ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian state elections show mounting social anger against ruling Hindu-supremacist BJP

இந்திய மாநிலத் தேர்தல்கள், ஆளும் இந்து-மேலாதிக்கவாத பிஜேபி க்கு எதிராக பெருகிவரும் சமூக சீற்றத்தை எடுத்துக் காட்டுகின்றன

By Wasantha Rupasinghe and Keith Jones 
14 December 2018

இந்தியாவின் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாயன்று வெளியானதைத் தொடர்ந்து, இந்திய ஆளும் கட்சியான இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி (BJP) ஒரு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் போன்ற இந்தியாவின் “ஹிந்தி மொழியை பிரதானமாக கொண்ட” பாகமாகவும் பிஜேபி இன் பாரம்பரிய ஆட்சித் தளங்களாகவும் இருந்து வந்த மூன்று மாநிலங்களில் பிஜேபி தனது ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் இழந்துள்ளது. இதில் முதல் இரண்டு மாநிலங்களும் முறையே இந்தியாவின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மிகப்பெரிய மாநிலங்களாகும். இவற்றுடன் சத்தீஸ்கரையும் சேர்த்து 185 மில்லியனுக்கும் அதிகமான கூட்டு மக்கள்தொகையை அவர்கள் கொண்டுள்ளன.

அனைத்து மூன்று மாநிலங்களிலுமே முந்தைய சட்டமன்றத் தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விட பிஜேபி க்கு எதிரான ஒரு கூர்மையான திருப்பம் நிகழ்ந்துள்ளது, அதாவது அநேகமாக ஐந்து முதல் பத்து சதவிகிதத்திலான வாக்குகளை பெற்று மாநிலம் தழுவிய பெரும் இழப்புக்களை பிஜேபி சந்தித்துள்ளது. 2014 தேசியத் தேர்தல்களின் போது மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் அது வென்றெடுத்த 62 முதல் 65 வரையிலான இடங்களுடன் ஒப்பிடுகையில் அதனுடைய இழப்பு இன்னும் படு மோசமானதாக உள்ளது.

ஏனைய இரண்டு மாநிலத் தேர்தல்களில் சிறு இனக்குழு -பிராந்தியக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. மிகச்சிறிய வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில், மிசோ தேசிய முன்னணி (Mizoram National Front) கட்சி ஆளும் காங்கிரஸ் கட்சியை வெளியேற்றியுள்ளது. இந்தியாவின் பன்னிரண்டாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான தெலுங்கானாவில், 2014 இல் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா பிரிவினைக்கான பிரச்சாரத்தை முழுவீச்சில் முன்னெடுத்த கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி (Telangana Rashtra Simiti-TRS) கட்சிக்கு அடுத்து, படு மோசமான இரண்டாவது இடத்தையே காங்கிரஸ் பிடித்துள்ளது.

இருப்பினும், ஒருசில வாரங்களுக்கு முன்பு வரையிலும் கிட்டத்தட்ட மரண ஓலமிட்டு வந்த காங்கிரஸூக்கு, ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் அதற்கு மிகவும் அவசியமாக தேவைப்பட்ட ஒரு முதுகில் தட்டிக்கொடுப்பாக இருந்தது.

இந்தியாவின் ஏப்ரல்-மே 2019 தேசியத் தேர்தல்களுக்கு முந்தைய கடைசி மாநில சட்டமன்றத் தேர்தல்களாக இவை உள்ளன. இதனைத் தொடர்ந்து, அவற்றின் முடிவுகள் தேசியத் தேர்தல்கள் மீதான ஒரு கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதோடு, போட்டியிடவுள்ள பல-கட்சி கூட்டணிகளையும் அவர்களது பிரச்சாரங்களையும் வடிவமைக்கவும் அவை உதவுகின்றன.

பெரும் வேலையின்மை, கிராமப்புற நெருக்கடி மற்றும் மிகவும் பரந்த சமூக சமத்துவமின்மை ஆகியவற்றின் காரணமாக, நவம்பர் இறுதியிலும் டிசம்பர் தொடக்கத்திலும் நடந்து முடிந்த மாநிலத் தேர்தல்கள், பிஜேபி க்கு எதிராக பெருகிவரும் சமூக சீற்றம் மற்றும் வளர்ந்துவரும் எதிர்ப்பு போன்றவற்றின் முற்றிலும் சிதைந்துபோன வெளிப்பாடுகளாக உள்ளன.

