ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Pakistani premier Imran Khan imposes austerity mini-budget

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிக்கன நடவடிக்கைகளது சிறு-நிதிநிலை அறிக்கையை திணிக்கிறார்

By Athiyan Silva and Kumaran Ira
2 October 2018

சமூக கோபத்தையும் போர்-எதிர்ப்பு மனோநிலையையும் சுரண்டிக் கொண்டு அதிகாரத்துக்கு வந்து விட்ட பின்னர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரீக்-இ-இன்ஸாஃப் (PTI) அவரது வரம்புபட்ட தேர்தல் வாக்குறுதிகளைக் கைவிட்டு, ஆழமான நிதிநிலை வெட்டுகளைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை தாக்குவதற்கு ஏதுவான இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இம்ரான் கானின் சிக்கன நடவடிக்கைகள்-ஆதரவு மற்றும் ஏகாதிபத்திய-ஆதரவு நிலைப்பாடு அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டே மாதங்களில் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரேசமயத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அணியில் பாகிஸ்தானை நிறுத்திக் கொண்டே சீனாவுடன் நிதி ஒப்பந்தங்களை மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்த அவர் முனைந்து கொண்டிருக்கிறார்.

செப்டம்பர் 18 அன்று, ”சிறு-நிதிநிலை அறிக்கை” என்று சொல்லப்பட்ட 2018 நிதி துணையளிப்பு (திருத்த) மசோதாவை தேசிய நாடாளுமன்றத்தில் PTI முன்வைத்தது. இந்த சிறு நிதிநிலை-அறிக்கை சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக சேர்ந்து வேலைசெய்து உருவாக்கப்பட்டிருந்தது; நிதி அமைச்சகத்தில் பாகிஸ்தானின் அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் ஒரு காணொளி கலந்துரையாடலை நடத்தியன் பின்னர் கொண்டுவரப்பட்டிருந்தது.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சரான ஆசாத் உமர், பாகிஸ்தான் “கடினமான நிலைமைக்கு” முகம்கொடுத்திருக்கிறது என்றும் நிதிநிலைப் பற்றாக்குறைகளை குறைப்பதற்கு “கடினமான” நடவடிக்கைகளுக்கு இது கோருவதாகவும் கூறினார். நிதிநிலைப் பற்றாக்குறை 4.1 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக வளர்ந்திருந்ததை குறிப்பிட்ட உமர், “மிக அபாயகரமான நிலை என்னவென்றால், இப்போதிருக்கும் நிலை தொடருமாயின், நடப்பு ஆண்டு முடிவதற்குள்ளாக நிதிநிலைப் பற்றாக்குறை 7.2 சதவீதமாக அதிகரித்து விடும் என்பதாகும். இதுவே நிதி அமைச்சகத்தின் மதிப்பீடாகவும் பொருளாதார அறிஞர்களின் மதிப்பீடாகவும் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

டாலருக்கு எதிராக ரூபாயின் வீழ்ச்சியைத் தடுத்துநிறுத்துவதற்கும் பாகிஸ்தானின் முழ்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்கும் இந்த நடவடிக்கைகள் மட்டுமே ஒரே வழி எனக் கூறிய உமர், நாட்டின் வெளிநாட்டு செலாவணிக் கையிருப்பு இருமாத கால இறக்குமதிகளது தேவைக்கு நிகரான அளவுக்கு வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் எச்சரித்தார். பாகிஸ்தானின் வெளிநாட்டு செலாவணிக் கையிருப்பு 9.3 பில்லியன் டாலர்களாக வீழ்ச்சி கண்டிருக்கும் நேரத்தில், வெளிநாட்டுக் கடன் 92 பில்லியன் டாலர்களாய் இருக்கிறது.

கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டாக வேண்டும், இல்லையேல் பணவீக்க அழுத்தங்கள் சாதாரண நுகர்வோருக்கு வலிதருவதாக ஆகின்றதொரு புள்ளிக்கு வளர்ந்து சென்று விடும் என்று உமர் தெரிவித்தார்.

பிரதமர் இம்ரான் கான் ஜூலை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, முந்தைய PML-N அரசாங்கத்தின் மீது இருந்த சமூக கோபத்தை சுரண்டிக் கொண்டதோடு, அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, ஏழைகளுக்கு நிவாரணம் வழங்குவது ஆகியவை உள்ளிட்ட வாய்ச்சவடால் வாக்குறுதிகளை அளித்தார், அதேநேரத்தில் கூட்டரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பழங்குடி பகுதிகளிலான கொலைபாதக அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களை விமர்சனம் செய்தார்.

முன்னாள் இராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்), மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) அரசாங்கங்களில் –இவை IMF இன் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்தின என்பதுடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க-தலைமையிலான நேட்டோ போரிலும் இணைந்து செயற்பட்டன– ஏற்கனவே பணியாற்றியிருந்த அமைச்சர்களைக் கொண்டு கான் அவரது அரசாங்கத்தை உருவாக்கியிருந்தார். அவரது இந்த சிறு நிதிநிலை-அறிக்கையின் மூலம், அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளைத் தூக்கியெறிந்து விட்டு அவருக்கு முன்பிருந்தவர்களது அதேபோன்ற கொள்கைகளைப் பின்பற்றுகிறார்.

