ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Iran seizes UK tanker in Strait of Hormuz as danger of Middle East war mounts

மத்திய கிழக்கு போர் அபாயம் அதிகரிக்கின்ற நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் பிரிட்டனின் எண்ணெய் கப்பலை சிறைப்பிடிக்கிறது

By Jordan Shilton
20 July 2019

ஹோர்முஸ் ஜலசந்தியில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரான் கைப்பற்றியதும், மத்திய கிழக்கில் பிரதான சக்திகள் சம்பந்தப்பட்டுள்ள ஒரு பேரழிவுகரமான இராணுவ மோதல் அபாயம் வெள்ளியன்று அதிகரித்தது. அமெரிக்க போர்க்கப்பல் ஈரானிய ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியது என்றும், ஓர் அமெரிக்க வர்த்தக கப்பலுக்குத் துணையாக அமெரிக்க விமானப்படை அந்த ஜலசந்தி வழியாக ஆயுதமேந்திய வான் பாதுகாப்பை வழங்கி வருவதாக அறிவிக்க வேண்டியிருந்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த ஒரு நாளுக்குப் பின்னர் இது நடந்துள்ளது.

ஈரானிய பாதுகாப்பு படை வெள்ளியன்று அறிவிக்கையில் அது சர்வதேச கடல்எல்லை விதிகள் மற்றும் நெறிமுறைகளை மீறியதற்காக ஸ்ரேனா இம்பேரோ (Stena Impero) கப்பலைக் கைப்பற்றி இருப்பதாக அறிவித்தது. பிரிட்டிஷ் கொடியுடன் சென்ற சுவீடனுக்குச் சொந்தமான அக்கப்பல், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கையில் அதன் அலைவரிசை பரிமாறும் கருவிகளை அணைத்துவிட்டு, ஈரானிய எச்சரிக்கைகளுக்கு அது பதிலளிக்க மறுத்ததாக ஈரானிய ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன. ஸ்ரேனா இம்பேரோ கப்பல் சர்வதேச கடல்எல்லையில் பயணித்துக் கொண்டிருந்த போது அதை சிறிய படகுகளும் ஒரு ஹெலிகாப்டரும் சுற்றி வளைத்ததாக அக்கப்பலின் உரிமையாளர் குற்றஞ்சாட்டினார்.

பிரிட்டிஷ் நிறுவனமான Norbulk கப்பல் நிறுவனம் செயல்படுத்தும் மெஸ்டர் (Mesdar) என்ற இரண்டாவது கப்பல் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக ஆரம்பத்தில் பிரிட்டன் அரசாங்கம் கூறியது. ஆனால் "பாதுகாப்பு" மீறல்களைக் குறித்து எச்சரித்த பின்னர் அது தொடர்ந்து கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரானின் தலையாய தலைவர் அயெத்துல்லா காமெனி மற்றும் ஜனாதிபதி ஹசன் ருஹானி உட்பட உயர்மட்ட ஈரானிய அதிகாரிகள் ஒரு பெரிய ஈரானிய எண்ணெய் கப்பலான கிரேஸ் 1 (Grace 1) ஐ ஜிப்ரால்டர் கடல் எல்லையில் இம்மாத தொடக்கத்தில் பிரிட்டன் கைப்பற்றியதற்குப் பதிலடி கொடுக்க சூளுரைத்த பின்னர், இந்த பிரிட்டிஷ் கப்பல் கைப்பற்றல் சம்பவம் வருகிறது. கிரேஸ் 1 எண்ணெய் கப்பல் ஐரோப்பிய ஒன்றிய (EU) தடையாணைகளை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக பிரிட்டன் கூறிய நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், வெள்ளியன்று ஜிப்ரால்டர் உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 31 வரையில் கிரேஸ் 1 கப்பலின் தடுப்புக்காவலை நீடிப்பதாக அறிவித்தது.

ஜிப்ரால்டர் முதலமைச்சர் ஃபாபியன் பிக்கார்டோ இலண்டனில் பிரிட்டன் பிரதம மந்திரி தெரேசா மே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹன்ட் ஐ சந்தித்த பின்னர் அக்கப்பலின் தடுப்புக்காவல் நீடிக்கப்பட்டிருக்கிறது என்பது, அந்த முடிவிற்கான மூலாதாரம் ஜிப்ரால்டர் இல்லை, மாறாக பிரிட்டிஷ் அரசாங்கம் என்பதை தெளிவுபடுத்துகிறது.

