லிம் பாக்கிஸ்தானாகவும் பிரதானமாக இந்துக்களை கொண்ட இந்தியாவாக பிரிக்கப்பட்டதிலிருந்து பிளவுபடுத்துப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதி முன்னர் நடந்த இரண்டு போர்களுக்கான மற்றும் இப்போது அணு ஆயுதப் போட்டியாளர்களுக்கு இடையிலான பல நெருக்கடிகளுக்கான வெடிப்புப் புள்ளியாக இருந்து வருகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் இரு முன்னாள் முதல்வர்கள் டசின் கணக்கான முக்கிய அரசியல் பிரமுகர்கள், அவர்களின் குடும்பத்தினர் அவர்கள் எங்கே சிறைவைக்கப் பட்டிருக்கின்றனர் என்று அறிய முடியாத நிலையில் 500க்கும் மேற்பட்டோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். பலர் அப்பிராந்தியத்திற்கு வெளியே உள்ள சிறைகளுக்கு இராணுவ விமானங்களில் ஏற்றிச்செல்லப்பட்டனர். இதே தலைவிதி முந்தைய அராங்க எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றவர்களான “கல்லெறியகூடியவர்கள், என அறியப்பெற்றவர்களுக்கு காத்திருக்கிறது.”

முழு மக்கள்தொகையையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைக்கும் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், இந்திய அரசாங்கமானது தொலைபேசி, கைபேசி சேவைகள் மற்றும் இணைய சேவைகள் உட்பட அனைத்து தொடர்புகளையும் துண்டித்து யாரும் தங்களது உறவினர்கள், நண்பர்கள், சக தொழிலாளர்களுடன் பேச முடியாதவாறு செய்துள்ளதுடன் எதிர்ப்பை ஒழுங்கமைப்பதற்கு சமூக ஊடகத்தை பயன்படுத்தவதை தடை செய்தமை பற்றி குறிப்பிடத்தேவையில்லை.

இந்த பாரிய ஒடுக்குமுறையை நடைமுறைப்படுத்தவதற்கு இந்தப் பிராந்தியத்திற்கு பல பத்தாயிரக்கணக்கான கூடுதல் இந்திய துருப்புக்கள் பறந்துள்ள. இது காஷ்மீர் மக்கள் மீது ஆகஸ்டு 5ம் தேதி எந்த எச்சரிக்கையும் இல்லாமல் திணிக்கப்பட்டது. பாசிச பிஜேபி இந்திய அரசாங்கத்தின் பிரதமர் நரேந்திரமோடி அரசியலமைப்புக்கு புறம்பான ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கான எந்த எதிர்ப்பையும் நசுக்குவதற்கு இந்த ஒடுக்குமுறையை முன்கூட்டியே நடைமுறைப்படுத்தியது. நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் அரசாங்கம் இந்தியாவின் ஒரே முஸ்லிம் மாநிலமான ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அரை சுயாட்சி அந்தஸ்தை பறித்தெடுத்து, மத்திய அரசால் இயக்கப்படக் கூடிய இரண்டு கீழ்ப்படியும் துணை பிரிவுகளாலான யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது.

ஒடுக்குமுறைக்கு எதிரான எந்தவொரு அடையாளமும் மிருகத்தனமான அடக்குமுறையை எதிர்கொண்டு வருகிறது. வியாழக்கிழமை அன்று மட்டும் இப்பிராந்தியத்தின் பெரிய நகரமான ஸ்ரீநகரில் பிரதான மருத்துவமனைகளுள் ஒன்றில் மருத்துவர்கள் குறைந்த பட்சம் 50 பேராவது சுடுகலன்களின் துகள்களாலும் இரப்பர் குண்டுகளாலும் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்றிருந்தனர் என செய்தி அறிவித்தனர்.

அடைத்து வைத்திருப்பதற்கு எதிராக ஆகஸ்ட் 16 ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தைக் கண்டது. எதிர்ப்பாளர்கள் ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்குப் பின்னர் ஒன்று கூடினர், காஷ்மீரில் “இனப்படுகொலைகளை நிறுத்து, உலகே விழித்தெழு” என்று வாசிக்கும் பதாகைகளுடன் வீதியில் இறங்கினர். அவர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் சுடுகலன்களின் சூடுகளையும் சந்தித்தனர்.

