ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Class struggle and socialism are the only answer to the Brexit crisis

வர்க்கப் போராட்டமும் சோசலிசமுமே பிரெக்ஸிட் நெருக்கடிக்கான ஒரே பதில்

Chris Marsden
1 April 2019

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான நோக்கமானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் போருக்கு பிந்தைய வரலாற்றில் முதலாளித்துவ ஆட்சியின் மிகப்பெரிய நெருக்கடியை தூண்டிவிட்டுள்ளது. ஆனால் பெரும் ஆபத்து என்னவெனில், தொழிலாள வர்க்கம் தனது சொந்த நலனின் பேரில் தலையீடு செய்வதிலிருந்து தடுக்கப்படுவது மட்டுமல்லாது, அது தனக்குள்ளே பிளவுபட்டுள்ளதுடன், இரு வலதுசாரி முதலாளித்துவ சார்பு பிரிவுகளுக்கு அரசியல் ரீதியாக கீழ்ப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் தெரேசா மே, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிட் இற்கு பிந்தைய வர்த்தக உறவுகள் மீதான ஒப்பந்தத்தில் உடன்பாட்டைப் பெறுவதில் பாராளுமன்றத்தில் மூன்று முறை தோல்வியடைந்ததால், பழமைவாதிகள் மத்தியில் ஒரு தலைமைப் போட்டி மேலெழுந்துள்ளதுடன், 2017 ஆம் ஆண்டு நடைபெற்றதை அடுத்து இரண்டாவது முன்கூட்டிய பொதுத் தேர்தல் நிகழலாம் என்ற ஊகம்  மேலோங்கியுள்ளது.

ஒரு புதிய தேர்தல் நடைபெற்றால், பழமைவாதிகள் தொழிற் கட்சியிடம் தங்கள் அதிகாரத்தை இழக்க நேரிடலாம், இது கருத்துக்கணிப்புகளில் ஐந்து புள்ளி முன்னணியை கொண்டிருக்கிறது மற்றும் ஒரு சிறுபான்மை அரசாங்கத்தையும் உருவாக்க முடியும். பிரெக்ஸிட் சார்பு மற்றும் ஒன்றியத்துடன் இருக்க வேண்டும் என்ற பழமைவாத பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்ப்பதில் ஒற்றுமையாக உள்ளனர். தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் "தேசிய நலன்" பாதுகாக்கப்படும் என்று அறிவித்துள்ள போதிலும், தொழிலாள வர்க்கத்தால் சிக்கன நடவடிக்கைகளை முடிவுகட்டுவதற்கான தடையற்ற கோரிக்கைகளுக்கு அது வழிவகுக்கும் என்று அஞ்சுகின்றனர்.

மே  இன் முன்மொழிவு மீண்டும் நிராகரிக்கப்பட்டால், ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் இந்த வாரம் கொண்டு வர வேண்டும் என்று கோர்பின் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொழிலாள வர்க்கத்தின் முன்னே அரசியல் முன்னோக்கு மற்றும் தலைமைத்துவம் தொடர்பான சிக்கலான கேள்விகளை தீர்க்கரமாக முன்நிறுத்துகிறது.

ஆளும் வர்க்கம் தனது உக்கிரமான உள் முரண்பாட்டை தீர்ப்பதற்கு ஏதுவான சாத்தியக்கூறுகளை திறந்துவிட்டதற்கு, அதாவது தொழிற் கட்சியிலிருந்து பிளேயரிச வலதுசாரிகளை வெளியேற்றுவது, பல தசாப்த சிக்கன நடவடிக்கை, இராணுவவாதம் மற்றும் காலனித்துவ போர்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கு கட்சியின் இரு தலைமைத் தேர்தல்களில் வழங்கப்பட்ட ஆணையை கோர்பின் மறுத்துவிட்டதற்கு மட்டுமே நன்றி தெரிவிக்க வேண்டும்.