பாரசீக வளைகுடாவில் அதிகரித்து வரும் போர் அபாயத்திற்கான பிரதான பொறுப்பு திட்டவட்டமாக அமெரிக்க ஏகாதிபத்தியமாகும், அது ஈரானுக்கு எதிரான அதன் ஆத்திரமூட்டல்களை இடைவிடாது தீவிரப்படுத்தி வருகிறது. மே 2018 இல், ட்ரம்ப் ஒருதலைபட்சமாக 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதுடன், பின்னர் அதன்மீது நாசகரமான பொருளாதார தடையாணைகளை மீளத்திணித்து, அப்பிராந்தியம் எங்கிலும் ஓர் இராணுவ கட்டமைப்பைத் தொடங்கியது. ஒரு விமானந்தாங்கி போர்க்கப்பலை நிலைநிறுத்தியமை, போர் சமயத்தில் மத்திய கிழக்கிற்கு 120,000 துருப்புகளை அனுப்புவதற்கான திட்டங்களை வகுத்தமை ஆகியவையும் அதில் உள்ளடங்கும். சவூதி விமானத்தளம் ஒன்றுக்கு 500 துருப்புகளை அனுப்ப இருப்பதாக புதன்கிழமை பென்டகன் அறிவித்தது, இங்கே பேட்ரியாட் ஏவுகணை தொகுப்பை நிறுவுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

எரிசக்தி வளம் நிறைந்த மற்றும் மூலோபாயரீதியில் முக்கியமான அப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் பொருளாதார மற்றும் புவிசார்அரசியல் நலன்களுக்கு ஈரானிய ஆட்சி முழுமையாக அடிபணிவதை ஏற்றுக்கொள்ளுமாறு அதை மிரட்டுவதே வாஷிங்டனின் நோக்கமாகும். அதேநேரத்தில், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் புவிசார் மூலோபாய போட்டியாளர்களுக்கு எதிராக, அனைத்திற்கும் மேலாக ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக, அதிரடியாக அதன் பிராந்திய மற்றும் உலகளாவிய மேலாதிக்கத்தை ஒன்றுதிரட்டுவதற்கு தீர்மானகரமாக உள்ளது.

கடந்த மாதம் ஈரானிய வான் பிரதேசத்திற்குள் நுழைந்த ஓர் அமெரிக்க உளவுபார்ப்பு ட்ரோனை ஈரான் சுட்டுவீழ்த்தியதற்குப் பதிலடியாக ஈரானிய ராடார் மற்றும் விமானப் பாதுகாப்பு தளங்கள் மீது பேரழிவுகரமான விமான தாக்குதல்களைத் ட்ரம்ப் தொடங்குவதற்கு வெறும் 10 நிமிடங்களே இருந்த போது, அப்பிராந்தியம் போரின் விளிம்பில் நின்றிருந்தது. வெள்ளிக்கிழமை அநாமதேயமாக CNN க்கு கருத்துதெரிவித்த ட்ரம்புக்கு நெருக்கமான ஆதாரநபர்களின் தகவல்படி, அந்த ஜனாதிபதி இடைநிறுத்தப்பட்ட அந்த தாக்குதலுக்குப் பின்னர் தெஹ்ரானை நோக்கிய அவரின் நிலைப்பாட்டை கடுமையாக்கி இருப்பதாகவும், இப்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதைக் குறித்து பெரும்பாலும் குறைவாகவே பேசுவதாகவும் தெரிவித்தனர். அந்த மோதல் தீவிரமடைந்தால், அவர் " பொருத்தமான நடவடிக்கைகள்" எடுக்க இருப்பதாக உடனிருப்பவர்களுக்கு அவர் தெரிவித்தார் என்பதையும் அந்த ஆதாரநபர்கள் சேர்த்துக் கொண்டனர்.

