ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron moves to prosecute journalists who revealed French arms sales in Yemen war

யேமன் போரில் பிரெஞ்சு ஆயுதங்கள் விற்பனைகளை வெளியிட்ட பத்திரிகையாளர்களை மக்ரோன் வழக்கில் இழுக்க நகர்கிறார்

By Will Morrow
26 April 2019

ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திர பேச்சு மீதான தொலைநோக்கு கொண்ட ஒரு தாக்குதலில், இமானுவல் மக்ரோனின் அரசாங்கம் யேமனில் சவூதி அரேபியாவின் சட்டவிரோத போரில் பிரெஞ்சு உடந்தையாய் இருந்ததையும் அத்துடன் அதை மூடிமறைப்பதில் மக்ரோன் அரசாங்கத்தினது முயற்சிகளையும் அம்பலப்படுத்தி உள்ள பத்திரிகையாளர்களை வழக்கில் இழுக்க நகர்ந்து வருகிறார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள், Intercept, Radio France, Mediapart, Arte Info மற்றும் Konbini ஆகியவற்றுடன் சேர்ந்து, பத்திரிகைத்துறை அமைப்பான Disclose ஏப்ரல் 15 இல் வெளியிட்ட ஓர் அறிக்கைக்கு விடையிறுப்பாக உள்ளன. அந்த அறிக்கை, யேமனில் பிரெஞ்சு ஆயுதங்களின் பயன்பாடு குறித்த துல்லியமான தகவலுடன், கடந்தாண்டு செப்டம்பரில் இருந்து ஜனாதிபதி மற்றும் முன்னணி அமைச்சர்களுக்கான ஒரு கசியவிடப்பட்ட இரகசிய உளவுத்துறை செய்தியை உள்ளடங்கி உள்ளது. பத்தாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ள அந்த போரில் பிரெஞ்சு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மக்ரோன் அரசாங்கம் கூறுவது பொய்கள் என்பதை அது நிரூபிக்கிறது.

அந்த வெளியீடுகள் குறித்த விசாரணைக்காக Disclose இன் துணை-ஸ்தாபகர்கள் Geoffrey Livolsi மற்றும் Mathias Destal, அத்துடன் ரேடியோ பிரான்சின் Benoit Collombat ஆகியோருக்கு பொலிஸ் முன் ஆஜராகுமாறு நேற்று உத்தரவு பிறக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு, கடந்த புதனன்று மதியம், Disclose உம் மற்றும் அதன் பங்காளிகளும் ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டனர்.

“பாரீஸ் வழக்குதொடுனர்கள் 'தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் வெளியிட்டதற்கான' ஓர் ஆரம்ப விசாரணையைத் தொடுத்துள்ளதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது,” என்று அது குறிப்பிடுகிறது. அந்த விசாரணையை உள்நாட்டு உளவுத்துறை முகமையான உள்நாட்டு பாதுகாப்புக்கான பொது இயக்குனரகம் (DGSI) நடத்துகிறது.

பத்திரிகை சுதந்திரம் மீதான மக்ரோன் அரசாங்கத்தின் தாக்குதலைக் கண்டித்து, Disclose அறிக்கை குறிப்பிடுகிறது: “Disclose மற்றும் அதன் பங்காளிகள் இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை பெரிதும் பொதுநலனைக் காட்டுகின்றன: அரசாங்கம் எதை மறைக்க முயல்கிறது என்பது குறித்து குடிமக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் தெளிவுபடுத்துகிறது. போர் குற்றங்களுக்காக குற்றஞ்சாட்டப்படும் நாடுகளுடன் பிரான்ஸைத் தொடர்புபடுத்தும் வகையில் ஆயுத பேரங்கள் மீதான சமநிலைப்பட்ட விவாதம் நடத்தப்பட்டதற்கான தவிர்க்கவியலாத தகவல் அது.”

