ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The burning of Notre-Dame cathedral in Paris

பாரீசில் நோத்ர்-டாம் தேவாலயத்தில் தீவிபத்து

Alex Lantier
17 April 2019

நூற்றாண்டு பழமையான ஒரு வரலாற்று நினைவுச்சின்னம் தீயில் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும் திங்கட்கிழமை பிரான்சிலும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கானவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். செவ்வாயன்று, நோத்ர்-டாம் தேவாலயம் எங்கிலும் பரவிக் கிடந்த சிதைவுகள் இன்னமும் கங்குகளாக கனன்று கொண்டிருந்த நிலையில், அந்த தேவாலயத்தின் புனரமைப்பு வேலையில் தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மோசமாக முறிந்து போனதே திங்கட்கிழமை தீவிபத்திற்கு காரணம் என்பது தெளிவானது. இதற்கான பொறுப்பு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கத்தின் மீதும், இறுதியாக முதலாளித்துவ அமைப்புமுறையின் மீதும் விழுகிறது.

விக்டர் ஹூகோவின் 1831 நாவலான Notre Dame de Paris மற்றும் அதை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களில் என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கும், ஐரோப்பாவில் பெரிதும் பரவலாக விஜயம் செய்யப்படுகின்ற அந்த நினைவுச்சின்னம், தடுத்திருக்கக்கூடிய ஒரு பேரழிவில் சிதைந்து போயுள்ளது. மேற்கூரையை நாசமாக்கிய நெருப்பு ஜ்வாலைகள் அதன் கோபுர உச்சியைத் தாண்டி உயர்ந்திருந்தன, கீழே விழுந்த கோபுர உச்சி தேவாலயத்தின் கல் மாடங்களை பெயர்த்தது, கீழே இருந்த கலைப்பொருட்கள் மீது உருகிய ஈயம் மற்றும் சாம்பல்களை மழையெனப் பொழிந்தது. பிரதியீடு செய்ய முடியாத 13 ஆம் நூற்றாண்டு கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து தரையில் நொறுங்கி கிடைந்தன, பிரதான மாடம் சேதமடைந்துள்ளது, தேவாலயத்தின் உள்ளமைப்பு கரும்புகையால் பூசப்பட்டுள்ளது.


விமானத்திலிருந்து நோத்ர்-டாம் இன் புகைப்படம்

இதுபோன்ற திட்டங்களுக்கு செலவு மிகுந்த, சவலான தொழில்நுட்பத்துடன் கூடிய, அதிக உழைப்பு தன்மை கொண்ட தீயணைப்பு பாதுகாப்பு தேவையென சர்வதேச கட்டுமானத்துறை வல்லுனர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். உருக்கும் கருவிகளில் இருந்தோ (Blowtorches) அல்லது மின்கருவிகளில் இருந்தோ வரும் வெப்பம் —சில நேரங்களில் இது குழாய்கள் வழியாக நீண்ட தூரத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்ற நிலையில்— வேலை நடந்து கொண்டிருக்கும் இடத்திலிருந்து தொலை தூரத்தில் உள்ள மரங்கள் அல்லது தூசிகளில் கூட தீப்பிடிக்க செய்யக்கூடியவையாகும்.

சான்பிரான்சிஸ்கோவை மையமாக கொண்ட பெர்கின்ஸ் மற்றும் வில் நிறுவனத்தின் ஜெர்ரி தியர்னி கூறுகையில் பழைய கட்டிடங்களைப் புணரமைக்கையில், “ஏதேனும் வெப்ப ஆதாரத்தை அடிப்படையாக கொண்ட நடவடிக்கை நடக்கிறது என்றால் 24 மணி நேரமும் தீயணைப்பு கண்காணிப்பை வைத்திருக்க வேண்டும், ஏனென்றால் தீப்பிடித்தால் உடனடியாக சாத்தியமான அளவுக்கு விரைவாக அங்கே செல்ல முயல யாரேனும் இருக்க வேண்டும்,” என்றார்.

பேரழிவுகரமான தீவிபத்துக்கள் ஏறத்தாழ தீயணைப்பு பாதுகாப்பு பணியாளர் மட்டங்களில் செய்யப்படும் செலவு குறைப்புடன் பிணைந்துள்ளதாக தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தின் எட்வார்ட் லெவிஸ் தெரிவித்தார்: “எனது அனுபவத்தில், அது மனித தவறுகளில் இருந்து தொடங்குகிறது, இது போதுமான கண்காணிப்பு மட்டங்கள் இல்லாததில் இருந்தும் மற்றும் தீயணைப்பு நடைமுறைகளை அலட்சியப்படுத்துவதில் இருந்தும் வளர்கிறது... பெரும்பாலான கட்டுமான வேலைகளில், கண்காணிப்பாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான விகிதம் போதுமானளவுக்கு இருப்பதில்லை,” என்றார்.

