ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan unions in closed-door discussions with plantation bosses

இலங்கை தொழிற்சங்கங்கள் மூடிய கதவுகளுக்குள் பெருந்தோட்ட முதலாளிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன

By W.A. Sunil
8 September 2018

இலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் இலங்கை முதலாளிகள் சம்மேளனமும், குறைந்த மட்ட ஊதியம் மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான அழுத்தங்கள் சம்பந்தமாக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒரு புதிய கூட்டு ஒப்பந்தம் பற்றி மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. கடந்த காலத்தில் போலவே, தோட்டத் தொழிலாளர்கள் இந்தப் பேச்சுவார்த்தை சம்பந்தமாக முற்றுமுழுதாக இருட்டில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

19 பிராந்திய தோட்டக் கம்பனிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாளிகள் சம்மேளன பேச்சாளர்கள், இந்தப் பேச்சுவார்தைகளின்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கொடுப்பதை திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாக, ஆகஸ்ட் 18 தமிழ் தினசரியான வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது. “நெருக்கடிகளில் இருந்து தோட்டத் தொழில் துறையைப் பாதுகாப்பதற்கு” உதவுமாறு தொழிற்சங்கங்களுக்கு முதலாளிகள் சம்மேளன அலுவலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.க.), இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU), பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஆகியவற்றின் தலைவர்கள், இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். இ.தொ.க மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் முன்னால் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தில் கூட்டுச் சேர்ந்திருந்தன. LJEWU பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த தொழிற்துறை பெரும் இழப்புக்களை எதிர்கொள்வதால், எந்தவிதமான சம்பள உயர்வையும் வழங்க முடியாது என தோட்ட உரிமையாளர் சங்கத்தின் பேச்சாளரான ரொஷான் இராஜதுரை தெரிவித்தார். 2016ல், தொழிற்சங்கங்கள் அக்டோபரில் காலாவதியாகும் பழைய ஒப்பந்தத்தினை திணித்தன. இதில் ஒரு அற்ப சம்பள உயர்வும் ஒரு புதிய பிற்போக்கு குத்தகை விவசாய முறையும் உள்ளடக்கப்பட்டன.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், கடந்த வாரம் தோட்ட முதலாளிகளுடனான பேச்சுவார்த்தைகள் பற்றிக் கேட்பதற்காக பல தொழிற்சங்க தலைவர்களை தொடர்பு கொண்டார்கள். LJEWU செயலாளர் வடிவேல் சுரேஸ், வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப “நியாயமான” சம்பள உயர்வை தொழிற்சங்கங்கள் முன் வைத்தன, எனக் கூறினார். எவ்வாறாயினும், தொழிற்சங்கங்கள், “சம்பளக் கோரிக்கையின் தொகையினை தீர்மானிக்கவில்லை,” என அவர் ஒப்புக்கொண்டார். “சம்பள அதிகரிப்பு தொடர்பான முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்துக்காக நாங்கள் காத்திருக்கின்றோம். அதற்குப் பின்னரே நாங்கள் முடிவெடுப்போம்,” என அவர் மேலும் விளக்கினார்.

பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் பொதுச் செயலாளர் எஸ். இராமநாதன், தனது தொழிற்சங்கம் சம்பள கோரிக்கையை தீர்மானிப்பதற்காக ஏனையவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருப்பதாக கூறினார். “பல திட்டங்கள் உள்ளன. 5 அமெரிக்க டாலரை விட குறைவான 750 ரூபா நாட் சம்பளமே சாத்தியமாகும். 1,000 ரூபா சாத்தியமற்றது என நான் நினைக்கின்றேன். கொடுப்பனவுகள் உட்பட 1,000 ரூபாவை நாங்கள் கேட்க முடியும்,” என அவர் தெரிவித்தார்.

கம்பனிகளின் இலாபத்தைப் பாதுகாப்பதில் மட்டுமே தொழிற்சங்கங்கள் அக்கறை கொண்டுள்ளன என்பதையே இந்த கருத்துக்கள் தெளிவாக்குகின்றன. அவை எந்தவொரு சம்பள அதிகரிப்பையும் தீர்மானிக்கும் முழுச் சுதந்திரத்தையும் முதலாளிகளுக்கு விட்டுக்கொடுத்துள்ளன. அத்துடன், உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு அவசியமான எதையும் தொழிலாளர்கள் மீது திணிப்பதற்கு அவை தயாராக உள்ளன.

