ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Hands off Venezuela!

வெனிசுவேலா மீது கைவைக்காதே!

Bill Van Auken
5 February 2019

கேலிக்கூத்தாகவும் வஞ்சகமாகவும் "சுய-பதவிப்பிரமாணம்" செய்து கொண்ட ஜுவான் குவைடோ (Juan Guaidó) ஐ "இடைக்கால ஜனாதிபதி" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மரியாதை அளித்து அண்மித்து இரண்டு வாரங்களில், பிரதான ஐரோப்பிய சக்திகள், கனடா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் வலதுசாரி அரசாங்கங்களது உதவியுடன், அமெரிக்க ஏகாதிபத்தியம் வெனிசுவேலாவைச் சுற்றி தொடர்ந்து சுருக்குக்கயிறை இறுக்கி வருகிறது.

திங்களன்று, ஜேர்மனியும், இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இதர பிற பெரும்பாலான ஐரோப்பிய சக்திகளும் அதிதீவிர வலதுசாரி கட்சியான மக்கள் விருப்பம் (Voluntad Popular) கட்சியின் ஓர் அரசியல் செயல்பாட்டாளரான குவைடோவை வெனிசுவேலாவின் ஜனாதிபதியாக அங்கீகரிப்பதில் வாஷிங்டனின் வழிநடத்தலைப் பின்தொடர்ந்தன.

அமெரிக்க-ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சி தொடங்குவதற்கு முன்னர் வெனிசுவேலாவில் நடைமுறையளவில் அரசியல்ரீதியில் அறியப்படாத ஒருவர், தேசிய நாடாளுமன்றத்தின் ஜனாதிபதியாக நிறுவப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்னர், அவர் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் வேர்ஜினியாவின் லாங்லி சிஐஏ தலைமையகத்தின் வளாகங்களில் நன்கு அறியப்பட்டவராக இருந்தார் என்பதோடு, அந்த முகமையின் துணை அமைப்பான ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை (National Endowment for Democracy) மூலமாக நிதியுதவி வழங்கப்பட்டு, அமெரிக்க நிதியுதவி பெறும் அரசு-சாரா அமைப்புகளது (NGOs) "வண்ணப் புரட்சி" வழிமுறைகளில் பயிற்றுவிக்கப்பட்டிருந்தார்.

வாஷிங்டன் வெனிசுவேலாவை நேரடியாக கைப்பற்றவோ அல்லது அந்நாட்டை ஓர் இரத்தந்தோய்ந்த உள்நாட்டு போருக்குள் மூழ்கடிக்கக்கூடிய ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தூண்டிவிடவோ தயாராகி வருகின்ற நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இத்தகைய ஒரு பிரமுகரை வெனிசுவேலாவின் உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக பிரகடனப்படுத்த ஐரோப்பிய சக்திகள் முண்டியடிப்பதானது, இவ்வுலகில் மிகப்பெரிய எண்ணெய் வயல்கள் என்று நிரூபிக்கப்பட்ட வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதிலிருந்து கழற்றி விடப்படுவோமோ என்ற ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அச்சத்தால் உந்தப்பட்டுள்ளது.

வாஷிங்டனின் பாகத்திலான முற்றுமுதலான குற்றவியல்தன்மை கொண்ட ஒரு நடவடிக்கையை ஆதரிப்பதன் மூலமாக, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பாலும் அவற்றின் சொந்த குற்றங்களுக்கு வரம்பில்லா அதிகாரத்தைப் பெறுவதற்குக் கணக்கிடுகின்றன. அதே நேரத்தில், வாஷிங்டன் மீண்டுமொருமுறை அதன் "சொந்த கொல்லைப்புறத்தில்" கட்டுப்பாட்டின்றி அதன் மேலாதிக்கத்தைப் பலப்படுத்த முயன்று வரும் நிலைமைகளின் கீழ், இலத்தீன் அமெரிக்காவில் சீனா மற்றும் அமெரிக்கா இரண்டையும் விஞ்சி நிற்கும், ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் சொந்த மூலதன முதலீடுகள் மீதான கவலைகளாலும் அவை வெனிசுவேலாவைச் சுற்றி வளைப்பதில் ஒரு செயலூக்கமான பாத்திரம் வகிக்க முயல்கின்றன.