“பத்திரிகையாளர்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளின் நோக்கம் எங்களின் ஆதாரநபர்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதை தவிர வேறொன்றுமில்லை. நடைமுறையில், ஆஜராகுமாறு DGSI உத்தரவு பிறப்பித்திருப்பது, நாங்கள் யாரிடம் இருந்து இவற்றை பெற்றிருந்தோமோ, இந்த குற்றத்திற்குக் காரணமானவர்களை, பொதுநலனுக்காக தகவல்களைப் பகிர்வதற்கு அனுமதித்தவர்களைக் கண்டறிவதற்கான ஓர் ஆரம்பமாக உள்ளது.

“தெளிவாக கூறுகிறோம். இந்த பொலிஸ் விசாரணையானது, பத்திரிகையாளர்களின் ஆதாரநபர்களுக்கு அநாமதேய அடையாளம் தேவைப்படுகின்ற நிலையில், பத்திரிகை சுதந்திரம் மீதான ஒரு தாக்குதலாகும். போரில் உள்ள நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளின் கேள்வியை உள்ளடக்குவதற்காக, தேச நலன்களைப் பாதுகாக்கும் கருத்தை விரிவாக்குவதற்கு நிர்வாக அதிகாரம் 'பாதுகாப்பு இரகசியங்களை' துஷ்பிரயோகம் செய்கையில், ஒரு தாக்குதல் மொத்தத்தில் இன்னும் அதிக தீவிரமானதாக ஆகிவிடுகிறது...

“'போர் குற்றங்களுக்காக குற்றஞ்சாட்டப்படும் நாடுகளுக்கு விற்கப்படும் ஆயுத பயன்பாடு குறித்து தகவல் பெறுவதற்கான உரிமை பிரெஞ்சு மக்களுக்கு இருக்கிறதா?' என்ற கேள்வியைப் பொறுத்த வரையில், அரசாங்கம் அவ்விடயத்தில் அச்சுறுத்தல்களைக் கொண்டு விடையிறுப்பதைத் தேர்ந்தெடுத்துள்ளது.”

Le Monde மற்றும் AFP உட்பட 36 பிரெஞ்சு பத்திரிகை நிறுவனங்கள் கையெழுத்திட்ட ஓர் அறிக்கையும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்தன. அது குறிப்பிடுகிறது, “பாதுகாப்பு இரகசியங்கள் தகவல் அறியும் உரிமைக்கு எதிராக இருக்க முடியாது, மதிப்பார்ந்த மக்கள் விவாதத்திற்கு இன்றியமையாதது, அல்லது புலனாய்வு செய்வதில் இருந்தும் பதிப்பிப்பதில் இருந்தும் பத்திரிகையாளர்களுக்கு புத்தி புகட்டுவதற்கான டமோகிள்ஸின் (Damocles) வாளாக சேவையாற்ற முடியாது.”

Disclose இக்குக் கசிய விடப்பட்ட இரகசிய உளவுத்துறை ஆவணம், “யேமன்: பாதுகாப்பு நிலைமை" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அது அக்டோபர் 3, 2018 பாதுகாப்புக் குழு கூட்டத்தில் இமானுவல் மக்ரோனுக்கு வழங்கப்பட்டது, அக்கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரென்ஸ் பார்லியும் கூட இருந்தனர்.

அது யேமனில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட இடங்களைக் குறித்த விபரமான தகவல்களை வழங்குகிறது. பிரெஞ்சு வினியோகித்த CAESAR ஹோவிட்சர் பீரங்கிகளின் (வாகன பீரங்கிகள்) குழல்கள் நூறாயிரக் கணக்கான மக்கள் வசிக்கும் நகரங்கள் மற்றும் கிராமங்களை நோக்கி குறி வைத்தவாறு, யேமன்-சவூதி அரேபிய எல்லையை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்ததாக அது ஆவணப்படுத்துகிறது. அந்த வாகன பீரங்கிகள் சவூதி கூட்டணி தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதைச் செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்துவதாக Disclose தெரிவிக்கிறது. பிரெஞ்சு டாங்கிகளும், வான்வழி குண்டுவீசிகளுக்கான லேசர்-வழிநடத்தும் ஏவுகணை அமைப்புமுறைகளும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஒபாமா மற்றும் ட்ரம்ப் நிர்வாகங்கள் இரண்டினது உதவியுடனும், பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு உட்பட ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் உதவியுடனும், 2014 இல் இருந்து சவூதி முடியாட்சி உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்றான யேமனுக்கு எதிரான போரை நடத்துகிறது. பத்தாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உணவு மற்றும் மனிதாபிமான உதவிப் பொருட்களைத் தடுப்பதற்காக யேமன் துறைமுகங்களை முடக்கும் சவூதி முடியாட்சி மூலோபாயத்தின் விளைவாக, 14 மில்லியன் வரையிலான மக்கள், அல்லது மக்கள்தொகையில் அரைவாசி பேர், பட்டினியை முகங்கொடுக்கிறார்கள்.

