ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan railway unions cave in to government’s strike ban

இலங்கை புகையிரத தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் வேலைநிறுத்த தடைக்கு அடிபணிகின்றன

By Saman Gunadasa 
1 July 2019

இலங்கையில் பல புகையிரத தொழிற்சங்கங்களின் கூட்டணியான புகையிரத தொழிற்சங்க கூட்டணி (RTUA), அரசாங்கத்தின் கடுமையான அத்தியாவசிய சேவை உத்தரவுக்கு தலைவணங்கியதுடன், தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தம் செய்வதற்ககான முந்தைய முடிவையும் கைவிட்டது.

வெள்ளிக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், அத்தியாவசிய சேவை உத்தரவை இரத்து செய்யுமாறு ஆர்.டி.யு.ஏ. அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தது. தோல்வியுற்றால், அது ஜெனீவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) மற்றும் மனித உரிமைகள் பேரவையிலும் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்யும் -இது தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பை மூடி மறைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு பயனற்ற நடவடிக்கை ஆகும்.

போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரனதுங்கவின் வேண்டுகோளின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வியாழக்கிழமை அவசரகால சட்டங்களின் கீழ் வேலைநிறுத்த நடவடிக்கைகளை அடக்குவதற்கு அத்தியாவசிய சேவை உத்தரவை பிறப்பித்தார். இருப்பினும், புகையிரத இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், இயக்குனர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் மேற்பார்வை மேலாளர்கள் உட்பட சுமார் 3,000 தொழிற்சங்க உறுப்பினர்கள் தடையை மீறி வேலைநிறுத்தத்தில் இறங்கினர். வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 340 தினசரி புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டன.

குறைந்த தர தொழிலாளர்களின் சம்பளத்துடன் ஒப்பிடும்போது நிலவும் ஒரு ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய 320 ரூபாய் (1.80 டாலர்) சம்பள உயர்வு கோரியே ஆர்.டி.யு.ஏ. இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

எந்தவொரு ஊதிய உயர்வையும் நிராகரித்தமையால் நிதியமைச்சர் மங்கள சமரவீராவுடனான பேச்சுவார்த்தைகள் கவிழ்ந்தன. இதை அடுத்து ஜூன் 21-22 திகதிகளில் புகையிரத ஊழியர்கள் தொழில்துறை நடவடிக்கையை எடுத்தனர். இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், தொழிற்சங்க கூட்டணி தொழில்துறை நடவடிக்கையை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு அடையாள வேலை நிறுத்தத்திற்கு கீழிறக்கியது. இப்போது தொழிற்சங்கங்கள் எந்தவொரு பிரச்சாரத்தையும் கைவிட்டுள்ளன.

அத்தியாவசிய சேவை உத்தரவின் படி, தடையை மீறும் எந்தவொரு தொழிலாளியும், “ஒரு நீதவான் முன்னிலையிலான சுருக்கமான விசாரணைக்குப் பின்னர், இரண்டு வருடங்களுக்கும் குறையாத ஐந்து வருடங்களுக்கு கூடாத கடுமையான சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படலாம்.” மேலதிகமாக, “தண்டிக்கப்பட்ட நபரின் அசையும் அல்லது அசையா அனைத்து சொத்துக்களையும் அரசாங்கம் பறிமுதல் செய்யக்கூடும்.”

ஊழியர்கள் “சட்டவிரோதமாக” வேலைநிறுத்தம் செய்து வருவதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகையிரத அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகையிரத பொது முகாமையாளர் திலந்தா பெர்னாண்டோ அளித்த உத்தியோகபூர்வ புகாரைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

புகையிரத வேலைநிறுத்த அவசரகால விதி விதிக்கப்பட்ட பின்னர், அரசாங்க ஊழியர்களின் முதலாவது தொழில்துறை வேலைநிறுத்த நடவடிக்கை இதுவாகும். ஜனாதிபதி சிறிசேன, மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று ஆடம்பர விடுதிகளை குறிவைத்து ஏப்ரல் 21 அன்று நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதலை, இந்த கொடூரமான நடவடிக்கைகளை நியாயப்படுத்த பற்றிக்கொண்டார்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மே 2 அன்று வெளியிட்ட அறிக்கையில், (“இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி சிறிசேனவின் பொலிஸ்-அரச நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவளிப்பதை கண்டனம் செய்கிறது ”) “பாரதூரமான, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை” கண்டித்ததுடன், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை அடக்குவதே இதன் பிரதான நோக்கம் என்று எச்சரித்தது. அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் இனவெறி அமைப்புகளுடனும் ஊடகங்களுடனும் வெளிப்படையாக இணைந்து தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக ஒரு முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டன.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அரசாங்கத்திற்குள் மோதல்கள் தொடர்ந்தாலும், அத்தியாவசிய சேவை விதிகளை சுமத்துவதில் அவர்களுக்கு இடையில் வேறுபாடுகள் எதுவும் கிடையாது. புகையிரத தொழிலாளர்களின் போராட்டம், ஏனைய துறை தொழிலாளர்களை தங்கள் சமூக உரிமைகளுக்காகப் போராட ஊக்குவிக்கும் என்று ஒட்டுமொத்தமாக ஆளும் வர்க்கமும் அஞ்சுகிறது.

