ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump delivers fascistic tirade at the United Nations

ஐக்கிய நாடுகள் சபையில் ட்ரம்ப் பாசிசவாத ஆவேச உரை வழங்குகிறார்

By Bill Van Auken
26 September 2018

செவ்வாயன்று இரண்டாவது முறையாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது மன்றத்தின் முன்தோன்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மனிதயினம் முகங்கொடுக்கும் ஆழ்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான ஒரே வழியாக பிற்போக்குத்தனமான தேசியவாதம், “இறையாண்மை" மற்றும் "தேசபக்தியை" கையிலெடுத்த அதேவேளையில், இராணுவ ஆக்ரோஷம் மற்றும் முற்றுமுதலான வர்த்தக போரைக் கொண்டு அச்சுறுத்தி, ஒரு பாசிசவாத ஆவேச உரை வழங்கினார்.

ஓராண்டுக்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி வட கொரியாவின் தலைவர் கிம் யொங்-யுன் ஐ "ராக்கெட் மனிதர்" என்ற முட்டாள்தனமான புனைபெயரைக் கொண்டு குறிப்பிட்டு, அந்நாட்டையும் அதன் 25 மில்லியன் மக்களையும் "ஒட்டுமொத்தமாக அழிக்க" அவர் "தயாராக இருப்பதாக, விரும்புவதாக, வல்லமை இருப்பதாக" அதே அரங்கிலிருந்து அறிவித்து அந்த உலக அமைப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தார்.

இம்முறை, அவரது தற்பெருமை பீற்றிய கருத்துக்களின் பிற்போக்குத்தனம் வேறுவிதத்தில் வித்தியாசமாக இருந்ததுடன், அதன் சொந்த வழியில், உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையில் ஆழ்ந்து நடந்து வரும் உடைவை வெளிப்படுத்தியது.

ட்ரம்பின் உரை அந்த உலக அமைப்பின் அஸ்திவாரத்தையே அசைப்பதற்கு ஒத்ததாக இருந்தது, கடந்த முறை அங்கே பங்கெடுத்ததற்குப் பின்னர் இருந்து இந்த ஆண்டில் "அசாதாரண முன்னேற்றம்" செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். “எங்கள் நாட்டு வரலாற்றில் ஏறக்குறைய வேறெந்த நிர்வாகத்தையும்" விட அவர் பதவிகாலத்தில் அவர் நிறைய செய்து முடித்திருப்பதாக அவரது பெருமைப்பீற்றல், அங்கே கூடியிருந்த இராஜாங்க அதிகாரிகள் மற்றும் அரசு தலைவர்களிடம் இருந்து வெளிப்படையான ஏளனச் சிரிப்பைக் கொண்டு வந்தது, இது அவரது தயாரிக்கப்பட்ட உரையை தொடங்க அவரை நிர்பந்தித்ததுடன், “அந்த விடையிறுப்பை நான் எதிர்பார்க்கவில்லை,” என்று ஒப்புக் கொண்டார்.

ஓர் உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறைக்கு இனியும் அமெரிக்கா உத்தரவாதம் அளிப்பவராக இல்லை, மாறாக உலகெங்கிலும் இராணுவரீதியிலும் பொருளாதாரரீதியிலும் குழப்பத்தையும் தொந்தரவையும் பரப்பி வரும் ஒரு விதமான அடாவடி அரசாக உள்ளது என்பது, அண்மித்து உலகளவில் உணரப்பட்டிருப்பதை அந்த "விடையிறுப்பு" அடிக்கோடிட்டது. இந்த மாற்றத்திற்கு ட்ரம்ப் காரணமல்ல, மாறாக அவர் பல தசாப்தங்களாக அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த சீரழிவின் ஆளுருவாக உள்ளார்.

