ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron offers “great national debate” as trap for French yellow vest protesters

மக்ரோன் வழங்கும் “மாபெரும் தேசிய விவாதம்” பிரெஞ்சு மஞ்சள் சீருடை  ஆர்ப்பாட்டக்காரர்களுக்கான ஒரு பொறி

By Anthony Torres
21 January 2019

மஞ்சள் சீருடை இயக்கத்தின் 10வது சனிக்கிழமை நிகழ்வின் முன்வேளையில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மஞ்சள் சீருடை இயக்கத்தின் மீதான அவரது “மாபெரும் தேசிய விவாதத்தை” தொடங்கினார். அவர் தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள போவதில்லை என வலியுறுத்திய அவமானப்படுத்தும் கடிதத்துடன் பிரெஞ்சு மக்களுக்கான விவாதம் என்று சொல்லப்படும் அதனைத் தொடங்கிய பின்னர், மக்ரோன் பாதுகாப்புப் படைகளால் வலுவான முகாம் போல மாற்றப்பட்டிருந்த Bourgtheroulde நகரில் 600 மேயர்களுடன் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றார். இந்நிகழ்வானது பரந்த மஞ்சள் சீருடையினர் மற்றும் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மக்ரோனின் விவாதத்தை ஒரு அரசியல் பித்தலாட்டம் என நிராகரிப்பதில் சரியாகவே இருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தியது.

மஞ்சள் சீருடை இயக்கம் ஆரம்பமாவதற்கு முன்னர் இருந்தே உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் (Parti de l’égalité socialiste) மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒன்றுமில்லை என வலியுறுத்தி வந்துள்ளன. இவ்வியக்கம் மற்றும் ஐரோப்பா முழுவதும் பரந்த வர்க்கப் போராட்டத்தின் முன்னே வைக்கப்பட்டிருக்கும் கேள்வி, தொழிலாள வர்க்கத்தின் கையில் அதிகாரத்தை மாற்றுவதுதான். இதற்கு நிதிய பிரபுத்துவத்திடமிருந்து பறித்தெடுப்பதற்காக, தொழிற் சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தொழிலாளர் அமைப்புகளை உருவாக்குவதும் சர்வதேச ரீதியாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதும் அவசியப்படுகிறது.

மக்ரோன் “மாபெரும் விவாதத்தை” ஆரம்பிக்கையில், அவர் வாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறிக்கொள்ளும் பிரெஞ்சு மக்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நோர்மண்டியில் உள்ள 3700 பேரைக் கொண்டுள்ள Bourgtheroulde ஒரு சிறுநகரை கோட்டையாக மாற்றினார். அவர், நகர்ந்து திரியும் 10 ஆயுதம் ஏந்திய படையணி பிரிவையும் CRS கலவர போலீஸின் 7 படையணிகளையும் எல்லை பாதுகாப்பு படையின் 300 ஆயுதம் ஏந்திய படையணியினரையும் அணிதிரட்டினார். பொறுக்கி எடுக்கப்பட்ட கையளவேயான, அவரைக் கைதட்டி வரவேற்கும் மேயர்களிடம் ஏழு மணி நேரம் பேசினார், அவர் மஞ்சள் சீருடையாளரையும் சரி அந்த நகரில் வாழ்ந்து வருபவரையும் சரி சந்திக்கவே இல்லை.

Bourgtheroulde இல் அவரது தலையீடு, அவர் பிரெஞ்சு மக்களுக்கு விடுத்த “மாபெரும் விவாதம்” கடிதத்தில் அவர் தீட்டிய சிக்கனம் மற்றும் இராணுவவாதக் கொள்கைகளை முடிவாக்கப்பட்ட கொள்கைகளாக எடுக்கும் என்பதை மட்டுமே உறுதிப்படுத்தியது. எதிர்ப்பாளர்களுக்கு அவர் ஒன்றும் வழங்கப் போவதில்லை மற்றும் அனைத்து எதிர்ப்பையும் போலீஸ் ஒடுக்கு முறையுடன் நசுக்குவதையே அவர் நாடுகிறார்.

அவரது கடிதத்தில், செல்வந்தர்களுக்கான அவரது வரிச் சலுகையில் எந்த மாற்றத்தையும் மக்ரோன் நிராகரித்தார். வரவு-செலவு திட்ட கொள்கைகள் மீதான மற்றும் பொது சேவைகளின் திறன் மீதான விவாதம் என்பது, தொழிலாளர் விரோத சிக்கனக் கொள்கையை முன்னெடுப்பதன் மூலம் நிதியப் பிரபுத்துவத்தின் செல்வந்தர்களைப் பாதுகாக்கும் முன்முயற்சிகளை கொண்டதாகும். “முதலீட்டை ஊக்குவிக்கவும் வேலையை சரிசெய்யவும் எடுத்த நடவடிக்கைகளை நாம் மறுபரிசீலனை செய்யப்போவதில்லை.” என்று அவர் எழுதினார். “அவர்கள் வாக்களிக்கத்தான் செய்தார்கள் மற்றும் அவர்களின் முன்னெடுப்புகள் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. எவ்வாறாயினும், எமது பொது செலவினங்களின் ஒட்டுமொத்த மட்டத்தையும் குறைக்காமல் எந்தவகையிலும் நாம் வரிச்சலுகையை தொடர முடியாது.”