பிரான்சின் நடவடிக்கைகள், ஆயுத விற்பனை மீதான 2014 ஐரோப்பிய உடன்படிக்கை உட்பட சர்வதேச சட்டமீறல் என்பதையும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது, போர் குற்றங்கள் நடத்துவதற்காக “ஆயுதங்கள் அல்லது தளவாடங்கள் பயன்படுத்தப்படும் என்பதை ஒப்புதல் அளிக்கும் நேரத்தில் அறிந்திருந்தால்" அந்நாடு ஆயுதங்கள் விற்பதற்குச் சர்வதேச சட்டம் தடை விதிக்கிறது. உயர்மட்ட மக்ரோன் நிர்வாக அதிகாரிகள் ஐரோப்பிய சட்டத்தை மீறியுள்ளதை அது பலமாக எடுத்துக்காட்டுகிறது.

அந்த வெளியீடுகள் குறித்து அரசாங்கம் விடையிறுக்க மறுக்கும் அதேவேளையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் பார்லி ஏப்ரல் 18 இல் Radio Classique இக்கு கூறுகையில், “என் அறிவுக்கு எட்டிய வரையில், இந்த ஆயுதங்கள் யேமன் போரில் அத்துமீறிய விதத்தில் பயன்படுத்தப்படவில்லை மேலும் ... அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதற்கு பிரெஞ்சு ஆயுதங்கள் ஆதாரமாக இருந்துள்ளன என்று குறிப்பிட அனுமதிக்கும் எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை,” என்று கூறி, அந்த வெளியீடுகளின் முக்கியத்துவத்தைக் கடந்த வாரம் குறைத்துக் காட்ட முயன்றார்.

புறநிலை ஆவணங்களின் ஓர் ஆய்வு தெளிவுபடுத்துவதைப் போல, அவமதிக்கத் தகுதியுடைய இத்தகைய கபடத்தனமான வார்த்தைகள் நிராகரிக்கப்பட வேண்டும். ஜனவரி 20 இல், மக்ரோன் அரசாங்கம் அந்த இரகசிய அறிக்கையைப் பெற்று இரண்டு மாதங்களுக்குப் பின்னர், பார்லி France Inter இக்குக் கூறுகையில் அவருக்கு "அந்த மோதலில் [பிரெஞ்சு] ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து தெரியாது,” என்று கூறியதுடன், “அந்த மோதலில் பயன்படுத்தக்கூடிய எந்த ஆயுதங்களையும் நாம் சமீபத்தில் விற்றிருக்கவில்லை,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

Disclose இன் வெளியீடுகளை அடுத்து, இந்த தொனி சர்வசாதாரணமாக மாற்றப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஒரு அநாமதேய நீதித்துறை ஆதாரநபரை மேற்கோளிட்ட AFP தகவல்களின்படி, அந்த அறிக்கை கசிந்ததை அரசாங்கம் கடந்தாண்டு டிசம்பரிலேயே கண்டறிந்திருந்தது, அதன் பொய்களைத் தொடர்ந்து கொண்டே அது டிசம்பர் 13 இல் ஓர் உள்துறை புலனாய்வுக்கு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் ஏப்ரல் 18 இல், பார்லி முரண்கலவையாக, அவர் எதை "அருவருக்கத்தக்க போர்" என்று குறிப்பிட்டாரோ அதை கண்டித்தார், “எங்களின் அனைத்து முயற்சிகளும் ... இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மற்றும் ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சியை நோக்கி உள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

