ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In France, Mélenchon advisor hails Wagenknecht’s anti-immigrant Aufstehen group

பிரான்சில், மெலென்சோனின் ஆலோசகர் வாகன்கினெக்ட் இன் புலம்பெயந்தோர்-விரோத Aufstehen குழுவைப் பாராட்டுகிறார்

By Alex Lantier
17 September 2018

அடிபணியா பிரான்ஸ் (LFI) தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோனின் ஓர் ஆலோசகரான ஜோர்ட்ஜ் குஸ்மானோவிச் (Djordje Kuzmanovic) அவரின் ஜேர்மன் கூட்டாளி சாரா வாகன்கினெக்ட் வெளிநாட்டவர் விரோத Aufstehen (கிளெர்ந்தெழு) இயக்கம் தொடங்கியிருப்பதைப் பாராட்டியுள்ளார். புதனன்று L’Obs க்கு வழங்கிய ஒரு நீண்ட பேட்டியில், அந்த முன்னாள் துணை இராணுவப்படை சிப்பாய் மற்றும் புவிசார்-அரசியல் பகுப்பாய்வாளர் புலம்பெயர்ந்த மலிவு-கூலி தொழிலாளர்களுக்கு எதிராக பிரெஞ்சு மக்களின் ஒரு பாதுகாவலராக தன்னைக் காட்டிக் கொண்டார். அவர் அவரது வெளிநாட்டவர் விரோத போக்கை ஒரு "மார்க்சிச" ஆய்வாக காட்டவும் முயன்றார்.

இடது கட்சியின் ஒரு தலைவரும் மெலென்சோனின் இணை-அரசியல்வாதியுமான ஒஸ்கார் லாபொன்டைனின் துணைவியுமான வாகன்கினெக்ட் செப்டம்பர் மாத தொடக்கத்தில் Aufstehen ஐ நிறுவினார். Aufstehen ஐரோப்பிய ஒன்றியத்தை இராணுவரீதியில் மீளபலப்படுத்தவும் அகதிகளை நோக்கி விரோதத்தையும் அறிவுறுத்துகின்ற போதினும், அதை “அடிமட்ட மக்களின்" ஓர் இயக்கமாக அப்பெண்மணி அறிவித்தார். “சுதந்திரமாக திரிவதும் மற்றும் புலம்பெயர்வுமே குறைவூதிய வேலைக்கு போட்டி அதிகரித்து வருவதற்கான மூலக் காரணம்" என்று கண்டித்த அவர், “நிச்சயமற்றத்தன்மையை" உருவாக்குவதற்காக அகதிகளைக் கண்டனம் செய்தார்.

வாகன்கினெக்ட் இன் முறையீடு ஜேர்மன் நவ-பாசிசவாதிகளிடம் இருந்து அவருக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதிவலது பத்திரிகை Junge Freiheit “தேசிய அரசுக்கு திரும்புவது மீதான விவாதத்தில்" Aufstehen வகிக்கும் பாத்திரத்தைப் பாராட்டியதுடன், “கட்டுப்பாடற்ற புலம்பெயர்வால் தோற்றுவிக்கப்பட்ட பாரிய பிரச்சினைகள் மீது பரந்த சமூக விவாதத்தை" ஒழுங்கமைப்பதே சமூக மற்றும் அரசியல் மேலெழுச்சிகளைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி என்று அறிவித்தார்.

Aufstehen இன் பேரினவாத மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத போக்கை தொழிலாளர்களது வாக்குகளை வெல்வதற்கான LFI இன் ஒரு மூலோபாயமாக L’Obs இல் பாராட்டி, Kuzmanovic ஜேர்மன் அதிவலதுக்கும் அவர் பாராட்டுக்களை வழங்கினார்.