இந்த சிறு நிதிநிலை அறிக்கையானது உணவு மற்றும் எரிபொருள் போன்ற மிக அத்தியாவசியமான பொருட்கள் மீதான விலை மற்றும் வரி அதிகரிப்புகளையும் கொண்டிருக்கிறது. நிதிநிலை பற்றாக்குறையைக் குறைப்பதற்காக, புதிய வரிவிதிப்பு நடவடிக்கைகளுடன் சேர்த்து, கூட்டரசாங்க பொதுத்துறை அபிவிருத்தி திட்டத்திற்கான நிதியை 1,030 பில்லியன் ரூபாயில் இருந்து 700 பில்லியன் ரூபாயாகக் குறைப்பதற்கும் கான் ஆலோசனையளித்துக் கொண்டிருக்கிறார்.

அலை பேசி இறக்குமதி உள்ளிட்டவற்றின் மீதான சுங்கவரி மற்றும் கட்டுப்பாட்டு வரிகளையும் அரசாங்கம் அதிகப்படுத்த இருக்கிறது. கடுமையான வெட்டுக்களின் மூலமாக, சுமார் 1.5 பில்லியன் டாலர் வருவாய் பெருக்க அது நம்பிக்கை கொண்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயமாக்கங்களை மேற்பார்வை செய்வதற்கு ஒரு சிறப்பு அமைச்சர் குழுவையும் அது உருவாக்கியிருக்கிறது.

PTI அரசாங்கம் ஒரு பிணையெடுப்புக்கு முயற்சிக்க தயாரிப்பு செய்கின்ற நிலையில், சென்ற வாரத்தில், பாகிஸ்தானின் அதிகாரிகள் IMF உடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். பிரதிபலனாக, IMF கடுமையான சிக்கன நடவடிக்கைகளைக் கோரும்.

The Diplomat எழுதியது: “IMF, பாகிஸ்தானுக்கு எந்த புதிய கடனுதவித் திட்டத்தையும் கொடுப்பதற்கு முன்னால், பாகிஸ்தானின் நடுத்தர மற்றும் ஏழைகளின் நலன்களுடன் ஒத்துப்போகாத ஏராளமான சீர்திருத்தங்களை அது அநேகமாகக் கோரும். சம்பளம் பெறும் வர்க்கத்தை குறிவைத்தான வரி அடித்தளம் அதிகரிக்கப்படக் கூடும் என்றும் கூடுதலான நேரடி மற்றும் மறைமுக வரிகள் கொண்டுவரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வரும் வாரங்களில் மற்றும் மாதங்களில் விவசாயம் மற்றும் பிற துறைகளிலான மானியங்கள் கணிசமானதொரு குறைப்பைக் காணக் கூடும்.”

210 மில்லியன் மக்களைக் கொண்டதொரு நாட்டில், நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் குறைவான தொகையின் கீழ் வாழ்ந்து வருகின்ற நிலையில், கான் அரசாங்கம், அதன் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் IMF உடனான கூட்டு வேலைகளின் காரணத்தால், உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு பரந்த எண்ணிக்கையுடன் மோதலை நோக்கி துரிதமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

60 சதவீதத்திற்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் உணவுக்குத் திண்டாடுகின்றனர், பெண்களும் குழந்தைகளும் வறுமையால் மிகவும் பாதிக்கப்படுபவர்களாய் உள்ளனர். இளைஞர்களில் பாதிப்பேர் வேலைவாய்ப்பற்றவர்களாய் இருக்கின்றனர், 3.8 மில்லியன் குழந்தைகள் கொத்தடிமை நிலைமைகளில் சுரண்டப்படுகின்றனர். சுமார் 25 மில்லியன் குழந்தைகளுக்கு கல்விக்கு அணுகல் இல்லை, ஆயிரக்கணக்கான பள்ளிகள் நீர், மின்சாரம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதிருக்கின்றன. பொது மருத்துவமனைகளின் நிலை படுக்கைகள் இல்லாமல், மருத்துவ சாதனங்கள் இல்லாமல், மருந்துகள் இல்லாமல் மற்றும் மருத்துவர்கள் இல்லாமல் மோசமடைந்து கொண்டிருக்கின்றன.

அதேநேரத்தில், வெறும் 22 பாகிஸ்தான் பில்லியனர்கள் பிரம்மாண்டமான செல்வத்தின் ஏகபோக அதிபதிகளாய் இருக்கின்றனர். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (PML-N) இன் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிப் (1.4 பில்லியன் டாலர்) மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத்தலைவருமான ஆஸிப் அலி சர்தாரி (1.8 பில்லியன் டாலர்) ஆகியோரும் இவர்களில் இடம்பெறுகின்றனர்.

