ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: Action committee of Abbotsleigh Estate workers holds inaugural meeting

இலங்கை: எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழு ஆரம்பக் கூட்டத்தை நடத்தியது

By our correspondents 
18 December 2018

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அரசியல் வழிகாட்டலுடன் தோட்டத் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுவானது கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அதன் ஆரம்ப கூட்டத்தை நடத்தியது.

எபோட்சிலி தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் உள்ள ஒரு அறையில் நடைபெற்ற இக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக, குழுவின் குறிக்கோள்கள், நடவடிக்கை குழுவுக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையேயான வேறுபாடு மற்றும் சமீபத்திய வேலைநிறுத்த போராட்டத்தின் படிப்பினைகளைப் பற்றியும் கலந்துரையாடுவதேயாகும். அண்மையில், பத்தாயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் சம்பளஉயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த புதன்கிழமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுமாறு அழைப்பு விடுத்தது. ஆனால் எதிர்ப்புக்கள் மேலும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்தன.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் (NUW) தோட்டத் தலைவரான பி. முனுசாமி, கூட்டத்தில் கலந்து கொட்ண்டவர்களைப் பற்றி தோட்ட நிர்வாகத்துக்கும் பொலிசுக்கும் தகவல் கொடுக்கப்போவதாக கூறி அச்சுறுத்தல் விடுத்தன் மூலம் கூட்டத்தை கீழறுப்பதற்கு முயற்சித்தார். தொழிலாளர் தேசிய சங்கம், அதனோடு இணைந்த ஜனநாயக மக்கள் முன்னணியும் (ஜ.தொ.கா) மலையக மக்கள் முன்னணியும் (ம.ம.மு.), வேலை நிறுத்தத்தை நேரடியாகவே எதிர்த்தன. ஆனால் அவற்றின் அங்கத்துவ தொழிலாளர்கள் பலர் வேலை நிறுத்த்தில் ஈடுபட்டனர். தற்போது ஆகக் குறைந்த தினசரி ஊதியமாக 500 ரூபாய் அல்லது 2.80  அமெரிக்க டொலர் பெறுகின்ற தோட்டத் தொழிலாளர்களின் கிளர்ச்சியைக் கண்டு இ.தொ.கா. உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் பீதியடைந்துள்ளன.

அக்டோபர் 26 அன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பு சட்டத்தை மீறி, ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததை அடுத்து  அதிகரித்துவந்த கொழும்பு அரசியல் நெருக்கடியின் பின்னர், இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது. சகல தோட்டத் தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை ஏதாவதொரு முதலாளித்துவ பிரிவினருடன் ஒருங்கிணைந்துள்ளன. அவை தொழிலாளர்களின் சுயாதீன இயக்கத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. தொழிலாளர்களின் கிளர்ச்சியை முன்கூட்டியே முடக்குவதற்காகவே இ.தொ.கா. இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்தது.

சோ.ச.க. உறுப்பினர்கள், ஞாயிறு நடந்த கூட்டத்தில், NUW இன் கம்பனிசார்பு பாத்திரத்தினை அம்பலப்படுத்தியதன் மூலம், NUW ஆத்திரமூட்டல்காரனை எதிர்த்து, அவரைப் பின்வாங்கச் செய்தனர். அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், ஒரு தொகை அப்போட்ஸ்லீ தோட்டத் தொழிலாளர்கள் சோ.ச.க. உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்களுடன்  இணைந்து கூட்டத்தில் பங்கு பற்றினர்.


சுந்தரலிங்கம்

எபோட்சிலி தோட்டத்தினைச் சேர்ந்த ஒரு தொழிலாளியான சுந்தரலிங்கம் கூட்டத்துக்கு தலமைதாங்கினார். சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் பானி விஜேசிறிவர்தன பிரதான அறிக்கையை முன்வைத்தார், இது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவரது உரையை எம். தேவராஜா தமிழில் மொழிபெயர்த்தார்.

விஜேசிறிவர்தன, சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தினதும் புரட்சிகர வாழ்த்துக்களை தோட்டத் தொழிலாளர்களுக்கும் எபோட்சிலி நடவடிக்கைக் குழுவுக்கும் தெரிவித்ததோடு, அவர்களின் உறுதியான போராட்டத்தை பாராட்டினார். வாழ்க்கைக்கேற்ற சம்பளம், சிறந்த தொழில் மற்றும் வாழ்க்கை நிலமைகளுக்காக, கம்பனிகளுக்கும் அரசாங்த்துக்கும் எதிரான அவர்களின் போராட்டத்துக்கு சோ.ச.க. தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்தார்.

தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ அரசு, பெருநிறுவனங்கள் மற்றும் முழு முதலாளித்துவ ஸ்தாபனத்திற்குமே எதிராக சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ந்து வரும் கிளர்ச்சியின் ஒரு பாகமாகவே, இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம் வெடித்துள்ளது என்று பேச்சாளர் விளக்கினார்.

"கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவில் டெட்ரொயிட் மாகாணத்தில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில், ஜெனரல் மோடர்ஸ் ஆலை மூடல்களுக்கு எதிராக போராடுவதற்காக, நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவதற்கான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  பிரான்சில் ஆரம்பித்த "மஞ்சள் சீருடை"  இயக்கம் தற்போது ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பூராவும் பரவி வருகிறது. இந்தியத் தொழிலாளர்கள் வர்க்கப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.

பூகோள ரீதியில் இந்த வர்க்கப் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதில் உலக சோசலிச வலைத் தளத்தின் பங்கை விஜேசிறிவர்தன சுட்டிக்காட்டினார். தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து பிரதிபலிக்கும் வகையில் உலக சோசலிச வலைத் தள வாசகர்களால் எழுதப்பட்ட சில கருத்துக்களை மேற்கோள் காட்டிய அவர், தொழிற்சங்கங்களுக்கு எதிராக எபோட்சிலி தொழிலாளர்கள் ஒரு நடவடிக்கை குழுவை உருவாக்க முன் முயற்சி எடுத்துள்ளதை அவர்கள் வரவேற்றுள்ளார்கள் என்பதை தெளிவுபடுத்தினார்.

"ஹட்டனில் மல்லியப்பூ சந்தியில் நீங்கள் ஒரு சிறிய குழுவினராக சேர்ந்து போராடியபோது, உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள் என்று நீங்கள் நினைத்திருக்கமாட்டீர்கள், ஆனால் நீங்கள் அத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றீர்கள்." 

இந்தக் கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பங்குபற்றல் பற்றி வெளிப்பட்ட கவலைகள் குறித்து பேசிய போது, "இது ஒரு எண்ணிக்கை பற்றிய விடயமல்ல" என்று கூறிய பேச்சாளர் மேலும் தொடர்ந்தார். இங்கு எது முக்கியத்துவமான விடயம் என்றால், தொழிலாளர்களின் சுயாதீனமான ஒழுங்கமைப்பு மற்றும் வர்க்க நனவே ஆகும். என அவர் கூறினார். தொழிலாளர்கள் தங்கள் சொந்தப் போராட்டங்களில் இருந்து பெறவேண்டிய படிப்பினைகளின் முக்கியத்துவத்தினையும் அதை ஒடுக்குவதற்காக தொழிற்சங்கங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக எவ்வாறு வேலை நிறுத்த இயக்கம் எழுச்சி பெற்றது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.


பானி விஜேசிறிவர்தன கூட்டத்தில் உரையாற்றுகிறார்

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு எதுவுமே கூறவில்லை, என்று விஜேசிறிவர்த்தன சுட்டுக்காட்டினார். "தோட்ட முதலாளிமாருடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் சகல முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. பின்னர் அவை தொழிற்சங்கங்களால் உங்கள் மீது சுமத்தப்படுகின்றன. "பூகோளமயப்படுத்தப்பட்ட உற்பத்தி நிலமைகளின் கீழ், உலகம் பூராவும் உள்ள தொழிற்சங்கங்கள் அனைத்தும் முதலாளிகளினதும் மற்றும் அரசாங்கங்களினதும் ஒரு கருவியாக மாறிவிட்டன.

"இலங்கையில் நீங்கள் அதிக ஊதியம் கேட்டு வேலை நிறுத்த்தில் ஈடுபடும்போது, நீங்கள் போராடுவது தோட்டக்கம்பனிகளுக்கு எதிராக மட்டுமல்ல, இந்த பூகோள உற்பத்திச் சங்கலியுடன் பிணைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கூட்டுத்தாபனங்களுக்கும் எதிராகப் போராடுகிறீர்கள். அதனாலேயே நாங்கள் ஒரு சர்வதேச வர்க்கமாக இருக்க வேண்டியுள்ளது. தொழிற்சங்கங்கள் இதனை எதிர்க்கின்றன." என அவர் கூறினார்.

ஒரு நடவடிக்கை குழுவானது, ஜனநாயக கலந்துரையாடலின் மூலமே தனது முடிவுகளுக்கு வந்தடைகின்றது. இதுவே தொழிற்சங்கத்தில் இருந்து வேறுபட்டதாகும். மிவும் முக்கியமாக, முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத நெருக்கடிகள், நடவடிக்கை குழு சர்வதேச சோசலிச முன்னோக்கை அடித்தளமாக கொண்டிருப்பது அவசியம் என்பதை அர்த்தப்படுத்துகிறது.