இந்து “பலசாலி” என்று கருதப்படும் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி, இந்திய முதலாளித்துவம் நவ-தாராளவாத “சீர்திருத்தத்தை” தீவிரப்படுத்தவும், மற்றும் உலக அரங்கில் அதன் பெரு வல்லரசாகும் இலட்சியங்களை இன்னும் ஆக்கிரோஷமாக வலியுறுத்தவும் முனைந்து, 2014 இல் புது தில்லியில் அதிகாரத்திற்கு வந்தது.

முனைப்பில், முந்தைய கால் நூற்றாண்டில் பூகோள மூலதனத்திற்கான ஒரு மலிவு உழைப்பு புகலிடமாக இந்தியாவை மாற்றுவதில் முதலாளித்துவ உந்துதலுக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சி, மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் ஆகிய இருவர் மீதான வெகுஜன அதிருப்தியை பிஜேபி சுரண்டி, 1984 தேர்தலுக்குப் பின்னர் இந்தியாவின் முதல் பாராளுமன்ற பெரும்பான்மையை வெற்றி பெற்றது. 1989 தொடக்கத்தில் இருந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் அதன் இடது முன்னணியும் வலதுசாரி தேசிய அரசாங்கங்களுக்கு பலமுறை முட்டுக்கொடுத்தன, அவற்றில் பெரும்பாலானவை காங்கிரஸ் தலைமையிலானவை, அதே நேரத்தில் ஸ்ராலினிஸ்டுகள் அதிகாரத்தில் இருந்த மாநிலங்களில் தாமே “முதலீட்டாளர் சார்பு” கொள்கைகள் என்றழைத்தவற்றை செயல்படுத்தினர்.

மோடி அரசாங்கம், சமூக செலவினங்களை வெட்டுவது, பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, மற்றும் பணிநீக்கங்கள் குறித்த சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்குவது போன்ற சமூக ரீதியிலான கொந்தளிப்பைக் கிளறக்கூடிய முதலாளித்துவத்தின் “சீர்திருத்த” திட்ட நிரலை முன்னெடுத்தது; அதே நேரத்தில், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலிலும் இந்தியாவை மேலும் மேலும் முழுமையாக ஒருங்கிணைத்து வந்தது.

வேலைகளுக்கும் அபிவிருத்திக்கும் மோடி அளித்த வாக்குறுதிகளைப் பொறுத்தவரை, அவை கொடூரமான ஏமாற்றுத்தனம் என்பது முன்னூகிக்கக்கூடிய வகையில் நிரூபனமாகின. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization – ILO) ஒரு சமீபத்திய அறிக்கையின் படி, மே 2014 ல் பிஜேபி அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து அக்டோபர் 2017 வரையிலான காலத்தில், இந்திய தொழிலாளர் பிரிவிற்குள் 10 மில்லியனுக்கு (ஒரு கோடிக்கு) அதிகமான வருடாந்திர புது வரவுகள் இருந்தாலும், ஒரு மில்லியனுக்கு குறைவான கூடுதல் வேலைகளே அங்கு உருவாக்கப்பட்டன என்பதுடன், அவற்றில் பெரும்பாலானவை “பாதிக்கப்படக்கூடிய வேலைகளாக” இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகத்திற்கு இடமின்றி, வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை மேலும் தூண்டுவதன் மூலம் வளர்ந்து வரும் மக்கள் எதிர்ப்பிற்கு பிஜேபி பதிலளிக்கும். இதில் முக்கியமாக பாகிஸ்தானுக்கு எதிராக அதிகரிக்கப்பட்டுள்ள போர்வெறியும் அடங்கும். ஒரு மாத கால போர் நெருக்கடியைத் தூண்டிவிட்ட, செப்டம்பர் 2016 இல் பாகிஸ்தானுக்குள் எல்லை மீறிய தாக்குதல்கள் அல்லது “நுட்பமான தாக்குதல்களுக்கு” அவர் ஆணையிட்டது தான் “பாகிஸ்தானிய பயங்கரவாதத்திற்கு” முன்னர் பல தசாப்தங்கள் கொண்ட இந்திய சுய-அடிபணிவை ஒரு துணிகரமாக மாற்றி அமைத்தது“ என்று மோடியை பிஜேபி முன்னே தூக்கிப்பிடிப்பதற்கான காரணமாக கூறப்படுகிறது.

