ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Police launch mass arrests on Bastille Day in Paris

பாரீஸில் பாஸ்டி தினத்தில் பொலிஸ் பாரிய கைது நடவடிக்கைகளை நடத்துகிறது

By Will Morrow and Alex Lantier
15 July 2019


பாஸ்டி தின அணிவகுப்பின் வேளையில்

1789 இல் பாஸ்டி சிறை தகர்ப்பில் இருந்து தொடங்கிய பிரெஞ்சு புரட்சிக்கு இருநூற்றி முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அரசாங்கம் நேற்று பாரீஸில் பாஸ்டி தினத்தன்று நன்கறியப்பட்ட "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களைச் சுற்றி வளைத்து, பாரிய முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஞாயிறன்று காலை பாரம்பரிய இராணுவ அணுவகுப்பில் சாம்ப்ஸ்-எலிசே வீதியில் மக்ரோன் மோட்டார் வாகனத்தில் பவனி வந்தபோது, அவர் வெறுப்பு கூச்சலுடன் ஏளனப்படுத்தப்பட்டார்.

பாரீஸ் பொலிஸ் உயரதிகாரிகளின் தகவல்படி, அந்நாள் நெடுகிலும் 175 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர், அவர்களில் பெரும்பான்மையினர் சாம்ப்ஸ்-எலிசே வீதியில் நடந்த வருடாந்தர இராணுவ அணிவகுப்பைச் சுற்றி இருந்த பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களாவர். ஏறத்தாழ அனைத்து கைது நடவடிக்கைகளும் "அங்கீகரிக்கப்படாத ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்த" குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இருந்தன.

பாரீஸ் பொலிஸ் உயரதிகாரி Didier Lallement ஒரு நாள் முன்னதாக, வெற்றிவிழா வளைவு, சாம்ப்ஸ்-எலிசே, கொன்கோர்ட், லூவ்ர், அன்வாலிட் மற்றும் ஈபிள் கோபுரம் உட்பட ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் பாஸ்டி தினத்தன்று “'மஞ்சள் சீருடையாளர்கள்' என்று கூறியவாறு" மக்கள் கூடுவதற்கு மூடிமறைப்பின்றி தடை விதித்தார். இந்த அசாதாரண பொலிஸ்-அரசு நடவடிக்கையானது, மக்கள் எந்த குற்ற நடவடிக்கையும் செய்திராத போதும், அவர்கள் அந்த இடங்களுக்கு வருவதிலிருந்து அவர்களின் அரசியல் நம்பிக்கைகளின் அடிப்படையில் தடுக்கப்படுகின்றனர் என்பதை அர்த்தப்படுத்தியது.

“மஞ்சள் சீருடை" பக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் ஒரு பேஸ்புக் நேரடி காணொளி, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களின் ஒரு குழுவை, மத்திய பாரீசில் ஒரு பொலிஸ் நிலையம் அருகே ஆள் அரவமற்ற தொழில்துறை பகுதி வழியாக அழைத்துச் செல்லும் ஒரு பொலிஸ் வேன், அவர்களை அடைத்து வைப்பதற்காக பொலிஸ் அமைத்திருந்த சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்ட வெறுமனையான பல கிடங்குகளைச் சென்றடைவதைக் காட்டுகிறது. “எங்களுக்காக நாஜிக்கள் காத்திருக்கிறார்கள்" என்றும், அவர்கள் "கொடூர சிறை முகாம்களுக்கு" கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் கைதிகள் கூச்சலிடுவதைக் கேட்க முடிகிறது.

சமூக சமத்துவமின்மைக்கு எதிராக கடந்தாண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட மற்றும் ஒவ்வொரு சனியன்றும் நடந்து வருகின்ற இந்த "மஞ்சள் சீருடை" போராட்டங்களுடன் தொடர்புபட்ட நன்கறியப்பட்ட பிரமுகர்களை இலக்கு வைத்து பொலிஸ் இதை நடத்தியது. Maxime Nicolle, Jerome Rodrigues மற்றும் Eric Drouet ஆகிய அனைவரும் கைது செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத ஆர்ப்பாட்டம் மற்றும் "கிளர்ச்சியை" ஒழுங்கமைத்த குற்றச்சாட்டுக்களின் மீது பல மணி நேரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பல மணி நேரங்களுக்குப் பின்னர், அனைத்து குற்றச்சாட்டுக்களும் கைவிடப்பட்டு வெளியில் விடப்பட்டனர்.

