ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

European elections: German voters register strong opposition to grand coalition

ஐரோப்பிய தேர்தல்கள்: ஜேர்மன் வாக்காளர்கள் பெரும் கூட்டணியை பலமாக எதிர்த்து வாக்களித்துள்ளனர்

By Ulrich Rippert 
29 May 2019

பல ஜேர்மன் வாக்காளர்கள் பெரும் கூட்டணியின் வலதுசாரிக் கொள்கைகளை நிராகரிப்பதற்கு தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். ஆனால் தாங்க முடியாத மோசமான வேலைநிலைமைகள், உயர்ந்து வரும் வாடகை மற்றும் இராணுவவாதத்தின் அதிகரிப்பு ஆகியவற்றின் மீதான கோபம் ஐரோப்பிய தேர்தலின் கட்டமைப்பினுள் எந்த நனவான அரசியல் வெளிப்பாட்டையும் காண முடியவில்லை. மாறாக, அது பசுமைக் கட்சியையும் பல சிறிய கட்சிகளையும் வலுப்படுத்துவதில் சென்று முடிவடைந்துள்ளது.

கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியும் (CDU) சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) 18 சதவிகித வாக்குகளை இழந்ததன் மூலம் தங்கள் வரலாற்றில் மிக மோசமான முடிவுகளை பதிவுசெய்தன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய தேர்தலுடன் ஒப்பிடுகையில், கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி (CDU) மற்றும் கிறிஸ்துவ சமூக யூனியன் (CSU) ஆகியவை 6.4 சதவிகித புள்ளிகளை இழந்து 28.9 சதவிகிதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. SPD 11.5 சதவிகித புள்ளிகளை இழந்து, வெறும் 15.8 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2017 ஆம் ஆண்டு கூட்டாட்சி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், SPD 3.6 மில்லியன் வாக்குகளையும் CDU / CSU 4.5 மில்லியன் வாக்குகளையும் இழந்துள்ளன.

பெரும் கூட்டணியின் வலதுசாரிக் கொள்கைக்கு எதிராக அணிதிரட்டலில் இம்முறை 13.3 சதவீத வாக்காளர் அதிகமாக வாக்களிக்க சென்றனர். இது 61.4 சதவீதமாக இருந்தது.

இளம் வாக்காளர்களில், அரசாங்கத்திற்கான எதிர்ப்பானது இன்னும் அதிகமாக வெளிப்பட்டது. 18 இற்கும் 29 இற்கும் இடைப்பட்ட வயதுப் பிரிவில், SPD வெறும் 9 சதவிகித வாக்குகளைப் பெற்ற அதே வேளையில் CDU / CSU 13 சதவிகிதத்தை பெற்றது. 30 முதல் 44 வயதிற்குட்பட்டவர்களில் கூட SPD 12 சதவீத வாக்குகளையே பெற்றது.

இடது கட்சி அரசாங்கத்திற்கான எதிர்ப்பிலிருந்து எந்தவொரு நன்மையையும் அடையவில்லை. மாறாக, வாக்காளர்கள் இடது கட்சியையும் தண்டித்தனர். இடது கட்சி ஒரு எதிர்ப்பு சக்தியாக கருதப்படுவதில்லை, மாறாக அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பகுதியாக நோக்கப்படுகின்றது. இது 5.5 சதவிகித வாக்குகளை வென்றது, கடந்த ஐரோப்பிய தேர்தல்களை விட 2 சதவிகிதம் குறைவாகவும், கடந்த கூட்டாட்சி தேர்தலில் இருந்ததை விட 3.7 சதவிகிதம் குறைவாகவும் இருந்தது.

மாநில அரசாங்க தலைவரான இடது கட்சியின் போடோ ராமலோ இருக்கும் முதலாளித்துவ சார்பு மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளில் ஈடுபட்டுள்ள ஒரு அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் இடது கட்சி அரசாங்கத்தில் இருக்கும் துருங்கியா போன்ற பகுதிகளில், ஆதரவு பெருமளவில் குறைந்து 8.7 சதவிகிதமாக இருந்தது.

ஐரோப்பிய தேர்தலில் அதே நேரத்தில் நடைபெற்ற பிரேமன் மாநில தேர்தலும் இதே போன்ற ஒரு பெறுபேறே வெளியானது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து, கடந்த 74 ஆண்டுகளாக SPD ஆனது பிரேமனில் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்ததுடன் அங்கு மிகப் பெரிய கட்சியாக இருந்தது. ஆனால் SPD, 8.2 சதவிகித வாக்குகளை இழந்து, வெறும் 23.9 சதவிகிதம் மட்டுமே பெற்று CDU க்குப் பின் இரண்டாவது இடத்திற்கு வீழ்ந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் பசுமைக் கட்சியினருடன் இணைந்து SPD ஆல் திணிக்கப்பட்ட இரக்கமற்ற சிக்கன திட்டத்திற்கு செலுத்தப்பட்ட விலை இதுவாகும்.

