ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Huge rise in deaths of homeless people in the UK

இங்கிலாந்தில் வீடற்ற மக்கள் இறப்பதில் பெரும் உயர்வு

By Dennis Moore
11 September 2018

இந்த ஆண்டு பெப்ரவரி ஆரம்பத்தில் கார்டிஃபில் (Cardiff) உள்ள முகாமில் வெறும் 19 வயதான ஆரோன் பிரெஞ்-வில்கோக்ஸ் (Aaron French-Willcox) இறந்துகிடந்தார். ஆரோன், ஒருவகை நீரிழிவால் பாதிக்கப்பட்டு, நீரிழிவு கீட்டோயசிடோஸஸ் (ketoacidosis) ஆல் இறந்துபோயிருந்தார்.

அவர் இறப்பதற்கு வெறும் மூன்று வாரங்களுக்கு முன்னதாக, synthetic cannabinoid எனும் போதைப் பொருளை அவர் எடுத்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் வீடற்றோர் தங்குமிடத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளானார்.

இங்கிலாந்து எங்கிலும் தூங்குவதற்கு ஒரு இடம் தேடி வீடற்ற மக்கள் அலையும் நிலையில், ஒவ்வொரு நாள் இரவிலும் பலரும் தூங்குவற்கு இடமின்றி கஷ்டப்படும் பயங்கரமான நிலையையே ஆரோனின் துயரமிக்க மரணம் குறிக்கிறது. இங்கிலாந்து முழுவதிலும் தற்காலிக மற்றும் பாதியளவு நிரந்தரமான முகாம்களில் தங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டு, பின்னர், தெருக்களில் இறந்துபோகும் பெரும் எண்ணிக்கை கொண்ட பலரில் அவரும் ஒருவராக இருந்தார்.

பிரிட்டன் முழுவதிலும், மரங்கள் அகற்றப்பட்ட பகுதிகள், பாலங்களின் அடிப்பகுதிகள், கீழ்வழிப்பாதை அல்லது நகர மையங்களில் குறைந்த இரைச்சலுள்ள பகுதிகள் போன்ற இடங்களில் கூடாரங்கள் மற்றும் முகாம்களை அமைத்து மக்கள் தங்கியிருப்பதை பொதுவாக காணமுடியும்.

பொது வெளி பாதுகாப்பு ஆணைகள் (Public Space Protection Orders-PSPOs) மற்றும் அமலாக்க உத்தரவுகளை பிரயோகித்து, முக்கியமாக இத்தகைய முகாம்களை தகர்த்தெறிந்து வீடற்றோர்களை அங்கிருந்து விரட்டுவதே உள்ளூர் அதிகாரிகளின் எதிர்வினையாக உள்ளது.

வோர்ஸ்டர் தேவாலயம் அருகே அமைந்துள்ள செவர்ன் ஆற்றின் கரையில், தூங்குவதற்கு இடமின்றி கஷ்டப்படும் ஆறு பேர் வசித்து வந்த முகாம்களை ஜூலையில் 10 பொலிசார் தகர்த்தெறிந்தனர். சில நாட்களுக்குப் பின்னர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் சிலர் வோர்ஸ்டர் நகர மையத்தில் தூங்க தள்ளப்பட்டனர்.

இவ்வாறு கூடாரங்களிலும் முகாம்களிலும் வசிப்பவர்கள் பற்றிய தரவு முறையாக தொகுக்கப்படவில்லை. எனினும், வீடற்றோர் ஆதரவு அறக்கட்டளையான Crisis, 9,000 க்கும் அதிகமானவர்கள் கூடாரங்கள், வாகனங்கள், இரயில்கள் மற்றும் பேருந்துகளில் தூங்க வேண்டியிருப்பதாக சென்ற கிறிஸ்துமஸ் சமயத்தில் அது மதிப்பிட்டிருந்தது எனத் தெரிவித்தது.

பிரிட்டன் முழுவதிலுமாக ஏற்கனவே இப்படி தூங்கிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானவர்களை விட இந்த எண்ணிக்கை உயர்ந்தபட்சமாக இருப்பதுடன், 2011ல் இருந்து 57 சதவிகிதமாக அதிகரித்துள்ளதையும் குறிக்கிறது.