ட்ரம்ப் மற்றும் ஹன்ட் இருவருமே ஈரானுக்கு எதிராக புதிய அச்சுறுத்தல்களை விடுக்க இந்த Stena Impero கைப்பற்றலை சாதகமாக்கி கொண்டனர். வெள்ளை மாளிகையில் பேசுகையில், ட்ரம்ப் தெஹ்ரானை "தொந்தரவைத் தவிர வேறொன்றுமில்லை" என்று குறைகூறிய அதேவேளையில், ஹன்ட் கூறுகையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களைத் தொந்தரவுக்கு உள்ளாக்குவதை "ஏற்றுக் கொள்ளவியலாது" என்று கருத்துரைத்ததுடன், ஈரான் அக்கப்பலை விடுவிக்கவில்லை என்றால் "கடுமையான விளைவுகளைச்" சந்திக்கும் என்று எச்சரித்தார்.

அப்பிராந்தியத்தில் கப்பல்களின் "கடற்போக்குவரத்து சுதந்திரத்தை" பாதுகாப்பதற்காக ஒரு கூட்டணியை உருவாக்குவதன் மீது வெளியுறவுத்துறை 100 இராஜாங்க அதிகாரிகளின் ஒரு கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தியது. ஈரானுக்கான ட்ரம்பின் சிறப்பு பிரதிநிதி பிரைன் ஹூக் "கடற்போக்குவரத்து பாதுகாப்பை" உத்தரவாதப்படுத்த "கடற்படைகளின் கூட்டணி" ஒன்றை உருவாக்குமாறு அக்கூட்டத்தில் முறையிட்டார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் கோப்ரா அவசரகால பாதுகாப்பு குழு (Cobra emergency security council) கூட்டம் ஒன்றை கூட்டியது. இராணுவம் மற்றும் பெருவணிகங்களின் பிரிவுகள் பகிரங்கமாக ஈரானுக்கு எதிரான இராணுவ கட்டமைப்பை ஆமோதித்ததுடன், இராணுவ நடவடிக்கைக்கு வக்காலத்துவாங்கின. பிரிட்டனின் முன்னாள் தலைமை கடற்படை தளபதியும் முன்னாள் தொழிற் கட்சி அரசாங்க அமைச்சருமான லார்ட் வெஸ்ட் கூறுகையில், “நமது வணிக கப்பல்களில் ஒன்றை தாக்கியதன் மூலம் தீவிரப்பாட்டை ஏற்படுத்தியவர்கள் அவர்கள் தான், ஆகவே நமது வணிக கப்பல்களில் ஒன்றை அவர்கள் தாக்கினால், பின் அவர்கள் அவர்களுக்குரிய தகுந்த வெகுமதியைப் பெறுவார்கள்,” என்றார்.

பிரிட்டிஷ் கப்பல்துறை தொழிலக அமைப்பின் தலைமை நிர்வாகி Bob Sanguinetti அறிவிக்கையில், “இந்த சம்பவம் ஒரு தீவிரப்பாட்டைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. நாம் கட்டுப்பாடான விடையிறுப்புக்கு முறையிட்டு வந்தாலும், மேற்கொண்டு வணிக கப்பல்களின் பாதுகாப்பு என்பது வரக்கூடிய நாட்களில் அப்பிராந்தியத்தில் சுதந்திரமான வர்த்தக ஓட்டத்தை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் கூடுதல் பாதுகாப்பு கொண்டிருக்க வேண்டும்,” என்றார்.

இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து ஆட்சிகளினது பெரிதும் ஸ்திரமற்ற தன்மை மொத்தத்தில் மிகப் பெரியளவில் ஓர் இரத்தம்தோய்ந்த இராணுவ மோதல் அபாயத்தை ஏற்படுத்துகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்த சமீபத்திய சம்பவங்கள், ட்ரம்ப் நிலைகுலைக்கும் பாங்குள்ள சோசலிசவாதிகளுக்கு எதிராக அச்சுறுத்தியும் மற்றும் அவர் கொள்கைகளை விமர்சிப்பவர்களை அமெரிக்காவுக்கு விசுவாசமற்றவர்கள் என்று தாக்கியும் அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களை பாசிச வார்த்தைகளில் கண்டித்த வாரத்தின் இறுதியில் நடக்கின்றன. இந்த ஆக்ரோஷத்தன்மை, பாரிய பெரும்பான்மை உழைக்கும் மக்களால் கடிந்து கொள்ளப்படும் கொள்கைகளைக் கொண்டுள்ள ட்ரம்ப் அரசாங்கத்தின் ஆழ்ந்த நெருக்கடியை பிரதிபலிக்கிறது.