அந்த தீவிபத்து குறித்த விபரங்கள் நோத்ர்-டாம் இல் என்ன நடந்தது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. திங்கட்கிழமை மாலை 6.20 மணிக்கு மேல்மாடி பகுதியில் முதல் நெருப்பு அலாரம் ஒலித்ததும், கட்டுமான வேலை தொழிலாளர்கள் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், விரைந்து சென்ற தேவாலய பணியாளர் மேற்தளத்தைத் தாங்கி பிடித்திருக்கும் 13 ஆம் நூற்றாண்டில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரையிலான உத்திரங்களின் குறுக்குச்சட்டங்களில் பரந்த மூலைமுடுக்குகளைப் பரிசோதித்தார். அவர்கள் நெருப்பு எதையும் காணவில்லை. மாலை 6.45 மணிக்கு, ஒரு புதிய நெருப்பு எச்சரிக்கை ஒலி ஒலித்தது. இம்முறை, சில நிமிடங்களுக்கு உள்ளேயே, மிகப் பழமையான, உலர்ந்து போயிருந்த மற்றும் தீப்பிடிக்கக்கூடிய உத்திரங்கள் கட்டுப்பாட்டை மீறி எரியத் தொடங்கி இருந்தன.

நோத்ர்-டாம் புனரமைப்பு பணிக்கு மிகக் குறைந்த அளவிலான நிதியே வழங்கப்பட்டிருந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்னர், தேவாலய அதிகாரிகள் அத்திட்டத்திற்காக 100 மில்லியன் யூரோ கோரிய நிலையில், தேவாலயத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள பிரெஞ்சு அரசு அதிர்ச்சியூட்டும் விதத்தில் ஆண்டுக்கு வெறும் 2 மில்லியன் யூரோ வழங்க உடன்பட்ட பின்னர், தேவாலய அதிகாரிகள் சர்வதேச அளவில் நன்கொடையாளர்களுக்கும் மற்றும் அறக்கட்டளைகளுக்கும் முறையீடு செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். இப்போது நோத்ர்-டாம் இன் உள்ளமைப்புகள் இடிந்து போன கருமையான பிம்பம் உலகெங்கிலுமான மில்லியன் கணக்கான மக்களின் நனவுக்குள் எரிந்தது என்ற நிலையில், தீயணைப்பு பாதுகாப்பு பணியாளர்களின் மட்டங்கள் துயரகரமாக போதுமானளவுக்கு இல்லை என்பது இப்போது தெளிவாகிறது.

நோத்ர்-டாம் தீவிபத்து, ஒவ்வொரு நாட்டிலும் கட்டவிழ்ந்துள்ள நாசகரமான முதலாளித்துவ நிகழ்வுபோக்கின் கொடூரமான வெளிப்பாடாகும். 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய காலகட்டம், மற்றும் குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பிந்தைய காலகட்டம் ஐரோப்பா எங்கிலும் துடிப்பார்ந்த மீள்ஆயுதமயப்படுத்தலுடன் சேர்ந்து ஓயாத சிக்கன நடவடிக்கைகளைக் கண்டுள்ளது. பல ட்ரில்லியன் யூரோ ஐரோப்பிய ஒன்றிய வங்கி பிணையெடுப்புகளுக்குத் தலைமை தாங்கும் மக்ரோன், 2023 இக்குள் இராணுவத்திற்கு 300 பில்லியன் யூரோ செலவிடவும் மற்றும் செல்வந்தர்களுக்குப் பில்லியன் கணக்கில் வரி வெட்டுக்களைச் செய்யவும் திட்டமிடுகிறார்.

இதன் விளைவாக, ஒவ்வொரு உண்மையான அத்தியாவசிய திட்டத்திற்கும் நிதி குறைக்கப்படுவதுடன் ஒவ்வொரு முனையிலும் நிதி வெட்டப்படுகிறது. பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் அதிகாரத்தைக் கையில் கொண்டிருப்பவர்களால் இயல்பாக துல்லியமாக எதிர்நோக்கப்படும் விளைவு, உழைக்கும் மக்களைத் திட்டமிட்டு வறுமைப்படுத்துவதும், சமூகச் சேவைகளை வெட்டுவதும் மற்றும் கலாச்சார அமைப்புகளுக்கு நிதிகளைக் குறைப்பதுமாகும். ஆனால் அதேநேரத்தில் நிதியியல் பிரபுத்துவம் பின்பற்றும் கொள்கைகளின் தயவுதாட்சண்யமற்ற, சுயநலமான மற்றும் ஒட்டுண்ணித்தனமான குணாம்சம் மனித கலாச்சாரத்தின் தலைசிறந்த நினைவுச்சின்னங்கள் அழிக்கப்படுவதில் வெளிப்பாட்டைக் காண்கிறது.