ஃபிரெட்லாந்து வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இது தடைசெய்யப்பட்ட பகுதியின் பாகமாக இல்லாத போதும், நிக்கோல் ஒரு பேஸ்புக் நேரடி காணொளி பதிவு செய்ததற்காக கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்வதற்கு முன்னதாக தலைகவசம் அணிந்த ஒரு டஜன் கலகம் ஒடுக்கும் பொலிஸின் மோட்டார் வாகனம் அவர் அருகே வந்து வட்டமடித்ததைக் காண முடிந்தது. நிக்கோல் இன் வழக்கறிஞராக செயல்பட்டு வரும் யுவான் பிரான்கோவின் தகவல்படி, “அங்கே செல்லலாம், அது தான் மூன்றாவது,” என்று ஒருவர் மற்றொருவருக்குக் கூறுவதைப் பொலிஸ் செவிமடுத்திருக்கக்கூடும்.

ஜனாதிபதி மக்ரோன் சாம்ப்ஸ் எலிசே வீதியில் பவனி வரும் போது அவரைப் புறமுதுகு காட்ட செய்யும் அளவுக்குத் தான் நிக்கோல் ஆர்ப்பாட்டத்தைத் திட்டமிட்டிருந்தார் என்பதை பிரான்கோ சுட்டிக்காட்டினார். “தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக-விரோத திருப்பத்தை எந்தளவுக்கு நாம் ஏற்றுக் கொள்ளலாம் என்பதை நமக்குநாமே கேட்டுக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்,” என்றார்.

சாம்ப்ஸ்-எலிசே வீதியின் பாஸ்டி தின அணிவகுப்பில் துருவே அசையாது நின்று போனில் படமெடுத்துக் கொண்டிருந்த போது, அங்கே கூட்டத்திலிருந்த சீருடை அணியாத பொலிஸ் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கைக்காக, பிரான்சின் 2015-2017 அரசரகாலநிலையை அடுத்து பொலிஸிற்கு வழங்கப்பட்ட அசாதாரண அதிகாரங்களுக்குத் தான் நன்றி கூற வேண்டும், இது ஐரோப்பாவில் எதேச்சதிகார ஆட்சிக்கான தயாரிப்புகள் முன்னேறிய நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஆயுதப்படைகளைக் கோரப்பற்களுடன் ஆயுதமயப்படுத்தி வருகின்ற அதேவேளையில் ஒரு சிறிய பெருநிறுவன உயரடுக்கின் கரங்களில் செல்வவளத்தைக் குவிக்கும் சிக்கன நடவடிக்கைகளை அதிகரிக்க தீர்மானகரமாக இருக்கும் ஆளும் உயரடுக்கு, மக்களின் எந்தவொரு சுதந்திரமான வெளிப்பாட்டையோ அல்லது தொழிலாள வர்க்க எதிர்ப்பையோ சகித்துக் கொள்ளாது.

சர்வதேச அளவில் ஆளும் வர்க்கங்கள் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை நோக்கியும் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக பாசிசவாத மற்றும் அதிவலது சக்திகளை ஊக்குவிப்பதை நோக்கியும் நோக்குநிலை ஏற்று வருகின்றன. அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகம் பாரியளவில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களைச் சுற்றி வளைக்க தொடங்கி உள்ளது. ஜேர்மனியில், அரசியல் ஸ்தாபகமும் ஊடகங்களும் நவ-பாசிசவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீட்டை (AfD) ஊக்குவித்து உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக சட்டபூர்வமாக்கி உள்ளன. நவ-நாஜி வலையயமைப்புகளுடன் நெருக்கமான தொடர்புகள் வைத்துள்ள ஒருவரால் ஒரு முக்கிய ஜேர்மன் அரசியல்வாதி வால்டர் லூப்க்க படுகொலை செய்யப்பட்டதை அது மூடிமறைத்துள்ளது.

