ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Strikes by Hungarian Audi workers, Mexican auto parts workers

The global struggle of autoworkers

ஹங்கேரியின் அவுடி கார் ஆலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும், மெக்சிகன் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும்

வாகனத்துறை தொழிலாளர்களின் உலகளாவிய போராட்டம்

Jerry White
28 January 2019

கடந்த சில நாட்களாக, உலகளாவிய வாகனத் தொழில்துறையின் பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் குறைவூதியங்கள் மற்றும் கொத்தடிமை நிலைமைகளுக்கு எதிராக ஓர் சக்திவாய்ந்த வேலைநிறுத்தங்களின் அலையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வியாழனன்று 13,000 பேர் என்று மதிப்பிடப்பட்ட வாகனத்துறை தொழிலாளர்கள், ஹங்கேரிய நகரமான Győr இல் ஜேர்மனியை மையமாக கொண்ட அவுடி கார் உற்பத்தி மற்றும் இயந்திர உற்பத்தி ஆலையில் ஒரு வாரகால வேலைநிறுத்தத்தை தொடங்கினர். அந்த ஆலை தொழிலாளர்கள் ஆண்டுக்கு 100,000 சேடன் ரக கார்கள், சொகுசு பந்தயக் கார்கள் மற்றும் பந்தயத்திற்கான பயன்பாட்டு வாகனங்களையும், அத்துடன் அவுடி கார்களுக்கான எரிவாயு, டீசல் மற்றும் மின்சார மோட்டார்களும் மற்றும் உலகின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான வோல்ஸ்வாகனுக்குச் சொந்தமான ஏனைய ரகங்களையும் உற்பத்தி செய்கிறார்கள்.

ஹங்கேரியில் வாழ்க்கை செலவுகள் மேற்கு ஐரோப்பாவுக்கு நிகராக இருக்கின்ற போதும், ஒரு ஹங்கேரிய அவுடி கார் ஆலை தொழிலாளி பிரதி மாதத்திற்கு சுமார் 1,000 யூரோ (1,140 அமெரிக்க டாலர்) சம்பாதிக்கிறார், இது அவரின் ஜேர்மன் சமதரப்பினர் சம்பாதிப்பதை விட சுமார் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. செக் குடியரசு, ஸ்லோவாக்கியா மற்றும் போலாந்து தொழிலாளர்களும் அவர்களின் கிழக்கு ஐரோப்பிய சம-தரப்பினரை விட கணிசமானளவு குறைவாக சம்பாதிக்கின்ற நிலையில், இவர்கள் 18 சதவீத கூலி உயர்வும் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் முழுமையாக ஒரு வாரகால விடுப்பும் கோரி வருகின்றனர்.

இந்த வேலைநிறுத்தம், நிறுவனங்கள் சராசரியாக வாரத்திற்கு ஆறு நாட்களுக்குச் சமமாக பணியாளர்களை வேலை செய்ய நிர்பந்திக்க அனுமதிக்கும் வகையில் பிரதம மந்திரி விக்டர் ஓர்பனின் வலதுசாரி அரசாங்கத்தினது வெறுக்கப்படும் மிகைநேர சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிரான பாரிய போராட்டங்களின் ஓர் அலையுடன் பொருந்தி வருகிறது. மக்களிடையே "அடிமைச் சட்டம்" என்று கூறப்படும் இந்த நடவடிக்கை, “அவுடி, மெர்சிடஸ் அல்லது பிஎம்டபிள்யு சாசனம்" என்று அறியப்படுகிறது ஏனென்றால் இது ஹங்கேரியில் மிகப் பெரியளவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்களால் அழுத்தமளிக்கப்பட்டிருந்தது.

இந்த ஹங்கேரிய வேலைநிறுத்தம் 2017 கோடையில் சேர்பியாவின் பியட் கிறைஸ்லர் தொழிலாளர்கள் மற்றும் ஸ்லோவாக்கியாவின் வோல்ஸ்வாகன் தொழிலாளர்களின் வெளிநடப்புகள் மற்றும் அதற்கு வெறும் ஓராண்டுக்கு முன்னதாக ரோமானியாவின் கிரையோவாவில் ஃபோர்ட் ஆலை தொழிலாளர்களின் வெளிநடப்புகளைத் தொடர்ந்து வருகிறது. வோல்ஸ்வாகன் குழுமத்தின் பெரும் இலாபமீட்டும் குறைந்த-விலை கார், ஸ்கோடா உற்பத்தி ஆலை செக் தொழிலாளர்களும் அடுத்த மாதம் கூலிகளுக்காக வேலைநிறுத்தத்தில் இறங்க தயாரிப்பு செய்து வருகிறார்கள்.

