ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Ten years after civil war ends, Sri Lankan ruling elites prepare for class war

இலங்கை ஆளும் உயரடுக்குகள் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பத்தாண்டுகளுக்கு பின்னர் வர்க்கப் போருக்குத் தயார் செய்கின்றன

By Pradeep Ramanayake and K. Ratnayake
22 May 2019

மே 18, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் இரத்தம் தோய்ந்த தோல்வியுடன் இலங்கையின் நீடித்த இனவாத யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தை குறிக்கின்றது.

இராணுவ வெற்றியை கொண்டாடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆயுதப்படைகளுக்கு மிக உத்வேகமான புகழஞ்சலி செலுத்தினார். 2009 இல் மோதல் முடிவடைந்ததிலிருந்து இப்போது தீவு முழுவதிலும் இராணுவம் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற மைதானத்தில் நடத்தப்பட்ட ஒரு விழாவில் ஞாயிறன்று சிறிசேன ஆற்றிய சுருக்கமான உரை, ஏப்ரல் 21 அன்று நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அந்த தாக்குதல்களில் கிட்டத்தட்ட 260 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஆடம்பர விடுதிகள் மீதான தாக்குதல்களை, இஸ்லாமிய அடிப்படைவாத இஸ்லாமிய அரசு, ஒரு உள்ளூர் தீவிரவாத குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத் உடன் ஒருங்கிணைந்து நடத்தியிருந்தது.

சிறிசேன, "கொடுராமன புலிகள் இயக்கத்திற்கு வீரர்கள் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்தனர்... ஆனால், பத்து ஆண்டுகள் சமாதானம் மற்றும் ஒற்றுமையை அடுத்து எதிர்பாராத விதமாக ஒரு பயங்கரவாத சம்பவம் நடந்துள்ளது..." என்று பாராட்டினார். “30 ஆண்டு அனுபவத்துடன்" இராணுவத்தால் "சர்வதேச பயங்கரவாதத்தை" முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று அவர் பெருமையடித்துக் கொண்டார்.

முதலில், குண்டுத் தாக்குதல்கள் "எதிர்பாராதவை" என்று சிறிசேன கூறுவது முற்றிலும் பொய்யானது. உயிர்த்த ஞாயிறு அன்று குறிப்பிட்ட இலக்குகள் உள்ளிட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் பற்றி ஒரு இந்திய புலனாய்வு நிறுவனம் முன்கூட்டியே பாதுகாப்புப் படைகளை எச்சரிக்கை செய்துள்ளது. இந்த எச்சரிக்கைகள் அலட்சியம் செய்யப்பட்டு குண்டுத் தாக்குதல்கள் அனுமதிக்கப்பட்டன. அது ஏனென எவரும் நம்பக்கூடியவகையில் விளக்கமளிக்கப்படவில்லை

இராணுவம் மற்றும் பொலிசுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கும் அவசரகால நிலையை திணிப்பதற்காக சிறிசேனாவும் அரசாங்கமும் இந்த தாக்குதலை பற்றிக்கொண்டன. "சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுதல்" என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களும் பொலிஸ் அதிகாரிகளும் தீவு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், செய்தி ஊடகமும் அரசியல் ஸ்தாபகமும் முஸ்லிம் மக்களை அச்சுறுத்துவதற்கும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் ஒரு மோசமான முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தை தூண்டி வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பொலிஸ் அரச நடவடிக்கைகள், தமது வாழ்க்கை நிலைமைகளின் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக பெருகிய முறையில் போராட்டத்துக்கு வந்துகொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளாக "சமாதானமும் மற்றும் ஒற்றுமையும்" நிலவியது என்பது அபத்தமானது. சிறிசேன, புலிகளின் தோல்வியை அடுத்து உடனடியாக ஒரு "பொருளாதாரப் போரை" அறிவித்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ஒரு சிரேஷ்ட அமைச்சராக இருந்தார்.

கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இரத்தக்களரியான உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்த தீவு பொருளாதாரரீதியாக பேரழிவிற்கு உட்பட்டது. அது 2008-09 உலக நிதிய நெருக்கடியால் இன்னும் அதிகரித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன செயற்பட்டியலை அமுல்படுத்துவதன் மூலம் பொருளாதாரச் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிப்பதையே இந்தப் "பொருளாதாரப் போர்" இலக்காக் கொண்டிருந்தது.

இந்த வெகுஜன எதிர்ப்பு 2015 இல் வாஷிங்டனால் திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையில் இராஜபக்ஷவை அகற்றுவதற்காக திருப்பி விடப்பட்டது. இந்த நடவடக்கையிலேயே சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதிகாரத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.

அமெரிக்கா இனவாத யுத்தத்தையும் இராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தது, ஆனால் பெய்ஜிங் உடனான அவரது நெருங்கிய உறவை அது எதிர்த்தது. அமெரிக்கா சீனாவிற்கு எதிரான தனது யுத்த தயாரிப்புகளில் இலங்கையை ஒன்றிணைக்க முற்பட்டதுடன் சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் அந்த வழியில் விழுந்தனர்.

நான்கு ஆண்டு காலமாக, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் வெகுஜனப் போராட்டங்கள் மேற்பரப்புக்கு வந்து, சிறிசேன, விக்கிரமசிங்க மற்றும் இராஜபக்ஷ தலைமையிலான ஆளும் வர்க்கத்தின் போட்டி பிரிவுகளுக்கு இடையில் கடுமையான உட்பூசலை தூண்டிவிட்டன. எவ்வாறாயினும், அவர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், அனைவரும் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் சாக்குப் போக்கில் உழைக்கும் மக்களுக்கு எதிரான வர்க்கப் போரைத் தயாரிப்பதற்காக இராணுவத்தை அணிதிரட்டுவதை ஆதரிக்கின்றனர்.

இந்த பொலிஸ் அரச நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவதற்காக, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அரசியல் ரீதியாக, குறிப்பாக நாட்டின் இரத்தக்களரி உள்நாட்டு யுத்தத்தின் படிப்பினைகளால் புடம் போடப்பட வேண்டும்.

முழு கொழும்பு ஸ்தாபகத்தையும் போலவே, சிறிசேனவும், யுத்தத்தை "புலி பயங்கரவாதத்தின்" விளைவு என்ற பேரினவாத சொற்பதங்களிலேயே சித்தரிக்கின்றார். உண்மையில், 1948 இல் இலங்கையின் உத்தியோகபூர்வ சுதந்திரத்திலிருந்து, தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட உத்தியோகபூர்வ பாரபட்சங்களின் உச்சக்கட்டமே உள்நாட்டு யுத்தமாகும்.

ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான கோரிக்கைகளை அமுல்படுத்த முடியாத கொழும்பு ஆளும் வர்க்கம், இனப் பாகுபாட்டில் உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதற்காக தமிழர்-விரோத பேரினவாதத்தை நாடியது. 1948 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முதலாவது நடவடிக்கைகளில் ஒன்று, ஒரு மில்லியன் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை பறித்ததாகும்.

1953 ஹர்த்தால் ஐ.தே.க. அரசாங்கத்தை மண்டியிட வைத்ததை அடுத்து, ஆளும் வர்க்கம் 1956 இல் அதிகாரத்திற்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) சிங்கள மேலாதிக்கவாதத்தின் பக்கம் திரும்பியது. ஸ்ரீ.ல.சு.க. அதன் சிங்கள மட்டும் அரச மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதுடன், 1972 இல் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கம், பெளத்தத்தை அரச மதமாக உயர்த்தியது. இதன் மூலம் இரண்டாம் தர குடிமக்களின் நிலைக்கு தமிழ் மக்களைக் கீழிறக்கியது.