“மஞ்சள் சீருடை" போராட்டங்கள் முடிந்துவிட்டதாக அறிவிக்க ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி வருகின்ற மக்ரோன் அரசாங்கம், அவர் அரசாங்கத்தை நோக்கி நிலவுகின்ற பாரிய வெறுப்பின் எந்தவொரு வெளிப்பாட்டையும் குறித்து பீதியடைந்துள்ளது. உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்ட்னர் நேற்று BFM-TV இக்குக் கூறுகையில், “இந்த அணிவகுப்பைத் தடுக்க விரும்புபவர்கள் யாராயினும் அவர்கள் வெட்கப்பட வேண்டும். இன்றைய தினம் தேச ஒற்றுமையின் தினம், தேசம் மதிக்கப்பட வேண்டுமென நான் நினைக்கிறேன்,” என்றார்.

பாஸ்டி தினம் கொண்டாட்டங்கள் எப்போதுமே பிரெஞ்சு இராணுவவாதத்தை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. அவை உத்தியோகபூர்வமாக பாஸ்டி சிறை தகர்ப்பு மற்றும் பிரெஞ்சு புரட்சியின் நினைவுதினத்தைக் குறிக்கின்றன என்றாலும், இந்த இராணுவ அணிவகுப்பு கொண்டாட்டம் வெறுமனே ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், பாரீசில் தொழிலாளர்களின் கம்யூனை நசுக்கி ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் மற்றும் 1870 பிராங்கோ-புரூஸ்சிய போரில் பிரான்சின் தோல்விக்குப் பின்னரும், 1880 இல் தான் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே இது ஆயுதப்படையைப் பெருமைப்பீற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.


நாள் முழுவதும் டாங்கிகளும் இதர இராணுவ வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்த ன்வாலிட்டை சிப்பாய்கள் சுற்றி வளைத்துள்ளனர்

இந்தாண்டு இந்த அணிவகுப்பு பிரான்சின் பறக்கும்-மிதவை சாகசவீரர் Franky Zapata இன் புதுமையான சாகசத்துடன் தொடங்கியது. மண்ணெண்ணெய் இல் எரியூட்டப்பட்ட மிதவையான அவரின் பறக்கும் எந்திரத்தில் நின்றவாறு, எந்தவித வெளிப்படையான காரணமும் இன்றி கீழே இருந்த பார்வையாளர்களை நோக்கி ஒரு தாக்கும் துப்பாக்கியைக் காட்டியவாறு, சாம்ப்ஸ்-எலிசே இல் அதை அவர் தரையிறக்கினார்.

பாஸ்டி தினத்தில் பாரம்பரிய பாரிய இராணுவ வன்பொருள் காட்சிப்படுத்தலுடன் தொடங்கிய இது, டொனால்ட் ட்ரம்பால் சமீபத்தில் ஜூலை நான்கு கொண்டாட்டத்தை இராணுவமயப்படுத்துவதற்கான ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. சுமார் 4,299 சிப்பாய்களும் அதிகாரிகளும் சாம்ப்ஸ்-எலிசே பாதையில் அணிவகுத்தனர். 67 போர்விமானங்கள், 40 ஹெலிகாப்டர்கள், 196 தரைவழி வாகனங்கள் மற்றும் 237 குதிரைகளும் அந்த அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன.

இராணுவ தளவாடங்கள் அந்நகரமெங்கிலும் நிலைநிறுத்தப்பட்டிருந்தன. பணியில் உள்ள துப்பாக்கியேந்திய துருப்புகள் அன்வாலிட் அருகே நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்தாண்டு அணிவகுப்பின் இராணுவவாத தன்மையானது, அதிகரித்து வரும் "வல்லரசு மோதல்" சூழலினாலும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் அதிலிருந்து சுதந்திரமாகவும் செயல்படத் தகைமை கொண்ட ஓர் ஐரோப்பிய இராணுவத்திற்கு மக்ரோன் அழுத்தமளித்து வருவதினாலும் இன்னும் அதிக வெளிப்படையாக இருந்தது. ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், டச்சு பிரதம மந்திரி மார்க் ரூட்டே, முன்னாள்-பெல்ஜிய பிரதம மந்திரி சார்லஸ் மிஷேல், மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மக்ரோன் ஜனாதிபதியின் பாரம்பரிய பாஸ்டி தின உரையில் ஓர் ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்திற்கான அழைப்பை மிக முக்கியத்துவத்துடன் குறிப்பிட்டார்.

“இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்குப் பின்னர் இந்தளவுக்கு ஐரோப்பா ஒருபோதும் அவசியப்பட்டிருக்கவில்லை. நாம் 70 ஆம் பிறந்ததினம் கொண்டாடி வரும் நேட்டோ கூட்டணியுடன் தொடர்புபட்டுள்ள, இந்த ஐரோப்பாவை ஒரு இராணுவ சக்தியாக கட்டமைப்பதே பிரான்சின் முன்னுரிமை,” என்று மக்ரோன் அறிவித்தார். “இதுவே இந்த அணிவகுப்பை பிணைக்கும் சிவப்பு நூலிழையாக அமைகிறது” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

பிரான்சின் ஆதாரவளங்கள் பாரியளவில் இராணுவத்திற்காக செலவிடப்படுமென சுட்டிக்காட்டி, பாஸ்டி தின அணிவகுப்புக்கு முந்தைய நாட்களில், மக்ரோன் பல தொடர்ச்சியான இராணுவ அறிவிப்புக்களை வெளியிட்டிருந்தார்.

கடந்த வாரம், மக்ரோனும் பிரெஞ்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரென்ஸ் பார்லியும் அணுஆயுதமேந்தும் புதிய ரக பிரெஞ்சு தாக்கும் நீர்மூழ்கிக்கப்பல்களில் முதலாவது கப்பலான Suffren ஐ தொடங்கி வைத்தார்கள். மக்ரோன் குறிப்பிடுகையில், நீர்மூழ்கிக்கப்பல் தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது போர்க்கப்பல்களைத் தாக்குவதற்கான பிரெஞ்சு திட்டங்களுக்கு மட்டுமல்ல, மாறாக பிரெஞ்சு அணுஆயுத போர் மூலோபாயத்திற்கே முக்கியமானது என்று வலியுறுத்தினார். பத்து பில்லியன் கணக்கான யூரோ செலவில் ஆறு புதிய நீர்மூழ்கிக்கப்பல்களைக் கட்டமைப்பது "நமது ஆற்றல்களைப் புதுப்பிப்பதற்கான அடையாளம், இதில் நமது பாரம்பரிய பலம் மட்டுமின்றி, மாறாக அணுஆயுத தடுப்புமுறையும் சம்பந்தப்பட்டிருக்கும்,” என்று மக்ரோன் அறிவித்தார்.

மக்ரோன் இவ்வாரயிறுதியில் பிரான்சின் விண்வெளி கட்டளையகத்தையும் தொடங்கி வைத்தார், இது விண்வெளியை இராணுவ நடவடிக்கைகளுக்கான எல்லையாக பிரெஞ்சு விமானப்படையின் களத்திற்குள் கொண்டு வருகிறது.

“இந்த புதிய இராணுவ வெளிக் கோட்பாட்டை எனக்கு இந்த [பாதுகாப்புத்துறை] அமைச்சர் தான் முன்மொழிந்தார். என்னால் அனுமதி வழங்கப்பட்ட அது, நமது விண்வெளி பாதுகாப்பை உறுதிப்படுத்த நம்மை அனுமதிக்கும், விண்வெளிக்கு நன்றி. விண்வெளி நிலைமையைப் பற்றிய நமது புரிதலைப் பலப்படுத்துவோம், செயலூக்கமான அணுகுமுறைகள் உட்பட நாம் சிறந்த முறையில் நமது செயற்கைக்கோள்களைப் பாதுகாப்போம். இந்த கோட்பாட்டுக்குப் பலம் சேர்க்கவும், விண்வெளியில் நமது ஆற்றல்களை அபிவிருத்தி செய்வது மற்றும் மீளப்பலப்படுத்துவதை உறுதி செய்யவும், ஒரு மிகப்பெரிய விண்வெளி கட்டளையகம் விமானப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது,” என்றவர் குறிப்பிட்டார்.