ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

SEP wins support for Assange and Manning at Sri Lanka’s Peradeniya university

இலங்கையில் சோ.ச.க. பேராதனை பல்கலைக்கழகத்தில் அசான்ஜ் மற்றும் மானிங்கிற்கான பிரச்சாரத்திற்கு ஆதரவை வெல்கிறது

By our reporters 
29 June 2019

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் ஜூன் 25 அன்று, கண்டியில் பேராதனை பல்கலைக்கழகத்தில் ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மனிங்கையும் பாதுகாத்து பிரச்சாரம் செய்தனர்.

தண்டனை விதிக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனருக்கும் தைரியமாக தகவல் அம்பலப்படுத்தியவருக்கும் அப்பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள், கல்வியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ஜூன் 20 அன்று உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு வெளியிட்ட ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதை தடுக்கும் ஓர் உலகளாவிய பிரச்சாரத்திற்காக! என்ற அறிக்கையை மையமாகக் கொண்டு கலந்துரையாடல் செய்யப்பட்டன.


பாணி விஜேசிறிவர்தன

2012 ஆம் ஆண்டில் அவருக்கு அரசியல் புகலிடம் வழங்கப்பட்ட ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், லண்டனின் பெல்மார்ஷ் சிறையில் அசான்ஜ் கடுமையான நிலையில் வைக்கப்பட்டுள்ளார். ஆயுள் தண்டனை அல்லது மரணதண்டனை கூட விதிக்கக் கூடிய, உளவுபார்ப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள, அவரை ஒப்படைக்குமாறு பிரிட்டனிடம் ட்ரம்ப் நிர்வாகம் கோருகிறது. அசான்ஜிற்கு எதிராக சாட்சியமளிக்க தைரியமாக மறுத்ததற்காக மானிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் அருகே தொடங்கியது. அங்கு ஒரு பதாகையும் அத்துடன் அரசியல் இலக்கியங்கள் கொண்ட மேசையும் வைக்கப்பட்டிருந்தன. அசான்ஜ் மற்றும் 2010 இல் அவர் முதன்முதலில் கைது செய்யப்பட்டதிலிருந்து அவரது பாதுகாப்புக்காக உலக சோசலிச வலைத் தளம் செய்த பிரச்சாரம் பற்றிய விவரண வீடியோவும் காண்பிக்கப்பட்டது.

விஞ்ஞான மாணவி சஷிகலா, அமெரிக்காவிலும் பிற அரசாங்கங்களிடமிருந்தும் இரகசிய தகவல்களை திருடிய அசான்ஜை ஒரு துரோகி என்று சித்தரித்த ஊடகக் கட்டுரைகளை பார்த்ததாக WSWS இடம் கூறினார். "அசான்ஜ் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நான் இப்போது காண்கிறேன். மானிங் மற்றும் அசான்ஜ் அமெரிக்க போர்க் குற்றங்களை உலகுக்கு அம்பலப்படுத்திய மாவீரர்கள்.”

மற்றொரு விஞ்ஞான பீட மாணவியான மேதாவினி கருத்துத் தெரிவிக்கையில்: “அசான்ஜ் மற்றும் மானிங் பற்றி நான் கேள்விப்படுவது இதுவே முதல் முறை. அசான்ஜ் போன்ற ஒரு பத்திரிகையாளரையும், மானிங் போன்ற அரசாங்க குற்றங்களை வெளிப்படுத்திய ஒருவரையும் இலங்கை ஊடகங்கள் ஏன் பாதுகாக்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது ஒரு முக்கியமான பிரச்சினை. அசான்ஜின் துன்புறுத்தலுக்கும் இலங்கையில் ஜனநாயகம் மீதான தற்போதைய தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்வது சரியானது.”


டெனிஷன் (இடது) சமுடித்த

விவசாய பீட மாணவனான டெனிஷன் கூறியதாவது: “அசான்ஜ் பற்றி எனக்கு சிறிதே தெரிந்து இருந்தது. இப்போது அவரைப் பற்றிய உண்மை எனக்குத் தெரியும். அவர் நிச்சயமாக ஒரு ’உண்மையான மனிதர்’. போர்க்குற்றங்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பது ஜனநாயகமா?”

அருகிலுள்ள கலஹா சந்தியில் டசின் கணக்கான பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சோ.ச.க.-ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சார தகவல் மேசையை பார்வையிட்டனர்.

ஆசிரியரான பஸ்நாயக்க, அசான்ஜின் செயல்பாடு மற்றும் விக்கிலீக்ஸினதும் முக்கியத்துவத்தை உணர்ந்ததாக கூறினார். "பிற அரசியல் கட்சிகள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை. அவர்கள் செய்வது உண்மையை அடக்குவதுதான்.”

விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய போர்க்குற்றங்களை பற்றி அறிந்து கொள்வதில் எஸ்.சுபாவித்தரன் மற்றும் கே. அன்னதீர் என்ற இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர், மேலும் சோசலிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டம் என்ற சிறுநூலை வாங்க முடிவு செய்தனர்.


எஸ். சுபாவித்தரன் (இடது) கே. அன்னதீர்

மாலை 4 மணிக்கு. சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் கல்வியாளர்கள் மற்றும் கல்விசாரா பல்கலைக்கழக தொழிலாளர்கள் இணைந்திருந்தனர். பங்கேற்பாளர்கள் "அசான்ஜ் மற்றும் மானிங்கை விடுதலை செய்!", "இணைய தணிக்கை எதிர்த்திடு!", "சர்வதேச சோசலிசத்திற்காகப் போராடு!" மற்றும் "கருத்து சுதந்திரத்தில் கைவைக்காதே" உள்ளிட்ட கோஷங்களை முழங்கினர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை எழுத்தாளர் சக்திக சத்குமாராவின் பிரச்சினையையும் அவர்கள் எழுப்பினர். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடட்ட ஒரு சிறுகதையில் பௌத்த மதத்த இழிவுபடுத்தியதாக பௌத்த அதிதீவிரவாதிகள் பொய்யான முறைப்பாட்டை செய்ததை அடுத்து, தொடர்ந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர், சோ.ச.க அரசியல் குழு உறுப்பினர் பாணி விஜேசிறிவர்தன பார்வையாளர்கள் முன் உரையாற்றினார். அவரது உரையை மற்றொரு அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா தமிழில் மொழிபெயர்த்தார்.

அசான்ஜ் மற்றும் மானிங் மீதான அச்சுறுத்தல்கள் சர்வதேச அளவில் ஆளும் வர்க்கங்களின் வலதுசாரி மாற்றத்தினதும் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான அவர்களின் தாக்குதல்கள் தீவிரமடைவதனதும் கூர்மையான வெளிப்பாடாகும் என்று விஜேசிறிவர்தன விளக்கினார். "ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க, தொழிலாள வர்க்கம் அசான்ஜைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டும்," என்று அவர் கூறினார்.


விஜேசிறிவர்தன தொலைத் தொடர்பு ஊழியர்களுடன் கலந்துரையாடுகிறார்

மூன்றாம் உலகப் போரின் விளிம்பிற்கு உலகைக் கொண்டு வந்த ஈரானுக்கு எதிரான அமெரிக்க நிர்வாகத்தின் நடவடிக்கைகள் உள்ளிட்ட அதிகரித்துவரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் குறித்து பேச்சாளர் கவனத்தை ஈர்த்தார். "விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள விடயங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான முகம் மற்றும் உலக மோதலின் அச்சுறுத்தல் குறித்து மக்களின் நனவை உயர்த்த பெரிதும் உதவியது," என்று அவர் கூறினார்.

அசான்ஜ் மற்றும் மானிங்கின் சுதந்திரத்தை பாதுகாப்பதானது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ஒரு அடியாகவும், சர்வதேச அளவில் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கான வெற்றியாகவும் இருக்கும் என்று விஜேசிறிவர்தன கூறினார். "எனவே தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவரையும் அணிதிரட்டுவதற்காக உலகளாவிய பாதுகாப்புக் குழுவை அமைப்பதற்கான எங்கள் அழைப்பினது முக்கியத்துவம் இதுவே ஆகும்."

இலங்கையில் நிகழ்வுகள் உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாகும் என்று விஜேசிறிவர்தன தெரிவித்தார். "கடுமையான ஜனநாயக விரோத சட்டங்களுடன் ஆயுதபாணியாக்கப்பட்ட இராணுவத்தையும் பொலிஸையும் வேலைத் தளங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தெருக்களிலும் நிறுத்துவதன் பேரில், இலங்கை ஆளும் உயரடுக்கின் அனைத்து பிரிவுகளும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை தெரிந்தே நடக்க அனுமதித்தன.

"மாணவர் செயற்பாட்டாளர்களை வேட்டையாடப் பயன்படுத்தக் கூடியவாறு சி.சி.டி.வி. கமராக்களை பொருத்துவதை பேரதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று எதிர்க்கின்றனர்.... இந்த தாக்குதல்கள் அனைத்தும் இறுதியில் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்க்கின்ற தொழிலாள வர்க்கத்தை இலக்காகக் கொண்டவை."

அசாஞ்ஜை விடுவிப்பதற்கான சர்வதேச பிரச்சாரத்தில் இணைய பல இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் தொடர்பு விவரங்களை வழங்கினர்.