பிரிட்டிஷ் ஆளும் உயரடுக்கும் உழைக்கும் மக்களால் பாரிய அளவில் வெறுக்கப்படுகிறது. அது நடக்கவிருக்கும் பிரெக்ஸிட் உடன் சேர்ந்து, அமைதி காலத்தில் அதன் மிகப்பெரிய மூலோபாய நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதுடன், ஒரு தசாப்த கால கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்குப் பின்னர் முன்னொருபோதும் இல்லாத சமூக சமத்துவமின்மை மட்டங்களால் பிளவுபட்ட ஒரு நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மத்திய கிழக்கில் ஒரு மோதல் என்பது வர்த்தக மோதல்களின் அதிகரிப்பு மற்றும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளின் அதிகரிப்பு ஆகியவற்றுடன் சமீபத்திய ஆண்டுகளில் முன்பினும் ஆழமடைந்து வரும் நெருக்கடியால் உலுக்கப்பட்டுள்ள உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையை இன்னும் கூடுதலாக ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும். உலகின் மொத்த எண்ணெய் ஏற்றுமதிகளில் முழுமையாக ஐந்தில் ஒரு பங்கு எடுத்துச் செல்லப்படும் இந்த ஹோர்முஸ் ஜலசந்தியில் நடந்துள்ள வெள்ளிக்கிழமை சம்பவங்களே, எண்ணெய் விலைகளைப் பீப்பாய்க்கு 0.50 டாலர் அதிகரித்து 62.47 டாலராக அதிகரிக்க செய்ய போதுமானது.

வாஷிங்டனும் இலண்டனும் ஆரம்பித்த தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களுக்கு, பழிவாங்கும் நடவடிக்கையாக நடத்தப்பட்ட வணிக கப்பல்களின் ஈரானிய தடுத்துவைப்பு, தெஹ்ரானின் முதலாளித்துவ-மதகுருமார் ஆட்சியின் விரக்தி நிலையையும் பிரதிபலிக்கிறது. சமீபத்திய மாதங்களில் தெஹ்ரானில் உணவு விலைகள் 50 மற்றும் 100 சதவீதத்திற்கு இடையே உயர்ந்திருப்பதாக அசோசியேடெட் பிரஸ்சின் இந்தவார செய்தி ஒன்று எடுத்துக்காட்டியது. செப்டம்பர் 2018 மற்றும் மே 2019 இக்கு இடையே மாட்டிறைச்சியின் விலைகள் மும்மடங்கு உயர்ந்தன மற்றும் மாவு பொருட்களின் விலைகள் இரட்டிப்பாகின.

ஏற்கனவே ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகள் நாளொன்றுக்கு 2.5 மில்லியன் பீப்பாய்களில் இருந்து வெறும் 500,000 பீப்பாய்களாக குறைவதற்கு இட்டுச் சென்றுள்ள அமெரிக்க தடையாணைகளின் நாசகரமான பொருளாதார தாக்கம் இந்த கட்டுப்படுத்தவியலாத பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு நடைமுறையளவில் எந்த வழிவகையையும் விட்டு வைக்கவில்லை. இது, இதன் விளைவாக, ஈரானிய தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளிடையே ருஹானி ஆட்சிக்கு எதிரான சமூக எதிர்ப்பை எரியூட்டுகிறது.

பொருளாதார தடையாணைகளை நீக்குவதற்காகவும் மற்றும் எண்ணெய் ஏற்றுமதிகளுக்கும் அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் இதர பண்டங்களை உலக சந்தையிலிருந்து இறக்குமதி செய்வதற்கும் உதவும் வகையில், ஏகாதிபத்தியத்துடன் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளும் பிரயத்தனத்துடன் ஈரானிய ஆட்சி பொறுப்பற்று எதிர்நடவடிக்கை எடுத்து வருகிறது. அது எண்ணெய் கப்பல்களை தடுத்து வைத்திருந்தாலும், அதே நேரத்தில் அது பேச்சுவார்த்தைகளை தொடங்கவும் முன்வருகிறது.

