ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India bombs Pakistan, Islamabad vows military retaliation

இந்தியா பாகிஸ்தான் மீது குண்டுகள் பொழிந்தது, இஸ்லாமாபாத் இராணுவ பதிலடி கொடுக்கப் போவதாக சவால் விடுத்துள்ளது

By Wasantha Rupasinghe
27 February 2019

இந்தியா, செவ்வாய் அதிகாலையில் பாகிஸ்தானுக்கு உள்ளே ஆழமாக சென்று விமானத் தாக்குதலை நடத்தியது, அது 1971 இந்திய–பாகிஸ்தான் போருக்கு பின்னர் நடந்த அவ்வகையான தாக்குதலாகும், அது தெற்காசிய அணு ஆயுதம் தரித்த பகையான நாடுகளுக்கு இடையான பதட்டங்களை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

இஸ்லாமாபாத் தனக்கு பதிலடி கொடுக்க உரிமை உள்ளதாய் கூறுகிறது மேலும் பாகிஸ்தான் இராணுவத்தின் பேச்சாளர் அது இந்தியாவை "ஆச்சரியப்படுத்தும்" என்று உறுதி பூண்டுள்ளார், இந்த பழிக்கு பழி பதிலடி நடவடிக்கைகள் கட்டுப்பாடை இழந்து ஒரு அழிவுகரமான போருக்குள் செல்லும் பேராபத்தை கொண்டுள்ளது.

இந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்ட தயாராகும்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரை பிரிக்கும் கட்டுப்பாட்டு எல்லையின் (LOC) குறுக்கே பலமான குண்டு மழை பொழிந்து கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

இந்திய அரசாங்கம், இந்திய விமானப் படையின் 12 மிராஜ் போர் விமானங்கள் ஜெய்ஷ் ஏ முகமத் (JeM) என்ற இஸ்லாமிய கிளர்ச்சி குழுவின் முக்கிய தளத்தை 1000 கிலோ (2000 பவுண்ட்) "துல்லிய" வெடிகுண்டுகள் கொண்டு அழித்ததாக கோருகிறது. இந்த பேர் போன தளம் பாகிஸ்தானின் கிபேர்-பக்துங்கவா மாகாணத்திலுள்ள பாலக்கோட்டில் உள்ளது, அது கட்டுப்பாட்டு எல்லையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோகலே செவ்வாயான்று ஒரு பிரபல்யமான பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறியதாவது, "இந்த நடவடிக்கையில் ஒரு கணிசமான JeM பயங்கரவாதிகள், மூத்த தலைவர்கள், மற்றும் போராளி குழுக்கள் (இவர்கள் தற்கொலை நடவடிக்கைக்காக பயிற்சி பெற்றவர்கள்) அழிக்கப்பட்டனர்.

இந்திய அரசாங்கம் இறந்தோர் எண்ணிக்கையின் துல்லியமான கணக்கை வெளியிட உத்தியோகபூர்வமாக மறுத்துவிட்டது. ஆனால் இந்து மேலாதிக்க பி.ஜே.பி அரசாங்கத்தின் உள்ளே உள்ளோரின் மூலம் கிடைத்ததை அடிப்படையாக கொண்டு 200 லிருந்து 300 பேர் வரை இறந்துள்ளதாக கூறுகின்றன.

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலின் துல்லிய விபரம் முன்னதாக தெரியவில்லை என்றாலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகள் திரும்ப திரும்ப இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் புல்வாமா அருகே பிப்ரவரி 14 அன்று நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதலுக்காக, பாகிஸ்தான் தண்டிக்கப்படும் என்று உறுதி பூண்டனர்.

JeM இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பு ஏற்று கொண்ட உடனே மோடி பாகிஸ்தான் தான் இதற்கு பொறுப்பு என்று கூறி இந்திய இராணுவத்துக்கு இதற்கு பழி வாங்க "முழு சுதந்திரம்" உள்ளது என்றார்.