அமெரிக்க தலைமையிலான சட்டவிரோத 2003 ஈராக் படையெடுப்பின் போது, அமெரிக்க ஆக்கிரமிப்பு துருப்புகள் ஈராக்கிய தேசிய அருங்காட்சியகத்தைக் கொள்ளையடிப்பதை ஊக்குவித்தன என்பதோடு, அது நடந்து கொண்டிருந்த போது அவர்கள் அருகாமையில் நின்றிருந்தனர், அது 5,000 ஆண்டுகளுக்குப் பழமையான 50,000 கலைப்பொருட்கள் அழிக்கப்படுவதற்கும் அருங்காட்சியகத்தின் கையிருப்பில் இருந்த அதன் கையேடு அழிக்கப்படுவதற்கும் இட்டுச் சென்றது. அப்போதைய அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட், “சுதந்திரமான மக்கள் சுதந்திரமாக தவறுகள் செய்கிறார்கள், குற்றங்கள் புரிகிறார்கள்,” என்றார்.


நோத்ர்-டாம் இன் கோபுர உச்சியின் உடைந்து விழும் காட்சி

நோத்ர்-டாம் தீவிபத்தானது, இறுதி பகுப்பாய்வில், சிரிய போரில் நேட்டோவின் இஸ்லாமியவாத பினாமி போராளிகள் குழுக்கள் பழைய நகரமான பால்ம்ரா கொள்ளையடிப்பு உட்பட, இரத்தந்தோய்ந்த சூறையாடல் நடவடிக்கைகள் போன்றவற்றிலிருந்து பிரிக்க இயலாததாகும். இது அதே ஆளும் வர்க்கத்தால் அதே இன்றியமையா நோக்கத்துடன் நடத்தப்பட்ட கொள்கைகளில் இருந்து வருகிறது.

பிரான்சில் தொழிலாளர்களால் “செல்வந்தர்களின் ஜனாதிபதி" என இகழப்படும் மக்ரோன், ஒவ்வொரு பிரச்சினையையும், நிதியியல் பிரபுத்துவம் தன்னைத்தானே செல்வசெழிப்பாக ஆக்கிக் கொள்வதற்கான முனைவுக்கு அடிபணிய செய்கிறார். செல்வந்தர்களுக்கான அவரின் வரி வெட்டுக்களானது, பில்லியனர் பேர்னார்ட் அர்னோல்டை 22 பில்லியன் யூரோவை கடந்தாண்டு மட்டும் அவரின் சொந்த செல்வவளத்தில் அதிகரித்துக் கொள்ள அனுமதித்தது.

லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் பிரெஞ்சு கவிஞர் ஆந்ரே பிரெட்டொன் இணைந்து எழுதிய 1938 அறிக்கையான "சுதந்திர புரட்சிகர கலையை நோக்கி" என்பதில் அந்த எழுத்தாளர்கள் எழுதினர்: “இன்றைய அளவுக்கு நாகரீகம் இந்தளவுக்குத் தீவிரமாக இதற்கு முன்னர் ஒருபோதும் ஆபத்திற்கு உள்ளாகி இருக்கவில்லை என்று மிகைப்படுத்தாமல் நம்மால் கூற முடியும். காட்டுமிராண்டித்தனமான, அவ்விதத்தில் ஒப்பீட்டளவில் பயனற்ற கருவிகளுடன், நாசவேலைக்காரர்கள், ஐரோப்பாவின் ஒரு மூலையிலும் கலாச்சாரத்தின் பழைய சின்னங்களை நொருக்கினார்கள். ஆனால் இன்று நாம் உலக நாகரீகத்தை, அதன் வரலாற்று இடத்தில் ஐக்கியப்பட்டிருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தின் ஒட்டுமொத்த தளவாடங்களுடன் ஆயுதமேந்திய பிற்போக்கு படைகளின் வீச்சின் கீழ் தள்ளாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.”

இந்த வரிகள் பாரீஸ் தேவாலயத்தின் தலைவிதியில் நாசகரமான உறுதிப்படுத்தலைக் காண்கின்றன. 1163 இல் கட்டுமானம் தொடங்கியதில் இருந்து எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நோத்ர்-டாம் சிறிதும் சேதமின்றி இருந்து வந்துள்ளது. அது பிரெஞ்சு புரட்சியின் வரலாற்று மேலெழுச்சிகள், 1871 இன் பாரீஸ் கம்யூன், முதலாம் உலக போர் மற்றும் நாஜி ஆக்கிரமிப்பு ஆகியவற்றிலும் உயிர்பிழைத்திருந்தது. ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில் மற்றும் இமானுவல் மக்ரோனின் ஆட்சியில் அதனால் உயிர்பிழைக்க முடியவில்லை.