வியாழக்கிழமை வெளியுறவுத்துறை அமைச்சர் மொஹம்மத் ஜாவித் ஜாரீஃப் வாஷிங்டனுக்கு ஒரு குறிப்பிடத்தக்க விட்டுக்கொடுப்பை முன்வைத்தார். அவர் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்திற்கான நியூ யோர்க் பயணத்தின் போது, அமெரிக்கா தடையாணைகளைத் தளர்த்திக் கொண்டால், அதற்கு பிரதியீடாக தெஹ்ரான் அதன் அணுஆலைகள் மீது நிரந்தரமான சர்வதேச கண்காணிப்பைக் கடுமையாக தீவிரப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளும் என்று அறிவுறுத்தினார். முன்னதாக, ட்ரம்ப் தடையாணைகளை நீக்கும் வரையில் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து விவாதிக்க முடியாது என்று ஜாரீஃப் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் வலியுறுத்தி இருந்தனர்.

அனுமானிக்கத் தக்கவாறு, ட்ரம்ப் மற்றும் ஏனைய அமெரிக்க அதிகாரிகளும் ஈரான் மீதான அழுத்தம் அதிகரிக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு முன்னதாக, ஜாரீஃப் இன் முன்மொழிவை நிராகரித்தனர். அமெரிக்க நிதித்துறை வியாழக்கிழமை பல நிறுவனங்களைத் தடைப்பட்டியலில் அறிவித்தது, இவை ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு மூலப்பொருட்களைக் கொள்முதல் செய்ய அதற்கு உதவியதாக வாதிட்டது.

Stena Impero கப்பல் சிறைபிடிக்கப்பட்ட பின்னர், அமெரிக்க மத்திய கட்டளையகத்திற்கான செய்தி தொடர்பாளர் லெப்டினென்ட் கர்னல் ஈர்ல் பிரௌன் கூறுகையில், ஹோர்முஸ் ஜலசந்தி நெடுகிலும் வான்வழி ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்தினார். அமெரிக்க கடற்படை அப்பிராந்தியம் வழியாக செல்லும் அமெரிக்க கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அது அவற்றுடன் தொடர்பில் இருப்பதையும் பிரௌன் சேர்த்துக் கொண்டார்.

ஏகாதிபத்திய ஆளும் உயரடுக்குகள், அப்பிராந்தியம் எங்கிலும் மற்றும் அதற்கு அப்பாலும் கணக்கற்ற மில்லியன் கணக்கானவர்களின் உயிர் வாழ்வை அச்சுறுத்தியவாறு, தொழிலாள வர்க்கத்தின் முதுகுக்குப் பின்னால், ஈரானுடன் ஒரு பேரழிவுகரமான இராணுவ மோதலைத் தொடங்குவதற்கான தயாரிப்பில் முன்னேறிய கட்டங்களில் உள்ளன. “கடற்போக்குவரத்து பாதுகாப்பை" நிலைநிறுத்துவதற்காக என்ற போர்வையில், அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளினது போர்க்கப்பல்கள், போர்விமானங்கள் மற்றும் துருப்புகளின் ஒரு தொகுதி, ஏற்கனவே வல்லரசு மோதல்களில் கொதித்து கொண்டிருக்கும் அப்பிராந்தியத்தில் மயிரிழையில் தூண்டிவிடப்படும் வகையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

ஆளும் வர்க்கத்தின் போர் சூழ்ச்சி மற்றும் அதற்கு மூலாதாரமாக விளங்கும் இந்த முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறையை எதிர்க்க தொழிலாள வர்க்க தலைமையில் ஓர் உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதே இப்போது முன்னிருக்கும் அவசர பணியாகும். ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கு மட்டுமே, ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு பொதுவான உலகளாவிய போராட்டத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் உழைக்கும் மக்களையும் மற்றும் ஈரானிலும் மத்திய கிழக்கு எங்கிலும் உள்ள அவர்களின் சமதரப்பினரையும் ஐக்கியப்படுத்தும்.