இந்திய விமானப் படையால் இயக்கப்படும் மிராஜ்
2000 போர் விமானங்கள்

நேற்று நடந்த இந்த தாக்குதலுக்கான தயாரிப்புகள் நடக்கையில், பா.ஜ.க. அரசாங்கம் பல்வேறு பழிவாங்கல் நடவடிக்கைகளை அறிவித்தது. அவை, பாகிஸ்தானுக்கு இருந்த மிகவும் சாதகமான வர்த்தக நிலை பெற்ற நாடு என்ற உரிமையை இரத்து செய்வது மற்றும் சிந்து சமவெளி நீர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் பெரும்பான்மையான "உரிமையை" நிலை நாட்டுவது, அதன் பாசனத்திற்கான நீர் வளம் மற்றும் மின்சார உற்பத்தியை தடை செய்வதன் மூலம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை நாசம் செய்யப் போவதாக அச்சுறுத்துகிறது.

ஆனாலும், பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட பழிவாங்கல் தாக்குதல், சர்வதேச விதிகளை வேண்டுமென்றே மீறுவதை உள்ளார்ந்து ஏற்றுக்கொள்வது போல், புது தில்லி நேற்றைய தாக்குதலை புல்வாமாவை கூறி நியாயப்படுத்தவில்லை. மாறாக, இது JeM-ஐ மட்டும் குறிவைத்து "ஒரு இராணுவமற்ற தற்காப்பு தாக்குதல்" என்றும் மேலும் "நம்பக்கூடிய உளவு செய்தி" காட்டியது இந்தக் குழு இன்னொரு பயங்கரவாத தாக்குதலுக்கு தயார் செய்வதாய் என கோகலே கோரினார்.

இஸ்லாமாபாத் செவ்வாய் அன்று பாகிஸ்தானுக்குள்ளே இருள் சூழ நடத்திய தாக்குதல் குறித்து, இந்தியாவின் கூற்றை மறுத்து உள்ளது, பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழுவின் கூட்டம் வெளியிட்ட அறிக்கை, இந்தியாவை "சுய இலாபத்திற்காக, பொறுப்பற்ற மற்றும் கற்பனையான" கூற்றுக்காக குற்றம் சாட்டியது. இஸ்லாமாபாத்தின் படி இந்தியாவின் போர் விமானங்கள் பாகிஸ்தானின் போர் விமானங்களால் துரத்தியடிக்கப்பட்டன, மேலும் அவர்களது துல்லியமான குண்டுகள் எங்கோ காட்டுப்பகுதியில் விழுந்து ஒருவர் மட்டும் காயப்பட்டார் என்றது.

புது தில்லி மற்றும் இஸ்லாமாபாத்திடம் இருந்து வரும் கூற்றுகள் வேறாக இருப்பது, நிலைமையின் வெடிப்புத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரு நாடுகளதும் பிற்போக்கு ஆளும் வர்க்கத்தினரும் தங்களின் மூலோபாய பகையை சமூக பதட்டங்களை திசை திருப்பவும் பிற்போக்குத்தனத்தை வளர்த்தெடுக்கவும் ஒரு வழிமுறையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. மேலும் தங்களின் ஆட்சியை தக்கவைக்க எதிரியுடன் எந்த சமாதானமோ, அல்லது அவர்கள் கையில் தோல்வியோ கொஞ்சமும் அனுமதிக்கப்பட மாட்டாது என்ற கருத்தினை கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் செவ்வாயின் தாக்குதலை மறுத்தபோதும், பாகிஸ்தானின் இராணுவமும் அரசாங்கமும் தக்க பதிலடி கொடுப்போம் என்று அறிகுறி கொடுத்துள்ளன.

இராணுவத்தின் பேச்சாளர் மேஜர் ஆசிப் கபியூர், "தூதரக, அரசியல் மற்றும் இராணுவ முறைகளின் மூலம் இந்தியாவிற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்" என்றார்.

அவர் மேலும் பயமுறுத்தும் விதமாக கூறினார், "பிரதமர் இம்ரான் கான், இராணுவத்திடமும் மக்களிடமும் எதற்கும் தயாராக இருக்கும்படி சொன்னார். தற்போது இந்தியாவின் நேரம், நாம் பதிலுக்கு காத்திருக்க வேண்டும். நாங்கள் முடிவெடுத்து விட்டோம். காத்திருங்கள்."