காஷ்மீரில் ஒட்டுமொத்த ஒடுக்குமுறையும் இஸ்ரேலிய அரசாலும் அதன் பாதுகாப்புப் படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் காசாவிலும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் ஒடுக்குமுறையுடன் ஒப்பிடப்பட்டு வருகிறது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் போன்ற பெரியளவில் மக்களை ஆயுதங்களால் தடுத்து வைப்பதற்கான ஒரு முன்மாதிரியைக் காண ஒருவர் நாஜி ஜேர்மனி ஊடுருவல் செய்து ஐரோப்பாவின் மீதிப்பகுதியை ஆக்கிரமித்த காலப்பகுதிக்கு பின்னோக்கி செல்ல வேண்டும்.

காஷ்மீர் நிகழ்வுகளின் மிகவும் குறிப்பிடத்தக்க விடயங்களில் ஒன்று மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்களின் முழுமையான மௌனமும் அலட்சியமும் ஆகும். அமெரிக்காவில் உள்ள பிரதான செய்தி வலைப்பின்னல்கள் வெகுஜனங்கள் மீதான ஒடுக்குமுறையை கிட்டத்தட்ட முழுதுமே அலட்சியம் செய்தன, முன்னணி செய்தித்தாள்களில் மேம்போக்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் இருந்தன.

அமெரிக்க வெளியுறவுத்துறை, “இந்திய அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை கண்டிப்பாக ஒரு உள்விகாரம் என்று விவரிப்பதை நாங்கள் கவனிக்கிறோம்” என்று அறிவிக்கும் மிருதுவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இதேபோன்ற ஒடுக்குமுறை ரஷ்யா, சீனா, ஈரான் அல்லது வெனிசுவேலாவில் இடம்பெற்றிருந்தால் எதிர்வினை எவ்வாறு இருந்திருக்கும்? முற்றுமுழுதான விபரணங்களுடன், சந்தர்ப்பத்துக்கேற்ற சூடான கண்டனங்களும் வழங்கப்பட்டிருப்பதுடன், வாஷிங்டனால் இராணுவத் தலையீட்டிற்கான அச்சுறுத்தல் கூட விடுக்கப்பட்டிருக்கும் என்பதில் ஏதேனும் ஐயம் இருக்கிறதா? ஆட்சி மாற்றத்திற்கான மேலும் புதிய காலனித்துவ போர்களுக்கு அல்லது அதன் மூலோபாயப்  போட்டியாளர்களாகிய ரஷ்யாவுக்கும் சீனாவிற்கும் எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களுக்கு சேவை செய்யும்போதுதான் "மனித உரிமைகள்" ஒரு பிரச்சினையாக எடுக்கப்படும் என்பதை மீண்டும் நிகழ்வுகள் நிரூபித்துள்ளன.

காஷ்மீரில் வெகுஜன ஒடுக்குமுறையைப் புறக்கணிப்பதற்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள ஏனைய பிரதான முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய காரணங்கள் இரண்டும் உள்ளன. வாஷிங்டன் தலைமையில், மேற்கத்திய பிரதான அரசுகள் அனைத்தும் ஆசியாவில் சீனாவின் செல்வாக்கினை ஈடுகட்டுவதற்கான இராணுவ மூலோபாய எதிர் எடையாக இந்தியாவைக் கட்டி எழுப்பவே விரும்புகின்றன. மோடியின் அதி வலதுசாரி அரசாங்கம் இந்த முயற்சிகளில் முழு ஒத்துழைப்பைத் தந்து வருவதோடு, இந்தியத் துறைமுகங்களையும் தளங்களையும் அமெரிக்க கப்பல்களுக்கும் விமானங்களுக்கும் திறந்து விட்டு, ஜப்பான், ஆஸ்திரேலியா உடன் அமெரிக்கா தலைமையிலான நாற்கர மூலோபாயக் கூட்டில் சேர்ந்துள்ளது மற்றும் இல்லையெனில் பெய்ஜிங் உடனான முறுகலில் அமெரிக்காவின் முன்னிலை அரசாக இந்தியாவை மாற்றுதற்கு விரும்புகின்றது.

