ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron impeachment mooted as more French ministers resign

பிரான்சில் நிறைய அமைச்சர்கள் இராஜினாமா செய்யும் நிலையில் மக்ரோன் மீதான கண்டனத்தீர்மானம் விவாதிக்கப்பட்டது

By Francis Dubois
22 September 2018

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் இரயில்வே தனியார்மயமாக்கத் திட்டத்திற்கு எதிரான வேலைநிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஸ்ராலினிச CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) அழைப்புவிடுத்த இரண்டு மாதங்களின் பின்னர், அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டு விலகிக் கொண்டிருக்கின்றனர். அமைச்சரவையும் மக்ரோனின் கட்சியான குடியரசு அணிவகுப்பு இயக்கமும் (LRM) சிதறிக் கொண்டிருக்கின்றன, முதலாளித்துவத்தின் சக்திவாய்ந்த பிரிவுகள் மக்ரோனை அகற்றிவிட்டு ஒரு மாற்று அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான பொறிமுறைகளை வெளிப்படையாக விவாதித்துக் கொண்டிருக்கின்றன.

உயரிய மூன்றாவது இடத்திலிருந்த அமைச்சரான சுற்றுச்சூழல் அமைச்சர் நிக்கோலோ உலோவும், அதன்பின் விளையாட்டு அமைச்சரான லோரன்ஸ் ஃபிளெசலும் விலகியதற்குப் பின்னர், இரண்டாவது இடத்திலிருக்கும் அமைச்சரான உள்துறை அமைச்சர் ஜெரார் கொலொம்ப், தான் விலகப் போவதை செப்டம்பர் 18 அன்று அறிவித்தார். 2019 மே ஐரோப்பியத் தேர்தல்கள் வரை மட்டுமே தான் பதவியில் இருக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சகத்தில் கொலொம்ப் உடன் வேலைசெய்த, Jonathan Guémas மற்றும் Jean-Marie Girier ஆகிய இருவரும் கூட விலகுவதையும் செய்திவெளியிட்டிருந்த ஊடகங்கள், கொலொம்பை சுவாசக் கருவியுடன் நீடித்திருக்கும் ஒரு அமைச்சராக வருணித்தன. Le Monde இந்த மூலோபாய அமைச்சரவை “கடமைதவறியதாக” இருப்பதாக கூறியதுடன் உயர்நிலை போலிஸ் அதிகாரிகளிடம் இருந்து வந்திருந்த அதிர்ச்சியான எதிர்வினைகளை விவரித்தது. “இத்தகைய சொந்தமாய் அழித்துக் கொள்ளும் செயல்பாடு அபூர்வமாய் காணக்கூடியதாகும். உள்துறை அமைச்சராக இருக்கும் ஜெரார் கொலொம்ப் இன் மக்கள் தொடர்பு, லியோன் இன் மேயர் பதவிக்கான வருங்கால வேட்பாளராக ஜெரார்ட் கொலம்ப்பின் மக்கள் தொடர்பை பலவீனப்படுத்தியிருகிறது.”

அரசாங்கத்தில் நீடிக்கப் போவதில்லை என இன்னும் பல அமைச்சர்களும் அறிவித்திருக்கின்றனர். அரசாங்கத்திற்கு ஒரு “பொம்மலாட்ட பொம்மை” ஆக அல்லது ஒரு “மறைப்பு இலை”யாக இருக்க விரும்பாமல், ஆண்டின் இறுதி வரை மட்டுமே பதவியில் நீடிக்க பாரம்பரியத் துறை (Heritage Minister) அமைச்சரான ஸ்ரெபான் பேர்ன் விரும்புகிறார். இப்போது பாதுகாக்கப்பட்டதாய் இருக்கின்ற ஒட்டுமொத்த சுற்றுவட்டாரங்களையும், அவை சின்னாபின்னமாய் பழுதுபார்ப்பின்றி கிடக்கின்றன என்ற வாதத்தின் அடிப்படையில், அழிப்பதற்கு” வழிசெய்கின்றவிதமாய் திட்டமிடப்பட்டிருக்கின்ற ஒரு சட்டத்தினை அவர் விமர்சனம் செய்தார்.