அவரைத் தேர்ந்தெடுத்த சாதாரண உறுப்பினர்கள் நேட்டோ உறுப்புரிமை, அணுவாயுதங்களை தொடர்ந்து பயன்படுத்துவது, மற்றும் தொழிற் கட்சி உள்ளூராட்சி சபைகளின் மீது  பழமைவாதிகளின் வெட்டுக்களை சுமத்தும் கோர்பினின் மறுப்பு போன்ற அரசியல் பின்வாங்கல் கொள்கைகளுக்கு மூன்று ஆண்டுகளாக உள்ளாக்கப்பட்டிருந்தனர் அத்துடன் "இடது" யூத-விரோதி எனும் அவர் மீதான போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் தனது எதிர்ப்பை காட்டவில்லை.

இதேவேளை, பிரிட்டிஷ் மூலதனத்திற்கு எந்தவொரு அரசியல் சவாலையும் தடுக்க பிளேயரிசவாதிகள் எதையும் செய்வார்கள் என்பதை தொழிற் கட்சி துணைத் தலைவர் டொம் வாட்சன் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் "தேசிய ஐக்கியத்திற்காக" கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அரசாங்கத்திற்காக ஐரோப்பிய ஒன்றிய சார்பு பழமைவாதிகளுடன் சேர்ந்து பணியாற்றத் தயாராக உள்ளார் என்று Prospect think tank இற்கு கூறினார். வாட்சன், "எதிர்கால பிரிட்டன்" என்றழைக்கப்படும் 80 தொழிற் கட்சி உறுப்பினர்களின் குழுவிற்கு தலைமை தாங்குகிறார், அது பாராளுமன்ற தொழிற் கட்சி உறுப்பினர்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினரை கொண்டுள்ளது.

இதேபோல், தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களுக்கு எந்த மாற்றீட்டையும் முன்வைக்கவில்லை. தொழிற்சங்க கூட்டமைப்பின் (TUC) செயலாளர் பிரான்சிஸ் ஓ'கிரேடி, மற்றும் பிரிட்டிஷ் தொழிற்துறை கூட்டமைப்பின் பொது இயக்குனர் கரோலின் ஃபேர்பேன், "நம் நாடு ஒரு தேசிய அவசரகால நிலைக்கு முகம் கொடுக்கிறது" என அறிவித்து,  "திட்டம் B" ஒன்று தேவையெனக் கோரி கூட்டுக் கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

முதலாளித்துவ வர்க்கத்தின் பிரெக்ஸிட்டை ஆதரிக்கும் பிரிவினால் தூண்டிவிடப்பட்ட இனவாதம் மற்றும் தேசியவாதம் ஆகியவற்றை பிரதிபலிக்காத பிரெக்ஸிட்டை தொழிலாளர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு உண்மையான நம்பத்தக்க காரணங்கள் உண்டு. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதன் மீதான விரோதப்போக்கு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுதலானது தொடர்ச்சியாக தொழிற் கட்சி மற்றும் பழமைவாத அரசாங்கங்களால் கொண்டுவரப்பட்ட சமூக பேரழிவிற்கு ஒரு முடிவைக் கொண்டுவரும் என்று அவர்கள் நம்புகின்றார்கள். அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கும் பலரின் கருத்துக்கும் இது பொருந்தும். பிரெக்ஸிட்டிற்கான அவர்களின் எதிர்ப்பானது, ஐரோப்பிய ஒன்றியத்ததுடன் ஒரு விமர்சனமற்று இணைந்துகொள்வதை குறிக்கவில்லை, ஆனால் மாறாக பிரெக்ஸிட்டின் பொருளாதார விளைவுகளின் பயம் மற்றும் வேண்டுமென்றே ஊக்குவிக்கப்படும் தேசியவாதத்திற்கான வெறுப்பு மற்றும் குடியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல் மற்றும் பல இளைஞர்கள் சார்ந்திருக்கும் வேலைக்காக சுதந்திரமான எல்லைகடந்து செல்வதற்கு வரும் தடைகள் என்பவற்றுக்கே அஞ்சுகின்றனர்.

