ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK government announces draconian Brexit immigration policy and deployment of troops

பிரிட்டன் அரசாங்கம் கடுமையான பிரெக்ஸிட் புலம்பெயர்வு கொள்கை மற்றும் துருப்புகளின் நிலைநிறுத்தலை அறிவிக்கிறது

By Robert Stevens
21 December 2018

உடன்பாடு எட்டப்படாமல் பிரிட்டன் வெளியேறுவது மீதான தாக்கங்களை அவை "பயங்கரத்துடன் அவதானித்து வருவதாக" வணிக நிறுவனங்கள் கூறி வருவதற்கு மத்தியில், அரசாங்கம் 3,500 துருப்புகளைப் பின்புலத்தில் தயார்நிலையில் வைக்க இருப்பதை அறிவித்து ஒரு நாளுக்குப் பின்னர், புதன்கிழமை நாடாளுமன்ற நடைமுறைகள் கேலிக்கூத்தாக மாறியது.

பிரதம மந்திரி தெரேசா மேயின் பழமைவாத அரசாங்கம் உடைந்துவரும் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கு பதிலாக, “உடன்பாடு எட்டப்படாத" பிரெக்ஸிட் திட்டமிடலைத் தீவிரப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து விவாதிக்க ஒரு அவசரகால தீர்மானம் கொண்டு வருவதன் மீது விவாதிப்பதற்கு பதிலாக, மே ஒரு "முட்டாள் பெண்மணி" என்று தொழிற்கட்சி தலைவர் ஜேர்மி கோர்பின் முணுமுணுத்தாரா இல்லையா என்பதை விவாதிக்க பிரதம மந்திரியின் கேள்வி நேரத்தின் போது முன்னுரிமை வழங்கப்பட்டது.

இதன் மீதான முற்றிலும் வேடிக்கை விவாதத்திற்குச் சுவாரசியமூட்டுவதை நிராகரிப்பதற்குப் பதிலாக, சபாநாயகரின் அழைப்பின் பேரில் கோர்பின் பின்வருமாறு ஒரு அனுதாப அறிக்கையை வெளியிடுவதற்காக நாடாளுமன்றத்தில்: “பிரதமரைக் குறித்தோ அல்லது வேறு எவரைக் குறித்தும் நான் 'முட்டாள் பெண்மணி' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை, கேள்விக்கிடமின்றி எந்தவொரு வடிவத்திலும் பாலியல்ரீதியான அல்லது பெண்வெறுப்பு மொழியைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக எதிர்க்கிறேன்.”

நாடாளுமன்றத்தில் இந்த கேலிக்கூத்தான சம்பவங்கள், அரசாங்கம் பின்பற்றி வரும் அபாயகரமான மற்றும் பிற்போக்குத்தனமான அசாதாரண போக்கை மூடிமறைப்பதற்காக இருந்தன. வீதிகளில் துருப்புகள் நிலைநிறுத்தப்படலாம் என்பது, உடன்பாடு எட்டப்படாமல் பிரிட்டன் வெளியேறுவதன் மீது முன்நிற்கும் நிச்சயமற்றத்தன்மைகளைக் காரணங்காட்டி நியாயப்படுத்தப்படுவதுடன், அவற்றின் நிலைநிறுத்தல் குறித்த அனுமதி அறிவித்தல் தெளிவின்றி உதறிவிடப்படுகின்றன. ஆனால் பிரிட்டன் வெளியேறுவது மீதான பேச்சுவார்த்தைகளில் என்ன போக்கு எடுக்கப்பட்டு வந்தாலும், அதை தவிர்த்து பிரிட்டனில் அதிகரித்து வரும் அரசியல் மற்றும் சமூக பதட்டங்களுக்கு இதுவொரு விடையிறுப்பாக உள்ளது. படுமோசமான சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகளால் தூண்டிவிடப்பட்ட சமூக அமைதியின்மையை அடக்கும் நோக்கில், தொழிலாள வர்க்கம் தான் இதுபோன்றவொரு நிலைநிறுத்தலின் பிரதான இலக்காக உள்ளது.

