ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Police raid on Mélenchon: The state attacks the Unsubmissive France party

மெலோன்சோன் மீதான போலிஸ் சோதனை: அடிபணியா பிரான்ஸ் கட்சியின் மீது அரசு தாக்குதல் நடத்துகிறது

By Alex Lantier
17 October 2018

பாரிஸில் ஜோன் லூக் மெலோன்சோனின் வீட்டிலும் அவரது அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியின் தலைமையலுவலகத்திலும் நேற்று செவ்வாய் கிழமை போலிஸ் நடத்திய சோதனைகள் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு மிகப்பெரும் தாக்குதலாகும். இது, 2017 ஜனாதிபதி தேர்தலில் பிரெஞ்சு வாக்காளர்களின் 20 சதவீத வாக்குகளை பெற்ற ஒரு அமைப்பிற்கு எதிராக போலியான சாக்குகளைக் கூறி நடத்தப்படுகின்ற ஒரு அரசியல் நடவடிக்கையாகும். அதன் முதல் இலக்கு மெலோன்சோனாக இருக்கின்ற அதேவேளையில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கத்திற்கு தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்துச் செல்கின்ற எதிர்ப்பே அதன் அடிப்படையான இலக்காகும்.

LFI இன் கணிப்பின் படி சுமார் 100 போலிசார் மெலோன்சோனை எழுப்பி அவரும் அவரது உதவியாளர்களும் குடியிருந்த வீடுகளில் தேடுதல்சோதனைகள் நடத்தினர், LFI மற்றும் இடது கட்சியின் -இது 2009 இல் மெலோன்சோனால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு கூட்டணி அரசியல் கட்சியாகும்- தலைமையகங்களில் இருந்த கணினிகளில் இருந்த அத்தனை விபரங்களையும் சேகரித்து எடுத்துச் சென்றனர்.

மெலோன்சோன் போலிசால் தனது வீடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைக் காட்டும் ஒரு காணொளியைப் பதிவு செய்து, சோதனை நடந்து கொண்டிருந்த LFI இன் தலைமையகத்திற்கு வெளியே போராட்டம் நடத்த தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். “வேடிக்கையாய் இருக்கிறது, காலை 7 மணி முதலாக போலிசார் எனது வீடு மற்றும் PG மற்றும் LFI இன் தலைமை அலுவலகங்களை குறிவைத்துள்ளனர்.... நானிருக்கும் ஒட்டுமொத்த இடமும் ஆட்களால் நிரம்பியுள்ளது: இது ஒரு அரசியல் நடவடிக்கை, அரசியல் மூர்க்கத்தன நடவடிக்கை என்பதை தயவுசெய்து சென்று ஒவ்வொருவரிடமும் சொல்லுங்கள்.”

அரசாங்கத் தரப்பினர் இரண்டு வழக்குகளை காரணமாக் காட்டி இந்த சோதனைகளை நடத்தியதாகக் கூறப்படுகிறது: LFI இன் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களது உதவியாளர்களுக்கு வழங்குவதற்காக வழங்கப்படுகின்ற நிதியைக் கொண்டு மெலோன்சோன் LFI இன் பணியாளர்களுக்கு முறையற்ற விதத்தில் ஊதியமளித்ததாக சொல்லப்பட்ட சென்ற ஆண்டின் குற்றச்சாட்டுகள், மற்றும் LFI இன் பிரச்சார நிதிகளிலான ஊழல்கள் குறித்த குற்றச்சாட்டுகள்.

இந்த சந்தேகத்திற்கிடமான குற்றச்சாட்டுகள், LFI மீது தொடுக்கப்பட்ட போலிஸ் சோதனைகளுக்கு நியாயத்தை வழங்கவில்லை. முதலாவது குற்றச்சாட்டு சென்ற ஆண்டில் நவ-பாசிச நாடாளுமன்ற உறுப்பினரான சோஃபி மொன்டேல் கூறியதாகும், தேசிய முன்னணியின் (FN) நிதியாதாரங்களிலான ஊழல்கள் குறித்த அரசின் குற்றச்சாட்டுகளுக்கான பழிவாங்கும் செயலாக வெறுமனே “நான் பரிகாசம் செய்த செயலே அது” என்று அவர் அதற்குப் பின்னர் விளக்கியிருந்தார். அந்த சமயத்தில், அவதூறு வழக்குகள் தொடரவிருப்பதாக மிரட்டுவதன் மூலம் மெலோன்சோன் எதிர்வினையாற்றினார், அத்துடன் அந்தக் கதை பொதுமக்களின் கவனத்தில் இருந்து சடுதியில் மறைந்து விட்டிருந்தது.