பெரும் கூட்டணிக்கு எதிரான வாக்குகள் வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சிக்கு (AfD) எதிராகவும் இருந்தது. தீவிர வலதுசாரி கட்சியான AfD 2014 இல் அதன் முதல் ஐரோப்பிய தேர்தலில் பெறப்பட்ட 7.1 சதவிகிதத்திலிருந்து அதன் விளைவை மேம்படுத்த முடிந்தது; இது 11 சதவிகிதத்தை வென்றது. ஆனால் அது 2017 கூட்டாட்சி தேர்தலில் பெற்ற 12.7 சதவீதத்தை விட 1.7 மில்லியன் குறைவான வாக்குகளைப் பெற்றது. ஊடகங்கள் வேண்டுமென்றே தீவிர வலதுசாரிகளுக்கு ஊக்கமளித்தன என்ற உண்மைக்கு மத்தியில், அவர்கள் பாரிய வெற்றிகளை பெறலாம் என்று முன்கூறியிருந்தனர்.

பெரும் கூட்டணி எதிர்ப்பின் முக்கிய பயனாளிகளான பசுமை கட்சியினர், தங்கள் வாக்குகளை இரட்டிப்பாகி கிட்டத்தட்ட 20.5 சதவிகிதம் பெற்றனர். 30 வயதிற்குட்பட்ட வாக்காளர்களில் பசுமை கட்சியினர் 29 சதவிகித வாக்குகளைப் பெற்றனர். இந்த வயதுப் பிரிவில், கூட்டாட்சி பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத சிறிய கட்சிகள் 27 சதவீத வாக்குகளைப் பெற்றன. ஒட்டுமொத்தமாக, இந்த சிறிய கட்சிகள் 13 சதவிகிதத்தை வென்றன. உதாரணமாக, “The Party” இரண்டு ஆசனங்களை வென்றது. தேர்தல் பிரச்சாரத்தின்போது முக்கியமாக அகதிக் கொள்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவமயமாக்கல் ஆகியவற்றின் மீதான விமர்சனத்தை இது மையமாகக் கொண்டிருந்தது.

பல மக்கள் பசுமைக் கட்சிக்கு வாக்களித்தனர். ஏனெனில் அவர்கள் காலநிலை மாற்றத்தின் பிரச்சினையில் மையக் கவனம் செலுத்தியதால், ஒரு இடதுசாரி மாற்றாக மக்களால் உணரப்பட்டனர். ஆனால் இது ஒரு அவநம்பிக்கையாகும். சமீபத்திய ஆண்டுகளில், பசுமைவாதிகள் ஜேர்மன் இராணுவவாதத்தின் கட்சியாக வெளிப்பட்டு, அனைத்து வெளிநாட்டு இராணுவத் தலையீட்டையும் ஆதரிப்பதோடு அதிகரித்த பாதுகாப்பு செலவினங்களையும் கோருகின்றனர். அவை 16 ஜேர்மன் மாநில அரசாங்கங்களில் 9 இடங்களில் அங்கத்துவம் வகிப்பதுடன் பசுமைக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் பாடன் வூர்ட்டெம்பேர்க் மாநிலத்தில் முதலமைமைச்சராக பதவி வகிக்கிறார். பசுமைக் கட்சியினர் எந்த அரசாங்கத்தில் இருந்தாலும், அ்வர்கள் சமூக செலவின வெட்டுக்கள், இராணுவமயமாக்கல் மற்றும் அகதிகளை நாடு கடத்தப்படுதல் ஆகியவற்றில் மற்ற அனைத்து கட்சிகளையும் போலவே ஈடுபட்டுள்ளதை காட்டுகிறது.

தேர்தலன்று இரவு, பசுமைக் கட்சியின் முன்னணி வேட்பாளர் மைக்க ஷேபர், பிரேமனில், பசுமைவாதிகள் தங்கள் வலதுசாரி அரசியலை தொடருவர் என்று சுட்டிக் காட்டினார். "நாங்கள் கடன் முறிப்பைக் காப்பாற்ற வேண்டும், கடன்களை அகற்ற வேண்டும்," என்று அவர் அரச தொலைக்காட்சி ARD இடம் கூறினார்.

பெரும் கூட்டணியின் கட்சிகள் தேர்தல் இரவு அன்றே, அவர்கள் தேர்தல்களில் தண்டிக்கப்பட்ட வெறுக்கத்தக்க கொள்கைகளை இன்னும் தொடர்வதற்கு தங்கள் விருப்பத்தை அறிவித்தனர். முன்னாள் SPD தலைவரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான சிக்மார் காப்பிரியேல் இதை மிகவும் வெளிப்படையாக அறிவித்தார். “Anne Will” என்னும் உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், தேர்தல் பிரச்சாரத்தின் அதன் ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கைக்கு SPD மேலும் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

முக்கிய பிரச்சினை "உலகில் ஐரோப்பாவின் இறையாண்மை" என்று அவர் கூறினார். இது "முற்றிலும் பைத்தியம் நிறைந்த உலகில் ஐரோப்பா தன்னை உறுதிப்படுத்துகிறது." அமெரிக்காவும் சீனாவும் ஒன்றிணைந்து பேசவும், அனைத்தையும் கட்டுப்படுத்தவும் ஐரோப்பா அனுமதிக்காது என்று அவர் மேலும் கூறினார். ஆனால் இப்போது G-2 இற்கு பதிலாக தலையீடு செய்ய " நாங்கள் உட்பட குறைந்தபட்சம் G-3 " ஒன்று தேவை என்றார்.