மற்ற உயர்நிலை அமைச்சர்களும் அவர்களது விலகலுக்கு கொலொம்ப் கூறிய அதே காரணங்களையே வழங்கினர். நிதிநிலை அமைச்சரான ஜெரால்ட் டார்மனான் வட பிரான்சின் Turcoing இல் போட்டியிட திட்டமிடுகிறார், ஆண்-பெண் சமத்துவ அமைச்சரான மார்லென் ஷியாப்பா Le Mans இலும், சுற்றுச்சூழலுக்கான இளைய அமைச்சரான செபஸ்தியான் லுகோர்னு Vernon இலும், டிஜிட்டல் விவகார இளைய அமைச்சர் முனிர் மஹ்யூபி மற்றும் அரசாங்க செய்தித்தொடர்பாளரான பெஞ்சமான் கிறிவோ இருவரும் பாரிஸிலும் போட்டியிடத் திட்டமிடுகின்றனர். LRM கட்சியின் தலைவரான கிறிஸ்தோப் காஸ்ட்டனேர் மார்சையில் போட்டியிடத் திட்டமிடுகிறார். இவர்களுக்கு மேயராகும் எண்ணமிருந்தால், அவர்கள் அனைவரும் இந்த ஆண்டுக்குள்ளாக விலகியாக வேண்டும்.

“சில அமைச்சர்கள் அவர்களது விலகலை நியாயப்படுத்துவதற்கான ஒரு வழிவகையை மாநகராட்சித் தேர்தல்கள் வழங்கியிருப்பதாகத் தெரிகிறது” என்று L’Obs கிண்டலாகக் குறிப்பிட்டது.

தேசிய நாடாளுமன்றத்தில் LRM இன் மூத்த பிரதிநிதிகளில் ஒருவரான ஃப்ரெடெரிக் டுமா, செப்டம்பர் 16 அன்று LRM ஐ விட்டு விலகி அதற்கு கதவை அறைந்து சாத்தினார், “டைட்டானிக்கில் (மூழ்கும் கப்பல்) இருப்பதை போன்ற” உணர்வு இருந்ததாக அவர் தெரிவித்தார்.

தேசிய இரயில்வேயை தனியார்மயமாக்குவதற்கு தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்ட இரண்டு மாதங்களின் பின்னர், இரயில் தொழிலாளர்களுக்கு எதிராக மக்ரோன் பெற்ற வெற்றி, மிகப்பெரும் விலை கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டது என்பது முன்னெப்போதினும் தெளிவாகியிருக்கிறது. இது உண்மையில் அவரது அரசாங்கத்திற்கு எந்த சமூக அடித்தளமோ அல்லது ஜனநாயக அங்கீகரிப்போ இல்லாதிருப்பதை அம்பலப்படுத்தியது. சென்ற மாதத்தில் நடத்தப்பட்ட Elabe கருத்துக்கணிப்பு ஒன்றின்படி, பிரெஞ்சு மக்களில் வெறும் 6 சதவீதம் பேர் மட்டுமே மக்ரோனின் கொள்கைகள் அவர்களது வாழ்க்கைகளை மேம்படுத்துவதாகக் தெரிவித்துள்ளனர். இவ்வாறாய் மக்கள் ஆதரவு எதுவுமின்றி இருப்பது, மக்ரோன் ஆட்சியின் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது.

