ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Julian Assange was denied access to lawyers, visitors in Britain’s Belmarsh prison

பிரிட்டன் பெல்மார்ஷ் சிறையில் வழக்கறிஞர்கள், பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு ஜூலியன் அசான்ஜிற்கு அனுமதி மறுப்பு

By Oscar Grenfell
24 April 2019

விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியர் ஜூலியன் அசான்ஜ் பெல்மார்ஷ் சிறையில் கடந்த இரண்டு வாரங்களில் பெரும்பாலும் தனிமையில் செலவிட்டுள்ளதாக அவர் அன்னை கிறிஸ்டின் அசான்ஜ் திங்களன்று தெரிவித்தார்.

அசான்ஜை "சந்திக்க இதுவரையில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர் வழக்கறிஞர்களும் கூட அனுமதிக்கப்படவில்லை!” என்று திருமதி. அசான்ஜ் ஏப்ரல் 22 இல் ட்வீட் செய்தார். அவரைக் கையாளும் விதம் "மூர்க்கத்தனமாக உள்ளது, மற்றும் அவரைத் தொடர்ந்து தனிமைப்படுத்தி வைக்கும் தண்டனை நடவடிக்கையாக தெரிகிறது,” என்பதையும் அவர் சேர்த்திருந்தார்.

காலவரையற்ற சிறையடைப்பு, சித்திரவதை, நீண்டகால தனிமைப்படுத்தல், இன்னும் பல மனித உரிமைமீறல்களுக்கு அமெரிக்க இராணுவச் சிறை குவண்டனாமோ இழிபெயரெடுத்துள்ள நிலையில், பெல்மார்ஷ் "இங்கிலாந்தின் குவண்டனாமோ" என்று கூறுப்படுவதை திருமதி. அசான்ஜ் சுட்டிக்காட்டினார். பயங்கரவாத குற்றத்திற்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெரும்பாலான பிரிட்டிஷ்காரர்கள் அங்கே தான் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர் ட்வீட் சேதி வெளியிட்டு சுமார் 36 மணி நேரங்களுக்குப் பின்னர், திருமதி. அசான்ஜ் ஏப்ரல் 24 அன்று குறிப்பிட்டார்: “ஜூலியன் அவர் வழக்கறிஞர்களுடன் ஒரு வீடியோ சந்திப்பு நடத்தினார் & அவர்கள் ஏப்ரல் 26 இல் பெல்மார்ஷ் சிறையில் அவரைச் சந்திப்பார்கள். அவர் வழக்கறிஞர்கள் விஜயம் செய்வதற்குக் கேட்டுக் கொண்ட அனைவருக்கும் பல நன்றிகள்.” அதையடுத்து விக்கிலீக்ஸூம், அசான்ஜ் அவரின் சட்டக்குழுவுடன் "வரவிருக்கும் நாட்களில்" “சிறையில் ஒரு சந்திப்பு" நடத்துவார் என்பதை உறுதிப்படுத்தியது.

ஈக்வடோரிய தூதரத்திலிருந்து அந்த பத்திரிகையாளரை இழுத்து வந்து, இங்கிலாந்து பொலிஸ் அதிகாரிகள் ஏப்ரல் 11 இல் அசான்ஜைக் கைது செய்தனர், அதேவேளையில் அவர் "இங்கிலாந்து இதை எதிர்க்க வேண்டும்,” என்று கோஷமிட்டார். நோபல் அமைதி விருது பெயர்பட்டியலில் இடம் பெற்றிருந்தவரான விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் அமெரிக்க போர் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக ட்ரம்ப் நிர்வாகத்தால் பின்தொடரப்பட்டு வருகிறார்.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் கைது செய்யப்பட்டு பிணை குற்றச்சாட்டுக்கள் மீது குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு ஒருசில நாட்களிலேயே, அவரின் சட்டபூர்வ ஆலோசகர்களுடன் தனிப்பட்ட ஆலோசனை நடத்துவதற்கான அவரின் உரிமை வெளிப்படையாக மறுக்கப்படுவதானது, அவருக்கு முறையான விசாரணை கிடைக்குமா என்பதில் சந்தேகத்தை எழுப்புகிறது. அமெரிக்காவிடம் அசான்ஜை ஒப்படைப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் கோரிக்கையும் மற்றும் பிரிட்டனில் நடந்து வரும் சட்ட நடைமுறைகளும், அவரை நீதிக்குப் புறம்பாக விசாரணை கைதியாக ஒப்படைக்கும் நடவடிக்கைக்கான ஒரு போலி-நீதிமுறை மூடிமறைப்பாக உள்ளன என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும், இது விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியரைப் போர் குற்றவாளிகளுடன் சிக்க வைக்க மற்றும் அவர் எதை அம்பலப்படுத்த செயல்பட்டிருந்தாரோ அந்த சிஐஏ சித்தரவதைகளுக்கு அவரை உட்படுத்த நோக்கம் கொண்டுள்ளது.

