ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Massive ICE workplace raid jails 280 immigrant workers in Texas

டெக்சாஸில் நடந்த மிகப்பெரிய ICE பணியிட சுற்றிவளைப்பு சோதனை 280 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சிறையிலிட்டது

By Matthew Taylor 
5 April 2019

புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்க (Immigration and Customs Enforcement - ICE) அமைப்பின் முகவர்கள் புதனன்று காலை டெக்சாஸில் ஆலன் நகரில் ஒரு திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு 280 ஆவணமற்ற தொழிலாளர்களை கைதுசெய்தனர். CVE தொழில்நுட்பம் எனும் அந்த வணிகத்தில் கைபேசிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை பழுதுபார்க்கும் 2,100 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அந்த நகரின் மூன்றாவது மிகப்பெரிய வேலை வழங்குநராக அவ் வணிகம் உள்ளது.

சுமார் 200 சட்ட அமலாக்க அதிகாரிகள் இந்த திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையில் பங்குபற்றி, ஒட்டுமொத்த பணியிடத்தையும் சுற்றி வளைத்ததுடன் தஞ்சம் புகுந்தோர் நிலையை அடிப்படையாகக் கொண்டு அவர்களை குழுக்களாக பிரித்தனர். அதனைத் தொடர்ந்து முகவர்கள், தொழிலாளர்களை கைப்பட்டைகளை அணியும்படி நிர்பந்தித்தனர், அதாவது சட்டபூர்வ தகுதியுடைய தொழிலாளர்கள் எனில் அவர்கள் பச்சை நிறத்திலும், ஆவணமற்ற சந்தேகத்திற்குரிய தொழிலாளர்கள் எனில் அவர்கள் மஞ்சள் நிறத்திலுமான கைப்பட்டை அணிய வேண்டும்.

ஜெஸினியா பொன்ஸ் என்ற CVE தொழிலாளி, “அது ஒரு பைத்தியக்காரத்தனமாக இருந்தது” என்று திடீர் சுற்றிவளைப்பு சோதனை பற்றி NPR க்கு தெரிவித்தார். மேலும் அப்பெண்மணி, “ஒரு சாதாரண நாளைப் போல நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தோம். …நாங்கள் வெறுமனே மக்கள் கூச்சலிடுவதைக் கேட்டோம், உங்களுக்கு தெரியும், மக்கள் கூச்சலிட்டு கலவரப்பட்டுக் கொண்டிருந்தனர். நாங்கள் வெளியே வந்தோம் அப்போது ஒரு அதிகாரி என்னை பின் தொடருங்கள், என்னை பின் தொடருங்கள் என்று மட்டும் கூறிக் கொண்டிருந்தார்” என்றும் அவர் தெரிவித்தார்.


டெக்சாஸ் ஆலன் இல் புலம்பெயர் தொழிலாளர்களை பொலிஸ் கைது செய்கிறது

அந்த பகுதியில் ஹெலிகாஃப்டர்கள் மேலே பறந்து கொண்டிருக்க மற்றும் உள்ளூர் பொலிஸ் ரோந்து செய்ய, ICE ஆவணமற்றவர்களாக கருதிய புலம்பெயர்ந்தோர் நான்கு பேருந்துகளில் ஏற்றப்பட்டு பின்னர் தடுப்புக்காவல் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் இப்போது நாடு கடத்தலுக்கு முகம் கொடுக்கின்றனர்.

முந்தைய குற்றச்சாட்டுக்களும் உட்பட, காலவரையற்ற தடுப்புக் காவலையும் பலரும் எதிர்கொள்வார்கள். சமீபத்திய 5-4 முடிவுகளில் இந்த சர்வாதிகார ஒழுங்கை அமெரிக்க உயரடுக்கு அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது.

பொலிஸ் நடவடிக்கை பற்றி செய்திகள் பரவிய நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக CVE க்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டனர். Dallas Morning News செய்தியிதழ், கைதானவர்களின் சில உறவினர்களும் நண்பர்களும் உட்பட குறைந்தது 100 பேர் அந்த தொழிலாளர்களை விடுவிக்கக் கோரி அங்கு ஒன்று கூடினர் என்று தெரிவிக்கிறது. தொழிலாளர்கள் மீது சோதனை கட்டவிழ்த்து விடப்பட்டு, அவர்களது அன்புக்குரியவர்களிடம் இருந்து நிரந்தரமாக தாம் பிரிக்கப்படுகிறோமோ என்ற அச்சத்திற்கும் அவர்கள் ஆளான நிலையில் பணியிடத்திற்குள் இருந்தபடியே தொழிலாளர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தீவிரமாக அழைப்பு விடுக்கவும் குறுஞ்செய்தி அனுப்பவும் தொடங்கினர்.