எந்தவொரு ஜனநாயக பொறுப்பையும் அவமதிப்புடன் எடுத்துக்காட்டும் வகையில், துருப்புகளைத் தயாராக வைக்க மந்திரிசபை உடன்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்தது, பாதுகாப்பு அமைச்சர் கவின் வில்லியம்சன் நாடாளுமன்றத்திற்கு கூறுகையில், அரசாங்கம் "எந்தவொரு அரசு துறைக்கோ அல்லது எந்தவொரு தற்செயல் சம்பவங்களுக்கோ அவசியப்படும் போது உதவுவதற்காக, பணியில் இருப்பவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் உட்பட சேவையில் உள்ள 3,500 படையினரை தயார்நிலையில் வைத்திருக்கும்,” என்பதை மட்டுமே தெரிவித்தார்.

இந்த 3,500 பேர் “இரகசிய பெயரில் குறிப்பிடப்படும் 'Operation Yellowhammer' என்ற ஒரு திட்டத்தின் கீழ் உடன்பாடு எட்டப்படாத போதைய சம்பவங்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பார்கள்,” மேலும் "பிரிட்டன் மீதான பயங்கரவாத தாக்குதலைச் சமாளிக்க உதவும் வகையில் கூடுதலாக 5,000 துருப்புகள் பின்புலத்தில் வைக்கப்பட்டிருப்பார்கள்...” என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது.

இந்த துருப்புகள் எதற்காக பயன்படுத்தபடுவார்கள் என்ற விபரங்களை வழங்க அரசு மறுத்துள்ள நிலையில், பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மூத்த பிரமுகர்களோ குறிப்பாக தொழிலாளர்களின் தொழில்துறை நடவடிக்கையே இலக்கில் வைக்கப்பட்டு வருவதாக சமீபத்திய மாதங்களில் ஒப்புக் கொண்டுள்ளனர். செப்டம்பரில், தேசிய பொலிஸ் ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கசியவிடப்பட்ட ஓர் ஆவணம், படையினர் நிலைநிறுத்தப்படுவதற்கான "நிஜமான சாத்தியக்கூறு" இருப்பதாகவும், அடுத்த ஆண்டு பிரெக்ஸிட் வெளியேறும் தேதியின் போது பொலிஸாருக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்படலாம் என்றும் எச்சரித்தது. மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு "உள்நாட்டு ஒழுங்கு குலைவுக்குத் தீனி" போடுக்கூடும் மற்றும் பொருட்களின் விலை உயர்வு "பின்னர் ஒழுங்கு-குலைவைத் தீவிரப்படுத்தக் கூடிய பரந்த போராட்டங்களை" காணக்கூடும் என்று அது எச்சரித்தது.

கடந்த மாதம், ஆயுதப் படைகளின் தலைவர் ஜெனரல் சேர் நிக் கார்ட்டர் பிபிசி இன் Andrew Marr நிகழ்ச்சியில் கூறுகையில், “ஒரு பயங்கரவாத தாக்குதல் ஆகட்டும் அல்லது பாரவூர்தி ஓட்டுனர்களின் பிரச்சினையோ, தொழில்துறை நடவடிக்கையோ ஆகட்டும் அல்லது வேறு என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்,” இராணுத்தை பயன்படுத்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஒரு பெண்வெறுப்பாளர் என்ற குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்காக நாடாளுமன்றத்தில் அனுதாப அறிக்கைகளை வழங்குவதில் சுறுசுறுப்பாக உள்ள கோர்பின், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்துவதற்காக ஆயிரக் கணக்கான படையினர் அணிதிரட்டப்படுவதைக் குறித்து எதுவுமே கூறவில்லை.

அரசாங்கத்திற்கு விடையிறுக்கும் பொறுப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதை ஆதரித்து ஆத்திரமூட்டுபவரான பிளேயரிசவாதி அயன் ஆஸ்டினிடம் அது விடப்பட்டது. “வீதிகளில் படையினர் நிறுத்தப்படுகிறார்கள், மருந்துகள் தேசிய பாதுகாப்பு சேவையில் இருப்பில் வைக்கப்படுகின்றன; விமான நிலையங்களும் கப்பல் நிறுத்துமிடங்களில் செயல்பாடுகள் நிறுத்தப்படுகின்றன, இது தான் உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட் இன் யதார்த்தமாக உள்ளது. இது தெளிவாகவும் எளிமையாகவும், அச்சமூட்டும் தந்திரோபாயமாகும்,” என்று குறிப்பிட்ட போதினும், அவர் எந்தவொரு அணிதிரட்டலையும் எதிர்க்கவில்லை.