CDU தலைவர் Annegret Kramp-Karrenbauer திங்களன்று ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து சுதந்திர வரம்பைக் கட்டுப்படுத்த வலியுறுத்தினார். தேர்தலுக்கு முன்னால் CDU பற்றி விமர்சன கருத்துக்களை பிரசுரித்த YouTube இன் ஒரு குழுவை அவர் “கருத்துக்களை திரிப்பதாக” குற்றஞ்சாட்டியதுடன் "இலத்திரனியல் துறையில்" புதிய கட்டுப்பாடுகளை கோரினார்.

முழு ஆளும் உயரடுக்கும், குறிப்பாக இளம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடையே, உயர்ந்து வரும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பிற்கு, மேலும் வலதுசாரி திசையை நோக்கி திரும்புவதுடன், இராணுவவாத கொள்கைகளை தீவிரப்படுத்தி, சமூக செலவினங்களை குறைத்து, அரச இயந்திரத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வலுப்படுத்துவதன் மூலம் பதிலளிக்கின்றது.

இது தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் மோதலை தீவிரப்படுத்தும். ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின்போது, பேர்லினில் 40,000 பேர் அதிகரிக்கும் வாடகைக் கொடுப்பனவுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர் மற்றும் வீட்டுஉடமை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று கோரினர். இந்த ஆண்டு தொடக்கத்தில், பல்லாயிரக்கணக்கான அரசதுறை தொழிலாளர்கள்,  பள்ளிகளில் பயங்கரமான நிலைமைகள், தாங்கமுடியாத வேலை நிலைமைகள் மற்றும் குறைந்த ஊதியங்கள் ஆகியவற்றை எதிர்த்து கூட்டுப் பேரணியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மார்ச் மாதம், பேர்லினில் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

இந்த வளர்ந்து வரும் தீவிரமயமாக்கல் ஐரோப்பிய மற்றும் உலகளாவிய போக்குகளின் ஒரு பாகமாகும். பிரான்சில், 'மஞ்சள் சீருடை' இயக்கம் தணிந்துபோவதன் அறிகுறிகளைக் காட்டவில்லை. பொலிஸ் கொடூரமும், விரோதமான ஊடக பிரச்சாரமும் இருந்தபோதிலும், குறைந்த ஊதியங்கள், சமூக சமத்துவமின்மை மற்றும் மக்ரோன் அரசாங்கம் ஆகியவற்றிற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் பல வாரங்களாகப் போராட்டத்தை நடத்துகின்றனர்.

போலந்தில், வலதுசாரி சட்டம் மற்றும் நீதிக் கட்சியின் (PiS) அரசாங்க கொள்கைக்கு எதிராக 300,000 க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். போலந்தில் பல தசாப்தங்களுக்கு பின்னர் முதல் தேசிய வேலைநிறுத்தம் இதுதான். மேலும், ருமேனியா, ஹங்கேரி, செக் குடியரசு, சேர்பியா மற்றும் கொசோவோ ஆகியவற்றில் கார் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழில்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களை ஆரம்பித்தனர். பணியாளர்களுக்கு மேலதிக நேர வேலைகளை வழங்குவதோடு ஜேர்மனிய நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகின்ற வலதுசாரி அரசாங்கத்தின் "அடிமைச் சட்டம்" என்று அழைக்கப்படுவதற்கு எதிராக ஹங்கேரியில் வெகுஜன எதிர்ப்புக்கள் நிகழ்ந்தன.

இந்த வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஆரம்பம் மட்டுமே. அரசாங்கத்தின் வலதுசாரிக் கொள்கைகளின் மத்தியில், அவை தவிர்க்க முடியாமல் வளர்ந்து, பெரும் கூட்டணியுடன் மட்டுமல்லாமல், ஜேர்மனிய ஆளும் உயரடுக்குடனும் முரண்படும்.

இந்த போராட்டங்களை தயாரிக்கவும், ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தில் அவர்களை ஆயுதபாணியாக்கவும் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) தேர்தல் பிரச்சாரத்தில் பங்குபெற்றது. ஜேர்மனியிலும் ஐரோப்பா எங்கிலும் ஒரு தொடர் தேர்தல் கூட்டங்களில், SGP, அதன் ஐரோப்பிய சகோதரக் கட்சிகளுடன் இணைந்து, ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது; இப்போது அது தீர்க்கமான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இந்த அடிப்படையிலும், செய்தி ஊடக இருட்டடிப்பு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தையும் சமூக ஊடகங்களையும் தணிக்கை செய்வதற்கான முயற்சிகள் இருந்த போதிலும்கூட, SGP 5,300 வாக்குகளை பெற்றதுடன் புதிய தொடர்புகளையும் அங்கத்தவர்களையும் வென்றுகொண்டது.