அமெரிக்கா முதல் நாடாக எந்த அமைப்பிலிருந்து வெளியேறியதோ, அந்த ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் இருந்து தொடங்கி, அமெரிக்க அதிகாரிகளைப் போர் குற்றங்களுக்குப் பொறுப்பாக்க முயன்றால் தடையாணைகள் விதிக்க வாஷிங்டன் எதனை அச்சுறுத்தியதோ, அந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வரையில், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளை ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு தொல்லைக்கு உட்படுத்துவதை எது குறுக்காக வெட்டுகிறதோ அந்த புலம்பெயர்வு மீதான ஐ.நா. உலகளாவிய உடன்படிக்கை வரையில், சர்வதேச அமைப்புகளை அவர் நிர்வாகம் புறந்தள்ளி இருப்பதை ட்ரம்ப் அவர் உரையில் வெளிப்படுத்தினார்.

அவரது ஆரம்ப உரைக்கு கிடைத்த ஏளனமான விடையிறுப்புக்குத் தடைபடாமல், ட்ரம்ப் "முன்னேற்றத்திற்கான" அவரின் நடவடிக்கைகள் குறித்து உச்சரிக்க நகர்ந்தார், அமெரிக்க வரலாற்றில் "மிகப்பெரிய வரி வெட்டுக்கள்", எல்லையில் சுவர் கட்டுமானம் தொடங்கப்பட்டது மற்றும் இராணுவ செலவுகளுக்கான 716 பில்லியன் டாலர் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டமை ஆகியவற்றை மேற்கோளிட்டு, அமெரிக்க "பங்குச் சந்தை முன்னெப்போதும் இல்லாத உயரத்தில் இருப்பதாக" சுட்டினார்—ஆனால் இவையெல்லாம் நெருக்கடியில் சிக்கிய அமெரிக்க முதலாளித்துவ சமூகத்தைக் குணாம்சப்படுத்தும் பரந்த சமூக சமத்துவமின்மை, போலிஸ் அரசு ஒடுக்குமுறை மற்றும் கடிவாளமற்ற இராணுவவாதத்தின் மொத்த வெளிப்பாடுகளாகும்.

அணுஆயுத ஒழிப்புக்கான வாஷிங்டனின் முயற்சிகள் நிறைவடையும் வரையில் அந்நாட்டிற்கு எதிரான அமெரிக்க தடையாணைகள் நீடித்திருக்கும் என்பதை அவர் வலியுறுத்தி வருகின்ற போதினும், இந்தவொரு நிகழ்முறை கொரிய தீபகற்பத்தில் விரைவிலேயே இராணுவ மோதலுக்கு விழக்கூடும் என்கின்ற நிலையில், வட கொரியாவின் கிம் உடனான அவரின் பேச்சுவார்த்தைகள் "பூதாகரமான மோதலைச் சமாதானத்திற்கான தைரியமான முன்னெடுப்பால்" பிரதியீடு செய்யப்பட்டிருப்பதாக அவர் வாதிட்டார்.

ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக அவரின் மிகவும் போர்வெறி அச்சுறுத்தல்களை முன்வைத்தார். ஈரான் மற்றும் P5+1 எனப்படும் அமெரிக்கா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு அவையில் உள்ள ஏனைய நிரந்தர உறுப்பினர்கள் அத்துடன் ஜேர்மனி ஆகியவற்றிற்கு இடையிலான 2015 அணுசக்தி உடன்படிக்கையை ஒருதலைபட்சமாக விட்டொழித்த அவரின் முடிவைக் குறித்து பெருமைபீற்றினார்.

ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகள் மீது முழுமையான தடையாணையை அமுல்படுத்துவது மற்றும் அமெரிக்கா மேலாதிக்க சர்வதேச வங்கியியல் அமைப்புமுறையிலிருந்து ஈரானை வெளியேற்றுவதற்கான முயற்சி உட்பட இன்னும் அதிக தண்டிக்கும் வகையிலான தடையாணைகள் நவம்பர் 5 இல் இருந்து நடைமுறைக்கு வரவிருக்கின்றன, இந்த நடவடிக்கைகள் ஈரானின் பொருளாதாரத்தை முழுமையாக முடக்கி, இப்போதிருக்கும் ஆட்சியை கவிழ்த்து, அமெரிக்காவை மையமாக கொண்ட எரிசக்தித்துறை பகாசுர நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தடையின்றி அந்நாட்டின் எண்ணெய் வளத்தை உறுதிப்படுத்தி வைக்கும் வகையில் ஒரு வாடிக்கையாளர் அரசை நிறுவுவதை நோக்கமாக கொண்டவையாகும்.

