ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The US scraps the INF treaty: Another step toward nuclear war

மத்தியதூர அணுஆயுத தடை உடன்படிக்கையை அமெரிக்கா கைத்துறக்கிறது: அணுஆயுதப் போரை நோக்கிய மற்றொரு படி

Andre Damon
2 February 2019

கியூபன் ஏவுகணை நெருக்கடியின் உச்சத்தில், உலகம் அணுஆயுத நிர்மூலமாக்கலின் விளிம்பில் நின்றிருந்த போது, ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி அவர் சகோதரர் பாபிக்குக் கூறுகையில், “இந்த பூமி அணுஆயுத போரால் எப்போதேனும் சூறையாடப்பட்டால், 60 நிமிட நேர அணுஆயுத பரிவர்த்தனைகளில் 300 மில்லியன் அமெரிக்கர்களும், ரஷ்யர்கள் மற்றும் ஐரோப்பியர்களும் துடைத்தழிக்கப்படுவார்கள், அந்த பேரழிவிலிருந்து உயிர்பிழைப்பவர்கள் பின்னர் நெருப்பு, நச்சு, குழப்பம் மற்றும் சீரழிவை சகித்துக் கொண்டிருக்க முடிந்தால், அவர்களில் ஒருவர் மற்றொருவரிடம் 'இதெல்லாம் எப்படி நடந்தது?' என்று கேட்பதையோ, 'ஆம், இது ஒரேயொருவருக்கு தான் தெரியும்,' என்று விசித்திரமாக ஒருவர் பதில் கூறுவதையோ நான் விரும்ப மாட்டேன்,” என்றுரைத்தார்.

ஓர் அணுஆயுதப் போரைத் தவிர்க்க விரும்பிய ஜனாதிபதி கென்னடிக்கோ அல்லது அவரின் அவ்வாறான ஒரு போரைத் தொடங்க விரும்பிய படைத்தளபதிகளுக்கோ தகவல் தெரிவிக்காமல் நடந்திருந்தால், அத்தகைய ஒரு போர் மனிதகுலத்தில் ஏறத்தாழ பெரும்பான்மையாக 300 மில்லியன் மக்களுக்குக் குறைவில்லாமல் துடைத்தழித்திருக்கும். 80 களின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கடுத்து விஞ்ஞானபூர்வமாக ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அணுசக்தி குளிர்கால கோட்பாடானது (theory of nuclear winter), அமெரிக்க இராணுவம் திட்டமிட்டவாறு ஒரு முழு அளவிலான அணுஆயுதப் போர் ஒட்டுமொத்த பூமியையும் ஒரு நூற்றாண்டுக்காவது வசிக்க இலாயக்கற்ற இடமாக மாற்றியிருக்கும் என்ற தீர்மானத்திற்கு வருகிறது.

ஆனால் அமெரிக்காவோ துல்லியமாக அதுபோன்றவொரு அணுஆயுதப் பிரளயத்தை நோக்கி வெறுமனே குருட்டுத்தனமாக தட்டுத்தடுமாறி சென்றுக் கொண்டிருக்கவில்லை, மாறாக அதற்காக நேரடியாக தயாரிப்புகள் செய்து கொண்டிருக்கிறது. Foreign Affairs பத்திரிகை ஒரு சமீபத்திய கட்டுரையில் “அணுஆயுத போருக்குத் தயாராக இருங்கள்,” என்று அதன் வாசகர்களுக்கு தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ அறிவிக்கையில், 500 மற்றும் 5,500 கிலோமீட்டர்களுக்கு இடையிலான தூரத்தில் ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கு தடை விதிக்கும், சோவியத் ஒன்றியத்திற்கும் (பிந்தைய ரஷ்யாவுக்கும்) மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான 1987 உடன்படிக்கை, அதாவது மத்தியதூர அணுஆயுத தடை உடன்படிக்கை (INF) உடனான அதன் கீழ்படிதலை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்தார்.

இந்நகர்வு ஏறத்தாழ தவிர்க்கவியலாதவாறு மற்றொரு முக்கிய உலகளாவிய ஆயுத கட்டுப்பாட்டு உடன்படிக்கையான 2011 இல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட புதிய START உடன்படிக்கையில் இருந்தும் அமெரிக்காவை வெளியேற செய்கிறது, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் "ஒபாமா நிர்வாகத்தால் பேரம்பேசப்பட்ட பல மோசமான உடன்படிக்கைகளில் [இதுவும்] ஒன்று" என்று இதை குறிப்பிட்டுள்ளார்.