ஒரு சோசலிச மாற்றீடு இல்லாத நிலையில், ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட, எதுவும் தீர்க்கப்படப்போவதில்லை. பிரெக்ஸிட்டிற்கோ அல்லது அதற்கு எதிராகவோ மட்டுமே பிரத்தியேகமாக போராடுவது, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி வேலைகள், ஊதியங்கள், மற்றும் சமூக நிலைமைகள் ஆகியவற்றிற்கு எதிராக நடக்கும் தாக்குதலுக்கு எதிரான எந்தவொரு ஐக்கியப்பட்ட போராட்டத்தையும் தடுப்பதாக இருக்கும். எந்தப் பக்கம் வெற்றி பெற்றாலும், அரசியல் பிளவுகள் தொடரும், மற்றும் ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் பெருகி வரும் மக்களுடைய அதிருப்தியை ஒரு வலுவான அரசு மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு அழைப்புவிட பயன்படுத்தும்.

வரலாறு ஒரு எச்சரிக்கையை வழங்குகிறது.

ஒரு தேசிய அரசாங்கத்திற்கான வாட்சனின் ஆதரவானது, 1931 ஆம் ஆண்டில், பழமைவாதிகளின் தேசிய அரசாங்கத்தில் சேருவதற்கு தொழிற் கட்சி தலைவர் ராம்சே மக்டொனால்ட் முடிவு எடுத்ததை நினைவுபடுத்துகிறது. 1930களின் பஞ்சத்தின்போது சுமத்தப்பட்ட மோசமான சிக்கனக் கொள்கைகளுக்கும் மில்லியன் கணக்கான வேலையின்மைக்கும் தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்ததுடன் ஒஸ்வால்ட் மோஸ்லியின் கீழ் பிரித்தானிய பாசிச ஒன்றியத்தினதும் ஜேர்மனியிலும் இத்தாலியிலும் பாசிச அரசுகளின் எழுச்சியினதும் எதிரொலியையும் கண்டது.

தொழிற் கட்சியின் வலது மற்றும் இடது இரண்டின் கூட்டு காட்டிக்கொடுப்பிற்கு  அதே கசப்பான விலையை இன்று தொழிலாளர்கள் கொடுக்கவேண்டியிருக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளேயும் சரி அல்லது அதற்கு வெளியேயும் சரி பூகோளப் போட்டித்தன்மைக்கான போராட்டத்தின் வடிவம் எதுவாக இருந்தாலும், அது தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களில் ஒரு புதிய, மிருகத்தனமான தாக்குதலை கோருகிறது. "உடன்பாடற்ற" பிரெக்ஸிட் வருமானால் இதனை எதிர்நோக்க இங்கிலாந்தில் 50,000 படையினருடன் ஒரு உள்நாட்டு அணிதிரள்வு திட்டமும் அதேபோல ஐரோப்பிய ஒன்றியத்தினுள் பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனால் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டு, பிரான்சில் "மஞ்சள் சீருடை" எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இராணுவமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி ஒரு முன்னோக்கை 2016 பிரெக்ஸிட் சர்வஜன வாக்கெடுப்பின்போது முன்வைத்தது. அது பிரிட்டனில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும், சர்வதேச ரீதியிலும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நலன்களை வெளிப்படுத்தியதுடன், இன்று "பிரெக்ஸிட் அல்லது அதற்கு எதிரானது" என்ற வடிவத்தை எடுக்கும் அரசியல் பொறியிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழியை வழங்கியிருந்தது.