ட்ரம்ப் ஈரானிய தலைவர்களைக் கொதிப்போடு கண்டித்து உரை வழங்கினார், அவர்கள் "குழப்பங்கள், மரணங்கள் மற்றும் அழிவை விதைப்பதாக" அறிவித்தார். அவர் தொடர்ந்து கூறினார்: “அவர்கள் அவர்களின் அண்டைநாட்டவர்கள் அல்லது எல்லைகளை மதிப்பதில்லை, அல்லது தேசங்களின் இறையாண்மை உரிமைகளை மதிப்பதில்லை. அதற்கு மாறாக, ஈரானிய தலைவர்கள் தங்களைத்தாங்களே செழிப்பாக்கிக் கொள்ளவும், மத்தியக் கிழக்கு மற்றும் தொலைதூரத்திற்கும் வன்முறை குழப்பங்களைப் பரப்பவும் அத்தேசதின் ஆதாரவளங்களைச் சூறையாடுகின்றனர்.

“ஈரானிய மக்கள், தங்களின் தலைவர்கள் ஈரானிய கருவூலத்தில் இருந்து பில்லியன் கணக்கிலான டாலர்களைக் கையாடல் செய்துள்ளார்கள் என்பதன் மீதும், பொருளாதாரத்தின் மதிப்பார்ந்த பகுதிகளை அபகரித்து உள்ளதுடன், மக்களின் மதரீதியிலான சொத்துக்களை கொள்ளையடித்துள்ளனர், இதெல்லாம் அவர்களின் சொந்த பைகளில் செல்வதற்கும் அவர்களின் பினாமிகளைப் போருக்கு அனுப்புவதற்காகவும் செய்துள்ளனர், இதெல்லாம் சரியில்லை என்றும் கோபப்படுவது சரியானதே,” என்றார்.

மத்திய கிழக்கில் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுள்ள ஊனமாக்கி உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு போர்களைத் தொடுத்துள்ளதும், ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை நடத்த அல் கொய்தா தொடர்புபட்ட போராளிகள் குழுக்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ள ஓர் அரசால், வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரசால் அமெரிக்கா ஆளப்படுகிறது என்பதற்கு ஒரு துல்லியமான வரையறையை வழங்க, அவர் கூறிய பந்திகளில் ஈரான் என்பதற்கு பதிலாக அமெரிக்கா என்பதைக் கொண்டு மிகச் சிறியளவில் மாற்ற வேண்டியுள்ளது. உள்நாட்டில், அமெரிக்காவின் நிதியியல் செல்வந்த தட்டுக்கள் 2008 நிதியியல் உருதலில் அதன் நஷ்டங்களை ஈடுகட்ட அந்நாட்டின் சமூக செல்வவளத்தில் பத்து ட்ரில்லியன் கணக்கான டாலர்களைக் கொள்ளையடித்துள்ளன.

ஈரானிய ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி ஐ.நா. பொதுச்சபைக்கு வழங்கிய அவரின் உரையில், வாஷிங்டன் ஈரானுக்கு எதிராக "ஒருவித பொருளாதார பயங்கரவாத வடிவத்தை" தொடுத்து வருகிறது என்பதோடு, “பயமுறுத்தி திணிக்கும்" ஒரு நடைமுறைக்கு இட்டுச் செல்லும் விதத்தில், அது “பலமே உரிமையைத் தீர்மானிக்கிறது" என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வெளியுறவு கொள்கையைப் பின்பற்றி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

ஈரானிய அணுசக்தி உடன்படிக்கை மீது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளுக்காக நட்புடன் அணுகுவதை நிராகரித்தது. “அமெரிக்க அரசு அது பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்த அதே அரசாங்கத்தைத் தூக்கிவீசும் அதன் திட்டத்தை அது இரகசியமாக கூட வைக்கவில்லை என்பது எதிர்முரணனானது!” என்றவர் தெரிவித்தார்.

சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான வாஷிங்டனின் கோரிக்கையை மீளவலியுறுத்திய அதேவேளையில், இரசாயன ஆயுதங்களைப் பிரயோகிப்பதற்கு விடையிறுப்பாக —இதுபோன்றவொரு சம்பவத்தை நடத்துவதற்கு மேற்கத்திய ஆதரவிலான இஸ்லாமியவாத போராளிகள் குழுக்களுக்கான ஓர் அழைப்பு— இராணுவ தலையீடு செய்வதற்கான அமெரிக்க அச்சுறுத்தல்களை மீளவலியுறுத்திய ட்ரம்ப், சிரியாவைக் கண்டிப்பதையும் விட்டுவைக்கவில்லை.

இலத்தீன் அமெரிக்கா மீதான அமெரிக்க மேலாதிக்கத்தை வலியுறுத்த நூற்றாண்டு பழமையான Monroe கோட்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி பலமாக வலியுறுத்தினார், “இந்த பூகோளப்பகுதியிலும் எங்களின் சொந்த விவகாரங்களிலும் வெளிநாடுகளின் குறுக்கீடுகளை நாங்கள் நிராகரிக்கிறோம்,” என்றவர் அறிவித்தார். இது தெளிவாக அப்பகுதியில் அதிகரித்து வரும் சீன முதலீடு மற்றும் வர்த்தகத்தைக் குறிப்பாக இருந்தது. அவர் வெனிசூலாவில் ஆட்சி மாற்றத்திற்கான வாஷிங்டனின் நோக்கத்தையும் அழுத்தந்திருத்தமாக தெரிவித்தார், அமெரிக்க நேரடி இராணுவ தலையீட்டிலிருந்து அந்நாடு விதிவிலக்காக இல்லை என்பதை அவர் நிர்வாகம் பல முறை தெளிவுபடுத்தி உள்ளது.

ட்ரம்பின் உரையில் சீனா மீதான போர்வெறி கண்டனங்களும் மற்றும் ஓர் அபாயகரமான வர்த்தக போரைத் தூண்டும் ரீதியில் சீனப் பண்டங்களுக்கு எதிராக அவர் நிர்வாகம் திணித்த 250 பில்லியன் மதிப்பிலான இறக்குமதி வரிகள் பற்றி புகழ்வதும் உள்ளடங்கி இருந்தன.

உலக வர்த்தக அமைப்பில் சீனா இணைந்ததில் இருந்து அமெரிக்கா "3 மில்லியனுக்கும் அதிகமான உற்பத்தித்துறை வேலைகளை இழந்திருப்பதாக" வாதிட்டும், அமெரிக்கா "இனியும் அதை சகித்துக் கொண்டிருக்காது, எங்களின் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று அறிவித்தும், அவர் உணர்ச்சிகரமாக அமெரிக்க தொழிலாளர்களின் ஒரு பாதுகாவலராக காட்டிக் கொண்டார். அமெரிக்க தொழிலாளர்களுக்கு அதிக வேலைகளை உருவாக்குவதில் உலகின் முதலிட மற்றும் இரண்டாமிட இரண்டு பொருளாதாரங்களுக்கும் இடையே முற்றுமுதலான வர்த்தக போருக்கான சாத்தியக்கூறு, ஆகச் சிறந்த மூளைக்குழப்பமாகும்.

அமெரிக்காவின் "தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள், நமது நிறுவனங்கள் ஏமாற்றப்படுகின்றன, நமது செல்வவளம் சூறையாடப்படுகிறது,” என்று அமெரிக்காவை ஏதோ சுற்றி வளைக்கப்பட்ட ஒரு நாடாக சித்தரிக்கும் தன்மை ட்ரம்பின் உரைக்குள் ஊடுருவி பரந்த ஒரு கூறுபாடாக இருந்தது.

எண்ணெய் விலை உயர்வுகளோடு OPEC அமெரிக்காவைக் கொள்ளையடிக்கிறது, “இதை நான் விரும்பவில்லை,” என்றார்.