இரண்டாவது திட்டமாக அடுத்த வசந்த கால தேசியத் தேர்தலுக்கான காலகட்டத்தில் பொருளாதாரத்திற்கு ஒரு குறுகியகால ஊக்கம் வழங்குவதில் பிஜேபி ஈடுபடும், அதற்காக கடன் வழங்குவதை இலகுவாக்குவது மற்றும் அரசாங்க செலவினங்களை அதிகமாக்குவதை சாத்தியமாக்கும். பல மாதங்களாக அரசாங்கம், இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஒரு கசப்பான மோதலில் சிக்கியுள்ளது, அது மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும், நாட்டின் பல பிரச்சினைக்குரிய வங்கிகள் கடன் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், மற்றும் “உபரி” நிதியை ஒப்படைத்தல் போன்ற கோரிக்கைகளை வைத்தது. செவ்வாய்க்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் தறுவாயில் RBI கவர்னர் உடனடியாக பதவி விலகப் போவதாக அறிவித்தார். உர்ஜீத் பட்டேல் அவரது பதவி விலகுதலுக்கு “சொந்த காரணங்களை” குறிப்பிட்டாலும், அவற்றைத் தாண்டி அவர் வெளியேற்றப்பட்டார் என்று தான் பொதுவாக பேசப்படுகிறது.

ஆறு இந்தியர்களில் ஒருவருக்கு தாயகமாக விளங்கும் “ஹிந்தி மொழி அதிகமாக பேசப்படும்” மாநிலமான உத்திரப் பிரதேசம் உட்பட, இந்தியாவின் பெரும்பகுதியில் மூன்றாவது ஏன் நான்காவது இடத்திற்கு கூட அது தள்ளப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸைப் பொறுத்த வரையில் - இந்த வார தேர்தல் முடிவுகள் தெய்வ செயலாக அதற்கு வந்து சேர்ந்தது என்று சொல்ல வேண்டியதே இல்லை.

நேரு-காந்தி வம்சத்தின் சமீபத்திய உறுப்பினராக காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்க வந்துள்ள ராகுல் காந்தி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான “ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பார்வை” உட்பட, ஒரு “மாற்றத்தை” அவருடைய கட்சி கொண்டுவரும் என பெருமையடித்தார். உண்மையில், உழைக்கும் மக்களை தீவிரமாக சுரண்டுவதன் மூலமாக முதலீட்டாளர்-உந்துதலுடன் கூடிய “அபிவிருத்தி” குறித்த பெருவணிக காங்கிரஸின் “பார்வை” யும் பிஜேபி யின் கார்பன் நகலாகவே உள்ளது. மேலும், வலதை நோக்கிய மாற்றத்திற்கான கூடுதல் அறிகுறியாக, “முஸ்லீம்களை ஆதரிப்பது” மற்றும் “இந்து இந்தியாவை” எதிர்ப்பது என்று காங்கிரஸூக்கு எதிராக பிஜேபி நடத்தும் கொடூரமான வகுப்புவாத தாக்குதல்களை எதிர் கொள்ளும் விதமாக, பெருநிறுவன ஊடகங்களின் பெரும்பகுதி கூட “இந்துத்துவ போதை” என்று கூறும் அளவுக்கு காங்கிரஸ் அதிகரித்தளவில் பிரச்சாரங்களை நடத்தி, வந்தது.