வேலைநிறுத்த நடவடிக்கையை நிறுத்தும் போது, ஆர்.டி.யு.ஏ. அத்தியாவசிய சேவை உத்தரவு ஐ.எல்.ஓ. விதிமுறைகளுக்கு எதிரானது என்பதை அவர்களுக்கு உணர்த்தி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு ஒரு பரிதாபகரமான வேண்டுகோளை அனுப்பியது. இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் ஆர்.டி.யு.ஏ. பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றன.

இவை அனைத்தும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தைத் தடுப்பவையாகும். இதே கோரிக்கை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முந்தைய அரசாங்கத்தின் போது 2006 முதல் புகையிரத தொழிற்சங்க கூட்டணி டஜன் கணக்கான போராட்டங்களை நடத்தியது. கடந்த ஆகஸ்ட் மாதம் புகையிரத ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஆதரித்தனர், ஆனால் அரசாங்கம் அத்தியாவசிய சேவை உத்தரவை விதித்தபோது, ​​தொழிற்சங்கங்கள் எந்தவொரு நடவடிக்கையையும் கைவிட்டன.

ஏதாவது ஊதிய உயர் வழங்கப்பட்டால், மற்ற தொழிலாளர்கள் இதே போன்ற கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்று நிதியமைச்சர் சமரவீர நிராகரித்துள்ளார். "அவர்கள் [தொழிற்சங்கங்கள்] கூறும் அனைத்தையும் அரசாங்கம் ஒப்புக்கொண்டால் மற்ற துறைகளில் உள்ள தொழிலாளர்களின் சம்பள முரண்பாடுகளில் இன்னும் பெரிய பிரச்சினைகள் இருக்கும் என்று," என்று அவர் கூறினார்.

பண பற்றாகுறையை எதிர்கொள்ளும் கொழும்பு அரசாங்கம். நலன்புரி திட்டங்கள் மற்றும் விலை மானியங்களை குறைப்பதன் மூலம் 2020 இற்குள் பாதீட்டு பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அரசு நிறுவனங்களின் தனியார்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கல் குறித்தும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகிறது. நஷ்டத்தை விளைவிக்கும் நிறுவனமாக தீர்மானிக்கப்பட்டுள்ள புகையிரத துறை, விற்பனைக்கான தயாரிப்பில் வணிகமயமாக்கலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்களால் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவோ தொழில் மற்றும் ஒழுக்கமான வேலை நிலைமைகளுக்காகப் போராடவோ முடியாது என்பதை ஆர்.டி.யு.ஏ. இன் காட்டிக்கொடுப்பு மீண்டும் நிரூபித்துள்ளது. தர அடிப்படையில் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள், ஒரே துறைக்குள் ஒரு பிரிவின் தொழிலாளர்களை இன்னொரு பிரிவு தொழிலாளர்களுக்கு எதிராகத் தூண்டி விடுகின்றன, இது தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் முதலாளிகளின் கைகளைப் பலப்படுத்தவும் மட்டுமே செய்யும்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடந்த பின்னர், ​​தொழிற்சங்கங்கள், மே மாதம் திட்டமிடப்பட்ட ஆசிரியர்கள் போராட்டம் உட்பட போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் கைவிட்டன. எவ்வாறாயினும், ஆசிரியர்கள் மத்தியில் அதிகரிக்கும் கோபத்தின் மத்தியில், இந்த மாத நடுப்பகுதியில் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவை ஒழுங்கை பிறப்பிக்க அரசாங்கம் எடுத்த முடிவானது அனைத்து தொழிலாளர்களுக்கும் மற்றொரு எச்சரிக்கையாகும். தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ந்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில், ஆளும் வர்க்கம் பொலிஸ்-அரச ஆட்சி வழிமுறைகளைத் தயாரிக்கிறது.

தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் தொழிலாள வர்க்க அயல் பிரதேசங்களிலும், தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு புகையிரத தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

இத்தகைய போராட்டத்தை தொடர, அரசாங்கத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் எதிரான தாக்குதலுக்கு எதிராகப் போராட தொழிலாளர்களுக்கு ஒரு அரசியல் வேலைத்திட்டமும் கட்சியும் தேவை. தொழிலாள வர்க்கம் ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் அரசியல் ரீதியாக பிரிந்து, கிராமப்புற ஏழைகளையும் இளைஞர்களையும் தம்பின்னால் அணிதிரட்ட வேண்டும். சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராட வேண்டும். இந்த வேலைத் திட்டத்திற்காக போராடுவது சோ.ச.க. மட்டுமே.