ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Parti de l’égalité socialiste holds Paris meeting on “yellow vest” protests

“மஞ்சள் சீருடை” போராட்டங்கள் குறித்து சோசலிச சமத்துவக் கட்சி (PES) பாரிஸில் நடாத்திய பொதுக்கூட்டம்

By our reporter 
18 December 2018

பிரான்சில் தற்போது நடந்துவரும் “மஞ்சள் சீருடை” போராட்டங்கள் குறித்து சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste -  PES) ஞாயிறன்று பாரிஸில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியது. “மஞ்சள் சீருடை போராட்டங்களுக்கான புரட்சிகர முன்னோக்கு என்ன?” என்ற தலைப்பிலான இந்த கூட்டத்தில் பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சி (SEP), ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei  –SGP) மற்றும் பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சியில் (PES) இருந்து முக்கிய பேச்சாளர்கள் பங்குபற்றி உரையாற்றினர். இது பேர்லின், மொண்ட்ரீயால், மற்றும் பிரிட்டனில் நேரடி மறுஒளிபரப்பு செய்யப்பட்டது.

கூட்டத்தின் ஒரு பகுதியினர்

பல “மஞ்சள் சீருடை” போராட்டக்காரர்களும், பாரிஸ் தமிழ் சமூகத்தின் உறுப்பினர்களும் உட்பட இந்த கூட்டத்தில் பல டசின் பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பேச்சாளரின் குறிப்பைத் தொடர்ந்து கேள்விகளும் பங்களிப்புகளும் அடங்கிய ஒரு உயிரோட்டமான கலந்துரையாடலும் அங்கு இடம்பெற்றது.

PES இன் சார்பில் அலெக்ஸ் லான்ரியே உரையாற்றியதோடு, மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டங்களை மதிப்பாய்வு செய்தார். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பிற்போக்குத்தன எரிபொருள் வரி ஏற்றங்களுக்கு எதிரான இந்த போராட்டம் ஒருசில வாரங்களிலேயே தீவிர வளர்ச்சி கண்டு, சமூக சமத்துவமின்மை மற்றும் நடைமுறையிலுள்ள  அமைப்புமுறைக்கு எதிரான, மற்றும் மக்ரோனின் இராஜினாமாவை கோருவதான ஒரு தொழிலாள வர்க்க இயக்கமாக உருவெடுத்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச எழுச்சியின் ஒரு பாகமாக இந்த மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டங்கள் இருப்பதோடு, தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் உட்பட, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிராக சுயாதீனமாக போராடுவதற்கு தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ளனர் என லான்ரியே விளக்கினார்.

1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கலைக்கப்பட்டமையானது “வரலாற்றின் முடிவையும்” சோசலிசத்திற்கான போராட்டம் இல்லாதுபோய்விட்டதையும் குறிக்கவில்லை என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) வலியுறுத்தல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். மாறாக, நடுத்தர வர்க்க “இடது” கட்சிகளினால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த தொழிலாளர் போராட்டங்களின் காலம் தான் முடிவுக்கு வந்துள்ளது.

மே 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தொழிற்சங்கங்களையும் அரசியல் ஸ்தாபகத்தையும் நிராகரித்து இந்த மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டம் எப்படி எழுச்சி கண்டது என லான்ரியே மதிப்பாய்வு செய்தார். ஏனென்றால், இந்த அமைப்புக்கள் இப்போராட்டங்களை அலட்சியம் செய்வனவாக அல்லது வெளிப்படையாக அவற்றிற்கு குரோதமானவையாக இருந்தன.

காலாவதியாகிப் போன மற்றும் குரோதமிக்க தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களை நிராகரித்து சுயாதீனமான, ஒரு சர்வதேச அளவிலான போராட்டத்தில் தொழிலாளர்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாக, தொழிலாள வர்க்கத்தினுள் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க PES அழைப்பு விடுத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அத்தகைய போராட்டங்களின் ஊடாகவும் மற்றும் அத்தகைய அமைப்புக்களை கட்டமைக்கையிலும், PES மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஏனைய ஐரோப்பிய பிரிவுகளும் தொழிலாள வர்க்கத்திடம் அதிகாரத்தை மாற்றுவதன் அவசியத்தை விளக்க தலையிடும்.