நேற்றைய தாக்குதலை ஆணையிட்டதில், மோடி மற்றும் பா.ஜ.க அரசாங்கத்துக்கு இரண்டு குறிக்கோள் உள்ளன.

முதல் இந்தியாவின் பாகிஸ்தான் மீதான தூதரக, பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்களை பலமாக்குவது மற்றும் பாகிஸ்தான் மீதான இந்தியாவின் சட்ட விரோத இராணுவ தாக்குதலை இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு பதிலீடாக காட்டி அதனை "சாதாரணமாக்குவது".

2014 இல் அம்பானிகள் மற்றும் இந்தியாவின் புதிய பணக்காரர்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட பின் மோடியின் அரசாங்கம் பாகிஸ்தானுடனான "விளையாட்டு விதிகளை" மாற்ற முற்பட்டுள்ளதை குறிப்பிட்டது, மேலும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்திற்கு பாகிஸ்தானை அடிபணிய செய்ய மற்றும் காஷ்மீர் கிளர்ச்சிக்கு எந்த வித பொருள் உதவி செய்வதை நிறுத்த செய்யவும் இவ்வாறு தீர்மானம் எடுத்தது.

இந்தியாவின் முஸ்லீம் பெரும்பான்மை உள்ள ஒரே மாநிலமான ஜம்மு காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு 2016 முதல் கிளம்பி வந்த புதிய அலையான வெகுஜன எதிர்ப்புகள், மோடி, பா.ஜ.க. மற்றும் RSS தலைமையிலான இந்து வலதுகளை பாகிஸ்தான் மீது மேலும் உறுதியாக கோபம் கொள்ள தள்ளியது.

நேற்றைய வான்வழி தாக்குதலின் இரண்டாவது முக்கியமான குறிக்கோள், ஏப்ரல் மே யில் நடைபெற இருக்கும் பல கட்டங்கள் கொண்ட பொது தேர்தலின் போது ஒரு போர்வெறி மற்றும் வகுப்புவாத அரசியல் சுற்றுசூழலை ஏற்படுத்துவது ஆகும்.

தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளான, வேலைகள் வழங்குவது மற்றும் முன்னேற்றம் ஆகியவை இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு ஒரு கொடூரமான பொய்யென நிரூபணமான பின், மோடி அரசாங்கம் அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பினை முகம் கொடுக்கிறது. கடந்த மாதம் பல மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், இரண்டு நாள் தேசிய பொது வேலை நிறுத்தத்தில், பா.ஜ.க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் "முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களுக்கு" எதிராக பங்கு பெற்றனர். மேலும் விவசாயிகளின் போராட்டங்களும் பரவலாக உள்ளது.

பாகிஸ்தானுடனான யுத்த நெருக்கடியைப் பயன்படுத்தி பி.ஜே.பி அதன் இந்து வலதுசாரி அரசியல் தளத்தை அணிதிரட்டுவதற்கு முயற்சிக்கிறது, இந்தியாவின் எதிரிகளை பணியச்செய்யும் தனித்திறன் மிக்க ஒரு வலிமையான மனிதனாக மோடியை காட்டுகிறது, மேலும் அவர் மீதான மற்றும் அவரது அரசாங்கத்தின் மீதான எந்தவிதமான விமர்சனத்தையும் தேசத்துரோகம் என்கிறது, அல்லது விசுவாசமற்றது என்று முலாம் பூசுகிறது.

புல்வாமா தாக்குதலின் பின்னணியில் இந்து வலதுகளால் தூண்டிவிடப்பட்ட மோசமான சூழ்நிலை காரணமாக, மற்ற மாநிலங்களில் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான காஷ்மீர் மாணவர்கள் ஏற்கனவே தங்கள் உயிர் மீதான அச்சத்தில் அங்கிருந்து வெளியேறி தங்கள் வீடுகளுக்கு தப்பிச் செல்ல வேண்டியிருந்தது.

