ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

මාර්තු 17 වෙනිදා ශ්‍රී ලංකාවේ පැවැත් වූ කම්කරු සම්මේලනයේ අර්ථභාරය

இலங்கையில் மார்ச் 17 நடந்த தொழிலாளர் மாநாட்டின் முக்கியத்துவம்

W.A. Sunil
01 April 2019

இலங்கையில் ஹட்டனில் மார்ச் 17 அன்று நடைபெற்ற தோட்டத் தொழிலாளர்கள் மாநாடானது சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தையும் அதன் புரட்சிகரக் கட்சியையும் கட்டியெழுப்புவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருந்தது. இந்த மாநாடு, உலக முதலாளித்துவ அமைப்பு முறை வீழ்ச்சியடைந்து வரும் சூழ்நிலையிலும் தொழிற்சங்கங்கள் உட்பட பழைய அமைப்புக்களின் பொறிவின் மத்தியிலும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஏற்பட்டுள்ள ஆழமான புறநிலை மாற்றங்களை பிரதிபலித்தது.

இந்த மாநாடு "தோட்ட தொழிலாளர் போராட்டத்தின் படிப்பினைகளும் சம்பள அதிகரிப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை வெல்வதற்கான முன்னோக்கிய பாதை" பற்றி கலந்துரையாடுவதற்காக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) ஆதரவுடன் எபோட்சிலி தொழிலாளர் நடவடிக்கை குழுவினால் கூட்டப்பட்டது. கணிசமான எண்ணிக்கையிலான தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சோ.ச.க. உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

தினசரி அடிப்படை சம்பளத்தை இரட்டிப்பாக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் போராட்டத்தின் கசப்பான அனுபவத்தின் பின்னரே இந்த மாநாடு நடைபெற்றது. ஒன்பது நாள் வேலை நிறுத்தமும் உள்ளடங்கிய அவர்களது போராட்டமானது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU), பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி (JPTUC), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (DWC) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) போன்ற தொழிற்சங்கங்களை மீறியே முன்னெடுக்கப்பட்டது. உண்மையில், இந்தப் போராட்டம், தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒரு கிளச்ச்சியாகும். தொழிலாளர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அடக்குவதற்குமே தொழிற்சங்கங்கள் தலையிட்டன.

இறுதியில், இ.தொ.கா. மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், கம்பனிகள் கோரிய ஒரு விற்றுத்தள்ளும் ஒப்பந்தத்தை தொழிலாளர்களின் மீது சுமத்துவதன் மூலம் தொழிலாளர்களை நிறுத்துவதற்கு முடிவு செய்தன. கம்பனிகளின் இலாப நலன்களை பாதுகாப்பதற்காக, அரசாங்கம் தோட்டத் தொழிலாளர் போராட்டத்தை சிதைப்பதற்கு தொழிற்சங்கங்களின் சேவையை நாடியதுடன், ஏனைய தொழிலாளர்களையும் போராட்டத்தில் குதிப்பதற்கு இது ஊக்குவிக்கும் எனவும் கருதியது. கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம், அற்ப ஊதிய அதிகரிப்பையும் "வெளியார் உற்பத்தி மாதிரி" என்ற பெயரில் ஈவிரக்கமற்ற சுரண்டல் முறையை நடைமுறைப்படுத்துவதையும் திணித்துள்ளது.

சோ.ச.க. யின் அழைப்பிற்கு அணிதிரள்வதைத் தவிர, தொழிலாளர்களுக்கு கம்பனிகள், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு வேறு வழி இல்லை. இலாப நோக்கு அமைப்பு முறைக்கும் அதை பாதுகாக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராடுவதற்கு, தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து விலகி, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு சோ.ச.க. தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. அத்தகைய அரசியல் போராட்டத்தை முன்னெடுக்காமல் தொழிலாளர்களால் அடிப்படை கோரிக்கைகளுக்காகக் கூட தங்களது போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்று சோ.ச.க. விளக்கியது.

தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடையும் இந்த போராட்ட அலை, தொழிலாள வர்க்கத்திற்குள் நிலவும் பரந்த மாற்றங்களை பிரதிபலிக்கின்றது. எபோட்சிலி தோட்ட தொழிலாளர்களின் நடவடிக்கை குழு ஸ்தாபிக்கப்பட்டமை அதன் கூர்மையான வெளிப்பாடு ஆகும். தோட்டத் தொழிலாளர்களின் மாநாடு இந்த போராட்டத்தின் இன்னுமொரு முன்னேற்றமாக இருந்தது. சோ.ச.க. மற்றும் நடவடிக்கை குழு விடுத்த அழைப்பு, தோட்டத் தொழிலாளர்களை மட்டுமன்றி, தொழிலாளர்களின் ஏனைய பிரிவினரையும் இளைஞர்களையும் ஈர்த்தது.