வெனிசுவேலாவுக்கு எதிரான சதி வார்த்தைக்கு வார்த்தை ஒவ்வொரு அர்த்தத்திலும் சூறையாடும் தன்மை கொண்டுள்ளதுடன், இந்த நடைமுறை முற்றுமுதலான கொள்ளையடிப்பாகும். வாஷிங்டன், அமெரிக்காவில் வெனிசுவேலா அரசாங்கத்தின் சொத்துக்களை முடக்கியுள்ளது, அமெரிக்க கைப்பாவை குவைடோ கேட்டுக் கொண்டதற்கிணங்க என்ற பெயரில் அமெரிக்காவை மையமாக கொண்ட அதன் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் வினியோக நிறுவனம் Citgo உம் இதில் உள்ளடங்கும். அந்த கைப்பாவை, அவரின் பங்கிற்கு, அந்நாட்டின் மூலோபாய எண்ணெய் வளங்களை அமெரிக்க எரிசக்தி பகாசுர நிறுவனங்கள் சுரண்டுவதற்கும் அவற்றின் மீது நேரடி கட்டுப்பாடுகளைப் பெறுவதற்கும் வழி வகுக்கும் விதத்தில், அமெரிக்க ஆதரவிலான ஆட்சிக்கான பொருளாதார முன்நகலை அறிவித்துள்ளார்.

வெனிசுவேலாவின் பரந்த எண்ணெய் வளங்கள் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதே அமெரிக்க அதிகாரிகளின் நோக்கம் என்ற உண்மையை அவர்கள் மறுக்கவில்லை என்பதுடன், அதேநேரத்தில் வாஷிங்டனுக்கு எதிரான "வல்லரசு" போட்டியாளர்களான சீனா மற்றும் ரஷ்யா இரண்டினது கணிசமான செல்வாக்கை அந்நாட்டில் குறைப்பதற்காக வாஷிங்டன் உலகளாவிய போருக்குத் தயாரிப்பு செய்து வருகிறது. இந்த நோக்கம் இலத்தீன் அமெரிக்காவை ஓர் அணுஆயுத மூன்றாம் உலக போருக்கான போர்க்களமாக மாற்ற அச்சுறுத்துகிறது.

இந்நடவடிக்கையின் குற்றகரத்தன்மைக்கும் கொள்ளையடிப்புக்குமான ஒரு மூடிமறைப்பாக முன்னெடுக்கப்பட்ட இற்றுப்போன பாசாங்குத்தனம் என்னவென்றால், வாஷிங்டன் வெனிசுவேலாவில் "ஜனநாயகத்தை" ஆதரிக்கிறது மற்றும் அதன் மக்களுக்கு "மனிதாபிமான" நிவாரணம் வழங்க ஆர்வப்படுகிறது என்பதாகும். யாருமே —வேறு எவரையும் விட குறைந்தபட்சம் வெனிசுவேலா மக்கள் அவர்களே கூட— இத்தகைய பொய்புரட்டுக்களை நம்ப மாட்டார்கள். இதே அமெரிக்க அரசாங்கம்தான் எகிப்தில் ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்றுள்ள மற்றும் பத்தாயிரக் கணக்கான அதன் எதிர்ப்பாளர்களைச் சிறையில் அடைத்துள்ள தளபதி சிசி ஆட்சி மற்றும் சவூதி அரேபியாவில் மகுடம் தரிக்கவுள்ள இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் படுகொலைகார முடியாட்சி சர்வாதிகாரம் போன்ற ஆட்சிகளுக்கும் அதன் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகிறது.

குவைடோ மற்றும் மக்கள் விருப்பம் கட்சி போன்றவற்றின் கீழ் அதிகாரம் ஒருங்குவிக்கப்படுவது ஏதோவிதத்தில் ஜனநாயகம் மலர்வதற்கான சமிக்ஞை அல்ல, மாறாக வெனிசுவேலாவின் பெருநிறுவன செல்வந்த தட்டுக்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வலதுசாரி சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கான சமிக்ஞை ஆகும், இவற்றின் முதல் வேலையே சமூக செலவினக் குறைப்பு மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான வெனிசுவேலா தொழிலாளர்களின் எதிர்ப்பை இரத்தத்தில் மூழ்கடிப்பதாக இருக்கும்.