அமெரிக்கா தான் மிகப் பெரியளவில் வெளிநாடுகளுக்கு உதவி வழங்குகிறது, ஆனால் "யாரும் எதுவும் நமக்கு தருவதில்லை,” என்றவர் தெரிவித்தார். இப்போதிருந்து, அவர் தெரிவித்தார், வாஷிங்டன் அமெரிக்காவின் நலன்களைத் தாங்கி பிடிக்கும் நாடுகளுக்கு மட்டுமே உதவி வழங்கும்.

அமெரிக்கா உலகில் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக சித்தரிப்பது ஒருவித வோல்கிஷ்ச் (volkisch) தேசியவாத ஊக்குவிப்புடன் இணைந்ததாகும், இந்த நூலிழை தான் ட்ரம்ப் உரை நெடுகிலும் ஓடியது, இது 1930 களில் ஹிட்லர் மற்றும் முசௌலினியின் வீராவேச பேச்சுக்களைத் தவிர வேறொன்றையும் அந்தளவுக்கு நினைவூட்டவில்லை:

“இன்று இந்த மகாசபையில் உள்ள ஒவ்வொருவருக்குள்ளும், உலகெங்கிலும் இதை செவியுறும் ஒவ்வொருவருக்குள்ளும், தேசபற்று மிகுந்த ஓர் இதயம் உண்டு அது உங்கள் தேசத்திற்கான இதே பலமான அன்பை உணர்கிறது, உங்கள் சொந்த மண்ணுக்கு இதே ஆழ்ந்த விசுவாசத்தை உணர்கிறது. தேசபக்திகளின் இதயத்தில், தேசங்களின் ஆன்மாவில் எரிந்து கொண்டிருக்கும் உத்வேக கனல், சீர்திருத்தம் மற்றும் புரட்சி, தியாகம் மற்றும் சுயநலமின்மை, விஞ்ஞான சாதனைகள் மற்றும் பிரமாண்ட கலை படைப்புகளால் தூண்டப்பட்டுள்ளது.

தேசங்கள், சொந்த மண், தேசபக்தி, “பண்டைய மெய்யறிவு,” இறையாண்மை, விருப்பம்: இந்த அனைத்து உள்ளம்சங்களும் பாசிசம் மேலெழுவதற்கும் மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை உலக போர்கள் வெடிப்பதற்கும் இட்டுச் சென்றன.

ட்ரம்ப் உரையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி சோசலிசத்தின் மீதான கண்டனங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டன. நிதி மூலதனத்தின் செல்வாக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததை விட இப்போது மிகப் பெரியளவில் உள்ள ஒரு நாடான, வெனிசூலாவை பொம்மையாக பயன்படுத்தி, ட்ரம்ப் அறிவித்தார்: “சோசலிசத்தின் அதிகார வேட்கையானது விரிவாக்கம், ஊடுருவல், ஒடுக்குமுறைக்கு இட்டுச் செல்கிறது. உலகின் அனைத்து நாடுகளும் சோசலிசத்தையும் அதன் ஒவ்வொருக்கும் ஏற்படுத்தும் அவலநிலையையும் எதிர்க்க வேண்டும்,” என்று ட்ரம்ப அறிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் வழங்கிய அவரின் பிற்போக்குத்தனமான வசைபாடலில் சோசலிசத்தின் அச்சுறுத்தலுக்கு ஒரு முக்கிய கவனத்தை செலுத்துவது அமெரிக்காவுக்கு உள்ளேயே அரசியல் மற்றும் சமூக பதட்டங்கள் முன்னேறிய நிலையில் இருப்பதற்கான தவறுக்கிடமற்ற அறிகுறியாகும். இப்போதிருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு அதிகரித்த ஆழ்ந்த விரோதம் கொண்டுள்ள பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அடிமட்டத்திலிருந்து எழும் ஒரு கிளர்ச்சியை அது முகங்கொடுத்து வருகிறது என்பதன் மீது நிதியியல் மற்றும் பெருநிறுவன செல்வந்த தட்டுக்களுக்குள் நிலவும் அச்சத்தை அது வெளிப்படுத்துகிறது.