ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ටිලරි වත්තේ කම්කරුවන්ට එරෙහි දඩයමක්

இலங்கை: சாஞ்சிமலை தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடல்

M. Thevarajah
10 May 2019

இலங்கையின் மத்திய பெருந்தோட்டப் பகுதியில் டிக்கோயாவிற்கு அருகாமையில் உள்ள சாஞ்சிமலை தோட்த்தின் நிர்வாகிகள், ஏப்ரல் 23 அன்று தோட்டத்தின் மலையக மக்கள் முன்னணியின் (ம.ம.மு.) தோட்டத் தலைவர் ஆர். ராஜ்குமார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தோட்டத் தலைவர் எஸ். ரஞ்சன் மற்றும் தோட்டத்திலுள்ள மருந்தகத்தில் பணிபுரியும் தொழிலாளி என். நாகநாதன் ஆகயோரை வேலை இடை நீக்கம் செய்தது. ஏப்பிரல் 23 ஆம் திகதியிலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவர்கள் வேலை நிறுத்தப்படுவார்கள் என ஏப்பிரல் 22 அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தோட்டத்தின் உதவி முகாமையாளர் லக்ஷித ஜோன் என்பவரை "அசிங்கமான வார்த்தைகளால் திட்டினர்" என்பதே அவர்கள் மீதான குற்றச்சாட்டு ஆகும்.

தொழிலாளர்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கின்றனர். பழிவாங்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், உற்பத்தித் திறனை அதிகரித்து சுரண்டலை தீவிரமாக்கும், "வருமானப் பங்கீடு" முறைக்கும் தோட்டத்தில் உள்ள நீர் வளத்தை தனியாருக்கு விற்கும் திட்டங்களுக்கும் எதிராக தலைதூக்கிய தொழிலாளர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் இருந்த மூன்று போர்க்குணமிக்க தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் இதுவே ஆகும்.

தோட்ட நிர்வாகிகளால் தண்ணீர் வளங்கள் விற்கப்படுவதற்கு எதிராக மார்ச் 13 இல் இருந்தே சாஞ்சிமலை தோட்டத் தொழிலாளர்கள் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்தும் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். உதவி முகாமையாளர் தொழிலாளர்களை கீழ்த்தரமாக நடத்துவதால், அவரின் கீழ் வேலை செய்ய முடியாது என்றும் அவரை உடனடியாக இடமாற்ற வேண்டுமென்றும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் கோருகின்றனர்.

வேலைநிறுத்தத்தின் போது உதவி முகாமையாளர், பெண் ஊழியர்களை இழிந்த வார்த்தைகளில் திட்டியதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். தொழிலாளர்களின் எதிர்ப்பின் காரணமாக, தோட்டத் நிர்வாகம் உத்தேச தண்ணர் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. சிங்களத்-தமிழ் புத்தாண்டு நாட்களில் வேலைநிறுத்தத்தை இடைநிறுத்தியிருந்த தொழிலாளர்கள் ஏப்ரல் 15 அன்று மீண்டும் வேலைக்குச் செல்லத் தீர்மானித்த போதிலும், தோட்டத் நிர்வாகம் அவர்களுக்கு வேலை கொடுக்க மறுத்துவிட்டது. அதன் பின்னரே தொழிலாளர்களுக்கு எதிரான பழிவாங்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்குமாறு கோரி ஏப்ரல் 23 முதல் தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம் செய்தனர்.

தொழிற்சங்க தலைவர்களுடன் நடத்தப்பட்ட ஒரு கலந்துரையாடலை அடுத்து, மூன்று வாரங்களின் பின்னர் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க நிர்வாம் ஒப்புக் கொண்டதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு எதிர்த்தரப்புத் தெரிவித்த தொழிலாளர்கள், தங்கள் சக தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு இணைத்துக்கொள்ளும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்வதாக தெரிவித்துவிட்டனர். பின்னர் இ.தொ.கா. தோட்டத் தலைவர் ரஞ்சனின் வேலை நீக்கத்தை இரத்துச் செய்வதற்கு உடன்பட்ட தலைவர்கள், மே 13 ஆம் திகதி அவருக்கு வேலை வழங்குவதாக கூறியது. அதற்கு உடன்பட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு வேலைக்குச் செல்லுமாறு தொழிலாளர்களை தூண்டிவிட்டனர். அதன் படி ஏப்ரல் 29 அன்று தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றனர்.

சாஞ்சிமலை தோட்டம் களனிவெலி பெருந்தோட்டத்துக்கு சொந்தமான தோட்டமாகும். அதன் மேல் பகுதியில் 113 தொழிலாளர்களும் கீழ் பகுதியில் 163 தொழிலாளர்களும் உள்ளனர். தொழிலாளர்களின் எதிர்ப்பின் மத்தியிலும், தொழிற்சங்கங்களின் முழு ஆதரவோடு 2017 டிசம்பர் மாதத்தில் மேல் பகுதியில்லும் 2018 மார்ச்சில் கீழ் பகுதியிலும் "வருமான பகிர்வு" முறைமையை நிர்வாகம் செயல்படுத்தியது.

