ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

හාම්පුතුන්ගේ සම්මේලනය වතු කම්කරුවන්ගේ වැටුප් ඉල්ලීම ප්‍රතික්ෂේප කරයි

இலங்கை முதலாளிமார் சம்மேளனம் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கைகளை நிராகரிக்கிறது

By M. Thevarajah
20 October 2018

பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் கடந்த திங்களன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தோட்ட தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஒரேயடியாக நிராகரித்துள்ளது. தற்போது கொடுக்கப்படும்  500 ரூபா அடிப்படை நாள் சம்பளத்தை 1,000 வரை நூற்றுக்கு நூறு வீதம் அதிகரிக்குமாறு தேயிலை மற்றும் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கோருகின்றனர். அக்டோபர் 15 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் நூற்றுக்கு 20 சதவீத அதிகரிப்புக்கே ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது தினசரி ஊதியத்தை 100 ரூபாவால் மட்டும் அதிகரிக்க உடன்பட்டுள்ளது. வேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுக்கு இந்த தொகை எந்த விதத்திலும் போதுமானதல்ல.

முதலாளிமார் சம்மேளனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) கட்டுப்பாட்டிலான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU), லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியோடு சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் பங்குபற்றியிருந்தன.

தோட்டக் கம்பனிகள் தங்கள் ஊதிய கோரிக்கையை நிராகரிப்பதையிட்டு தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வலுவான எதிர்ப்பு வளர்ச்சியடைகின்றது. அடிப்படை நாள் சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்கக் கோரியும் தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படும் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகவும், கிட்டத்தட்ட 6,000 தேயிலை மற்றும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் திங்கட் கிழமை யட்டியன்தொட நகரத்தில் பல மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தொழிற்சங்கங்கள் மீதும் கூட்டு ஒப்பந்தத்தின் மீதும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். "நாங்கள் சிறிய சம்பள அதிகரிப்பை பெறக் கூட அடிக்கடி தெருக்களில் இறங்கி போராட வேண்டியுள்ளது. தொழிற்சங்கங்களால் எந்தவொரு பிரயோசனமும் இல்லை. அவர்கள் கையெழுத்திட்ட கூட்டு ஒப்பந்தங்கள் எப்போதும் எங்களுக்கு எதிராகவே இருந்துள்ளன. அத்தகைய கூட்டு ஒப்பந்தங்கள் எங்களுக்கு அவசியம் இல்லை," என அவர்கள் தெரிவித்தனர்.

வானைத் தொடும் விலைவாசி அதிகரிப்புடன் இப்போது கிடைக்கும் வறிய மட்டத்திலான ஊதியம் எந்த வகையிலும் போதுமானதாக இல்லை என்றும், நூற்றுக்கு நூறு சதவீத சம்பள உயர்வு கட்டாயம் வேண்டும் என்றும் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், முந்தைய சந்தர்ப்பங்களில் போல் தங்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என அவர்கள் தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆட்சியில் இருந்த அரசாங்கங்களையும் தற்போதைய சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சியையும் விமர்சித்த அவர்கள், "ஆட்சிக்கு வரும் எல்லா அரசாங்கங்களும் எங்களை ஏமாற்றுகின்றன. அரசாங்கங்கள் அடிக்கடி மாறினாலும் எங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை," என அவர்கள் கூறினர்.

அன்றைய தினமே மஸ்கெலியா, கொட்டகலை அக்கரபத்தனை மற்றும் ஹட்டன் பகுதியிலும் பல தோட்டங்களில் இன்னும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கும் மேலாக இந்த மாதத் தொடக்கத்திலேயே மஸ்கெலியாவில் மறே, பிரௌன்ஸ்விக், மொக்கா மற்றும் காட்மோர் தோட்டங்களிலும் கிட்டத்தட்ட 2,000 தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளரும் இந்த தீவிரமயமாதலானது, முதலாளித்துவ அரசாங்கங்களாலும் முதலாளிகளாலும் அவர்களின் தொழில், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக இலங்கையிலும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மத்தியிலும் பெருகி வரும் பரந்த தீவிரமயமாதலின் ஒரு பாகமாகும்.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பேரம் பேசல் கருவியாக பயன்படுத்தி வந்த தொழிற்சங்கங்கள், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பல தசாப்தங்களாக கொண்டிருந்த சமூக அடித்தளத்தை விரைவாக இழந்து வருவதுடன், தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் அமைதியின்மை தமது கட்டுப்பாட்டை மீறி வளர்ச்சியடையும் என தொழிற்சங்க அதிகாரத்துவம் பீதியடைந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பும் போராளிக் குணமும் பெருகிவரும் நிலையில், அவர்களின் போராட்டத்தை தடம்புரளச் செய்யவும் முதலாளிகளின் தேவைகளுக்கு அவர்களை அடிபணியச் செய்யவும் தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே முயற்சிக்கின்றன.

