ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Infighting deepens between rival factions of Sri Lankan elite

இலங்கை ஆளும் உயரடுக்கின் போட்டிப் பிரிவுகளுக்கு இடையிலான உள் மோதல் ஆழமடைகிறது

By Deepal Jayasekera 
30 October 2018

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அரசியல் ஆட்சிக் கவிழ்ப்பில் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த இராஜபக்ஷ நேற்றுக் காலை கடமைகளைப் பொறுப்பேற்றார். அன்று மாலை, அரசியலமைப்பிற்கு முரணான சதியில் வெளியேற்றப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, தானே இன்னமும் நாட்டின் பிரதமர் என பிரகடனம் செய்தார்.

வெள்ளிக்கிழமை ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னர் கொழும்பு அரசியல் ஸ்தாபனம் கொந்தளிப்பில் உள்ளது. விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) உடன் முந்தைய தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் அங்கமாக இருந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (ஸ்ரீ.ல.சு.க.) சிறிசேனவின் பிரிவானது, இப்போது 2015க்கு முன்னர் தீவின் ஜனாதிபதியாக இருந்த இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ.ல.சு.க. இன் முன்னாள் எதிரிகளுடன் ஐக்கியப்பட்டுள்ளது.

இலங்கையின் ஆளும் உயரடுக்கிற்குள் வெடித்துள்ள கசப்பான மோதல்கள், மோதிக்கொள்ளும் கோஷ்டிகள் கூறிக்கொள்வது போல் உழைக்கும் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் சம்பந்தமாக எந்தவொரு அக்கறையும் கொண்டிருக்கவில்லை. மாறாக அது, பூகோள நெருக்கடியால் உக்கிரமடைந்துள்ள, நாட்டின் வெடிக்கும் நிலையில் உள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கும் மற்றும் தமது வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தினரிடமிருந்தும் ஏழைகளிடமிருந்தும் பெருகி வரும் எதிர்ப்புக்கும், பெருநிறுவன மேற்தட்டின் நலன்களின் பேரில், எவ்வாறு சிறந்த முறையில் பிரதிபலிப்பது என்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

புதிய ஆட்சியை பலப்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, சிறிசேன நேற்று 10 அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களை நியமித்தார். இராஜபக்ஷ நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதான அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ளார்.

சனிக்கிழமையன்று, அனைத்து முந்தைய அரசாங்க அமைச்சு செயலாளர்களதும் பதவி முடிவுக்கு வருவதாக சிறிசேன அறிவித்தார். சிறிசேன, இராஜபக்ஷ மற்றும் ஒரு சிறிய குழுவே புதிய ஆட்சியை கொண்டு நடத்த உள்ளது போன்று தோன்றுகிறது.

அதே சமயம், அரசாங்கம் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பரிவாரங்களை ஆயிரத்தில் இருந்து 10 ஆக குறைத்துவிட்டது. விக்கிரமசிங்க தங்கியுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகைக்கான மின்சாரத்தை சிறிசேன துண்டித்ததை அடுத்து அவரது ஆதரவாளர்கள் ஜெனரேட்டர்களை கொண்டு வந்தனர். பெருந்தொகையான ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் அலரி மாளிகையில் முகாமிட்டுள்ளனர்.

விக்கிரமசிங்க அலரி மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு அரசாங்க இறுதி நிபந்தனைகளை விடுத்து, அவர் வெளியேறாவிட்டால் "நடவடிக்கை" எடுக்க நேரும் என்று எச்சரித்துள்ள நிலையில், வன்முறை மோதல்கள் வெடிக்கக் கூடும். விக்கிரமசிங்கவின் பதவி நீக்கப்பட்டதையும் சிறிசேன பாராளுமன்றத்தை ஒத்தி வைத்துள்ளதையும் எதிர்த்து இன்று ஐ.தே.க. அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை வீதிக்கு இறங்குமாறு அழைத்துள்ளது. விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தை கூட்டுமாறும் அப்போது தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்றும் கூறுகின்றார்.

திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமசிங்க, சிறிசேன தனது சதித்திட்டத்தை நியாயப்படுத்தும் முயற்சியில் முதல்நாள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை முழுவதும் பொய் என தெரிவித்தார் (பார்க்க: "இலங்கை ஜனாதிபதி தனது அரசியல் சதிக்கு முன்வைக்கும் வஞ்சக நியாயப்படுத்தல்கள்"). தனது பங்கிற்கு விக்கிரமசிங்க, அகற்றப்பட்ட அரசாங்கத்தை பற்றி தனது சொந்த பொய்களோடு ஒரு கவர்ச்சியான சித்திரத்தை காட்ட முயற்சித்தார்.