தொழிலாளர் தேசிய சங்க (தொ.தே.ச.) தலைவரும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சருமான ப. திகாம்பரம், கம்பனிகள் “நியாயமான” சம்பள உயர்வு வழங்க மறுத்தால், தனது சங்கம் தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டும், என வாய்சவடால் விடுத்தார்.

திகாம்பரத்தின் பிரகடனங்கள் யாவும் பொய்யாகும். இ.தொ.க., LJEWU, தொழ்றிசங்க கூட்டுக் கமிட்டி, தொ.தே.ச., மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உட்பட சகல தோட்டத் தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களின் எதிர்ப்பை திட்டமிட்டு நசுக்குவதோடு அவர்களை கம்பனிகளுக்கு அடிபணிய வைக்கின்றன.

2016ம் ஆண்டு கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது, தங்களின் 450 ரூபா அடிப்படை தினசரி ஊதியத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்குமாறு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். 1,000 ரூபா கோரிக்கைக்காக, நுவெரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களிலும் ஈடுபட்டனர். தொழிற்சங்கங்கள் இந்த எதிர்ப்புக்களை நிறுத்தியதோடு, பின்னர், 50 ரூபா அற்பத் தொகையை சம்பள உயர்வாக கொடுக்க உடன்பட்டதுடன், தோட்டக் கம்பனிகளுக்கு வருமானப் பங்கீடு திட்டம் என அழைக்கப்படுவதை திணிப்பதற்கு உதவுவதாக ஒத்துக்கொண்டன.

இந்த “குத்தகை விவசாய” முறையின் கீழ், தொழிலாளர்களுக்கு சுமார் 1,000 தேயிலைக் கன்றுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களும் அவர்களது குடும்பங்களும் அவற்றைப் பராமரிக்க வேண்டும். தோட்ட நிர்வாகம் உபகரணங்கள், உரம் மற்றும் இரசாயனங்களை மட்டுமே வழங்கும். வருமானத்தைப் பங்கிட்டுக்கொள்ளும் தொழிலாளர்கள் அறுவடையை கம்பனித் தொழிற்சாலைக்கே கொடுக்க வேண்டும். பின்னர், கம்பனிதான் வழங்கிய பொருட்களுக்கான செலவுகள் மற்றும் இலாபத்தையும் கழித்துக் கொண்டு தொழிலாளர்களுடைய “பங்கை” கொடுக்கும்.

இந்த முறைக்கு ஆழமான தொழிலாளர்-வர்க்க எதிர்ப்பு வளர்கின்ற காரணத்தால், ஒரு சில தோட்டங்களில் மட்டுமே கம்பனியாலும் தொழிற்சங்கங்களாலும் இதை செயல்படுத்த முடிந்தது. களனி வெலி பெருந்தோட்டக் கம்பனியின் பட்டல்கல மற்றும் டில்லறி தோட்டங்களில் இவை அமுல்படுத்தப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 14, அக்கரப்பத்தனையில் வேவர்லி மற்றும் கிளாஸ்கோ தோட்டங்களில் சுமார் 2,000 தொழிலாளர்கள், ஆயிரம் ரூபா நாள் சம்பளக் கோரிக்கையை முன் வைத்து வேலை நிறுத்தம் செய்தார்கள். ஆகஸ்ட் முற்பகுதியில், ஹட்டனில் டில்லறி தோட்டத்தின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், வருவாய் பங்கீடு முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இந்தப் போராட்டங்கள் தன்னெழுச்சியாக இடம்பற்றன -இது, தொழிலாளர்கள் தமது மோசமடைந்து வரும் வாழ்க்கை நிலமைகள் மற்றும் தொழிற் சங்கங்களின் மீதான அவர்களின் எதிர்ப்பு உக்கிரமடைந்து வருவதன் அறிகுறியாகும்.