வெனிசுவேலா மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்கும் தவிர்க்கவியலாத அவசர மனிதாபிமான தேவைகளால் அது உந்தப்பட்டிருப்பதாக கூறிக் கொள்கின்ற வாஷிங்டன், அதேவேளையில் 16 மில்லியன் யேமன் மக்களைப் பட்டினியின் விளிம்பில் தள்ளி உள்ள மனிதயினப்படுகொலைக்கு நெருக்கமான ஒரு போருக்குத் தொடர்ந்து அத்தியாவசியமான ஆதரவை வழங்குகிறது.

இந்த மனிதாபிமான தந்திரம் இப்போது உயர் வேகத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. குவைடோ திங்களன்று அறிவிக்கையில் அவர் USAID ஒழுங்கமைக்கும் உணவு மற்றும் மருத்துவ பொருட்களைக் கோருவதற்கும், இலத்தீன் அமெரிக்காவின் இரண்டு மிக வலதுசாரி அரசாங்கங்களால் ஆட்சி செலுத்தப்படுகின்ற கொலம்பியா மற்றும் பிரேசிலின் எல்லைகளில் வைக்கப்பட்டுள்ள அந்த நிவாரணப் பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருமாறு கோருவதற்கும் "பெரிய அணித்திரள்வுக்கு" அழைப்பு விடுக்கப் போவதாக அறிவித்தார்.

வெனிசுவேலா இராணுவத்திற்குள் உடைவைத் தூண்டுவதும் மற்றும் இராணுவத் தலையீட்டிற்கு சாக்குபோக்கை வழங்கும் அந்நாட்டின் எல்லைகளில் ஒரு மோதலைத் தூண்டுவதுமே இந்த “நிவாரணத்தின்” நோக்கம் என்ற உண்மையை மறைக்கக் கூட அங்கே எந்தவொரு முயற்சியும் இல்லை.

வெனிசுவேலாவிலும் சரி சர்வதேச அளவிலும் சரி, தொழிலாள வர்க்கம் இந்த ஏகாதிபத்திய ஆத்திரமூட்டலை அவமதிப்புடன் நிராகரிக்க வேண்டும், மற்றும் இலத்தீன் அமெரிக்க நாட்டை ஒரு அரை-காலனித்துவ நாடாக மாற்றும் நோக்கம் கொண்ட ஓர் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டுக்கு எதிராக வெனிசுவேலாவை பாதுகாக்க அதன் முழு பலத்தை அணிதிரட்ட வேண்டும்.

ஓர் ஒடுக்கப்பட்ட நாடான வெனிசுவேலாவை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக பாதுகாப்பதற்காக, நிக்கோலாஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கும் சாவிஸ்மோ மரபியத்திற்கும் கவர்ச்சியான வண்ணம் பூச வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

மதுரோவின் கீழ் வெனிசுவேலா அரசாங்கம் அவருக்கு முன்னர் இருந்த ஹூகோ சாவேஸ் இன் கீழ் இருந்ததைப் போலவே ஒரு முதலாளித்துவ அரசாங்கமாகும், அது தனிச்சொத்துடைமையைப் பாதுகாப்பதுடன் சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களைத் தாங்கிப் பிடிக்கிறது, மேலும் உலக முதலாளித்துவ நெருக்கடி மற்றும் வாஷிங்டன் திணித்த அதிகரித்தளவிலான தண்டிக்கும் வகையிலான தடையாணைகள் வெனிசுவேலா தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களைச் சீரழித்துள்ள போதும் கூட இதை செய்துள்ளது. இவ்விரு ஜனாதிபதிகளின் கீழும், அரசாங்கமானது boliburguesía (பொலிபூர்குயூசியா) என்றழைக்கப்படும் வெனிசுவேலா முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் ஒரு புதிய அடுக்கின் வளர்ச்சியைப் பேணி வளர்த்துள்ளன, இது அரசு ஒப்பந்தங்கள், நிதி ஊகவணிகம் மற்றும் ஊழல் ஆகியவற்றால் கொழுத்தது.