செய்திகளில் அறிவிக்கப்பட்டவாறு அசான்ஜின் தனிமைப்படுத்தல், வெளிநாட்டிடம் ஒப்படைப்பது மீது அடுத்து அவர் மே 2 இல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னதாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அவர் கைது செய்யப்பட்ட பின்னர் உடனடியாக பிணை குற்றச்சாட்டுக்களின் பேரில் அவருக்குக் கேள்விமுறையின்றி தண்டனை வழங்கப்பட்ட போதே, விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை நோக்கிய பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனோபாவம் எடுத்துக்காட்டப்பட்டது.

அந்த விசாரணையில் எந்தவொரு முக்கிய சட்டப்பூர்வ கேள்விகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. சில வல்லுனர்களின் தகவல்படி, 2012 இலேயே அசான்ஜ் பிணை பணத்தைச் செலுத்தி விட்டார் என்பதோடு பிணை மீறல்களுக்கான அதிகபட்ச தண்டனையை விட கூடுதலாகவே ஈக்வடோர் தூதரகத்தில் அவர் சுயவிருப்பமின்றி அடைபட்டு இருந்தார் என்ற உண்மையின் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்னரே அந்த குற்றச்சாட்டு நடைமுறையளவில் தீர்க்கப்பட்டு விட்டது.

அதற்கு பதிலாக, விசாரணைக்குத் தலைமை வகித்த இங்கிலாந்து மாவட்ட நீதிபதி மெக்கெல் ஸ்னொவ் அசான்ஜை ஒரு "சுயமோகி" என்று கண்டித்து, அவரை சிறைக்கு அனுப்பினார். விசாரணை விவாதங்கள் குறித்து சிறிதளவே வெளியான செய்திகளின்படி, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் விரும்பினால் அவர் வெளிநாட்டிடம் ஒப்படைக்கப்படும் நடைமுறையைத் துரிதப்படுத்தலாம் என்று ஸ்னொவ் அசான்ஜிற்குக் கூறினார், பின்னர், “அமெரிக்காவிடம் நீங்கள் ஒப்படைக்கப்படுவதில் உள்ள ஆதாயம் என்னவென்றால், இந்த விடயத்தை முடித்து விட்டு நீங்கள் உங்கள் வேலையைப் பார்க்கலாம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

சில செய்திகளின்படி, அசான்ஜ் அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும் போதும் மற்றும் அதற்கடுத்து வெளிநாட்டிடம் ஒப்படைப்பது மீதான விசாரணையின் போதும் ஸ்னொவ்வே அந்த விசாரணைகளுக்கும் தலைமை தாங்கக்கூடும்.

பிரிட்டிஷ் அதிகாரிகள் வெளிப்படையாக அசான்ஜைக் குரோதமாக கையாள்வது, அவர்கள் அவரை எவ்வளவு விரைவாக சாத்தியமோ அவ்வளவு விரைவாக வெளிநாட்டிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்ற நிஜமான அபாயத்தை எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்க அரசு கணினியை அங்கீகாரமில்லாமல் இரண்டு முறை மட்டுமே அணுக முடியும் என்று மட்டுப்படுத்தி, அசான்ஜிற்கு எதிராக பகிரங்கமாக வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்களை அணுகுவதை வரம்புக்கு உட்படுத்தியதன் மூலமாக, அமெரிக்க நீதித்துறை அதற்கு உதவ முனைந்துள்ளது.

அமெரிக்க இராணுவ ஆவண வெளியீட்டாளர் செல்சியா மானிங் 2010 இல் ஒரு "ஹேஷ் குறியீட்டை" (hash) அல்லது கடவுச்சொல்லை முறிக்க அசான்ஜின் உதவியை நாடினார் என்று அந்த இற்றுப்போன குற்றச்சாட்டுக்கள் வாதிடுகின்றன. இவ்வாறு எப்போதேனும் நடந்தது என்பதற்கு அங்கே எந்த ஆதாரமும் இல்லை. அவ்வாறு அது நடந்திருந்தாலும் கூட, அது மானிங்கின் அநாமதேய அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகவே நடந்ததாக இருக்கும், இது ஆவண வெளியீட்டாளர்களுடன் செயல்படுகையில் பத்திரிகையாளர்களிடையே நடக்கும் ஒரு பொதுவான நடைமுறை தான்.

குற்றச்சாட்டுக்களின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மை, “அரசியல் குற்றச்சாட்டுகளுக்காக” ஒப்படைப்பது மீது இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள இப்போதைய உடன்படிக்கைகளின் கீழ் இருக்கும் தடைகளைத் தட்டிக்கழிக்க நோக்கம் கொண்டுள்ளது. ஆனால் அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டால், அங்கே தேசதுரோக வழக்கு உட்பட, இது அதிகப்பட்சமாக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையைக் கொண்டுள்ள நிலையில், கூடுதல் குற்றச்சாட்டுகளின் சாத்தியக்கூறை அசான்ஜ் முகங்கொடுக்கிறார்.

