ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump administration threatens sanctions against International Criminal Court

ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடையாணைகள் விதிக்க அச்சுறுத்துகிறது

By Patrick Martin
11 September 2018

ஆப்கானிஸ்தானில் போர் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களின் பேரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court - ICC) அமெரிக்க இராணுவத்திற்கு எதிராகவோ அல்லது படைத்துறைசாரா அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராகவோ எந்தவொரு நடவடிக்கை எடுத்தாலும், ஐக்கிய நாடுகள் சபையின் ஆசீர்வாதத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அந்த நீதித்துறை அமைப்புக்கு எதிராக அது பதில் நடவடிக்கை எடுக்குமென ட்ரம்ப் நிர்வாகம் திங்களன்று அறிவித்தது.

பெருநிறுவன-நிதியுதவி பெறுகின்றதும், அதிதீவிர வலது வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளினதும் அமைப்பான மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கான ஜனாதிபதி ட்ரம்பின் இரண்டு வேட்பாளர்களை அங்கீகரித்த, Federalist Society அமைப்பில் உரையாற்றுகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சர்வதேச சட்டத்தின் கீழ் அமெரிக்க அரசு நடவடிக்கைகள் மீதான எந்தவொரு கட்டுப்பாடுக்கும் அதன் எதிர்ப்பை அறிவிக்க, போல்டன், வழக்கறிஞர்களின் ஒரு குழுவுக்கு முன்னால் தோன்றிய அந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டார், அத்தகைய கட்டுப்பாடுகள் அமெரிக்க இறையாண்மை மீதான ஒரு தாக்குதல் என்றவர் குணாம்சப்படுத்தினார். அவரின் பிரதான கவலை, போர்க்களத்தின் இராணுவ தளபதிகள் முதற்கொண்டு போருக்குத் திட்டமிடுபவர்கள் மற்றும் வாஷிங்டனில் உள்ள மூலோபாயவாதிகள் வரையில், வெள்ளை மாளிகை வரையிலுமே கூட, கொள்கை முடிவு எடுப்பவர்கள் மீதிருந்த அந்தளவுக்கு, போர்முனையில் உள்ள சிப்பாய்களைக் குறித்ததல்ல. கொள்கை முடிவெடுப்பவர்கள் போர் குற்றங்களுக்கான குற்றச்சாட்டுகளின் அச்சுறுத்தலால் "பீதியடைய செய்யப்படும்" அபாயத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நிராகரித்ததன் மூலம் ட்ரம்ப் நிர்வாகம் ஒரு புதிய கொள்கையை ஒன்றும் ஏற்றுவிடவில்லை. ரோமில் கையெழுத்திடப்பட்ட ஓர் உடன்படிக்கையின் கீழ் இந்த அமைப்பு முதன்முதலில் 2002 இல் உருவாக்கப்பட்ட போது, புஷ் நிர்வாகம் அதை நிராகரித்தது, காங்கிரஸ் சபை இருகட்சியினது பெரும் பெரும்பான்மையோடு உடனடியாக சட்டமசோதா நிறைவேற்றியது. அமெரிக்க இராணுவச் சேவை உறுப்பினர்களின் பாதுகாப்புச் சட்டம் என்ற அந்த புதிய சட்டம், “அமெரிக்கா பங்குபற்றிராத ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால், அமெரிக்க இராணுவ சிப்பாய்களும் மற்றும் அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட ஏனைய அதிகாரிகளும், குற்றவியல் வழக்கிற்கு இழுக்கப்படுவதற்கு எதிராக அவர்களைப் பாதுகாப்பதை" அதன் நோக்கமாக கொண்டிருந்தது.

அதற்கு பிந்தைய சம்பவங்கள், புஷ் நிர்வாகம் ஏன் ICC ஐ மறுத்தளித்தது என்பதை எடுத்துக்காட்டின. 2003 இல், அமெரிக்கா பொய்களின் அடிப்படையில் ஓர் குற்றகரமான ஆக்கிரமிப்பு போரில் ஈராக் மீது படையெடுத்தது. அந்த படையெடுப்பின் ஒரு நேரடி விளைவாக, மில்லியன் கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர், அமெரிக்கா பாரியளவில் வெறித்தனமான சித்திரவதை மற்றும் படுகொலையில் ஈடுபட்டது.

ஒபாமா நிர்வாகமும் இந்த சட்டத்தைத் தாங்கிப் பிடித்தது, நெதர்லாந்தின் ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் எந்தவொரு குற்றச்சாட்டுக்களை முகங்கொடுக்கும் அமெரிக்க குடிமக்களையும் விடுவிக்க இராணுவ படைகளைப் பயன்படுத்தலாமென முன்கூட்டியே ஒப்புதல் அளிக்கும் ஹேக் படையெடுப்பு அங்கீகார சட்டத்தின் நகலாக அந்த புதிய சட்டமும் இருக்கிறதென நகைச்சுவையாக, போல்டன் அதை புகழ்ந்துரைத்தார்.

