ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Washington tightens sanctions to cut Iran oil exports to “zero”

ஈரான் எண்ணெய் ஏற்றுமதிகளை "பூஜ்ஜியமாக" குறைக்க வாஷிங்டன் தடையாணைகளை இறுக்குகிறது

By Bill Van Auken
23 April 2019

தொடர்ந்து ஈரானிய எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து நாடுகள் மீதான விலக்கீட்டுரிமையை நீக்கி, வாஷிங்டன் ஈரானுக்கு எதிரான அதன் ஒருதலைபட்சமான சட்டவிரோத பொருளாதார தடையாணைகளின் இன்னும் அதிக அபாயமான மற்றொரு கட்டத்தைத் தொடங்கி உள்ளது.

ஈரானிய எரிசக்தி ஏற்றுமதிகள் அனைத்தையும் தடுத்து அதன் பொருளாதாரத்தை முறிக்கும் வகையில் உலக வங்கியியல் அமைப்புமுறையில் ஈரானை முடக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட தண்டிக்கும் வகையிலான இரண்டாம் சுற்று தடையாணைகளை ட்ரம்ப் நிர்வாகம் கடந்த நவம்பரில் திணித்த போது, இந்த விலக்கீட்டுரிமைகள் வழங்கப்பட்டன. சீனா, இந்தியா, துருக்கி, ஜப்பான், தென் கொரியா, கிரீஸ் மற்றும் இத்தாலி, அத்துடன் தாய்வான் தீவு ஆகிய நாடுகள் அந்த விலக்கீட்டுரிமைகளில் உள்ளடங்கி இருந்தன. கடைசி மூன்றும் ஈரானிய எண்ணெய் இறக்குமதிகளை நிறுத்திக் கொண்டதால் அவற்றின் மீதான விலக்கீட்டுரிமைகள் காலாவதியாயின. இப்போது ஏனைய ஐந்துக்கான விதிவிலக்குகள் மே 2 இல் முடிவுக்கு வர உள்ளன, இது அமெரிக்க சந்தைகளில் முடக்கம் மற்றும் அபராதங்கள் உட்பட அந்நாடுகளைத் தண்டனைகளுக்கு உள்ளாக்கும்.

திங்கட்கிழமை அமெரிக்க நடவடிக்கையை அறிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, வாஷிங்டனின் கட்டளைகளை மீறுவதற்குத் துணியும் எவரொருவருக்கு எதிராகவும் பழிவாங்கும் ஓர் அடாவடித்தனமான அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்தினார்.

“நாங்கள் இனி விதிவிலக்கீட்டுரிமைகள் வழங்க மாட்டோம்,” என்ற அவர், “நாங்கள் பூஜ்ஜியமாகி கொண்டிருக்கிறோம். நாங்கள் எல்லா விடயத்திலும் பூஜ்ஜியத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து தடையாணைகளை அமுல்படுத்தி, இணக்கத்தைக் கண்காணிப்போம். ஈரானுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ளும் எந்த தேசமோ அல்லது நிறுவனமோ எச்சரிக்கையுடன் அதன் தவறை சிரத்தையோடு செய்யட்டும். இதன் அபாயங்கள் வெறுமனே சலுகைகள் மதிப்புடையதாக மட்டும் இருக்கப் போவதில்லை,” என்றார்.

உண்மையில், அந்த குறிப்பிட்ட நாடுகள் ஈரானிலிருந்து அவற்றின் எண்ணெய் இறக்குமதிகளைக் குறைத்துக் கொண்டு, ஈரானிய கச்சா எண்ணெய்க்கு மாற்றீடுகளைக் காணவும் என்று வாஷிங்டனின் ஒரு கோரிக்கையுடன் தான் அந்த விதிவிலக்குகள் வழங்கப்பட்டிருந்தன. ஈரானிய எண்ணெயை மொத்தமாக திடீரென வெட்டுவது உலகளாவிய பெட்ரோலிய விலையுயர்வுகளுக்கும் மற்றும் அமெரிக்காவிலேயே கூட எரிவாயு நிலையங்களில் விலை அதிகரித்தால் ஏற்படக்கூடிய அரசியல் எதிர்விளைவுகளும் இட்டுச் செல்லும் என்பதால் அவற்றை தடுப்பதையும் அந்த விலக்கீட்டுரிமைகள் நோக்கமாக கொண்டிருந்தன.

