ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan plantation workers defy union and continue to strike

இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொழிற்சங்கத்தை மீறி தொடர்கிறது

By Pani Wijesiriwardena 
13 December 2018

இலங்கையில் 100 சதவிகித சம்பள உயர்வு கோரி பல்லாயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முடக்குவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) செவ்வாயன்று முயற்சித்தது. டிசம்பர் 4 அன்று தொடங்கிய வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்களுக்கு நேரடி எதிராக, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொடர்ந்தனர்.

ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுடன் மூடிய அறைக்குள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான், வேலை நிறுத்தத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் போராட்டத்தை நசுக்குவதற்கு தொழிற்சங்கம் முயற்சிக்கிறது என்பதை தொண்டமான் தெளிவுபடுத்தினார். டிசம்பர் 19 அன்று இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் நடக்கவுள்ள ஒரு சந்திப்பில் போராட்டத்திற்கு தீர்வுகாண சிறிசேன வழங்கிய தெளிவற்ற வாக்குறுதிகளை தொண்டமான் பாராட்டினார்.

“தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும், அதே வேளை தோட்டங்களும் காப்பாற்றப்பட வேண்டும்” என ஜனாதிபதி கூறியதாக தொண்டமான் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தை ஜனாதிபதி சந்திப்பார் என்றும் எங்கள் கோரிக்கைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். “நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இன்றோடு எங்களது வேலைநிறுத்தத்தை முடித்துக்கொள்ளுமாறு என்று அவர் கேட்டுக் கொண்டார். அவருடைய வேண்டுகோளுக்கு நாம் உடன்பட்டு, வேலை நிறுத்தத்தை நிறுத்திவிட்டோம்."

இந்த கேவலமான சரணாகதிக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் விரோதத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர் மற்றும் தோட்டப் பிரதேசங்கள் முழுவதும் அணிதிரண்டனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) தலையீட்டிற்கு பின்னர் உருவாக்கப்பட்ட எபோட்சிலி தோட்ட தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழு நடத்திய ஒரு எதிர்ப்பு போராட்டத்தில் பன்மூர் தோட்டத் தொழிலாளர்களும் இணைந்துகொண்டனர்.


ஹட்டன் மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியினர்

மத்திய மலையக மாவட்டத்தின் ஒரு பெரும் நகரான ஹட்டனில் மல்லியப்புச் சந்தியில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். "அனைத்து தொழிற்சங்கங்களும் எங்கள் போராட்டத்தை காட்டிக்கொடுத்து விட்டன," "கூட்டு ஒப்பந்தம் வேண்டாம்" "தொழிற்சங்கங்களை விட்டு வெளியேறு," "தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு," "தோட்டத் தொழிலாளர்களுக்கு 40,000 ரூபா மாதா சம்பளம் வழங்கு" "தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடு", "உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

சோ.ச.க. அரசியல் குழுவின் உறுப்பினர் எம். தேவராஜா, தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில், தொழிற்சங்கங்களுக்கு எதிராக தோட்டங்களில் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புமாறு அழைப்பு விடுத்தார். "அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தை காட்டிக் கொடுத்துள்ளன" என கூறிய அவர், "தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை தொழிற்சங்கங்களால் வெல்ல முடியாது என்பதை இது தெளிவுபடுத்துகிறது" என மேலும் தெரிவித்தார்.

தேவராஜா தொடர்ந்தார்: "தொழிலாளர்களுக்கு புதிய அமைப்புகளும் ஒரு புதிய முன்னோக்கும் தேவை. ஒவ்வொரு தோட்டத்திலும் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். தோட்டங்கள் தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் நிறுவப்பட வேண்டும். தொழிலாளர்கள் போராட்டங்கள் சர்வதேச அளவில், குறிப்பாக பிரான்சிலும் அமெரிக்காவிலும், வெடித்துள்ளன. இந்த தொழிலாளர்களுடனும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடனும் நமது போராட்டத்தை ஐக்கியப்படுத்த வேண்டும்."

மத்திய மாகாணத்தில் டிகோயா நகரில் உள்ள சஞ்சிமலை மேல் மற்றும் கீழ் பிரிவுகளில் இருந்து வந்த தொழிலாளர்கள், இ.தொ.கா.வுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினர். "தொண்டமான் தோட்ட தொழிலாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக துரோகம் செய்து விட்டார்" என்று அவர்கள் கோஷமிட்டனர்.

தலவாக்கலை, மடக்கும்புற தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிற்சாலையின் முன் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில் தொண்டமானின் உருவப் பொம்மையை எரித்தனர். தொண்டமான், "தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய அட்டை" என்று கண்டனம் செய்தனர்.

தலவாக்கெலைக்கு அருகிலுள்ள தயகம நகரிலுள்ள தோட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சாமிமலை பகுதி தொழிலாளர்கள் மஸ்கெலியாவுக்கான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அருகிலுள்ள நல்லத்தன்னி தொழிலாளர்களும் வீதியில் கூடினர்.

இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிக ஒடுக்கப்பட்ட பிரிவினரான தோட்டத் தொழிலாளர்கள், தற்போது தினசரி அடிப்படை சம்பளமாக 500 ரூபாய் (2 அமெரிக்க டொலர்) பெறுகின்றனர். அதை அவர்கள் இருமடங்காக வழங்க வேண்டும் என்று கோருகின்றனர்.

தோட்ட முதலாளிகள், தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கையை மீண்டும் மீண்டும் நிராகரித்துள்ளனர். இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம், கடந்த வெள்ளியன்று ஒரு அறிக்கையை வெளியிட்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகளை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்தது.

தொழிற்சங்கங்களின் உதவியுடன் பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம் ஒரு "வருவாய் பகிர்வு" முறைமையை சுமத்த முயற்சிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட தேயிலைச் செடிகள் ஒரு தொழிலாளி குடும்பத்திற்கு பராமரிக்கவும் அறுவடை செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் செலவுகள் மற்றும் இலாபங்கள் கழிக்கப்பட்ட பின்னர் வருமானத்தின் ஒரு பகுதியை தொழிலாளர்களுக்கு கொடுக்கின்றன. இந்தப் பிரேரணை தொழிலாளர்களை குத்தகை-விவசாயியாக மாற்றுவதையும்  மற்றும் ஊழியர் சேமலாப நிதி உட்பட மிக அற்ப சலுகைகளையும் வெட்டித் தள்ளுவதையும் இலக்காக கொண்டுள்ளது.

இ.தொ.கா. உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான எந்தவொரு பிரச்சாரத்தையும் மீண்டும் மீண்டும் எதிர்த்து வந்துள்ளன. தொழிற்சங்கங்களுக்கு எதிராகவே 100 சதவிகித ஊதிய உயர்வுக்கான  இயக்கம் உருவாகியுள்ளது.

தொழிலாளர்கள் மத்தியில் பெருகிவரும் எதிர்ப்பை கட்டுப்படுத்த இ.தொ.கா. இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்தது. அதே நேரம், வேலை நிறுத்தம் ஏனைய தொழிலாளர் பிரிவினர் மத்தியில் பரவுவதை தடுக்க அனைத்தையும் செய்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமானது, முழு தொழிலாள வர்க்கமும் அரசாங்கத்துடனும் அது பாதுகாக்கும் முதலாளித்துவ முறைமையுடனும் மோதலுக்கு செல்வதற்கு ஒரு முக்கிய குவிமையமாக மாறுவதை தடுப்பதில் இ.தொ.கா. உறுதியாக உள்ளது.

ஜனாதிபதி சிறிசேன அக்டோபர் 26 அன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கி, மஹிந்த இராஜபக்ஷவை அரசியலமைப்புக்கு முரணான ஒரு அரசியல் சதியின் மூலமாக பதவியில் அமர்த்தியதால ஏற்பட்ட தற்போதைய நெருக்கடிக்குள், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான தலையீட்டை கண்டு முழு அரசியல் ஸ்தாபனமும் பீதியுற்றுள்ளது.

தோட்டத் தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளாக செயல்படுகின்றன, அவை  ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) தலைமையிலான அடுத்தடுத்த அரசாங்கங்களின் பங்காளியாக இருந்து வருகின்றன.

விக்கிரமசிங்க அகற்றப்பட்ட பின்னர், தொண்டமானுக்கு புதிய அரசாங்கத்தில் ஒரு அமைச்சரவை பதவி வழங்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை வழங்க இராஜபக்ஷ "உறுதியளித்ததாக" அவர் கூறினார்.

தேசிய தொழிலாளர் சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி உட்பட ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்கள், விக்கிரமசிங்கவின் ஐ.தே.க.வின் பங்காளிகளாக இருக்கின்றன. அவை அனைத்துமே, சர்வதேச நாணய நிதியம் கொழும்பிற்கு ஆணையிடும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

கடந்த கால பதிவுகள், தொண்டமான் மற்றும் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்துக்கள் பொய்யானவை என்று நிரூபிக்கிறது.

செவ்வாயன்று தோட்ட உரிமையளர் சங்கம் ஒரு புதிய கூட்டு உடன்படிக்கைக்காக தொழிற்சங்கங்களுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த மறுத்துவிட்டன. தொழிலாளர்கள் "மரண அச்சுறுத்தல்கள்" விடுத்துள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் கூறியது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு, வேலைநிறுத்தம் செய்யும் தோட்டத் தொழிலாளர்களை நசுக்குவதற்கான அரசாங்க அடக்குமுறைக்கு ஒரு தெளிவான அழைப்பாக உள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச எழுச்சியின் ஒரு பகுதியாகும், அது உலக முதலாளித்துவத்தின் பொறிவிலிருந்து தோற்றுவிக்கப்படுகிறது. முன்னோக்கி செல்ல வேண்டுமெனில், தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொண்டு நடவடிக்கை குழுக்கள் உட்பட புதிய வடிவிலான அமைப்புகளை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அனைத்துலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக முழு தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டம் அவசியமாகும்.