வங்கிகளின், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மற்றும் பெரும் செல்வந்தர்களின் நலன்களையே கான் ஆட்சி பாதுகாக்கிறது என்பது பாகிஸ்தானிய முதலாளித்துவத்தின் வரலாற்றுத் திவால்நிலையை சுட்டிக்காட்டுகிறது. ஊழலடைந்தும், தோல் தடித்தும், ஏகாதிபத்தியத்துடனான தனது உறவுகளை முழுமையாகச் சார்ந்துமிருக்கின்ற அதனிடம் பரந்த மக்களுக்கு வழங்குவதற்கென்று எதுவொன்றுமில்லை.

வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையில் பெருகிச் செல்லும் மோதலானது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்தான சுதந்திரத்தை அடுத்து திணிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அரசின் —1947 இல் இந்தியத் துணைக்கண்டத்தின் பிரிவினையின் விளைபொருள்— அடிப்படையான செல்தகைமையின்மையை வெல்வதற்கு பாகிஸ்தானின் முதலாளித்துவ வர்க்கம் பயன்படுத்த முயன்றிருந்த உடன்பாடுகளை பலவீனப்படுத்தி விட்டிருக்கிறது. தனது பரம வைரியான இந்தியாவுக்கு எதிராக அணிதிரட்டும் முயற்சியில் இஸ்லாமாபாத் அமெரிக்கா மற்றும் சீனா இரண்டுடனுமே ஒரு கூட்டணியைப் பராமரித்து வந்திருந்தது.

ஆனால், அந்த இரண்டு “கூட்டாளிகளும்” மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா எங்கிலும் செல்வாக்கிற்கும் புவி-மூலோபாய அனுகூலத்திற்குமான ஒரு கடுமையான போரைப் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கின்றன என்ற யதார்த்தத்திற்கு இஸ்லாமாபாத் இப்போது முகம்கொடுத்திருக்கிறது.

கான், குறைந்தபட்சம் இப்போதேனும், வாஷிங்டனுடன் நெருங்கிச் செல்ல விழைகிறார். அமெரிக்க ஆளில்லா விமானப் படுகொலைகளுக்கு எதிரான அவரது பிரச்சார வாய்வீச்சைக் கைவிட்டு, கான் சென்ற மாதத்தில் அமெரிக்க வெளியுறவுச் செயலரான மைக் பொம்பியோவை சந்தித்தார்; பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவுகளுக்கு அவரிடம் வலியுறுத்தினார். வாஷிங்டன் உடனான உறவுகள் குறித்து மிகவும் ”நம்பிக்கையுடன்” இருப்பதாக அவர் அறிவித்தார். “நான் பிறந்ததில் இருந்தே ஒரு நம்பிக்கைவாதி” “ஒரு விளையாட்டு வீரர் எப்போதுமே நம்பிக்கை மிக்கவராகவே இருக்கிறார்” என்றார் அவர்.

ஆயினும், சீனாவின் யூரோஆசிய BRI (Belt and Road Initiative - ஒரே இணைப்பு, ஒரே பாதை முன்முயற்சி) இன் “மைல்கல் திட்ட”மான பல பில்லியன் டாலர் சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை (CPEC) மூலமாக தனது பொருளாதாரத்தையும் தொழிற்துறையும் அபிவிருத்தி செய்வதற்கு இஸ்லாமாபாத் இப்போதும் உறுதிபூண்ட நிலையில் தொடர்கிறது. 2015 இல் தொடங்கப்பட்ட CPEC, மேற்கு சீனாவை, எண்ணெய்வளம் செறிந்த பேர்சிய வளைகுடா அருகில், இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் பாகிஸ்தானின் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட குவாடார் துறைமுகத்துடன் சாலைகள், இரயில்பாதைகள் மற்றும் எரிசக்தித் திட்டங்கள் மூலம் இணைக்கத் திட்டமிடப்பட்ட ஒரு வலைப்பின்னலாகும்.

The Diplomat செய்தி தெரிவித்தது, “சீனா இதுவரை பாகிஸ்தானின் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் 19 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது, கட்டுமானப் பணிகளின் கீழ் இருந்த மற்றும் திட்டமிடப்பட்டிருந்த 22 திட்டங்களில் ஒன்பது நிறைவுபெற்று விட்டன. சுமார் 30,000 சீனர்கள் பாகிஸ்தான் எங்கிலும் வெவ்வேறு திட்டங்களில் வேலைசெய்து கொண்டிருக்கின்றனர்.”

சீனாவின் உள்துறைக் கட்டமைப்பு மற்றும் தொழிற்துறைக் கடன்களை அடைப்பதற்கு அமெரிக்க நிதி உதவியை பாகிஸ்தான் பயன்படுத்துவதை “ஏற்றுக்கொள்ளவியலாது” என்று பொம்பியோ ஏற்கனவே தெரிவித்திருக்கிறார், எவ்வாறெனினும் பாகிஸ்தானின் பொருளாதார அடித்தளங்கள் எந்தவொரு பெரிய சர்வதேச அதிர்ச்சியின் கருணையில் தங்கியுள்ளது.