விலக்கீட்டுரிமைகளை நீக்குவதற்கான அமெரிக்கா முடிவு குறித்த செய்திகள் திங்களன்று வர்த்தகத்தில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளை 3 சதவீதம் அதிகரித்தது, அத்துடன் முன்பேர ஒப்பந்தங்கள் ஆறு மாதங்களில் மிக கூர்மையான உயர்வாக பேரலுக்கு 74 டாலருக்கும் அதிகமாக சென்றது.

சீனா விடயத்தில், இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற ஈரானிய எண்ணெய்யின் அளவு கடந்த ஆறு மாதங்களில் தான் அதிகரித்துள்ளது.

பொம்பியோவின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு முன்னர் கூட, வரவிருந்த அமெரிக்க நடவடிக்கை குறித்த செய்திகள் பெய்ஜிங்கிடம் இருந்து ஒரு கூர்மையான கண்டனத்திற்கு இட்டுச் சென்றிருந்தது.

“சீனா அந்த ஒருதலைபட்சமான தடையாணைகளை மற்றும் அமெரிக்கா திணித்த 'கரம்-நீண்ட சட்ட அதிகாரங்கள்' என்று அழைக்கப்படுவதையும் எதிர்க்கிறது,” என்று திங்களன்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். “ஈரான் உடனான நமது ஒத்துழைப்பு பகிரங்கமானது, வெளிப்படையானது, சட்டத்திற்கு உட்பட்டது, நியாயமானது, அவ்விதத்தில் அது மதிக்கப்பட வேண்டும். நம் அரசாங்கம் சீன நிறுவனங்களின் சட்டபூர்வ உரிமைகள் மற்றும் நலன்களை தாங்கிப்பிடிக்க பொறுப்பேற்றுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி சந்தையின் ஸ்திரப்பாட்டை தாங்கிப்பிடிப்பதில் அது ஓர் ஆக்கபூர்வமான மற்றும் நேர்மறையான பாத்திரம் வகிக்கும்,” என்றார்.

வாஷிங்டனும் பெய்ஜிங்கும் ட்ரம்ப் நிர்வாகம் தூண்டிவிட்ட முழுமையாக வெடித்துள்ள வர்த்தக போரை நிறுத்துவதற்காக என்று கூறப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு இடையே உள்ளன என்ற நிலையில், ஈரானிய எண்ணெயின் சீன இறக்குமதி மீதான விதிவிலக்குகளைத் திரும்பப்பெற்றமை அவ்விரு சக்திகளும் இடையே மற்றொரு மோதலுக்கான களம் அமைக்கிறது.

எரிசக்தி தேவைகளில் சுமார் 80 சதவீதத்திற்கு இறக்குமதிகளைச் சார்ந்திருக்கின்ற இந்தியா ஈரானிய எண்ணெய்க்கு மாற்றீடுகளைக் காண்பதில் வெற்றி பெற்றுள்ளதாக அரசு அதிகாரிகளும் மற்றும் எரிசக்தித்துறை ஆதார நபர்களும் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், விலக்கீட்டுரிமைகளைத் திடீரென நீக்கியமை வெளிவேடத்திற்கு அமெரிக்க கூட்டாளிகளான துருக்கி, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு பிரச்சினைகளை முன்னிறுத்துகிறது.

துருக்கிதான் எண்ணெய் இறக்குமதிகளுக்காக ஈரானை மிகவும் அதிகமாக சார்ந்துள்ளது, ஈரானுடன் அது அண்மித்து 300 மைல் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. துருக்கிய ஜனாதிபதிக்கான மூத்த ஆலோசகர் இப்ராஹிம் கலின், அந்நாட்டிற்கான ஈரானிய எண்ணெய் இறக்குமதிகளுக்கான விலக்கீட்டுரிமையை நீடிக்குமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு அழுத்தமளிக்க கடந்த வாரம் வாஷிங்டனில் இருந்தார்.