புல்வாமா தாக்குதலை பயன்படுத்தி இவ்வாறான விஷமத்தனமான மற்றும் அப்பட்டமான கீழ்த்தரமான அரசியலை முன்னெடுப்பதற்கு பி.ஜே.பி. க்கு திறன் இருக்குமாயின் அது முற்றிலுமாக எதிர்க் கட்சிகளின் பிற்போக்கான அரசியலுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பி.ஜே.பி அரசாங்கத்தின் மிருகத்தனமான அடக்குமுறை குறித்து அவர்கள் எப்போதாவது கூக்குரலிட்டாலும், பாகிஸ்தானை மண்டியிட வைத்து தனது பெரும் வல்லரசு அபிலாஷைகளை நிறைவேற்ற முயலும் இந்திய முதலாளித்துவத்தின் பின்னே அவர்கள் அனைவரும் வரிந்து கட்டி முன்னிலையில் நிற்கின்றனர்.

2016 ம் ஆண்டு - ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் அல்லது சிபிஎம்) – உள்பட அனைத்து எதிர்கட்சிகளும், பிஜேபி, பாகிஸ்தான் மீது நடத்தும்படி கட்டளையிட்ட "துல்லிய தாக்குதல்” அல்லது அதிரடி கமாண்டோ தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்தன – அந்த நடவடிக்கை இந்தியாவின் பாகிஸ்தான் குறித்த கொள்கையின் மீதான “மூலோபாய கட்டுப்பாடு” தடைகளை தூக்கி வீசியது என்று மோடி பெருமிதத்துடன் கூறினார்.

நேற்று, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, "நான் விமானப்படை விமானிகளுக்கு வணக்கம் தெரிவிக்கிறேன்" என்று டுவீட் மூலமாக இந்திய வான்வழித் தாக்குதல்களை பாராட்டி, எதிர் கட்சித் தலைவர்களின் அணிவகுப்பை தொடக்கி வைத்தார்.

சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இராணுவத்தின் "ஒரு தாக்கமுள்ள தாக்குதலை" புகழ்ந்தார், மேலும் அரசாங்கத்தினால் -கூட்டப்பட்ட ஒரு அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள விரைந்தார். கூட்டத்தின் முடிவில், இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் "அனைத்துக் கட்சிகளும் ஒரு குரலில் பாதுகாப்புப் படைகளை பாராட்டியதுடன் அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தன" என்று பெருமையடித்துக் கொண்டார்.

பாகிஸ்தானிய அரசாங்கமும் அதன் உயரடுக்கும் இந்திய ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவர்களாக தங்களை காண்பிக்க முயல்கின்றன. ஆனால் 1947 ம் ஆண்டிலிருந்து துணைக் கண்டத்தை வெளிப்படையான முஸ்லீம் பாகிஸ்தானாகவும் மற்றும் பெரும்பாலும் இந்து மேலாதிக்கமுள்ள இந்தியாவாகவும் தென் ஆசியாவை பிரித்து பிற்போக்குத்தனமான மூலோபாய மோதல் நிலையை உருவாக்கியதில் அவற்றின் பொறுப்பு புது டெல்லியைக் காட்டிலும் எவ்வகையிலும் குறைந்தது அல்ல, இன்று அது ஒரு அணுசக்தி பேரழிவில் முடிவடையும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது.

இங்கே சிறப்பாக இழிவாக இருப்பது என்னவென்றால் காஷ்மீர் மக்களின் பாதுகாப்பாளனாக இஸ்லாமாபாத் தன்னை சித்தரிக்கும் முயற்சியாகும். ஆசாத் அல்லது பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரிலுள்ள மக்களின் உரிமைகளை பாகிஸ்தான் நசுக்கி வந்தது, மேலும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பரந்துபட்ட மக்களின் எதிர்ப்பை தந்திரமாக கையாண்டு, அதன் அரசியல் செல்வாக்கு மற்றும் திட்டங்களை செயல்படுத்தும் பலத்தை பயன்படுத்தி தொழிலாள வர்க்க விரோத இஸ்லாமிய போராளி குழுக்களை ஊக்குவித்தது.