இங்கிலாந்தில் எத்தனை பேர் வீடின்றி வெளியில் தூங்குகிறார்கள் என்று கணக்கிடப்பட்ட உத்தியோகபூர்வ எண்ணிக்கை என்பது, ஒரு குறிப்பிட்ட இரவில் தூங்குவதில் கஷ்டத்தை எதிர்கொண்டவர்களின் “தலை எண்ணிக்கையை” அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாகும். தூக்கத்திற்கு இடமின்றி கஷ்டப்படுபவர்கள் என்பதன் வரையறைகள் உட்பட, கடுமையான விதிகளின் உதவியுடன் இந்த எண்ணிக்கை கண்டறியப்பட்டது. கூடாரங்கள் மற்றும் வாகனங்கள் போன்ற தற்காலிக தங்குமிடங்களாக கருதப்படுவனவற்றில் தூங்குபவர்கள் மொத்த எண்ணிக்கையான 4,751 ல் அவசியமாய் உள்ளடக்கப்படவில்லை, அவர்கள் 2017 ல் ஒரே இரவில் வெளியே தூங்குபவர்களாக ஒப்புக் கொள்ளப்பட்டனர்.

தூங்குவதற்கு இடமின்றி கஷ்டப்படுவோரின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இங்கிலாந்தில் அத்தகையோர் பற்றிய உண்மையான எண்ணிக்கையில் பரந்தளவிலான குறைமதிப்பீடு இருப்பதாக கருதப்படுகிறது.

மான்செஸ்டரில் தூங்குவதற்கு இடமின்றி கஷ்டப்படுபவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 278 என பதிவாகியிருந்தது என்பதற்கு பதிலிறுப்பாக, Greater Manchester இல் உள்ள வீடற்றவர்கள் பற்றிய மூலோபாய வழிகாட்டியான Mike Wright அமைப்பு, இவர்கள் பற்றிய உத்தியோகபூர்வ எண்ணிக்கை, நிலைமாறிக் கொண்டேயிருக்கும் தூங்குவற்கு இடமின்றி கஷ்டப்படுவோர் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொள்ள தவறிவிட்டது என்று கூறுகிறது. தூங்குவதற்கு இடமின்றி மிகவும் கஷ்டப்படுவோருக்கு நீண்டகால தங்குமிடத்தை கண்டுபிடிக்க வேலை செய்யும் ஒரு திட்டத்திற்கு மான்செஸ்டர் கவுன்சில் ஊழியர்கள், GPs மற்றும் அறக்கட்டளைகளும் தூங்குவதற்கு இடமின்றி நீண்டகாலமாக கஷ்டப்படுவோர் சுமார் 500 பேர்களை பரிந்துரைத்துள்ளனர்.

இங்கிலாந்தில், தெருக்களிலோ அல்லது தற்காலிக தங்குமிடங்களிலோ இறந்துபோகும், அதிலும் பெரும்பாலானோர் தேவாலயத்தின் கல்லறைப் பகுதி, சூப்பர் மார்க்கெட்டின் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் ஜன நெருக்கடி மிகுந்த உணவகங்கள் போன்றவற்றில் இறந்துபோகும் நபர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காகியுள்ளது.

இவர்களில் பலரும் அதிகரித்துவரும் வாடகை, நலன்புரி வெட்டுக்கள் மற்றும் சமூக வீடுகள் இல்லாமை போன்ற காரணங்களினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், அத்தகையோரில் சிலர் தெருக்களில் இறந்துபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Crisis அமைப்பில் இருந்து மாத்யூ டவுனி என்பவர், “தூங்குவதற்கு இடமின்றி கஷ்டப்படுவது என்பது அபாயத்திற்கும் அப்பால் சென்றுவிட்டது என்பதற்கான ஒரு பேரழிவுகர நினைவூட்டலாகவும், மிகவும் கொடியதாகவும், மற்றும் ஒவ்வொரு ஆண்டும் இந்நிலை மிகுந்த எண்ணிக்கையிலான வீடற்ரோர்களை பலிகொள்வதாகவும் இந்த புள்ளிவிபரங்கள் உள்ளன” என்று கூறினார்.

மனநலம் குன்றியவர்கள் தெருக்களில் இறக்கும் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதுடன், அதே ஐந்தாண்டு காலத்தில் 29 லிருந்து 80 சதவிகிதமாக அது உயர்வு கண்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் Gardian செய்தித்தாள் தொகுத்த புள்ளிவிபரங்கள் 2017 இல் வாரத்திற்கு ஒருவர் வீதம் இறந்து போனதாக சுட்டிக்காட்டியது. இந்த புள்ளிவிபரங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டவையாகும், ஏனென்றால் வீடற்ரோர்களின் இறப்புக்கள் தேசிய மட்டத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதுடன், தூங்குவதற்கு இடமற்ரோர்களின் இறப்பு உள்ளூர் அதிகாரிகளின் பதிவுக்கு தேவையற்றதாகவும் உள்ளது.