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமானது இலங்கை ஆளும் உயரடுக்கை கடுமையான நெருக்கடியில் தள்ளியுள்ள பெருகி வரும் சமூக எதிர்ப்பின் ஒரு பகுதியாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை பிரதமராக அமர்த்தி ஒரு ஆட்சிக் கவிழ்ப்பைச் செய்தார். ஆட்சிக் கவிழ்ப்பு தோல்வி அடைந்தாலும், சமூக எதிர்ப்பை நசுக்குவதற்கும், சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கை திட்டத்தை திணிப்பதற்கும் மிகவும் பொருத்தமான கன்னை எது என்பதில் ஆளும் உயரடுக்கினுள் உள்முரண்பாடு தூண்டிவிடப்பட்டது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இன்றியமையாத அனுபவத்தின் ஒரு பகுதியாக, தோட்டத் தொழிலாளர்களின் அனுபவங்களைப் பற்றி மார்ச் 17 நடந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது. சோ.ச.க. அரசியல் குழுவின் உறுப்பினரான எம். தேவராஜா மாநாட்டிற்கு முன்வைத்த அறிக்கையில், இந்த மாற்றங்கள் வெறுமனே இலங்கை நிகழ்வுகள் மட்டும் அல்ல, என்று விளக்கினார். பெருந்தோட்டப் போராட்டம் மற்றும் தபால், இரயில், இலங்கை மின்சார சபை, பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுமான ஏனைய தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் அமைதியின்மையும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச எழுச்சியின் ஒரு பகுதியாகும்.

தொழிலாள வர்க்கத்தின் பூகோள எழுச்சி மற்றும் சர்வதேச சோசலிசத்திற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் போராட்டத்தின் பின்னணியிலேயே இந்த மாநாடு நடைபெற்றது. தொழிலாள வர்க்கத்தின் மீது சந்தர்ப்பவாத மற்றும் தேசியவாத அமைப்புக்களின் மேலாதிக்கம் வீழ்ச்சியடைந்து, அவை முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையின் நேரடி முகவர்களாக மாறியுள்ளன. சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு உலகளவில் வளர்ந்து வருகிறது.

சமீபத்திய சம்பள போராட்டத்தில் மெக்சிகோவில் உள்ள மத்தாமோரொஸ் தொழிலாளர்கள், துரோக தொழிற்சங்கங்களை மீறி தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைத்தனர். மிகவும் முக்கியமாக, உலக சோசலிச வலைத் தள வாகன தொழிலாளர் செய்தி இதழ் மற்றும் வாகனத்துறை தொழிலாளர்களின் சாமானிய உறுப்பினர் குழுவும், பெப்பிரவரி ஆரம்பத்தில், ஆலை மூடல்களை எதிர்த்தும் வேலைகளை பாதுகாப்பதற்காகவும் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தன. இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான முன்முயற்சியை அமெரிக்க சோ.ச.க.வும் உலக சோசலிச வலைத் தளமும் எடுத்திருந்தன.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும், மார்ச் 17 ஹாட்டனில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் சுதந்திரமாக உரையாற்றியதோடு தொழிற்சங்கங்களில் இருந்து பிரிவதற்கும், நடவடிக்கைக் குழுக்களை அமைக்கவும் சோசலிசத்திற்காகப் போராடுவதற்கும் இன்றியமையாத சர்வதேச அனுபவங்களைக் கிரகித்துக்கொள்ள முற்பட்டனர்.

உலக சோசலிச வலைத் தளம், அதன் பரந்த சர்வதேசப் போராட்டத்தின் ஒரு பகுதியாக செய்திக் கட்டுரைகள், பகுப்பாய்வுகளை எழுதி, தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னோக்கை வழங்குவதில் ஒரு முக்கிய பங்கை ஆற்றியது.