இரண்டாவது, Anticor association உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருவதாகும், மெலோன்சோனின் உடனிருந்தவர்களால் வழங்கப்பட்ட சேவைகளுக்கு LFI மிகையான தொகை செலுத்தியதாக இந்தக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இவற்றில், ஜனாதிபதி தேர்தலில் மெலோன்சோனின் மக்கள் தொடர்பு பணிகளுக்கு தலைவராய் இருந்த சோஃபியா சிக்கூரோவின் Médiascop நிறுவனத்தைக் குறிவைத்து கூறப்பட்ட சில குற்றச்சாட்டுகள் போன்றவை ஏற்கனவே தூக்கியெறியப்பட்டு விட்டிருக்கின்றன. இதனிடையே மெலோன்சோனின் பிரச்சார நிதிகள் அரசு அதிகாரிகளால் ஒப்புதலளிக்கப்பட்டுமிருக்கின்றன.

சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் ஒரு முன்னாள் அமைச்சரான ஜோன்-லூக் மெலோன்சோனின் மார்க்சிச-விரோத மற்றும் ட்ரொட்ஸ்கிச-விரோத ஜனரஞ்சகவாதத்துடனான தனது அரசியல் கருத்துவேறுபாடுகளை சோசலிச சமத்துவக் கட்சி (PES) ஆவணப்படுத்தியிருக்கிறது. ஆயினும் LFI ஐ இலக்கு வைத்தான இந்த போலிஸ் நடவடிக்கையின் வகை, ஒவ்வொருவரையும் அச்சுறுத்துவதாக அமைகின்ற, ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு தாக்குதலாகும். மேலும் போலிசுக்கும், அதி-வலதுகளுக்கும் மற்றும் மக்ரோன் அரசாங்கத்துக்கும் இடையிலான அறிவிக்கப்படாத ஒத்துழைப்பின் மூலமாக தயாரிப்பு செய்யப்படுகின்ற ஒரு தாக்குதலுக்கு எதிராக அடிபணியா பிரான்ஸ் கட்சியை (LFI) சோசலிச சமத்துவக் கட்சி (PES) பாதுகாத்து நிற்கிறது.

2017 இல் பெரும்பான்மையான இடது-சாரி வாக்குகளை பெற்ற ஒரு அமைப்பின் தலைமையகங்களில் தேடுதல் வேட்டைகளையும் கைப்பற்றல்களையும் நடத்துவதற்கு இந்தக் குற்றச்சாட்டுகளை ஒரு சாக்காக பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு அரசியல் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. பிரெஞ்சு அரசியலில் இப்போது சாதாரணமாகி விட்டிருக்கும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு மக்ரோனின் பிரச்சாரமும் அவரது குடியரசு அணிவகுப்பு (LRM) கட்சியும் கூட முகம்கொடுக்கின்றன, ஆயினும் இயல்பாகவே அவை இதேபோன்ற போலிஸ் சோதனைகளுக்கு முகம்கொடுத்திருக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேல், நீதிமன்றங்கள் ஊழல் குற்றச்சாட்டுகள் மீது முறையாக விசாரணைகளை மேற்கொள்கின்றன என்று எடுத்துக் கொண்டாலும் கூட, கிட்டத்தட்ட 240,000 அனுதாபிகளை -அவர்களின் மிகப்பெருவாரியானோருக்கும் இந்த வழக்குகளுக்கும் எந்த தொடர்புமில்லை- கொண்ட ஒரு அமைப்பின் மின்னணுத் தரவு அத்தனையையும் சேகரிப்பதை அது நியாயப்படுத்த முடியாது. மிகத் தீவிரமான கேள்விகள் முன்நிற்கின்றன. LFI இன் அனுதாபிகள் மற்றும் வாக்காளர்கள் குறித்த என்ன தரவுகளை பாதுகாப்புப் படையினர் சேகரித்திருக்கின்றனர்? அவர்கள் பெற்றிருக்கின்ற இந்த பாரிய எண்ணிக்கையிலான விவரங்களைக் கொண்டு என்ன செய்வதற்கு திட்டமிடுகின்றனர்?