அத்தகைய கவலைக்கு ஆளான குடும்ப உறுப்பினர்களில் எட்கார் அருபலா என்பவரும் இருந்தார். உண்மையில் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு அமெரிக்க குடியுரிமை கொண்ட அருபலாவின் துணைவியாகப் போகிறவரும் தடுத்து வைக்கப் பட்டவர்களில்  ஒருவராவார். Bizjournals.com க்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்: "நான் வீட்டில் இருந்து கொண்டிருந்தேன், அப்போது யாரோ ஒருவரது கைபேசியில் இருந்து அவர் என்னை அழைத்துப் பேசினார், ஒருவேளை அவர் தடுத்து வைக்கப்படப்போகிறார் என்றும், மேலும் அவரை நாடு கடத்த அவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார். உண்மையில் எனக்கு வருத்தமாக இருந்தது. அவருக்கு என்ன நடக்கப் போகிறதோ என்று நினைத்து நான் பயந்தேன்.”

ஐக்கிய இலத்தீன் அமெரிக்க குடிமக்கள் குழுவின் (League of United Latin American Citizens) ஒரு பிரதிநிதியான ஹில்டா ராமிரேஸ் டுவார்டே, CVE தொழில் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எத்தகைய நிலைமைகளின் கீழ் இருக்கின்றனர் என்பது பற்றி உள்ளுர் NBC இணைப்பு நிறுவனத்திற்கு பின்வருமாறு விவரித்தார்:

"இவர்களில் சிலர் 10 மற்றும் 15 ஆண்டுகள் வரை இங்கு தொடர்ந்து வேலை செய்யும் குடும்ப உறுப்பினர்களை கொண்டுள்ளார்கள். ஆகவே அவர்கள் இப்போதுதான் இங்கு வந்து சேர்ந்தவர்கள் இல்லை. இவர்கள் பல ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்பதுடன் இந்த நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர்களாவர். அதிலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருக்கின்ற நிலையில் அவர்களது குழந்தைகளை விட்டுச் செல்கின்றனர் என்பதை அறிந்து நான் வருத்தமடைந்தேன். பதின்மவயது பெண் ஒருவரிடம் நான் பேசிய போது அவர், 'எனது தாய் என்னையும் எனது தம்பி மற்றும் இரண்டு குழந்தைகளையும் விட்டுச் செல்கிறார்' என்றும், அந்த வீட்டில் அவர் ஒருவர் தான் சம்பாதிப்பவராக இருக்கிறார் என்ற நிலையில் குடும்பத்தில் உள்ள நால்வரின் கதி என்னவாகுமோ? இந்த வாரியம் முழுவதிலும் இதையொத்த சூழ்நிலைகளையே நாங்கள் எதிர் கொள்கிறோம்” என்றும் கூறினார்.

குவாத்தமலாவைச் சேர்ந்த தொழிலாளியான வெண்டி அர்மாஸ் என்பவரும் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் NBC க்கு இவ்வாறு தெரிவித்தார்: "இவர்கள் கடுமையாக உழைப்பவர்கள். இவர்கள் குற்றவாளிகளோ, கற்பழிப்புவாதிகளோ அல்லது அந்த மாதிரியான தன்மையுடையவர்களோ அல்லர். வாழ்க்கைப் பிழைப்பிற்காக இவர்கள் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு பேருந்துகள் புறப்பட்டபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. பேருந்து கிளம்பி வெளியே சென்ற நேரம், அங்கு ஒரு நீண்ட அமைதி நிலவியதுடன், மக்கள் அழுது கொண்டே, 'நான் இந்த நாட்டை விட்டுவிட்டு மீண்டும் என் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லப் போகிறேன்' என்று கூறினர்"

லூயிஸ் மார்டினேஸ் எனும் 19 வயதான ஆர்பாட்டக்காரர் ஒருவர் "எவரும் சட்டவிரோதமானவர் அல்லர்" என்ற கோஷத்தை கையிலேந்திய வண்ணம், "இது ஏதோ கடுமையான விடயம் மட்டுமல்ல, கொலின் கவுண்டியில் ஆலன் நகரில் ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட ஏதோவொரு நிகழ்வை நீங்கள் பார்க்கவில்லையா" என்று Dallas Morning News செய்தியிதழுக்கு அவர் தெரிவித்தார்.

ஊடக செய்திகளின் படி,  I-9 எனும் மோசடியான ஆவணங்களைக் கொண்டு CVE சிலரை பணியமர்த்தியுள்ளது என்பதை ICE மூடி மறைத்து விட்டது. கடந்த ஓராண்டு காலத்தில், ஒழுங்கின்மைகள் குறித்து ஆய்வு செய்த நிறுவன கோப்புக்களை முகமை தணிக்கை செய்துள்ளது.