“மக்ரோன் ‘ஜனாதிபதி அவரை பாதுகாத்துப் பேசுவதற்கு ஒரு கட்சியை தேடுகிறார்’ என்ற பேரில் ஒரு தனி விளம்பரமே கொடுக்கலாம்” என்று எழுதிய Le Monde மேலும் கூறியது: “நிர்வாகத்தை பாதுகாக்க எதிர்பார்க்கப்படுகின்ற மக்ரோனின் படைகள், பொதுவாக சத்தமில்லாமல் இன்னும் காணமுடியாததாகவும் கூட இருக்கின்றன.” “கட்சியில் ஆவணரீதியாக இருக்கும் 403,000 உறுப்பினர்களில், வெறும் 70,000 பேர் மட்டுமே இன்று ‘செயலூக்கமான உறுப்பினர்’களாய் இருக்கின்றனர்” என்று எழுதிய LRM நிர்வாகி ஒருவரை அது மேற்கோளிட்டது.

செல்வந்தர்களுக்கான வரி வெட்டுகளுக்கும் ஒரு பெரும் இராணுவ கட்டியெழுப்பலுக்கும் நிதியாதாரம் திரட்டுவதற்காக நிதிய பிரபுத்துவம் நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை கொள்ளையடிப்பதற்கு வேலைசெய்து கொண்டிருக்கின்ற நிலையிலும் கூட, மக்ரோன் அவரது சமூக வெட்டுகளது திட்டநிரலை அமலாக்கி விட முடியுமா என்பதைக் குறித்து ஊடகங்கள் வெளிப்படக் கவலை காட்டுகின்றன. உண்மையில், இராஜினாமா செய்திருக்கும் அமைச்சர்கள் நிதிநிலை, சமூகப் பாதுகாப்பு மற்றும் உள்துறை பாதுகாப்பு போன்ற அதிமுக்கியமான துறைகளுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தவர்களாவர்.

பெனால்லா விவகாரத்தின் உள்ளடக்கத்தில், ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) தொடங்கி நவ-பாசிஸ்டுகள் வரையிலும் கட்சிகளின் ஒரு கூட்டணியானது -இதில் வலது-சாரி குடியரசுக் கட்சியும் (LR) அடக்கம்- ஏற்கனவே கிட்டத்தட்ட அரசாங்கத்தை ஸ்திரம்குலைத்து விட்டிருக்கின்றன.

அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாக அதிகம் இடது-சாரியான அல்லது ஜனநாயக உரிமைகளுக்கு குறைந்த குரோதமுடைய எந்த கன்னையும் கிடையாது என்பதையே பெனால்லா விவகாரம் அடிக்கோடிட்டுக் காட்டியது. மக்ரோனின் உதவியாளரான அலெக்சாண்டர் பெனால்லா மே தினத்தன்று பாரிஸில் அமைதியாக சென்றுகொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை சட்டவிரோதமாக அடித்த ஒரு காணொளி வெளியானதற்கு LFI, LR மற்றும் நவ-பாசிஸ்டுகள் அனைவருமே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான போலிஸ் மிருகத்தனத்தை எதிர்ப்பதைக் கொண்டு அல்லாமல், மாறாக மக்ரோனுக்கு எதிராய் போலிஸ் படும் துன்பங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களாய் காட்டிக்கொள்வதன் மூலமாக எதிர்வினையாற்றினர். மக்ரோனுக்கு எதிரான ஒரு அரண்மனைக் கவிழ்ப்புக்கு தயாரிப்பு செய்வதற்கு முதலாளித்துவத்தின் சக்திவாய்ந்த கன்னைகள் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதையே அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த முயற்சிகள் சமீபத்தில் இரட்டிப்பாகியிருக்கின்றன, பெனல்லா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மக்ரோனின் உதவியாளர்கள் சாட்சியமளிக்க செனட் நிர்ப்பந்தித்தது. இதனிடையே ஜனாதிபதி அலுவலகத்தால் நீக்கம் செய்யப்பட்டிருக்கும் பெனல்லா, இந்த விசாரணையை “சட்டமுறைமையற்றது” என்று கண்டனம் செய்ததோடு செனட் சபாநாயகரான பிலிப் பா ஒரு “அற்பமான கொடுங்கோன்மையாளர்” என்று அழைத்தார். ஒரு வாரத்திற்குப் பின்னர், அவர் செனட்டிடம் விரிவான மன்னிப்பு கேட்க முன்வந்தார், தான் கூறியதற்கு “ஆழ்ந்த வருத்தம்” தெரிவிப்பதாக வலியுறுத்தியதோடு “மன்னிப்பு கேட்க” விரும்பியதாகவும் அவர் வலியுறுத்தினார்.