போலிஸ் ஆட்சிக்கான துரிதமான முனைப்புக்கும், இருபதாம் நூற்றாண்டில் ரஷ்ய புரட்சிக்கும் பாசிசத்தின் தோற்கடிப்புக்கும் பின்னர் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தினால் வெல்லப்பட்டிருந்த அத்தனை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளும் ஆளும் வர்க்கத்தினால் மறுதலிக்கப்படுவதற்கும் மத்தியில், இந்தக் கேள்விகள் குறிப்பான அவசரத்தைப் பெறுகின்றன. 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் ஒரு தசாப்த கால ஆழமான முதலாளித்துவ நெருக்கடிக்குப் பின்னர், முதலாளித்துவ வர்க்கமானது சமூக எதிர்ப்பினைக் குறிவைத்து முன்னெப்போதினும் வன்முறையான நடவடிக்கைகளை கையிலெடுக்கிறது.

“செல்வந்தர்களின் ஜனாதிபதி” ஆக பரவலான வெறுப்பை சம்பாதித்திருக்கும் மக்ரோன் தொழிலாள வர்க்கத்தில் வெறுப்புடன் பார்க்கப்படுகிறார். இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் அரசாங்கத் தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் வேலைநிலைமைகள் மீதான அவரது தாக்குதல்களும், ஓய்வூதியங்கள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை காப்பீட்டில் வரலாறு கண்டிராத பெரும் வெட்டுகளுக்கு அவர் போடும் திட்டங்களும் தொழிலாளர்கள் மத்தியில் ஆழமான எதிர்ப்பைத் தூண்டுகின்றன, இது அரசியல் ஸ்தாபகத்திற்கு பீதியூட்டுகிறது. நிதியப் பிரபுத்துவத்தை செழிப்பாக்குவது, நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை இராணுவத்திற்காய் அர்ப்பணிப்பது என்ற கொள்கைக்கு —இதேபோன்ற கொள்கைகள்தான் ஐரோப்பாவெங்கிலும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன— எழுகின்ற எதிர்ப்பை ஒடுக்குவதற்கு ஒரு போலிஸ் அரசைக் கட்டியெழுப்புவதன் மூலமாக அது எதிர்வினையாற்றுகிறது.

2015க்கும் 2017க்கும் இடையிலான காலத்தில், பிரான்ஸ், ஜனநாயக உரிமைகளை நிறுத்தி வைத்ததும் சோதனைகளை நடத்துவதற்கும் குற்றச்சாட்டுகள் இல்லாமலேயே வீட்டுக் காவலைத் திணிப்பதற்கும் போலிசுக்கான அதிகாரங்களை பாரிய அளவில் அதிகரித்ததுமான ஒரு அவசரகால நிலையின் கீழ் இருந்தது. சோசலிஸ்ட் கட்சியின் (PS) அரக்கத்தனமான, தொழிலாளர்-விரோத தொழிற் சட்டத்திற்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் மீது வன்முறையான போலிஸ் தாக்குதல்களை நடத்துவதற்கு அவசரகாலநிலை ஒரு சாக்காக பயன்படுத்தப்பட்டது.