வெகுஜன வாக்கெடுப்புக்குப் பின்னர் அப்போதிருந்து, பிரெக்ஸிட்-ஆதரவு மற்றும் பிரெக்ஸிட்-எதிர்ப்பு கன்னைகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மூலோபாய நலன்களை எவ்வாறு கூடுதலாக முன்னெடுப்பது என்பதன் மீதான அவற்றின் எதிர்ப்பு வேலைத்திட்டங்களில் அவை மோதிக்கொள்கின்ற நிலையில், தொழிலாள வர்க்க நலன்களைத் தவிர்க்க ஆளும் வர்க்கத்தினது இந்த கன்னைகளின் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன.

தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான நலன்களை வெளிப்படுத்த இயலாமல் இருப்பதால், நெருக்கடியில் சிக்கியுள்ள ஓர் அரசு துரிதமாக அதன் பிற்போக்குத்தனமான பிரெக்ஸிட் திட்டநிரலை நடைமுறைப்படுத்த நகர்ந்து வருகிறது.

பிரிட்டன் வெளியேறுவதற்கான தேதியிலிருந்து வெறும் 100 நாட்களே உள்ள நிலையில், புதனன்று, அரசாங்கம் பிரிட்டன் வெளியேறியதற்குப் பிந்தைய இடைமருவு காலத்தைத் தொடர்ந்து (இப்போது இது ஜனவரி 2012 ஆக அமைக்கப்பட்டுள்ளது) கொண்டு வரப்பட வேண்டிய புலம்பெயர்வு கொள்கை மீது ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான அவரின் உடன்படிக்கை மீது நாடாளுமன்றத்தில் மே உடன்பாடு எட்ட தவறுவாரேயானால், அடுத்த ஏப்ரலுக்கு முன்னதாகவே இந்த கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படலாம்.

“பிரிட்டனில் வேலை செய்யவோ அல்லது கல்விகற்கவோ விரும்புபவர்கள் ஒவ்வொருவரும் அனுமதி பெற வேண்டியிருக்கும்,” என்கின்ற நிலையில், பிரிட்டனுக்கு மக்கள் சுதந்திரமாக உள்வருவதை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதே முன்மொழியப்பட்டுள்ளது. பிரிட்டன் எல்லா தகமை மட்டத்திலும் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கும் மற்றும் முன்மொழியப்பட்டவாறு "உயர் திறன்" புலம்பெயர்ந்தவர்களுக்கான 30,000 பவுண்டு குறைந்தபட்ச சம்பள வரம்பு உள்ளவர்களுக்கும் புதிதாக தற்காலிக 12 மாத நுழைவனுமதியை அறிமுகப்படுத்தும். பிரிட்டனுக்குள் நுழைய அவர்கள் முதலாளிமார்களின் பரிந்துரை பெற்றிருக்க வேண்டியிருக்கும்.

குறை-திறன் தொழிலாளர்கள் நுழைவனுமதிகள் விண்ணப்பிப்பதிலிருந்து தடுக்கப்படுவார்கள், அவர்கள் “ஆபத்தில்லா நாடுகளிலிருந்து" வந்து அதிகபட்சம் 12 மாதத்திற்குப் பிரிட்டனில் தங்கியிருக்கலாம், இது இந்த தொழிலாளர்கள் பிரிட்டனில் நிரந்தரமாக வேலை செய்வதற்கான வாய்ப்பைத் தடுக்கிறது.

பிரிட்டனுக்கு வரும் புலம்பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் இலவச தேசிய மருத்துவக் சேவை மற்றும் சமூக சேவைகள் பெறுவது மறுக்கப்பட உள்ளன. உள்துறை செயலர் சஜித் ஜாவிட் கூறுகையில், புதிய முறையில் பிரிட்டனுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்ற எவரொருவருக்கும் "பொது நிதியுதவிகள் பெறும் உரிமையோ அல்லது பிரிட்டனில் நிரந்தரமாக தங்கும் உரிமையோ" கிடைக்காது என்றார்.