சர்வஜன வாக்கெடுப்பு பற்றிய ஒரு செயலூக்கமான பகிஸ்கரிப்புக்கு அழைப்பு விடுத்து, பிரெக்ஸிட் செயற்திட்டத்தின் மையத்தில் இருந்த தேசிய பொருளாதார வளர்ச்சி என்ற பிற்போக்குத்தன முன்னோக்கினையும் அதேபோது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எந்தவொரு ஆதரவையும் சோசலிச சமத்துவக் கட்சி நிராகரித்தது. ஐரோப்பிய ஒன்றிய சார்பு பிரெக்ஸிட் சார்பு இருபுறமும், தீவிர வலதுசாரி முதலாளித்துவ நலன்களே தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமாக ஐக்கியப்பட்டுள்ளன என்று நாம் குறிப்பிட்டோம். ஒரு ஐரோப்பிய வர்த்தக முகாமுக்குள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களை அவர்கள் சிறப்பாக தொடர முடியுமா அல்லது முடியாதா என்ற கேள்வியிலேயே அவர்கள் வேறுபடுகிறார்கள் என நாங்கள் விளக்கியிருந்தோம்.

சோசலிச சமத்துவக் கட்சி எழுதியது:

இந்த சக்திகளுக்கு எதிரான பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தின் அபிவிருத்திக்கான களத்தை இந்தப் புறக்கணிப்பு தயாரிப்பு செய்கிறது. இந்த சர்வஜன வாக்கெடுப்பானது, பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆழமடைந்து செல்கின்ற உயிர்வாழ்க்கை நெருக்கடியில் ஒரேயொரு அத்தியாயம் மட்டுமே என்பதை அம்பலப்படுத்தக் கூடிய கண்டம்-முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்தின் ஒரு எதிர்த்தாக்குதலின் பகுதியாக இத்தகையதொரு இயக்கம் அபிவிருத்தி செய்யப்பட்டாக வேண்டும்.

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரத்திற்கான எழுச்சியிலும் "அமெரிக்கா முதலில்" என்ற அவரது பாசிச அழைப்பிலும் மிக வெளிப்படையான வெளிப்பாட்டைக் கண்டிருக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதங்கள் வெடித்ததன் விளைவே பிரெக்ஸிட் ஆகும். இது பெரும் செல்வந்த தட்டினருக்கும் மற்றும் பரந்த தொழிலாளர்களுக்கும் இடையிலான முன்னோடியில்லாத அளவிலான சமூக சமத்துவமின்மையால் தூண்டிவிடப்பட்டு ஆழமடைந்து எதிர்கொண்டுள்ள வர்த்தக யுத்தம், இராணுவவாதம் மற்றும் வர்க்க விரோதங்களை எதிர்நோக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முறிவின் மிக முன்னேறிய வெளிப்பாடாகும்.

ஐரோப்பா முழுவதும், உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கு அரசாங்கங்களின் பதில், சிக்கன நடவடிக்கை, தேசியவாதம் மற்றும் குடியேற்ற விரோத இனவெறி எதிர்ப்பு மற்றும் பாசிச வலதுகளின் வளர்ப்பு ஆகியவை ஆகும். ஆனால், ஐரோப்பா முழுவதும் ,அல்ஜீரியா மற்றும் சூடான், மெக்சிகோ, அமெரிக்கா, சீனா மற்றும் சர்வதேச அளவில் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக எதிர்ப்புக்களின் அதிகரிக்கும் போராட்டங்களில் தொழிலாள வர்க்கம் மீண்டும் போராடத் தொடங்கியுள்ளது. பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கம் இப்பொழுது ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இந்த எழுச்சியடைந்துவரும் இயக்கத்தை நோக்கித் திரும்ப வேண்டும்.

பிரெக்ஸிட் நெருக்கடிக்கு பதில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது அல்ல, மாறாக இப்பொழுது ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு வருகின்ற மில்லியன் கணக்கான தொழிலாளர்களுடனான வர்க்க ஐக்கியமாகும். தொழிலாளர்கள், தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்து சுயாதீனமான வர்க்கப் போராட்டத்திற்கான சாமானிய அமைப்புகளை உருவாக்க வேண்டும், இந்தவழியிலேயே ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான ஒரு கண்டம் தழுவிய போராட்டத்தின் பாகமாக பழமைவாதிளை கீழிறக்கி ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை அமைக்க போராட  முடியும்.