ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Banks and multinationals announce mass layoffs in Spain

வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் ஸ்பெயினில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் பணிநீக்கங்களை அறிவிக்கின்றன

By Alejandro López 
22 May 2019

பிரதான ஸ்பெயின் வங்கிகளான Santander மற்றும் Caixabank, அத்தோடு வாகன உற்பத்தியாளர்களான நிசான், ஃபோர்ட் மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. இவை வேலைகள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான உலகளாவிய தாக்குதலின் ஒரு பாகமாகும்.

அரசாங்கத்தால் நிதியாதரவளிக்கப்படும் பணிநீக்க திட்டங்கள் (ERE), பணி நேரங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், குறுகிய காலத்திற்கு மூடுவதற்கும், மற்றும் கூட்டுப் பணிநீக்கங்களை முன்னெடுப்பதற்கும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயற்பட நிறுவனங்களை அனுமதிக்கின்றன. தொழிற்சங்கங்களை இன்னும் நெருக்கமாக அரசு எந்திரத்திற்குள் இணைத்துக்கொள்வதற்காக, அதிகாரத்துவத்திற்கு நன்கு ஊதியம் தரும் வேலைகளை வழங்கி, "சமூக அமைதியை" தக்கவைத்துக் கொள்வதற்காக பிலிப் கொன்சால்ஸ்சின் சோசலிஸ்ட் கட்சி (PSOE) அரசாங்கத்தினால் 1994 இல் அவை உருவாக்கப்பட்டன.

கடந்த வாரம், Santander வங்கி, அதன் மொத்த தொழிலாளர்களில் 12 சதவிகிதமான 3,700 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவும் மற்றும் 1,150 கிளைகளை (அதன் கிளையமைப்பில் 26 சதவிகிதம்) மூடவும் தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.

1.4 ட்ரில்லியன் யூரோக்கள் (1.6 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சொத்துக்களுடன் Santander வங்கி ஸ்பெயினில் மிகப்பெரிய வங்கியாகவும் ஐரோப்பாவில் ஐந்தாவது பெரிய வங்கியாகவும் உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் Santander இன் வலுவான வளர்ச்சியினால் 2018 ஆம் ஆண்டிற்கான அதன் நிகர வருமானம் 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் 6.62 பில்லியன் யூரோக்களுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு 7.81 பில்லியன் யூரோக்கள் நிகர வருமானத்தைப் பெற்றதாக வங்கி அறிவித்தது.

பாரிய பணிநீக்கத்திற்கான Santander இன் அறிவிப்புக்கு முன்னதாக, ஸ்பெயினில் மூன்றாவது பெரிய கடன் வழங்கும் Caixabank மற்றும் தொழிற்சங்கங்களிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. மே மாத தொடக்கத்தில் Caixabank ஆனது CCOO, SECB, UGT, FEC, SIB மற்றும் CIC ஆகிய தொழிற்சங்கங்களுடன் 2,023 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் உடன்படிக்கை ஒன்றை அறிவித்தது. Caixabank ஆனது Unicaja y Liberbank உடன் இணைந்த பின்னர் மேலும் வேலை இழப்புக்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு அறிக்கையில், தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்வதற்கான செலவு 890 மில்லியன் யூரோக்கள் இருக்கும் என்றும், ஆனால் அதற்கு பதிலாக இது ஆண்டுக்கு 190 மில்லியன் யூரோக்கள் வரை சேமிக்க முடியும் என்று வங்கி தெரிவித்துள்ளது. அதே நாளில், Caixabank பங்குகளின் மதிப்பு 1.25 சதவீதம் உயர்ந்தது.

Santander மற்றும் Caixbank ஆகிய இரண்டும் இந்த வருடம், முதல் காலாண்டில் Santander 1.8 பில்லியன் யூரோ மற்றும் Caixabank 533 மில்லியன் யூரோ இலாபங்களைப் ஈட்டியுள்ள போதினும், தங்கள் பணிநீக்கங்களுக்கான காரணமாக "அமைப்புரீதியான மற்றும் உற்பத்தி" காரணங்களைக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்பட்டுவிட்ட நிலையில், Santander 4.7 பில்லியன் யூரோக்களையும் மற்றும் Caixabank ஒரு பில்லியன் யூரோக்களையும் பங்கு இலாபமாக வழங்கியுள்ளது.

2008 ஆம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடியின் பின்னர், 45 சேமிப்பு வங்கிகள் ஒன்றில் மற்ற வங்கிகளால் கையகப்படுத்தப்பட்டன அல்லது ஒன்றிணைக்க கட்டாயப்படுத்தப்பட்டன. 85,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளதுடன் கிட்டத்தட்ட 17,000 அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

பிற பன்னாட்டு நிறுவனங்களும் பணிநீக்கங்களை அறிவித்துள்ளன.