ஏற்கனவே பிரிட்டனில் தங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் ஒரு புதிய "குடியேற்ற அந்தஸ்திற்கு" பதிவு செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள். பிரிட்டன் வெளியேறியதற்குப் பிந்தைய பிரிட்டனில் குடும்ப உறுப்பினர்களுடன் இணைய விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள், “பொதுவாக மின்னணு முறையிலான படிவத்தில் பிரிட்டனுக்கு வருவதற்கு முன்னதாக அதற்காக அனுமதி பெற வேண்டியிருக்கும்.”

வணிகங்களின் பிரிவுகள், இதுபோன்றவொரு உயர்ந்த வரம்பிலான தொகை அத்தியாவசியமான குறைவூதிய பணியாளர்களை பெறுவதிலிருந்து அவற்றை தடுக்கும் என்று அஞ்சி, இதை எதிர்க்கின்றன. சிறு வணிகங்களுக்கான கூட்டமைப்பின் தேசிய தலைவர் மைக் செர்ரி கூறுகையில், “பிரிட்டனுக்கு வருபவர்களுக்கு 30,000 பவுண்டு வரம்பு என்பது குறிப்பிட்டு சில துறைகளைக் கூறுவதானால் கட்டுமானம், சில்லறை வர்த்தகம் மற்றும் பராமரிப்பு என பல துறைகளில் பொருத்தமான திறமைகளைப் பெறுவதைக் கடுமையாக பாதிக்கும்,” என்றார்.

தொழிற் கட்சியினது உத்தியோகபூர்வ புலம்பெயர்வு கொள்கை தொழிலாளர்களின் சுதந்திர நகர்வை எதிர்ப்பதுடன் "கட்டுப்படுத்தப்பட்ட குடியேற்றத்தை" (managed migration) ஆதரிக்கின்ற நிலையில் அது கோட்பாட்டுரீதியில் அந்த வெள்ளை அறிக்கையை எதிர்க்கவில்லை, ஆனால் பொருளாதாரம் மில்லியன் கணக்கான குறைந்த சம்பள தொழிலாளர்களைச் சார்ந்துள்ளதால் அது பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்ற அடிப்படையில் எதிர்க்கப்படுகிறது.

நிழல் அமைச்சரவையின் உள்துறை செயலர் டேனி அபோட் கூறுகையில், “இந்த அரசாங்கம் 30,000 பவுண்டுக்குக் குறைவாக சம்பாதிப்பவர்களை அவமதிக்கும் விதத்தில் குறைந்த திறமை பணியாளர்களாக முத்திரை குத்தியுள்ளது. நமது பொருளாதாரமும் பொதுச் சேவைகளும் பெரும்பான்மையான இந்த தொழிலாளர்களால் தான் நிலைத்திருக்கின்றன,” என்று குறைகூறினார்.

அரசாங்கம் "நமது பொருளாதாரம் மற்றும் நமது சமூகத்திற்கு" முன்னுரிமை வழங்கவில்லை, மாறாக "இலாபத்தைகொடுக்கும் வர்த்தகர்களுக்குச் சுதந்திர இயக்கத்தை அனுமதிக்கின்றதும் ஆனால் திறமைகள் அல்லது தொழிலாளர்களில் கடுமையான பற்றாக்குறை உள்ள தொழில்களின் தொழிலாளர்களையும், செவிலியர்கள் மற்றும் சமூக பராமரிப்பு தொழிலாளர்களையும் தவிர்த்து விடுகின்றதுமான ஒரு வருவாய்-அடிப்படையிலான முறையைப் பயன்படுத்துகிறது" என்பதையும் அப்பெண்மணி சேர்த்துக் கொண்டார்.

மருத்துவக் கவனிப்பு உட்பட பொருளாதாரத்தின் அத்தியாவசிய துறைகள் குறைவூதியத்தைத் தொடராவிட்டால் பொறிந்துவிடும் என்பதன் மீதான இதுபோன்றவொரு ஒப்புதலுக்காக வெட்கப்பட அபோட் எந்த காரணமும் காணவில்லை. ஆனால் இதற்கான அரசியல் பொறுப்பு யார் என்றால், முதலாளிமார்களும் மற்றும் அரசும், சமூக சமத்துவமின்மை மற்றும் அதீத-சுரண்டல் கொண்ட ஒரு சமூகத்தை வழமையானதாக உருவாக்க முடிவதற்கு தொழிற் கட்சியும் தொழிற்சங்கங்களுமே அரசியல் பொறுப்பாகும்.