“எண்ணெய்யை பொறுத்த வரையில், எங்களுக்கான பிரதான எண்ணெய் வினியோக நாடுகளில் ஈரானும் ஒன்றாகும், நாங்கள் ஈரானிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்க விரும்புவோம் என்பது மட்டுமல்ல, மாறாக ஈரான் அண்டை நாடும் ஆகும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தினோம்,” என்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் திரு. கலின் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். “எங்களுக்கு ஈரானுடன் நீண்ட எல்லை உள்ளது, எங்களுக்குள் கலாச்சார உறவுகள் உள்ளன,” என்றார்.

துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் Mevlüt Çavuşoğlu, “துருக்கி ஒருதலைபட்சமான தடையாணைகளை நிராகரிக்கிறது என்பதோடு, அண்டைநாடுகளுடன் உறவுகளை எவ்விதம் மேற்கொள்ள வேண்டும் என்ற பலவந்தமான திணிப்புகளையும் நிராகரிக்கிறது,” என்று குறிப்பிட்டு ஒரு சேதியை ட்வீட்டரில் பதிவிட்டார்.

ஜப்பானும் தென் கொரியாவும் அவற்றின் பெட்ரோ இரசாயன தொழில்துறைகளுக்காக ஈரானிய எண்ணெய்யின் குறிப்பிட்ட வகைகளைச் சார்ந்துள்ளன, அவற்றிடம் ஆயத்தமான மாற்றீடுகள் இல்லை.

முழுமையான கூட்டு நடவடிக்கை திட்டம் (JCPOA) என்றறியப்படும் 2015 ஈரான் அணுசக்தி உடன்படிக்கையை கடந்தாண்டு மே மாதம் ட்ரம்ப் நிர்வாகம் தன்னிச்சையாக விட்டொழித்து, அமெரிக்க தடையாணைகளை தொடர்ந்து இறுக்குவதை தொடங்குவதற்கு முன்னர், ஈரான் நாளொன்றுக்கு சுமார் 2.5 மில்லியன் பேரல்கள் (bpd) ஏற்றுமதி செய்து வந்தது. அந்த அளவு நாளொன்றுக்கு 1 மில்லியன் பேரல்களுக்கும் கீழே குறைந்துள்ள போதினும், அது அரசு வருவாய்களில் 40 சதவீதத்தைக் கணக்கில் கொண்டுள்ளது.

ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என JCPOA உடன்படிக்கையில் கையெழுத்துள்ள ஏனைய நாடுகள் அனைத்துமே, ஈரான் அதன் அணுசக்தி திட்டத்தை மட்டுப்படுத்துவதற்கான அதன் கடமைப்பாடுகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருப்பதாக வலியுறுத்துகின்றன. இந்த மதிப்பீட்டை, ஈரானின் இணக்கமான தன்மையை உறுதி செய்வதற்காக அமர்த்தப்பட்ட ஐ.நா. அமைப்பின் சர்வதேச அணுசக்தி முகமையும் சரிபார்த்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பிரதான ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து விரோதத்தைச் சந்திக்கின்றன, அவை அனைத்தும் JCPOA கையெழுத்தானதை, பிரதான ஐரோப்பிய எரிசக்தி கூட்டுகுழும நிறுவனங்களின் முதலீடுகளுக்கும் மற்றும் அதிகரித்த வர்த்தகத்திற்கு ஈரான் திறந்துவிட்டிருப்பதாக பார்த்தன.

விலக்கீட்டுரிமைகள் மீதான முடிவு "[ஈரானிய] ஆட்சியின் பிரான வருவாய் ஆதாரவளத்தைத் தடுப்பதை" நோக்கமாக கொண்டது என்று கூறு வெள்ளை மாளிகை ஓர் அறிக்கை வெளியிட்டது.