இந்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதற்கான வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ நியாயப்பாடுகள் குறித்து கூறுவதற்கு ஒன்றுமில்லை: அதாவது, மாஸ்கோவின் ஏவுகணைகளைப் பரிசோதனை செய்வதற்காக அமெரிக்கா மட்டுமல்ல, சர்வதேச ஆணையங்களும் பத்திரிகையாளர்களும் மீண்டும் மீண்டும் மாஸ்கோவிற்கு வாய்ப்புகளை வழங்கியதற்கு இடையே, மாஸ்கோ அந்த உடன்படிக்கையின் வழிவகைகளை மீறியுள்ளதாம். வெள்ளை மாளிகையின் குற்றச்சாட்டுக்கள் அவற்றை நம்பாதவர்களாலேயே கூட எதிரொலிக்கப்பட்டதுடன், இராணுவத்திற்கான ஊதுகுழலாக செயல்படும் ஊடக எந்திரத்தால் கேள்வியின்றி விடப்பட்டது.

ரஷ்யாவுக்கு எதிரான வெள்ளை மாளிகையின் குற்றச்சாட்டுக்களை முழுமையாக ஆதரிக்கும் ஒரு கட்டுரையில் நியூ யோர்க் டைம்ஸின் டேவிட் சன்கர், பென்டகனின் வடிகாலாக விளங்கும் இவர், INF உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா ஏன் வெளியேறுகிறது என்பதற்கான நிஜமான காரணங்களைத் துல்லியமான தெளிவுடன் உச்சரிக்கிறார்:

“அமெரிக்கா அந்த உடன்படிக்கையின் வழிவகைகளுக்கு கட்டுப்பட்டு, மேற்கு பசிபிக்கில் மேலாதிக்க இடத்தைப் பெறுவதற்கான சீனாவினது முயற்சிகளை எதிர்க்க அதன் புதிய ஆயுதங்களை நிலைநிறுத்துவதில் இருந்தும் மற்றும் அந்த வளைகுடாவில் அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்களை நிலைநிறுத்துவதில் இருந்தும் தடுக்கப்பட்டுள்ளது. வேகமாக பலவீனமடைந்து வந்து கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவரான மிக்கைல் கோர்பச்சேவும் ரோனால்ட் ரீகனும் INF உடன்படிக்கையைப் பேசி தீர்மானித்த போது சீனா அப்போது ஒரு சிறிய மற்றும் அதிநவீனமல்லாத இராணுவ சக்தியாக இருந்தது.”

சன்கரின் சொந்த வார்த்தைகளே அமெரிக்கா அந்த உடன்படிக்கையிலிருந்து ஏன் வெளியேற விரும்புகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது, இதற்கும் ரஷ்யா உடன்படிக்கையை மீறியது என்ற குற்றஞ்சாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: வாஷிங்டன் சீன பெருநிலத்தைச் சுற்றிய சங்கிலி தொடர் போன்ற தீவு வளையத்தில் அணுஆயுத ஏவுகணைகளை நிறுத்துவதற்கு விரும்புகிறது. ஆனால் ரஷ்யாவின் "மோசமான நடவடிக்கை" குறித்த பொம்பியோவின் நெருப்பு உமிழும் வார்த்தைகளை, நிலைமாற்றத்திற்கான விவரங்கள் அதிகம் இல்லாமலேயே, அவர் வாசகர்கள் நம்புவார்கள் என்று சன்கர் ஏதோவிதத்தில் எதிர்பார்க்கிறார்.

மத்தியதூர அணுஆயுத தடை உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியமை அணுஆயுதங்கள் மீதான ட்ரம்பினது விசித்திரமான ஈர்ப்பு காரணமல்ல. மாறாக, அது ரஷ்யா மற்றும் சீனாவுடன் "வல்லரசு" மோதலை நோக்கிய அமெரிக்க இராணுவத்தின் மீள்நோக்குநிலையின் விளைவாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அமெரிக்க இராணுவ ஸ்தாபகம் சீனாவின் வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிகரித்தளவில் எச்சரிக்கைப் படுத்தப்பட்டு வந்துள்ளது, இதை அமெரிக்கா அதன் பெருநிறுவனங்களின் இலாபங்களுக்கு மட்டுமல்ல, அதன் இராணுவ மேலாதிக்கத்திற்கே ஓர் அச்சுறுத்தலாக பார்க்கிறது.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், டாட்காம் குமிழியின் உச்சத்தில், சீனா தகவல் தொடர்பு புரட்சியை உந்திய நுகர்வு மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு மலிவு-உழைப்பு தளம் என்பதற்கு சற்று கூடுதலாக இருந்தது, அதேவேளையில் அமெரிக்க நிறுவனங்கள் பாரிய இலாப திரட்சியைப் பைகளில் நிரப்பிக் கொண்டன. ஆனால் இன்றோ, பொருளாதார பலத்தின் சமநிலை மாறி வருகிறது.