சாவேஸின் கீழ், எண்ணெய் மற்றும் பண்டங்களின் பெருக்கத்திலிருந்து வந்த வருவாய்களின் ஒரு பகுதியை அந்த அரசாங்கத்தால் வெனிசுவேலாவின் வறிய பெருந்திரளான மக்களுக்கான சமூக உதவிகளுக்கு நிதி வழங்க திருப்பிவிட முடிந்திருந்தது என்றாலும், ஆழமடைந்து வரும் உலக முதலாளித்துவ நெருக்கடி மற்றும் எண்ணெய் விலைகளின் பொறிவு ஆகியவை பெரிதும் இத்தகைய திட்டங்களை வெறுமைப்படுத்தி உள்ளன. பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையும் வெனிசுவேலா தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்தப்பட்டுள்ளது, அதேவேளையில் அரசாங்கமோ அதிகரித்தளவில் அதன் ஒடுக்குமுறையை அதன் வலதுசாரி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அல்ல, மாறாக தங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர்களுக்கு எதிராக திருப்பி விட்டுள்ளது. வெனிசுவேலா முதலாளித்துவ வர்க்கத்தால் அதன் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து வெளி வர முடியவில்லை என்கின்ற நிலையில், அதேவேளையில் வெனிசுவேலா தொழிலாளர்களால் முதலாளித்துவ அமைப்புமுறைக்குப் புரட்சிகரமாக சவால் விடுக்க இயலாமல் உள்ள நிலையில், சாவேஸ் மற்றும் மாதுரோ அரசாங்கங்கள், இறுதி பகுப்பாய்வில், இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளின் ஆதரவில் தங்கியிருந்து, அதிகரித்தளவில் போனப்பார்ட்டிச தன்மையை ஏற்றன, இவற்றின் அன்பைப் பெறுவதற்காக தான் வாஷிங்டன் இப்போது முண்டியடித்துக் கொண்டிருக்கிறது.

அந்த அரசாங்கங்களது வர்க்க குணாம்சமும் கொள்கைகளும் தான் வெனிசுவேலாவை ஏகாதிபத்திய தலையீட்டுக்கும் ஆக்கிரமிப்புக்கும் பலவீனமாக விட்டு வைத்துள்ளன. மாதுரோ அவரின் முறையீடுகளை வலதுசாரி எதிர்கட்சிகளுக்கும் மற்றும் ட்ரம்புக்கும் "பேச்சுவார்த்தைக்காக" திருப்பி உள்ளார், மேலும் மிகச் சமீபத்தில் அவர் வெனிசுவேலாவில் "ஏசு கிறிஸ்துவின் தூண்டுதலால்" சேவையாற்றி வருவதாக கூறி போப்புக்கும் முறையிட்டார்.

இந்த அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு முறையீடு செய்ய இலாயக்கற்றது. ஓர் ஏகாதிபத்திய தலையீட்டை எதிர்க்க பெருந்திரளான மக்களை ஆயுதபாணியாக்குவதற்கும் அது அஞ்சுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக செவ்ரோன் மற்றும் ஹலிபேர்டன் போன்ற நிறுவனங்கள் உட்பட வெனிசுவேலாவில் உள்ள கணிசமான வெளிநாட்டு முதலாளித்துவ நலன்களைப் பறிமுதல் செய்வதற்கு அதற்கு எந்த உத்தேசமும் இல்லை.

வெனிசுவேலாவில் கட்டவிழ்ந்து வரும் அதிகரித்தளவில் அபாயகரமான நெருக்கடிக்கு ஒரே முற்போக்கான பதில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் தலையீடும், முதலாளித்துவ சொத்துக்களையும் அன்னிய முதலாளித்துவ சொத்திருப்புகளையும் பறிமுதல் செய்து அந்நாட்டின் பரந்த எண்ணெய் வளங்களை மக்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைக்க, பெருந்திரளான மக்களை ஆயுதபாணியாக்குவதற்காக போராடுவதும் ஆகும்.

அத்தகையவொரு போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் மூலமாக மட்டுமே வெற்றிகரமாக தொடுக்க முடியும். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா தொழிலாளர்கள், வெனிசுவேலாவில் பிற்போக்குத்தனமான மற்றும் சூறையாடும் ஏகாதிபத்திய தலையீட்டை எதிர்க்க வேண்டும் என்பதுடன், வெனிசுவேலா மற்றும் இலத்தீன் அமெரிக்கா எங்கிலுமான தொழிலாளர்கள் அவர்களின் பொதுவான எதிரியான உலக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக அவர்களின் போராட்டத்தை ஒருங்கிணைக்க போராட வேண்டும்.