ஒரு 70 மில்லியன் யூரோ முதலீட்டிற்கு ஈடாகக் கோரிய ஒரு ERE நிபந்தனையாக பார்சிலோனாவில் உள்ள ஆலையில் கிட்டத்தட்ட 20 சதவிகித தொழிற்சாலை தொழிலாளர்களின் அதாவது 600 வேலைகளை வெட்ட வேண்டும் என்று தொழிற்சங்கத்துடன் உடன்பட்டிருப்பதாக இந்த மாத தொடக்கத்தில் ஜப்பானிய கார் உற்பத்தியாளரான நிசான் அறிவித்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், அதன் ஊழியர்களில் 25 சதவீதமான 1,200 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக வோடபோன் அறிவித்தது, அத்துடன் பல்பொருள் அங்காடி Dia, 2018 இல் 352 மில்லியன் யூரோக்களை இழந்திருப்பதாக அறிவித்தபின் 2,100 வேலைகளை குறைக்கவுள்ளது. பின்லாந்து நிறுவனமான நோக்கியா அதன் 915 ஊழியர்களில் 17 சதவிகிதமான அதாவது 162 பணிநீக்கங்களை திட்டமிட்டுள்ளது என்று அறிவித்துள்ளது. உலகளவில் அறிவிக்கப்பட்ட 12,000 வேலை வெட்டுக்களில் ஒரு பாகமாக, பத்தில் ஒரு பங்கான 67 வேலைகளை அகற்றுவதற்கு ஜேர்மனிய இரசாயன பெரும் நிறுவனமான Bayer AG ஸ்பெயினில் திட்டமிட்டுள்ளது. ஜேர்மனியில், அது 4,500 வேலைகளை அழிக்கின்றது.

ஞாயிறன்று, ஃபோர்ட் 7000 தொழிலாளர்கள் பணியாற்றும் வலன்சியா நகரிலுள்ள Almussafes இல் தனது ERE ஐ செயல்படுத்தும் என்று அறிவித்தது. தொழிற்சங்கங்களும் நிறுவனமும் மறைமுகமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதால் எத்தனை தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்பது இன்னும் தெரியவில்லை. ஜேர்மனியில் 5000 வேலைகள் குறைக்கப்படும், ரஷ்யாவில் மூன்று ஆலைகளையும் பிரான்சில் ஒரு ஆலையை மூடப்போவதாகவும், மற்றும் பிரிட்டனில் வேலைகள் குறைக்கப்படும் என்று ஏற்கனவே ஃபோர்ட் கார் உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் உதிரிப்பாக உற்பத்தியாளர்களும் தங்கள் ERE திட்டங்களை அறிவிக்கின்றனர். கோடை காலம் அதன் தொழிலாளர்களுக்கான மாற்றங்களை மேற்கொள்வதற்கான முக்கிய காலமாக இருக்கும், இது 20,000 வேலைகளுக்கு மேலாக இருக்கலாம்" என்று விநியோக தொழில்துறையின் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என Las Provincias குறிப்பிட்டது.

ஒப்பீட்டளவில் சிறந்த ஊதியம் பெறும் மற்றும் பாதுகாப்பான வேலை ஒப்பந்தங்களை கொண்ட நீண்டகால பணியாளர்களுக்குப் பதிலாக "ஆபத்தான" வேலை நிலைமைகளோடு இளைய ஊழியர்களை கொண்டு பதிலீடு செய்வதன் மூலம் பொருளாதார நெருக்கடியின் செலவை தொழிலாளர்ளின் மீது சுமத்த நிறுவனங்கள் முயன்று வருவதன் சமீபத்திய உதாரணங்களாக அண்மைய ஆண்டுகளில் பிரதான நிறுவனங்கள் மற்றும் உற்பத்தித் தொழிற்துறை முழுவதிலும் ஒரு மறுசீரமைப்பு செயல்முறை உள்ளது.

2012 ஆம் ஆண்டில் 483,313 பதிவான வீழ்ச்சிக்குப் பின்னர் ERE இன் விளைவாக வேலைகளை இழக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 2017 இல் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 57,497 ஆக வீழ்ச்சியடைந்திருந்தது, ஆனால் 2018 ல் 72,896 ஆக உயர்ந்தது.

நிறுவனங்கள் ERE களை செயல்படுத்த கூடியதாக இருப்பதற்கு காரணம், எல்லாவற்றிற்கும் மேலாக தொழிற்சங்கங்களுடன் ஒத்துழைப்பதாலாகும். "சட்ட ஆலோசனை" க்காக நேரடியாக நிதியுதவி பெற்று தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு ERE இருந்து கூட இலாபம் ஈட்டும். இது பணிநீக்க செலவில் 10 சதவிகிதம் இருக்கக்கூடும். அரச, பிராந்திய மற்றும் உள்ளூர் அரசாங்கங்களிலிருந்து தொழிற்சங்கங்கள் பெறும் பெரிய மானியங்களில் இதுதான் முதலிடம் ஆகும்.