தனது அரசாங்கம் "நாட்டில் முன்னொருபோதும் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை உருவாக்கியுள்ளது" என்றும், மனித உரிமைகளையும் ஊடக சுதந்திரத்தையும் பாதுகாத்தது மற்றும் வாழ்க்கை தரத்தையும் சமூக நிலைமைகளையும் உயர்த்தியது என்றும் விக்கிரமசிங்க கூறிக்கொண்டார்.

இந்த கூற்றுகள் அனைத்தும் அரசாங்கத்தின் உண்மையான நடவடிக்கைகளை மூடிமறைக்கும் நோக்கத்தை கொண்டிருந்தன.

சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷவின் அரசாங்கத்தீன் மீதான பரந்த அதிருப்தி மற்றும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது நடந்த அட்டூழியங்கள் உட்பட ஜனநாயக உரிமைகள் மீதான அதன் ஈவிரக்கமற்ற தாக்குதல்கள் சம்பந்தமான எதிர்ப்பையும் சுரண்டிக்கொண்டே 2015 ஜனாதிபதித் தேர்தலில் பதவிக்கு வந்தார்.

எவ்வாறெனினும், பெருகிவரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்ட சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தி வந்தனர். அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்தியது. அது போராட்டம் நடத்திய தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான பொலிஸ் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டதுடன், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை தொடர்ந்து முன்னெடுத்தது.

அவருடைய அறிக்கையின் முடிவில், விக்கிரமசிங்க அறிவித்ததாவது: "ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட நாம் உறுதியாக நிற்கிறோம்" மற்றும் "இந்த நாட்டை அரசியலமைப்பு-விரோத சர்வாதிகாரம் ஆளுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்."

இந்த அறிவிப்புகள் பயனற்றவை. விக்கிரமசிங்கவின் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. ஆகியவை, கடந்த 70 ஆண்டுகளாக, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி மற்றும் பலவீனப்படுத்தி முதலாளித்துவ ஆட்சியை பாதுகாக்கும் நோக்கில், நாட்டின் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான இனவாத பாரபட்சங்களை முன்னெடுப்பது உட்பட ஜனநாயக உரிமைகள் அடக்குவதன் மூலமே இலங்கையை ஆட்சி செய்து வந்துள்ளன.

அமெரிக்கா, ஏனைய மேற்கத்தைய சக்திகள் மற்றும் இந்தியாவின் ஆதரவை தான் கொண்டிருப்பதாக விக்கிரமசிங்க சமிக்ஞை செய்தார். இந்த நாடுகள் அரசாங்கம் மாறியதை விரும்பாவில்லை. "இந்த சிறிய தீவின் மக்கள் மட்டுமல்ல, இந்த சமயத்தில் உலகின் உலகின் ஏனைய பகுதிகளும் எங்களுடன்தான் இருக்கின்றன,” என விக்கிரமசிங்க தெரிவித்தார். முந்தைய நாள் மாலை, அவர் அமெரிக்கா, முக்கிய ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் இந்தியாவினதும் இராஜதந்திரிகளுடன் அலரி மாளிகையில் சந்தித்து பேசினார்.

சாதாரண மக்கள் மத்தியில் முற்றிலும் மதிப்பிழந்த விக்கிரமசிங்க, அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பிரதான சக்திகளின் ஆதரவோடு அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்ற முயல்கிறார்.

குறிப்பிடத்தக்க வகையில், நேற்று காலை அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நாவேர்ட், "அனைத்து தரப்பினரும் அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகளிலிருந்து விலகி நிற்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். பின்னர் "சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஜனாதிபதி பாராளுமன்றத்தை உடனடியாக மீண்டும் கூட்ட வேண்டும் மற்றும் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தங்கள் அரசாங்கத்தை யார் வழிநடத்துவார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவர்களின் பொறுப்பை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும்," என அவர் அறிவித்தார்.

வாஷிங்டன் விக்கிரமசிங்கவையும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அவரது அழைப்பையும் வாஷிங்டன் ஆதரிக்கின்றது என்பதை இந்த அறிக்கை தெளிவாக சமிக்ஞை செய்கின்றது.

வாஷிங்டனின் கவலைகளுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2005 மற்றும் 2015 க்கு இடையில், இராஜபக்ஷவின் முந்தைய அரசாங்கம், அதன் கொடூரமான தமிழ்-விரோத யுத்தத்தை முன்னெடுத்து, மேலும் மேலும் எதேச்சதிகார ஆட்சிக்கு திரும்பிய நிலையிலும், அதை ஆட்சியில் இருந்த அமெரிக்க அரசாங்கங்கள் ஆதரித்தன. எவ்வாறெனினும், 2009ல் புலிகளின் தோல்வியின் பின்னர், இராஜபக்ஷ அரசாங்கம் பெய்ஜிங் உடனான நெருக்கமான பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை வளர்த்த நிலையில், அமெரிக்கா மேலும் மேலும் அதற்கு விரோதமாக திரும்பியது.