ஒரு பெரடல் மேல்முறையீட்டு நீதிமன்றம் மேனிங்கை பிணையில் விடுவிக்க வேண்டுமென்ற ஒரு முறையீட்டை நிராகரித்த போது, அசான்ஜிற்கு எதிராக மேற்கொண்டும் குற்றச்சாட்டுக்களை இட்டுக்கட்டுவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் நேற்று எடுத்துக்காட்டப்பட்டன.

ஒரு பெருநடுவர் நீதி விசாரணை குழுவின் முன்னால் அசான்ஜிற்கு எதிராக பொய்சாட்சியம் அளிக்க மானிங் மறுத்ததற்காக, அந்த துணிச்சலான ஆவண வெளியிட்டாளர் ஆறு வாரங்களாக தன்னந்தனியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து அடைத்து வைத்திருப்பதானது, அசான்ஜிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான பழிதீர்க்கும் நடவடிக்கையில் அவரை ஒத்துழைக்க நிர்பந்திக்கும் ஒரு வெளிப்படையான முயற்சியாக உள்ளது.

ஒரு முன்னாள் சிஐஏ ஒப்பந்ததாரரான Joshua Schulte உம் இதேபோல ஓராண்டுக்கும் மேலாக தனிமையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் சிஐஏ இன் கணினிகளை ஊடுருவும் நடவடிக்கைகள் மற்றும் உளவுபார்க்கும் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி விக்கிலீக்ஸிற்கு பாரியளவில் மதிப்பார்ந்த ஆவணங்களைக் கசிய விட்டதற்காக குற்றஞ்சாட்டுப்பட்டுள்ளார், மேலும் ஐயத்திற்கிடமின்றி மானிங் போலவே அதே துன்புறுத்தும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்.

நேற்றைய விசாரணைக்குப் பின்னர், மானிங், “பெருநடுவர் நீதி விசாரணை குழுவின் நடைமுறைகளை துஷ்பிரயோகம் செய்வதற்காக" அமெரிக்க அரசாங்கத்தைப் பலமாக கண்டித்தார். “இந்த, அல்லது எந்த வேறொரு பெருநடுவர் நீதிவிசாரணைக் குழுவுக்கும் பங்களிப்பு செய்ய என்னிடம் எதுவும் இல்லை,” என்றவர் அறிவித்தார்.

மானிங் மீதான தண்டனை சிறைவாசம், அசான்ஜ் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டால் அவர் கையாளப்படக்கூடிய தண்டனைக்கான ஓர் எச்சரிக்கையாக உள்ளது.

இந்த அபாயங்கள் நேற்று வெளியிடப்பட்ட எல்லைகள் இல்லா செய்தியாளர்களின் 2019 உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டிலும் கூறப்பட்டிருந்தது. அது "அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் இருந்து வரும் வன்முறையான பத்திரிகை-விரோத வாய்வீச்சுக்களுக்கு" எதிராகவும், அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு எதிரான சரீரரீதியான தாக்குதல்கள், ஆவணங்கள் வெளியிடுவோர் அனைவரையும் தேசதுரோக சட்டத்தின் கீழ் பிணைத்து தொல்லைப்படுத்தும் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு எதிராகவும் எச்சரித்திருந்தது.

பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதல் ட்ரம்ப் நிர்வாகத்துடன் நின்றுவிடவில்லை.

மூத்த ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் அரசியலமைப்பு முதலாவது திருத்த உரிமைகளை விட்டுவிட்டு அசான்ஜை ஒரு வெளிநாட்டு முகவர் என்று முத்திரைக் குத்தி, அவர் மீது மிகவும் உரக்க கண்டனங்களை வெளியிட்டுள்ளனர், ஏனென்றால் விக்கிலீக்ஸின் உண்மையான மற்றும் செய்திக்கு மதிப்புடைய ஆணவங்களின் வெளியீடு பேர்ணி சாண்டர்ஸிற்கு எதிராக அக்கட்சியின் 2016 ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் குளறுபடி செய்த ஜனநாயக கட்சியினது தேசிய குழுவின் முயற்சிகளையும் மற்றும் ஹிலாரி கிளிண்டன் வோல் ஸ்ட்ரீட் வங்கிகளின் முயற்சிகளுக்கு அவரால் உதவ முடியுமென அவற்றுக்கு அவர் உத்தரவாதம் அளித்ததையும் அம்பலப்படுத்தி இருந்தன.

அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் பெருநிறுவன பத்திரிகைகள் ஒரு வெட்கக்கேடான பாத்திரம் வகிக்கின்றன. அவை உளவுத்துறை முகமைகளின் அடிபணிந்த எழுத்தாளர்களாக செயல்படுவதை எடுத்துக்காட்டும் விதத்தில், பத்திரிகையாளர்களின் ஒரு குழு அசான்ஜ் ஒரு "பத்திரிகையாளர்" இல்லை என்று அறிவித்துள்ளனர். அவர் பல கோடி பில்லியன் டாலர் ஊடக பெருநிறுவனத்தில் வேலை பார்க்கவில்லை, அரசாங்கங்களின் பொய்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை அம்பலப்படுத்தும் ஆவணங்களை பிரசுரிக்கிறார் என்ற உண்மைகளையே பெரும்பாலும் அவர்கள் வாதிடுகின்றனர்.

ஊழல்பீடித்த ஈக்வடோர் ஆட்சி அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கியதை நீக்கிய போது அதை நியாயப்படுத்துவதற்காக இட்டுக்கட்டிய அசான்ஜிற்கு எதிரான தனிப்பட்ட அவதூறுகளையே பல பெருநிறுவன பிரசுரங்களும், அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து, மீண்டும் மீண்டும் கூறி வருகின்றன.

அண்மித்து ஏழு ஆண்டுகள் அந்த தூதரகத்தில் அவர் அடைந்திருந்த போது அசான்ஜின் அப்போதைய காணொளிகள் சில வெளிப்படுத்துகின்றன. விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை இலக்கில் வைத்து ஈக்வடோர் நடத்திய உளவுபார்ப்பு நடவடிக்கையின் பாகமாக எடுக்கப்பட்ட அந்த காட்சிகள், சர்வதேச சட்டத்தின் கீழ் ஓர் அரசியல் அகதியின் தனிப்பட்ட அந்தரங்க உரிமையை மீறுவதாக இருக்கலாம்.

அசான்ஜிற்கு எதிரான இத்தகைய பொய்கள் மற்றும் அவதூறுகள், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அவருக்கு இருக்கும் அளப்பரிய ஆதரவுடன் முரண்படுகின்றன.

அசான்ஜை தொல்லைப்படுத்துவதன் மீதிருக்கும் பெருந்திரளான மக்கள் எதிர்ப்பானது, அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதை தடுக்கவும் மற்றும் அவர் விடுதலையைப் பாதுகாக்கவும் ஓர் அரசியல் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்.

உலக சோசலிச வலைத்தளமும் (WSWS) உலகெங்கிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளும் (SEP) இந்த முக்கிய போராட்டத்தில் மத்திய பாத்திரம் வகிக்க பொறுப்பேற்றுள்ளன.

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி, கடந்த 18 மாதங்களாக, அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு எதிரான ஓர் உத்தரவாதத்துடன் அசான்ஜை ஆஸ்திரேலியாவுக்குப் பாதுகாப்பாக கொண்டு வருவதன் மூலமாக, ஓர் ஆஸ்திரேலிய பிரஜையான அவருக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் அதன் கடமைப்பாடுகளை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரி, தொடர்ச்சியாக பல கூட்டங்களை நடத்தி உள்ளது.

பல நகரங்களில் நடத்தப்பட்ட கூட்டங்களைப் பின்தொடர்ந்து, இந்த கோரிக்கையை தற்போதைய ஆஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தலின் மையத்தில் நிறுத்தும் நோக்கில், மற்றொரு கூட்டம் இந்த சனியன்று சிட்னியில் நடத்தப்பட உள்ளது.

அசான்ஜை வேறு நாட்டிடம் ஒப்படைக்கும் நகர்வுகளுக்கு எதிராக முழு அளவிலான அணித்திரட்டலுக்கு அழைப்பு விடுக்கும் போராட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகளில் இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சி பங்கெடுத்துள்ளது. அது ஏப்ரல் 26 இல் ஜூலியன் அசான்ஜ் பாதுகாப்பு குழு அழைப்பு விடுத்துள்ள இலண்டன் பொது கூட்டத்திலும் பங்கேற்க உள்ளது.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியோ, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் சேர்ந்து வாகனத்துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய முக்கிய பிரிவுகளிடம் இருந்தும் ஆதரவை வென்றெடுக்கும் விதத்தில், மானிங்கை உடனடியாக விடுப்பதற்கான போராட்டத்தின் முன்னணியில் உள்ளது.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்கள் அனைவரும் அசான்ஜை விடுவிப்பதற்கான போராட்டத்தில் இணையுமாறு WSWS அழைப்புவிடுக்கிறது. இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

சோசலிச சமத்துவக் கட்சி, பகுதி 906, 185 எலிசபெத் வீதி, சிட்னி, NSW, 2000 இல் ஜேம்ஸ் கோகனால் அங்கீகரிக்கப்பட்டது.