ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

No to the persecution of Eric Drouet

எரிக் துருவேயை இன்னல்படுத்தாதே

By Kumaran Ira
10 December 2018

“மஞ்சள் சீருடையாளர்கள்" இயக்கம் விரிவடைந்து வருகையில், மக்ரோன் அரசாங்கம் மூர்க்கமான ஒடுக்குமுறையைக் கொண்டு அதை அச்சுறுத்த முயன்று வருகிறது. இந்த இயக்கத்தின் பிரதான ஸ்தாபகர்களில் ஒருவரான, 33 வயது டிரக் ஓட்டுனர் எரிக் துருவே, Seine-et-Marne இல் அவரது வீட்டில் பொலிஸ் சோதனை மேற்கொண்டதாக வெள்ளிக்கிழமை பேஸ்புக்கில் பதிவிட்டார். அவர் மனைவி விசாரிக்கப்பட்டதாகவும், பொலிஸ் தலையீடு செய்த அந்நேரத்தில் அவர் வீட்டில் இருந்திருந்தால் அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தொடர்ந்து அவர் குறிப்பிட்டார்.

BFM-TV இல் "மஞ்சள் சீருடையாளர்கள்" புதனன்று இரவு வெளியிட்ட அறிக்கைகளைத் தொடர்ந்து பாரீஸ் வழக்குதொடுனர் அலுவலகத்தின் ஒரு புலனாய்வில் துருவே இலக்கில் வைக்கப்பட்டுள்ளார். “குற்றம் அல்லது சட்டமீறல் நடவடிக்கைகளைத் தூண்டிவிடுவது" மற்றும் "சட்டவிரோத போராட்டத்தை ஒழுங்கமைப்பதாக" அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் உடனான கலந்துரையாடலின் போது, அவர் எலிசே மாளிகையில் [ஜனாதிபதி மக்ரோனின் இடத்தில்] நுழைய விரும்புவதாக துருவே கூறியமை தான் இந்த அசாதாரண குற்றச்சாட்டுக்களுக்கான ஒரே காரணமாக உள்ளது:

BFM-TV: “சனிக்கிழமை தான் உச்சக்கட்டம், சனிக்கிழமை எலிசே, நாங்கள் அனைவரும் எலிசே செல்ல இருக்கிறோம், சனிக்கிழமை நாங்கள் அனைவரும் முழுமையாக ஐக்கியப்பட்டு, எலிசே நோக்கி ஒருங்கிணைந்து முன்னேறுவோம்,” என்று நீங்கள் கூறுகிறீர்கள். இது என்ன மாதிரி தெரிகிறது? நீங்கள் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்த விரும்புவதாக தெரிகிறது?”

எரிக் துருவே: “அனைத்து மக்களும் அங்கே செல்ல விரும்புகிறார்கள், அது குடியரசின் அடையாளம்.”

BFM-TV: “ஆம், ஆனால் என்ன செய்வதற்காக? நீங்கள் எலிசே வந்தடைந்து, அங்கே என்ன செய்வீர்கள்?”

எரிக் துருவே: “நாங்கள் உள்நுழைவோம்.”

அவர் ஒரு குற்றம் செய்ய அல்லது ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடங்க விரும்பியதாக கூறி, நீதிமன்றங்களும் பத்திரிகைகளும் இந்த கருத்துக்கு எதிராக ஒரு விஷமத்தனமான மற்றும் அபத்தமான பிரச்சாரத்தை இப்போது தொடங்கி உள்ளன.

துருவே மீதான குற்றச்சாட்டு மோசடியானது. BFM-TV இல் அவர் பேசிய அடுத்த நாள், துருவே பேஸ்புக் பக்கத்தில் அவரது கருத்துக்களை தெளிவுபடுத்தி இருந்தார். வன்முறையின்றி தன்னை வெளிப்படுத்துவதற்காகவே, அவர் எலிசே [மாளிகை] நோக்கி செல்ல விரும்பியதாக குழப்பத்திற்கு இடமின்றி அவர் தெரிவித்திருந்தார்.