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் ப. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கமே மேல் கூறப்பட்ட ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தது. அதன் நோக்கம், தொழிலாளர்கள் மத்தியில் அபிவிருத்தியடையும் போராளிக் குணத்தை ஆவியாக்கி அவர்களின் போராட்டத்தை கலைத்து விடுவதே ஆகும். சம்பள கோரிக்கையை கொடுக்காவிட்டால், தான் அரசாங்கத்தில் இருந்து இராஜிநாமா செய்யப் போவதாக திகாம்பரம் அண்மையில் போலியாக அச்சுறுத்தல் விடுத்தார். ஏனைய தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்களைப் போலவே, திகாம்பரமும் தனது வரப்பிரசாதங்களை தக்க வைத்துக்கொள்வதற்காக அங்கும் இங்கும் தாவிக்கொண்டிருக்கும் ஒரு அரசியல் தவளை ஆவார்.

முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்திற்கு உடன்படவில்லை என்றும் 1,000 ரூபா சம்பள கோரிக்கைக்காக தொடர்ச்சியாக போராடுவதாகவும் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அறிவித்துள்ளார். அரசாங்கம் அந்த சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க தவறினால், அடுத்த மாதம் முன்வைக்கப்படும் அதன் வரவு-செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பில் இ.தொ.கா. பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். "அடுத்த பேச்சுவார்த்தையில் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு பெறமுடியும். தீபாவளியை தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்," என தொண்டமான் கூறினார்.

அவருடைய இந்த கருத்தின் நோக்கம், தொழிலாளர்களின் கண்களில் மண் தூவி, அவர்களின் போராட்டத்தை திசைதிருப்பி விடுவதே ஆகும். இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியினதும் தலைவர்களின் அறிக்கைகளும் இதே போல் மோசடியானவை ஆகும்.

தொழிலாளர்களை திசை திருப்பிவிடும் நாடகத்தின் ஒரு பாகமாக, அக்டோபர் 17 அன்று, ஜனாதிபதி சிறிசேனவை சந்தித்த மனோ கணேசன், திகாம்பரம் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுக்கொடுக்க தலையிடுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்காக பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு "ஆலோசனை" கொடுப்பதாக சிறிசேன வாக்களித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்கள் சிறிசேனவின் வாக்குறுதியை ஒரு துளியளவும் நம்பக் கூடாது. புகையிரத மற்றும் தபால் ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கொடுப்பதாக அண்மைய வேலைநிறுத்தங்களின் போது அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை வெளிப்படையாகவே அவர் மீறினார்.

இந்த தொழிற்சங்க தலைவர்கள் அனைவரும் பொய்யர்கள் மற்றும் முதலாளித்துவ அரசினதும் முதலாளிகளதும் நேரடி முகவர்கள் ஆவர். அவர்கள் தொழிலாளர்களின் எந்தவொரு உரிமைகளுக்காகவும் முன்நிற்கவில்லை. உண்மையில் அவர்கள், முதலாளித்துவ அரசாங்கத்தினதும் தோட்டக் கம்பனிகளதும் நலன்களுக்கே அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு எதிராக, தொழிற்துறை பொலிஸ்காரனாக செயற்பட்டு, தொழிலாளர்களின் போராட்டங்களை குழப்புவது தொடக்கம், அவர்களை அரச வேட்டையாடலுக்கு உள்ளாக்குவது வரை முடிந்த அனைத்தையும் தொழிற்சங்கங்கள் செய்கின்றன.

முதலாளித்துவ அரசாங்கத்தினதும் முதலாளிமார்களதும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்களின் சுயாதீனமான ஐக்கியப்பட்ட போராட்டத்துக்கு அவை கடும் விரோதமாக உள்ளன. 2016ம் ஆண்டு சம்பள போராட்டத்தை காட்டிக்கொடுத்த இந்த தொழிற்சங்கத் தலைவர்கள், உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நிபந்தனையை கூட்டு ஒப்பந்தத்துக்குள் நுழைக்கவும் புதிய வருமானப் பகிர்வு நடவடிக்கைக்கும் உடன்பட்டன.