அவர் கூறினார்: “சில இடதுசாரி வாக்காளர்கள் வலதுசாரி ஜனரஞ்சகவாதத்திற்குத் திரும்பி வருகின்றனர் என்றாலும், மிக அடிமட்ட வர்க்கங்களில் பெரும்பான்மையினர் ஒதுங்கிக் கொள்வது தான் பெரிய பிரச்சினையே. எந்த வாக்காளர்களையாவது வென்றெடுக்க வேண்டுமானால், இவர்களைத் தான் வென்றெடுக்க வேண்டும்! இதை நாம் செய்யத் தவறினால், இத்தாலிய பாணியிலான ஒரு சூழ்நிலையில் நம்மை நாமே காண வேண்டியிருக்கும் என்பது தான் அபாயம், அங்கே முற்போக்கு சக்திகள் கிழிந்து தொங்குகின்றன, வெளிநாட்டவர் விரோத வலது அதிகாரத்தில் உள்ளது. ஆகவே தான் புலம்பெயர்ந்தோர் குறித்த சாரா வாகன்கினெக்ட் இன் அரசியல் நிலைப்பாடு, பொது தூய்மையாக்கல் பிரச்சினையாக எனக்குத் தோன்றுகிறது.”

இது ஐரோப்பிய நவ-பாசிசத்திற்குப் பொருத்தமான அரசியல் அடித்தளங்கள் மீது அடிபணியா பிரான்ஸை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு பிற்போக்குத்தனமான முன்மொழிவாக உள்ளது. இதுவொரு அரசியல் பொய்யின் அடித்தளத்தில் உள்ளது, அதாவது முதலும் முக்கியமுமாக தொழிலாளர்கள் நவ-பாசிசவாதத்திற்கு ஆதரவளிக்க திரும்பியதாலேயே சமூக ஜனநாயக, ஸ்ராலினிச அல்லது அவற்றுடன் கூட்டு சேர்ந்திருந்த அரசியல் கட்சிகளுக்கான வாக்குகள் வீழ்ச்சி அடைந்தது என்று வாதிடுகிறது.

உண்மையில், பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS), ஜேர்மனியின் சமூக ஜனநாயக கட்சி (SPD) மற்றும் அவற்றின் கூட்டாளிகளான அடிபணியா பிரான்ஸ் மற்றும் இடது கட்சி ஆகியவை வாக்காளர்களை இழந்துள்ளன என்றால், அதற்கு காரணம் அனைத்திற்கும் மேலாக 1968 க்குப் பின்னர் குட்டி-முதலாளித்துவ மாணவர் இயக்கத்திலிருந்து தங்களின் தலைவர்களைக் கொண்டுள்ள இதன் வலதுசாரி மாற்றத்தினால் ஆகும். ஆழமடைந்து வரும் சமூக நெருக்கடி மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்கும் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு ஆகியவற்றிற்கு மத்தியில், அவர்களது தேசியவாத மற்றும் மார்க்சிச-விரோத நோக்குநிலை, நவ-பாசிசவாத நிலைப்பாட்டிற்கு முன்பினும் நெருக்கமான ஒரு போக்கில் அணிதிரள்வதற்கு அவர்களை அனுமதிக்கிறது.

50 ஆண்டுகளுக்கு முன்னர் மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தத்தில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர உணர்வுகள் வெடித்ததைக் கண்டு பீதியுற்று, இந்த அடுக்குகள் ஒரே சீராக போர்-ஆதரவு, சிக்கன-நடவடிக்கை ஆதரவு நிலைப்பாடுகளுக்குப் பரிணமித்தன. 1980 களின் தொடக்கத்தில் பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி, ஸ்பானிஷ் சோசலிஸ்ட் கட்சி மற்றும் கிரீஸில் பாசொக் கட்சி ஆகியவை "சிக்கன நடவடிக்கைக்கு திரும்பியமை", 1991 இல் சோவியத் ஒன்றியத்திலேயே ஸ்ராலினிசத்தால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டமை, மற்றும் பின்னர் SPD இன் ஹார்ட்ஸ் IV சமூக செலவினக் குறைப்பு சட்டங்கள் என இவை தசாப்தங்களாக சமூக ஜனநாயக கட்சிகள் மற்றும் அவற்றின் ஸ்ராலினிச மற்றும் பப்லோயிச கூட்டாளிகளால் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடக்கமாக இருந்தன.