அவர் கூறினார், “அனைத்தையும் உடைப்பதற்காக நான் எலிசே மாளிகை செல்ல விரும்புகிறேன் என்று நான் ஒருபோதும் கூறியதில்லை, மாறாக எங்கள் குரல் கேட்கப்பட வேண்டும்.” “அமைச்சர்கள், பிரதம மந்திரி, அரசு செயலர்களுடன் மட்டும் தான் நாங்கள் பேச விரும்புகிறோம், ஜனாதிபதி [மக்ரோனுடன்] ஒருபோதும் பேச விரும்பவில்லை; இது அடையாளத்திற்காக செய்யப்படுவது. நான் ஆர்ப்பாட்டத்தில் ஒருபோதும் [சொத்துக்களை] தாக்கியதில்லை, நாளையும் அவ்வாறு நடக்காது.”

பெரும்பான்மை மக்களால் வெறுக்கப்படும் மக்ரோன் அரசாங்கம் போராட்டக்காரர்களை இழிபடுத்துவதுடன், சமூக சமத்துவமின்மை மற்றும் சமூக அன்னியப்படலுக்கு எதிராக உண்மையிலேயே ஆழ்ந்த வெறுப்பை வெளிப்படுத்துகின்ற இந்த “மஞ்சள் சீருடையாளர்களின்" இயக்கத்தை ஒடுக்க, அது ஜனநாயக-விரோத நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் ஒடுக்குமுறையைச் சார்ந்துள்ளது.

மக்ரோன் அரசாங்கம் இவ்விதத்தில் துருவேயை ஏன் இலக்கில் வைக்கிறது என புரிந்து கொள்வது கடினமல்ல. அரசாங்கம், இந்த இயக்கத்தைப் பிளவுபடுத்தி முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, மக்ரோனின் அமைச்சர்களுடன் ஓர் உடன்படிக்கையைப் பேரம்பேசக்கூடிய "மஞ்சள் சீருடையாளர்களுக்கு” இடையே உள்ள பிரதிநிதிகளைக் கண்டறிந்து, இந்த இயக்கத்தை நிறுத்த பெரும்பிரயத்தனம் செய்து வருகிறது.

ஜனாதிபதியுடன் ஒரு பொதுவான களம் காண முயலுகின்ற “சுதந்திர மஞ்சள் சீருடையாளர்களுக்கு" முரண்பட்ட விதத்தில், மக்ரோனுடன் பேரம்பேசுவதற்கு மறுக்கும் இந்த இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களில் துருவே ஒருவராவார். இது தான், அவரை மக்ரோனின் இலக்கில் நிறுத்துகிறது, மக்ரோன் என்ன விலை கொடுத்தாவது இந்த இயக்கத்தை நசுக்கவும் மற்றும் இந்த இயக்கத்தை வழி நடத்தும் பல்வேறு பேஸ்புக் பக்கங்களின் அனைத்து மக்களையும் விலைக்கு வாங்கவும் விரும்புகிறார்.

துருவேக்கு எதிரான அச்சுறுத்தல், போராட்டத்திற்கு வரவிருக்கும் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும். “மஞ்சள் சீருடையாளர்களின்" இயக்கம் அரசை பீதியூட்டிக் கொண்டிருக்கிறது. பெருந்திரளான தொழிலாளர்களிடமிருந்து அன்னியப்பட்டு, அவர்களால் வெறுக்கப்படுகின்ற இந்த அரசாங்கம், மக்ரோனுக்கு எதிராக கோபம் அதிகரித்து வருவதால் நடுங்கி போயுள்ளதுடன், “மஞ்சள் சீருடையாளர்களை" மற்றும் மக்ரோனுக்கு எதிரான எந்தவொரு நிஜமான அரசியல் எதிர்ப்பையும் குற்றகரமாக்க ஒவ்வொரு வழிவகையையும் பிரயோகிக்க தயாரிப்பு செய்து வருகிறது. அதனால் அது துரோட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை இட்டுக்கட்டுவதற்கு பொய்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களைப் பயன்படுத்துகிறது.