மக்ரோன் அரசாங்கம் போர் குற்றங்களில் அது உடந்தையாய் இருந்தமையின் வெளிப்பாட்டிற்கு, இந்த தகவல்களைப் பிரெஞ்சு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு கிடைக்க செய்வர்களை வழக்கில் இழுப்பதன் மூலமாக விடையிறுத்து வருகிறது. அதன் நடவடிக்கைகள் ஜனநாயக உரிமைகளை மிதித்து நசுக்குவதிலும், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவிலும் நாடுகளின் முதலாளித்துவ உயரடுக்குகள் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்குத் திரும்பி வருவதன் பாகமாக உள்ளன.

இது விக்கிலீக்ஸ் மற்றும் அதன் பதிப்பாசிரியர் ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கைத் தொலைப்படுத்துவதில் அதன் கூர்மையான வெளிப்பாட்டைக் காண்கிறது, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர் குற்றங்களையும் மற்றும் ஏனைய முதலாளித்துவ அரசுகளின் குற்றகரமான நடவடிக்கைகளையும் ஆவண ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய அவர்களின் தைரியமான நடவடிக்கைகளே அவர்களின் ஒரே "குற்றமாக" உள்ளது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஈக்வடோர் அரசாங்கங்களின் சூழ்ச்சிகள் மூலமாக, இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசான்ஜ், அவர் அம்பலப்படுத்திய அதே சித்தரவதையாளர்கள் மற்றும் போர் குற்றவாளிகள் அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க அல்லது அதை விட மோசமான தண்டனை கோரி வரும் நிலையில், அமெரிக்காவிடம் சட்டவிரோதமாக மற்றும் நீதிக்குப்புறம்பாக விசாரணை கைதியாக ஒப்படைக்கப்பட அச்சுறுத்தப்பட்டுள்ளார். அதேவேளையில் விக்கிலீக்ஸ் வெளியீட்டாளருக்கு எதிராக கூடுதலான ஜோடிப்பு குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வர ஸ்தாபிக்கப்பட்ட ஒரு பெருநடுவர்கள் நீதி விசாரணைக் குழுவிடம் சாட்சியம் அளிக்க மறுத்ததற்காக, மானிங் அமெரிக்காவில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்தப்பட்டுள்ளார்.

மக்ரோன் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) வெளியிட்ட எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகின்றன: அசான்ஜ் மற்றும் மானிங்கை வழக்கில் இருப்பது பத்திரிகையியலைக் குற்றகரமாக்குவதற்கும் மற்றும் அரசு குற்றங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருபவர்களைத் வழக்கில் இழுப்பதற்கும் ஒரு முன்னுதாரணத்தை அமைக்க நோக்கம் கொண்டுள்ளது. ஐரோப்பிய அதிகாரங்கள் அனைத்துமே அசான்ஜை அமெரிக்காவிடம் விசாரணைக் கைதியாக ஒப்படைப்பதை ஆதரிக்கின்றன, ஏனென்றால் அவை உள்நாட்டில் அவற்றின் சொந்த ஆட்சியில் தொழிலாள வர்க்கத்திடையே அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பால் குறைவாக பீதியடைந்திருவில்லை என்பதுடன், அவை எதிர்ப்பை ஒடுக்க அதே பொலிஸ்-அரசு அணுகுமுறைகளைப் பயன்படுத்த தீர்மானமாக உள்ளன.

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இந்தாண்டு இணைய வழி வருடாந்தர மே தின பேரணியை மானிங் மற்றும் அசான்ஜைத் தொலைப்படுத்துவதற்கு எதிராக எதிர்ப்பைக் கட்டமைக்கவும் மற்றும் அவர்களின் பாதுகாப்புக்கான போராட்டத்தை, போர், சமத்துவமின்மை, அதிவலதின் வளர்ச்சி மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தைக் கட்டமைப்பதுடன் இணைக்கவும் பயன்படுத்தி வருகிறது. ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்காக போராட விரும்பும் வாசகர்களும் ஏகாதிபத்திய போரை எதிர்ப்பவர்களும் இன்றே இந்த பேரணிக்காக பதிவு செய்யலாம்.