ராகுல் காந்தி இந்து கோவில்களுக்கு பயணம் செய்தார், அதேசமயம் மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, பசுவதை மீதான பிஜேபி மாநில அரசாங்கத்தின் தடையை மேலும் பலப்படுத்த வாக்குறுதி அளித்தது, மற்றும் ஆச்சாரமிக்க இந்துக்களால் புனிதமாக கருதப்படும் நர்மதா நதிக்கரையினூடாக அமைந்துள்ள கோவில்களையும் புனித ஸ்தலங்களையும் மேம்படுத்த 150 மில்லியன் டாலரை வழங்கவும் உறுதிபூண்டது. இந்த மாநிலத்தில் தான் வறுமையின் காரணமாக ஒவ்வொரு ஏழு மணி நேரத்திற்கு ஒரு விரக்தியற்ற விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்க்கப் போராட்டத்தின் உக்கிரம், —மோடி மற்றும் சமூக பிற்போக்கை முதலாளித்துவம் அரவணைப்பது மற்றும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற வேலைகள் குறித்த வெகுஜன எதிர்ப்பின் வளர்ச்சி– ஆகியவற்றிற்கு ஸ்ராலினிஸ்டுகள் இவ்வாறாக விடையிறுக்கின்றனர் - காங்கிரஸ் கட்சியுடன், பெரும்பாலும் பிஜேபி யின் முந்தைய கூட்டணிக் கட்சிகளாக இருந்த சாதி அடிப்படையிலான மற்றும் பிராந்தியக் கட்சிகளை ஒன்றுதிரட்டுவது; மற்றும் “ஜனநாயக,” “மதச்சார்பற்ற” இந்திய அரசுடன் தொழிலாள வர்க்கத்தை பிணைப்பதற்கான அவர்களது முயற்சிகளை இரட்டிப்பாக்கின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸின் வெற்றிகளை மகிழ்ச்சியுடன் வரவேற்றதோடு, மாற்றுக் கொள்கைகளுக்கான கதவை அவர்கள் திறந்துள்ளதாக ராகுல் காந்தி பரிந்துரைத்ததில் அதுவும் இணைந்து கொண்டது. டிசம்பர் 11 அறிக்கையில், “மக்கள் தீர்ப்புக்களுக்கு மதிப்பளிக்கவும், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தி அவர்களது துயரங்களை குறைக்கும் நோக்கம் கொண்ட கொள்கைகளை சேர்த்துக்கொள்ளவும் கோரி, வரவிருக்கும் காங்கிரஸ் அரசாங்கங்களுக்கு சிபிஎம் அழைப்புவிடுத்தது.

சிபிஎம் மற்றும் அவர்களது நெருங்கிய சிறிய கூட்டணிக் கட்சியான பழைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (Communist Party of India-CPI), புது தில்லியில் ஒரு “மாற்று” முதலாளித்துவ அரசாங்கத்திற்கான பிற்போக்குத்தன உந்துதலுக்குப் பின்னால், சமூக போராட்டங்களின் ஒரு பெரும்பகுதியையும், மற்றும் அனைத்திற்கும் மேலாக வளர்ந்துவரும் தொழிலாள வர்க்க இயக்கத்தையும் ஒருங்கிணைக்க அவர்களது “இடது” நற்சான்றுகளை பயன்படுத்த மிகத் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

தமிழ் நாட்டில், சிபிஎம் உடன் இணைந்த இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (Center of Indian Trade Unions-CITU) வாகனத் துறை ஆலைகளில் நடந்த சமீபத்திய தொடர்ச்சியான போர்குணமிக்க ஆர்ப்பாட்டங்களை சீர்குலைத்தது, அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய பிராந்திய பங்காளிகளில் ஒன்றான தி.மு.க. உடனான தனது எதிர்கால தேர்தல் கூட்டணியை ஊக்குவிக்கவும், ஆழப்படுத்தவும் அவற்றைப் பயன்படுத்தியும் வருகிறது.

பல்வேறு விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களையும், மற்றும் ஏனைய வலதுசாரி அரசியல்வாதிகளையும் கூட சிபிஎம் வரவேற்றுள்ளது.

சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அடுத்த வசந்தகால தேர்தலில் பிஜேபி ஐ தோற்கடிக்க முன்னெடுக்கப்படவுள்ள ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரம் பற்றி காங்கிரஸூம், மற்றும் ஏனைய இருபது கட்சிகளும் விவாதித்த ஒரு கூட்டத்தை சென்ற திங்களன்று ஒழுங்கமைப்பதில், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உறுப்பினராக சமீபகாலம் வரை இருந்த ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருந்து செயலாற்றினார்.