ஆப்கான் அரசாங்கத்தாலும் மற்றும் வெளிப்புற சக்திகளாலும் (அமெரிக்க உள்ளடங்கலாக) ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட போர் குற்றங்கள் மீது ஒரு விசாரணை நடத்துவதற்காக, நவம்பர் 2017 இல் அளிக்கப்பட்ட ஒரு மனுவின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கும் ஒரு தருணத்தில், ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுப்பதற்கு தயாரிப்பு செய்து வைத்துள்ள கூடுதல் நடவடிக்கைகளை அந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விவரித்தார். 2007 இல் இருந்து அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஆப்கான் அரசாங்கத்தின் சித்திரவதைகள் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ICC ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது. இது, பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் எதிர்ப்பை முகங்கொடுக்கையில் இதுபோன்ற அமைப்புகளின் திராணியின்மைக்கு ஓர் அறிகுறியாகும்.

அத்தகைய நடவடிக்கைகளில், ICC இன் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அமெரிக்காவுக்குள் வருவதை மறுப்பது, ICC நீதிபதிகள் மற்றும் பணியாளர்கள் அமெரிக்க நிதியியல் அமைப்புகளில் சொத்துக்கள் வைத்திருந்தால் அவற்றிற்கு எதிராக நிதியியல் தடையாணைகள் விதிப்பது, மற்றும் அமெரிக்க சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வருவது ஆகியவை உள்ளடங்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வெளிநாடுகளில் அமெரிக்க போர் குற்றங்களை விசாரிக்க துணியும் எவரொருவரும் அவரே அமெரிக்க சிறையில் அல்லது ஒரு "பயங்கரவாதியாக" கையாளப்பட்டு குவான்டனாமோ வளைகுடா போன்ற தடுப்புக்காவல் மையத்திலேயே கூட உட்கார்ந்திருப்பதைக் காணலாம்.

அவரின் 30 நிமிட உரையில் அனேகமாக மிகவும் அப்பட்டமான பந்தியில், போல்டன் கூறியது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஐந்து அடிப்படை குறைபாடுகள் என்று விவரித்தார். வலிந்து தாக்கிய குற்றங்கள் மிகவும் மேலோட்டமாக விவரிக்கப்பட்டிருந்தன என்பது இரண்டாவது "குறைபாடாக” இருந்தது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இரண்டாம் உலக போரின் போது இருந்திருந்தால், ஜேர்மனி மற்றும் ஜப்பான் மீது குண்டுவீசி, ட்ரேஸ்டன், ஹம்பேர்க், டோக்கியோ மற்றும் பிற நகரங்களில் வேண்டுமென்றே நெருப்பு பிரளயத்தை உருவாக்கியதற்காக, அதில் ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்த நிலையில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு கொண்டு சாம்பலாக்கியதற்காக, அது நேசநாட்டுப்படைகளை போர் குற்றங்களுக்கான குற்றவாளியாக அடையாளம் கண்டிருக்கும் என்றவர் தெரிவித்தார்.

அதுபோன்ற நடைமுறைகளை அவற்றின் சரியான பெயர்களைக் கொண்டு, அதாவது போர் குற்றங்கள் என்று குறிப்பிடுவதை போல்டன் நிராகரிக்கிறார். ஏனென்றால் மொசூல், ரக்கா மற்றும் ஏனைய நகரங்களில் அதுபோன்ற அணுகுமுறைகளை ஏற்கனவே பரிசோதித்துள்ளதும் மற்றும் அவற்றை தெஹ்ரான், மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் போன்ற மிகப்பெரிய பெருநகரங்கள் உள்ளடங்கலாக இன்னும் பெரியளவில் செய்ய தயாரிப்பு செய்து வருகின்றதுமான ஓர் அரசை அவர் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பதால் ஆகும்.

பாலஸ்தீன விவசாயிகளிடம் இருந்து நிலத்தைப் பறித்து மேற்கு படுகையில் இஸ்ரேல் சட்டவிரோதமாக குடியமர்வுக்கான கட்டிடங்கள் கட்டியதன் மீது பாலஸ்தீன ஆணையம் ICC முன்னால் குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வந்துள்ளதால், போல்டன், வாஷிங்டனில் உள்ள பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தை மூடுவதற்கான ஒரு ஆணையோடு, ICC இன் போர் பிரகடனத்தை இணைத்தார்.