Manchester Evening News (MEN) இன் பத்திரிகையாளரான ஜெனிஃபர் வில்லியம்ஸ் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வின் படி, வீடற்ற மக்கள் பலரின் இறப்பு குறித்து மட்டும் இங்கிலாந்தில் விசாரிக்கப்படுவதே இல்லை என்பதோடல்லாமல், அவர்களைப் பற்றி முறையாக கணக்கிடப்படவுமில்லை என்பது கண்டறியப்பட்டது.

தெற்கு மான்செஸ்டரில் உள்ள Wthenshawe மாவட்ட தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த 30 வயதான டோன் மோர்கன் என்பவர், நகர மையத்தில் Whitworth Street இல் சென்ற மாதத்தில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. ஞாயிறன்று அதிகாலையில் சாலை மூடப்பட்டிருந்த நிலையில், MEN இன் பொதுமக்கள் உறுப்பினர் ஒருவர் சொல்ல நேர்ந்ததால் மட்டுமே அவரது மரணம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதற்குள்ளாக ஒரு நிருபர் பொலிசை அழைத்ததனால், சாலை மீண்டும் திறக்கப்பட்டு, மோர்கனின் மரணம் பற்றி சந்தேகத்திற்கு இடமின்றி அறிவிக்கப்பட்டது. அடுத்த நாள், வில்லியம்ஸின் சக பணியாளர்களில் ஒருவர் ஏனைய தூங்குவதற்கு இடமின்றி கஷ்டப்படும் நபர்களிடம் சென்று மோர்கனுக்கு என்ன நிகழ்ந்தது என்று கேட்டார். மோர்கன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் இறந்த இடத்தில் இருந்து ஒருசில அடி தொலைவில் மற்றொரு தூங்குவதற்கு வீடற்ற நபரான லூக் உர்ம்ஸ்டன் என்பவர் இறந்துவிட்டதாக அவரிடம் அவர்கள் கூறினர். நகரின் மையப்பகுதி எங்கிலும் செல்வந்தர்களுக்காக கட்டப்படும் ஆடம்பரமான குடியிருப்பு பகுதிகளை கட்டமைக்கும் சில டசின் கணக்கிலான கிரேன்கள் நிறுத்தப்பட்டிருந்த அருகாமை பகுதிக்குள் இருவருமே இறந்து கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடற்ற மக்களின் இறப்பு பற்றி நகர பிரேத விசாரணை மேற்கொள்பவரிடம் நடத்தப்பட்ட ஒரு விசாரணை, கடந்த ஐந்து ஆண்டுகளில் அதகரித்தளவினதாக நிகழ்ந்த 50 இறப்புக்கள் பற்றி விசாரித்ததில் இருந்து அவர்கள் அனைவரும் நிரந்தரமான தங்குமிடம் இல்லாதவர்கள் என்பதைக் கண்டறிந்தது. அந்த 50 பேர்களில், 48 பேர்கள் ஆண்கள் ஆவர், அவர்களில் மிக இளையவர் 28 வயதும் முதியவர் 90 வயதுமுள்ளவராவர்.

தூங்குவதற்கு வீடற்றவர்களுக்காக வேலை செய்யும், செயின்ட். முங்கோவின் அறக்கட்டளை “தெருக்களில் இறப்போர்” குறித்து எடுத்த கணக்கெடுப்பு, சேவைகளின் பற்றாக்குறையுடன் அதிகரித்துவரும் பிரச்சினைகளையும் மற்றும் தூங்குவதற்கு வீடற்றரோர்களின் இறப்புக்களின் எண்ணிக்கையில் நிகழும் அதிகரிப்பையும் சுட்டிக்காட்டுகிறது.

இந்த அறிக்கை, செயின்ட். முங்கோவினதும் மற்றும் இங்கிலாந்தின் அனைத்து பிராந்தியங்களிலும் செயல்படும் ஏனைய 71 சேவை வழங்குநர்களதும் உட்பட, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. 2010 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் லண்டனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 158 என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 40 என பதிவு செய்யப்பட்டிருந்தது, இந்த எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இத்தகையோரின் மொத்த இறப்புக்களை விஞ்சிவிட்டது.