மெக்சிகோவில் தொழிலாளர்களின் போராட்டங்கள் பரவி வருகின்ற நிலையில், இந்த போராட்டங்கள் வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி தொழிலாளர்களின் ஒரு சர்வதேச போராட்டமாக அபிவிருத்தி அடைந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக, மக்கில்லாடோரா என்றழைக்கப்படும் இடத்தில் 70,000 வரையிலான தொழிலாளர்கள் டெக்சாஸ் பிரௌன்ஸ்வில் இல் இருந்து அமெரிக்க-மெக்சிக்கன் எல்லையை ஒட்டிய மத்தாமோரொஸில் தொடர்ச்சியாக திடீர் திடீரென தன்னிச்சையான வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளனர்.

இந்த தொழிலாளர்களுக்கு, வாகனத் தொழில்துறை மற்றும் பிற தொழில்துறைகளுக்கான பாகங்களை உற்பத்தி செய்ய மணிக்கு 75 சென்ட் அளவுக்கு மிகக் குறைவாக வழங்கப்படுகிறது. இவர்கள் 20 சதவீத சம்பள உயர்வு மற்றும் 1,700 டாலர் போனஸ் கோரி வருகின்றனர். அவர்களின் நடவடிக்கை ஏற்கனவே எல்லையைக் கடந்து செல்லும் முக்கிய பாகங்களின் ஏற்றுமதியைக் குறைத்துள்ளதுடன், மிச்சிகன், ஒன்டாரியோ, கனடா மற்றும் பிற இடங்களில் ஃபோர்ட் மற்றும் ஜிஎம் உற்பத்தி ஆலைகளில் உற்பத்தியை மெதுவாக்கி உள்ளது.

தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிறுவனங்களில் மோர்கன் ஸ்டான்லி மற்றும் கோல்ட்மன் சாச்ஸ் இன் முன்னாள் முதலீட்டு வங்கியாளர் லென் டில்டனுக்குச் சொந்தமான ஆபர்ன் ஹில்ஸ் இல் அமைந்துள்ள மிச்சிகனை மையமாக கொண்ட டுரா ஆட்டோமோட்டிவ் நிறுவனமும் உள்ளடங்கும், இதன் நிகர மதிப்பு 830 மில்லியன் டாலர் ஆகும். ஜிஎம், ஜோன்சன் கண்ட்ரோல்ஸ் மற்றும் கனடாவை மையமாக கொண்ட மாக்னா (Magna) ஆகியவற்றின் முன்னாள் உதிரி பாகங்கள் பிரிவான டெல்பி உட்பட வாகன உதிரிபாகங்களின் முதன்மை வினியோகஸ்தர்களின் இருப்பிடமாக மத்தாமோரொஸ் விளங்குகிறது.

ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் ஒரு சுவர் கட்டமைக்க விரும்புகின்ற நிலையில், மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து வரும் புலம்பெயர்ந்தவர்களை வேட்டையாடி வருகின்ற நிலையில், ஜனநாயகக் கட்சியினர் "எல்லை பாதுகாப்புக்கு" அவர்களின் கடமைப்பாடுகளைப் பிரகடனப்படுத்தி இருப்பதுடன் சேர்ந்து, அமெரிக்காவை மையமாக கொண்ட பெருநிறுவனங்களோ எந்த பிரச்சினையும் இன்றி எல்லையைக் கடந்து அவற்றின் பண்டங்களை முன்னும்-பின்னும் நகர்த்தி வருகின்றன. “பிரௌன்ஸ்வில்-மத்தாமோரொஸ் எல்லை வளாக" சுதந்தர வர்த்தக மண்டலம் நான்கு சர்வதேச பாலங்களையும், ஒரு சர்வதேச இரயில் போக்குவரத்தையும் கொண்டுள்ளது, இது ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 1.5 பில்லியன் டாலர் பண்டங்களைக் கையாள்கிறது.