வருமான பகிர்வு நடவடிக்கையின் கீழ், ஒரு தொழிலாளர் குடும்பத்துக்கு 1,000 அல்லது அதற்கு கூடுதலான தேயிலைச் செடிகள் கொடுக்கப்படும். அதன் பராமரிப்பு மற்றும் அறுவடை அனைத்தையும் அவர்கள் செய்ய வேண்டும். கொழுந்தை தாம் நிர்ணயிக்கும் விலைக்கு கம்பனி வாங்கிக்கொள்வதோடு தொழிலாளர்கள் பெற்ற உரம், விவசாய இரசாயனப் பொருட்கள் போன்றவற்றுக்கு கம்பனி கொடுத்த பணத்தை கழித்துக்கொண்ட பின்னர் எஞ்சிய பணத்தையே அது தொழிலாளர்களுக்கு கொடுக்கும்.

அது மட்டுமன்றி, கடந்தகால போராட்டங்கள் மூலம் வென்று தற்போது தொழிலாளர்கள் அனுபவித்து வரும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி உட்பட சமூக உரிமைகள் அபகரிக்கப்படுவதோடு, தற்போது கிடைக்கும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வீடு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளும் அழிக்கப்படுகின்றன. தோட்டத் தொழிலாளர்களை முதலாளித்துவ கம்பனிகளின் குத்தகை விவசாயிகளாக உருமாற்றி, அவர்களை தனித்தனி குடும்பங்களாக உடைத்து கலைத்து விடுவதன் மூலம் அவர்களின் வர்க்க ஐக்கியம் தகர்க்கப்படுகிறது.

அரசாங்கங்களுக்கு அல்லது தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கோ அல்லது தொழிலாள வர்க்கத்தின் வேறு எந்தப் பகுதியினருக்கோ தமது எந்தவொரு உரிமையையும் வெல்ல முடியாது. தபால், இரயில், நீர் விநியோக மற்றும் பல்கலைக்கழக கல்விசார தொழிலாளர்களின் சமீபத்திய போராட்டங்களில் இது நன்கு நிரூபணம் ஆகியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவது, உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படுவது, கொடூரமான வேலை நிலைமைகள் உட்பட தாக்குதல்களின் பின்னணியில் இருப்பது, இலங்கை பெருந்தோட்டத் தொழிற் துறையில் ஆழமடைந்துவரும் நெருக்கடியே ஆகும். உலக சந்தையில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையில் போட்டி தீவிரமடைவதும் உலக முதலாளித்துவ நெருக்கடியினதும் விளைவாக, கேள்வி வீழ்ச்சியடைந்து வரும் நிலைமையின் கீழ், தேயிலை மற்றும் இரப்பர் ஏற்றுமதி வருமானம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.

தொழிற்சங்கங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பானது, மாற்று புதிய அமைப்புகளை உருவாக்கிக்கொள்ள தொழிலாளர்கள் மத்தியில் வளரும் ஆர்வத்தின் அறிகுறியும் வரவேற்கத்தக்க அபிவிருத்தியும் ஆகும்.

எனினும், தொழிற்சங்கங்களை விமர்சிப்பது மற்றும் அவை சம்பந்தமாக கோபத்தை வெளிப்படுத்துவதும் மட்டும் போதாது. தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் சுயாதீனமாக, தங்களது ஜனநாயக வாக்காளிப்பின் மூலம் தேர்ந்தெடுத்துக்கொண்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை எல்லா தோட்டங்களிலும் ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும். இந்த குழுக்களுக்குள் ஜனநாயக முறையில் கலந்துரையாடுவதன் மூலம் சம்பளம் மற்றும் ஏனைய கோரிக்கைகளை சூத்திரப்படுத்திக்கொள்ள முடியும்.

நடவடிக்கை குழு பிரதிநிதிகளின் மாநாடு ஒன்றை கூட்டி, அதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான நனவுபூர்வமான மற்றும் ஒருங்கிணைந்த போராட்டத்தை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம், தோட்டத் தொழிலாளர்கள், இலங்கையில் ஏனைய தொழிலாளர்கள் மற்றும் பிற நாடுகளில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் உட்பட சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் தமது ஐக்கியத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இது ஒரு அரசியல் போராட்டமாகும். சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக பெருந்தோட்டங்கள், வங்கி மற்றும் நிறுவனங்கள் உட்பட முதலாளித்துவ சொத்துக்களை, தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் மக்கள்மயப்படுத்துகின்ற மற்றும் விஞ்ஞானபூர்வமாக சோசலிச முறையில் திட்டமிடப்பட்ட ஒரு பொருளாதார அமைப்புமுறையை நடைமுறைப்படுத்துகின்ற, தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதன் மூலம் மட்டுமே, தோட்டத் தொழிலாளர்களதும் ஏனைய தொழிலாளர் பிரிவினரதும் உரிமைகளை உறுதிப்படுத்த முடியும். அந்த போராட்டத்திற்கு தேவையான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அணிதிரட்டுவதே நடவடிக்கை குழுக்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.