சர்வதேச நோக்குநிலையை குறிக்கும் வகையில், மாநாட்டில் பங்கேற்றவர்கள் இரு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்: அதில் ஒன்று, அமெரிக்காவால் தண்டனையை எதிர்கொண்டிருக்கும் விக்கிலீக்ஸ் வெளியீட்டாளர் ஜூலியான் அசாஞ்ச், அமெரிக்காவில் தகவல் அம்பலப்படுத்தியவரான செல்சி மானிங் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியது. மற்றைய தீர்மானம் இந்திய வலதுசாரி அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரியது. பதின்மூன்று மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு 18 பேருக்கு குறைந்த கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச எழுச்சியும் மார்ச் 17 மாநாடும் இலங்கையில் உள்ள போலி இடது மற்றும் பின் நவீனத்துவ குழுக்களுக்கு ஒரு பலத்த அடியாகும். தமது சர்வதேச சமரப்பினரைப் போலவே, அவர்கள் தொழிலாள வர்க்கம் புரட்சிகர சக்தி என்பதையும், சோசலிசத்திற்காகப் போராடுவது அதன் வரலாற்றுக் கடமை என்பதையும் நிராகரிக்கின்றனர். முன்நிலை சோசலிச கட்சி (மு.சோ.க.) மற்றும் அதன் முன்னணி குழுக்களான "1000 (ரூபாய்) இயக்கம்", மு.சோ.க.வை ஆதரிக்கின்ற பின் நவீனத்துவவாதிகள் மற்றும் கல்வியாளர்கள் குழுவும், கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்கள் வெற்றி பெறலாம் என்று அறிவிக்கின்றனர். அவர்கள் தொழிலாளர்களை மீண்டும் தொழிற்சங்கங்களுக்குள் கட்டிப்போடுவதற்கு முயற்சிக்கின்றனர்.

2019 இல் சர்வதேச வர்க்கப் போராட்டத்திற்கான மூலோபாயமும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிரான அரசியல் போராட்டமும் என்ற தலைப்பிலான உலக சோசலிச வலைத் தளத்தின் ஒரு முன்னோக்கு குறிப்பிட்டதாவது:

"எவ்வாறெனினும், சமூக எதிர்ப்புரட்சியின் பல தசாப்தங்கள் நீண்ட காலகட்டம் ஒன்று, இப்போது வெகுஜன எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டில் அபிவிருத்தி கண்ட போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் நோக்குநிலையிலான ஒரு முக்கியமான மாற்றத்தின் புறநிலை அறிகுறிகளாக இருந்தன. அது அதன் ஆரம்பகட்டங்களில் தான் இருக்கிறது என்றபோதிலும் கூட, விட்டுக்கொடுக்காத ஒரு போராட்டத்திற்கு சாதகமாக இருக்கக்கூடிய ஒரு போர்க்குண மனோநிலை, துரிதமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த மனோநிலை முதலாளித்துவத்திற்கு எதிரானதும் சோசலிசத்திற்கு ஆதரவானதுமான ஒரு வெளிப்படையான போராட்டத்தின் வடிவத்தை எடுக்க வெற்றிகாணப்பட வேண்டிய ஏராளமான சித்தாந்த மற்றும் அரசியல் பிரச்சினைகள் இப்போதும் இருக்கின்றன என்பது உண்மையே. ஆயினும், நேரடிப் போராட்டம் தவிர்க்கமுடியாதது என்ற புரிதலுக்கு தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. மேலும், 2018 இல் நடந்த போராட்டங்கள் உத்தியோகபூர்வ அரசு-ஆதரவு தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியில் நடந்தன என்ற உண்மையானது இந்த பிற்போக்கான அமைப்புகளின் மீது தொழிலாளர்கள் மத்தியில் இருந்த மிக முக்கியமான ஆதரவு தொலைந்து போயிருப்பதை விளங்கப்படுத்துகிறது. அனைத்துலகக் குழு முன்னெதிர்பார்த்ததைப் போலவே, சமூக சமத்துவத்திற்கும் உலக சோசலிசத்திற்குமான போராட்டமானது இந்த மதிப்பிழந்த, முதலாளித்துவ-ஆதரவு எந்திரங்களுக்கு எதிரான ஒரு உலகளாவிய கிளர்ச்சியின் ஆரம்ப வடிவத்தை எடுக்கும்."

தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் பப்லோவாதம் உட்பட சந்தர்ப்பவாத மற்றும் தேசியவாத அமைப்புகளுக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் சகோதரக் கட்சிகளும் முன்னெடுத்த தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டம் ஊடறுப்பதை தொழிலாள வர்க்கத்தின் இந்த அபிவிருத்திகள் காட்டுகின்றன. இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் இந்த போராட்டத்தின் மறுக்கமுடியாத பதிவைக் கொண்டுள்ளன.

மேலே குறிப்பிடப்பட்ட உலக சோசலிச வலைத் தளத்தின் முன்னோக்கில் விளக்கியுள்ளவாறு, "இந்த உக்கிரமான சமூக போர்க்குணத்தை சோசலிசத்திற்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவான இயக்கமாக மாற்றியமைப்பது என்பது தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச கட்சிகளை கட்டியெழுப்புவதிலேயே தங்கியிருக்கின்றது," என்பது தீர்க்கமான விடயமாகும்.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையுள்ள புத்திஜீவிகளை இந்த முக்கிய அனுபவங்களை நோக்கி திரும்புவதோடு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியை புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.