“மத்திய கிழக்கில் பாதுகாப்பையும், அமெரிக்காவையும், நமது பங்காளிகள் மற்றும் கூட்டாளிகளையும் அச்சுறுத்தும் அந்த ஆட்சியின் நிலைகுலைக்கும் நடவடிக்கையை முடிவு கட்டுவதற்காகவே ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் நமது கூட்டாளிகளும் ஈரானுக்கு எதிராக இந்த அதிகபட்ச பொருளாதார அழுத்த நடவடிக்கை நீடிக்கவும் விரிவாக்கவும் தீர்மானித்துள்ளனர்,” என்றது குறிப்பிட்டது.

ஈரானுக்கு எதிராக "அதிகபட்ச அழுத்தம்" என்று அமெரிக்க நிர்வாகம் எதை குறிப்பிடுகிறதோ, இக்கொள்கை, ஈரானிய இராணுவத்தின் உள்ளார்ந்த பாகமான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படைகளை (IRGC) ட்ரம்ப் நிர்வாகம் இம்மாத தொடக்கத்தில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்திய முன்னொருபோதும் இல்லாத ஒரு நடவடிக்கையையும் கண்டது. இந்நடவடிக்கை பென்டகன் மற்றும் சிஐஏ இரண்டில் இருந்தும் ஆட்சேபணைகளைப் பெற்றிருந்தது, அது அப்பிராந்தியத்தில் செயல்பட்டு வருகின்ற அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை படைகளை நோக்கி எதிர்வினையைத் தூண்டும் என்று அவை அஞ்சுகின்றன.

மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய மேலாத்திக்கத்திற்கு ஒரு தூணாக இருந்த அமெரிக்க ஆதரவிலான ஷாவின் முடியாட்சி சர்வாதிகாரத்தை தூக்கிவீசிய 1979 ஈரானிய புரட்சிக்குப் பின்னர் இருந்து, ஈரானை மத்தியக் கிழக்கில் பிரதான "நிலைகுலைக்கும்" சக்தியாக சித்தரிப்பதற்கான அமெரிக்காவின் முயற்சியை, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் கீழ் ஒன்றுபோல தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் இரண்டு நாடுகளுமே ஈரானின் எல்லையை ஒட்டி இருப்பவை என்ற நிலையில், அவற்றின் மீது வாஷிங்டன் படையெடுத்து ஆக்கிரமித்ததில் இருந்து, மற்றும் லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போர்களைக் கட்டவிழ்த்து விட்டதில் இருந்து, இந்த அமெரிக்க வனப்புரை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய போர்களில் மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்க மத்திய கிழக்கு கொள்கையின் அச்சு, இஸ்ரேல், சவூதி அரேபியா மற்றும் பிற பிற்போக்குத்தனமான வளைகுடா எண்ணெய் வள சுன்னி ஷேக் ஆட்சியாளர்களை உள்ளடக்கிய ஒரு ஈரானிய-விரோத கூட்டணியை உருவாக்குவதாக இருந்துள்ளது, இதனுடன் சேர்ந்து வாஷிங்டன் ஈரானின் பிராந்திய எதிரிகளுக்கு பாரிய ஆயுதங்களையும் வினியோகித்து வந்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம், ஈரானுக்கு எதிரான தடையாணைகளால் மட்டுமல்ல, மாறாக வெனிசுவேலாவுக்கு எதிராக விதிக்கப்பட்டவைகளால் ஏற்படும் எரிசக்தி வினியோக குறைவிலிருந்து எந்தவொரு பாதிப்பையும் ஈடுகட்ட எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, குறிப்பாக சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற முடியாட்சி சர்வாதிகாரங்களிடையே உள்ள அதன் பிராந்திய கூட்டாளிகளைக் கணக்கிட்டு வருகிறது. லிபியாவில் தீவிரமடைந்து வரும் உள்நாட்டு போராலும் சந்தை இன்னும் இறுக்கப்படுகிறது.