எலிசே ஜனாதிபதி மாளிகை அதன் முன்னாள் பணியாளர்களைச் சுற்றிய விசாரணைகளுக்கு ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றியது, அதிகாரங்களை அபகரிப்பதற்கும் ஜனாதிபதி மீது அரசியல்ரீதியாக தாக்குவதற்கும் செனட் முயற்சிப்பதாக அது குற்றம்சாட்டியது. இந்த விசாரணைகள் “உண்மையை அறிந்து கொள்வதற்கான ஒரு திறம்பட்ட முயற்சியாக இருப்பதைக் காட்டிலும் அதிகமாக ஒரு விளம்பர சாகச நடவடிக்கையாக இருக்கிறது” என்று கூறி 22 LRM செனட்டர்கள் விசாரணையை புறக்கணித்தனர்.

இதேபோல நாடாளுமன்றத்துடனான உறவுகளுக்கான இளைய அமைச்சரும் LRM தலைவருமான கிறிஸ்தோப் காஸ்ட்டனேரும் பெனல்லா விவகாரத்திலான செனட் விசாரணை உறுப்பினர்கள், அரசின் தலைவரை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

எவ்வாறாயினும், அரசிலும் ஆளும் ஸ்தாபகத்திலும் உயர்வட்டங்களில் சந்தேகத்திற்கிடமில்லாமல் பரிசீலிக்கப்பட்டு வருகின்ற ஒரு விவகாரத்தை அவர் எழுப்பினார், அவர் கூறினார்: “குடியரசின் ஜனாதிபதி மீது கண்டனத்தீர்மானம் கொண்டுவரும் அதிகாரத்தை தாமாகவே எடுத்துக்கொள்ளலாம் என்று சிலர் கருதுவார்களேயானால், அவர்களேயும் குடியரசுக்கான ஒரு ஆபத்தாகவே இருக்கிறார்கள்.”

ஐந்தாவது குடியரசில் இதற்குமுன் கண்டிராததாக இருக்கக்கூடிய ஒரு நிலைமை குறித்து, மக்ரோன் மீதான கண்டனத்தீர்மானம் என்ற அதுவரை வேறெவரொருவரும் எழுப்பியிராத நிலைமை குறித்து காஸ்ட்டனேர் எழுப்பியிருந்தார்: “அரசியல் அபிலாசைகளுடனான ஒரு விசாரணை ஆணையம் தனது மேற்பார்வை செயல்பாடுகளை குடியரசின் ஜனாதிபதியை பதவியிறக்குவதற்காய் சுரண்டிக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது ஒரு அரசியல்சட்ட தவறை இழைப்பதாக இருக்கும்.”

இருப்பினும் Le Monde காஸ்ட்டனேரின் கருத்துக்களை அர்த்தமுள்ளதாக எடுத்துக்கொண்டது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான ஆலோசனைத் தீர்வாக அதுவும் ஒன்றை முன்வைத்தது: “கண்டனத் தீர்மானத்திற்கு ஒரேயொரு வழிமுறை தான் இருக்கிறது. 'குடியரசின் ஜனாதிபதி அவர் பதவியில் தொடர்வதை வெளிப்பட பொருத்தமற்றதாக்குகின்ற ஒரு விதத்தில் அவர் தனது கடைமைகளில் இருந்து தவறியிருந்தால் மட்டுமே அவருக்கு எதிராய் கண்டனத்தீர்மானம் கொண்டுவரப்பட முடியும்’ என்று அரசியல்சட்டத்தின் பிரிவு 68 கூறுகிறது. அதன்பின் அந்தக் கண்டனம் “உயர்ந்த நீதிமன்றமாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளினாலும் கூட்டாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது.”