சிரிசா, இடது கட்சி, பொடெமோஸ், அடிபணியா பிரான்ஸ் மற்றும் இப்போது Aufstehen ஆகியவற்றின் மிகச் சமீபத்திய ஸ்தாபிதம், மெலொன்சோன் போன்ற (இவர் பியர் லம்பேரின் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு, OCI இல் இருந்து தான் அவரது அரசியல் வாழ்வைத் தொடங்கினார்) இந்த ஸ்ராலினிசவாத அல்லது பப்லோயிசவாதத்திலிருந்து வந்த தேசியவாத குட்டி-முதலாளித்துவ சக்திகளைப் புத்துயிர்பூட்டுவதற்கு மட்டுமே இறுதியில் வழிவகுத்தது. 1971 இல் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்தும், ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்தும் உடைத்துக் கொண்டது. அவர் 1976 இல் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்தார், பின்னர் சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் கீழ் நெருக்கமாக பணியாற்றினார்.

2015 இல் இருந்து கிரீஸில் பதவியில் இருந்து வரும் சிரிசா (“தீவிர இடது கூட்டணி") மூர்க்கத்தனமான சிக்கன கொள்கையை பின்பற்றி வருவதுடன், கிரேக்க தீவுகளில் அடைக்கப்பட்ட அழுக்கடைந்த முகாம்களின் அதிர்ச்சியூட்டும் நிலைமைகளில் அகதிகளை அடைத்து வைத்துள்ளது.

சிரிசா, அடிபணியா பிரான்ஸ் மற்றும் கூட்டம் பிரதிநிதித்துவம் செய்யும் குட்டி-முதலாளித்துவத்தின் பிரிவுகள், ஒட்டுமொத்த ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகத்தின் போக்கில் கூர்மையாக வலதுக்கு நகர்ந்து வருகிறது. சொல்லப் போனால், நவ-பாசிசவாதிகளின் வெளிநாட்டவர் விரோத கொள்கையிலிருந்து அடிப்படையிலேயே அத்தகைய தமது கொள்கை வித்தியாசப்படுவதாக Kuzmanovic ஒரு கட்டுக்கதையைப் பேண முயன்று வருகிறார். சான்றாக, “நாங்கள் புலம்பெயர்ந்தவர்களை வேட்டையாடுவதை எதிர்க்கிறோம்: இது அதி வலதிலிருந்து மிகப்பெரியளவில் வித்தியாசப்படுகிறது,” என்கிறார்.

ஆனால் பிரான்ஸை வந்தடையும் ஓர் அகதியைப் பொறுத்த வரையில், உண்மையில் புலம்பெயர்ந்தவர்கள் மீதான இப்போதைய துன்புறுத்தலுக்கும் Kuzmanovic எதை அறிவுறுத்துகிறாரோ அதற்கும் இடையே மிகச் சிறிய வித்தியாசமே இருக்கும்.

உண்மையில் அகதிகளைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களைத் தாக்க பரிந்துரைக்கும் அவர், ஐரோப்பாவை நோக்கி தப்பிச் செல்லும் சிறிய எண்ணிக்கையிலான அகதிகளை மட்டும் ஏற்றுக் கொள்ள பரிந்துரைக்கிறார். “கடிவாளமற்ற புலம்பெயர்வு மற்றும் சுரண்டலை நாம் எதிர்க்க விரும்பினால், பதிவு செய்திராத தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துபவர்களைத் தாக்க வேண்டும்,” என்றார். “போரிலிருந்து தப்பி வருகின்ற ஒருசில பத்தாயிரக் கணக்கானவர்களை வேண்டுமானால் நாம் ஏற்றுக் கொள்ளலாம். இது, பிரான்ஸ் கையெழுத்திட்டுள்ள, 1957 மற்றும் 1962 ஜெனிவா சாசனங்களில் உள்ளடக்கப்பட்ட ஒரு கடமையாக உள்ளது.