1970 களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் ஏற்படுத்தப்பட்ட இன்னொரு நெருக்கடிக்கு மத்தியில், ஜே. ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐ.தே.க. 1977 இல் அதிகாரத்தை வென்றது, தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு பேரழிவான தாக்கத்தை ஏற்படுத்திய "திறந்த சந்தை" பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்த உலகின் முதல் அரசாங்கங்களில் ஒன்றாக அது இருந்தது.

அதிகரித்து வரும் எதிர்ப்பை சந்தித்த ஜெயவர்த்தன, ஒரு நிறைவேற்று ஜனாதிபதியின் கையில் சகல அதிகாரங்களையும் குவிக்கும் வகையில் அரசியலமைப்பை மாற்றிய அதேவேளை, தமிழர் விரோத ஆத்திரமூட்டல்களை தூண்டிவிட்டது. 1983 ஜூலையில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஐ.தே.க. அரசாங்கம் தீவு பூராவும் பரந்த தமிழர்-விரோதப் படுகொலை வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டதுடன், அதில் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதோடு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை அறிவித்தது.

"புலி பயங்கரவாதிகளுக்கு" எதிரான போர், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு போரே அன்றி வேறொன்றும் அல்ல. ஜெயவர்த்தனவுடன் தொடங்கி, ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், இலவச கல்வி, இலவச சுகாதார சேவை மற்றும் ஏழைகளுக்கான விலை மானியங்கள் உட்பட சமூக அடிப்படை உரிமைகளை கடுமையாக வெட்டித் தள்ளுவதற்கு யுத்தத்தை சுரண்டிக் கொண்டன. அரச துறையிலான தனியார்மயமாக்கல், பாரிய வேலை இழப்புகளுக்கு வழிவகுத்தது. தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட பொலிஸ்-அரச நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் யுத்தம் பயன்படுத்தப்பட்டது.

தமிழர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு போராடுவதாக கூறிக்கொண்டாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முதலாளித்துவ அமைப்பாகும். தமிழ் முதலாளித்துவத்துக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக தொழிலாளர்களை மலிவு கூலியாக வழங்கக்கூடியவாறு ஒரு சுதந்திர தமிழ் அரசை நிறுவுதன் பேரில், ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவை வென்றெடுப்பதை அது நோக்கமாகக் கொண்டிருந்தது.

புலிகளின் தோல்வியானது அதன் அரசியல் திவாலின் ஒரு விளைவாகும். இலங்கை இராணுவம் சுற்றிவளைத்தபோது, அது இலங்கை, ஆசியா அல்லது சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திடம் ஆதரவு கோரி எந்தவொரு அழைப்பும் விடுக்க இலாயக்கற்றதாக இருந்தது. மாறாக, இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொடூரமான யுத்தத்திற்கு அரசியல், நிதி மற்றும் இராணுவ ஆதரவை வழங்கும் அதே சக்திகளுக்கு பரிதாபகரமான வேண்டுகோள்களை விடுக்குமளவுக்கு அது கீழிறங்கிப் போனது.