கிறிதோப் வாண்ட்ரேயர்

SGP இன் உதவி தேசிய செயலரும், ஜேர்மன் மீண்டும் பாசிசத்திற்கு திரும்புவது குறித்து எழுதப்பட்டதான, அவர்கள் ஏன் மீண்டும் திரும்பி வந்துள்ளனர்? (Why are they back again?) என்ற புத்தகத்தின் ஆசிரியருமான கிறிதோப் வாண்ட்ரேயர் அடுத்து பேசினார். அடுத்த ஆண்டு ஐரோப்பிய தேர்தல்களில் கலந்துகொள்ளும் பட்டியலில் தலைமை வேட்பாளராக இருக்கும் அவர் SGP இன் வாழ்த்துக்களை தெரிவித்து, ஊதிய வெட்டுக்கள் மற்றும் ஆலை மூடல்கள் குறித்து ஜேர்மன் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில், ஜேர்மனியிலும் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள தொழிலாளர்கள் மஞ்சள் சீருடை போராட்டங்களை ஆதரவுடனும் ஒற்றுமையுடனும் பின்பற்றி வந்தனர் என்று வாண்ட்ரேயர் கூறினார்.

ஜேர்மன் இராணுவவாதத்தினை நியாயபூர்வமானதாக்க முயலுவதையும், நாஜிசத்தின் குற்றங்களை மூடிமறைப்பதற்கு ஜேர்மன் கல்விச் சூழலில் வலதுசாரி தீவிரவாதிகள் எடுக்கவிருக்கும் முயற்சிகளையும் எதிர்க்கும் SGP இன் பிரச்சாரத்தை வாண்ட்ரேயர் மதிப்பாய்வு செய்தார். போர் மற்றும் பாசிசம் மீதான பொதுமக்கள் எதிர்ப்பைக் கடப்பதற்கான முயற்சியில் ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஹிட்லரிசத்தை மறுஸ்தாபகம் செய்வதை நோக்கி சென்றுள்ளது. தற்போது ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த நடைமுறையானது, குறிப்பிட்டு சொல்வதானால் பிரெஞ்சு பாசிச சர்வாதிகாரியான பிலிப் பெத்தானை பற்றிய மக்ரோன் சாதகமான குறிப்புகளை தெரிவிக்கும் அளவிற்கும் சென்றுள்ளதை அவர் குறிப்பிட்டார்.

மஞ்சள் சீருடை எதிர்ப்பைப் போல அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஜேர்மனியிலும் பெருமளவில் எதிர்ப்பு இருப்பதுடன், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் பரந்தளவிலான இதுவரை கட்டுப்படாத எதிர்ப்பை ஒரு சோசலிச மற்றும் போர் எதிர்ப்பு வேலைத்திட்டத்துடன் இணைப்பதற்கு முனையும் ஒரே அரசியல் கட்சியாக SGP இருப்பதாக குறிப்பிட்டார். SGP இன் பிரச்சாரம், ஜேர்மனி எங்கிலுமான பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்களிடையே ஒரு சக்திவாய்ந்த ஆதரவை பெற காரணமாக இருந்தது என்றும் வாண்ட்ரேயர் விளக்கமளித்தார்.

கிறிஸ் மார்ஸ்டன்

இறுதியாக, பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தேசிய செயலரான கிறிஸ் மார்ஸ்டன், ஒரு தசாப்த கால ஆழ்ந்த முதலாளித்துவ நெருக்கடி மற்றும் போருக்குப் பிந்தைய மஞ்சள் சீருடை போராட்டங்களின் இந்த எழுச்சியானது, முதலாளித்துவத்தின் தன்மை மற்றும் முதலாளித்துவ நெருக்கடி மீதான லியோன் ட்ரொட்ஸ்கியின் அடிப்படை கருத்தாக்கங்களை உறுதிப்படுத்தியதை அடிக்கோடிட்டுப் பேசினார். 80 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸில் நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கான இடைமருவு வேலைத்திட்டத்தில் அவர் குறிப்பிட்டது போல, முதலாளித்துவம் மரண நெருக்கடியில் உள்ளது. தீர்க்கமான கேள்வி என்னவென்றால், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமை பற்றியதாகும்.

பெரும்பாலான மஞ்சள் சீருடை போராட்டக்காரர்களுக்கு சோசலிசம் என்ற வார்த்தை ஆரம்பத்தில், சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்டை போல சிடுமூஞ்சித்தனமான பிழைப்புவாதிகளின் படங்களுடன் தொடர்புபட்டதாக இருந்திருக்க கூடும் என மார்ஸ்டன் தெரிவித்தார். என்றாலும், பிரெஞ்சு மற்றும் சர்வதேச நிதியியல் பிரபுத்துவத்திற்கு எதிராக போராடுகையில், பெரும் செல்வந்தர்களின் செல்வத்தை கைப்பற்றுவதற்கும், மற்றும் சோசலிச கொள்கைகளைப் பின்பற்றும் ஒரு தொழிலாளர்கள் அரசை கட்டமைப்பதற்கும் தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுவர்.

ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்றை பற்றி குறிப்பிடுகையில், ஸ்ராலினிசத்திற்கும், பப்லோவாதத்திற்கும் மற்றும் மத்தியதர வர்க்க தீவிரவாதப் போக்கிற்கும் எதிரான போராட்டத்தை அடிப்படையாக அது கொண்டிருந்தது என்று மார்ஸ்டன் வலியுறுத்தினார். இந்த அடித்தளத்திலேயே ICFI தொழிலாள வர்க்கத்தை அணுகுவதுடன் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு அணிதிரட்டப் போராடுகின்றது. ICFI இன் வரலாறு, சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் மற்றும் குட்டி முதலாளித்துவ போலி-இடது அரசியல் போன்றவை மார்க்சிசத்திற்கு எவ்வித பங்குமளிக்காது என்பதற்கான நிரூபணமாக இருப்பதுடன், மாறாக, மார்க்சிசம், சோசலிசம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அவர்களின் விரோதப் போக்கிற்கான நிரூபணமாக இருக்கின்றது என்று அவர் விளக்கமளித்தார். தொழிலாள வர்க்கத்தின் உண்மையான மார்க்சிச முன்னணிப் படையாக ICFI ஐ கட்டியெழுப்புவது தான் தற்போதைய பணியாகும்.

தொழிலாளர் போராட்டங்களில் நடவடிக்கைக் குழுக்களின் பங்கு என்னவாக இருக்க முடியும், ஜேர்மனிய தொழிலாளர்களின் அணுகுமுறை அதிவலதை நோக்கிய உத்தியோகபூர்வ அரசியலுக்கு மாறுவது, மற்றும் மஞ்சள் சீருடை இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் அரசியல் குணாம்சம் போன்ற கேள்விகளுக்கு பேச்சாளர்கள் பதிலளித்தனர்.

அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்காகவும், மற்றும் PES இடமிருந்து இலக்கியங்களை வாங்குவதற்காகவும் கூட்டம் நிறைவடைந்த பின்னரும் பார்வையாளர் காத்திருந்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆன்ட்ரியா என்பவர், பாரிஸில் அவர் வாழ்ந்து கொண்டிருந்த போது, பரந்த போக்குவரத்து வசதி இருந்ததால், ஆரம்பத்தில் எரிபொருள் விலை ஏற்றத்தைப் பற்றி அவர் கவலைப்படவில்லை, என்றாலும் தன்னை ஒரு “மஞ்சள் சீருடையாளர்” என்று கருதினார். அவர் பின்வருமாறு விளக்கமளித்தார்: “நானும் அதே வர்க்கத்தில் தான் இருக்கிறேன், அவர்கள் செய்யும் அதே பிரச்சினைகள் எனக்கும் இருக்கின்றன. தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு ஆழ்ந்த மாற்றத்தை நான் விரும்புகிறேன். நாம் ஒரு சிறந்த வழியில் வாழவும் வேலை செய்யவும் வேண்டும். வேலை செய்து செல்வத்தை படைப்பபவர்களில் ஒருவராக நாம் இருக்கிறோம், ஆனால் எதுவுமில்லாதவர்களாக நாம் வாழ்கிறோம்.”

PES கூட்டம், மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்ட இயக்கம் எங்கிருந்து உருவானது, எதை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்பது பற்றி அரசியல் மற்றும் வரலாற்று ரீதியிலான விளக்கத்தை அளிக்க முயற்சித்த ஒரு தனித்துவமான கூட்டமாக இருந்தது என்று அவர் கூறினார். “இது மிகவும் ஆக்கபூர்வமான ஒரு கூட்டமாக இருந்ததுடன், இயக்கத்தைப் பற்றியும், பின்னர் அதனால் என்ன நடக்க முடியும் என்ற முன்கணிப்பு பற்றியும் புரிந்து கொள்ள அது அனுமதித்தது. மஞ்சள் சீருடையாளர்களுக்கு என்று இன்னும் திடமான ஒரு அமைப்பு தேவை. ஒரு நியாயமான காரணத்திற்காக போராடும் ஆனால் ஒரு அமைப்பு மற்றும் அரசியல் விருப்பம் இல்லாததால் தோல்வியடையும் வெறுமனே மற்றொரு ஆர்ப்பாட்டமாக இது இருப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை” என்றார்.