இந்த உறவுகளை முறித்து, மூலோபாயரீதியாக அமைந்துள்ள தீவை மீண்டும் அதன் எல்லைக்குள் கொண்டுவருவதற்காக, வாஷிங்டன், புதுடில்லியின் ஆதரவுடன் இலங்கையில் 2015 ஜனாதிபதித் தேர்தலில் சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டுவர ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை மேற்கொண்டது. விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இந்த நடவடிக்கையின் முக்கிய பங்காளிகளாக இருந்தனர்.

அதிகாரத்திற்கு வந்த பின்னர், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், வெளியுறவு கொள்கையை சீனாவில் இருந்து விலக்கி அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பக்கம் திருப்பியது.

வெள்ளிக்கிழமை ட்ரம்ப் நிர்வாகத்தின் அறிக்கைகள், சீனாவை நோக்கி நகரும் ஒரு அரசாங்கம் அதிகாரத்துக்கு வர அனுமதிக்கத் தயாராக இல்லை என்று காட்டுகின்றன. நேற்று, வாஷிங்டன் இலங்கையில் உள்ள தனது பிரஜைகளுக்கு ஒரு பயண எச்சரிக்கையை வெளியிட்டது. ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறக் கூடும் என அது எச்சரித்தது. இதேபோன்ற பயண எச்சரிக்கைகள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் விடுக்கப்பட்டுள்ளன.

மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படும் இந்தியா, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் மீண்டும் திரும்புவதற்கு தனது விருப்பத்தை சுட்டிக் காட்டியுள்ளதுடன், இராஜபக்ஷ தனது ஆட்சியை பலப்படுத்துவதில் சமாளித்துக்கொண்டால் அவருடனும் வேலை செய்யும் தேர்வையும் தன்னுடன் வைத்திருந்தது.

இந்த மாற்றமானது அமெரிக்கா, மேற்கத்தைய சக்திகள் மற்றும் இந்தியாவுக்கும் அவற்றின் மூலோபாய நலன்களுக்கு குழி பறிக்கப்படாது என்று உத்தரவாதம் அளிக்கும் முயற்சியில், சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வெளிநாட்டு தூதர்களின் சந்திப்பு ஒன்றை நேற்று ஏற்பாடு செய்திருந்தார்.

ஒரு எதிர்க்கட்சி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), போட்டிக் கன்னைகளில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் ஒரு போலித்தனமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. சிறிசேன, விக்கிரமசிங்க மற்றும் இராஜபக்ஷவுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. "மக்கள் சக்தியை" கட்டியெழுப்புவதற்காக போட்டி கன்னைகளில் உள்ள அனைத்து முற்போக்கான சக்திகளையும் அணிதிரட்டுவதாக ஜே.வி.பி. கூறுகிறது.

2005 ஜனாதிபதித் தேர்தலில் இராஜபக்ஷவை பதவிக்கு கொண்டுவருவதில் ஜே.வி.பி. ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. இராஜபக்ஷ புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை புதுப்பித்து, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகள் மீது நடத்திய கொடூரமான தாக்குதல்களுக்கும் ஜே.வி.பி. உற்சாகமாக ஆதரவளித்தது. 2010ல், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவளிப்பதற்காக யூ.என்.பி. உடன் ஜே.வி.பி.யும் சேர்ந்துகொண்டது.

2015 ஜனவரியில் சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக ஜே.வி.பி. மீண்டும் ஐ.தே.க. உடன் இணைந்து கொண்டது. அவர்களது நாளைய ஆர்ப்பாட்டம், ஆளும் உயரடுக்கின் தற்போதைய நெருக்கடியின் உண்மையான அடிப்படை பிரச்சினைகளையும், தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் சமூக மற்றும் அரசியல் போராட்டங்களை நசுக்குவதற்கு அவர்கள் தயாரிப்பு செய்வதையும் மூடி மறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

தொழிலாள வர்க்கம் இந்த பொறிகளை நிராகரித்து, ஒரு உண்மையான மாற்றீட்டிற்கான போராட்டத்தில் கிராமப்புற ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை வழிநடத்துவதற்கு, ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் சுயாதீனமான ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். அந்த மாற்றீடு, சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கமே ஆகும்.