பின்னர் மக்ரோன் பொதுமக்களுக்கு எந்த அத்தியாவசிய சேவைகள் அடிமட்டம்வரை வெட்டக்கூடியதாய் இருக்க வேண்டும் என ஒரு தேர்வாக முன்வைத்தார்:

“பொது சேவைகள் செலவைக் கொண்டிருக்கின்றன, ஆனால் அவை முக்கியமானவை: பள்ளிக்கூடங்கள், போலீஸ், இராணுவம், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் ஆகியன எமது சமூக ஒற்றுமைக்கு அத்தியாவசியமானவை. உள்ளூர் அரசாங்கத்தின் அளவுக்கதிகமான நிர்வாக முரண்பாடுகள் அல்லது மட்டங்கள் உள்ளனவா? அதிகாரப் பரவலை ஏற்படுத்தி, குடிமக்களுக்கு நெருக்கமானவர்களுக்கு எந்த மட்டத்தில் எந்த சேவைகளில் முடிவு மற்றும் நடவடிக்கை எடுக்க அதிக அதிகாரம் வழங்குவது?”

இந்த ஒட்டுண்ணி முன்னாள் வங்கியாளர், சோம்பேறிகள் என தாக்கும் தொழிலாளர்களுக்கு உதவ முடியாது, மாறாக தொழிலாளர்களின் மீதான அவரது அவமதிப்பையே காட்டுகிறார். ஒன்பதாவது சனிக்கிழமை எதிர்ப்புக்கு முன்னர், எலிசே ஜனாதிபதி மாளிகையில் பாண் செய்யும் பயிற்சியாளர்களை வரவேற்று பேசுகையில், மக்களுக்கு “முயற்சி உணர்வு” பற்றாக்குறையாக இருப்பதாக உரை நிகழ்த்தினார். அவர் மேலும் குறிப்பிட்டார், “எமது சமூகத்தில் முயற்சி இல்லாமல் விடயத்தைப் பெறலாம் என எமது சக குடிமக்களில் பலபேர் நினைக்கிறார்கள் என்ற உண்மையின் காரணமாக அல்லது அத்தோடு தொடர்புடையதால் சிலநேரங்களில் தொந்திரவுகளை அனுபவிக்கின்றனர்.”

தமது தேவைகளை மாத இறுதி வரை பூர்த்தி செய்ய கடினமாகப் பாடுபடும் மஞ்சள் சீருடையாளர்கள் —அவர்கள் சிறு வணிகர்கள், விவசாயிகள் அல்லது தொழிலாளர்களாக இருக்கலாம்— உண்மையில், மக்ரோனால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் நிதிய பிரபுத்துவத்தால் ஆன சுரண்டலை எதிர்கொள்கையில் பெரும் முயற்சியைச் செய்கின்றனர்.

பொருளியலார் Thomas Piketty, பிரெஞ்சுத் தொழிலாளர்களின் உத்தியோகபூர்வ வேலைவாரம் குறைக்கப்பட்டிருந்த போதும் 1970ல் செய்ததைப் போல மூன்று மடங்கு செல்வத்தை உருவாக்குகிறார்கள் எனக் கணக்கிட்டார் அந்த நேரத்தில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கால கட்டத்தில் பெரிய அளவிலான முதலீடுகள் காரணமாக அந்த நேரத்தில் உற்பத்தித் திறனில் அமெரிக்கா கொண்டிருந்த சாதகத்தை வென்று வரக்கூடியதாக இருந்தது. 2018ன் முதல் ஒன்பது மாதங்களில் 15 வேலையாட்கள் பணியாற்றும் நிறுவனங்களில் பணியாற்றிய கூடுதல் உழைப்பு நேரம் சராசரியாக 31.5 மணிகள். முழுநேரத் தொழிலாளர்களுக்கான சராசரி வேலை வாரம் 39.1 மணிகள், மற்றும் பகுதிநேரத் தொழிலாளர்களுக்கு 23.7 மணிகள், இவை ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த அளவாகும்.

மக்ரோன் மக்களுக்கு விடுத்த விரிவுரையின்படி, தொழிலாளர்கள் தங்களது உழைப்பின் காயங்களை சுமக்கிறார்கள். சமூகப் பாதுகாப்பு புள்ளிவிவரங்களின்படி, வேலையில் 16 சதவீதம் நிறுத்திவைக்கப்படுதல் தசை-எலும்பு முறிவுகளாலாகும் மற்றும் 10 சதவீதம் அதிக சோர்வு அல்லது மன அழுத்தத்தால் நிறுத்திவைக்கப்படுவதாகும். மோசமாகப் பாதிக்கப்படும் தொழில்துறைகள் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகும்.