இந்த மோதல்கள் தீவை பேரழிவுக்குளாக்கியது. சுமார் 100,000 க்கும் அதிகமானோர் இறந்தனர், அவர்களில் அநேகமானோர் தமிழர்கள், மேலும் பலர் உளவியல் பாதிப்புகளாலும் உடல் காயங்களாலும் அவதிப்படுகின்றனர். யுத்தத்தின் இறுதி வாரங்களில் 40,000 இற்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்களை இராணுவம் படுகொலை செய்ததாக ஒரு ஐ.நா. அறிக்கை கண்டறிந்துள்ளது. அமெரிக்க ஆதரவுடன் சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் இந்த போர்க் குற்றங்கள் பற்றிய எந்த விசாரணையையும், வழக்குத் தொடுப்பதையும் தடுத்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 300,000 பேர் இராணுவ கட்டுப்பாட்டு தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். மற்றொரு 12,000 இளைஞர்களும் யுவதிகளும் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு என அழைக்கப்படும் முகாம்களில் அடைக்கப்பட்டதோடு அங்கு மூளை சலவைக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். எந்த தடயமும் இல்லாமல் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் நூற்றுக் கணக்கானவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் நூற்றுக்கணக்கான படையினர் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாத தற்காலிக முகாம்களில் மோசமான நிலையில் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் வியாபாரங்களையும் இருப்பிடங்களையும் இழந்துள்ளனர். போரின் போது ஆயுதப் படைகளால் கைப்பற்றப்பட்ட நிலங்களில் பெரும்பகுதி அதன் உரிமையாளர்களுக்கு திரும்ப கொடுக்கப்படவில்லை. ஏறக்குறைய 90,000 யுத்த விதவைகள் ஒவ்வொரு நாளும் நிரந்தர வருமானம் இல்லாமல் தங்கள் குடும்பங்களை பராமரிக்க போராடுகிறார்கள்.

இதுதான் சிறிசேனவின் பத்து ஆண்டு கால "சமாதானமும் ஒற்றுமையும்". இப்பொழுது முழு அரசியல் ஸ்தாபகமும் இன்னொரு "பயங்கரவாதத்தின் மீதான போருக்குத்" தயாராகின்றது. இது முதலில் தீவின் முஸ்லிம்களை இலக்காகக் கொண்டதாக இருந்தாலும், உழைக்கும் வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்குவதற்கே பயன்படுத்தப்படும். மிக விரைவில், 30 ஆண்டு கால கொடூரமான இனவாத போரில் கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகள் தீவு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

தமிழ் முதலாளித்துவம் உடனடியாக அந்த வழியில் அணிசேர்ந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பானது யுத்தத்தின் முடிவிற்குப் பின்னர் துரிதமாக வலதிற்குத் திரும்பியது. அது அவசரகால ஆட்சி திணிக்கப்படுவதை முழுமையாக ஆதரிப்பதுடன் பயங்கரவாத தாக்குதல்களின் அபாயங்கள் காரணமாக அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை விலக்கிக்கொள்ளக் கூடாது எனக் கோருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கொழும்பில் உள்ள அதன் சிங்கள சக தரப்பினரைப் போலவே, வளர்ச்சியடைந்து வரும் தொழிலாள வர்க்க இயக்கத்தையிட்டு தமிழ் கூட்டமைப்பு பீதியடைந்துள்ளது.

தொழிலாளர்களுக்கான மிகப்பெரிய அரசியல் படிப்பினை எதுவெனில், அவர்கள் பிளவடைந்து விட்டால் அவர்களது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியாது என்பதே ஆகும். மொழி மற்றும் மதத்தின் அடிப்படையில் தொழிலாளிக்கு எதிராக தொழிலாளியை நிறுத்துவதற்காக முயற்சிக்கும் ஊடக மற்றும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் நச்சுத்தனமான பிரச்சாரத்தை தொழிலாள வர்க்கம் நிராகரிக்க வேண்டும். சுரண்டல் வர்க்கமான முதலாளித்துவமே தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொது எதிரியாகும். அது அதன் பலத்தையும் செல்வத்தையும் காப்பாற்றிக்கொள்வதற்கான முயற்சியை நிறுத்தப் போவதில்லை.

முதலாளித்துவத்தை தூக்கிவீசி, சோசலிச கொள்கைகளை செயல்படுத்தக் கூடிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில், தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துக் கட்சிகளிலும் இருந்து விலகி, ஒரு சுயாதீனமாக ஐக்கியப்பட்ட அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே அதனால் அதன் வர்க்க நலன்களுக்காகப் போராட முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுகிறது. சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து, எதிர்வரும் போராட்டங்களுக்கு தேவையான புரட்சிகர தலைமையாக அதைக் கட்டியெழுப்ப முன்வருமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.