மோடியின் ஒடுக்குமுறைக்கு, மேற்கில் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் மௌனத்திற்கு மேலும் அடிப்படைக் காரணம் ஒன்று இருக்கிறது. அவர்கள் அனைவரும் தமது சொந்த நாடுகளில் பரந்த சமூக அமைதியின்மையை நசுக்குவதற்கு இதேபோன்ற வழிமுறைகளைப் பயன்படுத்துவதை காணலாம். அவ்வாறு செய்வதற்கு விரிவான தயாரிப்புக்கள் செய்யப்பட்டுள்ளன என்பதில் சந்தேகமே இல்லை.

டொனால்ட் ட்ரம்ப்பின் அரசாங்கம் அமெரிக்காவில் அதிவலதுகள் மற்றும் பாசிச சக்திகளின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை வலுப்படுத்த அதிகரித்த அளவில் எதேச்சாதிகார வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகிறது, அதேவேளை அகதிகளையும் புலப்பெயர்ந்தவர்களையும் நசுக்க போலீஸ் அரசு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி வருகிறது. பிரான்சில் இமானுவல் மக்ரோன் “இயல்பாக்கப்பட்ட” அவசரகால அதிகாரங்களைக் கொண்டு பெரும் சமூகத் தாக்குதல்களை திணிக்க பயன்படுத்தி வருகிறார் மற்றும் “மஞ்சள் அங்கி” எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இராணுவத்தை அனுப்பினார் மற்றும் நாஜி ஆதரவு சர்வாதிகாரி பிலிப் பெத்தானுக்கு தனது மரியாதையை வெளிப்படுத்தினார். அங்கேலா மேர்க்கெலின் அரசாங்கம் ஜேர்மனியில் பாசிச கும்பல்கள் மற்றும் ஹிட்லருக்கு அப்பட்டமாக வக்காலத்து வாங்குபவர்கள் உட்பட அதி வலதுகளை வள்ர்த்தெடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது, அதேவேளை பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிவலதுசாரி AfD தோன்றியதற்கும் பொறுப்பாகிறது.

முன்னொருபோதுமில்லாத மற்றும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மையின் கீழ் எங்கும் ஆட்சியின் ஜனநாயக வடிவங்கள் உடைந்துவருகின்றன. ஆளும் முதலாளித்துவ தன்னலக்குழுக்களானது, உலகப் பொருளாதார நெருக்கடி உக்கிரமடைவதற்கு, வர்த்தக யுத்தம் அதிகரிப்பதற்கு மற்றும் புவிசார் மூலோபாய மோதல்களுக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக வர்க்கப் போராட்டம் உலக அளவில் மீண்டும் எழுச்சிபெறுவதற்கு பதிலிறுப்பாக மீண்டும் ஒருமுறை அப்பட்டமான சர்வாதிகாரத்திற்கும் பாசிசத்திற்கும் திரும்புகின்றன.

காஷ்மீரில் நடத்தப்படும் மிருகத்தனமான ஒடுக்குமுறையைப் பார்த்து “இது இங்கு நடக்காது” என்று ஒரு தொழிலாளியும் சிந்திக்கக் கூடாது. இணையத்தை துண்டிப்பது, வீதிகளில் துருப்புக்களை வெள்ளம்போல் இறக்குவது, எந்நேரமும் ஊரடங்கை திணிப்பது, எதிர்ப்பாளர்களை சுட்டுக் கொல்வது, மேலும் இதைவிட மிக சோசமானவைகளும், முதலாளித்துவத்தைத் தூக்கி வீசுவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச அளவிலான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் தலையீடு இல்லாவிட்டால் அமெரிக்காவில், பிரான்சில், ஜேர்மனியில் இங்கிலாந்தில் மற்றும் உண்மையில் எந்த நாட்டிலும் நடைபெற முடியும்.