5,000 தேயிலைச் செடிகளை ஒரு தொழிலாளர் குடும்பத்திற்கு ஒதுக்கி கொடுத்துள்ளதாகவும் ஓய்வு பெற்ற முதியவர்கள், பிள்ளைகள் உட்பட முழு குடும்பமும் அதற்காக உழைக்கத் தள்ளப்பட்டது என்றும் தொழிலாளர்கள் கூறினர். கொழுந்து பறிப்பது, கவ்வாத்து வெட்டுவது, களை நாசினிகள் தெளிப்பது மற்றும் இரசாயன உரம் போடுவது உட்பட அனைத்தையும் அந்த குடும்பங்களே செய்ய வேண்டியிருந்தது. இருப்பினும், உரங்கள் மற்றும் விவசாய இரசாயணப் பொருட்களுக்கான செலவுகள் வெட்டப்பட்ட பின்னர், தங்கள் கைகளுக்கு மிகக் குறைவான தொகையே கிடைக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

முன்னதாக, ஒரு கிலோ கொழுந்துக்கு 90 ரூபாய்கள் கொடுக்கப்பட்டாலும், பின்னர் அது படிப்படியாக 58 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. போதுமான வருமானம் கிடைக்காதமையினால், மேல் பகுதியில் 10 மற்றும் கீழ் பகுதியில் 33 தவிர ஏனைய தொழிலாளர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட தேயிலை நிலங்களை திரும்ப ஒப்படைத்து விட்டனர்.

வருமான பகிர்வு முறை தொழிலாளர்களுக்கு பாதகமானது என்றும் சிறிய சமூக உரிமைகள் கூட அபகரிக்கப்படுகின்ற ஒரு முறை என உலக சோசலிச வலைத் தளத்திடம் எஸ். பாலசுப்ரமணியம் கூறினார். "பெரிய வருமானத்தை சம்பாதிக்க முடியும் என நிர்வாகம் கூறியதால் ஆரம்பத்தில் நாங்கள் உடன்பட்டோம். வருமானம் போதாததோடு எங்கள் உரிமைகளையும் இழந்துவிடுவோம் என்பதை நாங்கள் பின்னர் உணர்ந்து கொண்டோம். ஊழியர் சேமலாப நிதிக்கு சேரும் தொகை பாதி குறைந்து விட்டது. வீடுகளைத் திருத்திக்கொள்வது உட்பட வேலைகளுக்காக வருடாந்தம் கொடுத்து வந்த 30,000 ரூபாய் நலன்புரி கொடுப்பனவு நிறுத்தப்பட்டது. தொழிலாளர்களுக்கு இடையிலான ஐக்கியமும் கூட்டு வலிமையும் இதனால் இல்லாமல் போனது."

கிட்டத்தட்ட 100,000 தோட்டத் தொழிலாளர்கள், கடந்த டிசம்பர் மாதம், அடிப்படை நாள் சம்பளத்தை ரூபா 500 முதல் 1,000 வரை இரட்டிப்பாக்க கோரி வேலைநிறுத்தம் செய்தனர். அனைத்து தோட்டத் தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களின் போராட்டத்தை நாசப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் அணிசேர்ந்தன. இறுதியாக, ஜனவரி மாதம், தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்ட ஒரு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் வெறும் 20 ரூபா மட்டுமே தினசரி ஊதியமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தம் மற்றும் வருமானப் பகிர்வு முறைக்கு எதிராக, தொழிலாளர்கள் கடந்த ஆண்டு பூராவும் வேலை நிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடந்தி வந்துள்ளனர். தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்குவதற்கு தொழிற்சங்கங்கள் பெரும் பிரயத்தனம் செய்தாலும், அவை மீண்டும் மீண்டும் தலை தூக்குகின்றன. தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை நசுக்குவதற்காகவே தோட்ட முதலாளிகள் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

சாஞ்சிமலை தோட்டத்தில் தொழிலாளர் மீது பழிவாங்கல்களுக்கு முன்னதாக, டிசம்பர் 13 அன்று, டிக்கோயா என்பீல்ட் தோட்டத்தின் எஸ். பாலசுப்ரமணியத்தை வேலை இடைநீக்கம் செய்த தோட்ட நிர்வாகம், பிப்ரவரி 27 அன்று அவரை முழுமையாக வேலை நீக்கம் செய்தது. டிசம்பர் 4-13 ஆம் திகதி வரை நடந்த வேலை நிறுத்தத்தின் போது, தோட்டத்தில் உள்ள தேயிலைத் தொழிற்சாலையின் நுழைவு வாயிலை அடைத்து, தொழிற்சாலை வளாகத்திற்குள் தேயிலை கொழுந்துகள் கொண்டுவரும் வாகனங்கள் நுழைவதை தடுத்தார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு ஆகும். அவரது நடவடிக்கைகளுக்கு "உடந்தையாக இருந்தார்கள்" என்ற குற்றச்சாட்டின் கீழ், இன்னும் மூன்று தொழிலாளர்கள் வேலை இடைநீக்கம் செய்யப்பட்டனர். பாலசுப்பிரமணியம் இ.தொ.கா. தோட்டத் தலைவராக இருப்பதோடு, தொழிற்சங்க அதிகாரத்துவம் அவர் மற்றும் ஏனைய மூன்று தொழிலாளர்களின் தொழில் உரிமைக்காக எந்தவொரு போராட்டத்தையும் நடத்த மறுத்துவிட்டன. அதற்கு பதிலாக, தோட்ட உரிமையாளர்களுடன் சமரசம் செய்துகொண்டு தொழிலாளர்களை அவர்களது நிபந்தனைகளுக்கு அடிபணியச் செய்வதன் ஊடாக பாலசுப்பிரமணியம் மற்றும் ஏனைய மூன்று தொழிலாளர்களுக்கும் வேலை வாங்கிக் கொடுக்கவே முயற்சித்தன. தொழிற்சங்கங்களின் இந்த துரோகம் காரணமாகவே தோட்ட உரிமையாளர்களின் கைகள் பலப்படுத்தப்படுகின்றன.