உண்மையில பத்து மில்லியன் கணக்கான அகதிகள் ஈராக், சிரியா, மாலி, ஆப்கானிஸ்தான் மற்றும் அதற்கு அப்பாலும் நேட்டோ மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்திய போர்களிலிருந்து தப்பியோடி வருகிறார்கள். பிரான்ஸை வந்தடையும் அகதிகளின் வேலையை அவர் பறிக்க விரும்புவது மட்டுமின்றி, மாறாக அனைத்திற்கும் மேலாக போரிலிருந்து தப்பி வரும் பாரிய பெரும்பான்மையினரை பிரான்சிலிருந்தே அவர் வெளியேற்ற விரும்புகிறார் என்பதையே Kuzmanovic இன் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

அவரது நிலைப்பாடு நவ-பாசிசவாத நிலைப்பாடுகளுக்கு நெருக்கமாக இருப்பதை அம்பலப்படுத்தக்கூடிய இடதுசாரி விமர்சனங்களால் பாதிக்கப்படலாம் என்ற நனவோடு, Kuzmanovic கூறுகையில், அவரை விமர்சிப்பவர்கள் பிரெஞ்சு நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவதற்கு ஒத்துழைப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அவர் அறிவிக்கிறார்: “நீங்கள் இடதுசாரி என்றால், பெருவணிகங்களைப் போலவே புலம்பெயர்ந்தோர் மீது அதே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அங்கே பிரச்சினை உள்ளது. … நாம் கூறுவது ஒன்றும் புதிதல்ல. இது சுத்தமான மார்க்சிச பகுப்பாய்வு: மூலதனம் உழைப்புக்காக அதன் கையிருப்பு படையைக் கட்டமைத்து வருகிறது. ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு மலிவுக்கூலி வழங்குவது சாத்தியம் என்றால், இது எல்லோருடைய சம்பளங்களையும் கீழ்நோக்கி இழுக்கும். இதுவொரு அதிவலது பகுப்பாய்வு என்று கூறுவீர்களா? கேலி செய்கிறீர்கள்.”

நவ-பாசிசவாதிகள் புகழ்ந்துரைக்கும் வெளிநாட்டவர் விரோத வாய்சவாடலை மார்க்சிசமாக கைக்கழுவி விடும் இந்த முயற்சி முன்னுக்குப்பின் முரணான ஓர் அரசியல் சதியாகும். கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை இவ்வாறு அறிவித்து தொடங்குகிறது: “இதுவரையிலான சமூகங்கள் அனைத்தினது வரலாறும் வர்க்க போராட்டங்களின் வரலாறே ஆகும்,” 150 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வந்துள்ள அது, “உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்,” என்று கூறி நிறைவு செய்யப்படுகிறது.

போராட்டத்திலும், அனைத்திற்கும் மேலாக ஆளும் வர்க்கம் எதைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த முயலுகிறதோ அந்த தேசிய பிரிவினைகளைக் கடந்து செல்ல, தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதே எப்போதும் மார்க்சிஸ்டுகளின் இன்றியமையா பணியாகும். Kuzmanovic போன்ற போலி அரசியல் நடவடிக்கையாளர்களின் கைக்கருவிகளாக உள்ள தேசியவாதம், நவ-பாசிசவாதம் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டம், புலம்பெயர்ந்தோர் மற்றும் உள்நாட்டில் பிறந்த தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும்.

முன்னாள் துணைஇராணுவப்படை சிப்பாய் Kuzmanovic, 1994 இல் ருவாண்டாவில் பணியாற்றினார். அப்போது பிரான்ஸ் Juvénal Habyarimana இன் மனிதப்படுகொலை ஆட்சியை ஆதரித்து வந்தது, மேலும் பிரெஞ்சு உளவுத்துறை நடவடிக்கைகள் யூகோஸ்லேவியாவில் பங்கெடுத்திருந்தன. தொழிலாளர் பொது கூட்டமைப்பின் போலிஸ் சங்க தலைவர் Alexandre Langlois மற்றும் உள்துறை அமைச்சக தொழிற்சங்கவாதி Georges Knecht உள்ளடங்கலாக LFI க்குள் உள்ள போலிஸ் மற்றும் உளவுத்துறை நடவடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த அடுக்கின் பாகமாக Kuzmanovic விளங்குகிறார். பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தால் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திருப்பி விடப்பட்ட ஒடுக்குமுறை எந்திரத்தினுள் அவர்கள் ஒருங்கிணைவது, மார்க்சிசத்திற்கும் அவர்களுக்கும் பொதுவானது எதுவும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

German Left Party leaders launch right-wing coalition
[11 August 2018]

Who is Unsubmissive France’s “Comrade Policeman” Alexandre Langlois?
[30 August 2018]

French police scandal exposes Mélenchon’s ties to the police state
[31 July 2018]