ஆனால் சுன்னி எண்ணெய் வள ஷேக் ஆட்சிகளது இதுபோன்ற நடவடிக்கை உத்தரவாதத்திற்கு வெகுதூரம் அப்பாற்பட்டது. தனது அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் சவூதி அராம்கோவுக்கான முதன்மை பங்கு வெளியீட்டை (IPO) பங்குச்சந்தையில் பதிவு செய்யும் விளிம்பில் உள்ள சவூதி முடியாட்சி, எண்ணெய் விலை உயர்வுகளை வரவேற்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

விலக்கீட்டுரிமைகளை முடிவுக்குக் கொண்டு வருவது மீதான அமெரிக்க அறிவிப்புக்கு தெஹ்ரான் பலமான விடையிறுப்பை வெளியிட்டது. “இத்தகைய தடையாணைகளின் சட்டவிரோத இயல்பைப் பார்த்து, [அமெரிக்க] தடையாணைகள் மீது [ஈரானிய எண்ணெய் வாடிக்கையாளர்களுக்கு] வழங்கப்பட்ட விலக்கீட்டுரிமைகள் மீது இஸ்லாமிய ஈரான் குடியரசு எந்த மதிப்போ அல்லது நம்பிக்கையோ வைக்கவில்லை, இனியும் வைக்காது,” என்று ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அப்பாஸ் மௌசவி திங்களன்று கூறினார்.

இதற்கிடையே இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படைகளின் (IRGC) கடற்படை தளபதி எச்சரிக்கையில், மத்திய கிழக்கு எண்ணெய்களுக்கான முக்கிய பாதையான ஆசியாவுடன் பிணைந்துள்ள ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஈரானின் சொந்த எண்ணெய்யை கொண்டு செல்வதை அமெரிக்க தடைகள் தடுத்தால், ஈரான் அதை மூடக்கூடும் என்றார்.

“எந்தவொரு அச்சுறுத்தல் விடயத்திலும், ஈரானின் கடல்வழி பாதையை பாதுகாக்கவும் ஆதரிக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம். நாங்கள் எங்கள் கௌரவத்தைப் பாதுகாப்போம், ஈரானின் உரிமைகளைப் பாதுகாப்பது என்று வரும் போது நாங்கள் பதில் நடவடிக்கைகள் எடுப்போம்,” என்று IRGC கடற்படை தளபதி ரியர் அட்மிரல் அலிரெஜா தன்ங்சிரி தெரிவித்தார்.

ஈரானின் பொருளாதாரத்தை நசுக்கி அங்கே ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான அமெரிக்க முனைவு அந்நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீவிரப்படுத்தி உள்ளது, ஈரானிய முதலாளித்துவ வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்து வருகின்ற ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி அரசாங்கம் அதிகரித்தளவில் கொள்ளையடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கும், வேலைவாய்ப்பின்மை மற்றும் சிக்கன நடவடிக்கை நிலைமைகளை எதிர்த்தும் 1980 களின் தொடக்கத்தில் தங்களின் அதிகாரத்தை ஒருங்குவித்துக் கொண்ட முல்லாக்கள் வழங்கிய மட்டுப்படுத்தப்பட்ட சமூக விட்டுக்கொடுப்புகளைத் திரும்ப பெறும் நிலைமைகளை எதிர்த்தும் அடிமட்டத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்திற்கும் இடையே சூழ்ச்சிகளைக் கையாள நிர்பந்திக்கப்பட்டது.

ட்ரம்ப் நிர்வாகம் JCPOA ஐ விட்டொழித்தமை மற்றும் ஈரான் மீது பொருளாதார போர் கட்டவிழ்த்து விட்டுள்ளமை என அதன் குற்றகரமான ஈரானிய திட்டநிரல், வாஷிங்டன் மற்றும் தெஹ்ரானை ஒரு மோதல் போக்கில் நிறுத்தி உள்ளதுடன், அனைத்து பிரதான அணுஆயுத சக்திகளையும் ஈர்க்கக்கூடிய மத்திய கிழக்கு எங்கிலுமான ஒரு போரைத் தூண்ட அச்சுறுத்தி வருகிறது.