சில கணக்கெடுப்பு கண்டுபிடிப்புகள், கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 63 சதவிகிதம் பேர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு இறப்பு நிகழ்ந்ததை பார்த்ததாக தெரிவிப்பதை வைத்துத்தான் தூங்குவதற்கு இடமின்றி கஷ்டப்படும் மக்களின் சிறு பகுதி மட்டுமே ஆய்வு செய்யப்படுவதாக சுட்டிக்காட்டுகிறது, ஆனால், வெறும் 23 சதவிகிதத்தினர் மட்டுமே, தூங்குவதற்கு இடமின்றி கஷ்டப்படுவோரின் மரணங்களை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அனுபவத்தைப் பற்றி கூறுகின்றனர்.

பதிலளித்தவர்களில் 64 சதவிகிதம் பேர், ஐந்து ஆண்டு காலத்திற்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது தூங்குவதற்கு இடமின்றி கஷ்டப்படுவோருக்கு ஒரு உடனடி தங்குமிடத்தை தற்போது அணுகுவது என்பது மிகவும் கடினமானதாக உள்ளது என தெரிவித்தனர். சுமார் 70 சதவிகித பதிலளிப்பவர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக தூங்குவதற்கு இடமின்றி கஷ்டப்படுவோருக்கு மன நலத்திற்கான சேவைகளை அணுகுவது தான் மிகவும் கடினமானதாக உள்ளது என கூறுகின்றனர்.

மனநலம், பொருள் பயன்பாடு அல்லது சமூக பாதுகாப்பு மற்றும் குடியேற்றம் போன்றவற்றில் சிறப்பு பயிற்சி பெற்ற நபர்களைக் கொண்டதாக வெறும் 30 சதவிகித சேவைகளே உள்ளன என பதிலளிப்பவர்கள் கூறினர். புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்ற நிலையில், இதுவரை 23 சதவிகிதம் பேர் மட்டுமே சிறப்புப் பயிற்சி பெற்று, 77 சதவிகிதத்தினர் எதுவும் தெரியாத நிலையில், இந்த துறைகளில் சிறப்பு பயிற்சிகள் பெற்றவர் பற்றாக்குறையினால், லண்டனில் உள்ள சேவைகளில் கணிசமான பாதிப்பை இது ஏற்படுத்துகிறது.

இங்கிலாந்தில் சென்ற ஐந்து ஆண்டுகளில் தூங்குவதற்கு இடமின்றி கஷ்டப்படுவோரின் எண்ணிக்கை வீதம் 97 சதவிகிதமாக உயர்ந்துவிட்ட அதே நேரத்தில், நிதி வழங்கலில் அளவு குறைந்து காணப்படுவதாக 31 சதவிகித தெருவில் இறங்கி சேவை செய்யும் மையங்கள் தெரிவித்தன.

சிறப்பு சேவைகளை அணுகுவதும் தங்குமிடங்களை பெறுவதும் மிகவும் கடினமாகி வருகின்ற நிலையில் தெருக்களில் வீடற்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லை. ஒரு வீடற்ற நபர் இறந்து போகும் சராசரி வயது ஆணுக்கு 47 ஆகவும், பெண்ணுக்கு 43 ஆகவும் உள்ளது.

தூங்குவதற்கு இடமின்றி மக்கள் கஷ்டப்படும் பிரச்சினையை துடைத்தெறிவதற்கு ஒரு தசாப்த காலத்திற்குள் 100 மில்லியன் பவுண்டுகள் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும் என்ற அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பை பல எக்காள முழக்கங்கள் சூழ்ந்தன.

பெருமளவு மக்களை தெருவில் அனாதரவாய் திரிவதற்கு நிர்பந்திக்கும் இந்த சமூக பேரழிவிற்கு இது பரந்தளவில் அதிருப்தியான பதிலாகவே உள்ளது. இங்கிலாந்தில் தூங்குவதற்கு இடமின்றி மக்கள் கஷ்டப்படும் நிலை தொடர்ந்து ஏழு வருடங்களாக அதிகரித்துவிட்டதை உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன — அதாவது பழமைவாத-மிதவாத ஜனநாயக (Conservative-Liberal Democrat) அரசாங்கம் 2010 ல் அதிகாரத்திற்கு வந்த பின்னர் 169 சதவிகிதமாக அது உயர்வு கண்டுள்ளது. இந்நிலையில், வரவிருக்கும் தசாப்தத்தில் இது குறித்து செலவிடும் அளவிற்கு நிதியில் புதிய ஒதுக்கீடு எதற்கும் வாய்ப்பில்லை என்பதை டோரி வீடமைப்புச் செயலர் James Brokenshire ஒப்புக் கொண்டார்.