ERE இன் அதிகரிப்பு அச்சுறுத்தும் பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டுகிறது. பொருளாதார பேராசிரியர் கே டி லீபானா La Vanguardia பத்திரிகையிடம் பேசியபோது, நிறுவனங்கள் "ஒரு புயல் வருவதைப் பார்க்கிறது, அதனால்தான் அவர்கள் இப்போது மாற்றங்களைச் செய்கிறார்கள்" என்று கூறினார்.

சமீபத்திய வேலை இழப்புக்கள் அதிகரிப்பு, "மோசமான" அல்லது "சிறப்பான" காலங்களாக இருந்தாலென்ன தொழிலாள வர்க்கத்தினை சுரண்டுவதை அதிகரிப்பது என்பது முதலாளித்துவ அமைப்பு முறையின் மையத்தில் உள்ள ஒன்று என்பதற்கான ஆதாரமாக உள்ளது. கடந்த தசாப்தத்தில் மூன்று தொழிலாளர் சீர்திருத்தங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு பேரழிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமையால் மற்ற ஐரோப்பிய நாடுகளை விட அதிகமாக, 2019 ல் ஸ்பெயினின் பொருளாதார "அதிசய" வளர்ச்சி 2 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஸ்பெயினில் அலகு ஒன்றிற்கான உற்பத்தி செலவு 2008 தொடக்கத்தில் இருந்ததை விட 4 சதவிகிதம் குறைவாக உள்ளது என்று காட்டுகின்றன.

வறுமை மற்றும் சமத்துவமின்மை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஒரு நாட்டின் வருமான சமத்துவமின்மையை அளவிடும் Gini ஐரோப்பாவில் ஸ்பெயின் நாட்டில் மிக உயர்ந்ததாகும். மக்கள்தொகையில் கால் பங்கிற்கும் மேலானவர்கள் வறுமை அல்லது சமூகத்தில் விலக்கப்படும் ஆபத்தில் உள்ளனர், மொத்த வேலையின்மை 14.5 சதவிகிதம் மற்றும் இளைஞர்களின் வேலையின்மை 40 சதவிகிதத்துடன் வேலையின்மை அதிகமாக உள்ளது.

சமீபத்தில், பெரும்பான்மை இல்லாத நிலையில் தேர்தல்களை வென்ற PSOE இன் அரசாங்கம், வலதுசாரிக் கட்சியான குடிமக்கள் கட்சி அல்லது போலி-இடது பொடெமோஸ் உடன் ஒரு கூட்டணியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அல்லது ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை உருவாக்க முயலும்.

விளைவு என்னவாக இருந்தாலும், சிக்கன நடவடிக்கை, இராணுவவாதம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் தீவிரமடையும். PSOE இன் பதில் பிரதமரான, பெட்ரோ சான்சஸின் மூத்த பொருளாதார ஆலோசகரான மானுவல் டி லா ரோக்கா அறிக்கையில் இது தெளிவாக உள்ளது. "முதலீட்டாளர்களுக்கும் சந்தைகளுக்கும் ஒரு திடமான மற்றும் உறுதியளிக்கும் செய்தியை அனுப்ப விரும்புகிறேன்: பொருளாதாரக் கொள்கைகள் தொடரும். ... வரவு-செலவுத் திட்டம் உறுதியாக இருக்கும், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சமத்துவமின்மை குறைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு கொள்கைகள் அடுத்த அரசாங்கத்தின் முன்னுரிமைகளாக இருக்கும்”.

"சமத்துவமின்மையை குறைப்பது" என்பது ஒரு மோசடியாகும். PSOE ஏற்கனவே ஐரோப்பிய ஆணையத்திடம் புதிய தொழிலாளர் சீர்திருத்தம், ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளில் குறைப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தி கடிதம் அனுப்பியுள்ளது. இருப்பினும், சமத்துவமின்மையைக் குறைப்பது தொடரபான டி லா ரோக்காவின் கருத்து பொடெமோஸுடன் ஒரு இழிவான உடன்பாட்டிற்கு ஒரு போலிக்காரணமாக இருக்கின்ற ஒரு அரசியல் செயல்பாட்டை நிறைவேற்றுகிறது.

பொடெமோஸ் பேச்சுவார்த்தைகளில் "சிவப்பு கோடுகள் அல்லது இறுதிக்கேடுகளை" சுமத்த மாட்டாது என்று கூறிய இந்த கட்சியின் தலைவர் பப்லோ இக்லெசியாஸ், PSOE மற்றும் பொடெமோஸ் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். இந்த வார தொடக்கத்தில், "அடைய முடியாததை" அவர் சான்சேஸிடம் கேட்கமாட்டார் என்று வலியுறுத்தினார், மாறாக "ஸ்பானிய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சமூக உரிமைகளை உத்தரவாதம் செய்யும் கூட்டணி அரசாங்கம்" தேவை என்று அவர் வலியுறுத்தினார்.