தற்போதைய நிலவரப் படி, “பிஜேபி இல்லாமல் எவருடனும்” என்ற ஒரு அணுகுமுறையை ஸ்ராலினிஸ்டுகள் ஊக்குவிக்கின்ற வகையில், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் பிஜேபி-தேசிய ஜனநாயக கூட்டணியை (BJP-NDA) தோற்கடிப்பதற்கான நல்ல வாய்ப்பைக் கொண்டுள்ள எந்தவொரு கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணிக்குப் பின்னால் அதன் இடது முன்னணி அணிவகுக்கும்.

தேர்தலுக்கு முந்தைய “மாபெரும் கூட்டணியை” சிபிஎம் எதிர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சியுடனான ஒரு முறையான கூட்டணி அமைக்கும் பட்சத்தில் அது மேலும் மதிப்பிழக்குமோ என்று lஅச்சம் நிலவுவதுடன், மேற்கு வங்கத்தில் அதன் பரம எதிரியான திரிணாமுல் காங்கிரஸூடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் அது விரும்பவில்லை.

ஆனால், “மதச்சார்பற்ற இந்தியாவை,” பாதுகாக்கும் பெயரில், பிஜேபி மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கும் தேர்தலுக்குப் பிந்தைய எந்தவொரு வலதுசாரி அரசியல் கூட்டணிக்கும் அவர்களது ஆதரவை மீண்டும் வழங்குவார்கள் என்பதில் ஸ்ராலினிஸ்டுகள் மிக வலுவாக உள்ளனர்.

உழைக்கும் மக்களின் ஒரு விரோதப் போக்குள்ள எதிரியாக பிஜேபி உள்ளது என்பது குறித்து சந்தேகமே இல்லை. ஆனால், வர்க்கப் போராட்டத்தை முறையாக ஒடுக்குவதும் மற்றும் காங்கிரஸ் மற்றும் ஏனைய முதலாளித்துவக் கட்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக அடிபணியச் செய்வதும் ஸ்ராலினிசக் கொள்கையாக உள்ளது —இதன் மூலம், தொழிலாள வர்க்கம் சமூக நெருக்கடி குறித்த தனது சொந்த சோசலிசத் தீர்வை மேம்படுத்துவதில் இருந்து தடுக்கப்படுகிறது— அது வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை பலப்படுத்தியள்ளது. மேலும் உழைக்கும் மக்களை அரசியல் முட்டுசந்துக்குள் வழிநடத்தியுள்ளது.

முதலாளித்துவ வலதுசாரி கட்சிகளை ஆதரிப்பதுடன் மூலமாக மற்றும் முதலீட்டாளர்-சார்பு கொள்கைகளை தாமாகவே செயல்படுத்தி வருகின்ற நிலையில், பிஜேபி ஐ “எதிர்க்கும்” ஸ்ராலினிஸ்டுகளின் ”நாசகர கொள்கையின்” ஒரு கால்-நூற்றாண்டுக்குப் பின்னர், தொழிலாள வர்க்கம் அவர்களுக்கான ஒரு புதிய பாதையைத் தீட்டிக் கொள்ள வேண்டும். அதன்படி, அதன் சுயாதீன வர்க்க வலிமையை அணிதிரட்ட வேண்டும் என்பதுடன், உலகெங்கிலுமான தொழிலாளர்களுடனான கூட்டணியுடன் சமூக-பொருளாதார வாழ்விற்கான சோசலிச மறுஒழுங்கமைவிற்கு உறுதிபூண்ட தொழிலாளர்களின் அரசாங்கத்திற்கான ஒரு போராட்டத்தில் தனக்கு பின்னால் ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களையும் அது கட்டாயம் அணிதிரட்ட வேண்டும்.

ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்து மோடி பெருமைபீற்றிக் கொள்ளும் அதே வேளையில், நான்கு வேலையற்ற இளைஞர்கள் தற்கொலை
[8 December 2018]

அழிவை ஏற்படுத்தும் செயல்: தமிழ் நாடு வாகன வேலைநிறுத்தங்களை வலதுசாரி கட்சிகளுடன் பிணைக்க ஸ்ராலினிஸ்டுகள் முயற்சி
[15 November 2018]

Indian Stalinist congress opts for alliance with big business Congress Party
[30 April 2018]