தோட்டத் தொழிலாளர்கள் தொழிலாள வர்க்கத்தில் வறுமைக்குள் வாழ்கின்ற மற்றும் அதிகம் சுரண்டப்படுகின்ற தட்டினராக இருக்கின்ற போதிலும், தொழிற்சங்கங்கள் தோட்டக் கம்பனிகளைப் பாதுகாப்பதற்கு தம்மால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன. 2016ல் தொழிற்சங்கங்கள் ஒப்பந்த்தில் கைச்சாத்திட்டதில் இருந்து, தொழிலாளர்களின் சமூக நிலமைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அரிசி, தேங்காய் மற்றும் மண்ணெண்ணை உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பல மடங்குகள் அதிகரித்துள்ளன. தேசிய விலைச் சுட்டெண், 2016 அக்டோபரில் 114.4ல் இருந்து இந்தவருடம் ஜூலையில் 126.6 ஆக அதிகரித்துள்ளது. தொழிலாளர்களின் செலவு செய்யும் சக்தி கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, விவசாயத் தொழிலாளர்களின் உண்மையான சம்பளச் சுட்டெண் 2015ல் 128 ஆக இருந்து 2017ல் 111.8 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலமைகளின் கீழ், தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்படும் 750 ரூபா ஊதியமானது உண்மையில் ஒரு சம்பள வெட்டே ஆகும்.

தனியார் மயப்படுத்தல் மற்றும் செலவுக் குறைப்புக் வாயிலாக, பெரிய கம்பனிகளின் பெருந்தோட்ட உழைப்புப் படையானது 1992ல் 475,000 பேரில் இருந்து இன்று 123,000 பேராக ஆக குறைக்கப்பட்டுள்ளது. கம்பனிகள் செழிப்பற்ற பிரதேசங்களில் பயிர்ச்செய்கையை கைவிட்டுள்ள நிலையில் பல தொழிலாளர்கள் வேலைகளை இழந்துள்ள அதே வேளை, ஏனையவர்கள் குறைந்த சம்பளம் மற்றும் கடுமையான வேலை நிலமைகளின் மத்தியில் வாழ முடியாத காரணத்தினால் இந்த தொழில்துறையில் இருந்து வெளியேறிவிட்டனர்.

சம்பளம் மற்றும் வேலை நிலமைகள் மீதான தாக்குதல்களின் பின்னால், பூகோள போட்டியின் தாக்கத்தின் கீழ் தேயிலைத் தொழில் துறையானது ஆழமான நெருக்கடியில் உள்ளது. 2017ல் சிறிதளவு அதிகரிப்புக்கு அப்பால், இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருவாய் 2014ல் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2017ல் சிறிய ஏற்றம் ஏற்பட்ட போதிலும், 2014ல் இருந்தே தேயிலை விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தே வந்துள்ளது. முந்தைய ஆண்டை விட 2018ல் தேயிலை விலை மீண்டுமொருமுறை குறைவடைந்துள்ளதால், 2017ல் ஏற்பட்ட அதிகரிப்பு தற்காலிகமானதே என, ஏசியா சியக்க என்ற ஒரு பண்ட தரகர் நிறுவனத்தினால் ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஊடக அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநரின் படி, கடந்த 50 வருடங்களில், பூகோள விநியோகத்தில் நாட்டின் பங்கு 21 வீதத்தில் இருந்து 6 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 1990களில், இதுவே உலகின் பெரிய தேயிலை ஏற்றுமதியாளராக இருந்துள்ளது. இன்று கென்யா மற்றும் சீனாவுக்குப் பின்னால், மூன்றாவதாக உள்ளது. துருக்கி மற்றும் ஈரான் மீதான அமெரிக்கத் தடைகள் மற்றும் துருக்கியின் நாணயமான லீராவின் பெறுமதி வீழ்ச்சியும் நிலமைகளை இன்னும் மோசமாக்கும், என தேயிலைத் தரகர்களும் பொருளியலாளர்களும் எச்சரித்துள்ளார்கள்.

உற்பத்தி திறனை அதிகரிக்கவும், ஊதியச் செலவை குறைக்கவும் போராடிப் பெற்ற உரிமைகளை மட்டுமன்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அற்ப சமூக மாநியங்களைக் கூட ஒழித்துக் கட்ட பெருந்தோட்ட முதலாளிமார் சபதமெடுத்துள்ளனர். கம்பனிகள், குறைந்த உழைப்பே தேவைப்படும் முள்ளுத் தேங்காய் (பாம் எண்ணெய்) போன்ற ஏனைய வர்த்தக பயிர்ச்செய்கைக்கும் மாறிக்கொண்டிருக்கின்றன.

தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக அவை அரசாங்கத்தினதும் தோட்டக் கம்பனிகளினதும் நேரடி முகவர்களாகவே செயற்படுகின்றன. அவை மூடிய கதவுகளுக்குள் நடத்தும் பேச்சுவார்த்தைகளும் விற்றுத்தள்ளும் ஒப்பந்தங்களும், தேயிலை தொழிற் துறையிலான நெருக்கடிகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கான தெளிவான முயற்சிகளாகும்.