அடுத்தடுத்து தொடர்ந்த அமைச்சரவை இராஜினாமாக்களுக்குப் பின்னர் அவரது புதிய அரசாங்கத்தை அவர் அமைக்க வேண்டிய நிலையில், அவருடன் வேலை செய்ய அமைச்சர்களை கண்டுபிடிக்க இரண்டு வாரங்களை எடுத்துக் கொண்ட மக்ரோன் மீது ஏற்பட்ட வெறுப்புணர்வு என்பது, ஆட்சியின் நெருக்கடி மற்றும் ஐரோப்பிய ஜனநாயகத்தின் உருக்குலைவின் ஒரு பாகமாகும். இத்தாலியில், ஒரு நவ-பாசிச அரசாங்கம் அகதிகளை மொத்த எண்ணிக்கையில் நாடுகடத்தலுக்கு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஜேர்மனியில் கெம்னிட்ஸில் கலகக்காரர்கள் யூத வணிகங்கள் மீது தாக்குதல் நடத்திய நவ-நாஜி கலகங்களுக்கு ஆதரவாக உள்துறை அமைச்சரான ஹோர்ஸ்ட் சீஹோஃபர் உள்ளிட்ட உயர்நிலை ஜேர்மன் அதிகாரிகள் வெளிப்படையாக பேசியிருக்கின்றனர்.

ஐரோப்பிய ஜனநாயகத்தின் துரிதமான உருக்குலைவு, மெலோன்சோன் மீதான சோசலிச சமத்துவக் கட்சியின் (PES) விமர்சனத்தை சரியென நிரூபணம் செய்கிறது. மக்களின் சகாப்தம் என்ற தனது புத்தகத்தில் இடது மற்றும் சோசலிசத்தின் மரணம் குறித்து அறிவித்த மெலோன்சோன், பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றில் மக்ரோனுக்கும் நவ-பாசிச வேட்பாளரான மரின் லு பென்னுக்கும் இடையிலான போட்டியின்போது, தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு PES விடுத்த அழைப்பை உதாசீனம் செய்து, மக்ரோன் லு பென்னுக்கான ஜனநாயக மாற்றீடு என்ற கூற்றுக்கு அடிபணிந்து, எந்த நிலைப்பாட்டையும் வழங்குவதற்கு மறுத்தார்.

இந்த ஆண்டில் மெலோன்சோன், தேசிய இரயில்வேயின் (SNCF) தனியார்மயமாக்கத்தையும் இரயில்வே தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களையும் பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சங்கங்களது கொள்கையை ஆதரித்தார் என்பதுடன், LFI இன் கோடைப் பள்ளியில் போர் மற்றும் இராணுவப் பிரச்சினைகளை விவாதிப்பதற்கு வலது-சாரி அரசியல்வாதிகளையும் அழைத்திருந்தார். அந்த சமயத்தில், “அரசு மற்றும் குடியரசின் நிர்ணயங்களை பாதுகாப்பதான விடயம் என்று வரும்போது, நாம் வலதுடன் ஒன்றுசேர்கிறோம், அதைச் சொல்வதற்கு நான் பயப்படவில்லை” என மெலோன்சோன் கூறினார்.

மெலோன்சோன் அவர் விதைத்த பிரமைகளின் நச்சுத்தன்மை மிக்க விளைவுகளுக்கும், அவர் வளர்த்தெடுத்த வலது-சாரி சக்திகளுக்கும் இன்று முகம்கொடுத்து நிற்கிறார். நேற்று அவர் நாடாளுமன்றத்தில், பழமைவாதிகள் மற்றும் LRM பிரதிநிதிகளின் பரிகசிப்புக்கும் ஊளையிடல்களுக்கும் மத்தியில், பிரான்ஸ் இன்னும் ஒரு ஜனநாயக ஆட்சியாகத்தான் இருக்கிறதா என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.

ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாத்தும் போர் மற்றும் சமூகத்தின் இராணுவமயமாக்கத்தை எதிர்த்தும் ஒரு சர்வதேச, புரட்சிகர இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதும் அணிதிரட்டுவதுமே தீர்மானகரமான பிரச்சினையாகும். தேசியவாதத்துடனும், வலதுசாரிகளுடனும் மெலோன்சோனால் ஊக்குவிக்கப்படுகின்ற சமூக ஜனநாயகத்துடனும் தாட்சண்யமற்ற ஒரு முறிவை செய்து, சோசலிசத்துக்கான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது என்பதே இதன் அர்த்தமாகும். LFI மீதான தாக்குதலில் வெளிப்படும் அபாயங்களை எதிர்கொள்கையில், போலிஸ் அரசுக்கு எதிராக மெலோன்சோனின் மற்றும் அவரது இயக்கத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் இது சூழக் கொண்டுள்ளது.