இன்று, நிதியியல் பிரபுத்துவத்தின் அதிகார கட்டளைகள் அதிகரித்து வரும் அரசியல் எதிர்ப்பையும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போர்குணமிக்க வேலைநிறுத்த நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு வருகின்றன. அமெரிக்க ஆசிரியர்கள் மற்றும் சிம்பொனி இசைக்கலைஞர்களின் வேலைநிறுத்தங்கள், மெக்சிகன் மக்கில்லாடோரா தொழிலாளர்களின் திடீர் வெளிநடப்புகள், இந்திய துணைக் கண்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் உள்துறை பணியாளர்களின் வேலைநிறுத்தங்கள் கட்டவிழ்ந்து வருகின்றன, அதேவேளையில் பிரான்சில் "மஞ்சள் சீருடையாளர்கள்" மற்றும் அல்ஜீரியாவில் தொழிலாளர்கள் மக்ரோனுக்கு எதிரான மற்றும் அல்ஜீரிய இராணுவ சர்வாதிகாரத்தில் அவரின் கூட்டாளிகளுக்கு எதிரான போராட்டத்தில் அணிதிரண்டு வருகின்றனர்.

பிரான்சின் இரண்டு மிகப் பெரிய பில்லியனர்களில் இருவர், பேர்னார்ட் அர்னோல்ட் மற்றும் பிரான்சுவா பினோ, நோத்ர்-டாம் ஐ மீளக்கட்டமைக்க உதவியாக, முறையே 200 மில்லியன் யூரோ மற்றும் 100 மில்லியன் யூரோ நன்கொடை வழங்குவதாக நேற்று அறிவித்தனர். அவர்களின் அளப்பரிய செல்வவளத்தில் ஒரு மிகச் சிறிய பகுதியான அவர்களின் நன்கொடைகள், மக்களிடம் இருந்து முறையற்ற விதத்தில் அவர்கள் சேர்த்த செல்வவளம் மீது மக்களுக்கு அதிகரித்து வரும் கோபத்தைக் குறைப்பதற்காக அறிவிக்கப்பட்டவையாகும். அவை, பொதுவாழ்வில் பில்லியனர்கள் மேலாதிக்கத்தால் உருவாக்கப்பட்ட சீரழிவு மற்றும் அராஜகத்தை மட்டுமே அடிக்கோடிடுகின்றன. தீவிபத்திற்கு முன்னரே நோத்ர்-டாம் புனரமைப்புக்கு கொடுத்திருக்க வேண்டிய இந்த தொகைகள், ஐயத்திற்கு இடமின்றி, பல ஆண்டுகள் பல பில்லியன் யூரோ மறுகட்டுமான திட்டமாக இருக்கக்கூடியதற்குப் போதுமானதல்ல.

நோத்ர்-டாம் சீரழிவிலிருந்து பரந்த அரசியல் படிப்பினைகள் கிடைக்கின்றன. நோத்ர்-டாம் இல் இருந்து வெகுசில நூறு மீட்டர் தூரத்தில் தான் லூவ்ர் அருங்காட்சியகம் உள்ளது, இது, 1793 பிரெஞ்சு புரட்சியின் போது நிலப்பிரபுத்துவத்தின் செல்வ வளங்களைப் பறிமுதல் செய்தமை மற்றும் பதினாறாம் லூயி அரசரின் தலை வெட்டப்பட்டமை ஆகியவற்றுக்கு இடையே, தலைச்சிறந்த கலை பொக்கிஷங்களை தேசியமயப்படுத்தியதன் மூலமாக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. லூவ்ர், “அழகைக் குறித்த நனவை மக்கள் தங்களுக்குள் மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரு புகலிடமாக" இருக்க வேண்டும் என்று பிரெஞ்சு புரட்சியாளர்கள் அறிவித்தார்கள்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாரம்பரியங்களுக்குத் திரும்புவதும், செல்வந்த தன்னலக்குழுக்களின் செல்வவளத்தைப் பறிமுதல் செய்வதற்கான போராட்டமும், சமூக மற்றும் அரசியல் வாழ்வில் அதன் இரும்புப்பிடியை உடைப்பதுமே, 21ஆம் நூற்றாண்டில் நிதியியல் பிரபுத்துவத்திற்கு எதிரான அதன் மேலெழுந்து வரும் இயக்கத்திற்கான முன்னோக்கிய பாதையாகும்.