கூட்டம் இரண்டு தீர்மானங்களை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

முதலாவது தீர்மானம், "முதலாளித்துவ அரசாங்கங்கங்களையும் முதலாளிமார்களையும் தோற்கடி" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. "தொழில்கள், கௌரவமான ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களைப் பாதுகாப்பதற்கு ஒரு ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்க இயக்கத்தினை" கட்டியெழுப்புவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டது. தொழிலாளர்களின் உரிமைகள் இனிமேல் தொழிற்சங்கங்களால் பாதுகாக்கப்படப்போவதில்லை என்பதை இது உறுதிப்படுத்துகின்றது. சகல தோட்டங்கள், தொழிற்சாலைகள் மற்றம் வேலைத் தளங்களில் உள்ள தொழிலாளர்களால் ஜனநாயக தேர்தல் முறை மூலம், சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் குழுக்கள், முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் முதலாளிகளின் தாக்குதல்களுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கான போராட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கு தலைமை தாங்க வேண்டியுள்ளது.

இரண்டாவது தீர்மானமானத்தில், பிரான்ஸ் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் "மஞ்சள் சீருடை" இயக்கத்துக்கும், அமெரிக்காவில் ஜெனரல் மோட்டர்ஸ் தொழிலாளர்களின் 15,000 தொழில்களைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க சோ.ச.க. முன்னெடுக்கும் பிராச்சாரத்துக்கும் அப்போஸ்ட்லி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழு தனது உறுதியான ஆதரவை பிரகடனம் செய்கின்றது. இந்தியாவில், சோடிக்கப்பட்ட வழக்கில் சிக்கியுள்ள மாருதி - சுசுகி தொழிலாளர்களை விடுதலை செய்வதற்கு, சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் தொழில்துறை சக்தியை அணிதிரட்டுமாறும் அது அழைப்பு விடுக்கின்றது.

கலந்துரையாடலின் போது, நடவடிக்கை குழுவை அமைப்பதற்கு முன்நின்ற சிவபாக்கியம், "வருமானப் பங்கீட்டு முறை" பற்றி பேசினார். இதன் மூலம் தொழிற்சங்கங்களும் மற்றும் கம்பனிகளும் தொழிலாளர்கள் மீது சுமைகளைச் சுமத்துவதற்கு முயற்சிக்கின்றன. அவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் அவை குத்தகை விவசாயிகளாக மாற்ற முயற்சிக்கின்றன.

"தாங்கள் சம்பளப் பிரச்சினை பற்றி கலந்துரையாடி வருவதாகவும், ஒரு தீர்வினை எட்ட முடியாவிட்டால், தோட்டங்களைத் தொழிலாளர்கள் மத்தியில் பிரித்துக்கொடுக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கூறிவருகின்றன. இப்போது, தோட்டங்கள் வெளிப் பிரதேச தொழிலாளர்களால் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் இந்த முறை (வருமானப் பங்கீடு) அறிமுகப்படுத்தப்படும் போது, அந்த வேலைகளையும் நாங்கள் தான் செய்ய வேண்டியிருக்கும். இந்தப் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டால், நாங்கள் ஒரு மாத்தத்துக்கு 80,000 ரூபாய்களை ஈட்ட முடியும் என்ற அவர்களின் கூற்றை நாங்கள் நம்பவில்லை," என அவர் கூறினார்.

ஒரு கௌரவமான வாழ்க்கைக்கு, என்ன சம்பளம் அவசியம் என்பதைத் தீர்மானிக்கும் போது, ஒரு தொகை காரணிகள் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என சிவபாக்கியம் கூறினார். தற்போது, தொழிலாளர்களின் பிள்ளைகளை பாடசாலை வருடாந்த சுற்றுலாவுக்கு அனுப்பவதற்கு எங்களது தினசரி உணவினை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கின்றது, என அவர் தெரிவித்தார். பெண் தொழிலாளர்கள் இந்த நடவடிக்கை குழுவில் பங்கெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தின் பின்னர் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய சுந்தரலிங்கம் கூறியதாவது: "நான் கடந்த 20 அல்லது 25 வருடங்களாக தொழிற்சங்க அலுவலர்களுடன் வேலை செய்துள்ளேன். ஆனால், ஜனாநாயக ரீதியான தீர்மானங்கள் எடுக்கும் மற்றும் தொழிலாளர்களை அரசியல் ரீதியில் கல்வியறிவு ஊட்டும் இதுமாதிரியான ஒன்று கூடல்களில் கலந்து கொண்டதேயில்லை. நான் முதலாளித்துவ சுரண்டல் என்ன என்று கற்றுக் கொண்டுள்ளேன். முதலாளிகள் தங்களின் இலாபத்தை நோக்கமாக கொண்டே எமது சம்பளங்களைத் தீர்மானிக்கின்றார்கள், எமது சிறந்த வாழக்கைக்கு என்ன தேவை என்பதை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. இது தான் அவர்கள் அழைப்பு விடுக்கும் தீர்வாகும். உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபடவேண்டும். ஒற்றுமை இன்றி எங்கள் கோரிக்கைகளை வெல்ல முடியாது."