ஹூவாய், ஜியோமி மற்றும் ஒப்போ போன்ற சீன நிறுவனங்கள் உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்பினும் அதிக பகுதிகளைக் கைப்பற்றி வருகின்றன என்பதோடு, அவற்றின் போட்டியாளர்களான சாம்சாங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களும் கூட அவற்றின் சந்தை பங்கு சரிந்து வருவதைக் காண்கின்றன. ஷென்ஜென்னை மையமாக கொண்ட DJI நிறுவனம் நுகர்வு டிரொன் சந்தையில் போட்டிக்கிடமற்ற உலகளாவிய முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இதற்கிடையே ஹூவாய் அடுத்த தலைமுறை மொபைல் உள்கட்டமைப்பில் அதன் போட்டியாளர்களை விட ஓராண்டு முன்னே சென்று கொண்டிருக்கிறது, இந்த மொபைல் உள்கட்டமைப்பு ஓட்டுனர் இல்லாத கார்கள் மற்றும் "இணைய-வழி இயக்கத்திற்குரிய" வீட்டு உபயோகப் பொருட்களை மட்டும் பலப்படுத்தப் போவதில்லை, மாறாக "தானே முடிவு செய்யும்" தானியங்கி ஆயுதங்களையும் பலப்படுத்தும்.

அமெரிக்காவின் சமீபத்திய உலகந்தழுவிய அச்சுறுத்தல் மதிப்பீடு எச்சரிப்பதைப் போல, “2019 மற்றும் அதைக் கடந்தும், இராணுவம் மற்றும் பொருளாதார போட்டித்தன்மையை உந்திச் செல்லும் கண்டுபிடிப்புகள் அதிகரித்தளவில் அமெரிக்காவுக்கு வெளியில் தான் உருவாக இருக்கின்றன, அதேவேளையில் ஒட்டுமொத்தமாக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் தலைமை சுருங்கவிருக்கிறது" மேலும் "வர்த்தக மற்றும் இராணுவ தொழில்நுட்பங்களுக்கு இடையிலான ஆற்றல்சார் இடைவெளி ஆவியாகி கொண்டிருக்கிறது.”

அமெரிக்காவின் உலகளாவிய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் அதன் பொருளாதார வீழ்ச்சி தான் இறுதியாக அமெரிக்க அணுஆயுத போர் திட்டங்களைத் தீவிரப்படுத்துவதில் உந்துசக்தியாக இருந்து வருகிறது. அதன் இராணுவத்தை நிறைவேற்றும் சாதனமாக பயன்படுத்துவதன் மூலமாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சியை அதனால் கட்டுப்படுத்த முடியும் என்றும் உலக அரங்கில் அமெரிக்காவின் ஒப்புயர்வற்ற நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அமெரிக்கா நம்புகிறது.

ஆனால் அதன் பாரியளவிலான மூலோபாய ஏவுகணை ஆயுதங்களைக் கொண்டு அதன் போட்டியாளர்களை முற்றிலுமாக துடைத்தழிக்கும் வெறும் அச்சுறுத்தலைக் கொண்டு மட்டும் அவற்றை அடிபணிய செய்ய வைக்க முடியாதென அமெரிக்க இராணுவத்திற்குள் ஒரு கருத்தொற்றுமை உருவாகி வருகிறது. ரஷ்யா மற்றும் சீனா இரண்டுமே அணுஆயுதம் தாங்கிய பெருந்தொலைவு பாயும் நீர்மூழ்கிக் கப்பல் படை ஏவுகணைகளை வைத்திருக்கின்ற நிலையில், nuclear winter உடன்படிக்கையின் கட்டுப்பாடுகளைத் தவிர்த்து விட்டு பார்த்தாலும் கூட, இந்த வாய்ப்பு அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களின் அழிவில் போய் முடியக் கூடியதாகும்.