மொத்தத்தில் மிதமிஞ்சிய அதிகாரம் கொண்ட ஒரு சட்டப்படி செல்லுபடியாகாத ஓர் அமைப்பாக ICC ஐ போல்டன் ஏளனம் செய்கின்ற அதேவேளையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுங்கோபத்தின் நிஜமான இலக்கின் மீது, அதாவது ICC இல் பங்கெடுத்துள்ள மற்றும் அதன் நீதிமுறையை ஏற்கின்ற 123 உறுப்பு நாடுகள் பற்றி அவர் ஏதும் கூறவில்லை. இதில் நிக்கரகுவா தவிர இலத்தீன் அமெரிக்காவின் அனைத்து நாடுகளும், கியூபா மற்றும் ஹைட்டி தவிர கரீபிய அரசின் ஒவ்வொரு நாடும், உக்ரேன், பெலாரஸ் மற்றும் ரஷ்யா தவிர ஒவ்வொரு ஐரோப்பிய நாடும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற பசிபிக் நாடுகளும் உள்ளடங்கி உள்ளன.

உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கை கொண்ட நாடுகளும் மற்றும் உலகின் இராணுவ பலத்தில் 70 சதவீதமும் ICC க்கு வெளியில் இருப்பதாக போல்டன் வலியுறுத்தினார், இதில் பிரதானமாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், தென்கிழக்கு ஆசிய நாடுகள் (இவற்றில் பெரும்பான்மை இராணுவ அல்லது ஸ்ராலினிச சர்வாதிகாரத்தின் கீழ் உள்ளன) மற்றும் (ஈரான், எகிப்து, சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேல் உள்ளடங்கலாக) மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் அண்மித்து அனைத்து நாடுகளும் உள்ளடங்குகின்றன என்பதை அவர் குறிப்பிடவில்லை.

இந்த பட்டியலில் அமெரிக்க ஆதரவிலான காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகாரங்களின் ஒரு அணிவரிசை உள்ளடங்கி உள்ளது, இவை பாரியளவில் சித்திரவதை, சிறை அடைப்பு மற்றும் மரண தண்டனைகள் மீது நாளாந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றன.

ட்ரம்ப் நிர்வாகம் ICC ஐ அச்சுறுத்தியதன் மூலம், வாஷிங்டனால் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட ஒரு சர்வதேச தீர்பாணையத்தை வெறுமனே மறுத்தளிக்கவில்லை. எவையெல்லாம் ஒருகாலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கமான கூட்டாளிகள் அல்லது வாடிக்கையாளர் அரசுகளாக இருந்தனவோ, அதாவது நேட்டோ நாடுகள், இலத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் பசிபிக் வளைய நாடுகளுக்கு சட்டத்தை வரையறுக்கின்றது. அந்நாடுகள் அமெரிக்காவை மீறினால், அவை கடுமையாக கையாளப்படும்.

ட்ரம்ப், போல்டன் போன்றோரின் வடிவில், அமெரிக்க ஏகாதிபத்தியம் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய வரலாற்று காலகட்டத்தில் மிகப்பெரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருந்த ஓர் அரசியல் தோரணையான, பொய்யாக இருந்த போதும் கூட, சர்வதேச சட்டத்திற்கு வக்காலத்து வாங்குபவராக மற்றும் சுதந்திர உலகின் தலைவராக காட்டிய பாசாங்குத்தனத்தைத் கைத்துறந்துள்ளது.

அதற்கு பதிலாக, ட்ரம்பின் அமெரிக்கா, மற்ற அனைவரின் மீதும் பகிரங்கமாக மேலாதிக்கத்தைக் கோருவது, சர்வதேச சட்டத்தை ஏளனத்துடன் நிராகரிப்பது மற்றும் "அமெரிக்கா முதலில்" நலன்களுக்காக எப்போதெல்லாம் அவ்வாறு செய்ய அவசியப்படுகிறதோ அப்போது ஜனநாயக தயக்கங்களைக் கைவிடுவது என, அது பட்டவர்த்தனமாக சூறையாடும் ஓர் ஏகாதிபத்திய சக்தியாக ஆகியுள்ளது.

சர்வதேச சட்டத்தை மறுத்தளிக்கும், அமெரிக்க துருப்புகள் மற்றும் நடவடிக்கையாளர்களின் உலகெங்கிலுமான நடவடிக்கைகள் மீதான எந்தவொரு கணக்கெடுப்பையும் நிராகரிக்கும் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக ஜனநாயகக் கட்சியினரின் அவ்வப்போதைய எதிர்ப்புகள் இருந்தாலும், அக்கட்சிக்குள் குறிப்பிடத்தக்க எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.

இதற்கு எதிர்முரணாக, குறிப்பாக சிரியாவிலும், அத்துடன் ரஷ்யாவின் சுற்றுவட்டத்தில் உள்ள ஜோர்ஜியா, உக்ரேன் மற்றும் பால்டிக் அரசுகள் போன்ற பகுதிகளிலும், அவர் போதுமானளவுக்கு ஆக்ரோஷமாக கட்டுப்பாடின்றி அமெரிக்க இராணுவ பலத்தைப் பிரயோகிக்கவில்லை என்பதே ட்ரம்ப் மீதான ஜனநாயகக் கட்சியின் பிரதான விமர்சனமாக உள்ளது.