துணிச்சலான மத்தாமோரொஸ் தொழிலாளர்கள், வறிய கூலிகள் மற்றும் அடிமை-உழைப்பு நிலைமைகளை உருவாக்கி உள்ள நிறுவன தொழிற்சங்கங்களை எதிர்த்து வேலைநிறுத்த குழுக்களை உருவாக்கி உள்ளனர். அவர்கள் தங்களின் போராட்டத்தில் ஒன்றிணையுமாறு அமெரிக்க தொழிலாளர்களுக்கு முறையீடு செய்ய அமெரிக்க எல்லைக்கு அணிவகுத்துள்ளனர். ஊடக இருட்டடிப்புகளின் முன்னால், வேலைநிறுத்தம் செய்து வரும் மெக்சிகன் தொழிலாளர்களுக்கு WSWS குரலையும் முன்னோக்கையும் வழங்கியுள்ளது.

அவர்களின் போராட்டம் அமெரிக்காவில் வாகனத்துறை தொழிலாளர்களை உத்வேகப்படுத்தி உள்ளது. WSWS வாகனத்துறை தொழிலாளர் செய்தி இதழுக்கு எழுதிய ஒரு மின்னஞ்சலில் ஓஹியோ டொலெடொவின் பியட் கிறைஸ்லர் ஜீப் ஆலை தொழிலாளி ஒருவர் எழுதினார்: “மெக்சிகோவின் நிலைமை, எங்களுக்கு நடவடிக்கையில் இறங்குவதற்கான அழைப்பாக இருந்தது. நாங்கள் ஓர் ஒப்பந்தத்தின் கீழ் வேலை செய்து வருகிறோம் அது எழுதப்பட்டிருக்கும் காகிதத்தின் மதிப்புக்குக் கூட அது பெறுமதியானது இல்லை. எங்கள் [தொழிற்சங்க] தலைமையின் உயர்மட்ட ஊழல் எங்களுக்கு விற்கப்பட்ட இந்த அழுகிய ஒப்பந்தத்துடன் நேரடியாக பிணைந்துள்ளது. நாங்கள் இங்கே வீதிகளில் இறங்கி இருக்க வேண்டும்... எங்களின் மெக்சிகோ சகோதர சகோதரிகளுக்காக நாங்கள் எந்தளவுக்கு மிகவும் பெருமைப்படுகிறோம் என்பதை தயவுசெய்து அவர்களுக்குத் தெரிவியுங்கள். அவர்கள் உண்மையான வீரர்கள்! அவர்களின் ஆர்ப்பாட்டத்தில் இணைய எல்லையில் நான் அவர்களைச் சந்திக்க விரும்புகிறேன். உத்வேகத்திலும் நம்பிக்கையிலும் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம் அவர்கள் பலமாக இருக்க வேண்டும்! வாழ்த்துக்கள்!”

ஒருங்கிணைந்த வாகனத்துறை தொழிலாளர் சங்கம் (UAW) மற்றும் அதன் கனேடிய சம-தரப்பு சங்கம் யூனிஃபொர் ஆகியவற்றின் பிற்போக்குத்தனமான தேசியவாத பிரச்சாரத்தை நிராகரித்து ஒருங்கிணைய அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். மத்தாமோரொஸ் தொழிலாளர்கள் எல்லையை நோக்கி அணிவகுத்து கொண்டிருக்கையில், யூனிஃபொர் தலைவர் ஜெர்ரி டயஸ் “மெக்சிகன்-தயாரிப்பு” கார்களைப் புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளார்.

ஓர் அமெரிக்க-தயாரிப்பு கார் —அல்லது ஒரு கனேடிய தயாரிப்பு கார்—எந்த விதத்திலும் ஒரு மெக்சிக்கன்-தயாரிப்பு காரை விட சிறந்தது என்றெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு நவீன வாகனம், உலகெங்கிலும் மூலப்பொருட்களைச் சுரங்கங்களில் இருந்து தோண்டி எடுத்து பக்குவப்படுத்திய தொழிலாளர்களுக்கு அப்பாற்பட்டு, டஜன் கணக்கான நாடுகளின் தொழிலாளர்களால் ஒன்றுசேர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட 30,000 கணக்கான பாகங்களால் தயாரிக்கப்படுகிறது. நாடுகடந்த பெருநிறுவனங்கள் ஒரு தனிப்பொருளை தயாரிப்பதற்காக, டசின் கணக்கான நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதுடன் மிக அதிக இலாப விகிதங்களைத் தேடி உற்பத்தியை உலகெங்கிலும் உற்பத்தியை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு மாற்றுகின்றது.

வேலைகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களை அழிப்பதற்காக வாகனத்துறை முதலாளிமார்களுடன் தொழிற்சங்கங்கள் சுயமாக ஒத்துழைத்து வருவதை மூடிமறைக்க அவை நீண்டகாலமாக தேசியவாதத்தைப் பரப்பி வந்துள்ளன, அதேவேளையில் தொழிற்சங்க நிர்வாகிகளோ பல்வேறு பெருநிறுவன தொழில்-நிர்வாக திட்டங்களின் மூலமாக பாய்ச்சப்படும் பணம் மற்றும் கையூட்டுகளின் வடிவில் தொழிலாளர்களிடம் இருந்து உறிஞ்சப்படும் கூடுதல் இலாபங்களில் ஒரு பகுதியைப் பெறுகின்றனர்.

அமெரிக்கா மற்றும் கனடாவின் தொழிலாளர்கள் பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கங்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, உலகளாவிய வாகனத்துறை நிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் உலகெங்கிலுமான தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி விடுவார்களோ என்று அஞ்சி, மத்தாமோரொஸ் போராட்டத்தைச் செய்தி ஊடகம் இருட்டடிப்பு செய்வதை UAW சங்கம் மற்றும் யூனிஃபொர் சங்கமும் நடைமுறைப்படுத்துகின்றன.

துல்லியமாக செய்ய வேண்டியது இது தான். அமெரிக்கா மற்றும் கனடாவில் ஐந்து ஆலைகளை மூடுவதற்கும் மற்றும் சம்பளத்தில் உள்ள அண்மித்து 15,000 உற்பத்தி தொழிலாளர்களின் வேலைகளை நீக்குவதற்குமான உலகளாவிய வாகனத்துறை உற்பத்தியாளர்களின் திட்டங்களுக்கு எதிராக போராட, டெட்ராய்டில் கட்டப்பட்டு வருகின்ற ஜெனரல் மோட்டார்ஸ் தலைமையகத்தில் நடக்கவுள்ள பெப்ரவரி 9 ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரிக்குமாறு அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டம் சாமானிய தொழிலாளர் குழுக்களுக்கான வழிகாட்டி குழுவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இக்குழு ஆலைமூடல்களுக்கு எதிராக WSWS வாகனத்துறை தொழிலாளர் செய்தியிதழ் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட டிசம்பர் 9 ஆம் தேதி உடனடி கூட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டதாகும்.

அக்கூட்டம், "வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தி தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அமேசன் தொழிலாளர்கள், சேவை பணியாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கான மற்றும் ஒத்துழைப்பதற்கான வழியை ஸ்தாபிப்பதற்கும் மற்றும் அமெரிக்க தொழிலாளர்கள் கனடா, மெக்சிகோ மற்றும் உலகின் ஏனைய இடங்களில் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுவதற்காக போராடுவதற்காகவும்", UAW சங்கம் மற்றும் யூனிஃபொர் சங்கத்திலிருந்து சுயாதீனமாக, சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டமைப்பதற்காக போராட ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

வாகனத்துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஏனைய தொழிலாளர்களின் போராட்டங்களின் புறநிலையான உந்துதல், அனைத்து துறைகளையும் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தினை உள்ளீர்த்து ஒரு பொது வேலைநிறுத்தத்தை நோக்கிச் செல்கிறது. இந்த புறநிலையான இயக்கம் நனவுபூர்வமாக அபிவிருத்தி செய்யப்பட்டு, தொழிலாளர்களின் அதிகாரத்திற்காகவும் உலக பொருளாதாரத்தின் சோசலிச மறுஒழுங்கமைப்பிற்கான ஓர் அரசியல் போராட்டமாகவும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.