அதற்கு பதிலாக அமெரிக்கா அணுஆயுதம் தாங்கிய போர்க்கப்பல் ஏவுகணையைக் கட்டமைப்பது உட்பட "பயன்பாட்டிற்கு உகந்த,” குறைந்த-பாதிப்பை ஏற்படுத்தும் "தந்திரோபாய" அணுஆயுத தளவாடங்களைக் கட்டமைக்க செயல்பட்டு வருகிறது. இவ்வாரம், குறைந்த-பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு புதிய அமெரிக்க அணுஆயுத குண்டுகளின் உற்பத்தி தொடங்கப்பட்டது, இதன் பாதிப்பு ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது போடப்பட்ட "லிட்டில் பாய்" ஆயுதத்தின் பாதிப்பில் அரைவாசிக்கும் மற்றும் மூன்றில் ஒரு பங்கிற்கும் இடையே பாதிப்பைக் கொண்டிருக்கும் என்பதோடு, அமெரிக்காவின் ஏனைய அணுஆயுத அமைப்புமுறைகளை விட நூறு மடங்கிற்கும் குறைவான பாதிப்பைக் கொண்டிருக்கும்.

கடந்தாண்டு வெளியிடப்பட்ட ட்ரம்ப் நிர்வாகத்தின் அணுஆயுத நிலைப்பாடு மீதான மீளாய்வு, (இதை பென்டகன் நம்புகிறதோ இல்லையோ) அணு-அல்லாத ஆயுதங்களுடன் தொடங்கும் மோதல்களின் பேரலையை இத்தகைய [குறைந்த-பாதிப்பு] ஆயுதங்களைக் கொண்டு திருப்பி விடலாம், அத்தகைய போர்கள் முழு-அளவிலான அணுஆயுத பரிவர்த்தனையை தடுக்கும் என்று அனுமானிக்கிறது.

அண்மித்து 75 ஆண்டுகளுக்கு முன்னர், ஜப்பான் மீதான "மூலோபாய குண்டுவீச்சு" மனிதயினப் படுகொலை நடவடிக்கையில், தளபதி கர்டிஸ் லெமெயின் வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கா அவர்களை "வறுத்தெடுத்து, கொதிக்கவிட்டு, மரணத்திற்காக தீயில் வாட்டிவதைத்த" பின்னர், இரண்டு அணுஆயுதங்களைப் பயன்படுத்தி இன்னும் நூறாயிரக் கணக்கானவர்களைக் கொன்று குவித்தது: இந்நடவடிக்கையின் பிரதான நோக்கமே சோவியத் ரஷ்யாவை அச்சுறுத்துவதற்காக இருந்தது.

ஆனால் இறுதியில், சோவியத் ஒன்றியம் தொடர்ந்து உயிர்ப்பிழைத்திருந்தமை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மனிதயினப் படுகொலை உந்துதலுக்கு ஒரு முட்டுக்கட்டையாக சேவையாற்றியது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு அமைதியான, ஜனநாயகத்தன்மை கொண்ட ஒரு புதிய சகாப்தத்தைக் கொண்டு வரும் என்றும், “வரலாறு முடிந்துவிட்டது,” என்றும் கூறப்பட்ட வெற்றிப்பிரவாக கூற்றுகளுக்கு இடையே, அது ஒரு கால் நூற்றாண்டாக வெறும் நவ-காலனித்துவ போர்களை மட்டுமே கொண்டு வந்துள்ளது.

ஆனால் ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவில் போர்கள் அவற்றின் உத்தேசித்த நோக்கத்தை எட்டவில்லை. ட்ரில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டும் கணக்கின்றி மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றும் கூட, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நிலை 2001 இல் அது "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" தொடங்கிய போது இருந்ததை விட சிறப்பாக மாறவில்லை.

இப்போதோ, அமெரிக்கா, அன்றாட நடப்பாக ரஷ்யா மற்றும் சீனாவுடன் "வல்லரசு மோதலை" ஏற்படுத்த வரிந்து கட்டி நிற்கிறது. உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அதன் வாழ்வா-சாவா போராட்டத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியம் உடையும் புள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறது, அணுஆயுத போரைத் தொடங்குவது உட்பட மற்றும் அதை எட்டும் வரையில் மிகவும் ஈவிரக்கமற்ற மிகவும் மோசமான வழிவகைகளை ஏற்க விரும்புகிறது.

இத்தகைய படை பலத்துடனும் வன்முறையோடும் வெடித்துள்ள உலகளாவிய நெருக்கடியைச் சமாளிப்பதை நோக்கி அங்கே எந்த அமைதியான, முதலாளித்துவ பாதையும் கிடையாது. 21 ஆம் நூற்றாண்டில் மனிதயினம் உயிர் பிழைக்க வேண்டுமானால், அது ஒரு சோசலிச அடித்தளத்தில் சமூகத்தை மறுஒழுங்கு செய்வதற்கான போராட்டம் மூலமாக, முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகளின் போர் நோக்கங்களை எதிர்க்க தகைமை கொண்ட ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டை ஏற்க வேண்டும்.