தேசியப் புள்ளிவிவர நிறுவனம் வேலை விபத்துக்களைப் பற்றி தற்போது  வெளியிட்டிருக்கிறது. 2013ல், இதில் வாக்களித்தோரில் 26 சதவீதம் தங்களது வேலைக்காலத்தில் வேலைத்தள விபத்துக்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறினர். இது தொழிலாளர்களுக்கு 40 சதவீதமும் விவசாயிகள், இளைஞர் மற்றும் வயதானவர்களுக்கு 32 சதவீதமும் என உயர்ந்துள்ளது.

மக்ரோனால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் நிதிய பிரபுத்துவத்தினர்தான் “முயற்சி உணர்வு” பற்றாக்குறையாக இருக்கின்றனர். சமத்துவம் என்று தவறாக முன்வைக்கப்பட்ட “பிரெஞ்சு சமூக மாதிரி” மீது Challenges பத்திரிகை சிறிது வெளிச்சம் பாய்ச்சியது. 1996க்குப் பின்னர் Challenges மிக அதிர்ஷ்டசாலிகள் என்று அளவிடப்பட்ட 500 பேரின் செல்வவளம் 7 மடங்காகப் பெருகி இருக்கிறது மற்றும் அவர்களில் உயர் இடத்திலுள்ள 10 பேருடையது 12 மடங்காகி இருக்கிறது. இருந்தும் அதேகாலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அரிதாக இரட்டிப்பாக ஆகி இருக்கிறது மற்றும் உண்மையான சராசரி ஊதியம் 20 ஆண்டுகளாக அதிகரிக்கவே இல்லை.

2008 பொறிவுக்குப் பின்னர், 500 பிரெஞ்சு செல்வந்தர்கள் அவர்கள் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் பொருளாதாரத்தின் பகுதியை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளனர். 2009 முதல் 2018 வரையான காலப்பகுதியில், அவர்களது கூட்டுச் செல்வம் மொத்த உள்ளநாட்டு உற்பத்தியின் 10 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை வளர்ந்து, முன்னோடியில்லாத வகையில் 650 பில்லியன் யூரோ மட்டத்தை எட்டியிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தை கொள்ளை அடித்தல் கடந்த இரு ஜனாதிபதி பதவிக் காலங்களில், —மக்ரோன் மற்றும் அவரது முன்னோடியான சோசலிஸ்ட் கட்சியின் பிரான்சுவா ஹாலண்ட் காலத்தில்— வேகமாக நடந்துள்ளது.

சமூக சமத்துவமின்மைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் கோபம் முற்றிலும் நியாயமானதே. பிரான்சிலும் உலகெங்கிலும் பறித்தெடுக்கப்பட வேண்டிய, அதி செல்வந்தருக்கான வரிச்சலுகைக்கு அபரிமிதமான நிதி அளிக்க வேண்டிய பொறுப்பு தொழிலாளர்களது அல்ல, இவை பிரான்சிலும் ஐரோப்பாவிலும், உலகம் முழுவதிலும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

அவரது கடிதத்தில், மக்ரோன் சமூக கோபத்தை அருவருப்பான புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு இனவெறி வழியே திசைதிருப்ப முனைவது, மேலும் நவ-பாசிச திசையில்தான் திரும்பும். பிரான்சில், “புலம்பெயர்தல் தொடர்பான பதட்டங்கள் மற்றும் ஐயங்களாலும் அவர்களை ஒருங்கிணைப்பதில் எமது அமைப்பின் தோல்வியாலும் இன்றைய மரபு தொந்திரவுக்குள்ளாகிறது” என்று அவர் எழுதினார். “மதசார்பின்மை” என்ற மூடுதிரையின் கீழ், அவர் கோரிக்கொள்வது “முக்கிய விவாதங்களின் கருப்பொருள்” —சில முஸ்லிம் பெண்களால் அணியப்படும் சிலவகைத் துணிகள் மீதான பிற்போக்குத் தடை போன்றவை— “குடியரசின் அருவமான மதிப்புக்களையும் ஒருவரையொருவர் புரிதலையும் அனைவரும் மதிப்பது” என்பதாகும்.

வங்கிகளின் இந்தப் பிரதிநிதியின் வெளிநாட்டவருக்கு எதிரான கிளர்ச்சியை நிராகரிப்பதே போராட்டத்தில் தொழிலாளர்களை அணிதிரட்ட மற்றும் ஐக்கியப்படுத்துவதற்கான மிக அத்தியாவசியமான முன்நிபந்தனையாகும்.