2008 இல் ஒரு லோவா இறைச்சிக் கூடத்தை இந்த முகமை திடீர் சோதனை செய்து 398 பேரை கைது செய்த நிகழ்வுக்குப் பிந்தைய அதையொத்த ICE இன் பெரும் கைது நடவடிக்கையாக புதனன்று நடந்த நிகழ்வு உள்ளது. 2018 ஆகஸ்டில், வடகிழக்கு டெக்சாஸ் நகரமான சம்னெரில் ஒரு முன்னோட்ட உற்பத்தி ஆலையில் 159 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கைதுசெய்த திடீர் சுற்றிவளைப்பு சோதனையை நடவடிக்கையைத் தொடர்ந்து இது நடந்துள்ளது.

ஜனவரி 2019 ICE அறிக்கை ஒன்று புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாரியளவில் சுற்றி வளைப்பது என்பது "புதிய சர்வசாதாரண விடயம்" என்று பெருமை பீற்றியது.

WSWS மார்ச்சில் இவ்வாறு தெரிவித்தது: "சென்ற ஆண்டில் மட்டும் பணியிட விசாரணைகளுக்காக இலக்கு வைக்கப்பட்ட வணிகங்களின் எண்ணிக்கை 300 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்க (ICE) அமைப்பின் செய்தி வெளியீட்டின் படி, 2017 இல் நடத்தப்பட்டதான 1,691 பணியிட விசாரணைகளுடன் ஒப்பிடுகையில், 2018 இல் 6,848 விசாரணைகளை உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு (Homeland Security Investigations - HSI) அமைப்பு தொடங்கியுள்ளது. Newsweek பத்திரிகை, 2016 முதல் ICE நடத்திய பணியிட கைது நடவடிக்கைகள் 650 சதவிகித அளவிற்கு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கிறது."

ICE இன் சமீபத்திய தீவிர நடவடிக்கைகள் புலம்பெயர்ந்த மக்கள் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதலை சுட்டிக் காட்டுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரியில், 2009 முதல் எந்த மாதத்தையும் விட அதிகளவாக தெற்கு எல்லையை கடக்க முயன்ற 7,700 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல ஆதரவற்ற சிறுவர்கள் உட்பட, தடுத்து வைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குவாத்தமலா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சல்வடோர் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

ICE ஆல் தடுத்து வைக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், உரிய நடவடிக்கையற்ற சிறைக்காவலையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அழிவுக்குட்படுத்தப்பட்டு குற்றவியல் ஆட்சியாளர்களால் ஆட்சி செய்யப்பட்டுவரும் அவர்களது நாடுகளுக்கு நாடுகடத்தப்படுவதையும், பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்படுவதையும், சித்திரவதை முகாம் பாணியிலான தடுப்பு மையங்களில் அடைத்து வைக்கப்படுவதையும், தவறான பாதுகாப்பாளர்களையும், மற்றும் ஏனைய தன்னிச்சை வடிவங்களிலான தண்டனைகளையும் எதிர்கொள்வார்கள். இந்த திகில் நிறைந்த காட்சிகள் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் என இருகட்சி ஆதரவுடன் தான் அரங்கேற்றப்பட்டுள்ளன.

கடந்த வாரம், அமெரிக்காவுக்கு மக்கள் புலம் பெயரும் அலையை தணிப்பதில் தோல்வியடைந்த நாடுகளை பழிவாங்கும் விதமாக எல் சல்வடோர், ஹோண்டுராஸ் மற்றும் குவாத்தமலா ஆகிய நாடுகளுக்கான வெளிநாட்டு நிதியுதவியை ஜனாதிபதி ட்ரம்ப் குறைத்து விட்டார். மெக்சிக்கோ உடனான அமெரிக்க எல்லையை மூடுவது குறித்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து இது நடந்தது.

ட்ரம்ப் நிர்வாகம், பொலிஸ் மற்றும் இராணுவம் உட்பட, அதன் வலதுசாரி அடித்தளத்திற்கு எரியூட்டும் வகையில் வெளிநாட்டவர் மீதான வெறுப்பை புலம்பெயர்வு எதிர்ப்பின் மூலம் தூண்டி வருகிறது.

புலம் பெயர்ந்த மக்களை அச்சுறுத்துவதற்காகவும், முதலாளித்துவத்தை எதிர்த்து அதிகரித்தளவில் தொழிலாளர்கள் போராட்டத்திற்குள் இறங்கும் நிலையில் தொழிலாள வர்க்கத்தை திசை திருப்புவதற்காகவும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பொலிஸ் அரசு உள்கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்ல இந்த வலதுசாரி சக்திகள் ஒன்று திரட்டப்பட்டு வருகின்றன.