இந்திய-பாகிஸ்தான் மோதல், பிரிவினையில் வேரூன்றியுள்ளது, ஆனால் அது வாஷிங்டனின் கொள்ளைக்கார திட்டங்களினால் மிகப்பெருமளவில் முடுக்கி விடப்பட்டுள்ளது. சீனாவுக்கு எதிரான அதன் இராணுவ-மூலோபாய தாக்குதல் திட்டத்தில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக பயன்படுத்திக் கொள்வதில் உறுதி பூண்டு – ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி தலைமையிலான– அடுத்தடுத்த நிர்வாகங்கள் இந்தியாவுக்கு சாதகமான மூலோபாய உதவிகளை அள்ளி வழங்கின. அதே நேரத்தில், அதன் காரணமாக, பிராந்திய சமநிலை சீர்குலைந்து போய்விட்டது என்ற இஸ்லாமாபாத்தின் எச்சரிக்கைகளை அது அலட்சியமாக புறக்கணித்துள்ளது.

இந்திய-அமெரிக்க "பூகோள மூலோபாய கூட்டணி" யை மேலும் பலப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் பாகிஸ்தானை தாக்குவதற்காக மோடி அரசாங்கத்துக்கு பச்சை விளக்கு காட்டினார். புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் 24 மணி நேரத்திற்குள், அவரது இந்திய சகபாடியான அஜித் டோயால் உடனான ஆலோசனையைத் தொடர்ந்து, "எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான தற்காப்புக்கான இந்தியாவின் உரிமைக்கு" ஆதரவளிப்பதாக வாஷிங்டன் அறிவித்தது. போல்டனின் வார்த்தைகள், நாட்டின் பெயரை தவிர்த்து பார்த்தால், பாலஸ்தீனியர்களின் மீது இஸ்ரேலிய தாக்குதல்களை ஆசீர்வதிப்பதற்காக அமெரிக்க அரசாங்கங்கள் தசாப்தங்களாக பயன்படுத்திக் கொண்டவையாக இருக்கின்றன.

இப்புதிய, இந்திய-அமெரிக்க கூட்டணி - இப்போது எரிபொருள் நிரப்ப மற்றும் மறுவிநியோகம் செய்ய இந்திய இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கான உரிமையை உள்ளடக்கியுள்ளது. இது குறித்த அச்சத்தின் விளைவாக, பாகிஸ்தான் என்றுமில்லாத நெருக்கமான மூலோபாய உறவுகளை சீனாவுடன் உருவாக்குவதற்கு வழிவகுத்துள்ளது. இதன் விளைவாக இந்திய-பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க-சீன மோதல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான யுத்தம், உலகின் பெரும்` வல்லரசுகளையும், உள்ளீர்ப்பதுடன் ஒரு பூகோள மோதலை தூண்டக்கூடிய அபாயங்களையும் கொண்டுள்ளது.

சமீபத்திய இந்திய-பாகிஸ்தானிய யுத்த நெருக்கடி, தெற்காசியா மற்றும் உலகம் முழுவதிலும் போர் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தொழிலாள வர்க்க தலைமையிலான இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மோடி மற்றும் இம்ரான் கான், ஒருவர் மீது ஒருவர் இரத்தக்களரி ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை விடுக்கின்ற அதேவேளை அவர்கள் ஒரே மாதிரியான சிக்கன நடவடிக்கை மற்றும் முதலாளித்துவ மறுசீரமைப்பு கொள்கைகளை பின்பற்றுகின்றனர். அவர்களுக்கு எதிராக இந்திய மற்றும் பாகிஸ்தானிய தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை ஐக்கியப்படுத்த வேண்டும், மேலும் முதலாளித்துவ ஆட்சியை அகற்றும் போராட்டத்தில், துணைக்கண்டத்தின் பிற்போக்குத்தனமான வகுப்புவாதம் ஊறிப்போயுள்ள அரசமைப்பு முறையை தகர்த்து தெற்காசியாவின் ஐக்கிய சோசலிச அரசுகளை ஸ்தாபிக்க வேண்டும்.